பௌத்தக் கதைகள்
மயிலை சீனி. வேங்கடசாமி
பிள்ளைத்தாய்ச்சி
ஜேதவனம் என்னும் இடத்திலே பகவன் புத்தர், வழக்கம் போல மாலை நேரத்திலே அறவுரைகளை விளக்கிக் கூறி விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். நகரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பகவன் புத்தருடைய செல்வாக்கு அதிகமாயிருந்தபடியினாலே நகரத்துச் செல்வர்களும் சீமான்களும் வந்து இக்கூட்டத்திலே அமர்ந்திருந்தார்கள். ஆண்கள் ஒருபுறம்; பெண்கள் ஒருபுறம் அமர்ந்திருந்தனர். புத்தருடைய சீடர்கள் இன்னொருபுறத்தில் அமர்ந்திருந்தனர். சொற்பொழிவு உச்சநிலையை அடைந்தது. கூட்டத்திலே எல்லோரும் தம்மை மறந்து பகவன் புத்தர் கூறுவதையே ஊன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அமைதியான இந்தப் பெருங்கூட்டத்திலே புத்தர் பெருமானுடைய குரல் வெண்கல ஓசைபோலக் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்த வேளையிலே சுமார் முப்பது வயதுள்ள ஒரு பெண்மணி இந்தக் கூட்டத்தில் வந்தாள். வந்து கூட்டத்தைக் கடந்து பகவன் புத்தர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலே சென்றாள். இவள் கண்ணையும் மனத்தையும் கவரத்தக்க நல்ல அழகு வாய்ந்தவள். நிறைந்த சூல் கொண்டவள்போல் அவள் வயிறு பருத்திருந்தது. சந்நியாசினிப் பெண்கள் உடுத்தும் புடைவையை உடுத்தியிருந்தாள். சிஞ்சா மாணவிகை என்னும் பெயருள்ள இந்தச் சந்நியாசினியை ஆவ்வூரார் நன்கறிவார்கள். பௌத்த மதத்திற்கு மாறுபட்ட வேறு மதத்தைச் சேர்ந்தவள் இவள். பகவன் புத்தரின் அருகிலே இவள் வந்து
நின்றபோது, அங்கிருந்தவர்கள், "இவள் ஏன் இங்கு வந்து நிற்கிறாள்! பகவர் கொள்கையை இவள் மறுத்துப் பேசப்போகிறாளா? சமய வாதம் செய்ய வந்திருக்கிறாளா?" என்று தமக்குள் எண்ணினார்கள். இவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை அறிய எல்லோரும் ஆவலாக நோக்கினார்கள்.
அவள் புத்தரைப் பார்த்து இவ்வாறு சொன்னாள். "பகவரே! விரிவுரையைச் சற்று நிறுத்துங்கள். நான் கேட்பதற்கு முதலில் விடைகூறுங்கள்." தன் சூல்கொண்ட வயிற்றைச் சுட்டிக் காட்டி மேலும் பேசினாள்: "என்னை இந்த நிலையில் விட்டுவிட்டுத் தாங்கள் அறவுரை போதித்துக் கொண்டிருந்தால் என் கதி என்னாவது? எனக்கு என்ன வகை செய்தீர்கள்? இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகிறது. பிரசவத்திற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்," என்று கூறினாள். இவள் பேசியதைக் கேட்ட பகவன் புத்தர் ஒன்றும் மறுமொழி கூறாமல் மௌனமாக இருந்தார்.
கூட்டத்தில் ஒரே அமைதி காணப்பட்டது. ஆனால், எல்லோருடைய உள்ளத்திலும் பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. வியப்பும், திகைப்பும் பலவித எண்ணங்களும் எல்லாருடைய மனத்தையும் அலைக்கழித்தன. எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். சூல்கொண்ட பிள்ளைத்தாய்ச்சியாக அவள் காணப்பட்டாள். பெரிய சபையிலே, பலர் முன்னிலையிலே பகவன் புத்தர் மீது குற்றம் சாட்டுகிறாள். அவள் கூறுவது உண்மையாயிருக்குமோ? பகவருக்கும் அவளுக்கும் தொடர்பு-கூடா ஒழுக்கம் உண்டோ? இந்தத் தொடர்பின் பயனாக இவள் வயிறு வாய்த்துச் சூல் கொண்டாளோ? இது உண்மையாயிருக்குமோ? இதற்குப் பகவர் என்ன விடை கூறப்போகிறார்!
பகவன் புத்தர் மௌனமாக இருந்தார். அவர் மௌனமாக இருந்தது, இவள் சாற்றிய குற்றத்தை ஒப்புக் கொண்டது போல அங்குள்ளவருக்குத் தோன்றியது.
அப்போது மேலும் அவள் பேசினாள்: "ஏன் மௌனமாக இருக்கிறீர். என்னை ஒரு குழந்தைக்குத் தாயாக்கி விட்டு, இந்த நிலையில் என்னை அனாதையாக விடுவது அழகா? என் பிள்ளைப்பேறுக்காகவும் மருத்துவத்திற்காகவும் வழிவகை செய்து கொடுங்கள்."
இதைக் கேட்டுப் பகவன் புத்தர், மேலும் மௌனமாகவும் அமைதியாகவும் இருந்தார். பகவர் மௌனமாக இருந்தது சிஞ்சா மாணவிகை கூறியது உண்மை என்று ஒப்புக் கொள்வது போல அங்கிருந்தவர்களுக்குத் தோன்றியது. அவள்மீது இரக்கமும் பகவன் மீது வெறுப்பும் அக்கூட்டத்திலிருந்தவர்களில் பலருக்கும் ஏற்பட்டன. பகவன் புத்தர்மேல் இருந்த நல்லெண்ணமும் உயர்ந்த மதிப்பும் அங்கிருந்தவர்களில் பலருக்கு இல்லாமல் போயின. இதனால் எல்லோர் உள்ளத்திலும் ஒருவிதப் பரபரப்புத் தோன்றியது. ஆனால் கூட்டத்தில் அமைதி நிலவியது.
