வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
VII ஆம் அத்தியாயம்
தியானம் - மனப்பயிற்சி : பாவனை
'Meditation' or Mental Culture: Bhavana
புத்தர் கூறினார்: 'ஓ பிக்குகளே, இரண்டுவிதமான பிணிகள் உண்டு. ஒன்று உடற்பிணி, மற்றது மனப்பிணி. இரண்டொருவருடம் உடற்பிணி இன்றி இருப்பவர் உண்டு. நூறு வருடத்துக்கும் அதற்கு மேலும் உடற்பிணி இல்லாதவர் இருக்கலாம். ஆனால் ஒரு கணமேனும் மனப்பிணியில்லாதிருப்பவரைக் காண்பது அருமை. மனப்பிணி இல்லாதவர்கள் அருகதர்கள் மாத்திரமே.'
புத்தருடைய போதனை, விசேஷமாக அவர் போதித்த தியான முறை மனப்பிணிகளை முற்றாய் அகற்றிச் சித்தசமாதானமும் அமைதியும் உண்டாக்கக் கூடியது. பௌத்தரும், புத்தசமயத்தைச் சேராதவர்களும், புத்தர் போதித்த இந்தத் தியானமுறையைச் சரிவர அறிந்து கொள்ளாதிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். ஏனைய அமிசங்களைவிட பாவனை சம்பந்தமான இந்தப் போதனையே பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பாவனை என்று சொன்னதும் தினசரி வாழ்விலிருந்து அகன்றுவிட வேண்டுமென்ற எண்ணம் மக்கள் மனத்தில் உண்டாகிறது. குறிப்பிட்டதொரு ஆசன முறையை அனுசரிக்க வேண்டும் என எண்ணுகின்றனர். விஹாரங்களிலோ, குகைகளிலோ காணப்படும் சிலைகளைப்போல, சமூகத்தோடு தொடர்பில்லாத ஒரு ஏகாந்தமான இடத்துக்குப் போய் யோக சாதனையில், நூதனமான பாவனையில் அல்லது அனுபூதிசமாதியில் ஆழ்ந்திருத்தல் என்று நினைக்கிறார்கள். உண்மையான பௌத்த பாவனை இத்தகைய தப்பியோடும் முறையன்று. இவ்விஷயமாகப் புத்தர் போதித்த நெறி, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, பின்னர் தவறாக விளக்கப்பட்டது. பிற்காலத்தில் அது உருமாறி இழிந்து ஒரு கிரியையாகவும், தொழில் நுட்பம் சார்ந்த சடங்காகவும் மாறிற்று [1].
'மூன்றாவது கண்' என்று கூறப்படும் திவ்விய கண்களைப் பெறுவதற்காக யோக நெறியைப் பின்பற்ற வேண்டுமென்பதே பலருடைய அபிலாஷை. மற்றவர்க்கில்லாத இந்தச் சக்தியைத் தியானத்தின் மூலம் தாம் பெற விரும்புகின்றனர். சில காலத்துக்கு முன் இந்தியாவிலே காதின் மூலம் பார்க்கும் சக்தியைப் பெறமுயன்ற பௌத்த பிக்குணி ஒருவர் இருந்தார். அவருக்குக் கண் நன்றாகத் தெரியக்கூடியதாயிருந்தது. இது தவறான ஆன்மிகப் போக்கென்றே கூற வேண்டும். இது சக்தி பெறவேண்டுமென்ற ஆசையன்றி வேறன்று.
தியானம் என்ற சொல் ஆதியில் பாவனை என வழங்கப்பட்டது. பாவனை என்றால் பயிற்சி, வளர்த்தல், அபிவிருத்தி செய்தல், அதாவது மனத்தைப் பயிற்றுதல் அல்லது மனத்தை அபிவிருத்தி செய்தல் எனப் பொருள்படும். பௌத்தத்தில் பாவனை என்பது மனத்தைப் பயிற்றுதல், பல்லாற்றானும் அதை அபிவிருத்தி செய்தல் என்பதையே கருதும். இதன் நோக்கம் மனத்தைக் களங்கங்களிலிருந்து தூய்மைப் படுத்துதல், மனத்தைக் கலக்கும் தன்மைகளைப் போக்குதல். இவை காமம், துவேஷம், சோம்பல், கவலைகள், சஞ்சலங்கள், ஐயங்கள் என்பவற்றால் உண்டானவை. இவற்றைக் களைந்து மனத்திலே மன ஒடுக்கம், விழிப்பு, விவேகம், உறுதி, ஊக்கம், விசாரணை, நம்பிக்கை, ஆனந்தம், சாந்தி என்பவற்றை ஊன்றி, யதாபூத ஞானத்தை அதாவது உள்ளத்தை உள்ளபடியறியும் பக்குவத்தைத் தரும் உயர்ஞானத்தை அடையவேண்டும். அதன் பயனாகப் பரமார்த்தமான நிர்வாணத்தை அடைய வேண்டும்.
