தினசரி வாழ்க்கை
தியானம் செய்வது எப்படி? முகப்பு
தியானம் செய்வது எப்படி?
புதிதாகத் தியானப் பயிற்சி தொடங்குவோருக்கு அமைதிக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டி
யுத்ததம்மோ பிக்கு
How To Meditate:
A Beginner's Guide to Peace
Yuttadhammo Bhikkhu
அதிகாரம் ஆறு: தினசரி வாழ்க்கை
Chapter Six: Daily Life
முந்தைய அத்தியாயங்களில் தியானம் செய்வதற்கான அடிப்படை வழிமுறைகள் அனைத்தும் முழுமையாக விவரிக்கப் பட்டுள்ளன. எதார்த்தத்தை உள்ளபடி அறிந்து கொள்ள உதவும் மார்க்கத்தின் வழி செல்ல புதிதாகத் தியானிப்பவருக்குத் தேவையான போதனைகள் முன் அத்தியாயங்களில் போதுமான அளவில் விளக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைசி அத்தியாயத்தில் தியானப் பயிற்சியைத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்த உதவும் சில வழிகளை நான் விவரிக்கிறேன். அதாவது சம்பிரதாயப்படி அமர்ந்து தியானம் செய்ய முடியாத நேரத்திலும் ஓரளவு அடிப்படைக் கடைப்பிடியுடன் தெளிவான நல் அறிநிலையோடு தொடர்ந்து எப்படி இருப்பது என்பதை இப்போது பார்ப்போம்.
முதலில் மனத்தெளிவுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைப் பற்றி விவாதிப்போம்; தியானம் செய்வதனால் தேவையான நல்ல விளைவுகள் நிகழ வேண்டுமென்றால் நாம் பயனற்ற சில செயல்களைத் தவிர்த்து விலக்க வேண்டும்.
முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டபடி, "தியானம்" என்ற வார்த்தையை "மருந்து" என்ற வார்த்தையோடு ஒப்பிடலாம். உடலுக்கு மருந்து எப்படித் தேவையோ அது போலவே மனத்துக்குத் தியானம் தேவை. மருந்து எடுத்துக் கொள்ளும்போது, சில உணவு வகைகளை நாம் தவிர்த்து விடுகிறோம்; மருந்தின் நற்குணங்களைச் செயலிழக்கச் செய்யும் பொருட்களையும், ஏன் மருந்தோடு சேர்த்து எடுக்கும் போது மருந்தையே விஷமாக மாற்றக் கூடிய பொருட்களையும் நாம் தவிர்த்துவிட வேண்டும். அதுபோலத் தியானம் செய்யும் போதும் சில நடவடிக்கைகள், மனத்தைக் கலங்கச் செய்யும் தன்மை கொண்டவையாக இருப்பின் அவை தியானத்தின் பயனைச் செயலற்றதாக ஆக்கிவிடக் கூடும். அல்லது தியானம் செய்வதின் நோக்கத்தையே தவறாகப் புரிந்து கொண்டு திறமையான மனநிலைகளை உண்டாக்குவதற்குப் பதிலாக திறமையற்ற தன்மைகளை அதிகரிக்கக் கூடிய சில நடவடிக்கைகளும் உள்ளன.
அவா, வெறுப்பு, மாயம் ஆகியவற்றைக் களைவதன் மூலம் துக்கம் இல்லாமல் தெளிவு பெறவும், வாய்மையை உணர்ந்து கொள்ளவும் நாம் தியானம் செய்கிறோம். மன மாசுகளைத் தூண்டும் உடலாலும், மொழியாலும் செய்யும் செயல்கள் சில உள்ளன. இவை தியானப் பயிற்சிக்கு உகந்த செயல்கள் அல்ல; நாம் விரும்பும் விளைவுக்கு எதிர் விளைவை ஏற்படுத்தக் கூடியவை அவை. தூய்மையை வளர்ப்பதற்குப் பதிலாக மாசுகளை வளர்ப்பவை. இப்பழக்கங்களைத் தொடர்ந்து செய்ய விரும்பும் தியானிப்போர் தங்கள் பயிற்சியில் பெரும் இடையூ றுகளைச் சந்திப்பார்கள். தியானப் பயிற்சிக்கும் தங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் தடையாக உள்ள பழக்க வழக்கங்களை ஒதுக்கிவிட வேண்டும். மனம் தெளிவாக இருக்கவும், எதார்த்தத்தை உணர்ந்து கொள்ளவும் சில நடத்தைகளை "உட்கொள்வதைத்" (ஏற்றுக் கொள்வதைத்) தவிர்க்க வேண்டும்.
