அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko
அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்


தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
தணிசாரோ பிக்கு
Compiled and Translated by
Thanissaro Bhikkhu

The Celibate Life
துறவற வாழ்வு (பிரமசரிய வாழ்வு)
§ "Some people say that monks don't do any work, but actually the work of abandoning your defilements is the most difficult work in the world. The work of the everyday world has its days off, but our work doesn't have any time off at all. It's something you have to do 24 hours a day. Sometimes you may feel you're not up to it, but still you have to do it. If you don't, who's going to do it for you? It's your duty, and nobody else's. If you don't do it, what are you living off the donations of other people for?"

"துறவிகள் எந்த வேலையும் செய்வதில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் மன மாசுகளை நீக்கும் துறவிகளின் வேலையே உலகில் மிகக் கடினமான வேலை. அன்றாடம் செய்யும் பிற வேலைகளுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைப்பது உண்டு. ஆனால் நமது வேலைக்கு விடுமுறையே இல்லை. தினசரி இருபத்து நான்கு மணி நேரமும் இந்த வேலையைச் செய்தாக வேண்டும். சில சமயம் செய்யத் தோன்றாது, ஆனாலும் செய்தாக வேண்டும். நீங்கள் செய்யவில்லயென்றால் வேறு யார் அதைச் செய்யப் போகிறார்கள்? இது உங்கள் கடமை, மற்றவரது கடமை அல்ல. நீங்கள் இவ்வேலையைச் செய்யாவிட்டால் எதற்காக மற்றவர் கொடுக்கும் தானத்தை ஏற்று வாழ்கின்றீர்கள்?"

§ "Whatever work you're doing, keep an eye on your mind. If you see that it's going off the path, stop whatever you're doing and focus all your attention on it. The work of looking after your mind should always come first."

"நீங்கள் எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் மனத்தின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். அது வழி தவறிப் போவதைக் கண்டால், நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு முழுக் கவனத்தையும் மனத்தின் மேல் செலுத்துங்கள். மனத்தைக் கவனிக்கும் வேலை தான் உங்களுக்கு மிக முக்கிய வேலையாக இருக்க வேண்டும்."

§ "The Buddha's Dhamma is akaliko — timeless. The reason we haven't reached it yet is because we have lots of times: time for this, time for that, time to work, time to rest, time to eat, time to sleep... Our whole life turns into times, and as a result they don't give us a chance to see the truth clearly within ourselves. So we have to make our practice timeless. That's when the truth will appear in our hearts."

"புத்தரின் அறமானது  'அகாலிகோ' - காலவரையற்றது. அதை இதுவரை நாம் அடையாததற்குக் காரணம் நமக்குக் கிடைக்கும் நேரம் அனைத்தையும் பிற வேலைகளுக்காக ஒதுக்கி விடுவதுதான்: இதற்கு நேரம், அதற்கு நேரம், வேலை செய்ய நேரம், ஓய்வெடுக்க நேரம், உண்பதற்கு நேரம், தூங்க நேரம்...நமது வாழ்க்கையே இவற்றுக்கெல்லாம் ஒதுக்கப்படும் நேரங்களாகின்றன. அதன் காரணமாக நமக்குள்ளேயே பார்த்து வாய்மையை உணர நமக்கு நேரம் கிடைப்பதில்லை. எனவே நமது பயிற்சியை காலவரையற்றதாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாய்மை நமது உள்ளத்தில் தோன்றும்."

§ Ajaan Fuang was very meticulous about keeping things clean and in their place, and taught his students to be meticulous too, for that was the way he was taught by his teachers, and he knew that he had benefitted from it. In his words, "If you can't master obvious things like this, how are you going to master the subtle things, like the mind?"

