தியானம் செய்வது எப்படி? முகப்பு
தியானம் செய்வது எப்படி?
புதிதாகத் தியானப் பயிற்சி தொடங்குவோருக்கு அமைதிக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டி
யுத்ததம்மோ பிக்கு
How To Meditate:
A Beginner's Guide to Peace
Yuttadhammo Bhikkhu
அதிகாரம் மூன்று: நடை தியானம்
Chapter Three: Walking Meditation
இந்த அத்தியாயத்தில் நடை தியானம் செய்வது எப்படி என்பதை விளக்குகிறேன். உட்கார்ந்து தியானம் செய்வது போலவே நடந்து தியானம் செய்வதின் நோக்கமும் மனத்தை இந்தக் கணத்தில் கவனம் செலுத்தி நிகழ்ச்சிகள் தோன்றும் போதே அவற்றை அறிந்திருப்பது தான். இவ்வாறு நமது உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
உட்கார்ந்து தியானம் செய்வதன் தன்மையையே ஒத்திருப்பதால், நடந்து தியானம் செய்வதால் என்ன பயன் என்று நினைக்கத் தோன்றும். உட்கார்ந்து தியானம் செய்வதினாலும் தியானத்தின் பலனை அடையலாம் என்றாலும், நடந்து தியானம் செய்வதனால் ஈடற்ற வேறுபல அனுகூலங்கள் உள்ளன. அது உட்கார்ந்து செய்யும் தியானப் பயிற்சியை நிறைவு செய்வதற்கான முன்னோடியாகவும் உள்ளது. பௌத்த மரபுப்படி நடை தியானம் செய்வதன் ஐந்து அனுகூலங்களை இப்போது விவரிக்கின்றேன்: [1]
ஒன்று: நடை தியானம் செய்வது உடற் பயிற்சியும் அளிக்கிறது. எப்போதும் அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருந்தால் நமது உடல் பலவீனமாகி வேலை செய்யச் சக்தியற்றதாகப் போய்விடும். தீவிரமாகத் தியானிப்பவர்க்கும் நடந்து தியானம் செய்வதனால் அடிப்படை உடல் ஆரோக்கியம் கிடைப்பதோடு உடல் பயிற்சி செய்வதற்கும் மேலதிக உதவி புரிகிறது.
இரண்டு: நடந்து தியானம் செய்வது பொறுமையையும் துன்பங்களைத் தாங்கும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. நடந்து தியானம் செய்வது சுறுசுறுப்பான செயற்பாடு கொண்டுள்ளதால் அசையாமல் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கும்போது தேவைப்படும் அளவு பொறுமை தேவை இருக்காது; சாதாரண தினசரி நடவடிக்கைகளுக்கும், அசையாமல் உட்கார்ந்து தியானிப்பதற்கும் இடையில் உள்ள பயனுள்ள நடவடிக்கை எனலாம்.
மூன்று: உடலில் உள்ள நோய்களைப் போக்கவும் நடந்து தியானம் செய்வது துணைபுரிகிறது. உட்கார்ந்து தியானம் செய்யும்போது உடலின் நடவடிக்கைகள் (வெப்பம், இரத்த ஓட்டம் போன்றவை) ஒரு மாறுதலில்லாத நிலையை அடைகின்றன. ஆனால் நடந்து தியானம் செய்யும்போது உடல் நடவடிக்கைகள் - இரத்த ஓட்டம் போன்றவை மிருதுவாகத் தூண்டப் படுகின்றன. உடலைப் பாதிக்கும் அளவு தூண்டப் படாமல் மெதுவாகவும் முறையாகவும் நடப்பதால் உடல் சற்று இளகி (relax) அதன் அழுத்தமும், கொந்தளிப்பும் குறைகின்றன. ஆகவே நடந்து தியானம் செய்வதினால் இருதய நோய், மூட்டு வலி போன்ற சில நோய்களின் பாதிப்பும் குறைகிறது. அதே சமயம் பொதுவான உடல் ஆரோக்கியமும் பேணப்படுகிறது.