ஐந்து வகையான நடத்தைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இயல்பிலேயே ஆரோக்யமற்ற தன்மைகளைக் கொண்டவை: [1]
1. எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்.
நமது நலனைப் போற்றிக் காக்க வேண்டு மென்றால், நலன் என்ற கருத்தில் நாம் அக்கறை கொள்ளவேண்டும். எந்த உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்க வேண்டும் – அவை எறும்பாகவோ, கொசுவாகவோ மற்ற உயிரினமாகவோ இருக்கலாம்.
2. கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்.
நாம் மன அமைதியைக் காண வேண்டு மென்றால் அதனை மற்றவருக்கும் தர வேண்டும்; அனைவருக்கும் தேவையான பாதுகாப்பினை அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்வதால் பாதுகாப்பற்ற உணர்வை அவர்கள் மத்தியில் உண்டாக்குகிறோம். மேலும் நமது கெட்ட பழக்கங்களிடமிருந்து விடுபட வேண்டுமென்றால், ஆசைகளை - பிறர் பொருட்களை எடுக்கக் கூடாது என்ற அளவிற்கு – கட்டுப் படுத்த வேண்டும்.
3. தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்.
விபசாரம் செய்வதைத் தவிர்த்தல். பிறன் மனை நோக்காதிருத்தல், அவை ஆன்மீகத்தைக் கெடுக்கும் முறையற்ற பாலியல் நடத்தைகள். மனத்தில் துன்பத்தையும், துக்கத்தையும் விளைவிக்கக் கூடியவை.
4. தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்;
(பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்) வாய்மையை உணர வேண்டுமானால் பொய்மையைத் தவிர்க்க வேண்டும்; தெரிந்தே ஒருவரை வாய்மையிலிருந்து விலகிச்செல்ல வைப்பது, அவர்களுக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லதல்ல. அது தியானத்தின் நோக்கத்திலிருந்து நம்மைத் தொலைதூரம் விலக வைக்கும்.
5. போதைப் பொருட்கள் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல்.
போதையளிக்கும் எப்பொருளும் மனத்தைக் குழப்பிக் கலங்கச் செய்யும். இயற்கையில் தெளிவாக உள்ள மனத்தை, எதிர்மறையான நிலைக்கு மாற்றி விடும். இப்பழக்கம் தியானத்தின் நோக்கத்திற்கு மாறானது.
இந்த நடவடிக்கைகளிடமிருந்து முழுமையாக விடுபட்டால் தான் தியானப் பயிற்சியில் நாம் வெற்றிபெற முடியும். ஏனென்றால் அவை ஆரோக்கியமற்ற தன்மையுடையவை. மனத்தின் மீது தீய பாதிப்புககளை உண்டாக்குபவை.
