தன்னடக்கம்

தன்னடக்கம்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Humility

Ajahn Sona

English version follows the Tamil translation.

உண்மையான தன்னடக்கம் என்பது நாம் மற்றவரைவிடத் தாழ்ந்தவர் என்று உணர்வது இல்லை, மற்றவரைவிட மேன்மையானவர் என்று உணர்வதும் இல்லை, மற்றவருக்குச் சமம் என்று உணர்வதும் இல்லை.

தன்னடக்கம் என்றால் வளைந்துகொடுக்கும் தன்மை கொண்டிருப்பது, அகம்பாவத்தைத் (அகம் + பவம்; அகம் என்றால் நான்; பவம் என்றால் தோற்றம்) தோற்றுவிக்காமல் இருப்பது. இதனால் நாம் நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களுக்குப் பயப்படாமல் இருக்க முடியும்.

புயற் காற்றால் மரங்களுக்குப் பிரச்சனை. குறிப்பாக உயரமான எளிதில் ஒடியக்கூடிய மரங்களுக்கு [1] அது ஒரு பிரச்சனை. அது போல நாம் கட்டிய வளைந்து போகாத அகம்பாவமும் எளிதில் முறியக் கூடியதே. காற்றின் திசை திடீரென்று மாறிப்போனால், அதாவது, 'இப்படித்தான் நடக்கும்' என்று நாம் நினைத்ததற்கு மாறான சம்பவம் நிகழ்ந்து விட்டால் அல்லது நம்மைப் பற்றிய நமது எண்ணங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்படுவதாகத் தோன்றினால் நமது அகம்பாவத்தில் சற்று விரிசல் உண்டாகவோ அல்லது அது உடைவதற்கோ சாத்தியம் ஏற்படும் அபாயம் உள்ளது.

தன்னடக்கம் உள்ளவர் - அந்த அகம்பாவத்தை வளர்த்துக் கொள்ளாதவர் – நாணற்புல்லைப் போன்றவர் [2]. புயற் காற்று வீசினாலும் பிரச்சனை இல்லை. புல் வளைந்துகொடுக்கும் தன்மையுடையது. பச்சைப் பசேலென்ற செழிப்புத்தன்மை கொண்டது. எனவே தன்னடக்கம் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சமாளிக்கப் பெரிதும் உதவிடும் அருமையான பண்பாகும்.

எதையும் சேர்த்து வைக்காதபடியால் தொலைந்து போக நம்மிடம் ஒன்றும் இல்லை. உங்களிடம் இருப்பதெல்லாம் நேர்மையான நடத்தை மட்டுமே. உங்களைப் பற்றி நீங்கள் மனக்கோட்டை எதையும் எழுப்பவில்லை. நீங்கள் வாய்மையுடையவராகவும், உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விருப்பமுள்ள திறந்த மனமுடையவராகவும் உள்ளீர்கள். ஏன் உங்களைப் பற்றிய நல்ல பண்புகளைத் தெரிந்து கொள்வதைவிட உங்களது திறனற்ற பண்புகளைத் தெரிந்து கொள்ள விருப்பமுடையவராகக்கூட இருக்கலாம். உங்களது ஒரு நல்ல பண்பைப்பற்றித் தெரிந்து கொள்வது இன்பமானதாக இருந்தாலும் அதைத் தெரிந்து கொள்வதனால் நாம் மேலும் வளர்ச்சியடையப் போவதில்லை. ஆனால் திறனற்ற பண்பைத் தெரிந்து கொள்ள நேரிட்டால் அதில் நன்மையுள்ளது. ஏன்? ஏனென்றால் நாம் அதைத் தவிர்த்துவிட்டு மேலும் வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது.

நாம் செய்த தவற்றை அல்லது செய்து கொண்டிருக்கும் தவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது அருமையான செய்தியாகும். அது மிகவும் திருப்திகரமானது. ஞானம் பிறக்க நேரம் வந்து விட்டது. சரியான வழி இதுவரை தெரியவில்லை. அகம்பாவத்தை வளர்த்துக் கொள்ளவில்லையென்பதால் நாம் நம்மையே நிந்தித்துக் கொள்ள மாட்டோம்.

