அருஞ்சொல்லகராதி

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

அருஞ்சொல்லகராதி

Glossary

அகுசல - தீது, தூய்மையற்றது, தவறு, பாவம், மாசு

அக்கோத - பகைமையின்மை

அஸ்ஸாத - அனுபவித்தல், இரசித்தல், சுவைத்தல்

அஜ்ஜவ - நேர்மை, நாணயம்

அதக்காவசர - தருக்கத்திற்கு அப்பாற்பட்டது, தருக்க சிந்தனைக்கு உட்படாதது

அதம்ம - பாவம், தவறு, அநியாயமானது, ஒழுக்கக்கேடு

அதிமொக்க - உறுதி

அத்தசரண - தானே தனக்குச் சரண் எனக் கொள்ளுதல்

அத்ததீப - தன்னையே தனக்குத் தீவாக (அரணாக) கொண்டு வாழுதல். தனக்குத் தானே பாதுகாப்பு என வாழுதல்.

அநாகாமி - திரும்பி வராதவர் நிலை, நிருவாண நிலை அடையும் வழியின் மூன்றாவது படி

அமத - (வடமொழி அமிருதம்) இறவாமை, நிருவாணமும் அமதமும் ஒரு பொருட் சொற்கள்

அரிய அட்டாங்கிகமக்க - உயரிய எண்வகை வழி

அரிய சச்ச - உயர் வாய்மை, உயரிய மெய்ம்மை

அருகதர்(அர்கந்தர்) - பந்தங்கள், பாசங்கள், மாசுக்கள் அற்ற நிருவாண நிலையை அடைந்தவர் - வீடுபேற்றின் இறுதி நிலையடைந்தவர் - இவர் பிறவி எடுக்கமாட்டார்.

அவிம்சா (அகிம்சா) - அகிம்சை, வன்முறையற்றது

அவிஜ்ஜா - அவித்தை, அவிச்சை, அறியாமை, மாயை

அவிரோத - தடையின்மை, எதிர்ப்பின்மை

அவ்யாகத - (1) (அப்பியாகத) பிரச்சனைகள் விடயத்தில் விளக்கம் கொடுக்கப்படாத, கூறப்படாத (2) ஒழுக்க சீல வகையில் நொதுமலான (நன்மையும் தீதும் அற்ற)

அனத்த - (அல்- ஆன்மா) அனாத்மா

அனிச்ச - அநித்தியம், நிலையாமை

ஆகார - ஆகாரம், உணவு, ஊட்டம்

ஆசரிய - ஆசிரியர், உபாத்தியாயர், உவாத்தியார்

அசரியமுட்டி - ஆசிரியரின் கைமுட்டி, ஆசிரியர் மாணாக்கருக்குக் கற்பிக்காது மறைத்து வைத்திருக்கும் போதனை

ஆத்மா - (பாளி அத்தா)- ஆன்மா, தான், நான் என்னும் அகங்காரம்

ஆதினவ - கூடாத விளைவு, அபாயம், திருப்தியற்ற தன்மை

ஆயஸ்மா - போற்றுதற்குரியவர், வந்தனைக்குரியவர்

ஆயதன - (ஆயதனங்கள்)- புலன்கள் (1) ஆறு புலன்கள்- கண், மூக்கு, செவி, நாக்கு, உடல், மனம் (2) ஆறு புலனறிவுகள்- ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், சுவை, மனத்தின் கண் தோன்றும் எண்ணஅலைகள்

ஆலயவிஞ்ஞான - (ஆலய விஞ்ஞானம்)- மகாயான சித்தாந்தத்தின்படி எண்ணங்களுக்கெல்லாம் இருப்பிடமான மனோதத்துவம். (சவிகற்பமாய் விரியும் ஞானமன்றி ஒடுக்கும் ஞானம்- சிவஞான பாடியம்)

ஆவுசோ - நண்பனே! (ஒப்பாருக்கிடையில் வழங்கும் அளவளாவும் முறை)

ஆனாபானசதி - மூச்சு விடுக்கும் போதும் எடுக்கும் போதும் விழிப்பாய் இருத்தல். பௌத்த தியான முறைகளில் ஒன்று

இந்திரிய - இந்திரியம், புலன்

உச்சேதவத - ஆன்மா உடலோடு அழிவுறும் என்ற கோட்பாடு

உத்தச்ச- குக்குச்ச - சஞ்சலம், கவலை

உபாசக - இல்லறத்தில் வாழும் பௌத்தர் (உழையோர்)

உபாதாய ரூப - வருவிக்கப்பெற்ற பொருள், தனிமுதலல்லாத உரு

உபாதான - பற்று, பற்றாசை, பிடித்துக்கொள்ளல்.