மேலும் தியானப் பயிற்சிக்கு இடையூறாக இருக்கும் வேறு சில நடவடிக்கைகளையும் சற்று நிதானப் படுத்திக் கொள்வது நல்லது. இவை தனிப்பட்ட முறையில் திறமையற்ற செயல்கள் என்று கூறமுடியாதெனினும் அவற்றில் மிதமிஞ்சி ஈடுபட்டால் மனத் தெளிவையும் தியானப் பயிற்சியில் கிடைக்கும் பலனையும் பாதிக்கூடும். [2]
உணவு சம்பந்தப்பட்டதும் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை தான். தியானப்பயிற்சியில் உண்மையாகவே முன்னேற வேண்டுமென்றால் உணவில் கவனம் செலுத்த வேண்டும் - மிக அதிகமாகச் சாப்பிடாமலும் மிகக் குறைவாகச் சாப்பிடாமலும் இருக்க வேண்டும். உணவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் தியானத்தின் முன்னேற்றம் தடைப்பட்டு விடும். மனக்குழப்பம் ஏற்படுவதுமன்றி உடலிலும் மனத்திலும் சோம்பலை உண்டாக்கும். உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடவேண்டுமேயன்றிச் சாப்பிடுவதற்காக உயிர் வாழக் கூடாது. தீவிர தியான முகாம்களின்போது தியானிப்போர் ஒரு வே ளை மட்டுமே உண்பார்கள். அப்படியிருந்தும் அவர்கள் உடல் நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை; சொல்லப் போனால் மிதமாக உண்பதால் மனத்தெளிவு உண்டாவது மட்டுமின்றி உணவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் குறைகிறது.
தியானப்பயிற்சியைப் பாதிக்கும் மற்றொரு நடத்தை, திரைப்படங்கள் பார்ப்பது, இசை கேட்பது போன்ற பொழுது போக்காகும். இந்த நடவடிக்கைகளில் இயற்கையாக ஆரோக்கிய மற்ற தன்மை இல்லையென்றாலும், அவற்றில் மிதமிஞ்சி ஈடுபட்டால் அவற்றுக்கு அடிமையாகி அதுவே துர்ப்பழக்கமாகி விடும்.
துர்ப்பழக்கம் (addiction) என்பது ஒரு விதத்தில் ஒருவகையான போதைத்தன்மையானது என்றே கூறலாம். ஏனெனில் அது இராசயனப் பொருட்களின் செயற்றொடர் சம்பந்தப்பட்டதாதலின் மூளையில் நல்ல எண்ணங்கள் தோன்றுவதையும், தெளிவான மனத்தையும் பாதிக்கும். பொழுது போக்குகளில் வரும் இன்பம் கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும். மேலும் அது திருப்தியற்றதாகவே இருக்கும். துர்ப்பழக்கங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்வதுமன்றி அடுத்த பிறப்புக்கும் நீடிக்கும். இந்த வாழ்க்கையில் கிடைக்கும் கொஞ்ச காலத்தையும் வீணாக்காமல் அக்கறை கொண்டு தியானிப்பவர் நீண்ட கால மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் வழி வகுக்காத பொருளற்ற நடத்தைகளில் ஈடுபடாமல் அமைதியையும், திருப்தியையும் பேணவே விரும்ப வேண்டும். உண்மையான மகிழ்ச்சியைக் காண வேண்டுமென்றால் பொழுதுபோக்குகளில் மிதமிஞ்சி ஈடுபடக் கூடாது. இணையதளத்தில் (Internet) பிறருடன் நீண்ட நேரம் உறையாடுவதைத் தவிர்த்து மிதமாக ஈடுபட வேண்டும்.
நாம் அளவோடு ஈடுபட வேண்டிய மூன்றாவது நடவடிக்கை தூக்கம் சம்பந்தப்பட்டது. தூக்கமும் நாம் அக்கறை செலுத்தாமலே அடிமைப் படுத்தும் ஒருவிதத் துர்ப்பழக்கமே. எதார்த்தத்திலிருந்து தப்பிக்க தூக்கத்தோடு பற்றுக் கொண்டு விடுகிறோம் என்பதைப் பலரும் அறிவதில்லை. வேறு சிலர் போதுமான தூக்கம் கிடைக்கவில்லையே என்ற கவலையின் காரணமாகவே தூக்கமின்மையால் பாதிக்கப் படுகின்றனர். இதனால் மேலும் மனவழுத்தம் பெற்று தூங்குவதற்குச் சிரமப் படுகின்றனர்.
