மஹா பரிநிப்பாண சூத்திரம் 1

முகப்பு முன்னுரை I II III IV V VI

மஹா பரிநிப்பாண சூத்திரம்

அத்தியாயம் ஒன்று - மகத நாட்டில் பகவர்

The Great Total Unbinding Discourse

Chapter 1 - In Magadha

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு

translated from the Pali by Thanissaro Bhikkhu

Source

Source https://somegoodlife.files.wordpress.com

இலங்கை - (பொலன்னறுவை கல் விகாரை ) Sri Lanka - Poḷonnaruwa Gal Vihara படம் ஆதாரம்

மகத நாட்டின் தலைநகர் - இராஜகிருகம்

1.1. ஒரு சமயம் பகவர், இராஜகிருக நகருக்கு அருகில் இருந்த பிணந்தின்னிக் கழுகு மலை என்று அழைக்கப்படுகின்ற கழுகு மலையில் எழுந்தருளியிருந்ததாகக் கேள்வியுற்றேன் [1]. அச்சமயம் மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரன் [2] வஜ்ஜியர்களைத் [3] தாக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான். அவன், "அந்த வஜ்ஜியர்களை - மிக வலிமையானவர்கள், அதிகாரமுள்ளவர்கள் - வெட்டிச் சாய்க்கப் போகிறேன்! நான் வஜ்ஜியர்களை அழித்து விடுவேன்! நான் அந்த வஜ்ஜியர்களை நாசப்படுத்தப் போகிறேன்" என்றான்.

1.2. பின் மகத நாட்டின் முதல் மந்திரியான வஸ்ஸகாரர் என்ற பிராமணரிடம்: "வாரும், பிராமணரே. பகவரிடம் சென்று என் பெயரைச் சொல்லி அவர் காலடியில் தலை வணங்கி அவர் நோய் நொடியில்லாமல் இருக்கின்றாரா என்றும், கவலையற்று, ஆரோக்கியமாக இருக்கின்றாரா என்றும், வசதியாக வாழ்கின்றாரா என்பதையும் விசாரித்து, பின் (இவ்வாறு கூறவும்) 'அண்ணலே, மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரர் வஜ்ஜியர்களைத் தாக்க விரும்புகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: 'மிக வலிமையான, அதிகாரமுள்ள வஜ்ஜியர்களை வெட்டிச் சாய்க்கப் போகிறேன்! நான் வஜ்ஜியர்களை அழித்து விடுவேன்! நான் அந்த வஜ்ஜியர்களை நாசப்படுத்தப் போகிறேன்!' பகவர் எப்படிப் பதிலளித்தாலும், அதனை நன்கு புரிந்து கொண்டு என்னிடம் வந்து அவர் சொன்னதைக் கூறவும். ததாகதர்கள் பொய்மை பேச மாட்டார்கள்." என்று மகத மன்னன் முதல் மந்திரியிடம் கூறினான்.

1.3. "நீங்கள் கூறுவது போலவே செய்கிறேன், அரசே," என்று மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரனுக்குப் பதிலளித்த மகத முதல் மந்திரியான வஸ்ஸகாரர் என்ற பிராமணர் பல அரச வண்டிகளைப் பூட்டி, அவர் ஒரு அரச வண்டியில் ஏறி அமர்ந்து, இராஜகிருகத்தை விட்டு மற்ற அரச வண்டிகளோடு பிணந்தின்னிக் கழுகு மலை நோக்கிச் சென்றார். வண்டிகள் போகக் கூடிய தூரம் சென்றபின், வண்டியிலிருந்து இறங்கி, நடந்த வண்ணம் பகவரை அணுகி அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் ஒருபுறமாக அமர்ந்தார். பின் பகவரிடம், "அன்புக்குரிய கோதமரே [4], மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரர் உங்கள் பாதங்களில் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறார். மேலும் நீங்கள் நோய் நொடியில்லாமல் இருக்கின்றீரா என்றும், கவலையற்று, ஆரோக்கியமாக இருக்கின்றீரா என்றும் விசாரிக்கச் சொன்னார்.' அன்புக்குரிய கோதமரே, மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரர் வஜ்ஜியர்களைத் தாக்க விரும்புகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: ' மிக வலிமையான, அதிகாரமுள்ள அந்த வஜ்ஜியர்களை வெட்டிச் சாய்க்கப் போகிறேன்! நான் வஜ்ஜியர்களை அழித்து விடுவேன்! நான் அந்த வஜ்ஜியர்களை நாசப் படுத்தப் போகிறேன்!' என்று மன்னர் கூறுகிறார்."

வஜ்ஜியர்கள் வீழ்ச்சியுறாமல் இருப்பதற்கான ஏழு காரணங்கள்

1.4.

1. அச்சமயம் போ. ஆனந்தர் பகவருக்குப் பின்னே நின்று கொண்டு அவருக்காக விசிறிக் கொண்டிருந்தார். பகவர், போ. ஆனந்தரிடம், "வஜ்ஜியர்கள் தொடர்ந்து சந்திப்பதாகவும் அடிக்கடி சந்திப்பதாகவும் கேள்விப் பட்டிருக்கின்றாயா, ஆனந்தா?"

