குற்ற உணர்வு

குற்ற உணர்வு

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Guilt

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

செய்த குற்றத்திற்காக வருந்துவது பயனற்றது. செய்ததையே நினைத்து நினத்து வருந்திக் கொண்டிருக்க வேண்டாம். கடந்த காலமோ முடிந்து விட்டது. விட்டு விடுங்கள். நிகழ் காலத்தை நோக்குங்கள். நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அக்கறை செலுத்துங்கள்.

கேள்வி (பெண்): ஒரு இல்லற மனிதர் ஒழுக்கத்துடன் வாழ முயல்கிறார். அவர் ஐந்து ஒழுக்கங்களையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். ஆனால் ஒரு நாள் ஒழுக்கம் தவறி நடந்து விடுகிறார். அதன் பின் அவர் யாரிடமாவது சென்று தான் செய்த தவற்றைக் கூறிப் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமா?

பொதுவாக அப்படிச் செய்யலாம். ஆனால் செய்த தவற்றை நீங்களே உணர்வீர்களென்றால் அப்படிச் செய்யத் தேவையில்லை. உங்கள் தவறு உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து, மீண்டும் ஐந்து ஒழுக்கங்களைத் தொடரத் தீர்மானித்து விட்டீர்களென்றால் போதும். செய்ததையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அதை மறந்து விடுங்கள். நிகழ் காலத்தை நோக்குங்கள். நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அக்கறை செலுத்துங்கள். கடந்த காலமோ முடிந்துவிட்டது. கன்மப் பயன் வரும்போது அதைக் கையாள வேண்டும். செய்த குற்றத்தை நினைத்து வருந்த வேண்டும் என்று புத்தர் கூறவில்லை. செய்த குற்றத்துக்காகக் கவலைப் படுவது நல்லதல்ல.

'ஹிரி-ஒத்தாப்பா' (பாலி மொழி) – வெட்கமும், பயமும் நல்லது. திறனற்ற செயல் செய்வதால் நமது நலனுக்குப் பாதிப்பு உண்டாக்கி விடுவோமோ என்ற பயம் இருக்க வேண்டும். நமது சுயமரியாதையைக் கெடுக்கும் செயல்களைச் செய்தால் நமக்கு வெட்கக் கேடு உண்டாக்கி விடும் என்பதை நினைவில் வைத்திருப்பது நல்லது. ஆனால் குற்ற உணர்வு வேண்டாம். அது மனத்தில் குழப்பத்தை உண்டு செய்யும். உங்களை வருத்தி, மனம் ஒருமுகப் படுவதைக் கெடுக்கும். எனவே அந்த எண்ணங்களை விட்டு விடுங்கள். மனத்தில் குற்ற உணர்ச்சி இருப்பதால் எந்த இலாபமும் இல்லை.

கேள்வி (பெண்): பயமும் வெட்கமும் மனத்தில் குழப்பம் உண்டாக்காதா?

உண்டாக்காது. ஏனென்றால் அவை மேலும் தவறு செய்வதைத் தடுப்பவை. அது நல்லது. அவை உங்களை இவ்வாறு சொல்ல வைக்கிறது, 'அதைச் செய்யாதே! பின்னால் வருத்தப்படுவாய். உன்னைப் பின்னால் சோகத்தில் மூழ்க வைத்து விடும். மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அறிவாளிகள் நீ செய்யவிருப்பதைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்கள் எண்ணங்கள் மீது உனக்கு மரியாதை இருக்கிறதல்லவா?' இவ்வாறு நினைப்பதெல்லாம் தான் பயமும் வெட்கமும்.

குற்ற உணர்வைப் பொருத்தவரை, 'அடச் சை, அதைச் செய்யாதிருந்திருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன் அதைச் செய்யாமல் இருந்திருக்கலாம். அதைச் செய்ததற்கு வருந்துகிறேன். அதைச் செய்ததற்கு வருந்துகிறேன்,' என்று திரும்பத் திரும்ப நினைப்பதால் என்ன பயன்? இது நேரத்தை வீணாக்கும் செயல். தவறைச் செய்தவரோ வேறு ஒருவர். உங்கள் முட்டாள் தனமாக நடந்து கொண்ட தம்பி. (அதாவது நீங்கள் இளம் வயதில் செய்ததால் இப்போது அதை உங்கள் தம்பி செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். நாம் தொடர் மாற்றம் கொண்டிருப்பதால் தவறைச் செய்தவர் வேறு, இன்றைய நீங்கள் வேறு) அல்லது நீங்கள் பெண்ணாயிருந்தால் தவறு செய்தவர் உங்கள் தங்கை. வினைப்பயனை அனுபவிப்பது அண்ணனும், அக்காளும் தான். (சிரிப்பு).