நம்மை நாமே குறைவாக நினைத்துக் கொள்வது (சுய மதிப்பில்லாமலிருப்பது) அகம்பவத்தை வளர்த்துக் கொள்வதற்கு எதிர்ச்செயலாகும். இவ்விரண்டையும் கைவிட வேண்டும். இரண்டிலும் அபாயம் உள்ளது. சுய மதிப்பு இல்லாதவர் தங்களைப்பற்றிய ஒரு தவறான செய்தியை அறிய நேரிட்டால் அதைச் சரிசெய்ய நினைப்பதில்லை. அதனால் அவர்கள் நிலைகுலைந்து விடுகின்றனர். 'சரி, இது ஒரு கலை. ஒரு திறமை. இதனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மிடமுள்ள தீய பண்புகளை நீக்க வேண்டும். அன்பையும், நட்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் அறம் வளர்க்கும் பாதையைப் பின் தொடர வேண்டும்,' என்று நினைக்காமல் மனம் குழப்பமுற்று விடுகின்றனர். 'நான் இன்னமும் அறிவாளியாகவில்லை. நான் இன்னும் முழுமையான நற்பண்புகளுடையவனில்லை. நான் அக்கரை சேரவில்லை.' இப்படி ஏன் நினைக்க வேண்டும்? என்னதான் இவர்கள் எதிர்பார்க்கின்றனர்? எவரும் துவக்கத்தில் முழுமையானவராகத் துவங்குவதில்லை. பிறப்பின் இயல்பு இது. எவரும் பிறப்பிலேயே முழுமையானவராகப் பிறப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. நமக்குள் பிரச்சனைகள் இருப்பது இயற்கையே. நமக்குள் உள்ள திறனற்ற பண்புகளை அறிவதிலுள்ள நன்மையை உணர வேண்டும். ஒரு புதிய ஆராய்ச்சி. இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதைச் சோதிக்கும் நேரம் வந்து விட்டது.

எதையும் செய்ய முடியாதென்றால் அது பிரச்சனைதான். எல்லாம் கடவுளின் அருளால் மட்டுமே தீர்க்கப்படுமென்றால் அல்லது தற்செயலாகத் தீர்க்கப்படுமென்றால் அல்லது தாய் தந்தையிடமிருந்து பிறப்பினால் வரும் பண்பென்றால் அது உண்மையில் ஒரு பிரச்சனைதான். ஏனென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் விஷயம் அப்படிபட்டது இல்லை. பௌத்தப் பார்வையில் நடப்பதெல்லாம் காரண காரியத் தொடர்புடையவை என்பதே. காரியங்கள் எப்படி நடக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் விளைவுகளை ஏற்படுத்த முடியாது. அது தான் அவிஜ்ஜா அல்லது அறியாமை (மயக்கம்) என்பது. சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் அப்படி நடந்திருக்க மாட்டோம். ஆனால் அறியாமையின் காரணமாக அப்படி நடந்து கொண்டோம். இப்போது நமது தவறை உணர்ந்து கொண்டோம். அந்தப் பொருளை அங்கே வைத்திருக்கக் கூடாது, அந்தச் சூழ்நிலையில் அப்படிப்பட்ட மனவுணர்ச்சி இருந்திருக்கக் கூடாது. நடந்ததற்கு நாம் அவ்வாறு எதிர்ச்செயல் செய்திருக்கக் கூடாது. இப்படிப் புதிய அறிவோடு நாம் திறமையாக நடந்து கொள்ள வேண்டும்.

மாற்றம் உண்டாவது ஒரு இனிமையான அனுபவம். அதைப் பிரித்தெடுங்கள். துடைத்து விடுங்கள். இதை மாற்றி, அதை மாற்றி அனைத்தையும் ஒன்று சேருங்கள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். எப்படி வேலை செய்கின்றது என்பதைப் பாருங்கள். நம் மனப்போக்கு இப்படிப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். இது தான் தன்னடக்கம் என்பது. எல்லாம் நினைத்தபடி நடக்கவில்லை என்பதால் நிலைகுலைந்துவிடக் கூடாது. நினைத்தபடி நடக்கும் என்று எதிர்நோக்குவது தவறு. இப்படிப்பட்ட மனநிலையிருப்பது உற்சாகமான விஷயம். இது ஒரு கலை, நாம் வளர்த்துக் கொள்ளவேண்டிய திறமை. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றும் எல்லாம் காரண காரியத் தொடர்புடையவை என்றும் நினைப்பது நல்லது.

* * *

விளக்கம்

[1] தென்னையிளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது

தென்னைதனைச் சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது.

[2] ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணழகு

காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை. (கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள்)

இங்கு நாணழகு என்பது நாணல் புல்லின் அழகைக் குறிக்கும். நாணல் ஆற்றங்கரையின் மணற்பாங்கான பகுதிகளில் சுவர் போல வளர்ந்திருக்கும் புல். இளம் காற்றில் அவை அசைந்து வளைவது அழகான காட்சி. காற்றுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. ஒடியாது. சூறாவளிக் காற்றில் தென்னை மரங்களெல்லாம் ஒடிந்து விழும் போதும், நாணல் புல்லுக்கு - அதன் வளையும் தன்மையால் - ஒன்றும் நேராது. காற்று நின்றதும் அது தலை நிமிர்ந்து நிற்கும்.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Humility

True humility is not a feeling that one is lower than anybody else, not a feeling that one is higher than anyone else and not a feeling that one is equal to anyone else.

Humility is a flexibility, it is the non-construction of the ego. So there is no sense of threat from the environment. The winds that blow are a problem for trees specially for brittle trees that stand higher in the wind. The ego that is constructed stands up high and is brittle, is hardened. If the wrong wind blows that way something that contradicts ones own self image, one that threatens ones self image and there is danger maybe it cracks or breaks . A person who is humble - humility is that non construction of that ego. So it is like the grass. The wind can roar across - no problem. The grass is flexible, vital, full of greenness, vitality and extraordinarily flexible. So humility is absolutely the best all around tactic for dealing with life.

You don't have a lot on the line. All you got on the line is straight forwardness. You don't have any pretense about yourself. You are happy to be open and honest, to find out about yourself, to discover things about yourself. You might even be more pleased to find out faults about yourself than a good quality. A good quality is maybe it is nice to know about but you do not develop when you find out about a good quality. But a quality of fault is something very nice to know about. You suddenly are about to experience growth. It is wonderful to know about something. It is wonderful to have discovered a mistake that you have made or been making. Very gratifying. It is the moment of the beginning of new wisdom. Very exciting moment to find out you have been making a mistake. That you just did not understand things in the right way. If there is no big ego construction you won't be extraordinarily harsh with your self. This notion of low self esteem etc. all of this is the reverse side of high self esteem. Do not make either. Either is dangerous. When you encounter a fault in yourself it is not actually a positive golden thing. It becomes a problem for you. It upsets you. Instead of just taking up this task as something interesting to put together, a craft, a skill you are working on, development of the art of loving kindness, the development of the Path one gets disturbed and upset one finds, 'Gosh, I am not already enlightened. I am not perfect. I am not gone beyond.' Oh really? What did you expect? Nobody starts off this way. It is the nature of birth. No one is born perfect. Cannot be. One must expect to find these things and be happy to find the weak points in oneself because it is the beginning of a new exploration. A new and interesting exploration of what can I do about this.

Certainly it would be disturbing if you could not do anything about anything. If it it all came from the grace of God or it was all accidental or all genetic or something like that. But it is not. The whole idea from the Buddhist point of view is all these things arise because of conditions. You get poor results when you don't understand how things work . That is avija or mis-knowledge. You wouldn't have put it together that way if you knew better, but because you had mis-knowledge you structured your consciousness in a certain way. Now you discover that part shouldn't go there, that emotion shouldn't be there, that reaction is not the way . Now you work carefully with new knowledge. Restructuring. It is a very enjoyable experience. Take it apart. Polish it up. Change this. Change that. Put it back together. Try it again. See how it works. That is the attitude. That is what humility is. Not to get frustrated and distracted and upset when you find that everything has not been put there perfectly. Of course it is not that way. And in fact It is interesting, exciting if you have this attitude that things are causal that one thing depends on another then it is all grist for the mill and another little craft to develop, another little skill, another little ability to be cultivated.