வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
II ஆம் அத்தியாயம்
நான்கு உயர் வாய்மைகள்
முதலாவது உயர் வாய்மை - துக்கம்
காசிக்குச் சமீபத்திலுள்ளது சாரநாத் என்ற நகரம். அது முற்காலத்திலே இசிபத்தானா என்று வழங்கப்பட்டது. இங்கே தான் புத்த பகவான் தமது முதல் தருமோபதேசத்தைத் தமது பழைய கூட்டாளிகளான ஐந்து தாபசர் முன்னிலையில் நிகழ்த்தினார் [1]. அதிலே நான்கு உயர் வாய்மைகள் (சத்தாரி அரிய சச்சானி) விளக்கப் பட்டன. பௌத்தத்தின் இருதயம் போன்றவை இந்த உண்மைகள். இந்தத் தருமோபதேசத்திலே நான்கு வாய்மைகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. மூல கிரந்தங்களில் அவ்வாறே காணப்படுகிறது. ஆனால் ஆதி பௌத்த பிடகங்களிலே பல இடங்களில் அவை மீண்டும் மீண்டும் விரிவாகவும் பல படியாகவும் விளக்கப்படுகின்றன. இந்தக் குறிப்புக்களினதும் உதவியோடு நான்கு வாய்மைகளை ஆராய்ந்தால் புத்தர் கூறிய தருமத்தின் முக்கியமான கோட்பாடுகளைத் தவறின்றி நன்றாக மூல கிரந்தங்களில் உள்ளபடி அறிந்து கொள்ளலாம்.
அந்த நான்கு வாய்மைகளாவன:
1. துக்கம்
2. சமுதயம், அதாவது துக்க உற்பத்தி
3. நிரோதம், அதாவது துக்க நிவாரணம்
4. மக்க, அதாவது துக்க நிவாரண மார்க்கம்.
முதலாவது உயர் வாய்மை - துக்கம்
முதலாவது உயர்வாய்மை (துக்க அரியசச்ச - ஆரிய சத்தியம் - உயர்வாய்மை) 'துன்பம் என்ற உயர் வாய்மை' என மொழி பெயர்க்கப்படுகிறது. அதன்படி பௌத்தத்தில் வாழ்வு துன்பமும் இன்னலுமன்றி வேறொன்றுமன்றென விளக்கப்படுகிறது. இந்த மொழிப்பெயர்ப்பும் விளக்கமும் பொருத்தமற்றவை. தவறானவை. இம்மொழிபெயர்ப்பு வரையறையுடையது. பொருத்தமற்றது, இலேசாக்கப்பட்டது. விளக்கம் மேலெழுந்தவாரியானது. இதனால் பௌத்தம் வாழ்வில் நன்மை காணாத ஒரு சமயமென மக்கள் சாதாரணமாகக் கருத வைக்கிறது.
எதிலும் நலமே காண்கிற தன்மையோ எதிலும் தீமையே காண்கிற தன்மையோ பௌத்தத்தில் கிடையாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பௌத்தம் எத்தன்மையுடையதென்றால் வாழ்வைப் பற்றியும் உலகைப் பற்றியும் யதார்த்தமான ஒரு காட்சியுடையது. அது உள்ளத்தை உள்ளவாறே பார்க்கும் "யதாபூத"த் தன்மையுடையது. அது உங்களைப் போலிக் கற்பனையில் இருக்கச் செய்வதில்லை. அல்லது கற்பனையிற் பிறந்த பல வகையான பயத்திலும் பாவ எண்ணங்களிலும் இருக்கச் செய்வதில்லை. உங்கள் உண்மை நிலை என்ன என்பதையும் பிரத்தியட்சமாகக் கண்டு காட்டி நீங்கள் பூரணமான விடுதலைபெறவும் சமாதானமும் சாந்தியும் சுகமும் பெறவும் வழியைத் தெரிவிக்கிறது.
நோய்மிகக் கொடியது, இதற்குப் பரிகாரமே இல்லையெனச் சில வைத்தியர்கள் மிகைப்படுத்திக் கூறுவர். வேறு சிலர் அப்படி நோயொன்றுமில்லை, வைத்தியம் அவசியமில்லை என்று அறியாமையால் கூறி நோயாளிக்குப் போலி ஆறுதல் கூறி ஏமாற்றுவர். முதல் வைத்தியர் தீமை காணும் தன்மையுடையவர் என்று கூறலாம். இரண்டாமவர் நன்மையே காணும் தன்மையுடையவர் எனலாம். ஆனால் இரண்டு பேரும் ஆபத்தான பேர்வழிகளே. மூன்றாவது வகையான ஒரு வைத்தியர் இருக்கிறார். அவர் நோய்க் குணங்களைச் சரியாக அறிந்து நோய்க்குரிய காரணத்தையும் தன்மையையும் உணர்ந்து, அதைக் குணப்படுத்தலாமெனத் தெளிவாகக் கண்டு, தைரியத்தோடு மருந்து கொடுக்கிறார். அதன் பயனாக நோயாளி தப்பிப் பிழைக்கிறான். புத்தபகவான் மூன்றாவது வைத்தியரைப் போன்றவர். இவரே ஞானமும் விஞ்ஞானப் பான்மையுமுடையவர். உலகத்துப் பிணிக்கு ஏற்ற வைத்தியர். பிசக்க குரு அல்லது பைஷஜ்ய குரு.
துக்க என்ற பாளிச் சொல் (சமஸ்கிருதத்தில் துஃக) சாதாரணமாகத் துன்பம், இன்னல், துயர், அல்லல் என்ற கருத்துடையது. இதன் எதிர்ப் பதம் சுகம், மகிழ்ச்சி, சௌகரியம், சொகுசு என்ற பொருள்களையுடையது. முதலாவது உயர் வாய்மையாகப் புத்தர் உலகைப் பற்றியும், வாய்மையைப் பற்றியும் கொண்ட காட்சியைக் குறிக்கும் துக்கம் என்ற சொல் ஆழ்ந்த தத்துவக் கருத்துடையது. பலபட விரிந்த பொருளைச் சுட்டுவது. சாதாரணமான பொருளில் கொள்ளும் துன்பம் என்ற கருத்தைத் துக்கமென்ற முதல்வாய்மை அடக்கிய போதிலும், அது 'பூரணமின்மை', 'நிறைவற்றதன்மை', 'அநித்தியம்', 'உள்ளீடில்லாதது', 'போலி' என்ற ஆழமான கருத்துக்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆகவே ஆங்கிலத்தில் இக்கருத்துக்களைச் சுட்டக் கூடிய சொல் இல்லாதபடியால் அதற்கு ஆங்கில வார்த்தையைக் கொடாமல் விட்டு விடுவதே நல்லது. துயர் துன்பம் என்று மாத்திரம் மொழி பெயர்த்துத் தவறானதும், பொருத்தமில்லாததுமான கருத்தைக் கொடுப்பதிலும் பார்க்க 'துக்கம்' என்று விட்டு விடுவதே நல்லது.
