பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - பிரதீத்திய சமுப்பாதம்

பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில்

செல்வி யசோதரா நடராசா

அத்தியாயம் 8 - பிரதீத்திய சமுப்பாதம்

Paticca Samuppada

'பிரதீத்திய' என்றால் காரணமாக அல்லது சார்பாக என்றும், 'சமுப்பாதம்' என்றால் காரியம் அல்லது தொடக்கம் அல்லது தொடக்கம் உண்டாக்குதல் என்றும் பொருள்படும். ஆகவே பிரதீத்திய சமுப்பாதம் என்றால், 'இதன் சார்பாக இது உண்டாகிறது,' என்று அர்த்தப்படும்.

பிரதீத்திய சமுப்பாதம், பிறப்பு இறப்புக்களைப் பற்றிய ஒரு உரையாடலே தவிர, உயிரின் முழுமுதல் மூலத்தை விளக்கும் ஒரு கோட்பாடல்ல என்பதை மனத்திலிருத்த வேண்டும். அது மறுபிறப்பினதும், துன்பத்தினதும் வினைகளைப்பற்றி ஆராய்கிறதேயன்றித் தொடக்கத்திலிருந்து உலகின் கூர்ப்பைச் சித்தரிக்கச் சிறிதும் முயலவில்லை.

அவித்தை-அறியாமை அல்லது பேதமைதான் வாழ்வு எனும் சக்கரத்தின் முதல் அலகு அல்லது வினையாக உள்ளது. அது எல்லா வாய்மைகளையும், விளக்கங்களையும் மறைக்கிறது.

நால்வகை உயரிய வாய்மைகளைப் பற்றிய அறியாமையின் சார்பாக நல்வினை தீவினையாகிய செய்கைகள் (சம்சாரா) எழுகின்றன. இச் செய்கைகள் நல்லவையாகவும் தீயவையாகவும் இருக்கலாம். அறியாமையில் வேரூன்றிய இச்செய்கைகளின் வினைப்பயன்கள், உயிரின் தொடர்ச்சியை இன்னும் நீடிக்கும். ஆயினும் வாழ்வின் குறைபாடுகளைக் களைந்தெரிய நல்ல செய்கைகள் அவசியம்.

செய்கைகளில் இருந்து மறுபிறப்பு உணர்ச்சி (விஞ்ஞான) எழுகிறது. இது கடந்த காலத்தை நிகழ் காலத்தோடு தொடர்பு படுத்துகிறது. மறுபிறப்பு உணர்ச்சியோடு உடன் தோன்றுவன மனமும் உடம்பும் (அருவும் உருவும் - நாம+ரூபம்). ஆறு புலன்களும் (சலாயத்தனா) அருவுருவின் தவிர்க்க முடியாத விளைவுகளாகும்.

இவ் ஆறு புலன்களிலுமிருந்து ஊறு (ஸ்பரிசம்-பாஸ்ஸ) ஏற்படுகிறது. ஊறு உணர்ச்சியை (உணர்வு - வேதனா) ஏற்படுத்தும். உணர்ச்சி, அரு, உரு, ஆறு புலன்கள், நுகர்வு என்ற ஐந்தும் முந்திய வினைகளின் பயனாகவிருப்பதால் அவை வாழ்வின் செயலற்ற பகுதி எனப்படும். உணர்ச்சியிலிருந்து பெறப்படுவது வேட்கை அல்லது அவா (தன்கா). வேட்கை, பற்றை (உபாதான) விளைவிக்கும். பற்று கன்மத் தொகுதியைத் (பவ) தோற்றுவிக்கும். கன்மம் அடுத்த பிறப்பை (ஜாதி) நிர்ணயிக்கும். பிறப்பு, மூப்பையும் மரணத்தையும் பிறப்பிக்கும் தவிர்க்க முடியாத காரணம் (ஜரா மரண).

வினை காரணமாகப் பயன் ஏற்பட்டால், வினை முடிவுற்றால் பயனும் முடிவுற வேண்டும். பிரதீத்திய சமுப்பாதத்தின் நேர்மாறான முறை இவ்விடயத்தை இன்னும் தெளிவாக்கும்.

