இந்திரிய பாவன சுத்தம்: புலனறிவுகளை வளர்ப்பது எப்படி?
(ஒரு பகுதி மட்டும், சுருக்கம்)
பாலி மொழியிலிருந்தது மொழி பெயர்த்தவர் தணிசாரோ பிக்கு
Indriya-bhavana Sutta: The Development of the Faculties
translated from the Pali by Thanissaro Bhikkhu
indriya. Organ of sense; அறிகருவியாகிய புலன் (பொறி)
உணர்தற்குரிய மெய், வாய், கண், மூக்கு, செவி, சிந்தை என்னும் ஆறு பொறிகள். (பௌத்தத்தில் சிந்தையும் ஒரு பொறியாகக் கருதப்படுகிறது)
ஒரு முறை பகவர் கஜ்ஜன்களரின் மத்தியில் மூங்கில் காட்டில் எழுந்தருளியிருந்தார். அப்போது பிராமணர் பராசிரியர் என்பவரின் மாணவரான உத்திரர் என்ற பிராமண இளைஞர், புத்தரைக் காண அங்கு சென்றார். பிறகு அவரிடம் வாழ்த்துப் பரிமாற்றஞ் செய்து கொண்டு ஒருபுறமாக அமர்ந்தார்.
அப்போது புத்தர் அவரிடம்: 'உத்திரரே, பிராமணர் பராசிரியர் புலனறிவுகளை வளர்ப்பது பற்றி அறிவுறுத்துகிறாரா?' என்று கேட்டார்.
'ஆம், கௌதமரே, அறிவுறுத்துகிறார்.'
'அவர் எவ்வாறு அறிவுறுத்துகிறார்?'
' ஒருவர் உருவங்களைக் கண்களைக் கொண்டு காணாமல் இருக்க வேண்டும் என்றும் அல்லது சப்தங்களைக் காது கொடுத்துக் கேட்காமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (ஆழ்ந்த தியான நிலையில் இருக்கும் போது உருவங்களோ, சப்தங்களோ உணரப்படுவதில்லை) .
'அப்படியென்றால் உத்திரரே, பராசிரியர் சொற்படி கண்பார்வையற்றவர் புலனறிவுகளை நன்கு வளர்த்துக் கொண்டவராகவும், காது கேளாதவர் புலனறிவுகளை நன்கு வளர்த்துக் கொண்டவராகவும் இருப்பார்கள் அல்லவா? ஏனென்றால் கண் தெரியாதவர் உருவங்களைக் காண்பதில்லையே? காது கேட்காதவர் சப்தங்களைக் கேட்பதில்லையே?" என்றார் புத்தர்.
இதைக் கேட்டு மனம் குழம்பிப்போன பிராமண இளைஞர் உத்திரர் அமைதியாக இருந்தார். தோள்கள் தாழ்ந்து, தலை கவிழ்ந்து, ஏதோ யோசனையில் ஆழ்ந்தவாறு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திகைத்தார். பகவர் - உத்திரர், பதில் கூறாமல், மனக்குழப்பத்துடன் இருந்ததைக் கண்டு - ஆனந்தரிடம், "ஆனந்தா, பிராமணர் பராசிரியர் தன் மாணவர்களுக்கு, புலனறிவுகளை வளர்ப்பது பற்றிக் கற்பிக்கும் முறை ஒன்று, ஆனால் மேன்மையானவரின் ஒழுக்கத்தில் புலனறிவுகளை நிகரில்லா வழியில் வளர்க்கும் வழியோ முற்றிலும் மாறுபட்ட வேறொன்றாகும்”.என்று கூறினார்.
ஆனந்தர் பகவரிடம் "இதுவே சரியான நேரம் அண்ணலே! பகவரின் நெறியில் புலனறிவுகளை வளர்த்துக் கொள்ளச் சரியான வழி எது என்பதை விளக்க இதுவே சரியான நேரம். ததாகதரே. பகவர் சொல்வதைத் துறவிகள் நினைவில் வைத்துக் கொள்வார்கள்."
"அப்படியென்றால் ஆனந்தரே கவனமாகக் கேளுங்கள். நான் கூறுகிறேன்.