தியானப்பயிற்சியினால் மனம் சாந்த மடைவதால் தூங்க வேண்டிய நேரமும் குறைவதைக் கவனிக்கலாம். தியானம் செய்வோருக்குத் தூக்கமின்மை என்பது ஒரு பிரச்சனையாகத் தெரிவதில்லை. ஏனென்றால் படுத்திருக்கும் உடல் நிலையிலும் நாம் தியானம் செய்யலாம். அதனால் போதுமான காலம் தூங்கவில்லையே என்ற மனத்தாக்கங் களிலிருந்தும் விடுபடலாம். தூங்குவதற்குக் கஷ்டப்படுவோர் தங்கள் வயிற்றுப் பகுதி உயர்ந்து தாழ்வதைக் கவனிக்கப் பயின்று கொள்ளலாம். இரவு முழுவதும் கூட "உயர்கிறது", "தாழ்கிறது" என்று நினைவு படுத்திக் கொண்டு பயிற்சி செய்யலாம். அப்படியே தூங்க முடியா விட்டாலும் (தியானிக்கும் போது மனம் அமைதியாக இருப்பதால் அவர்கள் தூக்கம் குறைவதால் ஏற்படும் பிரச்சனைகள் இருக்காது) இரவு முழுவதும் தூங்கியவர் இளைப்பாரியது போலவே இரவு முழுவதும் பயிற்சி செய்தவர்களும் களைப்பின்றி இருப்பதைக் காணலாம்.
இறுதியாக, தியானப் பயிற்சியினால் உண்மையிலேயே பலன்காண விரும்புவோர் சில காலக்கட்டத்திலாவது முழுமையாகப் பிரமச்சாரிய வாழ்வைக் கடைப் பிடிப்பது நல்லது. தவறான பாலியல் உறவுகளைத் தவிர்ப்பதுமட்டுமின்றி ஒரு சில காலவரையிலாவது பாலியல் உறவுகளை முற்றாக விலக்குவது நல்லது. ஏனென்றால் பாலியல் நடத்தைகள் போதை தருவன என்பதால் மனத்தெளிவிற்கும் அமைதிக்கும் அவை தடங்கலாக இருக்கும்.
மனத்தெளிவிற்குத் தடங்கலாக உள்ள செயல்களை ஒதுக்கிய பின்னர் தியானிப்பதனால் தோன்றும் அறிநிலையைத் தினசரி வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ளலாம். இரண்டு வழிகளில் தினசரி அனுபவங்களோடு நாம் தியானத்தை மேற்கொள்ளலாம். அவற்றை ஒருசேரப் பயில வேண்டும். அதனைக் கீழே விளக்குவோம்.
முதலில் நாம் கவனத்தை உடல் மீது செலுத்த வேண்டும். ஏனெனில் அதுவே நமது அனுபவத்தில் தெளிவாகத் தோன்றுவது. முறைப்படி செய்யும் தியானத்தைப்போல, உடல் எப்போதும் நாம் நேரடியாகக் கவனிப்பதற்கு கிடைக்கக் கூடியதாக, தினசரி வாழ்வில் எதார்த்தத்தைத் தெளிவாகக் கவனிக்க ஒரு பொருத்தமான வழியாக அமைகிறது. நடப்பது, நிற்பது, உட்காருவது, படுத்திருப்பது ஆகிய நான்கு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் எப்போதும் இருப்பதால் உடலின் நிலையைத் தியானப் பொருளாகப் பயன்படுத்தி மனத்திற்குத் தெளிவை உண்டாக்கலாம்.
