லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி மற்றும் அவர்கள் பெற்றோர்கள். இவர்கள் எம் குடும்பத்தார்.
குரளிசைக்காவியத்தில் பாடிய அயிரம் பேரும் - சிறார் முதல் முதியோர் வரை - மற்றும் மொழிபெயர்த்த இருவரும் எம் உறவினர்.
மொழி, ஜாதி, நாடு, இனம், பால் வேறுபாடின்றி குரளிசைக்காவியப் படைப்பின் அருமைபாராட்டும் அனைவரும் எம் மக்கள்.
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
(கூறாமை நோக்கக் குறிப்பறிவான் - ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் நினைத்ததை அறிகின்றவன்; எஞ்ஞான்றும் - எக்காலமும்; மாறாநீர் - வற்றாத நீர் (சூழ்ந்த); வையகம் - பூமி(யில்); கணி - சான்றோன்.)
புத்தர் தமது போதனைகளை, தம் சீடர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப அமைத்தார். தம் முன் இருப்போரின் உள்ளத்தை புரிந்து கொண்டு சரியான உபாயம் மூலம் அவர்களுக்கு தர்மத்தை போதித்தார்.
https://youtu.be/VlryFEkOlNE?si=AF2JIUIuyHFvK2YC
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
"அளத்தற்கியலாத பாரமிதைகளை அளவில்லாமல் நிறைத்து,
நடுக்கமில்லாத புத்தபெருமானாகிய கதிரவன் தோன்றினார்,"
என்று மணிமேகலையில் (காதை 26, 45-46) குறிப்பிடப்படுகிறது. (மேற்குறிப்பிட்டது உரையில் வரும் விளக்கம்)
பாரமிதை என்பதன் பொருள் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குரிய பண்புகள். இந்த பாரமிதைகள் பத்தில் ஒன்று - ஒழுக்கம் (சீலம்).
பௌத்த மரபில் அதற்கான உவமானம்:
கவரிமானின் அடர்ந்த மயிர் கொண்ட வால் எங்கேனும் சிக்கிக் கொண்டால் அது அதனை வெடுக்கென்று பிடுங்கிக் கொள்ளாமல் பொறுமையாக விடுவித்துக் கொள்ளவே முயற்சிக்கும் (ஏனென்றால் அந்த மயிர் இழக்க நேரிட்டால், அது குளிர் பிரதேசத்தில் வாழ்கின்றபடியால், அதன் உயிருக்கே ஆபத்து உண்டாகும்).
அது போலவே ஒழுக்கத்தை முழுமையாக்குவதென்பது நமது உடல், சொல், உள்ளம் மூலமாக செய்யும் செயற்பாடுகள் எவ்வாறு உலகில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை நன்று அறிந்து செயல்படுவதாகும். நமது உரிமைகளை - அவை நமக்கு கிடைக்காவிட்டாலும் சரி - அவற்றை வன்முறையால் பெற்றுக்கொள்ளக் கூடாது.
ஆதாரம்: Paramita: The Ten Perfections
A commentary on Similes in the Pali Canon, by Helmuth Hecker
"உயிரே போனாலும் ஒழுக்கம் தவற மாட்டார்கள் மாண்புடையோர்" என்று குரளின் பொருள் கொள்ளலாம்.
https://youtu.be/c3k71hoBE4w?si=U7D4giGqLwAMNmlh
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
(செவிச்செல்வம்: கேள்வியறிவு, செவியால் கேட்டுச் சேர்த்த அறிவு)
தம்மஸ்ஸாவன சுத்தம்
அங்குத்தர நிக்காயம் AN 5.202
“தர்மத்தை கேட்பதால் ஐந்து நன்மைகள் கிடைக்கும். எந்த ஐந்து?
1. முன்பு கேட்காததை ஒருவர் கேட்கிறார்.
2. முன்பு கேட்டதை தெளிவுபடுத்துகிறார்.
3. சந்தேகங்களை நீக்குகிறார்.
4. தம் கருத்துகளை நேராக்குகிறார்.
5. தம் மனம் அமைதியாகிறது.
