MN29
மஹா ஸாரோபம சுத்தம்
(சுருக்கம்)
Maha Saropama Sutta: The Longer Heartwood-simile Discourse
Translated from the Pali by Thanissaro Bhikkhu
MN 29
ஸார என்றால் சாரம்சம். இது ஒரு மரத்தின் உறுதியான மையப் பகுதியையும் (வைரத்தையும்) குறிக்கும்.
Sara means essential - core, also means core of a tree
opama means simili ஓபம என்றால் உவமானம்
தேவதத்தன் புத்தரின் மைத்துனன். சங்கத்தில் மிகுந்த பிரச்சனைகளை விளைவித்தவன். தானே சங்கத்தின் தலைவனாக வேண்டுமென்ற எண்ணம் கொண்டு சங்கத்தில் பிளவு உண்டாக்கி, புதிதாகத் துறவறம் ஏற்ற விவரம் அறியாத சில துறவிகளுடன் பிரிந்து செல்கின்றான். ஆனால் இறுதியில் முட்டாள் தனமாக நடந்து கொண்டு தனது சீடர்கள் அனைவரையும் இழந்து விடுகின்றான். இந்தப் போதனை அவன் பிரிந்து சென்ற போது தரப்பட்டது. தேவதத்தனைப் பற்றிப் பேசும்போது புத்தர் அவனைக் குறிப்பிட்டு எதுவும் கூறாமல், பொதுப்படையாக அவனைப் போன்றவர்கள் ஆன்மீக வாழ்வின் சாரத்தை, அதன் உட்பொருளைக் கண்டெடுப்பதில்லை என்பதை, ஒரு மரத்தின் மையப் பகுதியான வைரத்தை தேடுபவர் அதை விட்டு விட்டு பிற பகுதிகளை ஏற்றுக் கொள்வதோடு ஒப்பிட்டு விளக்குகிறார்.
மஹா ஸாரோபம சுத்தம்
ஒரு சமயம் பகவர், இராஜகிருக நகருக்கு அருகில் இருந்த பிணந்தின்னிக் கழுகு மலை என்று அழைக்கப் படுகின்ற கழுகு மலையின் முகட்டில் எழுந்தருளியிருந்ததாகக் கேள்வியுற்றேன். இது தேவதத்தன் சங்கத்தை விட்டுச் சென்ற சமயம். தேவதத்தனைக் குறித்து பகவர் துறவிகளிடம் இவ்வாறு கூறினார்:
பிணந்தின்னிக் கழுகு மலை
"துறவிகளே, நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவர், முடிவான மனக்கொள்கையின் காரணமாக இல்லற வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொள்கிறார். 'பிறப்பும், நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற துன்பங்களினால் அவதி கொண்டு, துக்கத்தால் சூழ்ந்து, துக்கத்தால் ஒடுக்கப் பட்டிருக்கிறேன். இந்தத் துக்கத்தின் முடிவை உய்த்துணர வேண்டும்!' என்று நினைத்தவராகத் துறவறம் பூணுகிறார். இதன் காரணமாக (மக்கள் அவரை மதித்ததால்) அவர் ஆதாயமும், பெறுமதியும் புகழும் அடைகிறார். இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதால், இதனைக் கொண்டு திருப்தி அடைந்து, தான் தேடியது கிடைத்து விட்டதாக நினைக்கிறார். இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதனால் தன்னை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பேச முற்படுகிறார்: 'நான் ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றவன், ஆனால் மற்ற துறவிகள் கீர்த்தியடையாதவர்கள், செல்வாக் கற்றவர்கள். 'இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதனால் அவர் போதையுற்று விவேகமற்றவராகிறார். அதன் விளைவாக விவேகமற்றவரான அவர் துன்பத்திலும் துயரத்திலும் உழல்கிறார்."
மரவைரம் - காழ் - Hard core of a tree, central part of plant hardened by age, heart-wood;
"சான்றாக மரவைரம் தேவைப் படுபவன், மரவைரத்தைத் தேடுபவன், மரவைரத்தைத் தேடி அலைபவன் – சிறந்த மரவைரத்தைக் கொண்ட பெரிய, முதிர்ந்த மரம் ஒன்றைக் காண்கின்றான். ஆனால் அதன் மரவைரத்தை விட்டு விட்டு, அதைச் சூழ்ந்துள்ள புதிய வைரமேறாத பகுதியையும் ஒதுக்கி, உள்பட்டையையும் புறம் தள்ளி, மேற்பட்டையையும் விலக்கியபின் இலைகளையும் குச்சிகளையும் ஒடித்துக் கொண்டு அவைதான் 'மரவைரம்' என்று எண்ணியவாறு செல்கிறான். நல்ல கண்பார்வையுள்ள ஒருவன் அவனைப் பார்த்து, இவ்வாறு கூறுவான்: 'ஆ, இந்த மனிதனுக்கு மரவைரம் எதுவென்று தெரிய வில்லை, அதைச் சுற்றியுள்ள புதிய சற்று மென்மையான மரமும் தெரியவில்லை, உள்பட்டையும், மேல்பட்டையும் தெரிய வில்லை குச்சிகளும் இலைகளும் தெரிய வில்லை! அதனால் மரவைரம் தேவைப்படுபவன், அதைத் தேடுபவன், மரவைரம் தேடி அலைகின்றவன் குச்சிகளையும் இலைகளையும் வெட்டிக் கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று எண்ணுகிறான். எதற்காக மரவைரம் தேவைப்பட்டதோ அந்தத் தேவை பூர்த்தியாகப் போவதில்லை.'
அதுபோலவே, வெறும் ஆதாயமும், பெறுமதியும், புகழும் பெற்ற துறவி, அதனால் திருப்தி கொண்டு, அதனால் போதையுற்று விவேகமற்றவராகிறார். விவேகமற்றவரான அவர் துன்பத்திலும், துயரத்திலும் வாழ்கிறார். இந்தத் துறவியைப் புனித வாழ்வின் குச்சிகளையும் இலைகளையும் பற்றிக் கொண்டவர் என்று கூறலாம். இதனால் நினைத்த நோக்கத்தை அவர் எட்டப் போவதில்லை.
"மேலும் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவர், முடிவான மனக்கொள்கையின் காரணமாக வீட்டைத் துறந்து துறவியாகிறார், 'பிறப்பும், நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற துன்பங்களினால் அவதி கொண்டு, துக்கத்தால் சூழ்ந்து, துக்கத்தால் ஒடுக்கப் பட்டிருக்கிறேன். இந்த துக்கத்தின் முடிவை உய்த்துணர வேண்டும்!' என்று நினைத்தவராகத் துறவறம் பூணுகிறார். இதன் காரணமாக (மக்கள் அவரை மதிப்பதால்) அவர் ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெறுகிறார். இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதனால் அவர் திருப்தி அடைவதில்லை. இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதனால் போதையுறாமல் விவேகத்துடன் வாழ்பவர் சீலத்தில் (ஒழுக்கத்தில், நற்பண்புகளில்) பூரணம் பெறுகிறார் (எந்தச் சூழலிலும் ஒழுக்கம் தவறுவதில்லை). இதனைக் கொண்டு திருப்தி அடைந்து தான் தேடியது கிடைத்து விட்டதாக நினைக்கிறார். சீலத்தில் முழுமை பெற்றதனால் தன்னை உயர்த்தி, மற்றவரைத் தாழ்த்திப் பேசுகிறார்: 'நான் ஒழுக்கமும் நற்பண்புமுடையவன். ஆனால் மற்ற துறவிகள் ஒழுக்கமற்றவர்கள், தீய குணமுடையவர்கள்.' இந்தப் பூரண ஒழுக்கம் பெற்றதனால் போதையுற்று விவேக மற்றவராகிறார். விவேகமற்றவரானவர் துன்பத்திலும், துயரத்திலும் சிக்குண்டு வாழ்கிறார்."
"சான்றாக மரவைரம் தேவைப் படுபவன், மரவைரத்தைத் தேடுபவன், மரவைரத்தைத் தேடி அலைகிறான் – மரவைரத்தைக் கொண்ட பெருமரம் ஒன்று தெரிகிறது. ஆனால் மரவைரத்தை விட்டுவிட்டு, அதைச் சுற்றியுள்ள புதிய வைரமில்லா மரத்தையும் விட்டு விட்டு, உள்பட்டையையும் விட்டுவிட்டு, மேல்பட்டையை (வெளிப்பட்டையை) மட்டுமே வெட்டிக் கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று எண்ணிச் செல்கிறான். நல்ல கண்பார்வை தெரிகின்ற ஒருவன் அவனைப் பார்த்து, இவ்வாறு கூறுவான்: 'ஆ, இந்த மனிதனுக்கு மரவைரம் தெரியவில்லை, ..... குச்சிகளும் இலைகளும் தெரியவில்லை! அதனால் மரவைரம் தேவைப்படுபவன், அதைத் தேடுபவன், மரவைரம் தேடி அலைகின்றவன் மேல்பட்டையை வெட்டிக் கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று எண்ணுகிறான். எதற்காக மரவைரம் தேவைப் பட்டதோ அந்தத் தேவை பூர்த்தியாகப் போவதில்லை. '
அதுபோலவே சீலத்தில் பூரணமடைந்த துறவி அதனால் திருப்தி கொண்டு அதனால் போதையுற்று, வீவேகமற்றவராகிறார். விவேகமற்றவரானவர் துன்பத்திலும் துயரத்திலும் வாழ்கிறார். இந்தத் துறவியைப் புனித வாழ்வின் மேல்பட்டைகளைப் பற்றிக் கொண்டவர் என்று கூறலாம். இதனால் நினைத்த நோக்கத்தை அவர் எட்டுவதில்லை.
"மேலும் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவர், முடிவான மனக் கொள்கையின் காரணமாக வீட்டைத் துறந்து துறவியாகிறார். 'பிறப்பும், நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற துன்பங்களினால் அவதி கொண்டு, துக்கத்தால் சூழ்ந்து, துக்கத்தால் ஒடுக்கப் பட்டிருக்கிறேன். இந்தத் துக்கத்தின் முடிவை உய்த்துணர வேண்டும்!' என்று நினைத்தவராகத் துறவறம் பூணுகிறார். இதன் காரணமாக (மக்கள் அவரை மதிப்பதால்) அவர் ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெறுகிறார். இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதனால் அவர் திருப்தி அடைவதில்லை. இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதினால் போதையுறாமல் விவேகத்துடன் வாழ்பவர் சீலத்தில் (ஒழுக்கத்தில்) பூரணம் பெறுகிறார். ஆனால் அவர் தேடியது கிடைக்கவில்லை. தொடர்ந்து விவேகத்துடன் வாழ்ந்து அவர் மனஒருமைப் பாட்டிலும் பூரணம் பெறுகிறார். இதனைக் கொண்டு திருப்தி அடைந்து தான் தேடியது கிடைத்து விட்டதாக நினைக்கிறார். மனஒருமைப்பாட்டில் முழுமை பெற்றதனால் தன்னை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்திப் பேசுகிறார்: 'நான் மனஒருக்கம் கொண்டவன், ஆனால் மற்ற துறவிகள் மனத்தை ஒருமுகப் படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் மனம் சிதறிக் கிடக்கின்றது.' இந்தப் பூரண ஒருக்கம் பெற்றதனால் அவர் போதையுற்று விவேக மற்றவராகிறார். விவேகமற்றவரானவர் துன்பத்திலும் துயரத்திலும் சிக்குண்டு வாழ்கிறார்."
"சான்றாக மரவைரம் தேவைப் படுபவன், மரவைரத்தைத் தேடுபவன், மரவைரத்தைத் தேடி அலைகிறான் – மரவைரத்தைக் கொண்ட பெருமரம் ஒன்று தெரிகிறது. ஆனால் மரவைரத்தை விட்டுவிட்டு, அதைச் சுற்றியுள்ள புதிய வைரமில்லா மரத்தையும் விட்டு விட்டு, உள்பட்டையை மட்டுமே வெட்டிக்கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று எண்ணிச் செல்கிறான். நல்ல கண்பார்வை தெரிகின்ற ஒருவன் அவனைப் பார்த்து, இவ்வாறு கூறுவான்: 'ஆ, இந்த மனிதனுக்கு மரவைரம் தெரியவில்லை, உள் பட்டையைப் பற்றியும் தெரியவில்லை! அதனால் மரவைரம் தேவைப்படுபவன், அதைத் தேடுபவன், மரவைரம் தேடி அலைகின்றவன் உள் பட்டையை வெட்டிக் கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று எண்ணுகிறான். எதற்காக மரவைரம் தேவைப்பட்டதோ அந்தத் தேவை பூர்த்தியாகப் போவதில்லை.'
அதுபோலவே, மனஒருமுகப்படுத்துதலில் பூரணமடைந்த துறவி அதனால் திருப்தி கொண்டு அதனால் போதையுற்று விவேகமற்றவராகிறார். விவேகமற்றவரானவர் துன்பத்திலும் துயரத்திலும் வாழ்கிறார். இந்தத் துறவியைப் புனித வாழ்வின் உள்பட்டைகளைப் பற்றிக் கொண்டவர் என்று கூறலாம். இதனால் நினைத்த நோக்கத்தை அவர் எட்டுவதில்லை.
"மேலும் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவர், முடிவான மனக்கொள்கையின் காரணமாக வீட்டைத் துறந்து துறவியாகிறார், 'பிறப்பும், நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற துன்பங்களினால் அவதி கொண்டு, துக்கத்தால் சூழ்ந்து, துக்கத்தால் ஒடுக்கப் பட்டிருக்கிறேன். இந்தத் துக்கத்தின் முடிவை உய்த்துணர வேண்டும்!' என்று நினைத்தவராகத் துறவறம் பூணுகிறார். இதன் காரணமாக (மக்கள் அவரை மதிப்பதால்) அவர் ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெறுகிறார். இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதனால் அவர் திருப்தி அடைவதில்லை. இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதினால் போதையுறாமல் தொடர்ந்து விவேகத்துடன் வாழ்பவர் சீலத்தில் (ஒழுக்கத்தில்) பூரணம் பெறுகிறார். ஆனால் அவர் தேடியது கிடைக்கவில்லை. தொடர்ந்து விவேகத்துடன் வாழ்ந்து அவர் மனஒருமைப் பாட்டிலும் பூரணம் பெறுகிறார். ஆனால் இதுவும் அவரைத் திருப்திப் படுத்துவதில்லை. தொடர்ந்து விவேகத்துடன் இருந்து பூரண மெய்யறிவு பெறுகிறார். இதனைக் கொண்டு திருப்தி அடைந்து தான் தேடியது கிடைத்து விட்டதாக நினைக்கிறார். மெய்யறிவில் முழுமை பெற்றதனால் தன்னை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்திப் பேசுகிறார்: 'நான் மெய்யறிவு கொண்டவன், ஆனால் மற்ற துறவிகள் மெய்யறிவும் பெறவில்லை, அவர்களுக்கு ஞானக் கண்ணும் திறக்கவில்லை.' இந்தப் பூரணமெய்யறிவு பெற்றதனால் போதையுற்று விவேக மற்றவராகிறார். விவேகமற்றவரானவர் துன்பத்திலும் துயரத்திலும் வசிக்கிறார்."
"சான்றாக மரவைரம் தேவைப் படுபவன், மரவைரத்தைத் தேடுபவன், மரவைரத்தைத் தேடி அலைகிறான் – மரவைரத்தைக் கொண்ட பெருமரம் ஒன்று தெரிகிறது. ஆனால் மரவைரத்தை விட்டுவிட்டு, அதைச் சுற்றியுள்ள புதிய வைரமில்லா மரத்தை மட்டுமே வெட்டிக் கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று எண்ணிச் செல்கிறான். நல்ல கண்பார்வை தெரிகின்ற ஒருவன் அவனைப் பார்த்து, இவ்வாறு கூறுவான்: 'ஆ, இந்த மனிதனுக்கு மரவைரம் தெரியவில்லை. குச்சிகளும் இலைகளும் தெரியவில்லை! அதனால் மரவைரம் தேவைப்படுபவன், அதைத் தேடுபவன், மரவைரம் தேடி அலைகின்றவன் புதிய வைரமில்லா மரத்தை வெட்டிக் கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று எண்ணுகிறான். எதற்காக மரவைரம் தேவைப்பட்டதோ அந்தத் தேவை பூர்த்தியாகப் போவதில்லை.'
அதுபோலவே, மெய்யறிவில் பூரணமடைந்த துறவி அதனால் திருப்தி கொண்டு அதனால் போதையுற்று விவேகமற்றவராகிறார். விவேகமற்றவரானவர் துன்பத்திலும் துயரத்திலும் வாழ்கிறார். இந்தத் துறவியைப் புனித வாழ்வின் புதிய வைரமில்லா மரத்தைப் பற்றிக் கொண்டவர் என்று கூறலாம். இதனால் நினைத்த நோக்கத்தை அவர் எட்டுவதில்லை.
"மேலும் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவர், முடிவான மனக் கொள்கையின் காரணமாக வீடு துறந்து துறவியாகிறார். 'பிறப்பும், நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற துன்பங்களினால் அவதி கொண்டு, துக்கத்தால் சூழ்ந்து, துக்கத்தால் ஒடுக்கப் பட்டிருக்கிறேன். இந்தத் துக்கத்தின் முடிவை உய்த்துணர வேண்டும்!' என்று நினைத்தவராக துறவறம் பூணுகிறார். இதன் காரணமாக (மக்கள் அவரை மதித்ததால்) அவர் ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெறுகிறார். இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதனால் அவர் திருப்தி அடைவதில்லை. இந்த ஆதாயமும், பெறுமதியும் புகழும் பெற்றதினால் போதையுறாமல் விவேகத்துடன் வாழ்பவர் சீலத்தில் (ஒழுக்கத்தில்) பூரணம் பெறுகிறார். ஆனால் அவர் தேடியது கிடைக்கவில்லை. தொடர்ந்து விவேகத்துடன் வாழ்ந்து அவர் மனஒருமைப் பாட்டிலும் பூரணம் பெறுகிறார். ஆனால் இதுவும் அவரைத் திருப்திப் படுத்துவதில்லை. தொடர்ந்து விவேகத்துடன் இருந்து பூரண மெய்யறிவு பெறுகிறார். ஆனால் இதுவும் அவரைத் திருப்திப் படுத்துவதில்லை. தொடர்ந்து விவேகத்துடன் இருந்து முழுமையான விடுதலை பெறுகிறார். நான் கூறுகிறேன் துறவிகளே, அப்படிப் பட்டவர் மீண்டும் அந்த நிலையிலிருந்து பின்வாங்க மாட்டார்."
"சான்றாக மரவைரம் தேவைப் படுபவன், மரவைரத்தைத் தேடுபவன், மரவைரத்தைத் தேடி அலைகிறான் – மரவைரத்தைக் கொண்ட பெருமரம் ஒன்று தெரிகிறது. மரவைரத்தை மட்டுமே வெட்டிக் கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று தெரிந்தவனாகச் செல்கிறான். நல்ல கண்பார்வை தெரிகின்ற ஒருவன் அவனைப் பார்த்து, இவ்வாறு கூறுவான்: 'ஆ, இந்த மனிதனுக்கு மரவைரம் தெரிந்திருக்கிறது, அதைச் சுற்றியுள்ள புதிய சற்று மென்மையான மரமும் தெரிந்திருக்கிறது, உள்பட்டையும் மேல்பட்டையும் தெரிந்திருக்கிறது குச்சிகளும் இலைகளும் தெரிந்திருக்கிறது! அதனால் மரவைரம் தேவைப் படுபவன், அதைத் தேடுபவன், மரவைரம் தேடி அலைகின்றவன் மரவைரத்தை வெட்டிக் கொண்டு அவற்றை 'மரவைரம்' என்று தெரிந்தவனாக இருக்கின்றான். எதற்காக மரவைரம் தேவைப்பட்டதோ அந்த தேவையைப் பூர்த்தி செய்து கொள்வான்.'
"துறவிகளே, இந்தப் புனித வாழ்வு வாழ்வதால் ஆதாயமும், பெறுமதியும் புகழும் வெகுமதி யாகாது, ஒழுக்கமும் வெகுமதியாகாது, மனஒருமைப்பாடும் வெகுமதியாகாது, மெய்யறிவும் வெகுமதியாகாது. ஆனால் முழு விடுதலை தான் வெகுமதி. புனித வாழ்வின் நோக்கமே இது தான். இதுவே அதன் மரவைரம். இதுவே முடிவு."
பகவர் இதைக் கூறினார். பகவரின் வார்த்தைகளைக் கேட்ட துறவிகள் ஆனந்தப் பட்டனர்.
* * *
ஆன்மீகப் பாதையின் ஐந்து அம்சங்கள்:
1. ஆதாயம், பெறுமதி, புகழ் (Gain, offerings, fame) = குச்சிகளும், இலைகளும் "Twigs and Leaves
2. சீலம்/ஒழுக்கம் (Virtue) = மேல்பட்டை (outer bark)
3. சமாதி/மனஒருமைப்பாடு (Concentration) = உள்பட்டை (inner bark)
4. பஞ்ஞா/மெய்ய்யறிவு (Wisdom) = புதிய சற்று மென்மையான மரம் (sapwood)
5. நிப்பாணம்/விடுதலை (Liberation) = மரவைரம், காழ் (heartwood)