இதில் இரண்டு வகையான தியானம் உண்டு, ஒன்று சமத எனப்படும் சமாதி. இது ஏகாக்கிர சித்தம் எனப்படும். அதாவது மனதை ஒரு நிலைப்படுத்தல். இது பாளியில் சித்தேகக்கதா என்றும் சமஸ்கிருதத்தில் சித்தைகாக்கிரதா என்றும் வழங்கும். இதனை அடைவதற்குப் பல வழிகள் பிடகங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றின் பயனாகச் 'சூனியமண்டலம்', 'காணல் காணாதிருத்தல்' (நேவா சஞ்ஞா நா சஞ்ஞா) என்ற மண்டலம் என்னும் மிக உயர்ந்த சமாதி நிலைகளை அடையலாம். இந்த அனுபூதி நிலைகளெல்லாம் மனத்திலுண்டானவை. மனத்தினால் ஆக்கப்பட்டவை, உபாதிக்குட்பட்டவை (சங்கத) என்கிறார் புத்தர்.
இவை பரமார்த்தமன்று, சத்திய தரிசனமன்று, நிர்வாணமன்று. இத்தகைய யோகமுறைகள் புத்தர் காலத்துக்கு முந்தியே நிலவிவந்தன. எனவே இவை தூய பௌத்த முறைகளல்ல. ஆனால் பௌத்த தியான முறைகளில் பேசப்படுகின்றன. நிர்வாணமடைவதற்கு இவை அவசியமில்லை. புத்தர் ஞான ஒளி பெறுவதற்கு முன்னர் பல ஆசிரியர்களிடம் இந்த யோக முறைகளைப் பயின்று மிக உயர்ந்த சமாதிநிலைகளையடைந்தார். ஆனால் அவை நிர்வாண முத்தியை அருளவில்லை. பூரணவிடுதலை கொடுக்கவில்லை. பரமார்த்த தரிசனத்தை அருளவில்லை. இச்சமாதி நிலைகள் இப்பிறப்பில் சுகத்தைத் தந்தன (திட்ட தம்ம சுகவிஹாரா). சாந்த வாழ்வை அருளின (சந்தலிஹாரா) என்று புத்தர் கூறுகிறார். அதற்கு மேல் அவை ஒன்றையும் தரவில்லை எனக் குறிப்பிட்டார்.
எனவே நிர்வாணமென்னும் பூரணவிடுதலையை மனத்துக்களித்துப் பரமார்த்தத்தைக் காட்டக் கூடியதும் பொருள்களின் உண்மையான தன்மையைக் காட்டக்கூடியதுமான விபஸ்ஸனா (சமஸ்கிருதம் விபஸ்யனா அல்லது விதர்சனா) என்ற தியானத்தைக் கண்டு பிடித்தார். இதுவே பூரணமான பௌத்த தியானம். இதுவே பௌத்த முறையைச் சார்ந்த மனப்பயிற்சி. இது கடைப்பிடி, சதி, விழிப்பு, மடியின்மை, கூர்ந்து கவனித்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆராய்வு முறை.
இது பெரிய விஷயம். ஒரு சில பக்கங்களில் விளக்க இயலாது. ஆனால் இந்த பௌத்த யோக நெறியை இங்கே மிகச் சுருக்கமாக, பருந்துப் பார்வையாக ஆராய முற்படுகிறோம். காரிய பூர்வமான வகையில் இந்த மனப்பயிற்சி எடுத்துக் காட்டப்படுகிறது.
பாவனை பற்றிப் புத்தர் அருளிய மிக முக்கியமான அருளுரை சதிபட்டான சூத்திரம் எனப்படும். சதி என்பது கடைப்பிடி. மன நினைவு. அதை ஊர்ஜிதப்படுத்தல், நிலைப்படுத்தல் என்பது இதன் பொருள். இது தீக நிகாயத்தில் 22 ஆம் இலக்கச் சூத்திரமாகவும், மஜ்ஜிம நிகாயத்தில் 10 ஆம் இலக்கச் சூத்திரமாகவும் அமைகின்றது. இச் சூத்திரம் சம்பிரதாயப்படி பெரிதும் போற்றப்பட்டு வரும் ஒன்றாகும். அதனால் பௌத்த மடங்களில் வழக்கமாக ஓதப்படுகிறது. இல்லங்களில் குடும்பத்தவர் பயபக்தியோடு சூழ்ந்திருந்து இதனைப் பாராயனஞ் செய்வர். மரணப்படுக்கையில் இருப்பவருடைய கட்டிலருகேயிருந்து, அவருடைய கடைசி எண்ணங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகப் பிக்குமார் இதனை ஓதுவது வழக்கம்.
இங்கே கூறப்படும் தியான முறை வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அதாவது நமது தினசரி வாழ்வோடும், நாளாந்த நடவடிக்கைகளோடும், நமது இன்பதுன்பங்களோடும், நமது பேச்சு, சிந்தனை, ஒழுக்கம், விவேகம் சார்ந்த விவகாரங்கள் என்பவற்றோடும் தொடர்புடையது.
இந்த அருளுரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்பிரிவு நமது காயத்தோடு தொடர்புடையது. இரண்டாவது நமது உணர்ச்சி, புலனுகர்வு (வேதனை) என்பவற்றோடு சம்பந்தப்பட்டது. மூன்றாவது மனத்தோடு (சித்தம்) தொடர்புடையது. நாலாவது ஒழுக்கம், விவேக விடயங்கள் என்பவற்றோடு சம்பந்தமுடையது (தம்மா).