கேள்வி: கன்மப் பயனின் விளைவுகளைத் தடுக்க ஏதாவது செய்ய முடியுமா?

அதன் விளைவுகளைச் சற்றுத் தணிக்கலாம், சற்று தாமதஞ்செய்யலாம். ஆனால் இறுதியில் எல்லாம் கன்மச் சட்டத்தின் படி நடைபெறத்தான் செய்யும். ஆனால் நீங்கள் அதைக் கொஞ்சம் அடக்கலாம். அளவற்ற அன்பான எண்ணங்கள், பண்புள்ள நடத்தை போன்றவையெல்லாம் தீவினைப்பயன் நிகழ்வதைச் சற்றுத் தடுக்கும். அதே சமயம் வெறுப்பு போன்ற மன நிலைகள் தீவினைப் பயனை அடைவதை துரிதப் படுத்தும். முற்கால வினைப்பயன்கள் இந்த வாழ்வில் அனுபவிக்கப் படாமலும் போய்விடலாம். நீங்கள் மனத்தில் அளவற்ற அன்பை வளர்க்க வேண்டும். குற்ற உணர்வைக் களைய வேண்டும். இலேசான மனம், அன்பான மனம் இவை எல்லாம், தான் செய்த தவறுகளுக்கான கன்ம விளைவுகளுக்கு விஷமுறிவு மருந்து போன்றதாகும். இது நல்லது. நல்ல செய்தி.

குற்ற உணர்வு முற்காலத்துச் செயல்கள் பற்றி முட்டாள்த் தனமாகக் கவலை கொள்வதாகும். அதற்கு மாறாக நாம் மற்றவர் நலன் மீதும், நமது நலன் மீதும் நிகழ் காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் அக்கறை கொள்ளவேண்டும். இது ஒரு அறிவுள்ள மன உணர்ச்சியாகும்.

https://sites.google.com/site/budhhasangham/ajahnchah3/similies3

மொ. ஆ. குறிப்பு:

'ஹிரி-ஒத்தாப்பா': திறமையான செயல்களைச் செய்யும் போது அவற்றோடு ஒத்து இருக்கும் இரட்டை உணர்ச்சிகள். இவையே "உலகைப் பாதுகாக்கின்றன".

'ஹிரி' என்றால் நம் சுய மரியாதையைக் கெடுக்கும் செயல் எதையும் செய்யாமல் தடுக்கும் நமது மனச்சாட்சி.

'ஒத்தாப்பா' என்றால் நமக்கும் மற்றவருக்கும் கேடு விளைவிக்கும் திறனற்ற செயல்களைச் செய்யாதிருக்க, நம்முள் தோன்றும் ஆரோக்கியமான பயம்.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Guilt is not a profitable emotion

Q. So as a lay person if you are trying to be virtuous and keep all of the precepts and do get to a point where you are doing really good and then you crash. Is the idea to go to some somebody confessing..

You could but it is not necessary as long as you know. (that you did something wrong). As long as you are clear about it and just resolve to start again. Don't look back, just let it go. Look at the present. Concern for the present and the future. The past doesn't exist. When the karma comes back you will handle it. So guilt is not a recommended thing by the Buddha. Guilt is not recommended.

Hiri-ottappa - fear and shame is recommended. Fear for you own well being and a sense of personal conscience about your own behavior. But not guilt. Just clutters up your mind. Makes you sad and shatters your concentration. So let go of it. Start fresh. It is not a profitable emotion.

Q: And fear and shame would not clutter your mind?

No. Because it is preventive. In other words it keeps you from getting you in trouble. That's good. Keeps you saying 'Don't do that! You won't like it later. You will regret it. You don't want to make yourself sad. And what would others think that are wise. What would they think of that? You value their opinion, right?' That's the fear and shame.

As far as guilt, 'Oh damn it, I wished I hadn't done that fifteen years ago. I wish I hadn't done that. I wish I hadn't done that.' Whats the use of that? A waste of time. Some body else did it actually. Your younger foolish brother (i.e you when you were younger. Not the same person that you are now) or younger foolish sister did it. And your older brother or sister will have to face the consequences. (laughter).

Q. Can you do stuff to prevent the karma coming re-bouncing back ..

You can suppress it, hold it down. Ultimately everything has to play itself out but you can hold it down. Emotions as loving kindness and virtue tend to supress the negative result from rising. And whereas ill-will and everything accelerate and make it easier to experience results of negative past actions. They resonate. So you may not experience in this life at all any repercussions of past bad actions. You try to cultivate positive loving kindness and no guilt and no remorse. Just love of lightness and happiness and so forth. That is the best antidote to having done negative things in the past. It is nice. Good news.

Guilt is a foolish concern over the past. Instead have a wise concern for others and your well being in the present and the future which is a wise emotion to happen.