புத்தபகவான் அருளிய போதனையும் இன்றைய உலகமும்

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

VIII ஆம் அத்தியாயம்

புத்தபகவான் அருளிய போதனையும் இன்றைய உலகமும்

What the Buddha Taught and the World Today

பௌத்தம் மிக உன்னதமான விழுமிய மதம். சாதாரண லௌகீக மக்களால் அனுசரிக்கக்கூடிய தொன்றன்று. உலகைத் துறந்து, மடங்களிலோ, அமைதியான இடங்களிலோ, தனித்திருந்து தான் அதைப் பின்பற்றமுடியும். அப்போது தான் உண்மையான பௌத்தராக வாழ்க்கை நடத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

புத்தருடைய போதனையைச் சரிவர அறிந்து கொள்ளாத படியால் தான், இத்தகைய தவறான கருத்து ஏற்படுகிறது. புத்த சமயத்தின் பலமுகப்பட்ட தன்மைகளைப் புரிந்து கொள்ளாது அதைப்பற்றி அரை குறையாகவும், ஏறுமாறாகவும், யாரோ ஒருவர் எழுதிய ஏதோ விஷயங்களை வந்த வாக்கிலே வாசித்தோ, கேள்விப்பட்டோ இத்தகைய அவசரமான பிழையான முடிபுகளை மக்கள் செய்து கொள்கின்றனர். மடங்களில் உள்ள பிக்குகள் மாத்திரமன்றி, இல்லங்களில் குடும்பங்களோடு வாழ்பவருக்கும் ஏற்றதே புத்தர் போதனை. அட்டாங்க மார்க்கம் பௌத்த வாழ்வு நெறி. அது எவ்வித வேறு பாடுமின்றி எல்லார்க்கும் ஏற்புடையது.

உலகிலுள்ள மக்களிற் பெரும்பாலோர் துறவிகளாகிவிட முடியாது. காடுகளுக்கும் குகைகளுக்கும் சென்று வாழ்க்கை நடத்த முடியாது. இன்றைய உலகில் மக்களில் பெரும்பாலோர் தமது நாளந்த வாழ்வில் பௌத்த சமயத்தை, அது எத்துணை உயர்ந்ததானாலும், தூயதானாலும், அதை அனுசரிக்க முடியாவிட்டால் அது மன்பதைக்குப் பயனற்றதாயிருக்கும். புத்த தருமத்தின் நேர்க்கூட்டுப் பொருளை மாத்திரம் அன்றி உள்ளார்ந்த போக்கைச் சரியாக உணர்ந்து கொண்டால் சாதாரண மனிதனாய் வாழ்ந்து கொண்டே அதைப் பின்பற்றலாம். மனித சமூகத்திலிருந்து ஒதுங்கி தூராந்தரமான இடத்தில் வாழும் சிலர்க்குப் பௌத்தத்தை மேற்கொள்வது இலேசாகவும் வசதியாகவுமிருக்கலாம். வேறு சிலர்க்கு இவ்வாறு ஒதுங்கி வாழ்வது அவர்களுடைய உடலுக்கும் மனத்துக்கும் மடிவையும் மந்தத்தையும் கொடுக்கலாம். அத்தகையோரின் ஆன்மீக வாழ்வுக்கும் விவேக விரிவுக்கும் அது பொருத்தமற்றதாயிருக்கலாம்.

உண்மையான துறவு, உலகைவிட்டு ஓடுதலன்று. புத்தருடைய பிரதம சீடரான சாரீபுத்திரர், ஒருவன் காட்டிலே தவ வாழ்வு நடத்தினாலும் அவனுடைய மனம் அழுக்கு நிறைந்ததாய் ஆசவங்களின் உறைவிடமாய் இருக்கலாம். வேறொருவன் கிராமத்திலோ பட்டினத்திலோ தவ வாழ்க்கை நடத்தாமலே ஆசவங்களில்லாத தூய உள்ளமுடையவனாயிருக்கலாம். இவர்களுள் கிராமத்திலோ நகரிலோ தூய வாழ்வு வாழ்பவனே காட்டில் தவஞ் செய்தவனை விட மிக உயர்ந்தவன் என்று கூறினார்.

புத்தருடைய போதனையைப் பின்பற்றவேண்டுமானால் துறவை மேற்கொள்ள வேண்டுமென்று கூறுவது தவறான கருத்து. அப்போதனையை அனுசரிக்க விருப்பமில்லாதவர் மனத்தில் அவரை அறியாமலே உண்டாகும் ஒருவித எதிர்ப்பு. இல்லறத்திலிருந்து கொண்டே புத்த தர்மத்தை அனுசரித்து நிர்வாணமடைந்த சாதாரண வாழ்வு நடத்திய ஆண்களைப் பற்றியும் பெண்களைப் பற்றியும், பௌத்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அனத்த என்ற விஷயத்தை விளக்கும் அத்தியாயத்திலே வச்சகொத்தன் என்ற பரிவிராஜகரைப் பற்றிக் கூறினோம். அவன் ஒருமுறை புத்த பகவானிடம், இல்லறத்திலுள்ள ஆண் பெண் பாலார் புத்தருடைய தர்மத்தை அனுசரித்து உயர்ந்த ஆன்மீக நிலையடைந்துள்ளனரா என்று நேரடியாகக் கேட்டான். இரண்டொருவரல்ல, நூறு இருநூறல்ல ஐந்நூறல்ல தருமத்தை நன்கு அனுசரித்துப் பெருந்தொகையானோர் யோகசித்தியடைந்தனர் என்று புத்தர் பகவான் வற்புறுத்திக் கூறினார்.

சத்தமும் சந்தடியுமற்ற அமைதியான இடத்தில் ஒதுங்கியிருப்பது சிலர்க்கு ஏற்புடையதொரு வாழ்க்கையாகும். ஆனால் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உதவிபுரிந்து,சேவை செய்து கொண்டு, புத்த தர்மத்தையும் அனுசரித்து வருதல் நிச்சயமாகத் தைரியமானதும் பாராட்டுக்குரியதுமான காரியமாகும். ஒழுக்கம், ஆன்மிகம், விவேகம் என்ற துறைகளில் பூர்வாங்கப் பயிற்சி பெறுவதன் மூலம் சில சமயம் ஒருவன் தன் மனத்தையும், குணத்தையும் பண்படுத்துவதற்காகச் சிறிது காலம் ஒதுங்கியிருந்து பலம் பெற்ற பின்னர் மற்றவர்க்குச் சேவை செய்வதற்காக வெளியே வருவது பயனுள்ளதாகும். ஆனால் தன்னுடைய சுகத்தையும், விமுத்தியையும் மாத்திரம் கருத்தில் கொண்டுவாழ்நாளைத் தனிமையில் கழிப்பதும், தன் சகாக்களின் நன்மையைக் கருதாதிருப்பதும் - மைத்திரி, கருணை, பிறர்க்கென வாழ்தல் என்ற அடிப்படையில் கட்டப்பட்ட புத்தருடைய போதனைக்கு ஒவ்வாததாகும்.