தியானம் என்ன முறையில் அமைந்திருந்தாலும் இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது கடைப்பிடி அதாவது விழிப்பு, நினைவு (சதி) கவனமும் கூர்ந்து அவதானித்தலும் (அனுபஸ்ஸனா) ஆகும்.
காயம் சம்பந்தமான தியானத்தில் மிகப் பிரசிதமானதும் காரிய பூர்வமானதும் [2]ஆனாபானசதி எனப்படும். அதாவது உள்வாங்கும் மூச்சையும் வெளியே செலுத்தும் மூச்சையும் கவனித்தல். இந்த ஆனாபான சதி செய்யும் போது தான் விசேடமான, குறிப்பிட்ட, ஆசனம் பிடகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூத்திரத்தில் கூறப்பட்ட ஏனைய தியானங்களுக்கு ஆசன நியதி இல்லை. இவற்றைச் செய்யும்போது நீங்கள் இருக்கலாம், நிற்கலாம், நடக்கலாம், படுத்திருக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் ஆனாபான தியானத்தின் போது சூத்திரத்தில் கூறப்பட்ட படி 'அட்டணைக்காலிட்டு, உடலை நேராக வைத்துக் கொண்டு, மனத்தை அலையவிடாது, விழிப்பாயிருக்க வேண்டும்.' பத்மாசனமாய்க் காலை மடக்கிக் கொண்டிருப்பது எல்லா நாட்டவர்க்கும் இலேசானதன்று. விசேடமாக மேனாட்டவர்க்குச் சிரமமானதாயிருக்கும். எனவே காலை மடக்கியிருக்கக் கஷ்டப்படுவோர் கதிரையிலேயே இருக்கலாம். ஆனால் உடலை நேராக வைத்திருக்க வேண்டும். மனத்தை விழிப்போடு வைத்திருக்க வேண்டும். இந்தப்பயிற்சிக்கு உடலை நேராக வைத்திருப்பது மிக அவசியம். ஆனால் விறைப்பாக வைத்திருக்க வேண்டியதில்லை. கையை லாகவமாக மடியில் வைத்திருக்கலாம். இவ்வாறிருந்து கொண்டு கண்ணை மூடிக் கொள்ளலாம். அல்லது மூக்கு நுனியைப் பார்த்துக் கொள்ளலாம். எது வசதியோ அதை செய்யலாம்.
நீங்கள் அல்லும் பகலும் ரேசகம், பூரகம் என்ற அப்பியாசத்தை உங்களை அறியாமலே செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒரு விநாடியாவது மனத்தால் அதைக் கவனிப்பதில்லை. இந்தத் தியானத்தில் மனத்தைக் கவனிக்கச் செய்தலே விஷயம். மூச்சை சிரமமின்றி உள்ளே வாங்கி வெளியே விடுங்கள். இதை மனத்தால் விழிப்புடன் கவனியுங்கள். பூரகம் ரேசகம் என்பவற்றை மனம் விழிப்புடன் கவனிக்க வேண்டும். நீங்கள் மூச்சு விடும்போது சில சமயம் நீண்ட நேரம் மூச்சை உள்ளுக்கு இழுக்கலாம். சில சமயம் குறுகிய காலம் அவ்வாறு செய்யலாம். இதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டாம். சாதாரணமாக இயற்கையாய் மூச்சுவிடுங்கள். நீண்ட மூச்சு விடுங்கள். நீண்ட மூச்சு உண்டாகும் போது அதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் மூச்சில் மனமானது லயித்திருக்க வேண்டும். முற்றாக மூச்சில் ஏகாக்கிரசித்தம் ஈடுபட வேண்டும். மூச்சின் சலனங்கள், மாற்றங்கள் என்பவற்றை விழிப்புடன் கவனிக்க வேண்டும். மற்றைய விஷயங்களையெல்லாம் மறந்து விடுங்கள். சுற்றியுள்ளவற்றையும், சூழலையும் மறந்து விடுங்கள். பார்வையை எதிலும் செலுத்தாதீர்கள். இவ்வாறு ஐந்து அல்லது பத்து நிமிடம் பாவனை செய்யுங்கள்.