உபேக்கா - உள்ளச் சமநிலை, பற்றற்ற தன்மை

எகி பஸ்ஸிக - வந்து பாருங்கள் எனக் கூறத்தக்கது- புத்த பகவானுடைய போதனையும் அத்தகையதே.

கத்திய - (சத்திரிய) அரசாளும் வம்சம், அரசாளும் வமிசத்தைச் சேர்ந்தவர்

கந்த - கந்தங்கள் (திரள்கள்) ஐவகைக் கந்தங்கள்

கந்தி - சகிப்புத்தன்மை, பொறுமை

கபிலிங்காஹார - கவளங்கொண்ட உணவு, சட உணவு

கருணா - கருணை, அன்பு, தயை

காம - புலன் வரும் இன்பம், இச்சை, விருப்பம், காம இச்சை

கிலேச - கிலேசம், மாசு, வேட்கை

குசல - மாசற்ற செயல், குசலம், இனிது, புண்ணியம், நற்செயல்

சகதாகாமி - ஒரு முறை திரும்பிவருபவர். ஒரு முறை மட்டும் பிறவி எடுப்பவர் (நிருவாண வழியில் இரண்டாம் படி)

சக்காய திட்டி - ஆன்மா உண்டென்னும் தவறான காட்சி, ஐவகைக் கந்தங்கள் நிலைபேறுடையனவென்னும் பொய்க்காட்சி

சங்க - புத்த பகவானுடைய சீடர் குழாத்தைச் சேர்ந்த பிக்கு சங்கத்தார்

சங்கார- சங்கத - நிபந்தனைகளுக்கு (உபாதிகளுக்கு) உட்பட்டவைகளும் நிலைகளும்

சச்ச - (சத்தியம்) வாய்மை, உண்மை, மெய்ம்மை

சதி - கடைப்பிடி, விழிப்பாயிருத்தல், ஜாக்கிரதை

சதிபட்டான - விழிப்புநிலையில் இருத்தல், சதா அவதானத்துடன் இருத்தல், ஜாக்கிரதை நிலைபெறச் செய்தல்

சத்தா - ஆசிரியர், போதிப்பவர், உபதேசிப்பவர், உபாத்தியாயர்

சத்த (சிரத்தை) - நம்பிக்கை, விசுவாசம், பக்தி, அன்பு

சந்த - விருப்பம்

சமத - மனத்தின் ஒரு நிலைப்பாடு, நீண்டமைதி, சாந்தி

சமஜீவிகதா - ஆதாயத்துக்கேற்ப வாழுதல்

சமாதி - மனத்தின் நீண்டமைதி, ஒரு நிலைப்பாடு, ஏகக்கிரதா, தியானநெறிமூலம் மனதைப் பக்குவப் படுத்துவதனால் ஏற்படும் மனோசாந்த நிலை (சமதமும் சமாதியும் ஒரு பொருட் சொற்கள்)

சமுதய - தோற்றம், உற்பவம், துக்கத்தின் தோற்றம் (இரண்டாவது உயர் வாய்மை)

சம்சாரம் - பிறவிச் சக்கரம், ஊழிமுறை

சம்மா ஆஜீவ - நற் சீவனோபாயம், நல்வாழ்க்கை, தவறான வழியில் வாழாதொழிதல்

சம்மா கம்மந்த - நற் தொழில், நற்செயல்

சம்மா சங்கப்பா - நல்லூற்றம் (நல்ல எண்ணன்கள், நற்சிந்தனை)

