சார்பில் தோற்றம் முகப்பு Dependent Origination Home
உட்கொள்ளுவதில் பரபரப்பு
தணிசாரோ பிக்கு
Feeding Frenzy
Thanissaro Bhikkhu
English version follows Tamil translation
( மொ. ஆ. குறிப்பு:
தலைப்பில் உள்ள 'உட்கொள்ளுதல்' என்ற சொல் உடலின் தேவைக்காவும், சுவைக்காகவும் உண்ணும் உணவு சம்பந்தப்பட்டது அல்ல. வாழ்க்கையில் இப்படி ஆக வேண்டும், அப்படி ஆக வேண்டும், இதைப் பெற வேண்டும், அதைச் சேர்க்க வேண்டும் என்ற மனத்தின் துடிப்பையே 'உட்கொள்ளுவதில் பரபரப்பு' என்றும், இவை அமைதிக்கு எடுத்துச் செல்லாத பவம் / தோற்றம் என்றும் விளக்குகிறார் தணிசாரோ பிக்கு.
மனத்தின் நுகர்ச்சிகளோடும் (feelings), குறிப்புகளோடும் (perception), உணர்வுகளோடும் (sensory consciouuness), எண்ண ஓட்டங்களோடும் (mental formations), உடலையும் (form) சேர்த்தால் ஐந்து கந்தங்களாகின்றன. இவற்றோடு நாம் உலகங்களை உருவாக்குகின்றோம். ஆனால் பெரும்பாலும் அவ்வுலகங்கள் துக்கத்துக்குக் காரணமாகவே அமைகின்றன. அவ்வுலகங்கள் நிலைத்திருப்ப தில்லை. அவை மறைந்து விடுகின்றன. பின் நாம் மீண்டும் வேறு புதிய உலகத்தைத் தோற்றுவிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் அவரவர் மனத்தினால் உருவாக்கப்பட்ட உலகங்களில் தான் வாழ்கிறோம்.
உதாரணமாக ஒருவர் நம்மிடம் ஏதோ ஒரு செய்தியைக் கூறுகிறார். செய்தியைக் கேட்ட பின் மனத்தில் ஒரு துன்பமான உணர்ச்சி (feeling) உருவாகிறது. ஆழ்மனத்திலிருந்து சில மனக்குறிப்புகளும் (perception/memory) நினைவுக்கு வருகின்றன. இப்படிச் சொன்னதை / நடந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருப்பது மனத்தில் நாம் உருவாக்கும் ஒரு உலகம். அப்படிச் செய்திருக்க வேண்டும் அல்லது இப்படி செய்திருந்தால் அச்செயல் நிகழ்ந்திருக்காது போன்ற நினைவு. அடுத்த நாள் அல்லது சில நாட்களுக்குப் பின் இந்த வருத்தம் இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடுகிறது. 'அட! இதற்காகவா இப்படிச் சஞ்சலப் பட்டோம்,' என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த உலகம் மறைந்து விட்டது. இடையில் நாம் செய்யும் பணியில் ஒரு சிறு சிக்கல். சிறு சிக்கல் தான் என்றாலும் வேலையே போய் விடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. எதிர் காலத்தில் நிகழக் கூடிய சூழ்நிலைகளை நினைத்துக் கவலை கொள்வது நாம் உருவாக்கும் மற்றொரு உலகம்.
பெரும்பாலும் நிகழ்காலத்தில் நிலைத்து நிற்காமல், கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் நினைத்துக் கொண்டிருப்பது திறமையற்ற பவங்கள். சார்பில் தோற்ற நிதானங்களுள் ஒன்றான பவம் பொதுவாகத் திறமையற்ற தோற்றமாகவே வெளிப்படுகிறது. மூச்சைக் கவனிக்கும் தியானத்தைச் செய்வது ஒரு திறமையான பவம் என்கிறார் தணிசாரோ பிக்கு. )
உட்கொள்ளுவதில் பரபரப்பு
பாலி மொழியில் பவம் என்றால் மனத்தில் நாம் உருவாக்கும் உலகங்கங்களைக் குறிக்கும். பவம் என்றால் தோற்றம் (புதிதாகத் தோற்றம் எடுப்பது) அல்லது ஆகுதல். நாம் தொடர்ந்து இவ்வுலங்கங்களை மனத்தில் தோற்று வித்துக் கொண்டே இருக்கிறோம்.
