மனத்தைத் தடுமாற்றும் எண்ணங்களை நீக்குவது

விதக்க சண்தான சூத்திரம்

மனத்தைத் தடுமாற்றும் எண்ணங்களை நீக்குவது

(சுருக்கம்)

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு.

Vitakkasanthana Sutta: The Relaxation of Thoughts or The Removal of Distracting Thought

translated from the Pali by Thanissaro Bhikkhu. MN 20 PTS: M i 118

Vitakka - reflection, thought, thinking

Santhana - appeasing

ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் எழுந்தருளியிருந்தார் என்று கேள்வியுற்றேன். பகவர் துறவிகளிடம் இவ்வாறு கூறினார், "துறவிகளே!"

"ஆம், அண்ணலே," என்று பதிலளித்தனர் துறவிகள்.

பகவர் கூறியது: "மனத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் உள்ள துறவி, தக்க நேரத்தில் ஐந்து விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த ஐந்து?

"சில சமயம் தீய, திறமையற்ற எண்ணங்கள் - காமம் (அவா), வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை) ஆகியவை படிந்த எண்ணங்கள் - ஒரு துறவி குறிப்பிட்ட விஷயத்தைப் பிரதிபலிக்கையில் அவர் மனத்தில் தோன்றுகிறது. அப்போது அவர் அந்த விஷயத்தைத் தவிர்த்து வேறு திறமையான வற்றோடு இணைந்திருக்கும் ஒரு விஷயத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அப்படி அவர் திறமையானவற்றோடு இணைந்திருக்கும் விஷயத்தைப் பிரதிபலிப்பாரேயானால் அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் - காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை படிந்த எண்ணங்கள் - கைவிடப்பட்டு அவற்றின் தாக்கம் மெல்லக் குறைந்து விடும் (அவர் மனம் புதிதாகச் செய்யும் தொழிலில் ஆழ்ந்து விடும்). அவை கைவிடப்பட்ட பின் அவர் தனது மனத்தைத் தானே உறுதியாக்கி, சீராக்கி, அமைதியாக்கி, ஒற்றுமைப்படுத்தி ஒருமுகப் படுத்துகிறார். இது ஒரு தச்சனோ அவனது உதவியாளனோ, ஒரு பெரிய மர ஆப்பை (ஆப்பு - peg) ஒரு சிறிய ஆப்பைக் கொண்டு வெளியே எடுப்பதற்கு ஒப்பாகும்.

"அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் - காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை படிந்த எண்ணங்கள் - வேறு ஒரு திறமையான வற்றோடு இணைந்திருக்கும் விஷயத்தைப் பிரதிபலிக்கையிலும் தொடர்ந்து தோன்றுமேயானால் அவர் அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்: 'உண்மையிலேயே, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் திறமையற்றவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் பழித்தற்குரியவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் துன்பத்தைத் தருவன.' இவ்வாறு அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் - காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை படிந்த எண்ணங்கள் – கைவிடப் பட்டு அவற்றின் தாக்கம் மெல்லக் குறைந்து விடும். அவை கைவிடப்பட்ட பின் தனது மனத்தைத் தானே உறுதியாக்கி, சீராக்கி, அமைதியாக்கி, ஒற்றுமைப் படுத்தி ஒருமுகப் படுத்துகிறார். இது அலங்காரம் செய்து தங்களை அழகு படுத்திக் கொள்ள விருப்புள்ள ஒரு இளம் பெண்ணோ - அல்லது ஆணோ - தங்கள் கழுத்தில் இறந்து போன பாம்பின் பிணத்தையோ, நாயின் பிணத்தையோ, அல்லது மனிதப் பிணத்தையோ தொங்க வைத்திருந்தால் அவர்கள் அடையும் அதிர்ச்சி, அவமானம், அருவருப்பைப்போன்றது.

"அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் - காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை படிந்த எண்ணங்கள் - அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்கையிலும் தொடர்ந்து தோன்றுமேயானால் அந்த எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். அவ்வாறு அந்த எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், அவற்றைப் பொருட் படுத்தாமல் விட்டு விட்டால் அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் கைவிடப்பட்டு அவற்றின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து விடும். அவை கைவிடப்பட்ட பின் தனது மனத்தைத் தானே உறுதியாக்கி, சீராக்கி, அமைதியாக்கி, ஒற்றுமைப் படுத்தி ஒருமுகப் படுத்த வேண்டும். இது நல்ல கண்பார்வை உள்ள ஒருவர் தனது பார்வையின் எல்லைக்குள் வந்துள்ள உருவங்களைப் பார்க்க விரும்பாததால் தன் கண்களை மூடிக் கொள்வதற்கு அல்லது வேறு பக்கம் திரும்பிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