சம்மா சதி - நற்கடைப்பிடி, விழிப்பாய் இருத்தல், கருத்தோடிருத்தல்

சம்மா சமாதி - நல்லமைதி

சம்மா திட்டி - நற்காட்சி, இனியவை கானல்

சம்மா வாசா - நல் வாய்மை, இனிய முயற்சிகள்

சம்முதி - உலகியல் சார்ந்தவை, மரபு வழி ஏற்றுக் கொள்ளப் பட்டவை

சம்முதி சச்ச - உலகியல் வாய்மை, மரபுவழி ஏற்றுக் கொள்ளப் பட்ட வாய்மைகள்

சலாயதன - ஆறுவகை ஆயதனங்கள் (அஃதாவது ஐம்புலனும் மனமும்), 'ஆயதன' என்பதன் கீழ் காண்க

சஸ்ஸதவாத - சாசுவதவாதம், உலகம் நிலைபேறுடையது என்னும் கோட்பாடு

சித்த - சித்தம், உள்ளம், மனம்

சித்தேகக்கதா - சித்தத்தில் ஏகாக்கிர நிலை, ஒரு கூரான நிலை

சீல - சீலம், ஒழுக்கம் (விலக்கியன ஒழித்து விதித்தன செய்தல்- மணிமேகலை)

சுக - சுகம், இன்பம், வசதி, நலம்

சுத்த - பேருரை, சமயவுரை, சுத்திரம் (நூல்)

சூத்ர- சூத்ரர் - நான்காவது வருனத்தைச் சேர்ந்தவர்

சேதனா - சேதனை, விருப்பத்துணிவாற்றல்

சோதாபன்ன - ஓட்டத்தில் புக்கவர் நிலை, நிருவாண வழியில் முதற்படி

ஜாதி - பிறப்பு, பிறவி, சென்மம், சனனம்

ஜரா மரண - மூப்பும் சாவும்

ஞான தஸ்ஸன - அகக் கண், அறிவுக் கண்ணால் காணும் காட்சி

தச ராஜ தம்ம - அரசன் செய்யக்கடவாய பத்து வகைக் கடமைகள்

தண்ஹக்கய - பற்றற்ற நிலை, நிருவாணத்தைக் குறிக்கும் ஒரு சொல்

தண்ஹா - வேட்கை, பற்று, ஆசை

ததாகத - வாய்மையைக் கண்டவர்- புத்தர் என்பதற்கு ஒரு பொருட் சொல்- புத்தபகவான் தம்மைச் சுட்டும்போது பயன் படுத்தப்பட்ட ஒரு பெயர்

தப - தவம், தபசு, தவம்புரிதல்

தம்ம - (தர்ம) வாய்மை, போதனை, தருமம், நேர்மை, பண்பு, சீர், இயல்பு, பான்மை, பாங்கு, நிபந்தனைக்கு உட்பட்டதும் உட்படாததுமான அனைத்தும் - தன்மைகள் எல்லாம்.

தம்ம சக்க - வாய்மைச் சக்கரம், அறவாழி

தம்மசக்கு - வாய்மைக் கண், வாய்மை ஆகிய கண்

தம்ம விசய - வாய்மையை நாடுதல்

தம்ம விஜய - அறநெறியால் வெற்றிவாகை சூடுதல்

தாகப - (தாதுகப்ப)- தாதுகோபுரம், தூபி, தாதுகருப்பம்

தான - தானம், கொடை, அளிப்பு

திசரண - மூவகை அடைக்கலம்- புத்த- தம்ம- சங்கம் ஆகிய மூன்று சரணங்கள்

திபிடக - (திரிபிடகம்) மூன்று பிடகங்கள், புத்தர் அருளிய போதனைகள் அடங்கப் பெற்ற மூன்று திருமுறைகள். அவையாவன :(1) விநய பிடகம் (ஒழுக்கத்திருமுறை) (2) சுத்த பிடகம் (பேருரைத்திருமுறை) (3) அபிதம்ம பிடகம் (மீயுயர்தம்மத் திருமுறை)

திரவ்ய - திரவியம், பொருள்

தியான - தியானம், பாவனை, உயரிய மன வளர்ச்சியால் எய்தப் பெறுகின்ற மனோநிலை

தீன- மித்த - கழிமடம், சோர்வு (மனதில் ஏற்படும்சோம்பேறித்தனமும் ஊக்கமின்மையும்)