அஜான் ஃபுவாங் பொருட்களைச் சுத்தமாகவும், வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதிலும் மிகக் கவனமாக இருப்பார். தனது மாணவர்களுக்கும் அவர் அதையே வலியுறுத்துவார். ஏனென்றால் அவரது ஆசிரியர்கள் அவருக்கு அப்படித்தான் கற்பித்தார்கள். அவரும் அதனால் பயனடைந்தார். அவர் வார்த்தைகளில், "இது போன்ற சிறுசிறு விஷயங்களில் நாம் தெளிவு பெறாவிட்டால், மனம் போன்ற நுணுக்கமான விஷயங்களில் எப்படித் தெளிவாக இருக்கப் போகிறோம்?"

§ The monk who attended to his needs — cleaning his hut, boiling the water for his bath, looking after him when he was sick, etc. — had to be very observant, for Ajaan Fuang used the teacher-student relationship as an opportunity to teach by example. Instead of explaining where things should be placed or when certain duties should be done, he left it up to the student to observe for himself. If he caught on, Ajaan Fuang wouldn't say anything. If he didn't, Ajaan Fuang would give him a dressing down — but still wouldn't explain what was wrong. It was up to the student to figure things out for himself. As Ajaan Fuang said, "If it gets to the point where I have to tell you, it shows that we're still strangers."

அவரது தேவைகளை - அவரது குடிலைச் சுத்தப்படுத்துவது, குளிக்கச் சுடுநீர் போட்டுத் தருவது, அவர் நோய்வாய்ப் பட்டிருக்கும் போது அவரைக் கவனித்துக் கொள்வது - போன்றவற்றைக் கவனித்துக் கொள்ளும் துறவி மிக மிக விழிப்போடு இருக்க வேண்டும், ஏனென்றால் அஜான் ஃபுவாங் அந்த ஆசிரியர்-மாணவர் உறவை ஒரு கற்றுக் கொடுக்கும் வாய்ப்பாகக் கருதினார். கவனமாக இருக்கும் மாணவர், அவர் வாய்விட்டுக் கூறாவிட்டாலும், அவரது நடத்தையை உதாரணமாகக் கொண்டு எப்படிச் செய்ய வேண்டுமென்று கற்றுக் கொள்வார். எங்கு பொருட்களை வைக்க வேண்டும் என்றோ எப்போது, எப்படிச் சில கடமைகள் செய்யப்பட வேண்டும் என்றோ விளக்கிக் கூறாமல், மாணவரே அவரைக் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பார். மாணவர் கவனத்தோடு இருந்து செய்ய வேண்டியதைச் செய்து விட்டால் அஜான் ஃபுவாங் ஒன்றும் கூறமாட்டார். செய்யவில்லை யென்றால் கண்டிப்பார் - அப்போதும் மாணவர் செய்த தவறு என்ன என்பதைக் கூறமாட்டார். மாணவரே கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அஜான் ஃபுவாங் சொன்னது போல," நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியவேண்டுமானால், அது நாம் இன்னமும் அறிமுகமாகாத அந்நியர் என்பதையே காட்டுகிறது."

§ One evening, one of the monks at Wat Dhammasathit saw Ajaan Fuang working alone, picking up scraps of lumber around the chedi construction site and putting them in order. The monk ran down to help him, and after a while asked him, "Than Phaw, this sort of work isn't something you should be doing alone. There are lots of other people. Why don't you get them to help?"

"I am getting other people to help," Ajaan Fuang answered as he continued to pick up pieces of wood.

"Who?" the monk asked as he looked around and saw no one else.

"You."

ஒரு நாள் மாலை, வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரையில் வாழும் துறவி ஒருவர், அஜான் ஃபுவாங் தனியாக, சேதியக் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் ஆங்காங்கு சிதறிக் கிடந்த கட்டைகளை எடுத்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்தத் துறவி அவருக்கு உதவுவதற்காக ஓடிச்சென்று கட்டைகளை அவரும் ஒழுங்கு படுத்தினார். பின்னர் அவரிடம், "ஐயா, இது போன்ற வேலைகளை நீங்கள் தனியாகச் செய்யக் கூடாது. இங்கு பலர் இருக்கும் போது அவர்களை ஏன் நீங்கள் உதவி செய்ய அழைக்கக் கூடாது?" என்று கேட்டார்.

