பௌத்தக் கதைகள் - பத்திரை குண்டலகேசி

பௌத்தக் கதைகள் முகப்பு

பௌத்தக் கதைகள்

மயிலை சீனி. வேங்கடசாமி

பத்திரை குண்டலகேசி

பதினாறு வயது நிரம்பிய பத்திரை என்னும் கன்னிகை, செல்வம் படைத்த சீமானுடைய மகள். இளமையும் அழகும் செல்வத்தின் செழுமையும் வாய்க்கப் பெற்ற பத்திரை, அந்த ராஜக்கிருக நகரத்துக் கன்னிப் பெண்களுள் சிறந்த அழகுள்ளவள். மேலும், பெற்றோருக்கு ஒரே மகள். வேறு மக்கள் இல்லாதபடியினாலே, தாய் தந்தையர் இவளைத் தமது உயிர் போலவும் கண்போலவும் ஆசையோடு வளர்த்து வந்தார்கள். பொருள் வளத்தினால் பெறக்கூடிய எல்லா இன்பங்களையும் பெற்று, பத்திரை மகிழ்ச்சியோடு காலங்கழித்து வந்தாள்.

ஒருநால் அந்த வீதியிலே பெரும் பரபாப்பு உண்டாயிற்று. வீடுகளில் இருந்த ஆண் பெண்களும் சிறுவர் சிறுமிகளும் வெளியில் வந்து நின்று எதையோ ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பத்திரையும் தோழிகளுடன் மாளிகையின் மாடியில் நின்று கொண்டிருந்தாள்.

சத்துருகன் என்னும் பெயருள்ள பேர்போன கள்ளன் சேவகர் கையில் அகப்பட்டுக் கொண்டான். கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட அவனைக் கொலைக்களத்திற்குக் கொண்டுபோனார்கள். இதுதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம். மக்கள் கள்ளனைப் பற்றிப் பலவாறு பேசிக் கொண்டார்கள். 'இத்தனை காலம் அகப்படாமலிருந்தவன் இப்போது அகப்பட்டுக் கொண்டான். இன்றோடு அவன் ஆயுள் முடிந்தது. எத்தனை வீடுகளைக் கொள்ளையடித்தான்! இன்றோடு இவன் தொல்லை ஒழிந்தது. பலநாள் கள்ளன் ஒரு நாளைக்கு அகப்படாமலா போவான்?' என்று பேசிக் கொண்டார்கள்.

இவ்வாறெல்லாம் தெருவில் நின்றவர் பேசிக்கொண்டிருந்தபோது, "அதோ வருகிறான்; அதோ வருகிறான்," என்று ஒரு குரல் கேட்டது. எல்லோருடைய கண்களும் அந்தப் பக்கம் திரும்பின. அரசனுடைய சேவகர் கள்ளனைக் கொலைக்களத்திற்கு அழைத்துக்கொண்டு வருகிறார்கள். அவனுடைய கைகள் பின்புறமாகப் பிணைத்துக் கட்டப்பட்டுள்ளன. உடல்வலிவும் உறுதியான தோற்றமும் உள்ள வாலிபன் இவன். வாலிப வயதின் செல்வி அவன் முகத்திலும் உடம்பிலும் காணப்படுகிறது. ஆழ்ந்த சிந்தனையோடு நடந்து வருகிறான். அவனைச் சூழ்ந்து அரச சேவகர் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டு நடக்கிறார்கள்.

"ஐயோ, பாவம்! வாலிபன், சிறு வயது. இந்த வயதில் இவனுக்கு இந்தக் கதியா ஏற்படவேண்டும். இவன் தலைவிதி இது!" என்று இவனைக் கண்டவர் பலர் பேசிக் கொண்டார்கள்.

