பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - மறுபிறப்பு
பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு
வண. நாரத தேரர் அவர்கள்.
தமிழில்
செல்வி யசோதரா நடராசா
அத்தியாயம் 7 - மறுபிறப்பு
கன்மவிசை இருக்கும்வரை மறுபிறப்பும் இருக்கும். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படாத இந்த விசையின் காணக்கூடிய விளக்கமே உயிர்கள் ஆகும். மரணம் என்பது இந்தத் தற்காலிக தோற்றப்பாட்டின் தற்காலிக முடிவே. அது உயிர் உள்ளன எனப்படுவனவற்றின் முழு அழிவன்று. சடப்பொருளின் வாழ்க்கை முடிவடைந்தாலும் அதை இதுவரை செயல்பட வைத்த கன்மவிசை அழிக்கப்படுவதில்லை. நிலையற்ற ஊனுடம்பின் சிதைவினால் சிறிதும் கலைக்கப்படாதிருக்கும் இந்தக் கன்மவிசை இப்பிறப்பின் சாகும் தறுவாயில் நினைக்கும் நினைவு இன்னொரு பிறப்பின் புதிய விழிப்புணர்ச்சிக்கு அடிகோலுகிறது.
அறியாமையிலும் இச்சையிலும் வேரூன்றிய கன்மமே மறுபிறப்பைத் தோற்றுவிக்கிறது. முற்பிறப்பின் கன்மம் இப்பிறப்பைத் தோற்றுவிக்கிறது. முற்பிறப்பின் கன்மம் இப்பிறப்பை வரையறுக்கும். இப்பிறப்பின் கன்மன் முற்பிறப்பின் கன்மத்தோடு சேர்ந்து மறுபிறப்பை நிர்ணயிக்கும். நிகழ்காலம், இறந்த காலத்தின் குழந்தை. அது மீண்டும் வருங்காலத்தின் தாயாகும்.
இறந்தகால, நிகழ்கால, எதிர்கால வாழ்வுகள் உண்டு என்று நாம் கருதினால்,
அப்போ, "உயிரின் முழுமுதல் உற்பத்தி எது," என்ற மர்மமெனக் கருதப்படும் பிரச்சினை எம்மிடம் தோன்றும். உயிருக்கு ஒரு ஆரம்பம் உண்டு அல்லது அதற்கு ஆரம்பமில்லை என்று இருக்க வேண்டும்.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு சாரார் எல்லாம் வல்லவராக அல்லது ஒரு சக்தியாகக் கடவுள் என்பவரை முதற்காரணராகக் கொள்கின்றனர்.
இன்னொரு சாரார், முதற்காரணம் என்ற ஒன்றை ஏற்க மறுக்கின்றனர். ஏனெனில் காரியம் என்றும் காரணமாகவும், காரணம் காரியமாகவும் மாறுவதைப் பொது அநுபவத்தால் அறியலாம். காரண காரியம் என்ற வட்டத்தில் ஒரு முதற் காரணத்தைத் தேடுவது என்பதை நினைக்கவும் முடியாது. முதற் சாராரின்படி உயிருக்கு ஒரு ஆரம்பம் இருந்திருக்கின்றது. மற்ற சாராரின்படி உயிருக்கு ஒரு ஆரம்பமில்லை.
விஞ்ஞான ரீதியாக, நாங்கள் எமது பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட விந்துவினதும் முட்டையினதும் நேரடி விளைவுகள். அதன்படி உயிருக்கு முன்னுண்டு. முதலுருவின் மூலத்தைப் பற்றி விஞ்ஞானிகள் தமது அறியாமையை ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
பௌத்தத்தின்படி, நாம் செய்கைகளின் வார்ப்படத்திலிருந்து (கன்மயோனி) பிறக்கிறோம். பெற்றோர்கள் ஒரு நுண்ணிய கலத்தை மட்டுமே அளிக்கின்றனர். அதனால் உயிரை உயிர் முந்துகிறது. கருக்கொள்ளலின் போது முற்பிறப்பின் கன்மமே கருவை உயிர்ப்பூட்டி அதற்கு ஆரம்ப விழிப்புணர்ச்சியை அளிக்கிறது. முற்பிறப்பிலிருந்து பெறப்பட்ட கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கர்ம சக்திதான் ஏற்கனவே உள்ள உடல் சார்ந்த தோற்றப்பாட்டில் மனதுக்குரிய தோற்றப் பாட்டையும் உருவாக்குகிறது. இம் மூன்று தோற்றப்பாடுகளின் அமைப்பே மனிதன்.