நான்கு: நடந்து தியானம் செய்வது உடல், உண்ட உணவைச் சீரணிப்பதற்கும் உதவுகிறது. உட்கார்ந்து தியானிப்பதின் ஒரு குறை சரியாகச் சீரணிப்பதற்குத் தடையாக இருப்பது தான். நடந்து தியானிக்கும் போது உடலில் சீரண உறுப்புகள் தூண்டப் படுகின்றன. ஆக உடல் ஆரோக்கியம் பாதிக்கப் படாமல் தொடர்ந்து தியானம் செய்ய முடிகிறது.
ஐந்து: நடந்து தியானிப்பது சமநிலையான மனஒருக்கத்தை வளர்க்கிறது. உட்கார்ந்து தியானிக்கும்போது மன ஒருக்கம் பலவீனமாகவோ அல்லது மிகவும் வலுவானதாகவோ இருக்கலாம். இதனால் மன உளைச்சலோ, ஊக்கமின்மையோ உண்டாகலாம். நடந்து தியானிப்பதில் செயலூக்கமிருப்பதால் உடலையும் மனத்தையும் இயற்கையாக அது அமைதிப் படுத்துகிறது. உட்கார்ந்து தியானிப்பதற்கு முன்பாக நடந்து தியானிக்கும் போது அது மனம் சமநிலையை அடைய உதவுகிறது.
நடந்து தியானிக்கும் முறை கீழே விளக்கப் படுகிறது:
1. (முதலில் நிற்கும் நிலை) இரு பாதங்களும் கிட்டத்தட்டத் தொட்டுக் கொள்ளும் அளவு அருகில் இருக்க வேண்டும். தியானத்தின்போது எப்போதும் ஒன்றுக்கு ஒன்று அருகிலேயே இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்று முன் பின்னாக இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கக் கூடாது.
2 வலது கை, இடது கையைப் பிடித்தவாறு இருக்க வேண்டும். அப்படிப் பிடித்துக் கொண்ட கைகள் உடலின் முன்புறமோ அல்லது பின்புறமோ இருக்கலாம். [2]
3. தியானத்தின் போது கண்கள் திறந்தவாறு இருக்க வேண்டும். பார்வை நடக்கும்போது உடலுக்கு இரண்டு மீட்டர் அதாவது ஆறடி தூரத்தில் பாதையில் பதிந்தவாறு இருக்க வேண்டும்.
4. பாதையில் நேராக நடக்க வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து மீட்டர் அதாவது பத்திலிருந்து பதினைந்து அடி தூரம் நடக்க வேண்டும்.
5. வலது காலை ஒரு அடி தூரம் முன் நகர்த்தித் தியானத்தைத் துவங்கலாம். கால் தரைக்குச் சமாந்தரமாக இருக்க வேண்டும். தரையைத் தொடும்போது முழுப்பாதமும் ஒரே சமயத்தில் தரையில் பதிய வேண்டும். வலது குதிக்கால் இடதுகால் விரலுக்கு நேராக வலதுபுறமாக இருக்க வேண்டும்.
6. ஒவ்வொரு காலின் அசைவும் இயல்பாக ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒரே சீரான வேகத்திலும், இடைவிடாமலும், திடீர் மாற்றங்கள் ஏதும் செய்யாலும் இருக்க வேண்டும்.
7. அடுத்து இடது காலை முன் நகர்த்த வேண்டும். வலது காலைத் தாண்டித் தரையில் கால் பதிக்கும் போது இடது குதிக்கால் வலது கால் விரலுக்கு நேராகத் தரையைத் தொட வேண்டும். இப்படி ஒவ்வொரு அடியாக கால்களை நகர்த்த வேண்டும்.