சார்பில் தோற்றக் கோட்பாட்டின்படி பவம் தோன்ற இரண்டு காரணங்கள் உள்ளன. உடனடியான முதற்காரணம் பற்று - பாலியில் உபதானா. மற்றொரு காரணம் வேட்கை - பாலியில் தன்ஹா.
ஆனால் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் வேறு உட்பொருள்களும் உள்ளன. பற்று என்பதற்கு உட்கொள்ளல் என்ற பொருளும் உண்டு. உணவு உட்கொள்ளல்; வேட்கை என்றால் தாகம் என்றும் பொருள் படும். மனம் தாகத்தோடு, பொருட்களை உட்கொள்ளத் தவிக்கிறது. எனவே ஐந்து கந்தங்களையும் பிடித்துக் கொண்டு அவற்றுள் அது உணவைத் தேடுகிறது. உருவம் (body), நுகர்ச்சி (feelings), குறிப்பு (perception), எண்ணக் கட்டுமானங்கள் (பாவனை mental formations) மற்றும் உணர்வு (sensory consciouness) ஆகிய இவையே நமது ஆகாரம்.
தியானம் செய்யும் போது நாம் நன்மை பயக்கும் பவத்தை உருவாக்கப் பார்க்கிறோம். அதாவது மனம் நிகழ் காலத்தில் தங்கியிருக்க ஒரு நல்ல இடத்தை உருவாக்கப் பார்க்கிறோம். நீங்கள் நிகழ் காலத்தில் இருக்க ஒரு நல்ல உலகை உங்களுக்கே உருவாக்கிக் கொண்டீர்களானால், அந்த உலகம் எதைச் சார்ந்து இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்வது எளிதாகி விடுகிறது. அதாவது தாகமும், உட்கொள்ளலுமான செயற்றொடர் உருவாவதை அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நம்மால் கவனிக்க முடிகிறது. அதன் பின் நாம் உருவாக்கிய உலகம் நம்மை வழி தவறிச் செல்ல அனுமதிப்பதில்லை.
ஆனால் கடந்தகாலம், எதிர்காலம் சம்பந்தப் பட்ட உலகங்களை உருவாக்கும்போது அவற்றின் மீது கவனம் செலுத்துவதால், நிகழ்காலத்தின் மேல் இருக்க வேண்டிய கவனம் குலைந்து விடுகிறது. அதனாலேயே அவை தியானத்தின் போது பயன் தருவதில்லை. கடந்த கால உலகங்களை உருவாக்கி அதனால் நாம் செய்த தவறுகளையும், அதனால் உண்டான விளைவுகளையும் உணர்ந்து, அவற்றை மீண்டும் செய்யாமல் இருக்கவும் நிகழ்காலத்தின் மேல் நாம் மேலும் கவனம் செலுத்தவும் பயன்படுமானால், கடந்தகால உலகங்களை உருவாக்குவதில் ஒரு சில நன்மைகள் உள்ளன என்று கொள்ளலாம். அதாவது நாம் நற்கடைப்பிடி இல்லாமல் இருந்தது, அஜாக்கிரதையாகக் கவனம் இல்லாமல் இருந்த சமயங்களை நினைத்து அதனால் உண்டான சேதங்களை எண்ணிப் பார்ப்பது, அல்லது இப்போது கவனமாக இருக்க வில்லையென்றால் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்துக்களை உணர்வது போன்றவற்றில் சில அனுகூலங்கள் உள்ளன.
இவ்வாறு நினைப்பது நல்லது. ஏனென்றால் அது நிகழ் காலத்துக்கு மனத்தைத் திருப்பி, நற்கடைப்பிடி கவனச் சக்திகளுக்கு வலுவூட்ட ஊக்கம் தருகிறது. ஆனால் இந்தச் செயற்றொடர்கள் நடைபெறுவதைப் பார்க்க வேண்டுமானால் அவற்றை நிகழ் காலத்திலேயே பார்க்க வேண்டும்.
எனவே மூச்சைக் கவனிக்கும் தியானம் செய்யும் போது (அணபணாசத்தி) மூச்சைக் கொண்டு ஒரு உலகத்தை உருவாக்குகிறோம். மூச்சு உடலை உணர்கிறது. கால்களில், கைகளில் உள்ள உணர்ச்சிகளை வைத்து நல்ல மன ஒருமுகப்பாட்டுக்கு வழிவகுத்துக் கொள்கிறோம். மனம் தங்குவதற்கு ஒரு நல்ல இடமாக நம் இருப்பிடத்தை வைத்துக் கொள்ளலாம். மூச்சோடு ஒரு சாந்தத்தையும், முழுமையையும் வளர்ப்பதால் அது நமது வேட்கையைக் குறைக்கிறது. உட்கொள்ள நல்லதாகவும், போஷாக்கானதாகவும் உள்ளது மூச்சு.
