முன்னுரை

உள்ளே புகுமுன் ஒரு சொல் கேளீர்!

பௌத்த நெறியினனாகிய நான், உலகின் முதல் பகுத்தறிவாளராம் போதிமாதவர், சித்தார்த்த கௌதமரின் புகழ்பாடுவதில் நாட்டமுடையவன். சென்னை, பெரம்பூர் தென்னிந்தியப் பௌத்த சங்கத்தின் பொதுச் செயலாளன் என்ற முறையில் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற International Net Work of Engaged Buddhist சபையின் மூன்றாவது மாநாட்டுக்குச் சென்றிருந்தேன்; அங்கு பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த பௌத்தப் பேரறிஞர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பும் பெற்றேன். அவருள் ஒருவர்தாம் ஆஸ்திரேலிய நாட்டுப் பௌத்த அறவண அடிகள், வணக்கத்துக்குரிய சிராவஸ்தி தம்மிகா பாந்தே அவர்கள். அவர் எழுதிய புத்தகங்களாலும், கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட நான், அவருடைய Good Question Good Answer என்னும் நூலை அறவண அடிகளின் அனுமதி பெற்றுத் தமிழாக்கம் செய்து வெளியிடுகிறேன்! தமிழ் கூறும் நல்லுலகம் இதனை ஏற்குமென நம்புகிறேன்! பௌத்தநெறியைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு, இது ஒரு சிறந்த சரியான வழிகாட்டியாகும் என்பதில் ஐயமில்லை.

இந்நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிட அனுமதியளித்த அறவண அடிகள் சிராவஸ்தி தம்மிகா பாந்தே அவர்களுக்கும், இம்மொழி பெயர்ப்பிலிருந்த எழுத்துப் பிழைகளைத் திருத்தி இந்நூலை வெளியிட நல்வழிகாட்டிய ஆசான், புலவர் திரு தி. இராசகோபாலன், இந்நூலின் அச்சுப் பிழை திருத்திய புலவர் வெற்றியழகன் அவர்களுக்கும், தமிழகத்தில் ஏழை எளிய மக்களிடையே பௌத்த நெறியைப் பரப்பிய அயோத்தி தாசப்பண்டிதர், தந்தை பெரியார், இருபதாம் நூற்றாண்டில் பௌத்த சமயத்துக்குப் புத்துயிரளித்த, இக்கால அசோகச் சக்ரவர்த்தி, போதிசத்துவர் பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஆகியோர் பொற்பாத கமலங்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்

அன்புடன்,

தி. சுகுணன்

சங்கமித்ரா,

13, 43/3, நெல்வயல் சாலை,

பெரம்பூர், சென்னை-600011

05-09-1991

இரண்டாம் இணையதளப் பதிப்பு

பௌத்த அறிமுக நூட்களில் ஏதேனும் ஒன்றைத் தமிழாக்கம் செய்யலாம் என்று எண்ணிய போது Good Question Good Answer என்ற நூல் ஏற்கனவே தமிழாக்கம் செய்யப்பட்டிருந்ததை அறிய வந்தேன். அப்போது நூலாசிரியர் வணக்கத்துக்குரிய சிராவஸ்தி தம்மிகா பாந்தே அவர்களிடம் தொடர்புகொண்டேன். அவர் சென்னையைச் சேர்ந்த திரு. தி. சுகுணன் அவர்கள் மொழிபெயர்த்த அவருடை 'புத்த வந்தனா' என்ற மற்றொரு நூலை எனக்கு அனுப்பி வைத்தார். அந்த நூலில் குறிப்பிட்டிருந்த முகவரியைக் கொண்டு இந்த ஆண்டு ஜூன் திங்களில் சென்னை சென்றிருந்த போது திரு தி. சுகுணன் அவர்களைச் சந்தித்தேன். அவருடை ஆசியுடனும், அனுமதியுடனும் 'சிறந்த வினா சிறந்த விடை' என்ற நூலை இணையதளத்தில் வெளியிட முற்பட்டேன். 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதற் பதிப்பிற்குப் பின் சில புதிய கேள்விகளும், பல புதியஅதிகாரங்களும் நூலாசிரியரால் சேர்க்கப் பட்டிருந்ததால் வணக்கத்துக்குரிய சிராவஸ்தி தம்மிகா பாந்தே அவர்கள் அனுமதியோடு அவைகளையும் மொழிபெயர்த்து இணைத்திருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த வணக்கத்துக்குரிய சிராவஸ்தி தம்மிகா பாந்தே அவர்கள் தற்போது சிங்கப்பூரில் வாழ்கிறார். சிங்கப்பூரில் வாழும் மக்கள் கேட்ட பல்வேறு தரப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ‘Good Question Good Answer’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. இதுவரை இந்த நூல் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதே நூலின் சிறப்பைத் தெற்றென விளக்கும்.

இந்தப் பதிப்பில் பிழை திருத்தம் செய்து உதவிய ஈரோட்டைச் சார்ந்த மரியாதைக்குரிய எனது தந்தையார் திரு. பா. கா. இளங்கோ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் மிகச் சிறப்புற்றிருந்த பௌத்தம் மீண்டும் தழைத்தோங்கவும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பௌத்தம் மீண்டும் அறிமுகமாகிச் செழிப்புற்று வளரவும் இந்த இணையதளப் பதிப்பு பயனுள்ளதாக அமையுமென நம்புகிறேன்.

அன்புடன்,

பா. இ. அரசு

டொரண்டோ, கனடா

30-09-2012

arasutor@hotmail.com

http://www.bautham.net/