புத்தரும் மகனிழந்த தாயும்

ஆசிய ஜோதி முகப்பு


ஆசிய ஜோதி

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

9. புத்தரும் மகனிழந்த தாயும்


(சிறிது காலஞ் செல்ல, சுஜாதையின் மகவு இறந்து விடுகிறது. அப்போது புத்தர் அவ்வூர் வர அவள் தன் மகவை உயிர்ப்பிக்குமாறு அவரை வேண்டுகிறாள். அவர் அவளுக்கு அறிவுரை கூறி, 'பிறப்புளதேல் இறப்பு முண்டு' என்பதைப் போதித்த வரலாறு இதனுள் கூறப்படுகிறது.)

குறிப்பு: தாயின் பெயர் "சுஜாதை" என்று தவறாகக் குறிப்பிடப் படுகிறது. மகனிழந்த தாயின் பெயர் "கிஸாகௌதமி". இவருக்கும் முந்தைய அதிகாரத்தில் கண்ட சுஜாதைக்கும் தொடர்பேதும் இல்லை. Ref: LIGHT OF ASIA, By Sir Edvin Arnold, Book The Fifth, Page 116


மண்ணில் வாழ்வுறும் மக்கள் மடிவது

திண்ண மென்றுளந் தேறத் தெளிவுரை

அண்ணல் அன்றோர் அணங்கினுக் கோதிய

புண்ணி யம்பெறு காதை புகலுவாம். 184


விளக்கம்:

திண்ண மென்றுளந் தேற - திண்ணம் என்று உள்ளம் தெளிய

அணங்கினுக்கு – பெண்ணுக்கு,

அணங்கு - பெண்

புகலுவாம் – சொல்லுவோம்


வேறு

முடமான இளமறியை முதுகில் ஏந்தி

    மூவுலகும் கருணையினால் வென்ற வீரன்

திடமாகப் பல உயிரும் அளிக்குஞ் சோணைத்

    தெய்வநதிக் கரைவந்து சேர்ந்த போது 185


விளக்கம்:

மூவுலகு - சுவர்க்கம், பூவுலகம், பாதாலம் ஆகிய மூன்று உலகங்கள்-Three worlds, Heaven, Earth and Hell

திடமாகப் பல உயிரும் அளிக்கும் - பல உயிர்களையும் காப்பாற்றும் சோணை நதி

தெய்வநதி - புனித நதி


வேறு

மானைப் பழித்த விழியுடையாள் - ஒரு

மாமயில் போலும் நடையுடையாள்;

தேனைப் பழித்த மொழியுடையாள் - பெண்ணின்

தெய்வ மெனத்தகும் சீருடையாள். 186


விளக்கம்:

சீர் – பெருமை, அழகு


ஆறாகக் கண்ணீர் வடித்துநின்றாள் - கையில்

ஆண்மக வொன்றையும் ஏந்திநின்றாள்;

தேறாத உள்ளமும் தேற்றுவிக்கும் - ஞான

தேசிகன் சேவடி போற்றிநின்றாள். 187


விளக்கம்:

ஞான தேசிகன் - புத்தர்

தேசிகன் - குரு 

சேவடி - சிவந்த பாதம், Lotus-red foot


வேறு

சந்திர மதிபோல் நின்ற தையலை நோக்கி ஐயன்

வெந்துயர் விளைந்த தென்னை விளம்புக எனலும், அன்னாள்

நைந்துநொந் துருகி யுள்ளம் நயனத்தின் வழியா யோட

மைந்தனைக் காட்டி இந்த மறுமொழி கூற லுற்றாள்; 188


விளக்கம்:

சந்திர மதி - அரிச்சந்திரன் மனைவி, அவளும் மகனையிழந்து துயருற்றவள்.