ஆரம்பத்தில் மனத்தை மூச்சில் லயிக்கச் செய்வது மிகக் கடினமாயிருக்கும். உங்கள் மனம் அலையும் விதத்தைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படலாம். மனம் ஓர் இடத்தில் நிற்கமாட்டாது. பல வேறு விஷயங்களை அது சிந்திக்கும். வெளியே சத்தம் கேட்கும். மனம் குழப்பமடையவும், ஆதலால் மனத்தளர்ச்சியடைவீர்கள். மனக் குழப்பம் அடைவீர்கள். ஆனால் இந்தப் பயிற்சியைத் தினமும் காலை மாலை ஐந்து பத்து நிமிடத்துக்குப் பயிற்சி செய்தால் படிப்படியாக மனம் மூச்சுவிடுவதில் கவனம் செலுத்தவும் அலையாதிருக்கவும் பழகிக் கொள்ளும். சில காலம் சென்றபின்னர் ஒரு விநாடியில் உங்கள் மனம் ஆனாபான சதியில் ஈடுபடப் பழகி விடும். பக்கத்திலிருந்து வரும் சத்தங்கூடக் கேளாது. புற உலகமே இல்லாமல் மறைந்துவிடும். இந்த வினாடி நேரம் உங்களுக்கு அற்புதமான அனுபவத்தை உண்டாக்கும். ஆனந்தமும் சுகமும் சாந்தமும் உண்டாகும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய ஆசைப்படுவீர்கள். இருந்தும் இது சிரமமாயிருக்கும். ஆனால் இப்பயிற்சியை ஒழுங்காகச் செய்து வந்தால் இந்த அனுபவம் நீண்ட நேரத்துக்கு அடிக்கடி ஏற்படச் செய்யலாம். அப்போது மனமானது முற்றாக ஆனாபான சதியில் லயித்து விடும். உங்களைப் பற்றிய எண்ணம் உண்டாகுமானால் எவ்வித பாவனையும் செய்ய முடியாது.
தியான சமாதிக்கு உங்களை இட்டுச் செல்ல இச்சாதாரணமான இலேசான 'ஆனாபானசதி' அவசியமாகும். பொருள்களின் தன்மையை ஆழ்ந்து அறியவும் புரிந்து கொள்ளவும் இத்தகைய 'ஏகாக்கிரசித்தம்' அவசியம். நிர்வாண சுகம் பெறவும் இத்தகைய தியானம் வேண்டும்.
இவற்றைவிட ஆனாபான சதி கைம்மேற்பலன் கொடுக்கக் கூடியது. உடல் நலத்துக்கு உகந்தது. சிறந்த ஓய்வுமுறை. நன்றாகத் தூங்கலாம். தினசரி வேலைகளைத் திறமையாகச் செய்யத் துணைபுரிவது. மனத்துக்குச் சாந்தியையும் நிம்மதியையும் தருவது. பரபரப்பும் கிளர்ச்சியுமடைகிற நேரங்களில் இரண்டொரு நிமிடம் ஆனாபான சதியை அனுசரித்தால் உடனே மன அமைதியும் சித்த சமாதானமும் உண்டாவதைக் காணலாம். நன்றாகத் தூங்கி விழித்தவர் போன்ற நிலையை அடைவீர்கள்.
மற்றொரு மிக முக்கியமான தியானமுறை நீங்கள் நாளந்தம் ஈடுபடும் தனிபட்ட கடமைகளையோ, பொது வேலைகளையோ, தொழில் துறைக் கடமைகளையோ செய்யும்போது உடலாலும், வாக்காலும் நிகழ்த்துவன ஒவ்வொன்றையும் விழிப்புடன் மனத்தில் கருதிக் கொள்ளுதல். நீங்கள் நடந்து கொண்டிருந்தாலென்ன, நின்று கொண்டிருந்தாலென்ன, இருந்தாலென்ன, கிடந்தாலென்ன, தூங்கினாலென்ன, உடலுறுப்புக்களை மடக்கினாலென்ன, நீட்டினாலென்ன, சுற்றிப் பார்த்தாலென்ன, உடையணிந்தாலென்ன, பேசினாலென்ன, பேசாதிருந்தாலென்ன, உணவருந்தினாலென்ன, பானம்பருகினாலென்ன, மலசல விமோசனஞ் செய்து கொண்டிருந்தாலென்ன இக்கருமங்களின் போதும், இது போன்ற வேறு கருமங்களின் போதும், நீங்கள் அவ்வப்போது செய்து கொண்டிருக்கும் காரியங்களை விழிப்புடனும் மனப்பூர்வமாகவும் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். அவற்றையே தியானிக்க வேண்டும். அதாவது அந்தக் கணம், செய்யும் தொழிலைப் பற்றியே நினைத்து, அதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். இறந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்கக் கூடாதென்பதன்று. அவற்றை நிகழ் காலக் கருமங்களுக்கும் தொழில்களுக்கும் தொடர்பு உண்டாகும் போதே நினைக்க வேண்டும். இறப்பும், எதிர்வும், கழிந்தவையும் எதிர்வருபவையும், நிகழ் கருமத்துக்கு உசிதமானவரையில் தான் அவற்றை நினைக்க வேண்டும்.