இவை தான் தர்மத்தை கேட்பதன் ஐந்து நன்மைகள்.”
https://youtu.be/zfPDipVmB0c?si=0jF3k1yquAKE9xyZ
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
(நோற்பார்- தவஞ் செய்வார். இன்னா-துன்பம்)
பாரமிதைகளில் ஒன்று பொறுமை (khanti).
போதிசத்துவர் எவ்வாறு தம் முன்பிறவிகளில் பொறுமையை முழுமையாக்கினார்?
கந்திவாதி ஜாதக கதைச் சுருக்கம் (Khantivādi Jātaka #313)
போதிசத்தர் ஒரு காலத்தில் காசி நாட்டில் மிகுந்த செல்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இறந்த பிறகு, அவர் தம் பெரும் செல்வத்தை தானமாக வழங்கி, இமயமலை பகுதியில் ஒரு துறவியானார். பின்னர் மீண்டும் காசிக்கு திரும்பி, அரசனின் பூங்காவில் தங்கினார்; அங்கு அரசனின் தளபதி அவரை கவனித்துக் கொண்டார்.
ஒருநாள், காசி நாட்டு அரசன் கலாபு, தன் அரண்மனை பெண்களுடன் குதூகலிக்க அந்த பூங்காவிற்கு வந்தான். மது அருந்திய நிலையில் தூக்கத்தில் ஆழ்ந்தான். அந்தப் பெண்கள் அரசன் தூங்கிவிட்டபடியால் பூங்காவில் சுற்றித் திரிந்து, அந்த துறவியை சந்தித்து, அவரிடம் உபதேசம் செய்யுமாறு கேட்டனர். துறவி பொறுமை பற்றி போதித்தார்.
அரசன் விழித்தபின், தன் பெண்களைத் தேடிச் சென்று துறவியின் அருகில் இருப்பதைக் கண்டு சீற்றம் கொண்டான். அவர் பொறுமையைப் பற்றி போதித்ததாகக் கேள்விப்பட்டதும், அரசன் துறவியின் பொறுமையை சோதிக்க உத்தரவிட்டான். துறவி பலவகையான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் அமைதியாக இருந்ததால், அரசன் மேலும் கோபமடைந்து, அவரது கை கால்களை வெட்ட உத்தரவிட்டான். அப்போதும் துறவி பொறுமையை இழக்கவில்லை, அரசன் மீது கோபப் படவில்லை.
அரசன் பூங்காவை விட்டு வெளியேறியபோது, பூமி பிளந்து, அவீசி நரகத்தில் விழுந்தான். தளபதி, நடந்ததை அறிந்து, துறவியிடம் மன்னிப்புக் கேட்க விரைந்தார். துறவி எந்தவிதமான விரோதமும் இல்லையெனக் கூறி, அரசனுக்கு தம் அன்பை செலுத்தி உயிரை விட்டார்.
இந்த கதையில் வந்த கலாபு என்ற காசி நாட்டு அரசன் தேவதத்தன். தளபதி சாரிபுத்திரர். துறவி போதிசத்துவர்.
பொறுமையின் சிகரத்தை வர்ணிக்கும் பிரபலமான ஜாதகக் கதை இது.
https://youtu.be/vQbJ1R5tjyI?si=kWryt8BqGQ0blr7n
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
(ஒன்றாக-நிச்சயமாக; மற்றதன் பின்சாரப் - மற்றது, அதன்+பின்+சாரும்)
தம்மபதம்
வன்முறை என்றால் அனைவரும் நடுங்குவார்கள்; அனைவரும் மரணத்துக்கு பயப்படுகிறார்கள். அனைவருக்கும் தங்கள் உயிர் மேல் பிரியமுண்டு. தம்மை மற்றவர்களின் இடத்திலிருந்து பார்த்தபின் ஒருவர் கொள்ளக்கூடாது; மற்றவர்களை கொள்ள வைக்கவும் கூடாது.
(தம்மபதம் 129/130)
மறுபிறவியில் நம்பிக்கை இல்லாத ஒருவன், ஒரே ஒரு தவறைச் செய்கிறான்— அது பொய் பேசுவது என்றால், அவன் எந்த தீமை செய்வதற்கும் தயங்க மாட்டான்.