சேவகர் சூழ்ந்து வர, பேர்போன கள்ளன் தெரு வழியே வருவதைப் பத்திரையும் பார்த்தாள். ஆம், நன்றாய்ப் பார்த்தாள். அவன் அவளைப் பார்க்கவில்லை. அவனைக் கண்ட பத்திரையின் மனத்தில் ஏதோ உணர்ச்சி உண்டாயிற்று. தன் மாளிகையைக் கடந்து போகிறவரையில் அவனை நன்றாக உற்றுப் பார்த்தாள். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்தக் கட்டழகனைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைப் பட்டாள். பிறகு ஓ என்று அலறித் தரையில் விழுந்தாள்; மூர்ச்சையடைந்தாள்; தோழிகள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். தூக்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் கிடத்தினார்கள்.

முகத்தில் குளிர்ந்த நீர் தெளித்து மெல்ல விசிறினார்கள். பத்திரை கண் திறந்து பார்த்தாள்.

"அவருக்குக் கொலைத் தண்டனையா? அதைத் தடுக்க முடியாதா?" என்று ஆவலோடு கேட்டாள்.

"ஆமாம் கொலைத் தண்டனைதான். அரசன் கட்டளையை யார் தடுக்க முடியும்?"

"அவர் உயிர் இருந்தால் என் உயிரும் இருக்கும். அவர் உயிர் போனால் என் உயிர் போய்விடும்," என்று கூறி, பிறகு "ஐயோ," என்று அலறினாள்.

இதற்குள், இச்செய்தி கேட்டு, பத்திரையின் தாயார் அவ்விடம் வந்தார். தோழியர் நடந்தவற்றை எல்லாம் சொன்னார்கள். தாய்க்குக் காரணம் விளங்கிவிட்டது. கன்னி வயதின் உணர்ச்சி இது என்பதை அறிந்தாள். பத்திரைக்கு ஏற்பட்டிருந்த மன அதிர்ச்சியைப் பலவித சிகிச்சைகளால் நீக்கினார்கள். அவள் எழுந்து உட்கார்ந்தாள். பத்திரைக்குத் திருமணம் செய்ய, தகுந்த இடத்தில் ஏற்பாடு செய்து வருவதாகவும் அவளுக்குச் சொன்னார்கள். பத்திரை வேறு ஒருவரை மனஞ் செய்துகொள்ள விரும்பவில்லை. கொலைக்கலத்துக்குச் சென்ற கள்ளனைத்தான் மணம் செய்துகொள்வேன் என்று உறுதியாகக் கூறினாள்.

"அவரையல்லாமல் வேறு ஒருவரையும் பார்க்கவும் மாட்டேன். இது உறுதி. அவர் உயிர் போய்விட்டால் என் உயிரும் போய்விடும். அவரைக் காப்பாற்றுங்கள். இல்லையானால் நானும் இறந்து விடுவேன்," என்று திட்டமாகக் கூறிவிட்டாள்.

பத்திரைக்குத் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ராஜகிருஹ நகரத்தின் சீமான் மகளுக்கு-ஒரே மகளுக்கு, திருமணம் நடக்கிறதென்றால், அதன் சிறப்பையும் வைபவத்தையும் சொல்ல வேண்டுமோ? அறுசுவை விருந்துகள், மேளதாள வாத்தியங்கள், இசைப்பாட்டுக் கச்சேரிகள், நாட்டிய அரங்கங்கள், தான தருமங்கள், முதலிய எல்லாம் குறைவில்லாமல் நடைபெற்றன. திருமணத்தின் சிறப்புக்களைப் பற்றி நகரமக்கள் வியந்து புகழ்ந்து பேசினார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பத்திரை தன் மணவாளனுடன் மகிழ்ச்சியோடிருந்தாள். பத்திரை இயற்கையில் அழகுள்ளவள். அதோடு அவளுடைய ஆடையணிகள் முதலிய செயற்கையழகுகள் கலந்து அவள் தெய்வமகள் போலக் காணப்பட்டாள். பொன் காய்த்த மரம் என்பார்களே. அதுபோல இல்லாமல் முத்துமணி முதலிய நவரத்தினங்கள் காய்த்த மரம் போல் இருந்தாள். செல்வச் சீமானின் ஒரே மகள் அல்லவா? இவளை மணந்த மணவாளனும் பாக்கியவனாகத்தானே இருக்கவேண்டும்? அவன் யார்?