சாதாரண மனிதனாக வாழ்ந்து கொண்டே, புத்த தர்மத்தை அனுசரிக்க முடியுமானால், சாவக சங்கத்தைப் புத்தர் எதற்காகத் தாபித்தார் என்று ஒருவர் கேட்கலாம். தம்முடைய சொந்த ஆன்ம விருத்தியையும், அறிவு வளர்ச்சியையும் மாத்திரம் கருதாமல், பிறர்க்குச் சேவை செய்வதையும் கடமையாகக் கொள்ள விரும்புவோருக்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்காகவே சங்கம் நிறுவப்பட்டது. குடும்பத்தனாய் இல்லறம் நடத்தும் சாதாரண மனிதன் மற்றவர்களுக்குச் சேவை செய்யத் தன் முழு நேரத்தையும் செலவு செய்யமுடியாதிருப்பான். சங்கத்துப் பிக்குவானவர், குடும்பக் கவலையோ வேறு லௌகீக பந்தங்களோ இல்லாதவர். அவர் புத்தருடைய அறிவுரைப்படி 'பஹூஜனஹிதாய', 'பஹூஜனசுகாய' - பெரும் பாலானவர் நன்மைக்காகவும், சுகத்துக்காகவும் தம் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணஞ் செய்யக்கூடியவராயிருக்கிறார். வரலாற்றுப்போக்கிலே பௌத்த மடங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு மாத்திரமன்றிக் கல்வி கேள்விக்கும், கலைக்கும் மத்தியத்தானமாய் இவ்வாறே விளங்கலாயின.

இல்லற வாழ்வையும், குடும்ப வாழ்க்கையையும், தொடர்புகளையும் பகவான் எவ்வளவு கௌரவித்தார் என்பது சிகால சூத்திரத்திலிருந்து அறியக்கூடியதாயிருக்கிறது. இந்தச் சூத்திரம் தீக நிகாயத்தில் 31 ஆவது சூத்திரமாகும்.

இறக்கும் தறுவாயில் சிகாலனின் தந்தை தன் மகனுக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ் என்ற திசைகளை வணங்குமாறு உபதேசஞ் செய்து இறந்தான். தந்தையின் உபதேசத்தைப் பின்பற்றிய சிகாலன் அவ்வாறே செய்து வந்தான். புத்தர் அவனுக்கு அறிவுரை வழங்கியபோது பௌத்த தர்மத்திலே (அரியஸ்ஸ விநய - ஆரியருடைய விநயத்தில்) இந்த ஆறு திசைகளும் வேறு பொருளுடையன என்று கூறினார். இந்த ஆரிய விநயத்தின்படி கிழக்கு பெற்றோரையும், தெற்கு ஆசிரியரையும், மேற்கு மனைவி குழந்தைகளையும், வடக்கு பந்து மித்திரர் சுற்றத்தவர் அயலவர் என்போரையும் கீழ் திசை பணியாட்கள், தொழிலாளர், வேலைக்காரர் என்போரையும், மேல்திசை துறவறத்தாரையும் குறிக்குமென்று கூறினார்.

'இந்த ஆறு திசைகளைத்தான் வணங்க வேண்டும் என்று கூறினார் புத்தர். இங்கே வணங்கவேண்டுமென்ற சொல் நிறைந்த பொருளுடையதாகும் (நமஸ்ஸெய்ய). பரிசுத்தமும், கௌரவிக்கத் தக்கதும், போற்றக் கூடியதுமான ஒன்றையே ஒருவர் வணங்குவார். இங்கே கூறப்பட்ட ஆறுகுடும்ப சமூகத் தொடர்புள்ளவர்கள் பரிசுத்தமானவர்கள், போற்றி வழிபடத் தக்கவர்கள் என்கிறது புத்த சமயம். ஆனால் அவர்களை வழிபடுவது எப்படி? அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதே வழிபாடு செய்வதாகும் என்கிறார் புத்தர். சிகாலனுக்கு அருளிய உபதேசத்திலே, இக்கடமைகள் விளக்கப்படுகின்றன.

முதலாவது பெற்றோர், குழந்தைகட்குத் தெய்வம் போன்றவர்கள், புனிதமானவர்கள். பெற்றோரை பிரமம் என்று கூறுவர் (பிரம்மாதி மாதாபிதரோ). பிரம்மா என்பவர் இந்திய சம்பிரதாயத்தில் மிக உயர்ந்த மிகப்புனிதமான இடத்தை வகிக்கிறார். புத்தர் பெற்றோரை பிரம்மத்தின் நிலையில் வைத்திருக்கிறார். இன்று பௌத்த குடும்பங்களிலே மக்கள் தம் பெற்றோரைக் காலையும் மாலையும் வணங்குவது வழக்கம். ஆரிய விநயத்தின்படி அவர்கள் பெற்றோருக்குச் சில கடமைகளைச் செய்யவேண்டும். வயது முதிர்ந்த காலத்திலே அவர்கள் பெற்றோரைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் ஆற்ற வேண்டிய தொண்டுகளைச் செய்ய வேண்டும். குடும்பத்தின் கௌரவத்தைப் பாதுக்காக்க வேண்டும். குடும்பச் சம்பிரதாயத்தை இடையறுந்து போகாமற் காக்க வேண்டும். பெற்றோர் தேடி வைத்த பொருளைக் காப்பாற்ற வேண்டும். இறந்தபின் அவர்களுடைய அந்திமக் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும். பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சில கடமைகளைச் செய்ய வேண்டும். தீமையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும். நன்மையும் பயனுந்தரக்கூடிய தொழில்களில் அவர்களை உய்க்க வேண்டும். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கவேண்டும். நல்ல குடும்பங்களில் அவர்களுக்கு விவாகம் செய்து வைக்கவேண்டும். நாலடைவில் தம் உடைமைகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது, மாணாக்கனுக்கும் ஆசிரியருக்குமுள்ள தொடர்பு. சீடன் குருவுக்கு மரியாதை செய்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். மிக்க ஊக்கத்தோடு கல்வி பயில வேண்டும். ஆசிரியர் தம்மாணாக்கர்களுக்கு நல்ல பயிற்சியளித்து அவர்களை நல்லவராக உருவாக்க வேண்டும். நன்றாகக் கல்வி பயிற்ற வேண்டும். தன் நண்பர்க்கு அறிமுகஞ் செய்து வைக்கவேண்டும். கல்வி முடிந்த பின் அவர்களுக்குப் பாதுகாப்பான நிலையை உண்டாக்க வேண்டும். அல்லது தொழில் தேடிக் கொடுக்க வேண்டும்.