ஒரு உயிர் இங்கு பிறப்பதற்கு, வேறெங்கோ இன்னொரு உயிர் இறக்கவேண்டும். இப்பிறப்பில் உள உடல் தோற்றப்பாடுகளின் அல்லது பஞ்சஸ்கந்தங்களின் எழுச்சியைத் திட்டமாகக் குறிக்கும் ஒரு உயிரின் பிறப்பு, முற்பிறப்பிலுள்ள ஒரு உயிரின் இறப்போடு ஒத்துள்ளது. அதாவது ஒரு இடத்தின் சூரியோதயம் இன்னொரு இடத்தின் சூரிய அஸ்தமனத்தைக் குறிப்பது போன்றது. இப்புதிரான கூற்றை நன்றாகப் புரிந்துகொள்ள, வாழ்க்கை ஒரு நேர்கோடாகவன்றி ஒரு வளைகோடாக எடுத்துக் கொள்ளல் வேண்டும். பிறப்பும் இறப்பும் ஒரு செய்முறையின் இரு தோற்றங்கள் மட்டுமே. பிறப்பு இறப்பை முந்துகிறது. திரும்ப இறப்பு பிறப்பை முந்துகிறது. மாறிமாறித் தொடர்ந்து நிகழும் பிறப்பு இறப்புகள் தனிப்பட்ட மனித வாழ்வின் சுழற்சியோடு இணைந்து சம்சாரம் எனப்படுகின்றது. இது திரும்பத் திரும்ப நிகழுகின்ற அலைந்து திரிதலை உருவாக்குகின்றது.
உயிரின் முழுமுதல் மூலம் எது? "சம்சாரம் தெரிந்து கொள்ளக் கூடிய முடிவை உடையதல்ல. அறியாமையால் தடுக்கப்பட்டு வேட்கையால் விலங்கிடப்பட்டு அலைந்து திரியும் உயிர்களுக்கு இந்த முழு முதல் ஆரம்பத்தை உணர்ந்தறிய முடியாது," என்று புத்த தேவர் கூறினார். அறியாமை, வேட்கை என்ற சேற்று நீரினால் ஊட்டப்படும் வரை, உயிர் என்ற ஓடை முடிவற்று ஓடிக்கொண்டிருக்கும். இவையிரண்டும் களைந்தெறியப்பட்டால் தான், ஒருவன் விரும்பும்போது அந்த ஓடையானது பிரவாகிக்காது நிற்கும். அப்பொழுது புத்தர்களைப் போலவும், அரகத்துக்களைப் போலவும் மறுபிறப்பு வாராதொழியும். அறியாமையினாலும் வேட்கையினாலும் பீடிக்கப்படாத உயிர்களையுடைய ஒரு நிலையை நாம் உணர்ந்தறிய முடியாததால், உயிரோடையின் தொடக்க நிலையைத் தீர்மானிக்கமுடியாது.
உயிர் வர்க்கத்தின் உயிரோடையின் ஆரம்பத்தைப் பற்றி மட்டுமே புத்ததேவர்
குறிப்பிட்டார். உலகின் ஆரம்பத்தையும் கூர்ப்பையும் பற்றி ஆழ்ந்தாராய்வது விஞ்ஞானிகளின் பொறுப்பாகும். மனிதனைக் குழப்பும் ஒழுக்கத் தத்துவச் சிக்கல்களையெல்லாம் விளக்கப் புத்த தேவர் முற்படவில்லை. மெய்யறிவு, அறிவூட்டல் முதலிய வற்றை நாடாத கோட்பாடுகளோடும், ஆராய்ச்சிகளோடும் அவர் சம்பந்தப்படவில்லை. அவர் தம்மத்தைப் பின் பற்றுவோரிடமிருந்து குருட்டு நம்பிக்கையை ஒரு முதற்காரணமாகக் காத்திருக்கவில்லை. அவர் துன்பத்தையும் அதன் அழிவையும் பற்றியே முக்கிய அக்கறை கொண்டார். இந்த ஒரு குறிப்பிட்ட செயல்படத் தக்க நோக்கத்தைத் தவிர்த்த மற்றைய தேவையில்லா விஷயங்கள் அவரால் புறக்கணிக்கப்படுகின்றன.
முற்பிறப்பு என்று ஒன்று உள்ளது என்பதை நாம் எப்படி நம்புவது?
