பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு
வண. நாரத தேரர் அவர்கள்.
தமிழில்
செல்வி யசோதரா நடராசா
அத்தியாயம் 9 - அநாத்ம வாதம்
புத்த சித்தாந்தமான மறுபிறப்பை, உயிரின் கூடுவிட்டுக் கூடுபாயும் தன்மையைக் குறிக்கும் அவதாரத் தத்துவத்திலிருந்து, வேறுபடுத்த வேண்டும். ஒரு பரமாத்மாவிலிருந்து வெளிப்படும் அல்லது கடவுளால் படைக்கப்பட்ட மாற்றமில்லா அல்லது என்றும் நிலைக்கும் ஆத்துமாவின் உண்மையைப் பௌத்தம் ஏற்க மறுக்கிறது.
மனிதனின் சாரம் எனப்படும் அழிவில்லா ஆன்மா என்றும் நிலைத்திருந்தால், அதில் எவ்வித எழுச்சியோ, வீழ்ச்சியோ ஏற்படாது. அதோடு, "ஏன் வித்தியாசமான ஆன்மாக்கள் வெவ்வேறாகத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை."
நிலையான சொர்க்கத்தில் முடிவில்லாத் துன்புறுத்தலும் உள்ளன என்பதை நிருபிக்க ஒரு அழிவில்லா ஆன்மா அத்தியாவசியப்படுகின்றது. அல்லாவிட்டால் நரகத்தில் தண்டிக்கப்படுவதும், சொர்க்கத்தில் வெகுமதியளிக்கப்படுவதும் எதுவாக இருக்ககமுடியும்?
பெட்ரண்ட் ரஸ்ஸல், "ஆன்மா உடம்பு என்ற பழைய வேறுபாடு இன்று ஏறக்குறைய மறந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், பொருள் என்பது அதன் திண்மத்தையும், மனம் என்பது அதன் ஆன்மீக ஆற்றலையும் இழந்துவிட்டன. மனோதத்துவம் இப்போதுதான் விஞ்ஞான ரீதியாக ஆராயப்படுகின்றது. இன்றைய மனோதத்துவத்தின் நிலைமையில் அழியாத் தன்மை பற்றிய நம்பிக்கைக்கு விஞ்ஞானத்திடமிருந்து எவ்வித ஆதரவையும் பெற முடியாது," என்று எழுதுகிறார்.
நான் நேற்றிருந்த மனிதனாகவே இன்றுமிருக்கிறேன், என்பதற்கு ஒரு காரணம் கட்டாயமிருக்கிறது. நான் ஒரே சமயத்தில் ஒருவனைப் பார்த்து அவன் பேசுவதைக் கேட்கும்போது அந்தப் பார்க்கும் 'நான்', கேட்கும் 'நான்' என்ற இரண்டும் ஒருவரே என்று சொல்லுவதில் அர்த்தமிருக்கிறது," என்று ரஸ்ஸல் சொல்லுவதைப் பௌத்தர்களும் ஆமோதிக்கின்றனர்.
சமீபகாலம் வரை விஞ்ஞானிகள் அணுக்கள், பிரிக்கவும் அழிக்கவும் முடியாதவை என நம்பினர். "போதுமான காரணங்களினால் பௌதீகவியல் நிபுணர் அணுவை விளைவுகளின் தொடர்ச்சியென குறிப்பிடுகின்றனர். அதே மாதிரியான தகுந்த காரணங்களுக்கு மனோதத்துவ நிபுணர் மனம் என்பது தொடர்ச்சியான ஒரு பொருளின் அடையாளமல்ல. அது குறிப்பிட்ட நெருங்கிய உறவுகளினால் கட்டுண்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியெனக் கண்டனர். ஆகவே அழியாத தன்மை பற்றிய கேள்வி, 'ஒரு உயிருள்ள உடம்பின் இந்த நெருங்கிய உறவு நிகழ்ச்சிகளுக்கும், இறந்தபின் சம்பந்தப்பட்ட மற்ற நிகழ்ச்சிகளுக்கும் இடையே உள்ளதா?' என மாறியுள்ளது.
'வாழ்க்கையின் அர்த்தம்' என்ற நூலில் சி. ஈ. எம். ஜோட், "சடப்பொருள் என்பது எம் கண்முன்னாலேயே சிதைவுற்று விட்டது," என்று எழுதியுள்ளார். "அது இனிமேல் திண்மமாகவும், நீடித்திருப்பதாகவும் காணப்படவில்லை. அது இனிமேல் கட்டாய காரண விதிகளினால் தீர்மானிக்கப்படுவதில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமானது, அது இனிமேல் அறியப்படவில்லை."