"மற்றவர் எனக்கு உதவுகின்றார்," என்று தொடர்ந்து வேலை செய்து கொண்டே கூறினார் அஜான் ஃபுவாங்.

"யார்?" என்று சுற்றிலும் பார்த்தவாறே கேட்டார் அந்தத் துறவி.

அஜான் ஃபுவாங்கின் பதில் "நீ."

§ When I returned to Thailand in 1976 to be ordained, Ajaan Fuang gave me two warnings:
1) "Being a meditator isn't simply a matter of sitting with your eyes closed. You have to be sharp at everything you do."
2) "If you want to learn, you have to think like a thief and figure out how to steal your knowledge. What this means is that you can't just wait for the teacher to explain everything. You have to notice for yourself what he does, and why — for everything he does has its reason."

1976 ஆம் ஆண்டு நான் தாய்லாந்திற்குத் துறவு பூணுவதற்காக மீண்டும் சென்ற போது, அஜான் ஃபுவாங் எனக்கு இரண்டு எச்சரிக்கைகள் விடுத்தார்:

1) "தியானம் செய்வது என்றால் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டிருப்பது மட்டும் இல்லை. நீ செய்யும் செயல் அனைத்திலும் கவனமாக இருப்பதுமாகும்."
2) "கற்க வேண்டுமென்றால் ஒரு திருடனைப் போல நினைத்து எப்படி அறிவைத் திருடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதன் பொருள்: ஆசிரியர் விளக்குவார் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவர் என்ன செய்கிறார், எதற்குச் செய்கிறார் என்பதை நீயாகவே கவனிக்க வேண்டும் - ஏனென்றால் அவர் செய்யும் எல்லாச் செயலுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்."

§ The relationship of a monk to his supporters is something of a balancing act. One of Ajaan Fuang's favorite reminders to his monk disciples was, "Remember, nobody's hired you to become a monk. You haven't ordained to become anybody's servant." But if a monk complained that the monastery attendants weren't doing as they were told, he'd say, "Did you ordain to have other people wait on you?"

துறவிகளுக்கும், அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யும் இல்லற மக்களுக்கும் உள்ள உறவு ஒரு சம நிலையில் வைத்திருக்க வேண்டிய ஒரு செயற்பாடு. அவரது துறவு பூண்ட சீடர்களுக்கு அஜான் ஃபுவாங் அடிக்கடி இவ்வாறு நினைவூட்டுவார். "நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். யாரும் வாடகைக்கு உங்களைத் துறவியாக அமர்த்தவில்லை. யாருடைய பணியாட்களாக இருப்பதற்காகவும் நீங்கள் துறவறம் பூணவில்லை."

ஆனால் யாராவது ஒரு துறவி அவரிடம் விகாரையில் உள்ள பணியாட்கள் தான் சொல்வது போலச் செய்வதில்லை என்று குறை கூறினால், அவர், "மற்றவர் உங்களுக்குப் பணி புரிய வேண்டு மென்பதற்காகவா நீர் துறவறம் பூண்டீர்?" என்று கேட்பார்.

§ "Our life depends on the support of others, so don't do anything that would weigh them down."

"நமது வாழ்க்கை மற்றவர்கள் தரும் ஆதரவை நம்பி இருக்கிறது. எனவே அவர்களுக்குச் சிரமம் ஏற்படும்படி எதையும் செய்யாதீர்கள்."

§ "Monks who eat the food that other people donate, but then don't practice, can expect to be reborn as water buffaloes next time around, to till the fields and work off their debts."

"மற்றவர் தானமாகத் தரும் உணவை உண்ணும் துறவிகள் பயிற்சி செய்யவில்லை யென்றால், அடுத்த பிறப்பில் எருமை மாடுகளாகப் பிறக்கக் கூடும். பின் வயற்காட்டில் ஏர் உழுது வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட வேண்டிவரும்."

§ "Don't think that the small disciplinary rules aren't important. As Ajaan Mun once said, logs have never gotten into people's eyes, but fine sawdust can — and it can blind you."