மக்கள் சாதாரணமாக நிகழ் கருமங்களில் லயித்திருப்பதில்லை. அந்தக் கனத்துத் தொழிற்பாடுகளையே சிந்திப்பதில்லை. இறந்தகால நினைவுகளிலும் வருங்கால நினைவுகளிலும் லயித்திருக்கிறார்கள். அவர்கள் இங்கே இப்போழுதே ஏதோ கருமஞ் செய்து கொண்டிருந்தாலும், நினைவெல்லாம் இறந்த காலத்திலும் எதிர் காலத்திலும் உலாவிக் கொண்டிருக்கும். கற்பனையில் ஏற்படும் பிரச்சினைகள், கவலைகள், சாதாரணமாகச் சென்று கழிந்து போன விஷயங்களில் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் என்பவற்றிலே தான் ஊசலாலாடிக் கொண்டிருப்பார்கள். அதனால் கையிலே உள்ள கருமங்களில் முற்றாய் ஈடுபடாமல், அதில் இன்பமடையாமலிருக்கிறார்கள். அதனால் நிகழ்காலத்தில், கையிலே உள்ள வேலையில் திருப்தி காணாது, மனச் சந்தோஷமடையாதிருக்கிறார்கள். எனவே செய்வதைத் திருத்தமாக ஆர்வமாக, முழு மனத்தோடு செய்ய முடியாதிருக்கிறார்கள். ஏதோ செய்து கொண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், அதில் அவரகள் முழுமனத்தையும் பறிகொடுப்பதில்லை.
போசன சாலையில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே ஏதாவது வாசித்துக் கொண்டிருப்பதைச் சில சமயம் நீங்கள் கவனித்திருக்கலாம். சாப்பிடக் கூட நேரமில்லாத, விடா முயற்சியுடையவர்போல் அவர் உங்களுக்குத் தென்படலாம். இது சாதாரணமாக நிகழும் ஒரு சம்பவம். இவர் வாசிக்கிறாரா அல்லது சாப்பிடுகிறாரா என்று நீங்கள் அதிசயப்படலாம். அவர் இரண்டு கருமங்களையுமே செய்கிறார் என ஒருவர் சொல்லலாம். உண்மையில் அவர் எதையுஞ் செய்யவில்லை. அவர் சாப்பாட்டையும் ரசிக்கவில்லை. வாசிப்பையும் ரசிக்கவில்லை. மனம் குழம்பியவராய், தன்னியல்பற்றவராய், கையில் மேற்கொண்ட கருமத்தில் ரசனையற்றவராயிருக்கிறார். தன்னையறியாமலே முட்டாள்தனமாக வாழ்விலிருந்து தப்பிக் கொள்ள முயல்கிறார் (அப்படியானால் சாப்பிடும் போது உடனிருக்கும் நண்பரோடு சல்லாபஞ் செய்யக்கூடாதென்பது கருத்தன்று).
எவ்வளவு முயன்றாலும் நீங்கள் வாழ்விலிருந்து தப்பிவிடமுடியாது. நகரத்திலிருந்தாலென்ன, குகையிலிருந்தாலென்ன, வாழ்வு நடத்தும்போது அதிலிருந்து விலகியிருக்க முடியாது. எப்படியும் வாழ்வைப் புறக்கணித்து ஒதுங்கி நிற்க முடியாது. உண்மையான வாழ்வென்பது இந்தக் கணமே. கடந்து போன காலங்களின் நினைவன்று. எதிர்வரும் காலத்தைப் பற்றிய கற்பனைகளல்ல. கழிந்தவை கழிந்தவையே. எதிர்வரவிருப்பவை இன்னும் தோன்றாதவையே. இந்தக் கணத்து வாழ்வில் ஈடுபடுபவரே உண்மையான வாழ்வை வாழ்பவர். அவரே மற்றவர்களை விட மனச்சந்தோஷ முடையவர்.
ஒரு நாளைக்கு ஒரு தரம் சாப்பிட்டுச் சாந்தமான எளிய வாழ்வு வாழும் புத்த சிராவகர்கள், மிக்க ஒளியுடையவராய்க் காணப்படுவதற்குக் காரணம் என்ன என்று கேட்ட போது புத்த பகவான் பதில் கூறினார். 'அவர்கள் கழிந்து போன காலத்தைப் பற்றிப் பச்சாத்தாபப் படுவதில்லை. எதிர் காலத்தைப் பற்றிக் கனாக் காண்பதில்லை. அவர்கள் நிகழ்காலத்தோடே வாழ்கிறார்கள். அதனால் பிரகாசமுடையவராயிருக்கின்றனர். எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திப்பதாலும், கழிந்து போனவற்றைப் பற்றிப் பச்சாத்தாபப் படுவதினாலும், முட்டாள்கள், வெட்டி வீழ்த்தப்பட்ட பச்சை நெட்டிகள் வெய்யிலில் காய்வது போலக் காய்ந்து விடுகின்றனர்.'