பௌத்த நூல்களில் (திரிபிடகத்தில்) 'குதூகலப்படுவதை உட்கொள்ளுவது' (feeding on rapture) என்று குறிப்பிடுகிறார்கள். 'பசியுள்ள மக்கள் வாழும் உலகின் மத்தியில் நாம் பிரகாசிக்கும் தெய்வங்களைப்போல குதூகலத்தை உட்கொள்ளுகிறோம்,' என்று புத்தர் கூறினார். அவர் உண்ணும் உணவைப் பற்றிக் கூறவில்லை. உலகில் நிகழ்வதைக் கவனித்தீர்களென்றால் பத்திரிக்கைகளைப் படிக்கும் போது மக்கள் தங்கள் மனப்பசியை தீர்த்துக் கொள்ள எத்தகைய செயல்களைச் செய்கின்றனர் என்பதைக் கவனிக்கலாம். பார்க்கச் சகிப்பதில்லை. ஆக இப்படிப்பட்ட மனப்பசியுள்ளவர்கள் மத்தியில் பிரகாசிக்கும் தெய்வங்களைப் போலக் குதூகலத்தை (தியானம் செய்வதில் தோன்றும் குதூகலம் - rapture) உட்கொள்ளுவது சுயநலமான காரியம் அல்ல. நாம் அந்த உட்கொள்ளும் வெறியிலிருந்து, பரபரப்பிலிருந்து, வெளியேற முயல்கின்றோம். இந்த மனப்பசியை நீக்கும் செயற்றொடரை நாம் மனத்தால் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அது எப்படி நடைபெறுகிறது?
புத்த பகவான் நான்கு விதமான பற்று அல்லது உட்கொள்ளுதல் இருப்பதாகக் கூறுகிறார்:
1. முதலாவது புலன் இன்பங்களை உட்கொள்ளுதல். வாழ்க்கையில் இன்பங்களை உணரப் பல சூழ்நிலைகளை நினைத்துப் பார்க்கிறோம். அச்சூழ்நிலைகளிலிருந்து சிறிதேனும் இன்பம் கிடைக்கும் என்றும் நினைக்கின்றோம். கடந்த காலத்தில் இன்பம் அளித்த சூழ்நிலைகள் அல்லது வருங்காலத்தில் இன்பம் கிடைக்கலாம் என்பதிலுள்ள எதிர் பார்ப்புக்கள். இவற்றை மனம் உட்கொள்ளுகிறது.
2. கருத்துக்களை உட்கொள்ளுவது: அதாவது கருத்துக்களோடு பற்றுக் கொள்வது.
3. உங்கள் கருத்துக்களைச் சுற்றி 'நான்' என்ற ஒரு ஆணவம் எழுகிறது. இந்த ஆணவத்தோடு உள்ள பற்று, 'என்' கருத்துக்கள் தான் சரியானவை; மற்றவரைவிட என்னால்தான் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நான் அறிந்ததே சரியானது.
4. இறுதியாகச் செய்முறைமீது உள்ள உட்கொள்ளல். நமது பழக்க வழக்கங்கள். நமது பழக்கங்களே சரியானவை. வேறெதுவும் நமக்குத் தேவை இல்லை என்ற எண்ணத்தின் மீதுள்ள பற்று.
சொல்லப் போனால் இது போன்ற சில ஆகாரங்கள் மார்க்கத்தைச் சேர்ந்தவை தான். மார்க்கத்தைப் பின்பற்றச் சில கருத்துக்கள் தேவைப் படுகிறது. சில பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மேலும் மார்க்கத்தை 'என்னால்' தொடர முடியும் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்க வேண்டும். புத்த பகவான் இவற்றைக் குறை கூறவில்லை. ஆனால் அவை சரியான இடத்துக்கும் காலத்துக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இவைதான் எல்லாம், வேறு எதுவும் எப்போதும் தேவை இல்லை என்ற கருத்தைத்தான் அவர் குறை கூறுகிறார்.