பத்திரையை மணந்த மணவாளன், அன்று அவள் கண்ட கள்ளன்தான்! சேவகர் காவலில் கொலைக்களத்திற்குச் சென்ற அதே கள்ளன் சத்ருகன்தான்!

தன்னுடைய ஒரே மகளான பத்திரையின் பிடிவாதத்தையும், அவள் மனோநிலையையும் அறிந்த அவள் தந்தை, வேறு வழியில்லாமல் பெருந்தொகையான பொருளைக் கொலைச் சேவகனுக்குக் கைக்கூலியாகக் கொடுத்துக் கள்ளனை மீட்டுக் கொண்டு வந்தார். அவனை நீராட்டி ஆடையணிகள் அணிவித்து மணமகன் கோலம் புனையச் செய்தார். வெகு சிறப்பாகத் திருமணத்தை முடித்து வைத்தார். ஆனால் மணமகன், பேர்போன சத்ருகன் என்னும் கள்ளன் என்பது மற்றவர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவனை நல்ல குடும்பத்துப் பிள்ளை என்றே எண்ணிக் கொண்டார்கள். பத்திரை தான் விரும்பிய கள்ளனையே கணவனாகப் பெற்றாள்.

செல்வச் சீமானுடைய மகளை மனைவியாகப் பெற்ற சத்ருகன் மனம் மகிழ்ந்தானா? தன் நல்வினைப் பயன் தன்னைப் பெருஞ் செல்வனாக்கியதை நினைத்து வியப்படைந்தானா? செல்வத்தினால் அடையக்கூடிய இன்ப சுகங்களைத் துய்க்க வாய்ப்புக் கிடைத்ததற்காக உளம் களித்தானா? இல்லை, இல்லை. தான் அடைந்த கிடைத்தற்கரிய உயர்ந்த நிலையை, வேதனை தருகின்ற துன்ப வாழ்க்கையாக அவன் கருதினான். தான் ஒரு சங்கடமும் அபாயகரமுமான ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டதாக நினைத்தான். அல்லலைத் தருகிற வேதனையுள்ள சூழலில் அகப்பட்டுக் கொண்டதாகக் கருதி அச்சங் கொண்டான். இவ்வாறு அவன் எண்ணியது, உலகத்தை வெறுத்துத் தவம் செய்யத் துணியும் துறவியின் தூய உள்ளம் அவனுக்கு ஏற்பட்டதாகக் கருதவேண்டா. பின்னை எதனால் என்றால், கள்ளனுடைய இழிந்த மனப்பான்மையினால். கொலை செய்வதும் கொள்ளையிடுவதும் கசடர்களோடு சேர்ந்து கள்ளுண்டு களிப்பதும் மனம் போனபடி திரிவதும் நல்லவரோடு உறவாடாமல் தூர்த்தரோடு சேர்ந்து நாடோடியாகத் திரிவதும், அவன் இளமையில் பழகிக் கொண்ட வாழ்க்கை முறை. நாகரிகமான வாழ்க்கையை அமைதியாக நடத்திச் செல்ல அவன் பழகியறியான். ஆகவே மதிப்புள்ள நல்ல வாழ்க்கையை அவன் மனம் விரும்பவில்லை. நாகரிகமான அமைதியுள்ள நல்வாழ்க்கை அவனுக்கு அல்லலைத் தருகிற துன்ப வாழ்க்கையாகத் தோன்றிற்று. தன் எதிரிலே, பொன்னும் மணியும் காய்த்த பொற்பதுமை போல நிற்கும் இளமங்கையின் அழகிலும் அன்பிலும் அவன் மனம் செல்லவில்லை. தன் மனைவியின் நகைகள் தனக்குரியன என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளைக் கொன்று அவள் அணிந்திருக்கும் நகைகளைக் களவாடிக் கொண்டு போய் அவற்றை விற்றுக் கள்ளுக்கடையில் கள்ளர்களோடு களியாட்டமாட அவன் கருதினான். ஆகவே, அவளைக் கொல்லவும் அவள் நகைகளைக் களவாடவும் எண்ணினான்.