"சிறுசிறு ஒழுக்க விதிகள் முக்கியமற்றவை என்று நினைத்துவிட வேண்டாம். அஜான் முன் (Ajaan Mun) ஒருமுறை சொன்னது போல, பெரும் மரக்கட்டைகள் என்றைக்கும் கண்களுக்குள் போவதில்லை, ஆனால் அக்கட்டைகளின் தூள் கண்களில் எளிதாக விழுந்து விடுவதுண்டு - பின் அது உங்களைக் குருடாக்கி விடலாம்.

§ Western women are often upset when they learn that monks aren't allowed to touch them, and they usually take it as a sign that Buddhism discriminates against women. But as Ajaan Fuang explained it, "The reason the Buddha didn't allow monks to touch women is not that there's anything wrong with women. It's because there's something wrong with the monks: They still have mental defilements, which is why they have to be kept under control."

மேற்கத்திய பெண்கள், துறவிகள் தங்களைத் தொடக் கூடாது என்பதை அறிந்தபின் அது பௌத்தம் பெண்களுக்கெதிராகப் பாகுபாடு காட்டுவதாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அஜான் ஃபுவங் விளக்கியது போல, "புத்தர், துறவிகள் பெண்களைத் தொடக் கூடாது என்று கூறியது, பெண்களிடம் குறை ஏதும் இருப்பதைக் குறிக்கவில்லை. மாறாக, அது துறவிகளிடம் உள்ள குறையையே சுட்டிக் காட்டுகிறது: அவர்கள் இன்னமும் மன மாசுக்களை முற்றிலுமாக நீக்கிவிடவில்லை. அதனாலேயே அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியுள்ளது."

§ For anyone who tries to follow the celibate life, the opposite sex is the biggest temptation to leave the path. If Ajaan Fuang was teaching monks, he'd say, "Women are like vines. At first they seem so weak and soft, but if you let them grow on you, they curl up around you until they have you all tied up and finally bring you down."

When teaching nuns, he'd warn them about men. Once a nun was thinking of disrobing and returning home, knowing that her father would arrange a marriage for her. She asked Ajaan Fuang for advice, and he told her, "Ask yourself. Do you want to live inside the noose or out?" As a result, she decided she'd rather stay out.

பிரமசரிய வாழ்க்கையை நடத்த முற்படும் எவருக்கும் எதிர்பாலினரே ஆன்மீகப் பாதையை விட்டு விலகுவதற்கான முக்கிய தூண்டுதலாக இருப்பார்கள். அஜான் ஃபுவாங் ஆண் துறவிகளுக்குக் கற்பிக்கும்போது, "பெண்கள் கொடிகளைப் போன்றவர்கள். முதலில் அவர்கள் பலவீனமாகவும் மென்மையாகவும் தோன்றுவார்கள், ஆனால் உங்கள் மீது படரவிட்டால், சுற்றி வளைத்து இறுக்கிக் கட்டி, இறுதியில் உங்களை மடியச் செய்து விடுவார்கள்.

பெண் துறவிகளுக்குக் கற்பிக்கும் போது, ஆண்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வார். ஒரு முறை ஒரு பெண் துறவி துறவறத்திலிருந்து விலகி வீடு திரும்ப நினைத்துக் கொண்டிருந்தார். அவர் தந்தை அவருக்கு மனம் முடித்து வைத்து விடுவார் என்று அவருக்குத் தெரியும். அவர் அஜான் ஃபுவாங்கிடம் அறிவுரை கேட்டார். அவர் சொன்னது: "உன்னையே கேட்டுக்கொள். சுருக்குக் கயிற்றினுள் வாழ விரும்புகிறாயா அல்லது அதற்கு வெளியே வாழ விரும்புகிறாயா?" அதைக் கேட்ட அந்தப் பெண் துறவி சுருக்கிற்கு வெளியிலேயே வாழ முடிவு செய்து அங்கேயே தங்கி விட்டார்.

§ "If you find yourself thinking about sex, run your hand over your head to remind yourself of who you are."