"அணு எனப்படுவது, 'பிரிக்கக்கூடியதாகவும், அழிக்கக்கூடியதாகவும்,' காணப்படுக்கின்றது. அணுக்களை உருவாக்கும் புரோத்தனும் இலத்திரனும் சந்தித்து, ஒன்றையொன்று அழிக்கக்கூடிய அதேநேரத்தில், அவற்றின் நிலைத்திருக்கும் தன்மை நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில்லா ஒரு அலையாக உள்ளது. ஒரு பொருளிலும் பார்க்க உருவம், இடம் என்பதைப் பொறுத்தவரை செய்முறையில் தொடர்ச்சியான மாற்றங்களையும் உடையது." (Meaning of Life - C.E.M. Joad)
அணு என்பது ஒரு மறைபொருளான கற்பனை எனக்காண்பித்த பிசப் பெர்க்லி மேற்றிராணியார் ஆன்மா என்ற ஒரு ஆன்மீகப் பொருள் இருக்கிறதெனக் கருதினார்.
ஹியூம் விழிப்புணர்ச்சிக்குள் நோக்கி, அங்கு விரைந்தோடும் மன நிலைகள் மட்டுமே உள்ளன என்பதை உணர்ந்தறிந்து நிலையான 'தான்' என்ற ஆணவம் என்று ஒன்றில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
" 'நாம்' எம்மை ஒவ்வொரு கணமும் உணர்ந்து கொண்டிருக்கிறோம் எனவும், அதன் காரணமாக அதன் இருப்பையும், அதன் இருப்பின் தொடர்ச்சியையும் உணர்ந்து, அதன் பரிபூரணமான அடையாளத்தையும், அதன் எளிமையையும் திட்டவட்டமாக அறிகிறோம், எனவும் சில தத்துவ ஞானிகள் எண்ணுகிறார்கள். என்னைப் பொறுத்த மட்டில் நான் 'என்னை' மிக நெருங்கி ஆராயும் போது, வெப்பம் அல்லது குளுமை, ஒளி அல்லது நிழல், அன்பு அல்லது வெறுப்பு, வேதனை அல்லது இன்பம் என்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட உணர்வையே பெறுகிறேன். நான் 'என்னை' என்றும் பற்றிப் பிடித்ததில்லை. உணர்வைத் தவிர வேறெதையும் கவனிக்கமுடிவதில்லை. என்னை முற்றாக இராத ஒன்றாக ஆக்குவதற்கு வேறு என்ன தேவைப்படுகிறது என்பதை நான் நினைத்துப்பார்க்க முடியவில்லை," என்கிறார் அவர்.
பெர்க்ஸன், "எல்லா உணர்ச்சிகளும் காலமுடையவை. உணர்வுள்ள நிலை என்பது மாற்றமில்லாமல் நீடிக்கும் ஒரு நிலையல்ல. அது ஒரு முடிவற்ற மாற்றம். மாற்றம் முடிவுறும்போது, அதுவும் முடிவுறும். அது மாற்றமன்றி வேறெதுவுமில்லை," என்று கூறியுள்ளார்.
இப் பிரச்சனையைப்பற்றிப் பேராசிரியர் ஜேம்ஸ், "ஆத்துமம் பற்றிய தத்துவம் உண்மையான, நிரூபிக்கப்பட்ட உணர்வு அநுபவங்களை விளக்குவதற்கு, தேவைக்கு மேற்பட்டது. திட்டமான விஞ்ஞான காரணங்களுக்காக அதற்கு இணக்கம் தெரிவிக்க யாரையும் கட்டாயப்படுத்த முடியாது," என்று கூறுகிறார். இச்சுவாரசியமான புத்தகத்தின் முடிவில், "நாம் அடைந்திருக்கும் முன்னேற்பாடான முடிவு என்னவென்றால், சிந்தனைகளே சிந்திப்பவர்கள்."
புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணரான வாட்சன், "அன்றாட வாழ்க்கையில் வரும் மற்றச் செயல்களைப் போலன்றி, இன்று வரை, ஒருவராவது ஆத்துமாவைத்தொடரவோ, அதை பரிசோதனைக் குழாயில் பார்க்கவோ, அதனோடு தொடர்பு கொள்ளவோ இல்லை. ஆயினும் அதைப்பற்றி ஐயமுறுவது ஒருவனைச் சமயவிரோதியாக்கி, ஒரு காலத்தில் அவனது உயிருக்குச் சேதமாகவும் இருந்திருக்கும். இக்காலத்திலும் உயர்பதவி வகிக்கும் ஒருவன் கூட இதற்கெதிராகக் கேள்வி கேட்க முற்படமாட்டான்," என்று கூறுகிறார்.