"மனவாட்டமாக இருக்கிறீர்களே! என்ன காரணம்?" என்று கேட்டாள் பத்திரை.

"ஒன்றுமில்லை. ஒரு பிரார்த்தனை செய்துகொண்டேன். அதைச் செய்து முடிக்க யோசிக்கிறேன்."

"என்ன பிரார்த்தனை? எதற்குப் பிரார்த்தனை?"

"இந்த ஊருக்கு அப்பால், காட்டிலே ஒரு மலை இருக்கிறது. அந்த மலையுச்சிலே ஒரு தெய்வம் உண்டு. என்னைக் கொல்லுவதற்காகச் சேவகர், அன்று கொலைக்களத்திற்குக் கொண்டுபோனபோது, அந்தத் தெய்வத்திற்கு, என் உயிர் தப்பினால் பொங்கலும் பூவும் பழமும் படைக்கிறேன் என்று பிரார்த்தனை செய்துக்கொண்டேன். அதை இன்றைக்குச் செய்யவேண்டும்."

"அதற்கென்ன? அப்படியே செய்தால் போகிறது. அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்கிறேன்," என்று கூறி, பத்திரை வேலையாட்களை அழைத்துப் பூசைக்கு வேண்டியவற்றை ஆயத்தம் செய்யும்படி கட்டளையிட்டாள். பணிவிடையாளர் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்து வைத்தார்கள். வண்டியும் ஆயத்தமாக மாளிகை வாயிலில் நின்றது. பத்திரையின் தோழியரும் அவளோடு புறப்படார்கள். அவன், "இவர்கள் யாரும் வரவேண்டாம். நாம் மட்டும் போவோம்," என்றான். பத்திரை தோழியரை நிறுத்திவிட்டுத் தனியே கணவனுடன் வண்டியேறினாள். வண்டி விரைந்து சென்று மலையடிவாரத்தையடைந்தது. வண்டிக்காரனை மலையடிவாரத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு, அவன் பத்திரையை அழைத்துக் கொண்டு மலைமேல் ஏறினான். மலைமேல் ஏறும்போது அவன் ஒன்றும் பேசாமலே மௌனமாக நடந்தான். வண்டியில் வந்தபோதும் அவன் அவளிடம் பேசவில்லை. இவனுடைய மௌனமும் முகக்குறியும் ஆழ்ந்த சிந்தனையும் பத்திரையின் மனத்தில் கலவரத்தையுண்டாக்கின. அவள் அவன் முகத்தை நோக்கினாள். முகம் கடுமையாகக் காணப்பட்டது. அவள் மனத்தில் அச்சம் ஏற்பட்டது.

மௌனமாகவே இருவரும் மலைமேல் ஏறினார்கள். மலையுச்சியை யடைந்தார்கள். அவன் அவளை ஒருபுறமாக அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பெரிய அகலமான பாறை இருந்தது. அதன் அருகில் சென்றதும் அவள் திடுக்கிட்டு நின்றாள். அந்தப் பாறைக்குப் பக்கத்தில் படுபாதாளம் தெரிந்தது. தவறி அதில் விழுகிறவர்கள் கதி அதோகதிதான். ஒரு சிறு எலும்பும் மிஞ்சாது. ஆ! எவ்வளவு பயங்கரமான இடம்! மலையுச்சி. ஆகையால் காற்று விசையாக வீசிக் கொண்டிருந்தது. அவள் உடுத்தியிருந்த பட்டாடை காற்றின் வேகத்தினால் படபட என்று அசைந்தது.

"இதுவா தெய்வத்திற்குப் பூசை செய்யவேண்டிய இடம்?" என்று கேட்டாள்.

"தெய்வமாவது பூதமாவது! உன் நகைகளைக் கழற்றிவை," என்றான் கள்ளன்.

இதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள். அச்சமும் ஐயமும் அதிகப்பட்டன. ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது என்று அவள் மனம் அறிந்து கொண்டது.

"ஏன்? நகைகள் எதற்கு?" என்று கேட்டாள்.

"உன்னைக் கொன்றுவிடப் போகிறேன். சீக்கிரம் கழற்றிவை," என்ற இந்தக் குரலில் கண்டிப்பும், உறுதியும் கலந்திருந்தன. இதைக் கேட்டவுடனே அவள் நடுநடுங்கினாள்.

"நான் உங்கள் மனைவிதானே. இந்த நகைகள் எல்லாம் உங்களுக்குத் தானே சொந்தம்? இது மட்டுமா? என் தகப்பனார் சொத்து முழுவதும் உங்களுக்குத் தானே சேரப்போகிறது? என்னை ஏன் கொல்லவேண்டும்?" என்று வினயமாகக் கூறினாள்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது! கழற்றி வை ஆகட்டும்!" என்று உரத்த குரலில் மிரட்டினான்.

அறிவுரை பேசுவதில் பயனில்லை. காரியம் மிஞ்சிவிட்டது. கொலை செய்வதற்கென்றே முன்யோசனையுடன் இங்கு அழைத்து வந்திருக்கிறான். கத்தி, வாள் ஏதும் ஆயுதங்கள் அவன் கையில் இல்லை. படுபாதாளத்தில் தன்னைத் தள்ளிக் கொல்லப் போகிறான் என்பது உறுதி. இந்த ஆபத்தில் இருந்து எப்படித் தப்புவது? மின்னல் வேகத்தில் அவள் அறிவு வேலை செய்தது. 'தற்கொல்லியை முற்கொல்ல வேண்டும்,' என்னும் பழமொழி அவள் நினைவுக்கு வந்தது.

உடனே நகைகளைக் கழற்றத் தொடங்கினாள். ஓவ்வொரு நகையாகக் கழற்றிக் கொண்டே, "அன்று தங்களைக் கண்டு தங்கள்மீது ஆசை கொண்டேன். இப்போதும் தங்களை என்னுயிர்போல் நேசிக்கிறேன். தாங்கள் தான் எனக்குத் தெய்வம். ஆகையால், முதலில் தங்களைச் சுற்றி வலம் வந்து கும்பிடுவேன். பிறகு, உங்கள் இஷ்டப்படி என்னைக் கொலை செய்து விடுங்கள்," என்று பணிவுடன் கூறினாள்.

கழற்றிய நகைகள் அவன் எதிரில் காலடியில் வைத்தாள். அவன் கால்களைத் தன் கைகளால் தொட்டுக் கும்பிட்டாள். பிறகு, கைகூப்பியபடியே அவனைச் சுற்றி வலம்வரத் தொடங்கினாள்.

"சுருக்காக ஆகட்டும்," என்றான் அவன்.

அவன் எண்ணமும் கண்களும் நகைமீது படிந்தன. தங்கமும் நவரத்தினங்களும் சேர்ந்த நகைக்குவியல் சூரிய வெளிச்சத்தில் பளிச்சென்று பிரகாசித்தன. அவன் கருத்து முழுவதும் அவற்றில் பதிந்து கிடந்தது. அடுத்த வினாடியில் ஆ! என்று அலறினான். எதிரில் இருந்த பாதாலப் படுகுழியில் விழுந்தான். கடகடவென்று புரண்டு கொண்டே படுகுழியில் மறைந்து விட்டான்.

அவனைச் சுற்றி வலம்வந்த பத்திரை பின்புறமாக வந்தவுடனே மின்னல் வேகத்தில் தன் இரண்டு கைகளாலும் அவன் முதுகை ஊக்கித் தள்ளினாள். நகைகளில் தன் எண்ணத்தைப் பறிகொடுத்துத் தன்னை மறந்திருந்த அவன், அவள் ஊக்கித் தள்ளிய வேகத்தினால் பயங்கரப் படுகுழியில் விழுந்தான். குற்றமற்ற தன் மனைவியை, இளம் பெண்ணைப் படுகுழியில் தள்ளவிட எண்ணிய அவன், தானே அப்படுகுழியில் விழுந்து மறைந்தான். அவன் கதி அதோகதியாய் விட்டது!