உதாரணமாக, நடக்கும் போது நடப்பதை "நடை, நடை, நடை, நடை" அல்லது "வலது, இடது, வலது, இடது" என்று பாத அசைவுக்கு பொருத்தமாகக் கவனித்துக் கொள்ளலாம். அசையாமல் நிற்கும் போது நிற்கும் நிலையைக் கவனித்து "நிற்பது, நிற்பது" எனலாம்; உட்காரும் போது, "உட்கார், உட்கார்" என்றும் படுக்கும் போது "படுத்திரு, படுத்திரு" என்றும் வார்த்தைகளால் வருநித்துக் கொள்ளலாம். இவ்வாறு சம்பிரதாயப்படி தியானிக்காத நேரத்திலும் மனத்தெளிவை வளர்த்துக் கொள்ள முடியும்.
மேலும் இதே முறையை உடலின் எந்த ஒரு சிறு அசைவிற்கும் பொருந்த வைக்கலாம் – உதாரணமாக, கை, கால்களை மடக்கும் போது அல்லது நீட்டும் போது அதனை "மடக்குதல்" அல்லது "நீட்டுதல்" என்று கவனிக்கலாம். அவற்றை அசைக்கும் போது "அசைவு" என்றும் திரும்பும் போது "திரும்புதல்" என்றும் சொல்லிக் கொள்ளலாம். இவ்வாறு எந்த நடவடிக்கையும் ஒரு தியானப் பயிற்சியாக்கிக் கொள்ளலாம்; பல் துலக்கும் போது "துலக்குதல்" என்றும், உணவை மென்று விழுங்கும் போது, "மெல்லுதல், மெல்லுதல்", "விழுங்குதல், விழுங்குதல்" .. என்றும் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
சமைக்கும் போதும், வீட்டைச் சுத்தப்படுத்தும் போதும், உடல் பயிற்சி செய்யும் போதும், குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும், ஏன் கழிவறையிலும் நமது உடல் அசைவுகளை உண்ணிப்பாகக் கவனிக்கலாம். இவ்வாறு எதார்த்தத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இதுவே தினசரி வாழ்வில் தியானப்பயிற்சியை இணைக்கும் முதல் வழியாகும்.
இரண்டாம் வழி - பார்வை, கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் பரிசித்தல் ஆகிய புலன்களைத் தெரிந்து கொள்வதாகும். பொதுவாகப் புலன்களால் உணர்வனவற்றின் மீது நமக்குப் பற்றோ, வெறுப்போ தோன்றும்; இதுவே ஏக்கமும் வெறுப்பும் உண்டாகக் காரணமாகிறது. நமது விருப்பத்திற்கு மாறான அனுபவம் ஏற்படும் போது துக்கம் உண்டாகிறது. மனத்தைத் தெளிவாகவும் விருப்பு, வெறுப்பின்றி வைத்திருக்கப் புலன் அனுபவம் தோன்றும் அதே நேரத்தில் அதைத் தெளிவாகப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மனம் அதன் பழக்க வழக்கத்தின்படி அந்த அனுபவத்தின் மீது தீர்ப்பளிக்க ("இன்பம்", "துன்பம்", "நான்", "எனது" என்று) விடக்கூடாது. பார்வையின் போது அதைப் பார்வை என்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். "பார்வை, பார்வை" என்று நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு சப்தத்தைக் கேட்கும் போது "கேட்டல், கேட்டல்" என்றும், பிடித்த பிடிக்காத வாசனைகளை "நுகர்வு, நுகர்வு" என்றும், உணவு, பாணங்களைச் சுவைக்கும் போது அவற்றோடு பற்றுக் கொள்ளாமல் அல்லது முகம் சுளிக்காமல் அவற்றை "சுவைப்பது, சுவைப்பது" என்றும், உடலில் உணர்ச்சிகள் ஏற்படும் போது - அது சூடான அல்லது குளிரான உணர்ச்சியாக இருக்கலாம், கெட்டியான அல்லது மென்மையானதாக இருக்கலாம் - அவற்றையெல்லாம் "பரிசம், பரிசம்" அல்லது "சூடு", "குளிர்ச்சி" என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பயிற்சி செய்வதால் உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு எதார்த்த அனுபவங்களை "நல்லது", "கெட்டது","நான்", "எனது", "நாம்", "அவர்கள்" என்று தீர்ப்பளிப்பதில்லை. இதன் காரணமாக உண்மையான அமைதியும், மகிழ்ச்சியும் எந்த நேரத்திலும் எல்லாச் சூழ்நிலையிலும் துக்கத்திலிருந்து விடுதலையும் கிடைக்கிறது. இவ்வாறு எதார்த்தத்தின் உண்மை நிலையை அறிவோர் மனம், புலன் பொருட்களோடு எதிர் செயற்பாட்டை (reaction) உண்டாக்காமல் அவற்றை உள்ளது உள்ளபடி கவனித்து அவற்றோடு பற்றோ, வெறுப்போ உருவாக்குவதில்லை, இது பறந்து செல்லும் ஒரு பறவைக்குத் தனது கால் பற்றிக் கொள்ள அமரும் இடம் எதுவும் தேவைப்படாதது போல.