இவ்வுண்மைகளை 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் முன்னறிந்திருந்தார்.
பௌத்தத்தின்படி, மனம் ஒரு நிலையற்ற, விரைந்தோடும், மனநிலைகளின் ஒரு சிக்கலான சேர்வையாகும். உணர்ச்சியின் ஒரு அலகு மூன்று நிலைகளை யுடையது. அவையாவன, எழுச்சி அல்லது தோன்றல் (உப்பாத), நிலையமைதி அல்லது வளர்ச்சி (தித்தி), முடிவுறல் அல்லது கலைதல் (பங்க). ஒரு சிந்தனைக் கணத்தின் முடிவுறும் போது உடனே அடுத்த சிந்தனையின் தோன்றல் நிலை உருவாகும். என்றும் மாறிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையற்ற சிந்தனையும் மறையும் போது அதன் முழு விசையையும், மனப்பதிவுகளையும் தொடர்ந்து வரும் சிந்தனைகளுக்குக் கொடுக்கின்றது.
ஒவ்வொரு புதிய உணர்ச்சியும் அதன் முன்னோடிகளின் உள்ளாற்றலையும் இன்னும் எதையோ அதிகமாகவும் கொண்டிருக்கும். ஆகவே உணர்ச்சி ஒரு அருவியைப் போல் தொடர்ந்து தங்கு தடையின்றி ஓடிக்கொண்டிருக்கும். அடுத்து வரும் சிந்தனை கணம் முந்தியதை முற்றிலும் ஒத்திருக்கவோ அல்லது முற்றிலும் வேறுபட்டதாகவோ இருப்பதில்லை. இது கன்மச் சத்தியின் தொடர்ச்சியைப் போன்றது. ஆகவே இங்கு ஒரே மாதிரியான செய்முறை உள்ளதே தவிர ஒரேமாதிரியான உருவம் இல்லை.
ஒவ்வொரு கணமும் பிறப்பும் இறப்பும் நடைபெறுகின்றன. ஒரு சிந்தனைக் கணத்தின் எழுச்சி இன்னொன்றின் முடிவைக் குறிக்கும். ஒரு கணத்தின் முடிவு இன்னொன்றின் எழுச்சியைக் குறிக்கும். ஒரு வாழ்வின் காலத்தில் ஆத்துமாவின்றித் தற்காலிக மறுபிறப்பு நடைபெறுகிறது.
ஒரு புகையிரதத்தை அல்லது சங்கிலியைப் போன்று உணர்ச்சிகள் துண்டு துண்டானவற்றின் தொகுப்பு என்று நினைக்கக்கூடாது. அதற்கு மாறாக அது புலன்கள் எனும் கிளையாறுகளினால் ஊட்டப்பட்டு, அது சேர்த்துக்கொண்டு வரும் சிந்தனைகளை வெளியுலகிற்குப் பகிர்ந்து கொடுக்கும், ஆறாக உள்ளது. அந்த ஆற்றின் உற்பத்தி பிறப்பாகவும், அதன் முடிவு இறப்பாகவும் உள்ளன. அதன் ஓடும் விசையை, கிட்டத்தட்டக் கூட நிர்ணயிக்க முடியாத அளவுக்கு அதிவேகமானது. ஒரு சிந்தனை அசைவின் நிலைக்கும் காலம், ஒரு மின்னொளி நிலைத்திருக்கும் காலத்தை விட நூறுகோடி மடங்கு சிறியது.