மனம் ஏன் இவற்றையெல்லாம் உட்கொள்கிறது? ஏனென்றால் இவை இல்லா விட்டால் அது வெறுமையாக இருப்பதாக உணர்கிறது. இவை இல்லாவிட்டால் அனைத்தும் தொலைந்து போய்விட்டதாக நினைக்கிறது. நிலைகுலைந்து போய் விடுகிறது. நமது கருத்துகளையும், செய்முறைகளையும் வைத்து நாம் நிலைத்து இருப்பதாக நினைக்கின்றோம். அதாவது நமது மகிழ்வுக்கு இவை எல்லாம் தேவை என்று நினைக்கின்றோம். இவை இல்லாமல் நாம் தொலைந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. இவற்றைப் பயன் படுத்தி இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.
இந்த மனப்போக்குகள் தாகத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. புலன் இன்பங்களுக்கான தாகம், தோற்றத்துக்கான தாகம், இருப்பதை அழிப்பதற்கான தாகம். இவற்றுக்கு ஊக்கமளிப்பது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தினால் தான். இந்தத் தாகத்துக்கான காரணம் நுகர்ச்சி. நுகர்ச்சி இன்பமானதாகவோ, துன்பமானதாகவோ இரண்டும் அல்லாத நொதுமலானதாகவோ இருக்கலாம். அந்த நுகர்ச்சிக்குக் காரணம் ஊறு (contact).
இந்தப் பற்றுக் கொள்ளும் செயற்றொடரை எப்படிப் புரிந்து கொள்வது? அதன் மூலாதாரத்துக்கே சென்று பார்க்கலாம்: எந்த ஊறு (contact) அந்தப் பற்றுக்குக் காரணமாக இருந்தது? ஏதாவது ஒரு எண்ணம் இருந்ததா? ஒரு ஒலி இருந்ததா? மனத்தில் தோன்றிய ஏதாவது ஒரு கருத்து, இந்த உலகங்கள் தோன்றக் காரணமாக இருந்ததா? அதை நாம் தேட வேண்டும்: தோற்றுவித்த காரணிகள் என்ன?
(மொ. ஆ. குறிப்பு: ஊறு (contact) என்பது புறப்பொருட்கள் மற்றும் புலன் உறுப்புகள் (கண், காது, மூக்கு, நாக்கு, உடல், மனம் ஆகிய ஆறு) மற்றும் உணர்வு, (கண்ணால் உணர்வது, காதால் உணர்வது..ஆகிய ஆறு புலன் சம்பந்தப்பட்ட உணர்வுகள்) ஆகியவற்றின் தொடர்பு.
objects + sensory organs + sensory consciousness = contact ஊறு)
சில சமயம் காரணம் சிறியதாக இருக்கும். ஆனால் சார்பில் தோற்றக் கோட்பாடு அதைவிட ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. ஊறு மூல காரணம் இல்லை. ஊறுக்கு வரும் முன் பல கருத்துக்களோடும் மனப் போக்குகளோடும் வருகிறோம். அதனால் தான் சார்பில் தோற்றம் ஊற்றோடு துவங்குவ தில்லை. அதற்கு முன் வாயிலும், வாயிலுக்கும் முன் அருவுருவும் இருக்கின்றன. குறிப்பாக அருவுரு என்பது நுகர்ச்சிகள், கருத்துக்கள், நோக்கங்கள், கவனம் மற்றும் இவற்றின் காரணமாக மனத்தில் உருவாகும் தொடர்பும் அதில் அடங்கும்.
ஆகவேதான் புத்த பகவான் மார்க்கத்தைத் தொடர அருவுருவில் உள்ள செயற்றொடர்களில் கவனம் செலுத்தச் சொல்கிறார். நோக்கத்தை நாம் மாற்ற வேண்டும். புரிந்து கொள்ளும் விதத்தை மாற்ற வேண்டும். எதற்குக் கவனம் செலுத்துகிறோம் என்பதும், எதனை விளக்க வேண்டும் என்பதும் முக்கியமான விஷயங்கள்.
