மங்கள சூத்திரம் Mangala Sutta
சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 2.4
மங்கள சூத்திரம் – மங்களம்
Mangala Sutta: Blessings
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: வல்பொல சிறி இராகுலர்
Based on the English Translation by: Venerable Walpola Rahula
* * *
மங்கலங்கள்: நற்பேறுகள் விளைவதைக் காட்டும் சகுனங்கள்
இவ்வாறு நான் கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்தபகவான் சாவத்தியிலுள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகர் அச்சிரமத்தில் எழுந்தருளியிருந்தபோது, இரவு வெகு நாளிகை சென்ற பின்னர், அந்த ஜேதவனம் முழுவதையும் தன் ஒளியினால் பிரகாசமடையச் செய்த ஒரு தேவகுமாரர், புத்தபகவானை அணுகி அவரை வணங்கி ஒருபுறம் நின்றார். அவ்வாறு நின்று அத்தேவகுமாரர் பாச் செய்யுளால் பின்வருமாறு கேட்டார்:
'பெருத் தொகையான தேவரும், மனிதரும் தமது மகிழ்ச்சியை விரும்பி, மங்களந்தருபவை எவை என எண்ணி தேடியலைகின்றனர். உத்தமமான மங்களம் எது எனக் கூறியருள்வீராக.'
அறிவில்லாதவரோடு பழகாதிருத்தல் (1) , அறிவாளிகளோடு பழகுதல் (2), போற்றத்தக்கோரைப் போற்றுதல் (3) என்னும் இவை உத்தமமான மங்களங்கள்.
பொருத்தமான சூழலில் வாழ்தல் (4), முன்னே புண்ணிய கன்மங்களைச் செய்தவராயிருத்தல் (5), தன்னை நல்வழியில் உய்த்துக் கொள்ளுதல் (6) இவை உத்தமமான மங்களங்கள்.
நிறைந்த கல்வியறிவு உடையவராயிருத்தல் (7), கைத்தொழில்களில் திறமையுடையவராயிருத்தல் (8), நல்லொழுக்க நெறியில் தேர்ந்த பயிற்சி (9), இனிய பேச்சுடையவராயிருத்தல் (10) இவை உத்தமமான மங்களங்கள்.
தாய் தந்தையரை ஆதரித்தல் (11), மனைவி மக்களைப்பேணுதல் (12,13), குற்றமற்ற அழுத்தமில்லாத தொழில் (14) இவை உத்தமமான மங்களங்கள்.
பெருந்தன்மை கொண்ட ஈகை மனம் (15), நன்னடத்தை (16), உற்றார் உறவினர்க்கு உதவுதல் (17), களங்கமற்ற செயல்கள் (18) இவை உத்தமமான மங்களங்கள்.
தீச்செயள்களை மேற்கொள்ளாதிருத்தல், மேற்கொண்ட தீச் செயல்களை மேலும் செய்யாது விலக்குதல் (19), மது பானத்தை விலக்குதல் (20), அறத்தில் அயர் வின்றியிருத்தல் (21) இவை உத்தமமான மங்களங்கள்.
மரியாதை (22), பணிவு (23), திருப்தி கொண்ட மனம் (24), செய்நன்றி மறவாமை (25), சரியான நேரத்தில் அறவுரை கேட்டல் (26) இவை உத்தமமான மங்களங்கள்.
பொறுமை (27), கடமையுணர்வோடு கூடிய கீழ்படிதல் (28), துறவோருடன் தொடர்பு (29), உசிதமான காலத்தில் அறநெறிபற்றி உரையாடல் (30) இவை உத்தமமான மங்களங்கள்.
புலனடக்கம் (31), புனித வாழ்வில் நிலைபெறுதல் (32), நான்கு உயறிய சத்தியங்களை உணர்ந்தரிதல் (33), நிப்பாண நிலையடைதல் (34) இவை உத்தமமான மங்களங்கள்.
உலகத்தொடர்பினால் கலங்காத உள்ளம் (35), துயரின்மை (36), களங்கமின்மை (37), தீயவற்றிலிருந்தும் அச்சத்திலிருந்தும் பாதுகாப்பனதாய் இருத்தல் (38) இவை உத்தமமான மங்களங்கள்.
இவைகளையெல்லாம் கொண்டு நிறைவு பெற்றவர்கள் எங்கும் வெல்வதற்கரியராயிப்பர்; என்றும் எங்கும் சுகம் அடைவார். அவர்களுடையதே இந்த உத்தமமான மங்களங்கள்.
இந்தச் சத்திய வசனங்களால் நமக்கு ஜயமங்கலம் உண்டாகட்டும்!
குறிப்பு: 33,34 ஞான நிலை அடைந்தவர்கள், 35-38 அதன் பலன்
தமிழில் நவாலியூர் சோ. நடராசர் (சில மாற்றங்களுடன்)
* * *
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பு நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.