"உடல் உறவைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் எழுந்தால், உங்கள் தலையைத் தடவிக் கொண்டு நீங்கள் யார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்."

§ Ajaan Fuang had many stories to tell about his times with Ajaan Lee. One of my favorites was of the time a large group of Ajaan Lee's Bangkok students arranged to go with him on a meditation trip into the forest. They agreed to meet at Hua Lampong, the main train station in Bangkok, and take the train north to Lopburi. When the group assembled at the station, though, it turned out that many of them had each brought along at least two large suitcases of "necessities" for the trip, and even many of the monks from Bangkok monasteries had brought along large loads. On seeing this, Ajaan Lee said nothing, but simply set out walking north along the railroad tracks. Since he was walking, everyone had to walk, although it wasn't long before the members of the group most burdened down began complaining, "Than Phaw, why are you making us walk? We've got so much heavy stuff to carry!"

At first Ajaan Lee said nothing, but finally told them, as he kept on walking, "If it's heavy, then why burden yourself with it?" It took a few moments for his message to sink in, but soon the different members of the group had stopped to open their bags and throw everything unessential into the lotus ponds that lined either side of the railroad tracks. When they reached the next train station, Ajaan Lee saw that they had trimmed down their belongings enough that he could let them take the next train north.

அஜான் ஃபுவாங்க் (அவரது ஆசிரியரான) அஜான் லீயுடன் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த பல கதைகளை அவ்வப்போது சொல்வார். அதில் எனக்கு பிடித்த ஒன்று:

அஜான் லீயின் பாங்காக் மாணவர்கள் வனத்துக்குச் சென்று தியானப் பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். ஹூவா லாம்போங் (Hua Lampong) - அது பாங்காக்கின் தலைமை இரயில் நிலையம் - இரயில் நிலையத்தில் சந்தித்து வடக்கே உள்ள லோப்புரிக்கு (Lopburi) இரயிலில் செல்வதென்று முடிவு செய்திருந்தனர். ஆனால் இரயில் நிலையத்தில் எல்லோரும் சந்தித்தபோது வந்தவர்களில் பலரும் பயணத்திற்குத் தேவையென்று குறைந்தது இரண்டு பெரிய பெட்டிகளைச் சுமந்து கொண்டு வந்தனர். பாங்காக் விகாரையில் வாழும் துறவிகள்கூடப் பெரிய பெரிய பெட்டிகளைக் கொண்டு வந்திருந்தனர். இதைப் பார்த்த அஜான் லீ எதுவும் பேசாமல், இரயில் தண்டவாளத்தின் ஓரமாக நடக்க ஆரம்பித்தார். அவர் நடந்தமையால் மற்றவர்களும் நடக்க வேண்டியதாயிற்று. ஆனால் விரைவில் பெரிய பெட்டிகளைக் கொண்டுவந்த சிலர் அவரிடம் முறையிட்டனர், "ஐயா ஏன் எங்களை நடக்க வைக்கின்றீர்கள்? எங்களிடம் கனமான பெட்டிகள் இருக்கின்றதே?"

முதலில் அஜான் லீ அவர்களுக்குப் பதில் ஒன்றும் கூறவில்லை, ஆனால் இறுதியில் நடந்து கொண்டே அவர்களிடம், "பாரமாக இருந்தால் எதற்குச் சுமந்து கொண்டு வருகின்றீர்கள்?" என்றார். அவர் சொன்னது சிறிது நேரத்தில் அவர்களுக்குப் புரிந்து விட்டது. ஒவ்வொருவராக அவர்கள் பெட்டிகளில் இருந்த அவசியம் தேவையில்லாத பொருட்களை இரயில் பாதையின் அருகே இருந்த தாமரைக் குளங்களிலே எறிந்து விட்டனர். அடுத்த இரயில் நிலையத்தைச் சேர்ந்ததும், அஜான் லீ அவர்கள் பாரத்தைக் குறைத்து விட்டதை அறிந்து வடக்கே செல்லும் அடுத்த இரயிலில் ஏற அனுமதித்தார்.