தையல் – பெண்

வெந்துயர் விளைந்த தென்னை விளம்புக எனலும் - இக்கொடுந்துயரம் எப்படி நேர்ந்தது எனச் சொல் என்று கேட்க

விளம்புதல் – சொல்லுதல்

நைந்துநொந் துருகி யுள்ளம் நயனத்தின் வழியா யோட – தளர்ந்து வருந்தி மெலிந்தஉள்ளத்தின் துன்பம் கண்களில் கண்ணீராக ஓட

நயனம் – கண்


வேறு

"அத்திமரம் ஓங்கியெழும் அருஞ்சோலை யதனில்

அயலொருவர் துணையின்றி அடியாளும் அன்பாய்ப்

புத்திரனைப் போற்றிவரும் பொறுமையினைக் கண்டு

புண்ணியநீ கொண்டபரிவு அளவுண்டோ ஐயா? 189


விளக்கம்:

அயலொருவர் துணையின்றி - மற்றவர் துணை இல்லாமல்

அடியாள் - குற்றேவற் பெண், Woman servant

புத்திரனைப் போற்றிவரும் பொறுமையினைக் கண்டு - மகனைப் பாதுகாத்து வரும் பொறுமையைக் கண்டு,

கொண்ட பரிவு – காட்டிய பாசம்


தலைநாளில் நீ கண்ட சிறுமகனும் இன்று

தள்ளாடும் உயிரோடு கிடக்கின்றான் ஐயா!

தொலையாத கொடும்பாவி யானும்இனி இந்தத்

தொல்லுலகில் வாழ்வதிலோர் பயனுண்டோ ஐயா? 190


விளக்கம்:

தலைநாள் – முதல் நாள், The first day

குறிப்பு: "தலைநாளில் நீகண்ட சிறுமகனும் இன்று" என்று சொல்வதும் இங்கு சுஜாதையைத் தாயென நினைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் தாயின் பெயர் கிஸாகௌதமி. அவள் புத்தரை இரண்டு முறை சந்திக்கின்றாள். முதல் முறை மனக்குழப்பத்திலிருக்கும் போது என்ன செய்வது என்று புத்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுப் போகிறாள். இரண்டாம் முறை தெளிந்த நிலையில் வந்து சந்திக்கிறாள். "லைட் ஆஃப் ஆசிய" ஆங்கில மூலம் இரண்டாம் சந்திப்பிலிருந்து துவங்குகிறது. "ஆசிய ஜோதியில்" நிகழ்ச்சி முதல் சந்திப்பிலிருந்து துவங்குகிறது.


சிரித்தமுகம் எனமலர்ந்து செழித்தசெடி நடுவே

சிறுமகனும் விளையாடித் திரிந்திடும்அவ் வேளை

விரித்தபட மெடுத் தரவொன்று அடுத்தொருகை பற்றி

விளங்குமணிக் கடகமென விளைந்து கிடந்ததுவே.  191


விளக்கம்:

சிரித்தமுகம் எனமலர்ந்து - சிரித்த முகம் போன்று செழித்து வளர்ந்த செடி

விரித்தபட மெடுத் தரவொன்று - விரித்த படம் எடுத்த பாம்பு ஒன்றை எடுக்க

அடுத்தொருகை பற்றி - வருத்திய கையைப் பற்றி

விளங்குமணிக் கடகமென விளைந்து கிடந்ததுவே - கங்கணம் போலப் பாம்பு கையில் சுற்றிக் கொண்டது

கடகம் – கங்கணம், Bracelet, armlet


பால்மணம் மாறாதசிறு பாலகனும் அறியான்,

படஅரவை விளையாட்டுப் பண்டமெனக் கொண்டான்;

வாலினையும் தலையினையும் வயிற்றினையும் வலித்து

வருத்தமெழச் சிறுகுறும்பு செய்துவிட்டான், ஐயோ!192


விளக்கம்:

பால்மணம் மாறாத – இன்னும் தாய்ப்பால் மறவாத,

பண்டம் – பொருள்,

வலித்து – இழுத்து, அழுத்தி.

வருத்தமெழச் சிறுகுறும்பு - துன்பம் உண்டாகுமாறு சிறு தவறு


சிறுபொழுது சென்றிடஎன் செல்வமகன் உடலில்

சீதமிகப் பரந்துணர்வு தீர்ந்துவிட்ட தையா!

நிறுத்தவிழி ஒருநிலையில் நின்றுவிட்ட தையா!