சதி என்று சொல்லப்படும் விழிப்பு, நிலை (கடைப்பிடி), உணர்விலே 'நான் இதைச் செய்கிறேன், நான் அதைச் செய்கிறேன்' என்ற தன்முனைப்பு உடையதாய் இருக்கக்கூடாது. நான் செய்கிறேன் என்ற அபிமானம் உண்டாகுமானால், தன்னுணர்வு உண்டாகி விடுகிறது. தன்னுணர்வு உண்டானால் நீங்கள் செய்யும் கருமத்தில் லயித்திராது, நான் என்ற முனைப்புடையவராகிறீர்கள். அதனால் கருமத்தைத் திருத்தமாகச் செய்ய முடியாது போகிறது. தன்னை முற்றாய் மறந்து கருமத்தை மாத்திரம் செய்வதில் ஈடுபட்டு அதில் மூழ்கிவிட வேண்டும். ஒரு பேச்சாளர் 'நான் சபையோருக்கு அறிவுரை புகட்டுகிறேன்' என்று தன்னுணர்வுடையவராவாரானால் அவர் பேச்சுக் குழம்பி, சிந்தனைப் போக்கு இடையறுந்துபோகும். ஆனால் அவர் தாம் எடுத்துக் கொண்ட விஷயத்தில் மூழ்கித் தன்னை மறந்து பேசத்துவங்கினால், அவருடைய பேச்சுச் சிறக்கும். எடுத்த விஷயத்தை தெளிவாக விளக்குவார். அவருடைய திறமை உச்ச நிலையை அடையும். கலைத் துறையிலும் காவியத்துறையிலும், அறிவுத்துறையிலும் ஆன்மீகத்துறையிலும் சிறந்து விளங்கும் ஆக்கங்களெல்லாம் தன்னை மறந்த நிலையில் உண்டான விளைவுகளே. இவற்றின் சிருட்டி கர்த்தாக்கள், தம்மை மறந்து, நம் ஆக்கங்களில் ஈடுபட்ட நேரங்களில் பிறந்தவையே அவை. அந்நேரங்களில் அவர்கள் தம்முணர்வற்றவர்களாய்ப் பரவச நிலையில் காணப்படுவர்.
இந்தச் சதி என்னும் விழிப்புநிலை, நமது கருமங்களைத் தன்னுணர்வின்றிப் புரியும் கடைப்பிடி, நிகழ் காலத்தில் நிலைத்துக் கைமேலுள்ள கருமத்தைச் செய்யும்படி அறிவுறுத்தப் புத்தபகவானால் போதிக்கப்பட்டது. ஸென் பௌத்தமும் இதனையே போதிக்கும். இங்கே விழிப்பு நிலையை உண்டாக்குவதற்கு இந்தத் தியான முறையில் குறிப்பிட்ட கருமங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் செய்யுங் கருமங்களைப் பற்றி மாத்திரம் விழிப்பாகத் தியானமாய் இருக்கவேண்டும். இந்தத் தியானத்துக்காக உங்கள் விலையுயர்ந்த அருமையான நேரத்தில் ஒரு விநாடியைக் கூடச் செலவு செய்ய வேண்டியதில்லை. நாளாந்த வாழ்வில் உண்டாகும் கடமைகளைப் பற்றி அல்லும் பகலும் விழிப்புடையவராய், முன்னுணர்வுடையவராயிருக்க வேண்டும். மேலே ஆராய்ந்த இவ்விரு தியான முறைகளும் நமது உடல் சம்பந்தமானவை.
இனி எமது உணர்ச்சிகள் (வேதனைகள்) சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் தியானம் ஒன்று உண்டு. நமது உணர்ச்சிகள் இன்ப உணர்ச்சி யாகவோ துன்ப உணர்ச்சியாகவோ, நொதுமல் உணர்ச்சியாகவோ இருக்கலாம். இங்கே ஓர் உதாரணம் மாத்திரம் எடுப்போம். நீங்கள் துன்ப உணர்ச்சியை அடைகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் உங்கள் மனம் கலக்கமுற்றதாய், தெளிவின்றி, மடிவுற்றிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் நீங்கள் கவலைப்படுவதற்குக் காரணமே தென்படுவதில்லை. இந்தத் துன்பவுணர்ச்சி பற்றி நீங்கள் கவலைப்படாதிருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். துன்பம், கவலை, துயர் என்ற உணர்ச்சிகள் வரவேண்டியதற்கு என்ன காரணமென்று தெளிவாக அறிய முயல வேண்டும். காரணத்தை ஆராய முயலுங்கள், அது எவ்வாறு தோன்றுகிறது, எவ்வாறு மறைகிறது என்பதை ஆராய முயல வேண்டும். விஞ்ஞானி, ஒரு பொருளை ஆராய்வது போல ஆராய வேண்டும். தன்னை அந்த ஆராய்ச்சியில் சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதாவது பற்றின்றிப் புறநோக்காக ஆராய வேண்டும். என்னுடைய உணர்ச்சி, என்னுடைய வேதனை என்று சொல்லி அதை ஆராயக் கூடாது. இஃது ஓர் உணர்ச்சி, ஒரு வேதனை என்று புற நோக்காக ஆராய வேண்டும். அந்த உணர்ச்சியின் தன்மையை உணரும் போது, அது எவ்வாறு தோன்றி மறைகிறதென்பதை அறியும்போது, உங்கள் மனம், அந்த உணர்ச்சி விஷயத்தில் சொந்தம் பாராட்டாது பற்றற்று நிற்கிறது. இதனால் பற்றின்மையும் விடுதலையும் உண்டாகிறது. எல்லா வேதனைகளும் இதே முறையில் ஆராய்ந்து பார்க்கப்படலாம்.