சம்பிரதாயப்படி (formal) தியானிக்காத நேரத்திலும் தினசரி வாழ்க்கையோடு தியானத்தை இணைக்க இவையே அடிப்படை வழிகளாகும். இந்த இரண்டு வழிகள் மட்டுமின்றி முதல் அத்தியாத்தில் விளக்கியபடி மற்ற செயல்களையும் - வலி, எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகள் - ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். இந்த அத்தியாயத்தில் குறிபிடப்பட்ட முறைகளைத் தியானத்தை மேலும் தொடர நம்மையும் எதார்த்தத்தையும் அறிந்து கொள்ளும் இதர வழிகள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
தியானம் செய்ய நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளுக்கான அடிப்படைப் போதனை இத்தோடு நிறைவு பெறுகிறது. எந்தப் புத்தகத்தாலும் அதில் எவ்வளவு தான் விளக்கம் தரப்பட்டிருந்தாலும் நேர்மையாகவும் ஆர்வத்தோடும் நாமே பயின்று, நமக்கு நாமே கற்பித்துக் கொள்வதற்கு ஈடாக அதனைக் கூற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு தான் மேன்மையான புத்தகங்களை மனப்பாடமாக ஒப்புவித்தாலும் நாமே பயிற்சி செய்யவில்லை யென்றால் மற்றவர் மந்தையைப் பாதுகாக்கும் இடையனைவிட நம்மை மேன்மையானவராகக் கருத முடியாது.
ஆனால், இது போன்ற புத்தகத்தின் அடிப்படை கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்வதற்கான முறையைப் போதுமான அளவு அறிந்து கொண்ட பின்னர் அதன்படி பயின்றோமென்றால், கணக்கற்றோர் அடைந்த அதே விளைவுகளை நாமும் பெற முடியும். அதுவே - அமைதி, மகிழ்ச்சி, துக்கத்திலிருந்து உண்மையான விடுதலை.
தியானிப்பது எப்படி என்ற இந்தச் சுருக்கமான அறிமுகத்தைப் படிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட நேரத்திற்கு நன்றி. இந்தப் போதனை உங்களுக்கும் நீங்கள் தொடர்பு கொள்ளும் மற்றவர்களுக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், துக்கத்திடமிருந்து விடுதலையும் தரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
இந்தப் பக்கங்களில் எதேனும் மேல்விவரங்கள் தேவைப் பட்டாலோ, எதேனும் தெளிவாக இல்லா விட்டாலோ, தியானப்பயிற்சி சம்பந்தமாக மேலும் விளக்கங்கள் தேவைப் பட்டாலோ கீழ்கண்ட இணையதள முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
http://yuttadhammo.sirimangalo.org/
விளக்கம்:
[1] புத்தரின் அடிப்படை ஐந்து சீல ஒழுக்க நெறிகளுக்கு ஒப்பானவை.
[2] பௌத்த தியானிப்போர் விஷேட நாட்களின் போதும் தீவிர தியான முகாம்களின் போதும் மேற்கொள்ளும் எட்டு விதிமுறைகளாகும்.
* * *