(தம்மபதம் 176)
https://youtu.be/5K_nBUU3NHg?si=aTFJ92IkeUbDr0if
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
(அருள்-இரக்கம்; உழல்தல்-அலைதல்)
தீக நிகாயம் 31 சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை
தொடர்ந்து சூதாடினால் ஆறுவகையான தீமைகள் உண்டாகின்றன:
1. சூதாட்டத்தில் ஒருவர் வெற்றி பெற்றால் அவரை வெறுப்பார்கள்.
2. அவர் தோல்வியடைந்தால், 'பணத்தை இழந்துவிட்டேன்!' என்று புலம்புவார்.
3. உடனுக்குடன் செல்வம் குறைகிறது.
4. ஒரு சபையில் அல்லது நீதி மன்றத்தில் சூதாடுபவனின் பேச்சை மதிப்பாரில்லை.
5. நண்பரும், சகாக்களும் அவரை துச்சப்படுத்துவார்கள்.
6. அவருக்கு எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள், ஏனெனில் சூதாடுபவன் நல்ல கணவனாக மாட்டான் என மக்கள் கூறுவர்.
தொடர்ந்து சூதாடும் பழக்கத்தால் ஏற்படும் ஆறு பாதிப்புகள் இவை.
https://youtu.be/r4uDxFIbjOc?si=cc3QVi0pCF2wqTs6
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
(எய்து-தல் - அணுகுதல்.
எய்தாப் பழி - வேண்டாத, ஆனால் தவிர்க்க முடியாத பழி.)
பகவான் புத்தரின் எண் வழி மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும்.
ஒழுக்கம் (சீலம்) என்ற தலைப்பில் வருவன:
நல்வாய்மை Right Speech
நான்கு வகையான தவறான பேச்சு உள்ளன. இவற்றை தவிர்க்க வேண்டும்.
1. ஏமாற்றுப் பேச்சு அல்லது பொய்ப் பேச்சு.
2. கடுமையான பேச்சு
3. வம்புப் பேச்சு
4. விதண்டைப் (வெட்டிப்) பேச்சு
நற்செயல் Right Action
நற்செயல் என்றால் என்ன?
1. கொலை செய்வதைத் தவிர்த்தல்,
2. திருடுவதைத் தவிர்த்தல்,
3. தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடாமல் இருத்தல். இவையே நற்செயல்கள்."
— SN 45.8
நல்வாழ்க்கை (நற்சீவனோபாயம்) Right Livelihood
புத்தர் தமது சீடர்களிடம், மற்ற உயிர்களுக்குத் தீங்கு பயக்கும் எந்தத் தொழிலையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
குறிப்பாகக் கீழ்க்காணும் இந்த ஐந்து தொழில்களைச் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்:
1. இறைச்சியைக் கொண்டு தொழில் செய்தல் அதவது கசாப்புக்கடை நடத்துவது.
2. நச்சுப் பொருட்களை வைத்துத் தொழில் செய்தல்.
3. ஆயுத வியாபாரம் செய்தல்.
4. மனித அடிமை வியாபாரம் செய்வது, விபச்சாரத் செயல்பாடுகளில் ஈடுபடுவது.
5. மது போன்ற போதைதரும் பொருட்களில் வணிகம் செய்வது.
மேலும் புத்தர் தனது சீடர்கள் வஞ்சகத்தோடும், கபடத்தோடும், வற்புறுத்தியும், சூழ்ச்சி செய்தும் அல்லது பிற நேர்மையற்ற வழிகளிலும் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது என்கிறார்.
https://youtu.be/z4RPgQSe4JI?si=pqe1AVkMFKWCEbiK
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
(தவம் - புண்ணியம்
வியன் - அகன்ற)
இந்தக் குரள் மழை பற்றியது என்றாலும் தானத்துக்கும் புண்ணியத்திற்கும் உள்ள மதிப்பையும் வலியுறுத்துகிறது.