உலகில் துன்பமுண்டு என்று புத்தர் கூறும்போது வாழ்வில் இன்பம் இல்லையென அவர் முற்றாக மறுக்கவில்லை. துறவிகளுக்கும் இல்லறத்தார்க்கும் பல விதமான லௌகீக இன்பங்களும், ஆன்மார்த்தமான இன்பங்களும் உண்டென்பதை அவர் ஒப்புக் கொள்ளுகிறார். புத்தருடைய உரைகள் அடங்கிய ஐந்து மூலப் பாளித் தொகை நூல்களில் ஒன்றான 'அங்குத்தர நிகாயத்' திலே இன்பங்கள் (சுகானி) பற்றிய அட்டவணை ஒன்றுண்டு. இல்லற இன்பம், துறவற இன்பம், புலன் வருமின்பங்கள், துறவினால் வரும் இன்பங்கள், பற்றினால் வரும் இன்பங்கள், பற்றில்லாமையால் வரும் இன்பங்கள், உடல் வருமின்பங்கள், மனத்திலுண்டாகும் இன்பங்கள் எனப் பலவகை இன்பங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இவை யெல்லாம் துக்கத்தின் கீழ்ச் சேர்க்கப்பட்டுள்ளன.
இவை மாத்திரமல்ல 'தியானம்' என்ற உயர்ந்த போகா ஆனந்த நிலை கூடத் துக்க அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளது. இந்நிலை துன்பமெனச் சாதாரணமாகக் கூறப்படும் துயர் சிறிதுமற்றதும், தூய ஆனந்தமெனக் கூறப்படுவதுமான நிலை. அத்துடன் இன்பமும் துன்பமுமற்ற உணர்ச்சிகளிலிருந்து நீங்கிய பற்றற்ற சமாதி நிலைகள் கூடத் துக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஐந்து பாளிக்கிரந்தத் தொகுப்புகளில் வேறொன்றான மஜ்ஜிம நிகாயத்தில் உள்ள மற்றொரு சூத்திரத்தில் இங்கு குறிப்பிட்ட தியான நிலைகளில் உண்டாகும் இன்பத்தை விதந்து கூறியபின் பகவான் அவையும் அநித்தியமானவை, அவையும் துக்கமே, அவை மாற்றத்துக் குட்பட்டவை (அநிச்சாதுக்கா லிபரிணாம தம்ம) என்று குறிப்பிடுகிறார். இங்கே துக்கமென்ற சொல் விளக்கிக் கூறப்படுகிறது. இது துன்பத்தைத் தருவதால் துக்கமன்று. 'எது அநித்தியமோ அது துக்கம்.' என்ற பொருளில் (யத்அநிச்சம் தம்துக்கம்) கூறப்படுகிறது.
புத்தர் விஷயங்களை யதார்த்தமாகவும் பிரத்தியட்சமாகவும் காண்பவர். வாழ்வு பற்றியும், புலன் வரும் இன்பங்கள் பற்றியும் ஒருவர் மூன்று விஷயங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமென அவர் கூறுகிறார்.
1. கவர்ச்சி அல்லது இன்ப அனுபவம் (அஸ்ஸாத).
2.தீமை விளைதல், ஆபத்து அல்லது அதிருப்தி (ஆதீனவ).
3. சுதந்திரம் அல்லது விடுதலை (நிஸ்ஸரண).
மகிழ்வளிக்கும் அழகான கவர்ச்சியுள்ள ஒருவரைக் காணும் போது அவரிடம் விருப்பங்கொள்ளுகிறீர். அவரிடம் நீங்கள் கவர்ச்சி கொள்ளுகிறீர். மேலும் மேலும் அவரைக் காண விரும்புகிறீர். அவரைக் காண்பதால் மகிழ்ச்சியும் திருப்தியுமடைகிறீர். இது இன்ப நுகர்வு (அஸ்ஸாத). அனுபவ பூர்வமான ஒரு விஷயம். ஆனால் இந்த அனுபவம் நித்தியமானதன்று. அவ்வாறே அந்த ஆளின் அழகும் கவர்ச்சியும் நித்தியமல்ல. நிலைமை மாறினால், அந்த ஆளைக் காணமுடியாமற் போனால், இந்த இன்ப அனுபவத்தைப் பெறமுடியாது போனால், நீங்கள் துயரமடைவீர்கள். அதனால் மதிமயங்கி மாறாட்டம் அடையலாம். முட்டாள்தனமாக நடந்து கொள்ளவும் முற்படுவீர். இதனால் உண்டாகும் தீமை இதுவே. இந்த ஆதீனவத்தால் உண்டாகும் அதிருப்தியும் ஆபத்தான தன்மையும் இதுவே. இதுவும் ஒரு அனுபவமே. ஆனால் அந்த ஆளிடம் பற்றில்லாவிட்டால், முற்றாகப் பற்றுக்கோடு ஒழிந்தால் அதுவே சுதந்தரம், விடுதலை (நிஸ்ஸரண). உலகத்து இன்ப அனுபவங்கள் எல்லாம் இம் மூன்று தன்மைகளை உடையன.
வாழ்வைப் பற்றிப் பூரணமாகவும் பிரத்தியட்சமாகவும் அறிந்து கொள்ள வாழ்வில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களையும், அவற்றிலிருந்து விடுதலை பெறுவதையும் கணக்கில் எடுக்க வேண்டுமேயன்றி இங்கே எதிலும் நலமே காண்கிற தன்மையோ எதிலும் தீமையே காண்கிற தன்மையோ ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் அல்லவென்பது இதிலிருந்து தெரியவரும். அப்போதுதான், உண்மையான விடுதலை சாத்தியமாகும். இவ்விஷயம் பற்றிப் புத்தர்பிரான் பின்வருமாறு கூறுகிறார்:
'ஓ பிக்குகளே, புலன் வருமின்பங்களை அனுபவித்தல், இன்ப அனுபவமே. அவற்றால் ஏற்படும் அதிருப்தி அதிருப்தியே. அவற்றிலிருந்து விடுதலை பெறுதல் விடுதலையே என்பதைப் பிரத்தியட்சமாக அறிந்து கொள்ளாத துறவிகளும் பிராமணர்களும், புலன் வருமின்பத்தில் உண்டாகும் ஆசையை முற்றாக அறிந்துகொள்ளமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால் ஓ பிக்குகளே, புலன் வருமின்ப அனுபவம், இன்ப அனுபவமே, அவற்றால் வரும் துன்பம், துன்பமே, அவற்றிலிருந்து விடுதலை பெறுவது விடுதலையே என்பதை இவ்வாறு புறநோக்காகத் துறவிகளும் பிராமணரும் அறிந்து கொள்வாரானால், அவர்கள் நிச்சயமாக அவற்றை உண்டாக்கும் ஆசையை முற்றாய் அறிந்து கொள்வர். அதனால் மற்றொருவருக்கும் அதைப் போதிக்கும் திறமைபெறுவர். அந்தப் போதனையை அனுசரிப்பவர் புலன்வருமின்பங்களை உண்டாக்கும் ஆசையைப் பூரணமாகப் புரிந்து கொள்வர்.'