மறுபிறப்புக்கு ஆதரவாகப் பௌத்தர், புத்தரையே ஒரு முக்கிய சாட்சியாகக் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் அவர் இறந்த கால, எதிர் கால வாழ்வுகளைப் பற்றிய புரிந்து கொள்ளக்கூடிய அறிவை அபிவிருத்தி செய்திருந்தார். அவருடைய போதனைகளைப் பின்பற்றி அவரது சீடர்களும் இவ்வறிவை அபிவிருத்தி செய்து, தம்முடைய முந்திய வாழ்வைப்பற்றி நன்றாக அறிந்து கொண்டனர்.
புத்தரின் வருகைக்கு முன், சில இந்திய இருடிகள் கூட, உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட சேய்மையில் நடப்பவற்றைக் காண்டல், கேட்டல் மற்றையோரின் மனதை அறிதல், முற்பிறப்பறிதல் போன்றவற்றில் புகழ் பெற்றிருந்தார்கள். தொடர்பு விதிகளுக்கிணங்கத் தமது முற்பிறப்புப் பற்றிய நினைவுகளை எளிதிற் தாமாகவே அபிவிருத்தி செய்து, அதன் சிறு சிறு பகுதிகளை நினைவுகூர்கின்றனர். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மிக அருமை. மதிக்கத்தக்க, நற்சான்று அளிக்கப்பட்ட இந் நிகழ்ச்சிகளிற் சில, மறுபிறப்புப் பற்றிய கருத்தைத் தெளிவாக விளக்க உதவியுள்ளன. சில நம்பகமான நவீன மனோதத்துவ நிபுணர்களின் அநுபவங்களும், மாறி மாறி வரும் பலவிதமான இயல்புடைய மனிதர்களின் அநுபவங்களும் இவ்வாறே உதவியுள்ளன.
சிலர் மானத வசீகர (hypnotic) நிலையில் தமது முற்பிறப்பின் அநுபவங்களை விவரிக்கின்றனர். சிலர் மற்றவர்களின் கடந்தகால வாழ்வை நினைவுற்றுக் கூறி வியாதிகளைக்கூடக் குணப்படுத்துகின்றனர்.
மறுபிறப்பினால் மாத்திரம் விளக்கக்கூடிய சில புதுமையான அநுபவங்களை நாம் சிலவேளைகளில் அடைகிறோம்.
எத்தனை தடவை நாம் முன்பின் கண்டு அறியாத சிலரை சந்திக்கும்போது நாம் அவர்களை நன்கறிந்துள்ளோம் என்ற உணர்வு எமக்கு ஏற்பட்டுள்ளது? எத்தனை தடவை, முன்பு பார்த்திராத இடங்களைக் காணும் போது இவ்விடங்கள் எமக்கு முன்பு நன்கு பழக்கப்பட்டவை என்ற நினைவு மனதில் எழுகின்றது?
"முந்திய தொடர்புகள் அல்லது இப்போதைய நற்பயன் மூலமாகவே தான், பழைய அன்பு மீண்டும் நீரில் தாமரை போன்று மேலெழுகின்றது," என்று புத்த தேவர் எமக்குக் கூறுகிறார். நம்பகமான நவீன மனோதத்தவ நிபுணர்களின் அநுபவங்கள், பேய், பிசாசு உருப்பற்றிய தோற்றப்பாடு, ஆவித் தொடர்புகள், புதுமையான மாறிவரும் பலவித மனிதப் பண்புகள் முதலியவை மறுபிறப்புப் பற்றிய பிரச்சினைகளை விளக்க உதவுகின்றன.
இவ்வுலகத்தில், புத்தர் போன்ற பரிபூரண மகான்களும், உயர்ந்த
பண்புடையோர்களும் வருகை தந்துள்ளனர். இவர்கள் திடீரென்று தோன்றியவர்களா? இவர்கள் ஒரே வாழ்வின் விளைவுகளா?
புத்தகோசர், பாணினி, காளிதாசர், ஹோமர், பிளேட்டோ ஆகிய உயர்ந்த பண்புடையோரையும், பாஸ்கால், மோட்சாட், பீதோவன், ரபெயில், ராமானுஜன் போன்ற சிறுவயதில் அருந்திறனடைந்த மேதாவிகளையும், ஷேக்ஸ்பியர் போன்ற தனித்திறமையாளரையும் நாம் எப்படிக் காரணம் கூறி விளக்குவது?
பாரம்பரியத்தை மாத்திரம் இவர்களுக்குக் காரணமாகக் கூறமுடியாது. "அப்படியானால் அவர்களது முன்னோர்கள் அதை வெளிப்படுத்தியிருப்பர். அவர்களை விடச் சிறப்பாக அவரது வழித்தோன்றல் அதைச் செயலில் விளக்கஞ் செய்து காட்டியிருக்கும்."