நீட்டியகால் மடங்காது நிமிர்ந்துவிட்ட தையா! 193


விளக்கம்:

சீதமிகப் பரந்துணர்வு தீர்ந்துவிட்ட தையா - உடல் குளிர்ந்து உணர்விழந்து விட்டது ஐயா.

சீதம் – குளிர்ச்சி

பாம்பின் விடம் ஏற ஏற உடற் சூடு குறைந்து குளிர்ந்து விடும்.

நிறுத்தவிழி – அசையாத கண்

கண் அசையவில்லை. ஒரே நிலையில் நின்று விட்டது. கால் விறைத்து விட்டது.


விடமேறி மடிந்ததென விளம்புகின்றார் சிலரே;

விதியாலே விளைந்ததென விரிக்கின்றார் சிலரே,

தடையில்லை இதுமூடு சன்னியென்றார் சிலரே,

சஞ்சீவி அளித்தாலும் சாமென்றார் சிலரே. 194


விளக்கம்:

விடமேறி - பாம்பின் விட மேறி

விரித்தல் - விளக்கிச் சொல்லல்

தடையில்லை இதுமூடு சன்னியென்றார்

தடையில்லை – ஐயமில்லை, இது மூடு சன்னிதான் என்றார் சிலர்

மூடுசன்னி – சன்னிநோய்வகை, Catalepsy

சஞ்சீவி அளித்தாலும் சாமென்றார்

சஞ்சீவி – இறந்தவரை உயிர்ப்பிக்கும் மூலிகை, Medicine or herb for reviving one from swoon or death

சாமென்றார் – இறப்பான் என்றார்.


வயித்தியரைக் கண்டிந்த வரலாறு சொல்லி,

'மயக்கமிது நீங்கஒரு மருந்திலையோ?' என்றேன்;

'பயித்தியமோ இனியேதும் பயனில்லை, என்றார்;

'பட்டமரம் தளிர்த்திடுமோ பாரிடத்தில்' என்றார். 195


அன்பாக அரவிட்ட சிறுமுத்தம் அதனால்

ஆவிக்கும் இடையூறுண் டாமோஎன் ஐயா!

வன்பாரில் மகவிழந்து வாழ்வேனோ ஐயா!

மலையேறிக் குதித்துயிரை மாய்ப்பேனே ஐயா! 196


விளக்கம்:

அரவிட்ட சிறுமுத்தம் - பாம்பு கடித்தது,

ஆவிக்கும் இடையூறுண் டாமோஎன் ஐயா! -

உயிருக்குத் துன்பம் உண்டாக்குமோ?

வன்பாரில் - வன்மையுள்ள உலகில்

மகவிழந்து - மகனை இழந்து


கண்டாரில் மிக்கஉளக் கனிவுடையர் ஒருவர்,

'காரிகையே! மலைமீது காவியுடை அணிந்து

முண்டிதமாய் அலையுமொரு முனிவர் அடிபணிந்தால்

முடியாத காரியமும் முடியும்' என உரைத்தார். 197


முண்டிதமாய் - மழித்த தலையினராய், Person with a clean-shaven head;


வேறு

"காடும் மலையுங் கடந்துவந்தேன் - உன்னைக்

கண்டு துயரெல்லாம் போக்கவந்தேன்;

வாடும் மலர்ச்செண்டு போல்கிடக்கும் - இந்த

மைந்தன் உயிரெழச் செய்யுமையா! 198


நெஞ்சிற் கிடத்தி வளர்த்தபிள்ளை - கண்ணில்

நித்திரை நீக்கியான் காத்த பிள்ளை -

விஞ்சு தவத்தினில் பெற்றபிள்ளை - என்னை

விட்டுப் பிரிந்தறி யாதபிள்ளை. 199


விளக்கம்:

விஞ்சு- மிகுந்த, Abundance


பெற்ற வயிறு துடிக்குதையா! - ஒரு

பிள்ளையும் வேறெனக் கில்லை ஐயா!