மூப்பும், மரணமும் ஒரு மன - உடல் சார்ந்த ஒரு உயிரினத்துக்கு நடக்கக் கூடியவை. அப்படிபட்ட உயிரினம் பிறக்க வேண்டும். ஆகவே பிறப்பை அது முன்னறிவிக்கின்றது. ஆனால் பிறப்பு கன்மத்தின் விளைவாக உள்ளது. கன்மம் பற்றினாலும், பற்று வேட்கையினாலும் ஏற்படுகின்றது. இப்படியான வேட்கை, உணர்ச்சி நிலைத்திருக்கும் இடத்தில் தான் காணப்படும். உணர்ச்சி பொருள்களுக்கும், புலன்களுக்கும் இடையிலுள்ள ஊறு என்பதின் விளைவாகும். ஆகவே அது புலனறியும் உறுப்புக்களை முன்னறிவிக்கின்றது. ஆனால் இவ்வுறுப்புக்கள் மனமும், மெய்யுமின்றி நிலைத்திருக்க முடியாது. எங்கே மனம் என்று ஒன்றுள்ளதோ, அங்கே விழிப்புணர்ச்சி இருக்கும். இது முற்பிறப்பின் நன்மை, தீமை முதலியவற்றின் விளைவாகும். பொருள்களின் உண்மை நிலை பற்றிய அறியாமை காரணமாகவே, நன்மையும் தீமையும் ஈட்டப்படுகின்றன. பிரதீத்திய சமுப்பாதத்தின் முழுச் சூத்திரத்தையும் பின்வருமாறு சுருக்கமாகக் குறிக்கலாம்.

அறியாமையின் சார்பாக செய்கைகள் (நல்ல, தீய) எழுகின்றன.

செய்கைகளின் சார்பாக உணர்ச்சி எழுகின்றது.

உணர்ச்சியின் சார்பாக அருவுரு எழுகின்றது.

அருவுரு சார்பாக ஆறு புலன்கள் எழுகின்றன.

ஆறு புலன்கள் சார்பாக ஊறு எழுகின்றது.

ஊறின் சார்பாக நுகர்ச்சி எழுகின்றது.

நுகர்ச்சியின் சார்பாக வேட்கை எழுகின்றது.

வேட்கையின் சார்பாக பற்று எழுகின்றது.

பற்றின் சார்பாக கன்மா (செய்வினை) எழுகின்றது.

கன்மத்தின் சார்பாக மறுபிறப்பு எழுகின்றது.

பிறப்பின் சார்பாக அழிவு, மரணம், கவலை, அரற்றல், பிணி, அவலம் முதலிய எழுகின்றன.

இப்படியாகத்தான் துன்பத்தின் முழுத் தொகுதியும் எழுகின்றது. இப்பன்னிரண்டில் முதல் இரண்டும் சென்ற காலத்துக்கும், நடு எட்டும் நிகழ் காலத்துக்கும் இறுதி இரண்டும் எதிர் காலத்துக்கும் உரியன.

அறியாமையின் முழு முடிவு செய்கைகளின் முழுமுடிவைக் கொண்டு வரும்.

செய்கைகளின் முடிவு உணர்ச்சியின் முடிவாகும்.

உணர்ச்சியின் முடிவு மனமெய்யின் முடிவாகும்.

மனமெய்யின் முடிவு ஆறு புலன்களின் முடிவாகும்.

ஆறு புலன்களின் முடிவு ஊறின் முடிவாகும்.

ஊறின் முடிவு நுகர்ச்சியின் முடிவாகும்.

நுகர்ச்சியின் முடிவு வேட்கையின் முடிவாகும்.

வேட்கையின் முடிவு பற்றின் முடிவாகும்.

பற்றின் முடிவு செயலின் முடிவாகும்.

செயலின் முடிவு மறுபிறப்பின் முடிவாகும்.

மறுபிறப்பின் முடிவு அழிவு, மரணம், கவலை, அரற்றல், பிணி, அவலம் முதலியவற்றின் முடிவாகும்.

இப்படியாகத்தான் துன்பத்தின் முழுத்தொகுதியும் முடிவடைகிறது. இக்காரண காரியத் தொடர்பு முடிவில்லாமல் தொடரும் இச் செய்முறையின் ஆரம்பத்தை தீர்மானிக்க முடியாது. ஏனெனில், வாழ்வின் சுழற்சி எப்போது அறியாமையால் சூழப்பட்டது என்பதைத் தீர்மானிக்க முடியாது. ஆனால் இவ்வறியாமை அறிவாக மாறும்போதும், வாழ்வின் சுழற்சி நிர்வாண - தாதுவை நோக்கி திசை திருப்பப்படும்போதும், சம்சாரம் என்ற உயிரின் தொடர்ச்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்.

* * * * *