8. கால்களை நகர்ந்தும் போது உட்கார்ந்து தியானிப்பது போலவே அந்த அசைவினை விளக்கும் - அந்த அசைவு நடைபெறும் போதே - ஒரு மந்திர வார்த்தையை மனத்தில் சொல்லிக் கொள்ள வேண்டும். வலது கால் நகரும் போது நாம் சொல்லவேண்டியது "வலது காலை முன் வைக்கிறேன்". இடது கால் நகரும் போது நாம் சொல்ல வேண்டியது "இடது காலை முன் வைக்கிறேன்" .
9. மனத்தில் சொல்லும் வார்த்தை அந்த நகர்வு நடக்கும் அதே கணத்தில் குறிப்பிடப்பட வேண்டும். நகர்வதற்கு முன்னரோ நகர்ந்த பின்னரோ சொல்லக் கூடாது.
மனத்தில் "வலது காலை முன் வைக்கிறேன்" என்று காலை நகர்த்தும் முன்னரே குறிப்பிட்டுக் கொள்வது தவறு. ஏனென்றால் இன்னமும் நடக்காத காரியத்தைக் குறிப்பிடுகிறோம். அதே போல, காலை நகர்த்தி முடித்த பின்னர் "வலது காலை முன் வைக்கிறேன்" என்று குறிப்பிடுவதும் தவறு. ஏனென்றால் நடந்துபோன காரியத்தைக் குறிப்பிடுகிறோம். இப்படி முன்னரோ, பின்னரோ செய்தால் தியானம் செய்ததாகக் கூற முடியாது, ஏனென்றால் நாம் உள்ளதை உள்ளபடி கவனிக்கவில்லை.
நடப்பதை நடக்கும் போதே கவனிப்பது என்றால் காலை நகர்த்தும் துவக்கத்தில் அதாவது கால் தரையை விட்டுச் மேலெழுந்த பொழுதில் "வலது காலை .. " என்றும் , கால் முன் நகர நகர "..முன்..." என்றும் பாதம் மீண்டும் தரையைத் தொடும் போது "..வைக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இதே முறையை இடது காலை நகர்த்தும் போதும் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். பாதையின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நமது கவனம் ஒவ்வொரு கால் அசைவையும் தொடர வேண்டும்.
பாதையின் இறுதியை அடைந்தபின், திரும்பி எதிர்த் திசையில் நடக்க வேண்டும். கவனம் செலுத்திக் கொண்டே எப்படித் திரும்புவது? முதலில் நிற்க வேண்டும். பின்னால் உள்ள காலைமுன்னுக்கு கொண்டுவந்து முன்னால் உள்ள காலுக்கு அடுத்தார்ப்போல வைக்கும் போது நமக்கு நாமே, "நிற்க, நிற்க, நிற்க" என்று குறிப்பிட வேண்டும். அசையாமல் நிற்கும் நிலையில், "நிற்கிறேன், நிற்கிறேன், நிற்கிறேன்" என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். நின்றபின் திரும்புவதை இவ்வாறு செய்ய வேண்டும்:
1. வலது காலைத் தரையிலிருந்து முழுதும் தூக்கி, 90° திருப்பி மீண்டும் தரையில் வைக்கும்போது, "திருப்பு," என்று ஒருமுறை சொல்லிக் கொள்ள வேண்டும். சொல்லும் மந்திர வார்த்தை நாம் பாதத்தைத் திருப்பும் முழு நேரத்துக்கும் நீடிக்க வைப்பது முக்கியம். அதாவது பாதத்தின் அசைவின் துவக்கத்தில் "திரு.." என்று துவங்கி மீண்டும் தரையில் தொடும் நேரத்தில் "..ப்பு" என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
2. அடுத்து இடது காலைத் தரையிலிருந்து தூக்கி 90° திருப்பி வலது காலுக்கு இணையாக வைக்கும் போதும், "திருப்பு" என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.
3. மீண்டும் ஒரு முறை இரண்டு பாதங்களையும் திருப்பி, "திருப்பு" (வலது கால்), "திருப்பு" (இடது கால்), என்றும் நிற்கையில் "நிற்க, நிற்க, நிற்க" என்றும் குறிப்பிட வேண்டும்.