துக்கம் பற்றிய கருத்தை மூன்று அமிசங்களுடையதாக அறிந்து கொள்ள வேண்டும்:
1. சாதாரணமான துக்கம். இது துக்க துக்கம் எனப்படும்.
2. மாற்றங்கள் மூலம் உண்டாகும் துக்கம் (விபரிணாம துக்கம்).
3. ஏதுக்களால் உண்டாகும் துக்க நிலைகள் (சங்கார துக்கம்).
பிறப்பு, மூப்பு, பிணி, சாக்காடு, பிரியமற்றவர்களோடு சேர்தல், பிரியந்தராத நிலைமைகள், அன்புள்ளவரை விட்டுப் பிரிதல், பிரியமான நிலைகளைவிட்டு நீங்குதல், விரும்பியதைப் பெறாதிருத்தல், துயர், கவலை, அவலம், கையாறு என இத்தகைய உடல் வேதனையையும் மனவேதனையையும் தரும் துன்பங்கள் எல்லாம், அதாவது துன்பமெனச் சாதாரணமாக ஒப்புக் கொள்ளப்படுவனவெல்லாம் துக்க துக்கம் என்ற பிரிவில் அடங்கும்.
இன்ப உணர்ச்சியும் வாழ்வில் உண்டாகும் இன்பநிலையும் நித்தியமாய் என்றும் நிலைக்கக்கூடியவை அல்ல. அவை இன்றோ நாளையோ மாற்றத்துக் குள்ளானவை. அவ்வாறு மாறும்போது துன்பம், துயர், நோக்காடு என்பவற்றை உண்டாக்கும். இந்த மாற்றங்களுக்குட்பட்ட துக்கம் விபரிணாம துக்கம் எனப்படும்.
மேலே கூறிய இரண்டு வகையான துக்கத்தையும் புரிந்து கொள்வது இலேசு. இவற்றை எவரும் ஆட்சேபிக்கமாட்டார். முதாலாவது உயர்வாய்மையின் இந்த அமிசம் புரிந்து கொள்வதற்கு இலேசாயிருப்பதால் சாதாரணமாக எல்லாராலும் அறியப்பட்டதொன்றாகும். இஃது எம் தினசரி வாழ்வில் காணப்படும் சாதாரண அனுபவமாகும்.
மூன்றாவது பிரிவைச் சேர்ந்த துக்கமே இந்த முதல்வாய்மையில் மிக முக்கியமான தத்துவஞான அமிசமாகும். இதைப் புரிந்து கொள்வதற்கு 'நான்' என்ற பொருள் எது? தனிப்பட்ட ஒருவரென்றால் என்ன, புட்கலன் என்பது என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வெண்டும். உயிர் என்று சொல்லப்படுவது என்ன?
'உயிர்', 'புட்கலன்', 'நான்', 'அகம் பிரத்யய' என்று சொல்லப்படுவதெல்லாம் பௌத்த கொள்கைப்படி 'பஞ்சக்கந்தம்' எனப்படும். இப் பஞ்சக்கந்தங்கள் மாறும் இயல்புடையவை. இவை உடல் உளம் என்பவை சம்பந்தமான சக்திகள் அல்லது வலுக்களின் சேர்க்கையாலுண்டானவை. இவை ஐந்து பதார்த்தங்களின் சேர்க்கை. 'இந்த உபாதான பஞ்சக்கந்தங்கள் துக்கமே' என்கிறார் புத்தர். 'துக்கமென்பது பஞ்சக்கந்தமே' என அவர் வேறோரிடத்தில் குறிப்பிடுகிறார். 'ஓ பிக்குகளே, துக்கம் என்றால் என்ன? உபாதான பஞ்சக்கந்தமே அது எனக் கூறவேண்டும்.' துக்கம் பஞ்சக்கந்தமும் இரு வேறு பொருள்களல்ல என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பஞ்சக்கந்தமே துக்கம். உயிர் என்று சொல்லப்படும் பொருளை ஆக்கியுள்ள ஐந்து கந்தங்களைப்பற்றி அறிந்ததும் இந்த விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். பஞ்சக்கந்தங்கள் என்பவை என்ன?
பஞ்சக்கந்தங்கள்
முதாலாவது சடப் பொருளின் சேர்க்கையான ரூபக்கந்தம். ரூபக்கந்தமென்பதில் நான்கு மகாபூதங்கள் (சத்தாரி மஹாபூதானி) அடங்கும். இவை மண், நீர், அனல், காற்று என்பன. திண்மை, நீர்மை, வெம்மை, புடைபெயர்ச்சியென இவை அறியப்படும். இவற்றிலிருந்து பிறந்ததன் மாத்திரைகளான சப்த, ஸ்பரிசு, ரூப, ரச, கந்தமென்பவையும் அவற்றை அறியும் பஞ்சேந்திரியங்களான காது, மெய், கண், நாக்கு, மூக்கு என்பனவும், மனமும் மனத்தில் பிறக்கும் எண்ணங்கள், கற்பனைகள், கருத்துக்கள் ஆகிய தர்மாயதனங்களும் இதில் சேரும். அவ்வாறு சடம் என்று சொல்லப்படும் உலகம் அனைத்தும் அந்தக் கரணங்களும் புறக் கரணங்களுமெல்லாம் இந்த ரூபக்கந்தமே. (இங்கே அந்தக்கரணமென்பது மேலே விளக்கிய தர்மாயதனங்கள்.)