ஆன்மீக நோக்கத்துடன் தம் உடலை வருத்திக் கொள்வதை தவம் என்றும் கூறுவர். புத்தர் அதனை பயனற்றது என்றார். துறவு பூண்ட பிறகு ஆறு வருடங்கள் தன் உடலை வருத்திக் கொண்டார். ஆனால் எந்த பயனும் தரவில்லை. அதனால் அதனை கைவிட்டார். இளவரசராக வாழ்ந்த காலத்தில் அளவில்லாத புலன் இன்பங்களை அனுபவித்தார். அதுவும் திருப்தி தரவில்லை. எனவே பௌத்த பாதை இரண்டு விளிம்புகளையும் கைவிட்ட ஒரு நடுப் பாதை. தவம் என்றால் புண்ணியம் என்றும் பொருள் படும். அந்தப் பொருள் இங்கு பொருந்தும்.
புண்ணியமும் மகிழ்ச்சியும் ஒன்று என்று புத்தர் கூறினார்.
மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம்.
1. தானம் செய்தல்
2. ஒழுக்கத்தோடு வாழ்தல். தானம் செய்வதை விட மேன்மையானது.
3. நற் கடைப்பிடி அதாவது மன கவனத்தோடு இருத்தல். (மனதில் தோன்றும் தீய எண்ணப் போக்குகளை உடனே கை விடுவது. நல்ல எண்ணங்களை வளர்ப்பது.) மேற்குறிப்பிட்ட இரண்டு வழிகளை விட மேன்மையான புண்ணியம் சேர்க்கும் வழி இது.
https://youtu.be/XFu3Md3nHA4?feature=shared
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
(எஞ்ஞான்றும்-எக்காலமும்;
தவா-தவறாமல்:
ஈன்தல்-கருவுயிர்த்தல்
வித்து-விதை)
ஆசைக்கும் பிறப்பிற்கும் உள்ள தொடர்பை இந்த மணிமேகலை வரிகளில் காணலாம்:
..
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றில் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவலில் துன்பம் தலைவரும் என்ப...
மணிமேகலை 30,110-117
பொருள்:
இன்பம் துன்பம் போன்ற நுகர்ச்சிகளின் (feelings) காரணமாக வேட்கை (craving) தோன்றுகிறது.
வேட்கையின் காரணமாக பற்றும் (clinging),
பற்றியின் காரணமாக பவமும் (கருமத்தொகுதி being),
பவம் காரணமாக பிறப்பும் (தோற்றம் birth),
பிறப்பின் காரணமாக துன்பம் (suffering நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற துன்பங்கள்) தோன்றுகிறது.
இதிலிருந்து ஆசை (வேட்கை, பற்று) பிறப்பின் காரணம் என்று அறிந்து கொள்ளலாம். (திரிபிடக ஆதாரம் சங்யுத்த நிகாயம் 12.1)
https://youtu.be/BHGjMl3DgKI?feature=shared
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(ஈனும்-தரும்;இன்னா-துன்பம்; கோள்-துணிபு/கொள்கை)
நல்லூற்றம் (Right Intention) மார்க்கத்தின் இரண்டாம் பிரிவாகும். ஊற்றம் என்றால் அறிவு.
இந்தப் பிரிவைப் பகுத்தாய்ந்த புத்தர், மூன்று விதமான நல்லூற்றம் இருப்பதாகக் கூறுகிறார்:
1. துறவு பற்றிய எண்ணம், பற்று நீக்கும், புலன் இன்பங்கள் நாடுவதை கட்டுப்படுத்தும் நோக்கம்.
2. வெறுப்புக் கொள்ளாமல் இருத்தல் அல்லது நட்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற நோக்கம்.
3. தீமை செய்யாமல் இருத்தல் (அகிம்சை) அல்லது இரக்கத்தோடு இருக்கும் நோக்கம்.
இந்த இரண்டாம் பிரிவாகிய நல்லூற்றம், விஷ வேர்களான காமம் (பேராசை) மற்றும் வெகுளியை (வெறுப்பு) தணிக்க உதவுகிறது.
https://youtu.be/ydWvT2uVnxE?feature=shared