உற்ற உறவினர் இல்லைஐயா - என்மீது

உள்ளம் இரங்கிட வேணுமையா! 200


வேறு

வாய்முத்தம் தாராமல்

மழலையுரை யாடாமல்

சேய்கிடத்தல் கண்டெனக்குச்

சிந்தைதடு மாறுதையா! 201


விளக்கம்:

சேய்கிடத்தல் – குழந்தை இருக்கும் நிலை.


முகம்பார்த்துப் பேசாமல்

முலைப்பாலும் உண்ணாமல்

மகன்கிடக்கும் கிடைகண்டு

மனம்பொறுக்கு தில்லைஐயா!  202


விளக்கம்:

கிடைகண்டு - நிலை கண்டு

கிடை – கிடக்கை, Lying down;


நீடும் மதியினைப் போல்

நிலவெறிக்கும் செல்வமுகம்

வாடிநிறம் மாறியதென்

வயிற்றிலெரி மூட்டுதையா?  203


விளக்கம்:

நீடு - நிலைத்திருக்கை 

மதி – சந்திரன்

நிலவெறிக்கும் - நிலவு போல ஒளி வீசும் அவன் முகத்தில்


'பின்னி முடிச்சிடம்மா

பிச்சிப்பூச் சூட்டிடம்மா'

என்னும் மொழிகளினி

எக்காலம் கேட்பனையா?  204


விளக்கம்:

பிச்சிப்பூ - சாதிமல்லிகை, Large-flowered jasmine


நெஞ்சிற் கவலையெல்லாம்

நிற்காமல் ஓட்டும்அந்தப்

புஞ்சிரிப்பைக் காணாது

புத்திதடு மாறுதையா!  205


இட்டளைந்து கூழைஎனக்கு

இன்னமுதம் ஆக்கியதை

கட்டழிதல் கண்டுமனம்

கறங்காய்ச் சுழலுதையா!  206


விளக்கம்:

இட்டளைந்து கூழைஎனக்கு இன்னமுதம் ஆக்கியதை - வெறும் கூழாயினும் குழந்தை அதில் கைவிட்டு அளைந்ததால் அது பெற்றோருக்கு அமுதமாகச் சுவைக்கும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்

சிறுகை அளாவிய கூழ். – திருக்குறள்

கட்டு - தேகக்கட்டு Robust build, strong constitution

கட்டழிதல் - உடல் கட்டுக் குலைதல்

கறங்கு – பம்பரம்,


சோலைப் பசுங்கிளிகள்

தோழனையும் காணாமல்

நாலு திசைகளிலும்

நாடித் திரியாவோ? 207


விளக்கம்:

திரியாவோ – திரியாதோ,


அன்னப் பறவைகளென்

அழகனைப் பார்க்கவந்தால்

என்னமொழி கூறஇனி

என்நா எழுமையா? 208


விளக்கம்:

என்நா - எனது நாக்கு


துள்ளிவிளை யாடஎன்றன்

சுந்தரனைத் தேடிவரும்

புள்ளிமான் கன்றினுக்குஎப்

பொய்சொல்லி நிற்பனையா? 209


சித்திரத் தேரும்

சிறுபறையும் கூடிஎனைப்

பித்திலும் பித்தி

பெரும்பித்தி ஆக்குதையா! 210


விளக்கம்:

சித்திரத் தேரும், சிறுபறையும் கூடி -

விளையாட்டுப் பொருட்களைப் பார்க்கும்போது நான் பித்துப் பிடித்தவளாகி விடுகின்றேன்.


குஞ்சை யிழந்தகுயில்

கூவியழக் கண்டகனா

நெஞ்சை யறுக்குதையா,

நினைப்பொழிய மாட்டாதையா! 211


விளக்கம்:

கண்டகனா - கண்ட கனவு


கொம்படர்ந்த மாவின்

குலையடர்ந்த பூம்பிஞ்சு

வெம்பிவிழக் கண்டகனா

மெய்யாய் விடுமோஐயா? 212


விளக்கம்:

கொம்படர்ந்த மாவின் - கிளைகள் நிறைந்த மாமரத்தின்

குலையடர்ந்த பூம்பிஞ்சு – கொத்துக் கொத்தாய்க் காய்த்துத் தொங்கும் மாம்பிஞ்சுகள்

வெம்பிவிழக் கண்டகனா – வாடி உதிர்வதுபோல் கண்ட கனவு


கழுத்திற் கயிறிறுக்கிக்

கன்றுவிழக் கண்டகனா

பழுத்துப் பலித்திடுமோ?