பொதுவாக நாம் எப்படி மகிழ்ச்சியடைகிறோம்? நாம் யார் என்ற நமது கருத்து, மகிழ்ச்சி யடைய நாம் எடுக்கும் முயற்சி யாருக்கு நன்மை உண்டாக்குகிறது, உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது என்ன போன்றவை தான். நாம் எப்படிச் செயற்படுகிறோம்? எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறோம்? குறிப்பாக "நான்" - 'நான் யார்? நான் உள்ளேனா, இல்லையா?" - இந்தக் கேள்வி அடிக்கடி எழும் கேள்வி. ஒவ்வொரு முறையும் மாறுபட்ட பதிலைக் கூறுகிறோம். அதனால் நாம் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் இவை எதுவும் முக்கியமில்லை என்பதை உணர்ந்தால் இவற்றை உட்கொள்ள வேண்டியதில்லை.
அத்தியாவசியமான செயல் என்னவெனில் நாம் மகிழ்ச்சியடைவதற்கான வழிமுறையைக் கண்டறிய என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவதே. அதனால் தான் மார்க்கத்தின் துவக்கத்தில் நற்காட்சி உள்ளது. நற்காட்சி செய்யவேண்டிய காரியத்தைத் திறமையாகச் செய்ய வைக்கிறது. திறமையாகக் காரியங்களைச் செய்யும் போது நமது நோக்கமும் மாறிவிடுகிறது. எனவே நமது கவனம் இதைப் புரிந்து கொள்வதில் இருக்க வேண்டும்: துக்கத்தின் காரணம் என்ன? துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் காரணங்கள் என்ன? நான் செய்யும் காரியம் துக்கத்துக்கு எடுத்துச் சென்றால் அந்தக் காரியத்தை எப்படித் தடுப்பது? எனது மன நிலைகள் துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்வதாகத் தோன்றினால் அவற்றை எப்படி ஊக்குவிப்பது? எப்படி விரிவு படுத்துவது? இந்த நோக்கங்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எப்பொழுதாவது நமது வேட்கையையும், தாகத்தையும் தூண்டும் செயல் உருவாகும் போது, எப்போதும்போல அவற்றை உட்கொள்ளும் பழக்க வழக்கங் களிலேயே மீண்டும் ஈடுபடத் துவங்கி விடுவோம்.
இந்தப் புதிய வழியில் கவனம் செலுத்துவதற்கும், நோக்கங்களை மேற்கொள்வதற்கும் புத்தர் நம்மைச் சில மனக்குறிப்புகளை விருத்தி செய்யச் சொன்னார். புத்தர் அநிச்சம் (நிலையாமை) துக்கம் (துக்கம்) அனத்தா (சாரமின்மை) என்ற குறிப்புகளைப் பற்றிக் கூறினார். பொருட்கள் நிலையற்றவை, துக்கம் உண்டாக்குபவை, சாரமில்லாதவை என்பதை நாம் காண வேண்டும். அப்படித்தான் நாம் பிரதிபலிக்க வேண்டும்.
பிரதிபலிப்பது என்றால் அநிச்சா, துக்கா, அனத்தா ஆகியவறை உங்கள் அனுபவங்களில் காண்பது தான். குறிப்பாக 'நான்' என்ற ஆணவக் கட்டுமானத்துக்கு, நாம் உருவாக்கும் நமது உலகங்களுக்குப் பயன்படுத்தும் பொருட்கள் நிலையற்றவை என்பதை உணர வேண்டும். கட்டுதற்குப் பயன்படுத்திய பொருட்கள் நிலையற்றவை என்றால் கட்டியது நிலையானதாக இருக்க முடியுமா? நிலையில்லாத நமது நுகர்ச்சிகள், குறிப்புகள் போன்றவற்றால் கட்டப்பட்ட 'நான்' நிலையானதாக இருக்க முடியுமா?
இது உறைந்த இறைச்சித் துண்டுகளால் (frozen meat) வீடு கட்டுவது போலத்தான். உறைந்திருக்கும் போது கெட்டியாகவும், செங்கற்களைப் போலவும் இருப்பதாகத் தோன்றும். ஆனால் அவை காலப்போக்கில் உருகிக் கரைந்து விடப் போகின்றவையே. அப்படிக் கட்டிய வீட்டில் யார் தங்க விரும்புவார்கள்? அழுத்தம் கொண்ட நிலை அது. வம்பை விலைகொடுத்து வாங்கிவது போல.
ஆக நிலையற்றவற்றில் மகிழ்ச்சியைத் தேடும் நமது முயற்சியில் உள்ள துன்பத்தையே நாம் தேட வேண்டும்.