§ "When you live in a monastery, pretend that you're living alone: What this means is that once you've finished with the group activities — the meal, the chanting, the chores, and so on — you don't have to get involved with anyone. Go back to your hut and meditate.

"When you live alone, pretend that you're in a monastery: Set up a schedule and stick to it."

"விகாரையில் வாழும் போது தனியாக வாழ்வதாகக் கற்பனை செய்து கொள்: அப்படியென்றால் கூட்டத்துடன் செய்ய வேண்டிய கடமைகளை - உணவு, ஓதுதல், மற்ற வேலைகள் போன்றவை - முடிந்தவுடன் மற்றவரோடு தங்க வேண்டியதில்லை. உனது குடிலுக்குச் சென்று தியானத்தில் ஈடுபடு.

தனியாக வாழும் போது, விகாரையில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்: ஒரு அட்டவணை தயாரித்துக் கொண்டு அதன் படி நடந்து கொள்."

§ When I went to Wat Asokaram — a very large monastery — for my first Rains Retreat, Ajaan Fuang told me, "If they ask you questions in Thai, answer in English. If they ask in English, answer in Thai. After a while they'll get tired to talking to you, and will leave you alone to meditate."

"எனது முதல் மழைக்காலச் சங்கமத்திற்கு வாட் அசோகராம் (Wat Asokaram) - அது மிகப் பெரிய விகாரை - சென்ற போது, அஜான் ஃபுவாங் என்னிடம் கூறினார், "மற்றவர்கள் உன்னிடம் தாய் மொழியில் கேள்விகேட்டால், ஆங்கிலத்தில் பதில் கூறு. ஆங்கிலத்தில் கேள்விகேட்டால் தாய் மொழியில் பதில் கூறு. கொஞ்ச காலத்திற்குப் பின் அவர்கள் உன்னிடம் பேசிக் களைப்படைந்து உன்னைத் தொந்தரவு செய்யாமல் விலகி விடுவார்கள். பின் தனிமையில் நீ தியானம் செய்யலாம்."

§ "It's good to live in a monastery where not everyone is serious about the practice, because it teaches you to depend on yourself. If you lived only with people who were serious meditators, you'd get so that you wouldn't be able to survive anywhere else."

"எல்லோரும் தியானம் செய்வதில் அதிக அக்கறை காட்டாத விகாரையில் வாழ்வது நல்லது, ஏனென்றால் அது நமக்கு நாமே அடைக்கலமாக இருப்பதற்குக் கற்பிக்கும். எல்லோரும் தியானம் செய்வதில் மும்முரமாக ஈடுபடும் இடத்தில் வாழ்ந்து பழகிவிட்டால், பின் வேறு எங்கு சென்றாலும் வாழ்வது சிரமமாகிவிடும். "

§ "We keep disagreeable people around the monastery as a way of testing to see if our defilements really are all gone."

"நாங்கள் எதற்கும் ஒத்துப் போகாத சிலரை விகாரையில் வைத்திருப்பதற்குக் காரணம், நமது மாசுகள் உண்மையிலேயே ஒழிந்து விட்டனவா என்று சோதிப்பதற்காகத் தான்."

§ "The purpose of adhering to the ascetic practices is to wear down your defilements. If you adhere to them with the thought of impressing other people, you'd do better not to adhere to them at all."

"துறவறப் பயிற்சிகளில் நாம் ஈடுபடுவதற்குக் காரணம் நமது மாசுகளைப் படிபடியாகக் குறைத்து விடத்தான். மற்றவரிடம் பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பயிற்சி செய்தால் அவற்றைச் செய்யாமலே விடுவது நல்லது."

§ On fasting as an aid to meditation: "For some people it works well, for others it works just the opposite — the more they fast, the stronger their defilements get. It's not the case that when you starve the body you starve the defilements, because defilements don't come from the body. They come from the mind."