"அப்படியே ஆகட்டும், பகவரே," என்று பதிலலித்தார் ஆனந்தர்.
பகவர் கூறினார்: "மேன்மையானவரின் நெறியில் புலனறிவை வளர்ப்பது எப்படி ஆனந்தா? உருவங்களைக் கண்களால் பார்க்கும் போது ஒருவருக்குப் பிடித்த அல்லது பிடிக்காத அல்லது பிடித்தும் பிடிக்காததுமான உணர்ச்சி தோன்றுகிறது. அவர் ஊகிப்பது: 'என்னுள் பிடித்த உணர்ச்சி தோன்றியுள்ளது; என்னுள் பிடிக்காத உணர்ச்சி தோன்றியுள்ளது, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றியுள்ளன’ இப்படிப் பலநிகழ்வுகளின் கூட்டுக் கலவை (கண் என்ற உறுப்பு, கண்ட பொருள் போன்றவற்றின் கூட்டுக் கலவை) தோன்றியுள்ளது. இது அருவருப்பானது. (ஏனென்றால் இது மனத்தை உறுத்துகின்றது.) காரண காரியத் தொடர்பினால் உண்டானது. ஆனால் நடுநிலையான உணர்வோ அமைதியானது, உன்னதமானது.' இவ்வாறு நினைப்பதால் முன்னர் தோன்றிய பிடித்த உணர்ச்சி… பிடிக்காத உணர்ச்சி… பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதனிடத்தில் நடுநிலையான ஓர் உணர்வே இடம் பிடிக்கிறது.
சான்றாக நல்ல கண்பார்வை கொண்டவன் கண்ணை மூடிய பின் திறப்பது போலவும், திறந்த பின் மூடுவது போலவும், மாறி மாறி விரைவாகத் திறக்கும்போது சுலபமாக நமக்கு முன்னர் தோன்றிய பிடித்த உணர்ச்சி, பிடிக்காத உணர்ச்சி, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகளாகிய கலவை மறைந்து அதன் இடத்தில் நடுநிலையான ஒரே உணர்வு தோன்றுகிறது. மேன்மையானவரின் அறநெறியில் கண்கள் காணும் உருவங்களைப் பொருத்தவரையில் இதுவே புலனறிவை வளர்க்கும் நிகரில்லாத வழியாகும்.
(விளக்கம்: பொதுவாக, பிடித்த உணர்ச்சி தோன்றினால் அதனைத் தொடர்ந்து கற்பனைக் கோட்டை கட்டுவதும், பிடிக்காத உணர்ச்சி தோன்றினால் வெறுப்பு உண்டாவதும், பிடித்த மற்றும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றினால் குழப்பமடைவதுமே உடனடி எதிர்ச்செயலாக இருக்கும். புத்தர் இவை மூன்றும் மனத்தில் கிளர்ச்சியை உண்டாக்குவன என்பதை உணர்ந்து அதனிடத்தில் நடுநிலையான உணர்வைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவூட்டுகிறார்.)
"மேலும், ஓசைகளைக் காதுகொடுத்துக் கேட்கும்போது ஒருவருக்குப் பிடித்த அல்லது பிடிக்காத அல்லது பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவர் ஊகிப்பது: 'என்னுள் பிடித்த உணர்ச்சி தோன்றியுள்ளது, என்னுள் பிடிக்காத உணர்ச்சி தோன்றியுள்ளது, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றியுள்ளன. பலவற்றின் கூட்டு கலவையான ஓசை (காது என்ற உறுப்பு, கேட்ட ஓசை போன்றவற்றின் கூட்டுக் கலவை) தோன்றியுள்ளது. இது அருவருப்பானது. காரண காரியத் தொடர்பினால் உண்டானது. ஆனால் நடுநிலையுள்ள உணர்வோ அமைதியானது, உன்னதமானது.' இவ்வாறு நினைப்பதால் தோன்றிய பிடித்த உணர்ச்சி.. பிடிக்காத உணர்ச்சி.. பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதனிடத்தில் நடுநிலையுள்ள ஒரு பொது உணர்வே நிலை கொள்கிறது.