மூன்றாவது கணவன் மனைவிக்கிடையே உள்ள தொடர்பு. தாம்பத்தியத் தொடர்பு மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது (சதார பிரம்மச்சரிய) என்று கூறப்படும். அதாவது புனிதமான குடும்ப வாழ்வு. இங்கேயும் பிரம்ம என்ற சொல்லின் பொருள் கவனிக்கப்படத்தக்கது. இந்தத் தொடர்பு பெரிதும் கௌரவிக்கப்பட வேண்டியது. கணவன் மனைவி ஒருவர்க்கொருவர் உண்மையுள்ளவராயிருக்க வேண்டும். மரியாதையுடையவராயிருக்க வேண்டும். அன்புடையவராயிருக்க வேண்டும். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கடமைகள் செய்யவேண்டியவராயிருக்கின்றனர். கணவன் மனைவியைக் கௌரவிக்கவேண்டும். அவள் விஷயத்தில் ஒரு போதும் அகௌரவமாய் நடந்து கொள்ளக்கூடாது. அவளிடத்தில் அன்புடையவனாயும் உண்மையுடையவனாயுமிருக்க வேண்டும். அவளுடைய அந்தஸ்துக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது. அவளுடைய சௌகரியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உடை, ஆபரணம் முதலியவற்றை அவளுக்குப் பரிசாக அளித்து அவளைப் பிரீதிப் படுத்த வேண்டும் (மனைவிக்குக் கணவன் கொடுக்க வேண்டிய பரிசைப் பற்றிப் பகவான் எடுத்துக்காட்டுவதால் சாதாரண மனித உணர்ச்சிகள் விஷயத்தில் கூட, அவர் எத்துணை அனுதாபமும் நல்லெண்ணமும் உடையவராயிருந்தாரென்பது தெரிகிறது). மனைவி குடும்பவிஷயங்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். விருந்தினர், நண்பர், சுற்றத்தவர், பணியாட்கள் முதலியோரை உபசரிக்க வேண்டும். கணவன் மாட்டு அன்பும் உண்மையுமுடையவளாயிருக்க வேண்டும். கணவனுடைய செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். எல்லாக் கருமங்களிலும் உற்சாகமும் திறமையுமுடையவளாயிருக்க வேண்டும்.

நாலாவது, சுற்றமித்திரர், அயலவர் ஆகியோரிடையில் உள்ள தொடர்பு. ஒருவர் அன்பும் பெருந்தன்மையுமுடையவராயிருக்க வேண்டும். இனிய வார்த்தைகளைப் பேசவேண்டும். பரஸ்பரம் நன்மையை உத்தேசித்துக் கருமம் புரியவேண்டும். உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது. தம்முள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. தேவையேற்படுங் காலங்களில் ஒருவர்க் கொருவர் உதவி புரிய வேண்டும். கஷ்ட காலங்களிலே கைவிடக் கூடாது.

ஐந்தாவது, எசமான் பணியாள் தொடர்பு. பணியாள் விஷயத்தில் எசமான் பல கடமையுடையவராயிருக்கிறார். பணியாளின் அல்லது தொழில் செய்பவரின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு வேலையை எசமான் ஏற்பாடு செய்ய வேண்டும். வேலைக் கேற்ற கூலி கொடுக்க வேண்டும். வைத்திய வசதிகள் செய்ய வேண்டும். இடையிடையே அவர்களுக்கு நன்கொடைகளும் பரிசுகளும் வழங்க வேண்டும். வேலைக்கிருப்பவர் சுறுசுறுப்பாகவும், ஊக்கந்தளராதவராகவும் இருக்க வேண்டும். நேர்மையும் கீழ்ப்படிவுமுடையவராயிருக்க வேண்டும். எசமானை வஞ்சிக்கக் கூடாது. ஆர்வத்தோடு வேலை செய்ய வேண்டும்.

ஆறாவது, இல்லறத்தவர்க்கும் துறவிகளுக்குமுள்ள தொடர்பு. துறவிகளின் தேவையை இல்லறத்தவர் அன்போடும் மரியாதையோடும் கவனித்து வரவேண்டும். துறவறத்திலுள்ளவர் இல்லறத்தார்க்குக் கல்வி கேள்விகளை வழங்கித் தீயநெறியிற் செல்லாது அவர்களை விலக்க வேண்டும்.

இல்லறத்தைப் பற்றியும் சுற்ற மித்திரர் குடும்பம் என்பவற்றோடும் கிருகஸ்தன் கொள்ள வேண்டிய தொடர்புகளைப் பற்றியும், புத்தர், தமது ஆரிய விநயத்தில் கூறியுள்ளார். அது பௌத்த வாழ்வுத் திட்டத்தில் அடங்கிய தென்பதை அறிந்து கொள்ளலாம்.

எனவே மிகப் பழைய பிடகங்களில் ஒன்றான சம்யுத்த நிகாயத்திலே தேவராஜனான சக்கரன், 'புனிதமான தூய வாழ்வு நடத்தும் சீலமுள்ள பிக்குகளை வழிபடுவதுபோலவே தான் புண்ணியங்களைச் செய்பவரும், சீலமுடய வரும், இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவருமான உபாசகரையும் வழிபடுகிறேன்' என்று கூறுகிறான் [1].

ஒருவர் புத்த சமயத்தில் சேரவிரும்பினால் ஞானஸ்நானம் போன்ற ஆரம்ப சடங்குகள் புத்த சமயத்தில் இல்லை. ஆனால் பிக்கு சங்கத்தில் சேர்வதானால் நெடுங்காலம் விநயபயிற்சியோடு கல்வியும் பெற வேண்டும். புத்தருடைய போதனையை விளங்கி, அதுவே சரியான வழியென நம்பி, அதைப் பின்பற்ற முயலுவாரானால் அவர் பௌத்த சமயத்தவரெனக் கொள்ளப்படுவர். ஆனால் பரம்பரையாகப் பௌத்த நாடுகளில் இருந்துவரும் ஒரு சம்பிரதாய முண்டு. புத்தம், தர்மம், சங்கமென்ற மும்மணியைச் சரணடைந்து, உபாசகரால் மேற்கொள்ளப்பட வேண்டிய குறைந்த பட்சமான பஞ்சசீலங்களைக் காத்து வந்தால், அவர் பௌத்தர் எனக் கொள்ளப்படுவார்.