சிலர் நம்புவதுபோல் உணர்ச்சிகள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கி வருவதல்லாமல், உணர்ச்சியின் மனநிலைகள் ஒன்றை ஒன்று அடுத்தடுத்து நிகழ்கின்றன. ஒரு முறை நிகழும் நிலை மீண்டும் நிகழ்வதில்லை. மேலும் அது முந்தியதை ஒத்துமிருப்பதில்லை. ஆனால் மானுடராகிய நாம் மாயை எனும் வலையினால் மூடப்பட்டு இத் தொடர்ச்சி நிலையானது என்றும், தொடர்ந்து ஒரு மாற்றமில்லாத ஆத்துமாவையும் அதாவது அத்தா எனப்படும் செய்பவரையும் செய்கைகளின் கொள்கலத்தையும் இந்த மாற்றமுள்ள உணர்ச்சிகளைப் புகுத்துகிறோம். மானிட விழித்திரையினால் பார்க்க முடியாததும், பண்பாடெய்தாதவர்களினால் எண்ணிப் பார்க்க முடியாததுமான, மின்னொளியின் பகுப்படைந்து, ஒன்றையொன்று அடுத்தடுத்து அதிவிரைவாகத் தொடரும் தீப்பொறிகளைப் போன்றது. உயிர் வண்டிச் சக்கரத்தின் ஒரு முனை மட்டுமே தரையில் பதிந்திருப்பதைப் போல உயிர் ஒரு சிந்தனைக் கணத்துக்கு மாத்திரம்தான் சீவிக்கும். எப்போதும் அது நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்தை நோக்கி மீட்கமுடியாதபடி வழுக்கிச் சென்றுகொண்டிருக்கும். இந்த நிகழ்காலத்துச் சிந்தனைக்கணம்தான் நாம் எப்படி உருவாகுவோம் என்பதை நிர்ணயிக்கின்றது.
"ஆத்துமா என்று ஒன்று இல்லையாயின் மீண்டும் மீண்டும் பிறப்பது என்ன?" என ஒருவன் கேட்கலாம்.
மீண்டும் பிறப்பதற்கு எதுவுமில்லை. உயிர் முடிவடையும்போது கன்மச் சத்தி இன்னொரு விதமாக மீண்டும் உருவெடுக்கிறது. பிக்கு சிலாச்சாரர் கூறுவதுபோல இந்நிலையற்ற கன்மவிசையானது மறைமுகமாகச் சென்று தனக்கேற்ற குழுவில் காட்சி கொடுக்கும்.
அது இங்கே ஒரு சிறிய பூச்சியாக அல்லது புழுவாகவும், அங்கே ஒரு கண்ணைப் பறிக்கும் தேவனாகவும் காணப்படுகின்றது. அதன் ஒரு உருவான வாழ்வு முடிவடைந்ததும், அது வெறுமனே விலகிச் சென்று, தகுந்த சூழ்நிலையில் இன்னொரு உருவில் தன்னை வெளிப்படுத்துகிறது. பிறப்பு, மன-உடல் சார்ந்த தோற்றப்பாட்டின் எழுச்சியாகும். மரணம் ஒரு தற்காலிகத் தோற்றப்பாட்டின் தற்காலிக முடிவாகும்.
ஒரு உடல்நிலையின் எழுச்சி அதன் முந்திய நிலையின் காரணமாகவிருப்பதைப்போல், மன-உடல் சார்ந்த தோற்றப்பாடும் அதன் முந்திய அமைப்பினால் வரையறுக்கப்படுகிறது. ஒரு வாழ்வின் சீவியகாலம் ஒரு சிந்தனைக் கணத்திலிருந்து இன்னொன்றுக்கு ஒரு நிலையான பொருளின்றிச் செல்ல முடிவதைப்போல, பல வரிசையான உயிர்ச்செய்முறைகள், ஒரு அழிவில்லா ஆத்துமாவின் துணையில்லாமலே ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலையை எடுக்க வல்லன.
செயலறிவு சார்ந்த வகையில் பௌத்தம் தனிமனிதப் பண்பின் இருப்பை முற்றாக மறுக்கவில்லை. அது ஒரு முடிவான வகையில் இல்லை என்பதைக் காட்டவே பௌத்தம் முயலுகிறது. தனிப்பட்டவனுக்குத் தரப்படும் பௌத்த சித்தாந்தச் சொல் 'சந்தான' என்பதாகும். அது தொடர்ச்சி அல்லது சுழற்சி என்று அர்த்தப்படும். அது மன-உடல் சார்ந்த மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவரினதும் கன்மவிசை இம்மூலக்கூறுகளை ஒன்று சேர்க்கின்றது. கன்மத்தினால் கட்டுப்படுத்தப்பட்டது, தற்பிறப்புக்கு மட்டும் உட்பட்டது. ஆனால் ஆரம்பமில்லா முற்காலத்தில் தொடக்கத்தை உடையதும் பின் எதிர்காலத்தில் தொடரும் இந்தத் தங்குதடையின்றிய மன-உடல் சார்ந்த தோற்றப்பாட்டைத் தான் பௌத்தம் மற்றச்சமயங்களின் ஆத்துமாவுக்குப் பிரதியீடாகத் தருகிறது.
* * * * *