பலன்மாறி நின்றிடுமோ? 213


தாயாகி உள்ளம்

தருக்கி யிருந்ததுபோய்ப்

பேயாக இன்று

பிணந்தூக்கி நிற்பேனோ? 214


விளக்கம்:

தருக்கி - பெருமையோடு, அகங்காரமுள்ளவளாக


இந்தப் பிறவியில்யான்

எப்பிழையும் செய்தறியேன்;

எந்தவிதம் என்வயிற்றில்

இவ்விடியும் வீழ்ந்ததையா?" 215


வேறு

கன்றொ ழிந்தகா ராவின் கலக்கமொத்து

அன்று அரற்றி அழுத அரிவையை

என்றும் எங்ஙணும் எவ்வுயி ரும்தொழ

நன்று கண்டமெய்ஞ் ஞானியும் நோக்கியே. 216


விளக்கம்:

கன்றொ ழிந்தகா ராவின் கலக்கமொத்து -

கன்றை இழந்த பசு கலங்குவதைப் போல்

அரிவை - பெண் (குறிப்பாக 20 வயதுமுதல் 25வயதிற்குட்பட்ட பெண்)

என்றும் எப்போதும் எவ்வுயிரும் தொழத்தக்க மெய்ஞ்ஞானி (புத்தர்) அப்பெண்ணை நோக்கிக் கூறியது :


வேறு

"தாயே! நின் மனக்கவலை - ஒழிந்திடத்

தக்கநல் மருந்தளிப்பேன்;

சேயினை எழுப்பிடுவேன் - விளையாடித்

திரியவும் செய்திடுவேன். 217


நாவிய கடுகுவேண்டும் - அதுவுமோர்

நாவுரி தானும் வேண்டும்;

சாவினை அறியாத - வீட்டினில்

தந்ததா யிருக்கவேண்டும்! 218


விளக்கம்:

நாவிய - புடைத்தெடுத்த

நாவுரி – நாழியுரி என்பதன் சுருக்கம்.

நாழி + உரி – ஒன்றரைப்படி. நாழி – ஒருபடி, உரி – அரைப்படி.


பக்கமாம் பதிகளிலே - சென்றுநீ

பார்த்திது வாங்கிவந் தால்,

துக்கமும் அகலுமம்மா! - குழந்தையும்

சுகமாக வாழுமம்மா!" 219


விளக்கம்:

பதி – உறைவிடம், Abode


வேறு

என்றுரைத்த மொழிகேட்டு, அவ்வேழை மார்பில்

ஏந்தியணைத் திடுமகனோடு ஊரில் எங்கும்

சென்றுகடு கிரந்துவெறுங் கைய ளாகித்

திரும்பிமுனி திருவடியைச் சிரமேற்கொண்டு, 220


விளக்கம்:

அவ்வேழை - அந்தப் பெண்,

ஏழை - பெண்

இரத்தல் – யாசித்தல்


வேறு

"புவியெலாம் நிறைந்த புகழோய்! புலவர்

கவியெலாம் நிறைந்த கருணையங் கடலே,

ஊரெலாம் அலைந்தேன், ஒவ்வொரு மனையும்

ஏறி யிறங்கினேன், என்குறை உரைத்தேன்.

ஏழை;ஒருமகள் - ஏழை யலாதுஎவர்


ஏழைக் கிரங்குவர் - என்கதை கேட்டு

மார்போ டணைத்த மதலையைக் கண்டு,

மாறாக் கண்ணீர் வடிவதை நோக்கி,

ஆறாத் துயரம் அடைந்தனள் இவளெனப்

பரிவு கொண்டுஎன் பக்கம் நின்று


ஏழை யலாதுஎவர் ஏழைக் கிரங்குவர் – பெண்கள் பெண்களுக்கு இரக்கம் காட்டிடுவர்.