சார்பில் தோற்றத்தை மேலும் ஆழமாகப் பார்க்கும் போது செய்கை என்ற நிதானத்துக்கு வருகிறோம். செய்கை (கட்டுமானம் என்று தணிசாரோ பிக்கு மொழிபெயர்க்கின்றார்) மூன்று வகைப்படும்: மெய்(உடல்), மொழி மற்றும் மனம் ஆகியவற்றால் நிகழும் செயல். (தியானத்தைப் பொருத்தவரை) உடல் செய்கை என்பது மூச்சு; மொழிச் செய்கை என்பது திசை திருப்பப்பட்ட எண்ணங்களும், மதிப்பிடலும்; மனச் செய்கை என்பது நுகர்ச்சியும், மனக்குறிப்புகளும்.
மூச்சின் மீது கவனம் இருக்கும் போது, அதைப் பற்றிச் சிந்தித்து, மதிப்பிடும்பொழுது இந்த மூன்று செய்கைகளும் ஒன்று சேர்கின்றன. மூச்சு இருக்கிறது. அதைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிறோம், நீண்ட மூச்சா, குறுகிய மூச்சா என்று அதை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். மூச்சினால் உண்டாகும் இன்பத்தையும், துன்பத்தையும் நுகர்கிறோம். இப்படி உருவாக்கிய உலகத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முடிந்தால் மனம், மற்ற உலகங்களைக் கட்டும் செயற்றொடரை அப்போதே கவனிக்கக் கூடிய நிலையில் இருக்கிறோம். மறந்து விட்டால், நிகழ் கால உலகைத் தடுத்து விட்டால் அறியாமை பிற எண்ண உலகங்களை உருவாக்கத் தொடங்கி விடுகிறது.
எனவே 'இங்கேயே இரு', 'இங்கேயே இரு' என்று உங்களையே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். மூச்சில் ஆர்வம் கொள்ள முயற்சி எடுங்கள். மூச்சைக் கொண்டு வசதியாக இருக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்குத் திருப்தி அளிக்குமானால் புதிய உலகங்களைக் கட்டவேண்டும் என்ற பசி தீர்ந்து விடுகிறது. மூச்சை வசதியாக்கிக் கொள்வதை வைத்தே இந்தத் திறனற்ற உலகங்களை உருவாக்க வேண்டும் என்ற பசியையும், தாகத்தையும் குறைத்து விடலாம்.
எனவே சார்பில் தோற்றத்தைப் பார்க்கும் போது அது ஒரு சிக்கலான பயிற்சி என்று நினைக்க வேண்டாம். அந்தக் கோட்பாடு, ஏன் புத்த பகவான் மூச்சுத் தியானத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் தந்தார் என்பதையும், ஏன் நற்காட்சி மார்க்கத்தின் துவக்கத்தில் உள்ளது என்பதையும் விளக்குகிறது. நற்காட்சி அறியாமையினால் வரும் பற்றையும், தாகத்தத்தையும் திசை திருப்பி நமக்கு நல்வழி காட்டுகிறது.
தியானம் செய்ய வேண்டியது அவசியம். துக்கத்தின் காரணம் அகத்தில் தான் உள்ளது. எனவே நாம் கவனம் செலுத்த வேண்டியது நமது நோக்கங்கள், குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் மீது தான். இவற்றைத் தெரிந்து கொள்ளாதவரை அறியாமையை உட்கொள்ளுவதன் மேலுள்ள ஆவேசத்தைத் தொடர வைக்கிறது.
இப்படி உட்கொள்வதால் நாம் மனத்தில் திறனற்ற உலகங்களை உருவாக்குகிறோம். இந்தச் செயற்றொடரை நிறுத்துவதற்குச் சார்பில் தோற்றக் கோட்பாடு உதவுகிறது. நன்மை தரும் உட்கொள்ளும் பழக்கங்களை உருவாக்குகிறது.
மூச்சைச் சுவைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதை உட்கொள்ளக் கற்றுக் கொண்டால் மனத்தின் பல இயல்புகளுக்கும் வலு ஊட்டலாம். முடிவான மனக்கொள்கை, விடாப்பிடி, நற் கடைப்பிடி, மனஒருமுகப் படுத்தல், விவேகம் ஆகிய இவை எல்லாம் மூச்சு தியானத்தின் மூலம் வலுப்பெறுகின்றன. இதுவே உங்களுக்கும், உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் மிகச் சிறந்த பரிசாகும்.
* * * * *
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode