நல் ஒருக்கம்

அட்டாங்க மார்க்கம் முகப்பு

நல் ஒருக்கம் (சம்மா சமாதி)

Right Concentration (Samma Samadhi)

English

நல்லூக்கமும், நற்கடைப்பிடியும் எட்டாம் பிரிவான நல் ஒருக்கத்தை வளர்க்கும் நோக்கம் கொண்டுள்ளவை. நல் ஒருக்கம் என்பது மனத்தின் ஒருமுகப்பாடு. ஆரோக்கியமான மனத்தின் ஒன்று கூடல் (சிதறிய மனத்தின் எதிர்மறை). ஒருக்கத்தை வளர்க்க, நாம் ஒரு பொருளோடு துவங்கி, மனத்தை அதன் மீது முழுமையாகக் கவனம் செலுத்த வைத்து, ஒரே நினைவாகத் தடுமாற்றமில்லாமல் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வதாகும். நல்லூக்கத்தைப் பயன்படுத்தி மனத்தை அந்தப் பொருள் மீது கவனம் செலுத்த வைக்க வேண்டும். ஒருக்கத்தைக் கலைக்கும் மாசுகளைத் தெரிந்திருப்பது நற்கடைப்பிடிதான். பின் மீண்டும் நல்லூக்கத்தோடு அந்த மாசுகளைக் களைந்து, ஒருக்கத்தை வளர்ப்பனவற்றுக்கு வலுவூட்டுகிறோம். திரும்பத் திரும்பப் பயிற்சி செய்வதால் மனம் படிப்படியாக அசைவுறாமல் நிலைக்கப் பயின்று அமைதி பெறுகிறது.

மேலும் தொடர்ந்து பயிற்சி செய்வதால் மனம் ஆழ்ந்த அமைதி நிலைகளான ஜான (Jhana) நிலைகளை அடைகிறது.

அமைதியான மனம் - மெய்ஞ்ஞானத்தின் நுழைவாயில்

மனம் அமைதியாக ஒன்றுகூடி இருக்கும் போது நுண்ணறிவு வளர இடம் கொடுக்கிறது. நல் ஒருக்கம் வளர்ந்தபின் மனம் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகி விடுகிறது. அதனை நற்கடைப்பிடிக்கான நான்கு அடித்தளங்கள் மீதும் கவனம் செலுத்தச் செய்யலாம். அவை: உடலை, உணர்ச்சிகளை, மனத்தின் நிலைகளை, தம்ம போதனைகளைப் பிரதிபலிக்கச் செய்வதாகும்.

உடலின், மனத்தின் செயற்பாடுகளை ஆராயும்போது கணத்துக்குக் கணம் நிகழும் ஓட்டங்களை அறிந்து படிப்படியாக நுண்ணறிவு பிறக்கிறது. அது வளர்ந்து, முதிர்ந்து, ஆழமாக ஊடுருவியபின் மெய்ஞ்ஞானமாக மாறுகிறது. இதுவே நான்கு மேன்மையான உண்மைகளைக் காணும், நம்மை விடுவிக்கும் மெய்ஞ்ஞானமாகும்.

இந்த வளர்ச்சியின் உச்ச நிலையில், நான்கு மேன்மையான உண்மைகளை நேரடியாகவும், உடனடியாகவும் பார்க்கிறோம். கிலேசங்கள் அகற்றப்பட்டு, மனம் தூய்மையடைந்து மன மாசுகளிடமிருந்து விடுவிக்கப் படுகிறது.

அட்டாங்க மார்க்கம் என்ற தலைப்புக் குறிப்பது போல, அது எண் வகையான பிரிவுகளைக் கொண்டது. அந்த எட்டுப் பிரிவுகளையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர வேண்டும் என்பதில்லை. மார்க்கம் இந்த எட்டுப் பிரிவுகளையும் ஒரே சமயத்தில் வளர்க்கின்றது. ஒவ்வொரு பிரிவும் தனித்தனியாக முற்றிலும் வேறுபட்ட செயல்களைச் செய்கின்றது. ஒவ்வொன்றும் அதனதன் வழியில் துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லத் துணை புரிகின்றது.