சான்றாக உடல் வலிமை உள்ள ஒருவன் கையை நொடிக்கும் நேர அளவிலேயே மாறிமாறிச் செய்யும் போது, அவனுக்குள் தோன்றிய பிடித்த உணர்ச்சி, பிடிக்காத உணர்ச்சி, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதன் இடத்தில் நடுநிலையான ஒரு உணர்வு தோன்றுகிறது. மேன்மையானவரின் அறநெறியில் காதுகள் கேட்கும் ஓசைகளைப் பொருத்தவரையில் இதுவே புலனறிவை வளர்க்கும் நிகரில்லா வழியாகும்.
"மேலும், மூக்கினால் வாசனையை நுகரும்போது ஒருவருக்குப் பிடித்த அல்லது பிடிக்காத அல்லது பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவர் ஊகிப்பது: 'என்னுள் பிடித்த உணர்ச்சி தோன்றியுள்ளது, என்னுள் பிடிக்காத உணர்ச்சி தோன்றியுள்ளது, ... பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றியுள்ளன. இப்படிப் பலவற்றின் கூட்டு கலவையினால் இது போன்ற உணர்வுகள் தோன்றியுள்ளன. இது அரு வருப்பானது. காரண காரியத் தொடர்பினால் உண்டானது. ஆனால் நடுநிலைமையான உணர்வோ அமைதியானது, உன்னதமானது. 'இவ்வாறு நினைப்பதால் நம்முள் தோன்றிய பிடித்த உணர்ச்சி.. பிடிக்காத உணர்ச்சி.. பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதனிடத்தில் ஒரு நடுநிலையான உணர்வே நிலை கொள்கிறது.
எடுத்துக்காட்டாக இலேசாகச் சாய்ந்திருக்கும் தாமரை இலை மேல் நீர்த்துளிகள் எப்படி அதன்மேல் விழுந்ததும் புரண்டோடி விடுகின்றனவோ, அதே போன்ற வேகத்தில், விரைவாக, சுலபமாக நமக்குத் தோன்றிய பிடித்த உணர்ச்சி, பிடிக்காத உணர்ச்சி, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதனிடத்தில் நடுநிலையான ஒரு உணர்வு உருவாகிறது. மேன்மையானவரின் அறநெறியில் வாசனைகள் நுகரும் மூக்கைப் பொருத்தவரையில் இதுவே புலனறிவை வளர்க்கும் நிகரில்லா வழியாகும்.
"மேலும், நாவால் சுவைக்கும் போது ஒருவருக்கு பிடித்த அல்லது பிடிக்காத அல்லது பிடித்தும் பிடிக்காத சுவை உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவர் ஊகிப்பது: 'என்னுள் பிடித்த உணர்ச்சி தோன்றியுள்ளது, என்னுள் பிடிக்காத உணர்ச்சி தோன்றியுள்ளது, ... பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றியுள்ளன. பலசுவைகளின் கூட்டுக் கலவை (நாக்கு என்ற உறுப்பினால் உணரப்படும், சுவையின் கூட்டுக் கலவை) தோன்றியுள்ளன. இது அரு வருப்பானது. காரண காரியத் தொடர்பினால் உண்டானது. ஆனால் நடுநிலையான ஒரு உணர்வே அமைதியானது, உன்னதமானது.' இவ்வாறு நினைப்பதால் முன்னர் தோன்றிய பிடித்த உணர்ச்சி.. பிடிக்காத உணர்ச்சி.. பிடித்தும் பிடிக்காத மாறுபட்ட உணர்ச்சிகள் மறைந்து அதனிடத்தில் நடுநிலையான ஒரு உணர்வே இடம் பிடிக்கிறது.
சான்றாக வலிமையுள்ள ஒருவன் தன் நாக்கின் நுனுயில் உள்ள எச்சிலை சுலபமாகத் துப்பிவிடுவது போல, அது போன்ற வேகத்தில், விரைவாக, சுலபமாக அந்தத் தோன்றிய பிடித்த உணர்ச்சி, பிடிக்காத உணர்ச்சி, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதன் இடத்தில் நடுநிலையான ஒரு உணர்வே தோன்றுகிறது. மேன்மையானவரின் அறநெறியில் சுவைக்கும் நாவைப் பொருத்தவறையில் இதுவே புலனறிவை வளர்க்கும் நிகரில்லா வழியாகும்.