இரண்டாவது வேதானாக்கந்தம் எனப்படும். வேதனை என்பது நுகர்ச்சி. புற உலகத்தோடு நமது உடலும், மனமும் தொட்டுக் கொள்ளும்போது உண்டாகும் நுகர்ச்சிகள் இன்பமாகவோ, துன்பமாகவோ, நொதுமலாகவோ இருக்கும். இவை ஆறுவகை. உருவங்களைக் கண் காணும்போது உண்டாகும் காட்சி நுகர்வு. அவ்வாறே காதினால் கேட்பது, மூக்கினால் மணப்பது, நாக்கினால் சுவைப்பது, மெய்யினால் பரிசித்துணர்வது, மனத்தினால் (பௌத்தத்தில் மனம் ஆறாவது இந்திரியமாகக் கருதப்படும்) எண்ணங்கள், சித்தவிருத்திகள் கருத்துக்கள் உண்டாவது என புலனுகர்வுகள் ஆறு. உடலினாலும் மனத்தினாலும் பெறும் உணர்வுகள் எல்லாம் இதில் அடங்கும்.
பௌத்தத்தில் மனம் என்றால் எவ்வாறு விளக்கப்படுகிறதென்பதை இங்கு குறிப்பிடுவது நன்று. சடப் பொருள் இதற்கு எதிரான ஆன்மா என இரு எதிர்ப் பொருள்களைப் பௌத்தம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனைய மதங்களிற் பெரும்பாலானவை இத்தகைய இருமையைப் போற்றும். மனம், கண் காது போன்றதொரு இந்திரியம். ஏனைய இந்திரியங்களை அடக்கி ஆள்வது போல மனத்தையும் அடக்கி ஆளலாம். ஆறு புலன்களையும் அடக்கி ஆள்வதைப் பற்றிப் புத்தர் அடிக்கடி குறிப்பிடுவார். இந்திரியங்கள் என்ற முறையில் கண் உருவங்களையும் வண்ணங்களையும் கண்டு உணரும். மனமோ எண்ணங்கள் கருத்துக்கள், சைதசிக வடிவங்கள் என்பவற்றையே உணரும். ஒவ்வொரு புலன்களும் அவையவை உணரக்கூடிய விஷயங்களிலேதான் ஆட்சி நடத்தும். வண்ணங்களை நாம் பார்க்கலாமேயன்றிக் கேட்க முடியாது. அவ்வாறே சத்தத்தைக் கேட்கலாமேயன்றிக் காணமுடியாது. பஞ்சப் புலன்களாகிய கண், காது, மூக்கு, நாக்கு, உடல் என்பவற்றால் உருவம், சத்தம், கந்தம், ரசம், பரிசம் என்பவற்றை உணர்கிறோம். ஆனால் உலகம் முழுவதும் இந்த ஐம்புல நுகர்ச்சிகளில் அடங்கவில்லை. அவை உலகின் ஒரு பகுதியே. எண்ணங்கள், கருத்துக்கள் என்பன இவற்றில் அடங்கவில்லையல்லவா? அவையும் உலகின் ஒரு பகுதிதானே. ஆனால் எண்ணங்களைக் கண், காது, மூக்கு, நாக்கு, உடல் போன்ற புலன்களால் உணரமுடியாதல்லவா? மனம் என்ற இந்திரியம் இவற்றை அறிகிறது. இந்த ஐந்து இந்திரியங்களால் உணரப்படும் உலகுக்குக் கருதுக்களும் எண்ணங்களும் புறம்பானவையல்ல. அவை சட அனுபவங்களில் தங்கியுள்ளன. சட அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றன. குருடனாய்ப் பிறந்த ஒருவன் வண்ணங்கள் பற்றிக் கண்ணல்லாத வேறு இந்திரியங்கள் மூலம் பெற்ற உணர்ச்சிகளோடு ஒப்பிட்டு ஒரு கருத்தை உணர்கிறான். உலகின் ஒரு பகுதியாயுள்ள கருத்துக்களும் எண்ணங்களும் சட அனுபவங்கள் மூலம் உருவாகி அவற்றால் பாதிக்கப்பட்டு மனத்தில் உருவாக்கப்படுகின்றன. இதனால் மனம், கண், காது என்பன போல இந்திரியமாகவே கொள்ளப்படுகிறது.
மூன்றாவது சஞ்ஞாக்கந்தம் எனப்படும். சஞ்ஞா என்றால் குறிப்பு. குறிப்புகள் புலன்வருசாட்சிகள். புலனுணர்ச்சியான வேதனாக்கந்தம் போலவே சஞ்ஞாக்கந்தமும் ஆறுவகை. மனமுட்பட்ட ஆறு புலன்களின் தன்மாத்திரைகளும் அவற்றோடியைந்த வெளிப்பொருள்களும் இந்த ஆறு வகைகளாகின்றன. புலனுணர்ச்சிகள் போலவே ஆறு இந்திரியங்களும் வெளியுலகப் பொருள்களோடு தொடர்பு கொள்வதால் உண்டாவது. சடப்பொருள்களையும் மானசிகப் பொருள்களையும் இனங்கண்டு கொள்வன இந்தக் குறிப்புக்களென்னும் சாட்சிகளே.