இப்போது நம்மனம் சம்பந்தமான தியானம் பற்றி ஆராய்வோம். உங்கள் மனம் பற்றுடையதாயிருந்தால் அல்லது பற்றற்ற நிலையிலிருந்தால் அதை முற்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். துவேஷம், பகை, பொறாமை என்பவற்றின் வசப்பட்டிருந்தால் அதை முற்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். கருணை, மைத்திரி என்பன நிரம்பியிருந்தால் அல்லது தெளிவற்றிருந்தால் அல்லது தெளிவாக விஷயங்களைப் புரியக்கூடியதாயிருந்தால் அல்லது இன்னோரன்ன குணங்களைக் கொண்டிருந்தால் அதை நன்கு அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்க வேண்டும். எமது மனத்தில் நிகழ்பவற்றை உள்ளபடி அறிவதில் நாம் விருப்புக்கொள்வதில்லை. எங்களுக்குப் பயமும் வெட்கமும் உண்டாகிறது. அதனால் அவ்வாறு செய்ய விரும்புவதில்லை. ஒருவன் தைரியமாக நேர்மையுடன் தன் மனத்தைத் திறந்து பார்க்க வேண்டும். கண்ணாடியில் முகத்தைப் பார்பது போல மனத்தைப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு பார்ப்பதன் நோக்கம் தீர்ப்புக் கூறுவதற்கன்று, கண்டிப்பதற் கன்று, சரி எது, நல்லது எது, தீயது எது என்று பகுத்தறிவதற்கன்று. வெறுமனே என்ன நடக்கிறது மனத்தில் என்று பார்ப்பதற்கு, ஆராய்வதற்கு, கவனிபதற்கு. நீங்கள் நீதிபதியல்லவே. நீங்கள் பற்றற்று விஷயங்களை ஆராயும் விஞ்ஞானி. உங்கள் மனப்பண்புகளைக் கவனித்து அதன் தன்மையைத் தெளிவாகக் கண்டு கொண்டால் அதில் தோன்றும் உணர்ச்சிகள், நிலைகள், விருப்பார்வங்கள் சம்பந்தமாகப் பற்றின்மையுண்டாகும். இந்தப் பற்றின்மையால் சுதந்திர நிலை உண்டாகிறது. அப்போது உள்ளதை உள்ளபடி காணும் பக்குவம் உண்டாகும்.
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்களுக்குப் கோபம் வந்துவிட்டதென்று வைத்துக் கொள்வோம்; அடக்க முடியாத கோபமும், துவேஷமும், பகைமையும் வந்துவிட்டதென்று வைத்துக் கொள்வோம். கோபம் நிறைந்தவனுக்குத் தான் கோபமுற்றிருக்கும் நிலை தெரியாது. அந்தக் கோபநிலையை அறிந்ததும், தன் கோபத்தன்மையை அறிந்ததும், அது வெட்கமுற்றது போலத் தணியத்துவங்குகிறது. அது எவ்வாறு எழுகிறது. மறைகிறது என்று அதன் இயல்பை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இச்சந்தர்பத்திலேயும் 'நான்' என்ற உணர்ச்சி உண்டாகக் கூடாது. 'என்னுடைய கோபம்', எனக்குக் கோபம் வந்துவிட்டதென்று நினைக்க கூடாது. மனத்தின் கோபத்தன்மையை ஒரு பொருளாகப் புறம்பாக அப்புறப்படுத்தி வைத்து ஆராய வேண்டும். சகல விதமான உணர்ச்சிகள், விருப்பங்கள், சித்தவிருத்திகள் எல்லாவற்றையும் இவ்வாறே நோக்க வேண்டும்.
ஒழுக்கம் 'ஆன்மீக விஷயம்' அறிவு விஷயங்கள் என்பன சம்பந்தமான ஒருவகை தியானமுண்டு. நமது ஆராய்ச்சிகள், கல்விகள், கேள்விகள், உரையாடல்கள், அவற்றைப் பற்றிய விவாதங்கள் எல்லாம் இந்த வகையான தியானத்தில் அடங்கும். இந்த நூலை வாசித்தல், இதிற் கூறப்பட்ட விஷயங்களை ஆழ்ந்து சிந்தித்தல், என்பன ஒரு வகைத் தியானமே. கேமக தேரருக்கும் ஏனைய சிராவக அடிகளுக்குமிடையே நடந்த உரையாடல் என்பனவெல்லாம் ஒருவகைத் தியானமென்பதை அறிந்தோம். இந்தத் தியானத்தின் பயனாக நிர்வாணம் கைவந்தது.
இந்தத் தியானமுறைப்படி பஞ்சநீவரணங்களைப் படித்துச் சிந்தித்து ஆராயலாம். அவை:
1. காம இச்சை (காமச் சந்தம்)
2. துவேஷம், பகைமை, குரோதம் (வியாபாத)
3. கழிமடம், சோர்வு (தீன-மித்த)
4. சஞ்சலம், கவலை (உத்தச்ச, குக்குச்ச)
5. ஐயம் (விசிகிச்சா)
இந்த ஐந்தும் எந்தவகையான முன்னேற்றத்துக்கும், விஷய விளக்கங்களுக்கும் தடையாயுள்ளன. (பஞ்சநீவரணம் என்றால் ஐம்பெரும் தடைகள்) இந்தத் தடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவன், நல்லது எது தீயது எது என்பதைப் பகுத்தறிய முடியாதிருப்பான்.