துக்க - துக்கம், துன்பம், முரண்பாடு, திருப்தியற்ற தன்மை, நிலையற்ற தன்மை, வெறுமை

தூபம் - தாதுகோபுரம் தூபி

தேரவாத - 'முதியோர் மதப்பிரிவு' - இலங்கை, பர்மா, தாய்லாந்து, லாவோஸ், சித்தகோன் ஆகிய நாடுகளில் நிலவும் புத்த மதத்தின் மூலப் பிரிவு. மகாயான, ஹீனயான பிரிவுகளையும் காண்க

தேவ - தெய்வம், தேவர்

தோச - கோபம், பகைமை, தீய எண்ணம்

நாமரூப - பெயரும் உருவும் (மனதையும் உடலையும் சார்ந்துள்ள இயல்புகள்)

நிஸ்ஸரண - விட்டேகுதல், சுதந்திரம், விடுதலை

நிர்வாண - (நிப்பாண)- பௌத்த சமயத்தின்படி வீடுபேறு, பரமார்த்த சத்தியம் (அணைவு- தொடர்பறவு)

நிரோத - ஒழிவு, ஓய்வு

நீவரண - தடை, பாதிப்பு, மறைவு

நைராத்மிய - (நிர்- ஆன்மியம்) ஆன்மா இல்லையென்ற வாய்மை

பஞ்சகந்த - ஐவகை கந்தங்கள் (உரு, உணர்ச்சி, குறிப்பு, மனச்சேட்டிதம், விஞ்ஞானம் ஆகியவை)

பஞ்ஞா - பிரக்ஞை, பகுத்தறிவு

படிக - வெகுளி, கோபம், முட்டிக்கொள்ளும் தன்மை

படிச்ச முப்பாத - காரணகாரியத் தொடர்பு (சார்பிற் தோன்றித் தத்தமின்மீட்டும் இலக்கணத் தொடர்பு. மணிமேகலை 30 ஆம் காதை)

படிசோத காமி - எதிரோட்டமான, இயல்புக்கு எதிரான

படிவேத - உள்ளார்ந்த காட்சி, முற்றாக அறிந்து கொள்ளுதல்

பந்தே - ஐயா, வந்தனைக்குரிய ஐயா

பரமத்த - (பரமார்த்தம்) வரம்பற்றவாய்மை, இறுதி மெய்ம்மை

பரிச்சாக - கொடை, துறந்தல், கைவிடுதல், உரிமையை முற்றாகக் கைவிடுதல்

பரிநிர்வாண - (பரிநிப்பாண)- முற்றுமுழுதானா அணைவு, புத்தரின் அல்லது அருகதரின் இறுதி யாத்திரை

பவ - தோற்றம், உற்பவம், இடையுறாமை

பஸ்ஸ - பரிசம், ஊறுணர்வு

பஸ்ஸத்தி - மன இறுக்கத் தளர்வு, மன நெகிழ்வு

பஸ்ஸாகார - பரிசம் உணவாக அமையும் நிலை (புலன்கள் வெளி உலகத்துடன் கொள்ளும் ஊறுணர்வு ஊட்டமாக அமையும் நிலை)

பாவனா - தியானம் செய்தல், மனதை அபிவிருத்தி செய்தல், பாவனை, விருத்தி செய்தல்

பிக்கு - புத்த பிக்கு, பிட்சை ஏற்று வாழும் துறவி

பிரம்ம - பிரம்மா, உலகைப் படைப்பவன்

பிரம்மவிகார - மீ உயர் வாழ்க்கை, எல்லையற்ற அன்பு - அஃதாவது அன்பு (மெத்தா), கருணை (கருணா), முதிதா, உபேக்கா ஆகிய நான்கு உயர் பண்புகளுடன் வாழுதல்

பிராஹ்மண - பிராமணன், அந்தணன்

பீதி - (பிரீதி) மகிழ்ச்சி, களிப்பு

புக்கல - புட்கலன், ஆள், தனிநபர்

புத்த - புத்தபகவான், ஞான ஒளி பெற்றவன்

பைசக்க - மருத்துவர், வைத்தியர்

பைசஜ்ய குரு - மருத்துவ விற்பன்னர், மருத்துவ கலாநிதி

பொஜ்ஜங்க - ஞான ஒளி பெறுதற்குத் துணை நிற்கும் அங்கங்கள் (உபாயங்கள்)