பஞ்ச சீலங்களென்பன [2]:

(1) கொல்லாமை

(2) கள்ளாமை (நினைவிலும் செயலிலும் களவாடாதிருத்தல்)

(3) பிறர் மனை நயவாமை

(4) பொய்யாமை

(5) கள்ளுண்ணாமை

இப்பஞ்ச சீலங்களைப் பௌத்தராய் வரவிருப்பவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவை பிடக நூலிற் காணப்படும். சமய விழாக்களில், பௌத்தர்கள் கூடியிருந்து புத்த பிக்குவின் தலைமையில் இச்சீலங்களையும், முச்சரணங்களையும் ஓதுவர். இதைவிடப் புறக்கிரியைகளோ சடங்குகளோ கிடையா. பௌத்தம், வாழ்வாங்கு வாழும் முறை. ஆரிய அட்டாங்க மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதே முக்கியமான கடமை. பௌத்த நாடுகளில் எல்லாம் சமய விழாக் காலங்களில் எளிமையான அழகான பூசைகள் செய்யப்படுகின்றன. பௌத்த விஹாரைகளிலே புத்தருடய பிரதிமைகள் உண்டு. தாதுகோபங்கள் என்னும் தூபங்களும், போதி மரங்களும் உண்டு. அங்கே விளக்கேற்றி, மலர் தூவி, தூபமிட்டு அடியார்கள் வணங்குவர். கடவுட் கொள்கையுடைய கோவில்களில் செய்யப்படும் பிரார்த்தனை போன்றதன்று இந்த வழிபாடு. அறங்கூறிய குரு தேவருக்குச் செய்யும் வணக்கமே இது. இவை சம்பிரதாய முறைப்படி வந்து கொண்டிருக்கும் வழிபாடுகள். ஆன்மீகத்துறையிலும் அறிவுத்துறையிலும் குறைந்த நிலையிலுள்ளவர்களின் சமய உணர்ச்சிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் முறையில் இவை பயனுடையனவேயன்றி இப்பூசைகள் அத்தியாவசியமென்று கூற முடியாது. இவை குறைந்த நிலையில் உள்ளவர்க்கு வழிகாட்டிகளாகவே அமையும்.

பௌத்தம் உயர்ந்த கருத்துக்களிலும் உன்னதமான ஒழுக்கத்திலும் தத்துவ ஞானத்திலுமே அக்கறை காட்டுகிறது. மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அது அக்கறை கொள்வதில்லையென்று சிலர் நினைப்பதுண்டு. அது தவறு. மனிதருடைய சுபீட்சத்திலே தான் புத்த பகவான் கருத்துடைய வராயிருந்தார். தார்மீகக் கொள்கைகளையும் ஆன்மீகக் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொள்ளாது தூய வாழ்வு வாழ முடியாது. தூய வாழ்வில்லாவிட்டால் மனிதன் சுகமடைய முடியாது என்று பகவான் கருதினார். ஆனால் வாய்ப்பான சமூகச் சூழலும் பொருள் வளமும் இல்லாமல் தூய வாழ்க்கை நடத்துவது சிரமம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

லௌகீக சுபீட்சம் தான் வாழ்வின் இலட்சியம் எனப் பௌத்தம் கொள்ளவில்லை. அது இலட்சியத்துக்கு ஒரு சாதனமாயுள்ளது. உண்மையான இலட்சியம் சிறப்பும் உயர்வுமுடையது. ஆனால் மனிதன் மேலான சுகத்தைப் பெறுவதானால் பொருள் இன்றியமையாத சாதனமே. அதனால் ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குக் குறைந்த பட்சம் லௌகீக வளம் அவசியமென்பதை பௌத்தம் ஏற்றுக் கொள்ளுகிறது. தனிமையான இடத்திலிருந்து தியான நிட்டைகளில் ஈடுபடும் துறவிக்கும் [3] இந்தக் குறைந்த பட்சத் தேவைகள் அவசியமே. உயிர்வாழ்தல் என்பது சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில் தான் நிகழும். புத்த பகவான் இதைப் பிரித்துவிட விரும்பவில்லை. சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில் தான் அவர் வாழ்வை வைத்து முழுநோக்காகக் கண்டார். தார்மீக, ஆன்மீக, தத்துவப் பிரச்சினைகள் சம்பந்தமாக அவர் செய்த போதனை பிரசித்தமானது. ஆனால் சமூக பொருளாதார அரசியல் சம்பந்தமான அவர் செய்த போதனையைப் பற்றிய அறிவு விசேஷமாக மேனாட்டில் குறைவு. பழைய பிடகநூல்களிலே ஆங்காங்கு இவை சம்பந்த மான உரையாடல்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சில வற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

தீக நிகாயம் 26 ஆம் இலக்கமான 'சக்கவத்தி சீஹநாத சுத்தத்தில்' வறுமை (தாளித்தியமே) ஒழுக்கக் கேட்டுக்கும், களவு, பொய், இம்சை, துவேஷம், கொடுமை முதலிய குற்றங்களுக்கும் காரணமெனக் கூறபடுகிறது. இன்றைய அரசாங்கங்களைப் போலவே புராதன காலத்தில், ராஜாக்கள் தண்டனையால் குற்றங்களைத் தடுக்க முயன்றனர். இதே நிகாயத்தைச் சேர்ந்த 'கூட தந்த சுத்திரம்' இந்த உபாயம் பயனற்றதெனக் கூறுகிறது. இந்த முறை ஒரு போதும் கருதிய பலனைக் கொடுக்கமாட்டாதென்று கூறுகிறது.

குற்றத்தைத் தடுப்பதானால் மக்களின் பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென பகவான் கூறுகிறார். விவசாயிகளுக்கு விதை நெல்லும், ஏனைய சகாயங்களுஞ் செய்து கொடுக்க வேண்டுமென்றும், வியாபாரத்திலீடுபட்டவர்க்கும், வணிகர்க்கும் முதல் வழங்க வேண்டுமென்றும், தொழில் செய்வோருக்குத் தகுந்த ஊதியம் வழங்கப்படவேண்டுமென்றும் கூறுகிறார். போதிய வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு மக்களுக்கு வசதிகளை உண்டாக்கிக் கொடுத்தால் அவர்கள் திருப்தியடைவார்கள். பயமோ கவலையோ இன்றி வாழ்வர். நாட்டிலே குற்றச் செயல்கள் அருகிச், சமாதானம் நிலவும் என எடுத்துக் காட்டியுள்ளார்.

இதனால் பகவான் இல்லறத்தாருக்கு உபதேசம் செய்த போது பொருளாதார நிலைமையை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்தை வலியுறுத்தினார். ஆசையினாலும், பற்றினாலும் பணத்தைப் பதுக்கிவைக்க வேண்டுமென அவர் கூறவில்லை. அது அவருடைய அடிப்படைப் போதனைக்கு மாறான தாகும். அன்றியும் எந்த முறையிலும் ஒருவர் ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் அவற்றை விற்பதும் தீய சீவனோபாய மார்க்கமெனக் கண்டித்தார் என்பதை மேலே கண்டோம்.

தீகஜானு என்ற பெயருடைய ஒரு மனிதன் பகவானை ஒரு முறை அணுகிச் சொன்னான்:

'சுவாமி நாம் சாதாரண உபாசகர்கள், பிள்ளை குட்டிகளோடு இல்லற தருமம் நடத்துவோர். இம்மையிலும் மறுமையிலும் எமக்குச் சுகந்தரக் கூடிய அறத்தைப் போதிக்க வேண்டும்.'

இம்மையில் சுகம் பெறுவதற்கு நாலு காரியங்களுண்டு எனப் பகவான் கூறி,

முதலாவது ஒருவன் தன் தொழிலில் திறமையும் அறிவும், ஊக்கமும், ஆர்வமும் உடையவனாயிருக்க வேண்டும். தொழிலை நன்கு அறிந்திருக்க வேண்டும் (உட்டான சம்பதா) என்றார். இரண்டாவதாக வியர்வை சிந்தி நல்லவழியில் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க வேண்டும் (ஆரக்க சம்பதா) (இது அக்காலத்துப் பின்னணியை வைத்துப் புரிந்து கொள்வதானால் கள்ளர் முதலிய ஏதுக்களால் இழப்புண்டாகாமல் பாதுகாக்க வேண்டுமெனக் கொள்ள வேண்டும்). மூன்றாவது, உண்மையும் கல்வி ஒழுக்கங்களும் கண்ணியமும் விவேகமுள்ள நண்பர்கள் (கல்யாணமித்த) வேண்டும். அவர்கள் அவனை நல்வழியில் இட்டுச் செல்லக் கூடியவராயிருக்க வேண்டும். நாலாவது வரவுக் கேற்ற வகையில் செலவு செய்ய வேண்டும். மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவோ செலவு செய்யக்கூடாது. அதாவது செல்வத்தைப் பேராசையால் சேர்த்து வைக்கவுங் கூடாது. வீணாகச் செலவு செய்யவுங் கூடாது. சுருக்கமாகச் சொல்வதானால் வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும் (சம்ஜீலிகதா).

மறுமைக்குச் சுகந்தரக் கூடிய நான்கு சீலங்களைப் பகவான் அதன் பின்னர் உபதேசித்தார். (1) சிரத்தை: அதாவது ஒழுக்கம், ஆன்மீகம், விவேகம் என்ற துறைகளால் வரும் பயனில் நம்பிக்கையிருக்க வேண்டும். (2) சீலம்: பஞ்சசீலங்களான கொல்லாமை, கள்ளாமை, பிறர்மனை நயவாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஆகிய சீலங்களை மேற்கொள்ள வேண்டும். (3) சாக: கண்ணியம், வள்ளன்மை, செல்வத்தில் பற்றும் ஆசையுமில்லாதிருத்தல் என்பன. (4) பஞ்ஞா துக்கத்தை வேரோடுகளைந்து நிர்வாண சுகத்தைத் தரும் ஞானத்தை வளர்க்க வேண்டும்.

பணத்தைச் சேமிக்கும் முறையைப் பற்றியும், செலவு செய்யும் முறையைப் பற்றியும் கூடப் பகவான் விரிவாகக் கூறுகிறார். உதாரணமாக சிகாலன் என்ற வாலிபனுக்கு வருமானத்தில் காற்பகுதியைத் தன் தினசரிச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், அரைவாசியைத் தொழிலில் முதலீடு செய்ய வேண்டுமென்றும், அவசர காலச் செலவுக்குகாகக் காற்பங்கைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறார்.

புத்தர் ஒருமுறை தம்மீது சிறந்த பக்தியுடையவனும் சாவத்தியில் பகவானுக்குப் பிரசித்தி பெற்ற ஜேதவனாராமம் என்ற விஹாரத்தை அமைத்துக் கொடுத்தவனுமான. அனாத பிண்டிகன் என்ற தனவைசியனுக்கு, சாதாரண குடும்பத்தனாய் இல்லறம் நடத்தும் ஒருவனுக்கு நாலு வகையான சுகமுண்டென விளக்கினார். முதலாவது சுகம் அத்திசுகம். அதாவது நல் வழியில் தேடிய செல்வம். இது பொருளாதாரப் பாதுகாப்பு. இரண்டாவது போகசுகம். அதாவது அந்தப் பணத்தைத் தானும், சுற்றமித்திரரும், குடும்பத்தவரும், அனுபவிப்பதோடு புண்ணியங்களைச் செய்வதிலும் செலவு செய்தல். மூன்றாவது சுகம் அனணசுகம். அதாவது கடனில்லாது வாழ்தல். நாலாவது குற்றமற்ற பழியில்லாத தூய வாழ்க்கை வாழ்தல். இது அனவஜ்ஜ சுகம். மனம், வாக்கு, காயங்களினால் தீமை செய்யாமை. இங்கே மூன்று சுகங்கள் பொருளாதார அடிப்படையில் உண்டானவை என்றும் பொருளாதாரச் செம்மையும், லௌகிக சுகங்களும் பழிப்பில்லாத தூய வாழ்வுக்குப் பதினாறில் ஒரு பங்கு கூட ஈடாகமாட்டாவென்றும் பகவான் அனாத பிண்டிகனுக்கு அறிவுறித்தினார்.

பொருளாதார அபிவிருத்தி மனிதனுடைய சுகத்துக்கு அவசியம். ஆனால் ஆன்மீகமில்லாத அறத்தில் நிலை கொள்ளாத முன்னேற்றம் உண்மையான முன்னேற்றமன்று என அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை. சுகமும் சமாதானமும் திருப்தியுள்ள ஒரு சமூகத்தை அமைப்பதானால் ஒழுக்கமும், ஆன்மீகமும், அபிவிருத்தியடைய வேண்டுமென்பதைப் பௌத்தம் எப்பொழுதும் வலியுறுத்தி வந்திருக்கிறது. அது லௌகீக அபிவிருத்தியை ஊக்கப்படுத்துவதில் தயங்கவில்லை.

அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை. பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.

இன்று போலவே புத்தர் காலத்திலும் அநீதியாகத் தமது ராச்சியத்தை ஆண்ட அரசர்களிருந்தார்கள். மக்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டனர். சூறையாடப்பட்டனர். சித்திரவதை செய்து துன்புறுத்தப் பட்டனர். அநீதியான வரிகள் விதிக்கப்பட்டுக் கொடிய தண்டனைக் குள்ளானார்கள். இக்கொடுமைகளைக் கண்டு புத்த பகவான் மன வேதனை அடைந்தார். அதனால் நல்லாட்சி எப்படியிருக்க வேண்டுமென்பதைப் பற்றி ஆராய்ந்தார். தம்ம பத அட்டகதா என்ற நூலிலே இச்சம்பவம் கூறப்பட்டுள்ளது. அவருடைய கருத்துக்கள் அக்காலத்துச் சமூகப் பொருளாதார அரசியியல் பின்னணியை வைத்து மதிக்கப்பட வேண்டும். ஆட்சித்தலைவனான அரசனும் மந்திரிகளும் நிர்வாக உத்தியோகத்தரும் ஊழல் நிறைந்தவராய், நீதியற்றவராயிருந்தால் நாடு முழுவதுமே ஊழல் நிறைந்து, வளர்ச்சிகுன்றி, துன்பப்படும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். நாடு மகிழ்ச்சி மிக்கதாயிருக்க வேண்டுமானால் நீதி நிலவ வேண்டும், இவ்வாறு நீதியான அரசாட்சியை எவ்வாறு நிறுவலாமென்பதை 'தசராஜ தம்ம' என்ற தலைப்பில் அரசனின் பத்துக் கடமைகள் என ஜாதக கதைகளில் கூறியுள்ளார்.

பழங்காலத்திலே அரசன் என்று வழங்கப்பட்ட வார்த்தையை இன்று அரசு என மாற்றிக் கொள்ள வேண்டும். அரசனுடைய பத்துக் கடமை என்பதை இன்று அரசின் தலைவர், மந்திரிகள், அரசியல் தலைவர்கள், சட்டஞ் செய்யும் உத்தியோகத்தர், அதனை நிர்வாகஞ் செய்வோர் ஆகியோருக்குப் பொருத்தமுடையதாகக் கொள்ளவேண்டும்.

தசராஜ தர்மங்களில் முதலாவது தானம், அதாவது கொடை, செல்வம், பொருள், பண்டம் என்பவற்றில் அரசன் பற்றுடையவனாயிருக்கக் கூடாது. மக்களின் நன்மைக்காக அவற்றை அவன் தானம் செய்ய வேன்டும்.

இரண்டாவது சீலம். கொல்லாமை, கள்ளாமை, பிறரை வஞ்சியாமை, பிறரை சூறையாடாமை, பிறர் மனை நயவாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை என்பன இச்சீலங்களாகும். இவை பஞ்ச சீலங்கள். இவற்றையாவது அரசன் மேற்கொள்ளவேண்டும்.

மூன்றாவது, மக்கள் நன்மை குறித்து எல்லாவற்றையும் தியாகஞ் செய்தல். இது பரிச்சாகம் எனப்படும். மக்கள் நன்மையை உத்தேசித்து அரசன் தன் சௌகரியங்களைத் தியாகஞ் செய்யத் தயாராயிருக்க வேண்டும். பெயர் புகழ் என்பவற்றையும் தன் உயிரையுமே தியாகஞ் செய்ய வேண்டும்.

நாலாவது, நேர்மை (அஜ்ஜவ). தன் கடமையைக் செய்யும் விஷயத்தில் அவன் பயமின்றிப் பக்கஞ்சாராது இருக்க வேண்டும்.. நோக்கத்தில் உண்மையுடையவனாயிருக்க வேண்டும். பொது மக்களை ஏமற்றக் கூடாது.

ஐந்தாவது, கருணையும் மேன்மையுமுடையவனாயிருக்க வேண்டும். நல்லிசைவான சுபாவமுடையனாயிருக்க வேண்டும்.

ஆறாவது, தன்னை ஒறுக்கும் சுபாவமுடையனாயிருக்க வேண்டும். இது தபஸ் (தப) எனக் குறிப்பிடப்படுகிறது. டாம்பீகமான வாழ்வு வாழாது எளிய வாழ்வு வாழ வேண்டும். தன்னடக்கமுடையவனாயிருக்க வேண்டும்.

ஏழாவது: துவேஷ மற்றவனாய் குரோதமில்லாதவனாய் (அக்கோத) பகைமை எண்ணமற்றவனாயிருக்க வேண்டும். எவரிடத்தும் வன்மம் இல்லாதவனாயிருக்க வேண்டும்.

எட்டாவது அஹிம்சை. அதாவது இம்சை செய்யாதவனாயிருப்பது மாத்திரமன்று யுத்தங்களைத் தவிர்த்துச் சமாதானத்தை நிலவச் செய்ய வேண்டும். கொலை, பலாத்காரம் என்பவற்றை எங்கே கண்டாலும் தவிர்க்க வேண்டும்.

ஒன்பதாவது: பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் (கந்தி). சகிப்புத் தன்மை, நல்லெண்ணம் என்பவற்றைக் கொண்டவனாயிருக்க வேண்டும். இடுக்கண், கஷ்டம், அவமானம் என்பவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.

பத்தாவது: எதிர்ப்பில்லாதிருத்தல் (அவிரோத). மக்களுடைய விருப்பதுக்கு மாறாக நிற்கக் கூடாது. மக்கள் நன்மைக்கு உகந்த நடவடிக்கைகளை எதிர்க்கக் கூடாது. அதாவது மக்கள் விருப்பத்துக்கு இணங்க ஆட்சி நடத்த வேண்டும் [4].

இத்தகைய தசராஜ தர்மம் நிரம்பியவர்களால் ஆளப்படும் நாடு சுபீட்ச முடையதாயிருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் இது ஒரு கற்பனை ராச்சியமன்று, வாய் வேதாந்தமன்று. இந்தியாவிலே அசோகச் சக்கரவர்த்தி போன்ற பேரரசர்கள் இந்த தசராஜ தர்மத்துக்கமைய ராச்சியமமைத்து ஆண்டு வந்ததை நாம் அறிவோம்.

இன்று உலகம் இடையறாத பயமும், சம்சயமும், அமைதியின்மையுமுடைய தாயிருக்கிறது. மனத்தால் கற்பனை செய்ய முடியாத அழிவை உண்டாக்கக் கூடிய ஆயுதங்களை விஞ்ஞானம் இன்று உற்பத்தி செய்து வருகிறது. இப்புதிய மாரக ஆயுதங்களை எடுத்துச் சுழற்றிக் கொண்டு, வல்லரசுகள் ஒன்றை யொன்று போருக்கழைக்கின்றன. எதிரியைவிடத் தாமே உலகுக்கு அதிக அழிவையும் இன்னலையும் விளைக்கும் திறமையுடையவரென வீம்புபேசிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பைத்தியகாரத் தனத்தின் எல்லையை அவர்கள் அடைந்து விட்டார்கள். இத்திசையில் மேலும் ஓரடி எடுத்து வைப்பார்களானால் ஒருவரை ஒருவர் அழித்து விடுவது மாத்திரமன்றி மனித இனமே அழிந்து விடும்.

தாமே உருவாக்கிய இந்த நிலையிலிருந்து தப்புவதற்காக மன்பதை ஒருவழியைக் காண விரும்புகிறது. இதற்கு ஒரு பரிகாரந்தேட முயல்கிறது. இதற்கு ஒரே வழி புத்த பகவான் காட்டிய வழிதான். அவர் கூறிய வழி அஹிம்சைவழி. சமாதானம், அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, நல் லெண்ணம், சத்தியம், ஞானம், எல்லா உயிர்களையும் மதித்துப் போற்றுதல், தன்னலத்தைத் துறத்தல், துவேஷம், பலாத்காரம் என்பவற்றைக் கைவிடுதல் என்ற வழி. 'இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை, பகைமையால் தணிவதில்லை. அன்பினாலே தான் அது தணியும். இதுவே காலங் கடந்த கோட்பாடு, 'சனாதன தர்மம்' என்று புத்த பகவான் கூறியிருக்கிறார்.

'வெகுளியை அன்பால் வெல்லுக. தீமையை நன்மையால் வெல்க. கோபத்தைக் கொடையால் வெல்க. பொய்யைச் சத்தியத்தால் வெல்லுக.'

ஒருவன் அயல்நாட்டை வென்று அடிமையாக்க ஆசையும் வேட்கையும் கொள்வானானால் அவனுக்குச் சமாதானமோ சுகமோ கிடையாது.

பகவான் கூறுகிறார்: 'வெற்றி துவேஷத்தை வளர்க்கிறது. தோல்வி யடைந்தோர் துயரமடைகின்றனர். சமாதானத்தை விரும்புவோர் வெற்றி தோல்வியிரண்டையும் விட்டுச் சுகமாக வாழ்கின்றனர்.'

தன்னை வென்றவனே சமாதானமும் சுகமும் அடைகிறான். 'போர்க் களத்தில் ஆயிரமாயிரம் மக்களை வெற்றி கொள்பவனிலும் பார்க்கத் தன்னைத் தானே அடக்கி ஆள்பவன் மேலான வெற்றி வீரனாவான்.'

இவையெல்லாம் ரொம்ப அழகாகத்தானிருக்கின்றன. உயர்ந்தவை மாண்பு மிக்கவை. ஆனால் யார் இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரப்போகிறார்கள்? இவை திண்ணை வேதாந்தம் என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படியானால் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளுதல் காரிய பூர்வமான செயலா? ஒருவரை ஒருவர் கொல்வது பயனுடையதா? சதா பயமும் சம்சயமும் கொண்டு காட்டு மிருகங்கள் போல வாழ்வது பயனுள்ள செயலா? சௌகரியமானதா? காரிய பூர்வமானதா? பகையை எப்போதாவது பகையினால் வென்றிருக்கிறீர்களா? கொடுமையைக் கொடுமையினால் வென்றிருக்கிறீர்களா? ஆனால் தனிப்பட்ட முறையிலே பகையை அன்பினால் வென்ற வரலாறுகள் உண்டு. தீமையை நன்மையால் வென்ற சந்தர்ப்பங்களுண்டு. தனிப்பட்டவர் விஷயத்தில் இது சாத்தியமாகலாம், தேசங்களைப் பொறுத்தவரையில் சர்வதேசப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இது சாத்தியமில்லையென்று கூறுவீர்கள். 'தேசம்', 'நாடு', சர்வதேசம்' என்ற பிரசாரப் போக்குடைய அரசியல் மயமான சொற்களைக் கேட்டு மக்கள் உள்ளம் மயக்கமடைகிறது. தன்வச மழிகிறது. குருடாகிறது. ஏமாற்றமடைகிறது. தேசமென்றாலென்ன? மக்களின் கூட்டமல்லாது தேசமோ, நாடோ செயல்புரிகிறதா? தனிப்பட்டவர் தான் செயல்புரிகிறார்கள். தனிப்பட்டவர் நினைப்பதையும் செய்வதையுமே தேசம் நினைக்கிறது, செய்கிறது. தனிப்பட்டவர்க்குப் பொருத்தமானதே நாட்டுக்கும் பொருத்தமாகிறது. பகையை அன்பினாலும் கருணையினாலும் தனிப்பட்ட முறையில் தணிக்க முடியுமானால் தேசரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தணிப்பதற்கு ஏன் முடியாது? தனிப்பட்டவர்கூட பகையை அன்பினால் தணிப்பதானால் ஒருவரிடம் எல்லையற்ற தைரியமும், வீரமும், சிரத்தையும், ஆன்மபலத்தில் நம்பிக்கையும் வேண்டும். அப்படியானால் சர்வதேச விஷயங்களில் இப்பண்புகள் எவ்வளவு அதிகம் தேவைப்படுகின்றன? காரியபூர்வமானதன்றெனக் கூறும்போது அது சுலபமானதன்றெனப் பொருள் கொள்வீரானால் நீர் சொல்வது சரி. அது உண்மையில் அத்துணைச்சுலபமானதன்று தான். ஆனால் அதை முயன்று பார்க்க வேண்டும். அது அபாயம் மிக்கதானால் அணு ஆயுத யுத்தத்தை விட ஆபத்துள்ளதா?

சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு பேரரசன் இந்தியாவில் இருந்தான். அவன் பௌத்த சக்கரவர்த்தியாக கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே அஹிம்சை, சமாதானம், கருணை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய ராச்சியத்தை ஆண்டான். அசோகன் உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டு விவகாரங்களிலும் இக்கொள்கைகளையே மேற்கொண்டான். அவனிடம் அவ்வாறு செய்யத் தைரியமும், சிரத்தையும் காட்சியும் இருந்தன. அவனுக்கு 'தேவர்களுக்குப் பிரியமானவன்' என்ற பெயர் வழங்கப்பட்டது. இன்று இவற்றை நினைக்கும் போது பெரிய ஆறுதலும் மனத்திலே எத்துணை அருட் சிளர்ச்சியும் உண்டாகிறது!

