பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - திரிசரணம் (மும்மணி)

கௌதம புத்தர்

மயிலை சீனி. வேங்கடசாமி

பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - இரண்டாம் பதிப்பு 1969

Lord Buddha's Life History - Mylai Seeni Vengatasamy 2nd Edition 1969

இணைப்பு 2

திரிசரணம் (மும்மணி)

பௌத்தர்கள் புத்தர் தர்மம் சங்கம் என்னும் மும்மணிகளை அடைக்கலம் புகவேண்டும். மும்மணிகளுக்குத் திரிசரணம் என்பது பெயர். திரிசரணத்தின் பாலிமொழி வாசகம் இது:

புத்தம் சரணங் கச்சாமி

தம்மம் சரணங் கச்சாமி

சங்கம் சரணங் கச்சாமி

துதியம்பி, புத்தம் சரணங் கச்சாமி

துதியம்பி, தம்மம் சரணங் கச்சாமி

துதியம்பி, சங்கம் சரணங் கச்சாமி

ததியம்பி, புத்தம் சரணங் கச்சாமி

ததியம்பி, தம்மம் சரணங் கச்சாமி

ததியம்பி, சங்கம் சரணங் கச்சாமி

இதன் பொருள் வருமாறு:

புத்தரை அடைக்கலம் அடைகிறேன்.

தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்.

சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்.

இரண்டாம் முறையும்

புத்தரை அடைக்கலம் அடைகிறேன்.

தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்.

சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்.

மூன்றாம் முறையும்

புத்தரை அடைக்கலம் அடைகிறேன்.

தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்.

சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்.

தசசீலம் (பத்து ஒழுக்கம்)

பௌத்தரில் இல்லறத்தார் பஞ்ச (ஐந்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். துறவறத்தார் தச (பத்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். சீலத்தை சிக்காபதம் என்றும் கூறுவர். தச சீலத்திலே பஞ்ச சீலங்களும் அடங்கியுள்ளன. இல்லறத்தார் பஞ்ச சீலங்களையும், துறவறத்தார் தச சீலங்களையும் தினந்தோறும் ஓதவேண்டும். தசசீலத்தின் பாலிமொழி வாசகம் இது:

1. பானாதி பாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி.

2. அதின்னாதானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி.

3. காமேசு மிச்சாசாரா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி ( ஐந்து சீலங்கள் கடைபிடிப்பவருக்கு).

அஹ்ப்ரஹ்மசரியா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி (பத்து சீலங்கள் கடைபிடிப்பவர்களுக்கு, துறவிகளுக்கு).

4. முஸாவாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி.

5. ஸூரா மேரய மஜ்ஜ பமா தட்டாணா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி.

6. விகால போஜனா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி.

7,8,9. நச்சகீத வாதிக விலரக்க தஸ்ஸனமால கந்த விவப்பண தாரணமண்டன விபூஷணட்டானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி.

10. உட்சாசன மஹாசயன வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி.

இதன் பொருள் வருமாறு:

1. உயிர்களைக் கொல்லாமலும் இம்சை செய்யாமலும் இருக்கும் சீலத்தை (ஒழுக்கத்தை) மேற்கொள்கிறேன்.

2. பிறர் பொருளைக் களவு செய்யாமலிருக்கும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

3. பிரமச்சரிய விரதம் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன். (இது இல்லறத்தாருக்குப் பிறர் மனைவியரிடத்தும் பிற புருஷரிடத்தும் விபசாரம் செய்யாமல் இருப்பது என்று பொருள்படும். துறவறத்தாருக்குப் பிரமச்சரிய விரதம் என்பது இணைவிழைச்சியை அறவே நீக்குதல் என்று பொருள்படும்).

4. பொய் பேசாமலிருத்தல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

5. கள் முதலிய மயக்கந்தருகிற பொருள்களை நீக்குதல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

6. உண்ணத்தகாத வேளையில் உணவு கொள்ளாமை என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.

7,8,9. இசை, ஆடல் பாடல்களைக் கேட்டல், கண்டல், புஷ்பம் வாசனைத் தயிலம் முதலியவற்றை உபயோகித்தல், பொன் வெள்ளி முதலியவற்றை உபயோகித்தல் ஆகிய இவற்றைச் செய்யாமல் இருக்கிற சீலத்தை மேற்கொள்கிறேன்.

10. உயரமான படுக்கை, அகலமான படுக்கை முதலிய சுக ஆசனங்களை உபயோகிக்காமல் இருக்கிற சீலத்தை மேற்கொள்கிறேன்.

* * * * *