"மேலும், உடலால் பரிசிக்கும் போது ஒருவருக்கு பிடித்த அல்லது பிடிக்காத அல்லது பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவர் ஊகிப்பது 'என்னுள் பிடித்த உணர்ச்சி தோன்றியுள்ளது, என்னுள் பிடிக்காத உணர்ச்சி தோன்றியுள்ளது, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றியுள்ளன. பலவற்றின் கூட்டுக் கலவையினால் (உடல், பரிசம் போன்றவற்றின் கூட்டுக் கலவை) இவை தோன்றியுள்ளன. இது அரு வருப்பானது. காரண காரியத் தொடர்பினால் உண்டானது. ஆனால் நடுநிலையுள்ளஉணர்வே அமைதியானது, உன்னதமானது.' இவ்வாறு நினைப்பதால் நமக்கு முன்னர் தோன்றிய பிடித்த உணர்ச்சி, பிடிக்காத உணர்ச்சி, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதனிடத்தில் நடுநிலையான ஒரு உணர்வே இடம் பிடிக்கிறது.
சான்றாக வலிமையுள்ள ஒருவன் தான் மடக்கிய கையை நீட்டுவதும், நீட்டிய கையை மடக்குவதும், போன்று வேகத்தில், விரைவாக, சுலபமாகச் செய்யும்போது நம்முள் தோன்றிய பிடித்த உணர்ச்சி, பிடிக்காத உணர்ச்சி, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதன் இடத்தில் நடுநிலையான ஒரு உணர்வு தோன்றுகிறது. மேன்மையானவரின் அறநெறியில் உடல் பரிசத்தைப் பொருத்தவரையில் இதுவே புலனறிவை வளர்க்கும் நிகரில்லா வழியாகும்.
"மேலும், சிந்தை ஒரு எண்ணத்தை நினைக்கும்போது ஒருவருக்குப் பிடித்த அல்லது பிடிக்காத அல்லது பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவர் ஊகிப்பது 'என்னுள் பிடித்த உணர்ச்சி தோன்றியுள்ளது, என்னுள் பிடிக்காத உணர்ச்சி தோன்றியுள்ளது, பிடித்த மற்றும் பிடிக்காத உணர்ச்சிகள் தோன்றியுள்ளன. இப்படிப் பலவற்றின் கூட்டுக் கலவையினால் (சிந்தை, எண்ணம் போன்றவற்றின் கூட்டுக் கலவை) இவை தோன்றியுள்ளன. இது அருவருப்பானது. காரண காரியத் தொடர்பினால் உண்டானது. ஆனால் நடுநிலையுள்ள எண்ணமே அமைதியானது, உன்னதமானது.' இவ்வாறு நினைப்பதால் முன்னர் தோன்றிய பிடித்த உணர்ச்சி.. பிடிக்காத உணர்ச்சி.. பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதனிடத்தில் நடுநிலையான ஒரு உணர்வு இடம் பிடிக்கிறது.
சான்றாக வலிமையுள்ள ஒருவன் நாள் முழுவதும் சூடாக்கப்பட்ட இரும்புச் சட்டியில் ஒரு சிறு துளி தண்ணீர் விடுவதால் - அந்த நீர் மெதுவாக விழுந்தாலும் சட்டியில் பட்டவுடன் தெரித்து மறைவது போன்றே, வேகத்தில், விரைவாக, சுலபமாக முன்னர் தோன்றிய பிடித்த உணர்ச்சி, பிடிக்காத உணர்ச்சி, பிடித்தும் பிடிக்காத உணர்ச்சிகள் மறைந்து அதன் இடத்தில் நடுநிலையான ஒரு உணர்வே தோன்றுகிறது. மேன்மையானவரின் அறநெறியில் சிந்தை, எண்ணங்களைப் பொருத்தவரையில் இதுவே புலனறிவை வளர்க்கும் நிகரில்லாத வழியாகும்.
* * *