4. மீண்டும் நடக்கும் தியானத்தைத் தொடர வேண்டும். எதிர்த் திசையில் நடக்கும் போதும் முன்போலவே "வலது காலை முன் வைக்கிறேன்" என்றும் "இடது காலை முன் வைக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
நடைத் தியானம் செய்யும்போது வேறு சிந்தனைகளோ, உடல் உணர்ச்சிகளோ, மனக் கிளர்ச்சிகளோ தோன்றினால் அவற்றைத் தவிர்த்து விட்டு மீண்டும் மனத்தைப் பாதங்களுக்கே எடுத்துச் சென்று மன ஒருமைப்பாட்டையும், தொடர்ச்சியையும் நீடிக்கலாம். ஆனால் அவை மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தினால் நடப்பதை நிறுத்திப் பின்னால் உள்ள கால் முன் காலுக்கு இணையான நிலைக்கு வரும் போது "நிற்க, நிற்க, நிற்க" என்று குறிப்பிட வேண்டும். பின் அசையாமல் நிற்கும் நிலையில், "நிற்கிறேன், நிற்கிறேன், நிற்கிறேன்", என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். பின் மனதில் தோன்றிய எண்ணங்களைக் கவனித்தவாறு உட்கார்ந்து தியானம் செய்யும் போது செய்வதைப் போலவே "எண்ணுகிறேன், எண்ணுகிறேன், எண்ணுகிறேன்"என்றோ "உடல் வலி, உடல் வலி, உடல் வலி" அல்லது "சோகம்", "சலிப்பு", "மகிழ்ச்சி" .. என்று தோன்றிய அனுபவத்துக்கு ஈடான மந்திர வார்த்தைகளைக் குறிப்பிட வேண்டும். பின் அந்த உணர்ச்சி மறைந்த பின்னர் மீண்டும் நடையைத் துவக்கி "வலது காலை முன் வைக்கிறேன்" என்றும் "இடது காலை முன் வைக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அடிமேல் அடிவைத்து , முதலில் ஒரு திசையில் நாம் குறித்துக் கொண்ட பாதையின் எல்லையை அடையும்வரை நடந்து, பின்னர் திரும்பி எதிர்த் திசையில் தொடர்ந்து முன்னும் பின்னும் நடக்க வேண்டும்.
பொதுவாக ஒரே நிலையில் (உட்கார்ந்தோ அல்லது நடந்தோ) அதிக நேரம் செலவிடாமல் இருக்க நடந்து தியானம் செய்யும் அதே நேர அளவு உட்கார்ந்தும் தியானம் செய்யச் செலவிட வேண்டும். எடுத்துக் காட்டாக, நடந்து தியானிக்கப் பத்து நிமிடம் ஒதுக்கினால், அதைத் தொடர்ந்து பத்து நிமிடம் உட்கார்ந்தும் தியானம் செய்ய வேண்டும்.
நடந்து தியானம் செய்வது எப்படி என்ற விளக்கம் இத்தோடு முற்றுப் பெறுகிறது. மேலும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதில் மட்டும் திருப்தி அடையாமல் தயவு செய்து இந்தத் தியான முறையை நீங்களே பயின்று அதன் பலனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போதனை உங்களுக்கு நீடித்த அமைதியையும், மகிழ்ச்சியையும், துன்பத்திலிருந்து விடுதலையையும் தர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
விளக்கம்:
[1] இந்த ஐந்து அனுகூலங்கள் அங்குத்தர நிகாய, சங்கம சூத்திரத்திலிந்து தொகுக்கப் பட்டது (5.1.3.9).
“Bhikkhus, there are these five benefits of walking meditation. What five? One becomes capable of journeys; one becomes capable of striving; one becomes healthy; what one has eaten, drunk, consumed, and tasted is properly digested; the concentration attained through walking meditation is long lasting. These are the five benefits of walking meditation.” Source
[2] பின்னிணைப்பு வரைப்படம் 40 இல் நடந்து தியானம் செய்யும் நிலையைக் காண்க.
* * *