நாலாவது சங்காரக் கந்தம் எனப்படும் [2]. இந்தத் தொகுதியில் நல்லனவும் தீயனவுமான சங்கற்பங்கள், விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய தொழிற்பாடுகள் எல்லாம் அடங்கும். சாதாரணமாகக் கன்மம் (கம்ம) என்று வழங்கப்படுவனவெல்லாம் இந்தப் பகுதியில் சேர்ந்தவையே. கன்மத்துக்குப் புத்தர் கொடுத்த வரைவிலக்கணம் இங்கே கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். 'ஓ பிக்குகளே, சேதனம் என்ற விருப்பத்துணிவாற்றலையே நான் கன்மம் என்று கூறுகிறேன். சங்கற்பஞ் செய்து கொண்டபின் ஒருவர் மனம் வாக்குக் கரணங்களினால் செயற்படுகிறார்.' விருப்பத் துணிவாற்றல் என்பது 'மன ஆக்கப்பாடு, மனச் சேட்டிதம் ஆகும். அது மனத்தை நல்லது, தீயது, நொதுமலானது என்ற செயல்களில் உய்க்கிறது.' வேதனாவும், சஞ்ஞையும் அதாவது புலனுணர்வும், குறிப்பும் (சாட்சி) போலவே, விருப்பத் துணிவாற்றல் மனம் என்னும் சங்கற்பமும் ஆறு. அந்தக் கரனங்கள் அவற்றுக்கு ஏற்ற புற உலகத்துப் பொருள்களோடு சடப்பொருளும் கருத்துப் பொருளும் தொடர்புபடும் முறையால் ஆறு வகைப்படும். புலனுணர்வும் குறிப்பும் விருப்பத்துணிவாற்றலால் (சங்கற்பத்தால்) உண்டான செயல்களல்ல. அவை கர்மபலனை உண்டாக்கமாட்டா. விருப்பத்துணிவாற்றல் கொண்ட செயல்களே கர்ம பலனை உண்டாகுகின்றன. மனசிகாரா என்னும் கருத்தூன்றுதல், சந்த என்னும் விருப்பத்துணிவு, அதிமொக்க என்னும் தீர்மானம், சத்தா என்னும் சிரத்தை, சமாதி என்னும் ஏகாக்கிர நிலை, பஞ்ஞா என்னும் ஞானம், வீரிய என்னும் பலம், ராக என்னும் விருப்பு, படிக என்னும் வெறுப்பு, அவித்தை என்னும் அறியாமை, மானம் என்னும் தன்மதிப்பு, ஆன்மா என ஒன்று உண்டென்னும் சக்காயதிட்டி முதலியனவே கர்மபலனை உண்டாக்கக் கூடியன. சங்காரக் கந்தத்திலே 52 வகையான சித்தத் தொழிற்பாடுகளுண்டு (விஞ்ஞானக்கந்த). [3]
ஐந்தாவது விஞ்ஞானக்கந்தம் எனப்படும், விஞ்ஞானமென்பது கண், காது, மூக்கு, நாக்கு, உடல், மனம் என்ற ஆறு இந்திரியங்களில் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு உண்டாகும் மறுவினையாகும். அதற்கு விஷயமாயுள்ளது புற உலகத்தோற்றங்களுள் பொருத்தமாயுள்ள உருவம், சத்தம், கந்தம், சுவை, ஸ்பரிசம் என்பவற்றில் ஒன்றாகும். உதாரணமாகக் காட்சி விஞ்ஞானம் (சக்கு விஞ்ஞானம்) கண்ணை ஆதாரமாகவும் காணும் உருவை காட்சிக்கு விஷயமாகவும் கொண்டது. மனோ விஞ்ஞானம் கண்ணை ஆதாரமாகக் கொண்டு ஒரு கருத்தையோ, எண்ணத்தையோ (தம்மம்) விஷயமாகக் கொண்டது. எனவே விஞ்ஞானம் ஏனைய இந்திரியங்களோடு தொடர்புடையது. அதனால் புலனுணர்ச்சி, குறிப்பு, சங்காரம் என்பவற்றைப்போல விஞ்ஞானமும் ஆறு காரணங்களோடும் அவற்றுக்கு இசைவான ஆறு புற விஷயங்களோடும் தொடர்புடையதாகிறது.
விஞ்ஞானம் ஒரு விஷயத்தை இனங்கண்டு கொள்வதில்லையென்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும். விஞ்ஞானம் என்பது ஒரு விழிப்பு நிலை. ஒரு விஷயம் முன்னால் உண்டு என்ற தெரியும் நிலை. ஒரு நிறத்தோடு (நீல நிறமென்று வைத்துக்கொள்வோம்) சக்கு விஞ்ஞானம் உண்டாகிறது. இது ஒரு நிறம் உண்டு என்பதன் தெரிநிலை. அது நீல நிறம் என்பதை சக்கு விஞ்ஞானம் இனங் கண்டு கொள்வதில்லை. இந்தத் தெரிநிலையில் அந்தச் சவிகற்ப உணர்வு உண்டாவதில்லை. மூன்றாவது கந்தமான சஞ்ஞாக் கந்தமே இவ்வாறு விகற்பித்து அறிவது. சக்கு விஞ்ஞானம் என்பது காட்சி என்று சொல்லப்படும் கருத்தே. காணுதல் ஒரு விஷயம். இது இன்னதென்று பிரித்துக் காணுதல் வேறு விஷயம். மற்ற விஞ்ஞானக் கந்தங்களையும் இவ்வாறே பொருள் செய்து கொள்ள வேண்டும்.
பௌத்த தருமத்தில் மாற்றமும் அழிவுமில்லாத ஆன்மா என ஒரு பொருள் இல்லை என்பதை இங்கு மறுபடியும் ஞாபகப்படுத்துகிறோம். சடப்பொருளுக்கு எதிராக 'அகங்காரம்', 'ஆன்மா', 'புட்கலன்' என்று ஒரு பொருள் கிடையாது. இந்த விஞ்ஞானமே ஆன்மா என்று நினைப்பது தவறு. விஞ்ஞானம் தான் ஆன்மா என்றும் அது நித்தியமான வஸ்து என்றும் ஒரு தவறான கருத்து மிகப் பழங்காலத்திலிருந்து இன்று வரை நிலவிவருவதால் இதனை வலியுறுத்தி மறுக்க வேண்டியிருக்கிறது.
புத்தருடைய சீடருள் ஒருவரான சாதி என்பவர், 'விஞ்ஞானம் தான் சம்சாரத்தில் உழன்று பிறப்பு எடுக்கிறது' என்றே பகவான் போதித்தார் என எண்ணினார். 'விஞ்ஞானம் என்றால் என்ன?' என்று அவரைக் கேட்டார். 'பேசுவதும் அதுதான், உணர்வதும் அதுதான், இம்மையிலும் மறுமையிலும் வினைப்பயனை அனுபவிப்பதும் அதுதான்' என அவர் சன சம்மதமான சிறப்புடைய பதிலொன்றைக் கொடுத்தார்.
'மந்த புத்தியுள்ளவனே! இப்படி யாருக்கு நான் போதித்தேன்?' என்று பகவான் ஆட்சேபித்தார். 'விஞ்ஞானம் ஏதுக்களிலிருந்து உண்டாகியதென்று பலவகையில் நான் விளக்கங் கொடுக்கவில்லையா? ஏதுக்களின்றி விஞ்ஞானம் உண்டாவதில்லை' என்று பதில் கூறி விஞ்ஞானத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். எதைப் பற்றுக் கோடாகக் கொண்டு விஞ்ஞானம் உண்டாகிறதோ அதைக் கொண்டு அதற்குப் பெயர் கொடுக்கப்படுகிறது. கண்ணையும் காணும் பொருள்களையும் ஏதுவாகக்கொண்டு ஒரு விஞ்ஞானம் உண்டாகிறதோ அதற்குச் சக்கு விஞ்ஞானம் என்று பெயர். காதினாலும் சத்தத்தினாலும் உண்டாகும் விஞ்ஞானம் கேள்வி விஞ்ஞானம். மூக்கினாலும் மணத்தினாலும் உண்டாகும் விஞ்ஞானத்துக்கு முகர்வு விஞ்ஞானம் என்று பெயர். நாக்கினாலும் சுவையினாலும் உண்டாகும் விஞ்ஞானத்துக்கு சுவை விஞ்ஞானம் என்று பெயர். உடலினாலும் பரிசத்தினாலும் உண்டாகும் விஞ்ஞானத்துக்கு பரிச விஞ்ஞானம் என்று பெயர். மனத்தினாலும் மானசிக விஷயங்களான எண்ணம், கருத்து என்பவற்றாலும் உண்டாகும் விஞ்ஞானத்துக்கு மனோவிஞ்ஞானம் என்று பெயர்.'