உம்மையில் மேன்மையான வாழ்வுகளையும் இம்மாதிரியான அநுபவங்களையும் பெறாமல், இம்மையில் இவ்வளவு உயர்ந்தவராகத் திகழ முடியுமா? அக்குறிப்பிட்ட பெற்றோரிடம் பிறப்பதும், அச் சாதகமான சூழ்நிலையில் அமர்த்தப்படுவதும் தற்செயலானவையா?
நாம் இங்கு கழிப்பதற்குப் புண்ணியஞ் செய்த சிலவருடங்கள் அல்லது மிகக் கூடிய நூறு வருடங்கள், ஈறில் காலத்துக்குப் போதிய ஒரு முன்னேற்பாடாக இருக்க முடியாது.
ஒருவன் நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் நம்பிக்கை கொண்டால் கடந்த காலத்தை நம்புவது நியாயமானதே. நிகழ்காலம் கடந்த காலத்தின் குழந்தையாகவும், எதிர்காலத்தின் பெற்றோராகவும் உள்ளது.
நாம் கடந்த காலத்தில் வாழ்ந்திருந்தோம் என்று நம்புவதற்குக் காரணங்கள் இருந்தால், நாம் இவ்வாழ்வு முடிந்த பின்பும் தொடர்ந்து வாழ்ந்திருப்போம் என்று நம்பாமலிருப்பதற்கு எவ்விதக் காரணமும் நிச்சயமாக இல்லை. "இவ்வுலகில் நல்லவன் அதிர்ஷ்டம் இல்லாதவனாயும், தீயவன் செல்வனாகவும் இருக்கின்றார்களே," என்பது முற்பிறப்புக்கும் மறுபிறப்புக்கும் ஆதரவளிக்கும் ஒரு மிகச் சிறந்த காரணமாகும்.
மேலைத்தேய எழுத்தாளர் ஒருவர், "நாம் முற்பிறப்பைப் பற்றி நம்புகிறோமோ இல்லையோ, அது தான், ஏற்படும் அன்றாட வாழ்வின் உண்மைகளைப் பற்றிய மனித அறிவில் இடைவெளிகளை நிரப்பும் நியாயமான தற்கோள்களாகும். உலகம் முழுவதும் அவதானிக்கக் கூடியதாக நிலவியுள்ள நிலைபரங்கள், சுற்றாடல்கள், சூழல்கள் அனைத்திலும் உள்ள இரட்டையரில் காணப்படும் வேறுபாடுகளையும் ஷேக்ஸ்பியர் போன்று ஓரளவுக்கு மட்டான அநுபவமுள்ள மனிதர் வெவ்வேறுபட்ட மனித கதாபாத்திரங்களையும், முன்பின் கண்டறியாத காட்சிகளையும் வியக்கத்தக்க நுட்பமான வகையில் சித்தரிக்க முடிவதையும் ஒரு சிறப்புத் திறமையாளரின் அநுபவங்களைவிட அவரது படைப்புக்கள் உன்னதமாக உயர்ந்தெழுவதையும் குழந்தைகளின் வயதுக்கு மீறிய அறிவையும் உலகமெங்கும்காணப்படக்கூடிய மனம், ஒழுக்கம், மூளை, உடலமைப்பு, நிலைமை, சூழ்நிலைகள், சுற்றுப்புறங்கள், உடம்பு முதலியவற்றின் பெரிய வேறுபாடுகளையும் முற்பிறப்பு, கன்மம் என்ற இரண்டும் மாத்திரமே விளக்கக் கூடியதாக உள்ளன," என எழுதியுள்ளார்.
பரிசோதனையின் மூலம் மறுபிறப்புப் பற்றிய சித்தாந்தத்தை நிருபிக்கவோ தவறென்று காண்பிக்கவோ முடியாதென்பதைக் கூறவேண்டும். ஆனால் அது சாட்சி மூலமாக நிருபிக்கக்கூடிய ஒரு உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நான்கு உயரிய உண்மைகளைப் பற்றிய அறியாமையே (அவிஜ்ஜை) கன்மத்தின் காரணம் என்று புத்த தேவர் கூறியுள்ளார். எனவே அறியாமையே பிறப்புக்கும் இறப்புக்கும் காரணம். அது அறிவுடைமையாக மாறுதலடைவதே பிறப்பு இறப்பின் முடிவாகும்.
இந்த வகுப்பு நுண்ணாராய்ச்சியின் முடிவுகள் பிரதீத்திய சமுப்பாதம் என்ற பகுதியில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
* * * * *