"அந்த தீய, திறமையற்ற எண்ணங்களுக்கு - காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை படிந்த எண்ணங்கள் - இடம் கொடுக்காமல், அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிட்டும் தொடர்ந்து தோன்றுமேயானால் அந்த எண்ணம் தோன்றுவதற்கான மூல காரணத்தை யூகித்து அதனை அடங்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த எண்ணம் தோன்ற உள்ள மூல காரணத்தை யூகித்து அதனை அடங்கச் செய்தால், அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் கைவிடப்பட்டு அவற்றின் தாக்கம் மெல்லக் குறைந்து விடும். அவை கைவிடப்பட்ட பின் தனது மனத்தைத் தானே உறுதியாக்கி, சீராக்கி, அமைதியாக்கி, ஒற்றுமைப்படுத்தி ஒருமுகப் படுத்துகிறார். இதற்குப் பொருத்தமான உவமானம்: வேகமாக நடக்கும் ஒருவன், 'அட, ஏன் இவ்வளவு வேகமாக நடக்கின்றேன். மெதுவாக நடந்தால் என்ன?' என்று நினைக்கின்றான். எனவே அவன் மெதுவாக நடக்கின்றான். பின் இந்த எண்ணம் தோன்றுகிறது, 'ஏன் இவ்வளவு மெதுவாக நடக்க வேண்டும். நின்றால் என்ன?' பின் அவன் நிற்கின்றான். அடுத்து இந்த எண்ணம் தோன்றுகிறது, 'ஏன் நிற்க வேண்டும். உட்கார்ந்தால் என்ன?' எனவே உட்கார்கிறான். பின் அவனுக்கு இந்த எண்ணம் தோன்றுகிறது, 'ஏன் உட்காரவேண்டும். படுத்தால் என்ன?' எனவே படுத்துக் கொள்கிறான். இவ்வாறு அவன் கிளர்ச்சியான நிலையிலிருந்து, ஓய்வான நிலைக்குச் செல்கிறான்.

"அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் - காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை படிந்த எண்ணங்கள் - அந்த எண்ணம் தோன்றுவதற்கான மூல காரணத்தை யூகித்து அதனை அடங்கச் செய்தும் தொடர்ந்து தோன்றுமேயானால் - பல்லைக் கடித்துக் கொண்டு, நாக்கை அண்ணத்தில் (மேல்வாய்ப் புறம்) அழுத்திக் கொண்டு - தன் அறிநிலை கொண்டு மனத்தை மனத்தாலேயே தடுத்துக் கட்டுப் படுத்தி அடக்கிவிடவேண்டும். இப்படி – பல்லைக் கடித்துக் கொண்டு, நாக்கை அண்ணத்தில் அழுத்திக்கொண்டு - தன் அறிநிலை கொண்டு மனத்தை மனத்தாலேயே தடுத்து, கட்டுப் படுத்தி அடக்கி விட்டால் அந்த தீய, திறமையற்ற எண்ணங்கள் கைவிடப் பட்டு அவற்றின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து விடும். அவை கைவிடப்பட்ட பின் தனது மனத்தைத் தானே உறுதியாக்கி, சீராக்கி, அமைதியாக்கி, ஒற்றுமைப் படுத்தி ஒருமுகப் படுத்துகிறார். இது ஒரு பலசாலி பலவீனமானவனின் தலையை, அல்லது கழுத்தை அல்லது தோள்களைப் பற்றி, கட்டுப் படுத்தி அடக்கி விடுவதற்கு ஒப்பாகும்.

"ஒரு துறவி ... வேறு திறமையானவற்றோடு இணைந்திருக்கும் விஷயத்தைப் பிரதிபலிக்க ...அந்த எண்ணங்களுள் உள்ள குறைபாடு களைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்க அந்த எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிட..அந்த எண்ணம் தோன்ற உள்ள மூல காரணத்தை யூகித்து அதனை அடங்கச் செய்ய ... பல்லைக்கடித்துக் கொண்டு, நாக்கை அண்ணத்தில் அழுத்திக் கொண்டு - தன் அறிநிலையைக் கொண்டு மனத்தை மனத்தாலேயே தடுத்து, கட்டுப் படுத்தி அடக்கி விட...தனது மனத்தைத் தானே உறுதியாக்கி, சீராக்கி, அமைதியாக்கி, ஒற்றுமைப் படுத்தி ஒருமுகப் படுத்து வாறேயானால் : அவரை, எண்ணப் போக்குகளை நன்கு அறிந்தவர், அவற்றில் முற்றிலும் வல்லவர் என்று கூறலாம். அவர் விருப்பப் பட்டதை நினைக்கிறார். அவர் விருப்பப் படாததை நினைப்பதில்லை. அவர் ஆசையை வெட்டியவர், தளைகளை தளர்த்தி விட்டவர் , அகம்பாவத்தை நுண்ணியமாக அறிந்து கொண்டதால் - துன்பத்துக்கும் துயரத்திற்கும் முடிவு கட்டி விட்டவர்.

பகவர் இதைக் கூறினார். பகவரின் வார்த்தைகளைக் கேட்ட துறவிகள் ஆனந்தப் பட்டனர்.

* * *