போதி - போதிமரம்- அரச மரம், புத்தபகவான் ஞான ஒளி பெற்ற மர நிழல்

மக்க - மார்க்கம், வழி, பாதை, நெறி

மகாபூத - மகா பூதங்கள்- நால் வகைப் பூதங்கள் (திண்மம், நீர்மம், வெப்பம், இயக்கம்)

மகாயான - 'பெரிய வாகனம்' சீனா, யப்பான், கொறியா, திபெத்து ஆகிய நாடுகளில் நிலவும் புத்தசமயப் பிரிவு. ஹீனயான, தேரவாத ஆகியவற்றையும் காண்க

மத்தவ - மென்மை, மிருதுவான தன்மை, தண்ணளி

மனசிகார - மனத்தால் உள்ளுதல், சிந்தனை செய்தல், கூர்ந்து கவனித்தல்

மனஸ் - மனம் என்னும் புலன், மனம், சித்தம்

மஜ்ஜிமாமடிபதா - நடு வழி, மத்திய வழி

மனோசஞ்சேதனாஹார - எண்ணங்களே உணவாக அமையும் நிலை, எண்ண ஊட்டம்

மான - அளந்து பார்க்கும் இயல்பு, ஒப்ப அளத்தல்

மிச்சா திட்டி - தவறான காட்சி, தவறான நோக்கு

முதிதா - முதிதை- மற்றவர்களின் இன்பத்தில் தானும் இன்புறல்

மெத்தா - வரம்பில்லா அன்பு (நட்பு) துன்புறு வோர்களின் மாட்டு கழிவிரக்கம் கொள்ளுதல்

மோக - அறியாமை, மோகம், மாயை

யதாபூத - உள்ளது உள்ளவாறு, தோன்றியவாறு, உள்ளது உள்ளவாறான பொருள்

ரத்தினத்தய - (இரத்தினதிரயம்) மும்மணிகள். புத்த- தம்ம- சங்கம் என்பவை

ராக - ஆசை, இச்சை, கழிகாமம், சிற்றின்ப வேட்கை, அவா

ரூப - உரு, உருவம், பொருள், வடிவம்

விசிகிச்சா - ஐயம், ஆசங்கை

விஞ்ஞான - அறிநிலை, அறிவுறுநிலை, உணர்வுநிலை

விஞ்ஞானாஹாரா - உணர்வே ஊட்டமாக அமையும் நிலை

விபஸ்ஸனா - அகக்காட்சி, நுண்காட்சி, பகுத்தறிவுக்காட்சி

விபரிநாம - மாற்றம், உருமாற்றம், பரிணாமம்

விபவ - இன்மை,அழிவு,ஒழிவு, தோன்றாதொழிதல், தோன்றாமை

விபவதண்ஹா - தோன்றாமை விரும்புதல், தோன்றாமையின் மீது ஏற்படும் ஆசை

விபாக - பெறுபேறு, பயன், விளைவு, முதிர்வு

விராக - ஆசையின்மை, பற்றற்ற தன்மை

வியாபாத - கோபம், வெகுளி, குரோதம், இம்சிக்கும் எண்ணம்

வேதனா - உணர்வு, உணர்ச்சி, வேதனை

வைசிய - கமம், வணிகம் போன்ற தொழில்களைச் செய்யும் வைசிய வருணத்தைச் சேர்ந்தவர். இந்திய வருணாசிரமங்களின் மூன்றாம் நிலையில் உள்ளவர்

ஹினயான - 'சிறு வாகனம்', பௌத்த மதத்தைச் சேர்ந்த ஆரம்பகால மடப் பிரிவுகளை மகாயான பௌத்தர்கள் குறிக்கும் வழக்கு. தேரவாதப் பிரிவு எனினுமாம். மகாயான, தேரவாத ஆகியவற்றின் குறிப்புகளையும் நோக்குக.

* * *