பின்னர் பகவான் ஓர் உதாரணத்தினால் விளக்கினார்.
எதனால் நெருப்பு எரிகிறதோ அதைக் கொண்டு நெருப்புக்குப் பெயர் கொடுக்கப்படுகிறது. நெருப்பு விறகினால் எரிந்தால் அதை விறகு நெருப்பு என்பர். வைக்கோலினால் எரிந்தால் வைக்கோல் நெருப்பு என்பர். என்ன ஏதுவினால் விஞ்ஞானம் உண்டாகிறதோ அந்த ஏதுவினால் அது பெயர் பெறுகிறது.
புத்த கோஷர் என்ற புகழ் பெற்ற பாஷியகாரர் இவ்விஷயம் பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு விளக்குகிறார்: 'விறகில் எரியும் தீ, விறகு இருக்கும் வரை தான் எரியும். விறகு இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே அணைந்துவிடும். ஏனெனில் நிலைமை மாறிவிட்டது. விறகு இல்லாத பட்சம் தீயானது சிராய்த்துணுக்குகளைத் தேடிப்பிடித்து சிராய்த்துணுக்குத் தீயாக மாறமாட்டாது. இவ்வாறே கண்ணையும் கண்ணிற்படும் உருவங்களையும் ஏதுவாகாக்கொண்டு எழுந்த விஞ்ஞானம் கண்வழியாகப் பிறக்கும் விஞ்ஞானமே. அது கண்ணும், காட்சிக்குரிய வடிவங்களும், ஒளியும், கவனமும் என்ற உபாதிகள் இருக்கும் வரை தான் உண்டாகும்; இந்த உபாதிகள் இல்லாதொழிந்தால் அதிலேயே மறைந்துவிடும். ஏனெனில் நிலைமை மாறிவிட்டது. அந்த விஞ்ஞானம் காது முதலிய இந்திரியங்களைப் பற்றிக் கொண்டு காது விஞ்ஞானம் முதலியனவாக மாறுவதில்லை.'
விஞ்ஞானம் என்பது சடப் பொருள், வேதனை, குறிப்பு, சங்காரம் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டதென்றும் அதற்கு அவற்றைவிடத் தனிப்பட்ட வாழ்வு இல்லையென்றும் ஐயத்துகிடமின்றி புத்தர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுவதாவது:
'ரூபத்தை உபாயமாகக் கொண்டு அதை விஷயமாகக் கொண்டு (ரூபாரம்மணம்) ரூபத்தை ஆதாரமாகக் கொண்டு (ரூபதிட்டம்) விஞ்ஞானம் நிலவலாம். இன்பத்தை நோக்கமாகக் கொண்டு அதுவாகலாம். விருத்தியடைந்து விரியலாம். அல்லது வேதனையை உபாயமாகக்கொண்டு.... அல்லது சஞ்ஞா(குறிப்பை) உபாயகமாகக் கொண்டு... அல்லது சங்காரத்தை (சங்கற்பம்) உபாயகமாகக் கொண்டு சங்காரத்தை விஷயமாகக் கொண்டு, சங்காரத்தை ஆதாரமாகக் கொண்டு இன்பத்தை நாடி அது வளர்ந்து பெருகி அபிவிருத்தியடையலாம். ரூபம், வேதனை, சஞ்ஞா, சங்காரம் என்பவையின்றி விஞ்ஞானத்தின் தோற்றத்தையும் மறைவையும் போக்கையும் வரவையும் உற்பத்தியையும் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் நான் காட்டுகிறேன் என்று ஒருவன் சொல்வானானால், அவன் இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசுகிறான்.'
பஞ்சக்கந்தங்கள் என்பவை மிகச் சுருக்கமாக இவ்வாறு விளக்கப்படுகின்றன. 'உயிர்' என்றும் 'புட்கலன்' என்றும் 'நான்' என்றும் கூறுவதெல்லாம் இந்தப் பஞ்சக்கந்தங்களுக்கு வசதியாக இட்டதொரு பெயர். ஒரு அடையாளப் பெயர். இப்பஞ்சக்கந்தங்கள் சதா மாறிக் கொண்டிருக்கும் அநித்தியப் பொருள்கள், 'எது அநித்தியமோ அது துக்கம்.' (யத் அநிச்சம் தம் துக்கம்) புத்தர் அருளியவாக்கியங்களின் உண்மையான பொருள் இதுவே. 'உபாதானப் பஞ்சக்கந்த, துக்கமே.' (உபாதானம் என்பது பற்று) இந்தக் கந்தங்கள் கணத்துக்குக் கணம் பங்கமடைவன. இங்கே 'ஏ' என்ற பதார்த்தம் 'ஏ' அன்று. பஞ்சக்கந்தங்கள் கணந்தோறும் தோன்றி மறைகின்றன. 'ஓ பிராமணனே, இது மலை அருவிபோல் விரைந்து வெகுதூரம் பாய்வது, எல்லாவற்றையும் வாரி அடித்துக் கொண்டு செல்லுகின்றது. பாயாமல் அது ஒரு கணமாவது, தற்பரையாவது, பொழுதாவது நிற்பதில்லை. சதா பாய்ந்து கொண்டேயிருக்கிறது. மனித வாழ்வும், ஓ பிராமணனே, அத்தகையது தான். மலையருவி போன்றது [4]. புத்த பெருமான், ரட்டபாலன் என்பவனுக்கு 'உலகம் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறது. அது அநித்தியம்' என்று சொன்னார்.
உலகம் காரண காரியத் தொடர்புள்ள சங்கிலித் தொடர் போன்றது, ஒரு பொருளுக்கேதுவானது மற்றைய அதன் காரியமாக இன்னொன்று தோன்றுகிறது. மாற்றமில்லாத ஒன்று இந்தத் தொடரில் இல்லை. அவற்றுக்குப் பின்னால் நித்தியமானதென்று கூறக்கூடியதொரு வஸ்து இல்லை. நித்தியமான ஆன்மா என்பது ஒன்றுமில்லை. தனிப்பட்ட புட்கலன் என்று கூறக் கூடியதில்லை. 'நான்' என்று சொல்லக்கூடிய தொன்றில்லை. உருவத்தையோ, வேதனை, குறிப்பு, சங்காரம் என்ற மனச் செயற்பாடுகளில் ஏதாவது ஒன்றையோ விஞ்ஞானத்தையோ, 'நான்' [5] என்று கூறமுடியாது என்பதை எவரும் மறுக்கமாட்டார். ஆனால் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் நாமரூபங்களான இந்தப் பஞ்சக்கந்தங்கள் சட்டமும் உளமும் சேர்ந்து யந்திரம் [6] போலத் தொழிற்படும் போது 'நான்' என்ற உணர்ச்சி உண்டாகிறது. ஆனால் இஃது ஒரு போலி உணர்ச்சி. ஒரு சங்கற்பம் சங்காரங்களென்ற சங்காரக் கந்தத்தைச் சேர்ந்தது. மனோ கல்பிதம். இதை நான் என்று எண்ணும் குற்றம் சக்காய திட்டி என்பர்.