நாவிக் கொழித்த நாவுரிக் கடுகையும்

அளந்துஎன் மடியில் அளித்திட வந்தனள்

பிள்ளை யென்றிடில் பேயும் இரங்குமே!

பெண்டிர் இரங்குதல் பேசவும் வேண்டுமோ?

யானும்,


இட்ட கடுகை ஏற்பதன் முன்னம்,

'தாயரே, நீவிர் தங்கும் மனையிது

சாவறி யாத தனிமனை தானா?

தந்தை தாயார் தமக்கை தங்கை

மைந்தர் எவரும் மரித்ததும் உண்டோ?


விளக்கம்:

தமக்கை – அக்காள்

மைந்தர் – மகன்


உரைத்திடும்' என்றேன். உரைகேட்டு அவரும்,

'வினவியது என்னை? - விரிநீர் உலகில்

பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்

இறந்தார் என்கை இயல்பே அம்மா!

காலையில் உதித்த கடுங்கதிர்ச் செல்வன்


விளக்கம்:

விரிநீர் உலகில் – தண்ணீர் சூழ்ந்த உலகில்

என்கை – என்று சொல்வது


மாலையில் தளர்ந்து மறைவது மிலையோ?

இம்மா நிலத்தில் இயற்கையின் குறிப்பெலாம்

அம்மா நீயும் ஆய்ந்திலை போலும்!

இவள், கணவனை இழந்த கைம்பெண் அம்மா!

இவள், தந்தையை இழந்த தமியள் அம்மா!


இவள், மைந்தனை இழந்த வறியவள் அம்மா!

இவள், தமயனை இழந்த தங்கை அம்மா!

இவள், மாமனை இழந்த மருகி அம்மா!

இவள், அன்னையை இழந்த அகதி அம்மா!

இறந்தவர் எண்ணிலர்; இருப்பவர் சிலரே.


விளக்கம்:

கைம்பெண் – கணவனை இழந்தவள், Widow

தமியள் – தனியாயிருப்பவள், Solitary, lonely woman;

வறியவள் – தரித்திரம் வாய்ந்த பெண், Destitute woman

தமயன் - மூத்த சகோதரன், Elder brother

மருகி - மருமகள், Niece

அகதி – கதியற்றவர், Destitute person


பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும்

உலகின் இயற்கை; ஒழித்தலும் எளிதோ?

எனவாங்கு,

தேறுதல் மொழிகள் தெரிந்தவை கூறிக்

கண்முன் சான்றுகள் காட்டி நின்றனர்.


விளக்கம்:

ஒழித்தலும் எளிதோ? – மாற்ற முடியுமா?

எனவாங்கு - என்று

சான்று – சாட்சி


யானும், உன்

கட்டளை யுணர்ந்து கவலை கைம்மிக

மற்றொரு வீட்டின் வாயிலிற் சென்றேன்.

அங்குளார்,

கடுகினை யளந்து கட்டிவைத்து, 'அம்மா!


விளக்கம்:

கைம்மிக - அதிகப் பட


உழுதவர் இந்நாள் உலகி லில்லை;

விதைத்தவர் அன்றே விண்ணுல கெய்தினர்.

காத்தவர் காலமும் கழிந்து விட்டது.

அடிமையும் இறந்துநாள் ஐந்தா றாகுது;

காலனை எவரே கடக்க வல்லவர்?'

என்று கூறினர். என்செய ஐயா! 221


வேறு

"ஐயமிடு மனைகளிலே மரண மென்றும்

அறியாத மனையேதும் இல்லை யில்லை;

வையகத்தில் பிறப்புளதேல் இறப்பு முண்டு;

மாற்றரிய விதியிதுவென் றுணர்ந்து கொண்டேன்;

கையமர்ந்த மகவினையும் கானி லிட்டேன்;

கண்விழியாப் பிணம்வைத்துக் காப்ப துண்டோ?

செய்யதிரு வடிபணிந்து போற்றி இந்தச்

செய்தியினைத் தெரிவிக்க வந்தேன்" என்றாள். 222


விளக்கம்:

ஐயமிடும் - பிச்சையிடும்

மாற்றரிய விதி - மாற்ற முடியாத நியதி

கான் – காடு

கண்விழியாப் பிணம் - கண் விழியாத பிணம்

செய்ய திருவடி - சிவந்த திருவடி


மங்கைமனத் தெளிவையெலாம் உரைத்த உண்மை

வார்த்தையினால் அறிந்தவளை நோக்கி, "அம்மா!