பகவர் மௌனமாக இருந்தது, சிஞ்சா மாணவிகைக்கு மேலும் ஊக்கம் அளித்தது. அவள், "ஏன் பேசாமல் இருக்கிறீர்? எனக்கு ஒரு வழி செய்து கொடுங்கள்," என்று கூறினாள்.
பகவர் அப்போதும் மௌனமாகவும் அமைதியாகவும் இருந்தார்.
அப்பெரிய கூட்டத்திலே பெண்மணிகள் அமர்ந்திருந்த இடத்திலே சற்று வயது சென்ற அம்மையார் ஒருவர் எழுந்து நின்றார். எல்லோருடைய பார்வையும் அந்த அம்மையாரிடம் சென்றன. அம்மையார் இவ்வாறு கேட்டார்: "சிஞ்சா மாணவிகே! உங்களுக்கு எத்தனை மாத கர்ப்பம்?"
"ஒன்பது மாதம் நிறைந்துவிட்டது. இது பத்தாவது மாதம்!"
இவை வேண்டப்படாத கேள்வியும் விடையும் என்று பல்லோரும் எண்ணினார்கள்.
மூதாட்டியார், "இல்லை, உனக்குக் கர்ப்பமே இல்லை. நீ பொய் சொல்லுகிறாய்! வீணாகப் பொய்க் குற்றம் சாட்டுகீறாய்!"
மூதாட்டியார் கூறியது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் தோன்றிற்று பலருக்கு. வயிற்றைப் பார்த்தாலே தெரிகிறதே முழுக் கர்ப்பம் என்று. இல்லை என்று சொல்லுகிறார் அம்மையார். இது என்ன பைத்தியக்காரத்தனம்?
மூதாட்டியார் சிஞ்சா மாணவிகை அருகில் சென்றார். சிஞ்சா மாணவிகை, "அருகில் வராதே, தூரத்தில் நில்," என்றாள். அம்மையார் நிற்க வில்லை. அருகில் சென்றார். கர்ப்பவதி அம்மையாரைத் தள்ளினாள். அம்மையார் அவள் வயிற்றைத் தடவிப் பார்த்தார். மாணவிகை தன்னைத் தொடவிடாமல் சண்டித்தனம் செய்தாள். அம்மையார் விடவில்லை. இருவருடைய சச்சரவுக்கிடையே மாணவிகையின் வயிற்றிலிருந்து ஒரு கனத்த பொருள் தொப்பென்று கீழே விழுந்தது. அம்மையார் அந்தப் பொருளைக் கையில் எடுத்தார்; அது திரண்டு அரை வட்டவடிவமாகச் செய்யப்பட்ட ஒரு மரத்துண்டு! அம்மையார் அதைக் கையில் பிடித்து உயரத் தூக்கியபடி, "இதோ பாருங்கள். இதுதான் சிஞ்சா மாணவிகையின் ஒன்பது மாதக் கர்ப்பம்," என்று கூறினார்.
அதே சமயத்தில் சிஞ்சா மாணவிகையின் வயிறு சுருங்கிக் காணப்பட்டது. அவள் உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனியைப் போலத் திகைத்தாள்.
அம்மையார் கூறினார்: "இவள் இந்த மரக்கட்டையை வயிற்றில் கட்டிக் கொண்டு, சூல்கொண்டவள்போல நடித்து பகவர்மேல் வீணாகப் பழி சுமத்துகிறாள். இப்போது இவள் வயிற்றைப் பாருங்கள். வயிற்றில் கர்ப்பம் இல்லையே. அது எங்கே போயிற்று? இவளைப் பார்க்கும்போதே தெரியவில்லையா இவளுக்குச் சூல் இல்லை என்று? சூல் கொண்டவர்களுக்கு முகத்திலும் மற்ற உறுப்புகளிலும் மாறுதல்கள் ஏற்படுவது வழக்கம். அப்படிப்பட்ட மாறுதல்கள் இவள் உடம்பில் இல்லையே! இவள் நீலி! பழிகாரி! என்று கூறினார்.
கூட்டத்தில் ஆத்திரம் உண்டாயிற்று.
"மோசக்காரி", "சண்டாளி", "பழிகாரி", "துரத்துங்கள் அவளை", "விரட்டியடியுங்கள்", "மகாபாபி."
மக்கள் இப்போது உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். அமைதி கலைந்து கூச்சலும், சந்தடியும் ஏர்பட்டது. சிஞ்சா மாணவிகை கூட்டத்தை விட்டு ஓடினாள். மக்கள் அவளை விரட்டித் துரத்தினார்கள். தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று அவள் விரைவாக ஓடி விட்டாள்.
சிஞ்சா மாணவிகை வேறு மதத்தைச் சேர்ந்த சந்நியாசினி. பௌத்தமதம் சிறப்படைந்து செல்வாக்கடைந்திருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட வேறு மதத்துச் சந்நியாசிகள் பகவன் புத்தர் மீது அபவாதம் உண்டாக்கி அவருடைய மதத்தை அழிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் சிஞ்சா மாணவிகையை ஏவி இவ்வாறு அவதூறு சொல்லச் செய்தார்கள். ஆனால், அவளே அவமானப்பட்டு ஓடினாள்.