முதலிலே அப்பேரரசன் தன் தந்தையான பிந்துசாரனும், தாத்தாவான சந்திரகுப்தனும் காட்டிய வழியிற் சென்று இந்தியத்துணைக் கண்டம் முழுவதையும் வென்று வெற்றிவாகை சூட எண்ணினான். கலிங்கத்தின் மீது படையெடுத்து அதை வென்று தன் ராச்சியத்தோடு சேர்ந்துக் கொண்டான். இலட்சக்கணக்கானவர் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டும், காயமுற்றும், சிறைப் படுத்தப் பட்டும் சித்திரவதை செய்யப்பட்டுமிருந்தனர். பின்னர் அவன் புத்த மதத்தைத் தழுவியதும் புத்தரின் அறநெறி அவனை முற்றாக மாற்றிவிட்டது. கற்பாறையில் அவன் செதுக்கு வித்த பிரசித்தி பெற்ற சிலாசாசன மொன்றிலே (இது 13 ஆவது சிலாசாசனம் எனப்படும். இதனை இன்றும் காணலாம்.) இதில் கலிங்க வெற்றியைப் பற்றி அவன் பகிரங்கமாகத் தன் பச்சாத்தாபத்தைத் தெரிவிக்கிறான். அந்த உயிர்க் கொலையை நினைக்கும் போது 'தன்னெஞ்சம் வெடிக்கிறதெனக் கூறி இனிமேல் போருக்கென்று வாள் வீசுவதில்லை யெனவும் எல்லா உயிர்களும் இம்சையடையாது தன்னடக்கமும், அமைதியும், மென்மையுமுடையவனாய் வாழ வேண்டுமென்றும் பகிரங்கமாகப் பிரசித்தப்படுத்தினான். தேவானாம் பிரியனான அசோகன் இதையே மேலான வெற்றியாகக் கருதினான். அதாவது தர்மத்தினால் பெற்ற வெற்றி (தம்மவிஜய) அவன் போரைத் துறந்ததுமட்டுமன்றி, 'என் புத்திரரும் பௌத்திரரும் புதியதொரு வெற்றியை ஒரு பொருளாகக் கொள்ளமாட்டார்' எனத்தன் விருப்பத்தையும் தெரிவித்தான். தர்ம விஜயத்தையே பெரிய வெற்றியாக அவர்கள் கருதுவாராக. அது இம்மைக்கும் மறுமைக்கு நன்மை பயக்குமெனக் கருதினான்.

உலக சரித்திரத்திலே தன் அதிகாரத்தின் உச்சநிலையிலேயிருந்த ஓர் வெற்றி வேந்தன் மேலும் நாடுகளைக் கைப்பற்றும் வல்லமை பெற்றிருந்த ஒருவன், போர் வேண்டாம் இம்சை வேண்டாம், சமாதானமும் அஹிம்சையுமே வேண்டுமென்று கூறி யுத்தத்தைக் கைவிட்ட ஒரே சந்தர்ப்பம் இதுவே.

உலகம் மேற்கொள்ள ஒரு போதனை இங்கே உண்டு. ஒரு சக்கரவர்த்தி போரையும், பலாத்காரத்தையும் வெறுத்து, அஹிம்சையையும், சமாதானத்தையும் மேற்கொள்ளுகிறார். அசோகனுடைய தர்மிஷ்டப் போக்கை வாய்ப்பாகக் கொண்டு அயல்நாட்டு மன்னர் அவன் மீது படையெடுத்ததாகச் சரித்திரத்தில் சான்றில்லை. உள்நாட்டுப் புரட்சிகளேற்பட்டதாகச் செய்தி இல்லை. நாடெங்கிலும் சமாதானமே நிலவிற்று. அவனுடைய கருணை மிக்க தலைமையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. வல்லரசுகளின் பலத்தைச் சமன்படுத்துவதாலோ, அணு ஆயுதங்களைக் கொண்டு வெருட்டுவதாலோ, சாமாதானத்தை ஏற்படுத்தலாமென்று பேசுவது மடமை. ஆயுதப் பெருக்கம் பயத்தை உண்டாக்குமேயன்றி சமாதானத்தை உண்டாக்காது. பயத்தினால் உண்மையான சமாதானத்தை நிலை நாட்டலாம் என்று நினைப்பதும் முடியாத காரியம். பயத்தினால் துவேஷமும், பகைமையும், குரோதமுமேயுண்டாகும். தற்காலிகமாக அவை அடங்கியிருக்கும். ஆனால் தருணம் ஏற்பட்டதும் எந்நேரமும் வெடித்துச் சீறி வெளிவரும். மைத்திரி நல்லெண்ணம் நிலவவேண்டும். பயம், சம்சயம், ஆபத்து என்பன அற்ற சூழ்நிலையில் தான் உண்மையான சமாதானம் நிலவும்.

அதிகாரப் போட்டியில்லாத, வெற்றி தோல்விகளில்லாத சாந்தியும் சமாதானமுமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே பௌத்தத்தின் நோக்கம். இங்கே பாவம் பழி அறியாதர் இம்சிக்கப்பட மாட்டார்கள். ராணுவ பலத்தாலும் பொருளாதார யுத்தத்தினாலும் கோடிக்கணக்கான மக்களை வெற்றி கொள்பவனை விடத் தன்னைத்தான் அடக்கி வென்றவனையே மக்கள் மதிப்பர். பகையை அன்பினால் வெல்வார்கள். நன்மையினால் தீமையை வெல்வார்கள். அழுக்காறு, குரோதம், பகை எண்ணம், பேராசை என்பன மனிதனுடைய மனதைக் களங்கப் படுத்த மாட்டா. மக்கள் கருணையினால் தம் தொழிலெல்லாவற்றையும் செய்வர், சிறிய செந்துக்கள் உட்பட எல்லோரும் நீதியோடும், மதிப்போடும் அன்போடும் நடத்தப்படுவர். வாழ்வு லௌகீக சுபீட்சம் நிறைந்ததாய் சமாதானமும் நல்லிணக்கமும் உடையதாய், உயர்ந்த நிர்வாண சுகத்தை நோக்கிச் செல்லும். அதுவே பரமார்த்தம்.

* * *

[1] மொ. ஆ. கு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கைப் படும் (திருக்குறள் 50)

[2] மொ. ஆ. கு.

இந்தப் பஞ்ச சீலங்கள் பற்றிய திருக்குறள், கொல்லாமை, கள்ளாமை, பிறர் மனைநயவாமை பொய்யாமை, கள்ளுண்ணாமை என ஐந்து அதிகாரங்களாற் கூறுகிறது.

[3] புத்த சங்கத்துப் பிக்குகள் தனிப்பட்ட முறையில் உடைமை வைத்திருக்க கூடாது. ஆனால் சங்கத்துக்குரிய பொதுச் சொத்தாக வைத்திருக்கலாம்.

மொ. ஆ. கு

அருள் என்னும் அன்பு ஈன்குழவி பொருள் என்னும்

செல்வச் செவிலியாலுண்டு (குறள் 757)

[4] கி. மு. மூன்றாவது நூற்றாண்டிலே இந்தியப் பேரரசனாய் விளங்கிய அசோகன் தன்னுடைய நிர்வாகத்தை எந்தப் பஞ்சசீலத்துக்கிணங்க நடத்தினானோ அதே பௌத்த பஞ்சசீலமே இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் அனுசரிக்கப் பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சசீலம் என்னும் சொற்றொடர் பௌத்த சமயத்திலிருந்து பெறப்பட்டதாகும். (2013 குறிப்பு: இது நேரு அவர்கள் பிரதம மந்திரியாக இருந்த போது எழுதப்பட்ட குறிப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)