எங்குமிலாப் பொருள்தேடச் சென்று நீயும்

யான்நினைத்த பொருளதனைப் பெற்று வந்தாய்;

தங்குமிந்த உலகியற்கை மாறா தம்மா!

தனயனைநீ எண்ணிமனம் தளர வேண்டாம்;

அங்கமெலாம் வாயாக அழுதிட் டாலும்

அவனெழுந்து நின்துயரம் அகற்ற லுண்டோ? 223


விளக்கம்:

யான்நினைத்த பொருளதனைப் பெற்று வந்தாய்:

இறப்பில்லா வீட்டில் கடுகை வாங்கிவரச் சொன்ன புத்தர் அவள் மனத் தெளிவு பெற்று வருவாள் என்பதைத்தான் எதிர்பார்த்தார்.


வேறு

"பசும்புல் லடர்ந்து பன்மலர் விரிந்து

விசும்பு மண்ணில் விழுந்த தோவெனக்

கண்டவர் ஐயுறு காட்சிய தாகி

மண்டல வளமெலாம் மலிந்து தங்குமிப்

புலத்தின் வழிமன் புரமது சென்று


விளக்கம்:

விசும்பு - மழைத் துளி

மழை பெய்ததுபோலப் பசும் புல்லும் மலர்களும் நிறைந்து இருந்தன.

கண்டவர் ஐயுறு காட்சிய தாகி - கண்டவர் வியப்புறும் காட்சியாகி

மண்டல வளமெலாம் மலிந்து தங்குமிப் புலத்தின்: பூமியில் உள்ள வளமெல்லாம் நிறைந்திருக்கும் இவ்விடத்தில்.

மலிதல் – மிகுதல்

புலம் – இடம்

மன் புரம் – அரசனது தலை நகரம்.

மன் – அரசன், புரம் – தலைநகர்

விளக்கம்: 'லைட் அஃப் ஆசியா' என்ற ஆங்கில மூலத்தில் மகனை இழந்த தாயைச் சந்திக்கும் இந்த நிகழ்ச்சி, புத்தர் நொண்டிக் குட்டியைத் தூக்கிக் கொண்டு, ஆடுகளை ஓட்டிச் செல்லும் இடையர்களோடு பிம்பிசார மன்னன் யாகசாலைக்குப் போகும் வழியில் நிகழ்கிறது.


கொலைக்கள வேள்விக் குண்டினுக் கிரையாய்

ஆவதை அறியும் அறிவிலா ஆட்டினைப்

பாவிக ளோட்டும் இப்பரிசு போல,

ஆசையும்,

இன்ப வழியில் இதமா யிழுத்துத்


துன்ப மென்னும் தொடக்கில்

மன்பதை யுலகை மாட்டி விடுமே. 224


விளக்கம்:

வேள்விக் குண்டினுக்கு – யாக குண்டத்துக்கு

அறியும் அறிவிலா - இரையாகப் போவதை உணராத அறிவற்ற ஆடுகள்.

அதுபோல, ஆசையும் இன்ப வழியில் பக்குவமாக இழுத்துச் சென்று மனிதர்களைத் துன்பம் எனும் சிக்கலில் விட்டுவிடும்.

மாட்டி விடுமே – சிக்க வைத்து விடும்

தொடக்கு - கட்டு 


வேறு

"இம்மா நிலத்தில் உண்மையெலாம்

யானும் அறியச் செல்கின்றேன்;

அம்மா நீயும் உன்மகனை

அடக்கம் செய்போ" என்றுரைத்தான் - 225


வெம்மா வினையின் வேரறுத்து

விளங்கும் ஞான ஒளிகண்டிங்கு

எம்மா தவருந் தொழுதேத்த

எழிலார் கமலத்து எழுந்தோனே. 226


விளக்கம்:

வெம்மா வினை – கொடிய வினை

வெம்மா வினையின் வேரறுத்து -

வெய்ய கொடிய வினையின் வேரை அறுத்து

விளங்கும் ஞான ஒளிகண்டிங்கு – தூய ஞான ஒளிபெற்ற

எம்மா தவருந் தொழுதேத்த - கடுந்தவம் புரிந்த மாமுனிவரும் தொழுது வணங்கத்தக்க

எழிலார் கமலத்து எழுந்தோனே.

