16 இதுவுமது

குண்டலகேசி முகப்பு

நாதகுத்தனார் இயற்றிய

குண்டலகேசி

Kundalakesi

பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்

16. இதுவுமது

சீற்றஞ் செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினாற்

கூற்றங் காய்ந்து கொடுக்க வெனுந்துணை

மாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத்

தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான்.

எளிய நடை:

சீற்றம் செற்று, பொய் நீக்கி, செங்கோலினால்

கூற்றம் காய்ந்து, கொடுக்க எனுந்துணை

மாற்றமே நவின்றான். தடுமாற்றத்துத்

தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான்.

Anger removed, lying removed, in the righteous rule of that king

the god of deaths activities were removed. His proclamations were

always for the good. People confused, wanted to be reborn in his kingdom

instead of aiming for liberation (from rebirth). Such was the king who appeared.

(இ - ள்) சீற்றம் செற்று - அம்மன்னவன் இப் பேருலகத்தின்கண் ஓருயிர் மற்றோருயிரைச் சினந்து வருத்தாதபடி உயிரினங்களின் சினத்தையும் அகற்றி;

பொய் நீக்கி - மாந்தர் பொய்பேசாதவண்ணம் செய்து;

செங்கோலினால் கூற்றம் காய்ந்து - தனது செங்கோல் முறைமையாலேயே தனது ஆட்சியின்கண் முறைபிறழ்ந்து மறலியும் புகுந்துயிரைக் கவராதபடி அவனையும் தடுத்து;

செங்கோல் - Righteous rule

கூற்றம் - எமன் Yama - God of Death

காய்தல் - healed or cured, ஆறுதல், சினத்தல்.

மறலி - எமன் Yama - God of Death

பிறழ்- தல் - முறைகெடுதல்

மாற்றம் - Word; வார்த்தை.

நவில்(லு)-தல் - To say, tell, declare, pronounce; சொல்லுதல்

அவனையும் தடுத்து - எமனையும் தடுத்து

கொடுக்க எனுந்துணைமாற்றமே நவின்றான் - தான் தன் குடிமக்களுக்கு ஆணை பிறப்பிப்பதாயின் உடையோர் எல்லாம் இல்லோர்க்கு வழங்குமின்! என்னும் இந்நல்லறத்தையே ஆணையாகப் பிறப்பிக்குமளவேமன்றி அவர் வருந்தும்படி பிறிதோர் ஆணையும் இடானாயினான்,

தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் - இங்ஙனமிருந்தவாற்றால் இவன் ஆட்சியில் இன்புற்றிருந்தோரெல்லாம் வீடு வேண்டாராய்த் தடுமாற்றத்திற்குக் காரணமான பிறப்பினையும் விரும்புவாராகும் படி தோன்றித் திகழ்வானாயினன் என்பதாம்.

(வி - ம்.) செங்கோன் முறை பிறழாத வேந்தர் ஆளும் நாட்டில் உயிரினங்கள் சினந்தவிர்ந்து அருட்குணமுடையவாய் ஒன்றற்கொன்று தீமைசெய்யாவாகலின், “செங்கோலினால் சீற்றம் செற்றுப் பொய் நீக்கினன்” என்றார்,

இதனை,

“ .......பரல் வெங்கானத்துக்

கோல்வ லுளியமுங் கொடும்புற் றகழா

வாள்வரி வேங்கையு மான்கண மறலா

அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும்

உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா

செங்கோற் றென்னவர் காக்கும் நாடு”

எனவரும் இளங்கோவடிகளார் மொழியானும் (13 : 4) உரை

“அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்

பல்வேற் றிரையற் படர்குவி ராயின்

கேள்வன் நிலையே கெடுகதின் னவலம்

அத்தஞ் செல்வோர் அலறந் தாக்கிக்

கைப்பொருள் வௌவும் களவோர் வாழ்க்கைக்

கொடியோ ரின்றவன் கடியுடை வியன்வுலம்

உருமும் உரறா தரவுந் தப்பா

காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு

அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்

சென்மோ இரவல!”

எனவரும் பெரும்பாணாற்றுப்படையானும் (36 - 45) உணர்க, உரை

“கருதலரும் பெருங்குணத்தோ ரிவர்முதலோர் கணக்கிறந்தோம்

திரிபுவன முழுதாண்டு சுடர்நேமி செலதின்றோர்

பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்

ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்”

எனவரும் இராமாவதாரத்தினும் (குலமுறை, 5) இக்கருத்து வருதலுணர்க, உரை

இனிச் செங்கோலரசர் நாட்டில் உயிரினங்கள் தத்தமக்கியன்ற அகவை நாளெல்லாம் வாழ்ந்து இயல்பாக இறத்தலன்றி இளம் பருவ முதலிய காலத்தே இறத்தல் இல்லையாகலின், செங்கோலினாற் கூற்றங் காய்ந்து என்றார். இக் கருத்தினை :--

“கூற்ற மில்லையோர் குற்ற மிலாமையால்

சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால்

ஆற்ற னல்லற மல்ல திலாமையால்

ஏற்ற மல்ல திழிதக வில்லையே”

எனவரும் இராமாவதாரத்தானும் (நாட்டுப், 39) உரை

“மன்னவன் செங்கோன் மறுத்தலஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க்

கூற்றம் ஆண்மையிற் றிரிந்து” எனவரும் (5: 215 - 20) சிலப்பதிகாரத்தாலும், உரை

“மாறழிந்தோடி மறலியொளிப்ப முதுமக்கட் சாடிவகுத்த தராபதியும்”

எனவரும் விக்கிரம சோழனுலாவாலும் (7 - 8), உரை

“மறனி னெருங்கி நெறிமையி னொரீஇக்

கூற்றுயிர் கோடலு மாற்றா தாக

வுட்குறு செங்கோ லூறின்று நடப்ப” (4. 2; 54 - 6)

எனவரும் பெருங்கதையானும் உணர்க. உரை

இனி, செங்கோன்மை முறையினின்று அருளாட்சி செய்கின்ற வேந்தன் குடை நீழலில் வாழ்பவர் மீண்டும் மீண்டும் அந்நாட்டிற் பிறத்தற் கவாவுதலின் தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் என்றார், இனி இவ்வறவேந்தனைக் கண்டோர் இத்தகைய அறவோனாய்ப் பிறத்தல் வீடுபேற்றினும் சிறப்புடைத்து ஆதலால் மனித்தப் பிறப்பும் வேண்டுவதே என்று தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் எனினுமாம். (16)