தியானத்திற்கு உறுதுணையாகப் பட்டினி நோன்பு இருப்பது பற்றி: "சிலருக்கு அது மிகவும் உதவுகின்றது, ஆனால் வேறு பலரை அது பாதிக்கிறது - அவர்கள் அதிக உணவு உண்ணாமல் நோன்பு இருந்தால் அவர்களது மாசுகள் மேலும் வலுப்பெறுகின்றன. உடலைப் பட்டினி போட்டால் மாசுகளையும் பட்டினி போடுவது என்றில்லையே. ஏனென்றால் மாசுகள் உடலிலிருந்து வருவன அல்ல. அவை மனத்திலிருந்தே வருகின்றன."

§ "There's a passage where the Buddha asks, 'Days and nights pass by, pass by. What are you doing right now?' So what answer do you have for him?"

"மறை நூல்களில் ஓர் இடத்தில் புத்தர் கூறுகிறார், 'பகலும் இரவும் பறந்தோடிக் கொண்டிருக்கின்றன. இதோ, இச்சமயத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?'

அவருக்கு நீங்கள் என்ன பதில் கூறப் போகின்றீர்கள்?"

§ "If you go teaching others before your own practice is up to standard, you do more harm than good."

"உங்கள் பயிற்சி ஒரு தரமான நிலையை அடையும் முன்னர் நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்க முயன்றால், நல்லதைவிட அதிகக் கெடுதியே உண்டாக்குவீர்கள்."

§ "Training a meditator is like training a boxer: You pull your punches and don't hit him any harder than he can take. But when he comes back at you, he gives it everything he's got."

"தியானிப்பவருக்குப் பயிற்சி கொடுப்பது ஒரு குத்துச் சண்டை வீரருக்குப் பயிற்சி தருவது போல: அவர் தாங்கிக் கொள்ளும் அளவே குத்த வேண்டும். பின் அவர் திரும்பக் குத்த வரும் போது அவர் சக்தி முழுவதையும் பயன்படுத்திக் குத்த வருவார்."

§ The first time I was going to give a sermon, Ajaan Fuang told me: "Pretend you have a sword in your hand. If any people in the audience think critical thoughts of you, cut off their heads."

முதன்முறை நான் போதனை தருவதற்கு முன், அஜான் ஃபுவாங் எனக்குத் தந்த அறிவுரை: "கையில் ஒரு வாள் வைத்திருப்பதாகக் கற்பனை செய்து கொள். கேட்போரில் யாராவது உன்னைப்பற்றித் தவறான எண்ணங் கொண்டால், அவர்கள் தலையை வெட்டி விடு."

§ When I first went to Wat Dhammasathit, the trip from Bangkok was an all-day affair, since the roads were much worse and more roundabout than now. One evening a woman rented a cab and traveled all the way from Bangkok to get Ajaan Fuang's advice on the problems she was having in her family, and after a couple of hours of consultation she took the cab all the way back.

After she left, he said to me, "There's one good thing about living way out here: If we were living near Bangkok, people with a lot of free time on their hands and no idea of how to spend it would come and waste our time chatting all day. But here, when people make the effort to come out, it shows that they really want our help. And no matter how many hours it takes to talk things over with them, it's no waste of time at all."

நான் முதன் முதலில் வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரை சென்றபோது, பாங்காக்கிலிருந்து அங்கு செல்வதற்கு ஒரு முழு நாளே எடுத்துக் கொள்ளும். ஏனென்றால் அப்போது சாலைகள் இன்றைய சாலைகளைப்போல இல்லாமல்,  மிக மோசமான நிலையில் இருந்தன. சுற்று வழியாகவும் வர வேண்டியிருந்தது. ஒரு நாள் மாலை ஒரு பெண் ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பாங்காகிலிருந்து அஜான் ஃபுவாங்கிடம் தனது குடும்பப் பிரச்சனையைப் பற்றிப் விவாதிக்க வந்தார். சில மணி நேரம் அவரிடம் பேசியபின், அதே வாடகை வண்டியில் அவர் திரும்பிச் சென்றார்.