பயங்கரப் படுகுழியிலே ஓ வென்று அலறிக்கொண்டே விழுந்ததைக் கண்ட பத்திரைக்கு மனம் பதைத்தது. அந்த இடத்திலேயே அவள் மரம்போல அசைவற்று நின்றுவிட்டாள். எவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்தாள் என்பது அவளுக்குத் தெரியாது. கடைசியாகத் தன்னுணர்வு வரப்பெற்றாள். மாலை வெயில் பட்டு ஒளி வீசிக் கொண்டிருக்கும் நவரத்தின நகைகள் அவளைப் பார்த்துச் சிரிப்பதுபோலத் தரையில் கிடந்தன.

பாறைகளின் மேலே வேகமாக விர்விர் என்று வீசிக்கொண்டிருக்கும் காற்றைத் தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லை. எங்கும் அமைதியாக இருந்தது. தன்னந்தனியே நிற்கும் அவள், தன் வாழ்க்கை நிலையைப் பற்றித் தனக்குள்ளே சிந்திக்கலானாள். கணவனைத் தான் கொலை செய்து விட்டதாகக் கூறினால், எல்லோரும் தன்னை நிந்திப்பார்கள். 'கணவனைக் கொன்ற காதகி, புருஷனைக் கொன்ற பாதகி,' என்று சுடுசொல் கூறுவார்கள். அவன், தன்னைக் கொலை செய்யத் துணிந்தான் என்று கூறினால் அதை ஒருவரும் நம்பமாட்டார்கள். 'பொய்யாக வீண்பழி சுமத்துகிறாள்,' என்று தூற்றுவார்கள். என் செய்வது! கொலைக் களத்திலிருந்து அவன் உயிரை மீட்பதற்குக் காரணமாய் இருந்த தான், தன் கைகளாலேயே அவனைக் கொல்ல நேர்ந்த ஊழ்வினையை எண்ணி அவள் மனம் பதறினாள். இந்நிலையில் தன் பெற்றோரிடம் செல்வது தகுதியல்லவென்று நினைத்தாள். இனித் தனக்கு இவ்வுலக வாழ்வு மறைந்து விட்டது என்று உறுதி செய்து கொண்டாள். அப்போது அவள் மனத்திலே ஏதோ ஒரு துணிவு ஏற்பட்டது. உடனே அந்த மலையுச்சியிலிருந்து மடமடவென்று கீழே இறங்கினாள். ஏறின வழியே இறங்காமல், வேறுபுறமாக இறங்கி மலையடிவாரத்தை அடைந்தாள். எங்கும் பாறைகளும் புதர்களும் மரங்களும் காணப்பட்டன. முள்ளும் கல்லும் நிறைந்த அக்காட்டின் வழியே அவள் நடந்து சென்றாள். நெடுந்தூரம் நடந்தாள். பின்னர்க் காட்டைக் கடந்து வெட்டவெளியான இடத்திற்கு வந்தாள்.

அங்கு ஒற்றையடிப்பாதை காணப்பட்டது. அப்பாதை வழியே நடந்தாள். அந்தப் பாதை சற்றுத் தூரத்திற்கப்பால் மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பிற் கொண்டு போய்விட்டது. தோப்பிற்குள் ஓர் ஆசிரமம் காணப்பட்டது. பத்திரை அதற்குள் சென்றாள். மழித்த தலையும் தூய வெள்ளிய ஆடையும் அணிந்த மகளிர் சிலர் அங்கு காணப்பட்டார்கள். இவர்களைக் கண்டதும், இது ஆரியாங்கனைகள் மடம் (சமண சமயத்துக் கௌந்திகள் வாசிக்கும் மடம்) என்பதை அறிந்து கொண்டாள். தான் மேற்கொள்ள நினைத்திருந்த வாழ்க்கை நிலைக்கு ஏற்ற இடமென்று தனக்குள் கூறிக் கொண்டாள்.