உயிர் எனக் கொண்டாடப்படும் பஞ்சக்கந்தங்களான இந்த துக்கம் சங்காரதுக்கம். இந்தப் பஞ்சக்கந்தங்களுக்குப் பின்னால் நின்று கொண்டு துக்கத்தை அனுபவிக்கும் ஆன்மா, அல்லது நான் என்ற ஒரு பொருள் இல்லை.
'துக்கமே நிலவுகிறது, துக்கத்தை அனுபவிப்பவன் இல்லை, செய்கைகள் உண்டு, ஆனால் செய்பவன் என்று ஒன்று இல்லை.' என்கிறார் புத்த கோஷ ஆசாரியார்.
புடை பெயர்ச்சிக்குப் பின்னால் அசையாது நிற்கும் ஒருவன் இல்லை. காண்பது அசைவு மாத்திரமே. வாழ்வு அசைகிறது என்று கூறுவது தவறு. வாழ்வே ஓர் அசைவுதான். வாழ்வுவேறு அசைவு வேறன்று. அவை இரு பொருள்களல்ல. எண்ணத்துக்குப் பின்னால் எண்ணுவோன் என ஒருவன் இல்லை. எண்ணமே எண்ணுவோன். எண்ணத்தை அகற்றி விட்டால் எண்ணுவோன் என ஒருவனைக் காண முடியாது. டெகார்ட்டே என்ற பிரஞ்சு தத்துவ அறிஞர், 'நான் எண்ணுகிறபடியால் நான் உள்பொருளே' என்றார். பௌத்தக் கோட்பாடு இதற்கு நேர்மாறானது.
வாழ்வுக்குத் துவக்க முண்டா என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். புத்தருடைய போதனைப்படி உயிர்களின் வாழ்வு ஓட்டத்தின் ஆரம்பத்தைப் பற்றி நினைக்க முடியாது. கடவுளே உயிர்களைப் படைத்தார் என்று நம்புவோர்க்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். 'கடவுளை யார் படைத்தார்?' என்று கேட்டால் அவர் உடனே 'கடவுளுக்குப் பிறப்பில்லை' என்பார். அவர் கூறிய விடை அவருக்கு ஆச்சரியமளிப்பதில்லை. புத்தர் கூறுகிறார், ஓ பிக்குகளே, இந்தச் சம்சார சக்கரத்துக்கு முடிவு காண முடியாது. அவ்வித்தையில் மூழ்கி, வேட்கை (தன்ஹா) என்னும் தளையாற் கட்டுண்டு சுற்றி அலையும் உயிர்களின் தொடக்கத்தைக் கண்டு கொள்ள முடியாது. சம்சாரம் தொடர்ந்து நிகழ்வதற்குக் காரணமான அவித்தை பற்றி பகவான் கூறுகிறார். 'அவித்தைக்கு ஆரம்பம் எங்கே? இதற்கு முன் அவித்தை இல்லாதிருந்தது என்று கூறக்கூடிய வகையில் அவித்தையின் ஆரம்பத்தைக் காண முடியாது.' எனவே இதற்கு முன் உயிர்கள் வாழவில்லை, என்று கூறுவது சாத்தியமில்லை.
துக்கம் என்ற உயர்வாய்மையின் பொருள் இது தான். இந்த முதலாவது உயர்வாய்மையை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஏனெனில், 'துக்கத்தைக் காண்பவன் அதற்குரிய காரணத்தைக் காண்பான். அதனோடு அது நீங்குவதையும் துக்கம் நீங்குவதற்கு வழியையும் காண்பான்.' [7]
இதனால் பௌத்தர்களுடைய வாழ்வு துன்பம் நிறைந்தது, சோகமயமானது எனச் சிலர் தவறாகக் கருதுவர். ஆனால் உண்மையான பௌத்தனாயிருப்பவனே மிகச் சந்தோஷமான வாழ்க்கையுடையவன். அவனிடம் பயமோ, கவலைகளோ கிடையா. எப்பொழுதும் சாந்தமும் உலைவற்ற மன அமைதியுமுடையவன். ஆபத்துக்களும், மாற்றங்களும் அவனைக் கலங்கச் செய்யா. ஏனெனில் உலகின் நிலையை உள்ளபடியே அவன் அறிந்தவன். புத்தர் எக்காலத்திலும் சோகமோ மனச் சோர்வோ உடையவராயிருந்ததில்லை. அவர் எப்பொழுதும் புன்சிரிப்புடன் விளங்கினார். (மிஹிதபுப்பங்கம) பௌத்த சிற்பங்களிலும் ஓவியங்களிலும் அவர் மகிழ்ச்சி நிரம்பிய வீறமைதியுடைய, திருப்தியும் கருணையும் நிறைந்த முகமுடையவராய்க் காணப்படுகிறார். துன்பம், கவலை, துயர் என்பன சிறிதும் அவர் வதனத்தில் காணப்படுவதில்லை [8].
பௌத்தச் சிற்பங்களும் கட்டிடக் கலைகளும், பௌத்தக் கோயில்களும் உற்சாகத்தையோ துயரையோ பிரதிபலிப்பதில்லை. சாந்தமும், வீறமைதியும், ஆனந்தமுமே அவற்றில் காணப்படுகின்றன.