அவர் சென்றவுடன், அஜான் ஃபுவாங் என்னிடம் சொன்னது, "நாம் இவ்வளவு தொலைவில் இருப்பதில் ஒரு நன்மை இருக்கிறது: பாங்காக் நகரத்தருகில் இருந்தோமானால், நிறைய நேரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை எப்படிச் செலவிடுவதென்று தெரியாதவர்கள் எல்லாம் இங்கு வந்து நம்மிடம் அரட்டை அடித்துக் கொண்டு நமது நேரத்தை வீணாக்குவார்கள். ஆனால் இங்கு, மக்கள் இவ்வளவு தூரம் முயற்சி எடுத்து வரும் போது, அது அவர்களுக்கு நமது உதவி அவசியம் தேவைப்படுகிறது என்பதையே காட்டுகிறது. அப்படி வருவோரிடம் நாம் எவ்வளவு நேரம் பேசினாலும், அது நேரத்தை வீணாக்குவதன்று."

§ "When people come to see me, I have them sit and meditate first so that they know how to make their minds quiet. Only then will I let them bring up any other problems they may want to talk about. If you try discussing things with them when their minds aren't quiet, there's no way they'll understand."

"மக்கள் என்னைப் பார்க்க வரும் போது, அவர்களை அமர்ந்து தியானம் செய்யச் சொல்வேன். அப்போது தான் அவர்கள் மனத்தை எப்படி அமைதிப் படுத்திக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அதன் பிறகு தான் அவர்கள் என்னிடம் பேச வந்த பிரச்சனைகளைப் பற்றிப் பேச அழைப்பேன். அவர்கள் மனம் அமைதியாக இல்லாதபோது விஷயங்களைப் பேசினால், அவர்களால் எதையும் புரிந்து கொள்ளவே முடியாது."

§ "If people get it into their heads that they're enlightened when they aren't, then you shouldn't waste any breath on trying to straighten them out. If they don't have faith in you 100%, then the more you try to reason with them, the more they'll get set in their opinions. If they do have faith in you, then all it takes is one sentence or two and they'll come to their senses."

"மக்கள் தாங்கள் ஞானம் பெறாவிட்டாலும், பெற்று விட்டதாக நினைத்தால், அவர்களை நேர்ப்படுத்த முயற்சித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்கள் மீது நூறு சதவீதம் நம்பிக்கையில்லா விட்டால், அவர்களிடம் அதிகம் பேசப் பேச அவர்கள் தங்கள் அபிப்பிராயமே சரி என்று மேலும் மேலும் உறுதி கொள்வார்கள். உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் ஓரிரு வரிகள் சொன்னாலே போதும், அவர்கள் திருந்திக் கொள்வார்கள்."

§ Once the father of one of the monks living with Ajaan Fuang wrote his son a letter asking him to disrobe, return home, continue his studies, get a job, start a family, and have a normal, happy life like everyone else in the world. The monk mentioned this to Ajaan Fuang, who said, "He says his kind of happiness is something special, but look at it — what kind of happiness is it, really? Just the same old smelly stuff you left when you ordained. Isn't there any happiness better than that?"

ஒரு முறை அஜான் ஃபுவாங்கோடு வாழ்ந்து வந்த ஒரு துறவியின் தந்தை தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் துறவறத்தைத் துறந்து, வீடு திரும்பிப் படிப்பைத் தொடர்ந்து, வேலை தேடி, குடும்ப வாழ்வை மேற்கொண்டு, உலகில் உள்ள மற்றவர் எல்லோரையும் போலச் சாதாரண, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுமாறு கேட்டுக் கொண்டார். அந்தத் துறவி அஜான் ஃபுவாங்கிடம் இதைப்பற்றிக் கூறினார். அதற்கு அஜான் ஃபுவாங், "அவர் கூறும் மகிழ்ச்சி மிகவும் சிறப்புடையதாகக் கூறுகிறார். ஆனால் அதைக் கவனித்துப் பார் - உண்மையில் எப்படிப்பட்ட மகிழ்ச்சி அது? நீ விட்டுவிட்டு வந்த அதே நாற்றம் பிடித்த மகிழ்ச்சியே தான் அது. அதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லையா?"

  *    *    *    *    *    *