பத்திரையைக் கண்டதும் சில ஆரியாங்கனைகள் அவளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்திற்குள்ளே சென்றார்கள். தலைமை ஆரியாங்கனையிடத்தில் பத்திரை தனது வரலாற்றை முழுவதும் கூறினாள். பின்னர், தான் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புவதாகத் தன் கருத்தைத் தெரிவித்தாள். இவள் விருப்பத்திற்கு உடன்பட்டு அவர்கள், இவளைத் துறவியாகச் சேர்த்துக் கொண்டார்கள். தமது சமய ஒழுக்கப்படி, பத்திரையின் கூந்தலை மழித்து, தூய வெள்ளிய ஆடையை உடுத்தினார்கள். அன்றுமுதல் பத்திரை அந்த மடத்தில் தங்கி இருந்தாள். அவளுடைய மழித்த தலையில் மயிர் மீண்டும் வளர்ந்து சுருண்டு கிடந்தது. ஆகவே, பத்திரை குண்டலகேசி - சுருட்டை மயிர் உடையவள், என்று அழைக்கப்பட்டாள். மடத்திலே குண்டலகேசி வீணாகக் காலங் கழிக்க வில்லை. கற்றுத் தேர்ந்த ஆரியாங்கனையிடம் சமய சாத்திரங்களை ஓதி உணர்ந்தாள். சாக்கிய மதம், ஜைன மதம் முதலிய சமய நூல்களையும், தர்க்க சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தாள். ஆகவே, பத்திரையின் புகழ் நாடெங்கும் பரவிற்று.

படிக்க வேண்டிய நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, கல்விக் கடலைக் கரை கண்ட குண்டலகேசியார், பல ஆண்டுகள் மடத்திலேயே தங்கியிருந்தார். கடைசியாகச் சமயவாதம் செய்ய எண்ணங் கொண்டு, மடத்தை விட்டுப் புறப்பட்டு நாடுகள் தோறும் சுற்றித் திரிந்தார். ஊர் ஊராகச் சென்று சமயவாதம் செய்தார். செல்லும் ஊர்களில் நாவல் (நாகமரம்) மரக்கிளையை நட்டு, படித்தவர் இருந்தால், வாதுக்கு வரலாம் என்று அழைப்பார். யாரேனும் வந்தால், அவ்வூரார் முன்னிலையில் வாதப்போர் செய்து வந்தவரைத் தோல்விப் படுத்துவார். இவரோடு வாதப்போர் செய்து தோற்றவர் பலர். ஆகவே, பத்திரை குண்டலகேசியாரின் புகழ் நாடெங்கும் பரவியது. செல்லும் இடங்களிலெல்லாம் நாவல் கிளைகளைத் தம்மூடன் கொண்டு போவார். அந்தக் கிளை உலர்ந்து விட்டால், அதை எறிந்து விட்டுப் பசுமையான வேறு கிளையை எடுத்துக் கொள்வார்.

பல நாடுகளையும் நகரங்களையும் சுற்றிக் கொண்டு பத்திரை குண்டலகேசியார், சிராவத்தி நகரம் வந்தார். வந்து அந்நகரத்து நடுவில் மணலைக் குவித்து நாவல் கிளையை நட்டு, என்னுடன் வாதுக்கு வருகிறவர் இந்தக் கிளையைப் பிடுங்கி எறியலாம் என்று அறை கூவினார். பிறகு, வீடுகள்தோறும் சென்று ஐயம் ஏற்று உணவு அருந்தி ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்.