அழகு பொருந்திய தாமரையில் வீற்றிருப்போனே.

எழுந்தோன் - புத்தரைக் குறிக்கும்

எழில் ஆர் - அழகு பொருந்திய

கமலம் - தாமரை

*    *    *    *    *    *    *

Whom, when they came unto the river-side,

A woman—dove-eyed, young, with tearful face

And lifted hands—saluted, bending low;

“Lord! thou art he,” she said, “who yesterday

Had pity on me in the fig-grove here,

Where I live lone and reared my child; but he

Straying amid the blossoms found a snake,

Which twined about his wrist, whilst he did laugh

And tease the quick-forked tongue and opened mouth

Of that cold playmate. But, alas! ere long

He turned so pale still, I could not think

Why he should cease to play, and let my breast

Fall from his lips. And one said, ‘He is sick

Of poison’; and another, ‘He will die.’

But I, who could not lose my precious boy,

Prayed of them physic, which might bring the light

Back to his eyes; it was so very small,

That kiss-mark of the serpent, and I think

It could not hate him, gracious as he was,

Nor hurt him in his sport. And some one said,

’There is a holy man upon the hill—

Lo! now he passeth in the yellow robe—

Ask of the Rishi if there be a cure

For that which ails thy son.’ Whereon I came

Trembling to thee, whose brow is like a god’s,

And wept and drew the face-cloth from my babe,

Praying thee tell what simples might be good.

And thou, great sir, did’st spurn me not, but gaze

With gentle eyes and touch with patient hand;

Then draw the face cloth back, saying to me,

‘Yea, little sister, there is that might heal

Thee first, and him, if thou couldst fetch the thing;

For they who seek physicians bring to them

What is ordained. Therefore, I pray thee, find

Black mustard-seed,a tola; only mark

Thou take it not from any hand or house

Where father, mother, child, or slave hath died;

It shall be well if thou canst find such seed.’

Thus didst thou speak, my Lord!”

The Master smiled

Exceeding tenderly. “Yea, I spake thus,

Dear Kisagõtami! But didst thou find

The seed?”

“I went, Lord, clasping to my breast

The babe, grown colder, asking at each hut—

Here in the jungle and towards the town—

‘I pray you, give me mustard, of your grace,

A tola—black’; and each who had it gave,

For all the poor are piteous to the poor;

But when I asked, ‘In my friends’s household here

Hath any peradventure ever died—

Husband, or wife, or child, or slave?’ they said:

‘O Sister! what is this you ask? the dead

Are very many, and the living few!’

So with sad thanks I gave the mustard back,

And prayed of others; but the others said,

‘Here is the seed, but we have lost our slave.’

‘Here is the seed, but our good man is dead!’

‘Here is some seed, but he that sowed it died

Between the rain-time and the harvesting!’

Ah, sir I could not find a single house

Where there was mustard-seed and none had died!

Therefore I left child—who would not suck

Nor smile—beneath the wild-vines by the stream,

To seek thy face and kiss thy feet, and pray

Where I might find the seed and find no death,

If now, indeed, my baby be not dead,

As I do fear, and as they said to me.”

“My sister, thou hast found,” the Master said,

“Searching for what none finds—that bitter balm

I had to give thee. He thou lovedst slept

Dead on thy bosom yesterday: to-day

Thou know’st the whole wide world weeps with thy woe;

The grief which all hearts share grows less for one.

Lo! I would pour my blood if it could stay

Thy tears and win the secret of that curse

Which makes sweet love our anguish, and which drives

O’er flowers and pastures to the sacrifice—

As these dumb beasts are driven—men their lords.

I seek that secret: bury thou thy child!”

“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the Fifth