வாழ்வில் துன்பம் காணப்பட்டால் பௌத்தர்கள் அமைதியற்றவராய்க் கோபமுள்ளவராயிருக்கக் கூடாது. வாழ்வில் காணப்படும் முக்கியமான தீமைகளில் ஒன்று வெறுப்பு. வெறுப்பு (பிரதிகா) என்பது உயிர்களிடத்து வெறுப்பு. இது துன்பத்தினாலும், துன்பத்துக்கேதுவானவற்றினாலும் உண்டாவது. இதனால் தீய நடத்தைகளும், கவலைக்குரிய நிலைகளும் உண்டாகின்றன. எனவே துன்பத்தைக் கண்டு பொறுமையை இழக்கக் கூடாது. குழப்பத்தினாலும், கோபங்கொள்வதினாலும் துன்பம் நீங்கமாட்டாது. அதற்குப் பதிலாக மேலும் தொல்லைகளுண்டாகின்றன. அல்லல் தரும் ஒரு நிலையை மேலும் அதிகரித்து அவஸ்தைக்குள்ளாக்குகிறது. அப்போது துன்பத்தைக் கண்டு கோபமும், ஆத்திரமும் அடையாமல், துன்பம் ஏன் உண்டானது, எப்படி உண்டானது, அதை எவ்வாறு நீக்கலாம் என ஆராய்ந்து பொறுமையோடும், விவேகத்தோடும், மன உறுதியோடும், வீரத்தோடும் நீக்கும் வழியைப் பின்பற்ற வேண்டும்.
புத்தரின் ஆண் சீடரும் பெண் சீடருமான தேரர்களும் தேரீகளும் அவருடைய போதனைப்படி ஒழுகி ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைந்து பாடிய தேரகாதா, தேரீகாதா, என்ற இரு பழைய பாசுரத் தொகுதிகளுண்டு. 'மற்றச் சமயத்தைச் சேர்ந்த சீடர்களில் பலர் மெலிந்து, வாடி, வெளிறி, உருக்குலைந்து உருநயமற்று கவர்ச்சியின்றியிருக்கிறார்கள்', என்று கோசல மன்னன் ஒரு முறை புத்தரிடம் கூறினார். ஆனால் பகவானுடைய சீடர் ஆனந்தமு,ம் கிளர்ச்சியும் (ஹட்டபகட்ட) உடையவராய் மகிழ்ச்சியாரவாரமும் களிப்பும் (உதக்குதக்க) உடையவராய், ஆன்ம வாழ்வில் சந்தோஷங்கண்டவராய் (அபிரதரூப) புலன்கள் மகிழ்ச்சியுடையவராய் (பீணிதீந்திரிய) ஆவலற்றவராய் (அப்பொசுக்க) வீறாளியுடையவராய் (பன்னலோம) சாந்தியுடையவராய் (பரதவுத்த) மான் போன்ற மனமுடையவராய் (மிகபூதேனசேத்ஸர்) அதாவது உயர் சிந்தனையுடையவராய் இருக்கிறார்கள் என அரசன் மேலும் தெரிவித்தான். இதற்குக் காரணம் இச்சாவகர் பகவானுடைய போதனையின் முழுப் பயனையும் நிச்சயமாகப் பெற்று விட்டார்கள் என்பது இந்தச் சுகநிலையிலிருந்து தெளிவாகின்றதெனவும் கூறினான்.
பௌத்தத்தில் மன மடிவுக்கோ, துயரடைவதற்கோ, கழிவிரக்கம், கொள்வதற்கோ, கையறவுக்கோ இடமில்லை. இத்தகைய மனோபாவம் தர்மத்தை அனுபவமாக்குவதற்குத் தடையாயுள்ளது. நிர்வாண சுகம் பெறுவதானால் ஞானக் காட்சிக்கு உபாயமாயுள்ள ஏழு வகை உபாயங்களுள் (பொஜ்ஜங்க) பிரீதியும் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. [9]
* * *
[1] தம்ம சக்கப் பவத்தன சுத்த (தர்ம சக்ரப்பரிவர்த்தன சூத்திரம்) தர்மசக்கரத்தைச் சுழற்றிய சூத்திரம்.
[2] மனக்கற்பிதங்கள் (Mental Formations) என்ற சொல்லைப் பஞ்சக்கந்த அட்டவணையில் வரும் சங்காரா என்ற பதத்தின் பலபட விரிந்த பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். வேறு சந்தர்ப்பங்களில் சங்காரா என்ற சொல் உலகில் உபாதைக்குட்பட்ட எல்லாவற்றையும் கருதும். இந்த அர்த்தத்தில் பஞ்சக்கந்தங்களும் சங்காரமென்றே கொள்ளப்படும்.
[3] மஹாயானக் கோட்பாட்டின்படி விஞ்ஞானக் கந்தம், சித்தம், மனம், விஞ்ஞானம் என மூன்று அமிசங்களை உடையது. ஆலய விஞ்ஞானம் என்ற விஞ்ஞானக் கூட்டம் இந்தக் கந்தத்தில் இடம்பெறுகிறது. இந்நூலாசிரியர் இவ் விஷயம் பற்றி விரிவானதும், ஒப்பியல் முறையிலமைந்ததுமான பௌத்த தத்துவதரிசனம் என ஒரு நூல் விரைவில் வெளியிட இருக்கிறார்.
[4] இவ்வார்த்தைகள் மிகப் புராதன காலத்தில் வாழ்ந்தவரும், ஆசைகளைத் துறந்தவருமான அரக என்ற ஆசிரியர் (சத்தா) கூறியதாகப் புத்தர் சொல்லுகிறார். கி.மு. 500 இல் வாழ்ந்த ஹெராக்கிளிட்டஸ் என்பவர் 'எல்லாம் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டிருக்கின்றன என்றும், ஒரே ஆற்றில் ஒரு முறைதான் இறங்கலாம், மறு முறை அந்த ஆறு வேறு நீரைக் கொண்ட வேறு ஆறாயிருக்கிறது' என்றும் கூறியமை கருத்திற் கொள்ளத்தக்கது.
[5] ஆன்மா இல்லை என்ற அனத்தக் கோட்பாடு ஆறாம் அத்தியாயத்தில் ஆராயப்படும்.
[6] சத்து என்பது மரத்தால் செய்த யந்திரம் போய்றது (தாருயந்த) என்பர் புத்தகோஷர். விசுத்திமார்க்கம்
[7] நான்கு வாய்மைகளில் ஒன்றை அறிபவன் மற்றை மூன்றையும் அறிவான் என புத்தர் கூறியுள்ளார். நான்கு வாய்மைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன.
[8] கந்தாரத்திலும், சீனாவிலே பவுகீன் என்ற இடத்திலும் மெளிந்து வாடி விலாவெலுபெல்லாம் தெரியக்கூடிய வகையான புத்தரின் சிலை இரண்டுண்டு. ஆனால் இவை அவர் ஞான ஒளிபெறமுன்னுள்ள நிலையைக் காட்டுவன. கொடிய தவங்களைச் செய்த காலத்து நிலையைக் காட்டுவன.
[9] ஞானக் காட்சிக்குரிய ஏழு உபாயங்கள் பற்றி தியானம் பற்றிக் கூறும் அத்தியாயம் பார்க்க.