அதே சமயத்தில் பகவன் புத்தர் தம் சீடகோடிகளுடன் சிராவத்தி நகரத்திற்கு வந்து அருகிலிருந்த ஒரு வனத்தில் தங்கியிருந்தார். பகவருடைய சீடர்களில் ஒருவராகிய சாரிபுத்திர தேரர், ஐயம் ஏற்க அந்நகரத்திற்குள் வந்தார். வந்தவர், தெரு நடுவில் மணலில் நாவல்கிளை நடப்பட்டிருப்பதைக் கண்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து, "இது என்ன?" என்று கேட்டார். அவர்கள் குண்டலகேசியார் அறைகூவி நாவல் நட்டிருப்பதைக் கூறினார்கள். சாரிபுத்திர மகாதேரர், நாவல் கிளையைப் பிடுங்கி எறியும்படி அவர்களுக்குக் கூறினார். அவர்கள் அதைச் செய்ய அஞ்சினார்கள். சாரிபுத்திரர் தாம் வாது செய்யப் போவதாகவும் கிளையைப் பிடுங்கி எறியும்படியும் சொன்னார். அவர்கள் அவ்வாறே செய்தார்கள்.

குண்டலகேசியார் அங்கு வந்து, நாவல்கிளை கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு வியப்படைந்து இப்படிச் செய்தவர் யார் என்று கேட்டார். அங்கிருந்தவர் சாரிபுத்திர தேரர் இப்படிச் செய்தார் என்று கூற, குண்டலகேசியார், அந்நகர மக்களை அழைத்துச் சபை கூட்டச் செய்தார். நகரத்திலே ஐயம் ஏற்று ஆகாரம் உண்டபின் சாரிபுத்திர தேரர் சபைக்கு வந்து சேர்ந்தார். குண்டலகேசியார் முதலில் கேள்விகள் கேட்பதென்றும், அதற்கு சாரிபுத்திரர் விடை கூறவேண்டும் என்றும் ஏற்பாடு செய்துகொண்டு, அதன்படி கேசியார் கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டார். சாரிபுத்திரர் அக்கேள்விகளுக்குத் தகுந்த விடைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்றன்பின் ஒன்றாகப் பல கேள்விகள் கேட்டாய் விட்டன. மேலும் எதைக் கேட்பதென்று தோன்றாமல் பத்திரையார் வாளா இருந்தார். அப்போது, சாரிபுத்திரர் தாம் கேட்கும் கேள்விக்கு விடை கூறவேண்டும் என்று கூற, பத்திரையார் உடன்பட்டார். தேரர், "ஏகம் நாமகிம்?" (ஒன்று, அதுயாது?) என்று கேட்டார். கேசியார் இதற்குப் பல விடை சொல்ல முடியும் என்று கருதினார். ஆனால், தகுந்த விடைகூற முடியாமல் திகைத்தார். பலவாறு யோசித்தும் விடைகூற முடியவில்லை. கடைசியில் தாம் தோல்வியடைந்து விட்டதாகக் கூறி சாரிபுத்திரரை வணங்கினார். அவர் கேட்ட கேள்விக்கு அவரே விடை கூறித் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு விடைதாம் கூற முடியுமானாலும், தமது குருநாதராகிய பகவன் புத்தரிடம் நேரில் கேட்டறிவது சிறப்புடையது என்று சாரிபுத்திரர் கூறினார். அதற்கு உடன்பட்டுக் குண்டலகேசியார், சாரிபுத்திரருடன் பகவன் புத்தரிடம் சென்றார்; சென்று பகவரை வணங்கி ஒருபுறமாக இருந்தார். பகவன் புத்தர் இதன் பொருளை நன்கு விளக்கிப் பத்திரைக்கு உபதேசம் செய்தார்.

பகவர் உபதேசத்தைக் கேட்டு மகிழ்ந்து வியந்த கேசியார் புத்தரை வணங்கி, தாம் பௌத்த சங்கத்தில் சேர விரும்புவதாகக் கூறினார். பகவன் இவரைப் பிக்குணி மடத்திற்கு அனுப்பி இவரைப் பௌத்தத் துறவியாக்கினார். பௌத்தத் தேரியான பிறகு, குண்டலகேசியார் பௌத்தமதச் சாத்திரங்களையெல்லாம் துறைபோகக் கற்றுத் தேர்ந்து, பேரும் புகழும் பெற்று இறுதியில் வீடு பேறடைந்தார்.

*********