'பொஜ்ஜங்க' என்று சொல்லப்படும் ஞான அங்கங்கள் ஏழு குறிப்பிடப்படுகின்றன. இவற்றையும் தியானப் பொருளாகக் கொள்ளலாம் [3].
ஞான அங்கம் ஏழு. அவை:
1. கடைப்பிடி (சதி) காயத்தினாலும் மனத்தினாலும் செய்யும் கருமங்களில் விழிப்பாயிருந்து அவற்றைத் தியானித்தல்.
2. தர்மத்தைப்பற்றிய பல வித பிரச்சினைகளையும் நுணுகி ஆராய்தல் (தம்மவிசய). இதிலே நமது சமயம், ஒழுக்கம், தத்துவ ஞானம் என்பனபற்றிய கேள்விகள், கல்விகள், ஆராய்ச்சிகள், விவாதங்கள், உரையாடல்கள், இவை சம்பந்தமான உபந்நியாசங்களுக்குச் செல்லல் என்பன எல்லாம் அடங்கும்.
3. கடைசிவரை உறுதியோடு உழைக்கும் சக்தி (வீரிய)
4. பிரீதி (பீதி)விஷயங்களை மகிழ்ச்சியோடு படித்தல். மனமடிவு, அழகுணி வேதாந்த மனோபாவம், முதலியன தவிர்க்கப்படுதல்.
5. ஓய்வு (பஸ்ஸத்தி) உடல் மனம் இரண்டையும் ஓய்வுநிலையில் வைத்துக் கொள்ளல். உடலையோ மனத்தையோ விறைக்கவையாமை.
6. சமாதி அதாவது அமைதி. இதைமேலே ஆராய்ந்தோம்.
7. நடுநிலை (உபேக்கா) அலையாது நிற்கும் மத்தியஸ்த நிலை. வாழ்வின் மாற்றங்களைக் கண்டு மனங்கலங்காது அமைதியாயிருக்கும் நிலை.
இப்பண்புகளை வளர்க்க விரும்பினால் ஒருவர் உள்ளார்ந்த விருப்பமும், திடசங்கற்பமும், மனச்சார்பும் உடையவராயிருக்க வேண்டும். இங்கே கூறிய பண்புகளை வளர்க்க உதவும் லௌகீக காரணங்களும் ஆன்மீக காரணங்களும் பிடகநூலில் கூறப்பட்டுள்ளன.
பஞ்சகந்தங்களைப் பற்றியும் பாவனை செய்யலாம். சீலம் என்றால் என்ன? 'நான்' என்பது என்ன என்ற விஷயங்களையும் தியானிக்கலாம். மெலே ஆராயப்பட்ட நான்கு உயர்வாய்மைகளையும் தியானிக்கலாம். இவற்றை ஆராய்வதும், விமரிசித்தலும் மெலே கூறிய நாலாவது தியான முறையாகும், இவற்றின் பயனாக நிர்வாண சுகம் பெறலாம்.
இவற்றை விட, சம்பிரதாய பூர்வமாக, 40 விஷயங்கள் தியானப் பொருளாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் பிரம்மநிலை (பிரம்ம விஹாரம்) என்ற நான்கை இங்கு குறிப்பிடலாம்.
1. எல்லையற்ற கருணையையும் நல்லென்ணத்தையும் எங்கும் எல்லா உயிர்களிடத்தும் வேற்றுமையின்றிப் பரப்புதல் (மெத்தா) தாயானவள் தன் ஏக புத்திரனிடம் அன்பு செலுத்துவது போல என இது வருணிக்கப்படுகிறது.
2. துன்பமும் துயரும் அடைந்து அல்லற்படும் உயிர்கள் எல்லாவற்றுக்கும் காட்டும் அன்பு (கருணை).
3. மற்றவர்களடையும் நன்மை, வெற்றி, மகிழ்ச்சி என்பவற்றில் மகிழ்ச்சியடைதல் (முதிதா).
4. உபேக்கா அதாவது பற்றற்ற கலங்காத சாந்த நிலை.
* * *
[1] யோகாசாரர் கைந்நூல் (Yogacara Manual - edited by T. W. Rhys Davids, London அ 1896) பெரும்பாலும் 18 ஆம் நூற்றண்டில் இலங்கையில் எழுதப்பட்ட தியானம் சம்பந்தமான நூல். தியானம் என்பது மந்திரங்களைச் செபித்து மெழுகு வர்த்திகளைக் கொழுத்திச் செய்யும் கிரியையாக இருந்திருந்ததென்பதைக் காட்டும்.
[2] மொ.ஆ.கு. ஆனாபான என்பவை பிராணயாமத்தில் பூரகம் உள்ளே இழுத்தல் ரேசகம் வெளியே செலுத்தல் என யோக நெறியில் வழங்கப்படும். பூரகம் - உள்மூச்சு, ரேசகம் - வெளிமூச்சு.
[3] மொ.ஆ.கு. பொஜ்ஜங்க - போதி அங்கம் - ஞானம் பெறுவதற்குரிய அங்கங்கள். போதி என்பது ஞானம்.