"வஜ்ஜியர்கள் தொடர்ந்து சந்திப்பதாகவும் அடிக்கடி சந்திப்பதாகவும் கேள்விப் பட்டிருகிறேன், அண்ணலே."

"வஜ்ஜியர்கள் தொடர்ந்து சந்திக்கும் வரை, அடிக்கடி சந்திக்கும் வரை அவர்கள் வளர்ச்சியைத்தான் எதிர் பார்க்கலாம், சிதைவை அல்ல." [5]

2. "வஜ்ஜியர்கள் சந்திக்கும் போது, இணக்கத்துடன் சந்திப்பதையும், அவர்கள் சந்திப்பு முடியும் போது அவர்கள் இணக்கத்துடன் விடைபெறுவதையும், அவர்கள் சந்தித்துப் பேசும் செய்திகள் இணக்கத்துடன் பேசப்படுவதாகவும் கேள்விப் பட்டிருக்கின்றாயா, ஆனந்தா?"

"நான் அவ்வாறே கேள்வியுற்றேன், அண்ணலே.

"வஜ்ஜியர்கள் சந்திக்கும் போது இணக்கத்துடன் சந்திக்கும்வரை, அவர்கள் சந்திப்பு முடியும் போது அவர்கள் இணக்கத்துடன் விடைபெறும்வரை, அவர்கள் சந்தித்துப் பேசும் செய்திகள் இணக்கத்துடன் பேசப்படும்வரை அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல." [6]

3. "வஜ்ஜியர்கள் நிலைநாட்டப்படாதவற்றை உத்தரவிடுவதுமில்லையென்றும், உத்தரவு போட்டவற்றை ரத்து செய்வதுமில்லை யென்றும், ஆனால் அவர்கள் காலங்காலமாக மேற்கொண்டுள்ள பழங்கால வஜ்ஜிய சட்டங்களையே தொடர்ந்து மேற்கொண்டு, அதன்படியே நடந்து கொள்வதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றாயா, ஆனந்தா?"

"ஆம். நான் அவ்வாறே கேள்வியுற்றேன், அண்ணலே.

"வஜ்ஜியர்கள் நிலைநாட்டப் படாதவற்றை உத்தரவிடாதவரை, உத்தரவு போட்டவற்றை ரத்து செய்யாதவரை, அவர்கள் காலங் காலமாக மேற்கொண்டுள்ள பழங்கால வஜ்ஜிய சட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு அதன்படியே நடந்து கொள்ளும் வரை அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல." [7]

4. "வஜ்ஜியர்கள் அவர்களது வஜ்ஜிய மூத்தோர்களைக் கௌரவித்து, மதித்து, வணங்கி, அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் சொல், கேட்கத் தகுதியானது என்று நினைப்பதைக் கேள்விப் பட்டிருக்கின்றாயா, ஆனந்தா?"

"நான் அவ்வாறே கேள்வியுற்றேன், அண்ணலே.

"வஜ்ஜியர்கள் அவர்களது வஜ்ஜிய மூத்தோர்களைக் கௌரவித்து, மதித்து, வணங்கி, அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் சொல் கேட்கத் தகுதியானது என்று நினைக்கும்வரை அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல." [8]

5. "வஜ்ஜியர்கள் சம்மதம் தெரிவிக்காத பெண்களையும், சிறுமிகளையும் முரட்டுத்தனமாக இழுத்துச் சென்று பலவந்தமாகத் தங்களோடு வாழக் கட்டுப் படுத்துவதில்லை என்பதைக் கேள்விப் பட்டிருக்கின்றாயா, ஆனந்தா?"

"நான் அவ்வாறே கேள்வியுற்றேன், அண்ணலே.

"வஜ்ஜியர்கள் சம்மதம் தெரிவிக்காத பெண்களையும், சிறுமிகளையும் முரட்டுத்தனமாக இழுத்துச் சென்று பலாத்காரமாகத் தங்களோடு வாழக் கட்டுப் படுத்தாதவரை அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல." [9]

6. "வஜ்ஜியர்கள் அவர்களது ஊருக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள வஜ்ஜிய ஆலயங்களைக் கௌரவித்து, மதித்து, வணங்கி, மரியாதை செலுத்தி, மேலும் முற்காலத்தில் செய்து கொடுக்கப்பட்ட அறவழிக் காணிக்கைகளைக் குறையவிடாமல் கவனித்துக் கொள்கின்றனர் என்பதைக் கேள்விப் பட்டிருகின்றாயா, ஆனந்தா?"

"நான் அவ்வாறே கேள்வியுற்றேன், அண்ணலே.

"வஜ்ஜியர்கள் அவர்களது ஊருக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள வஜ்ஜிய ஆலயங்களைக் கௌரவித்து, மதித்து, வணங்கி மரியாதை செலுத்தி, மேலும் முற்காலத்தில் செய்த, கொடுக்கப்பட்ட அறவழிக் காணிக்கைகளை குறைவில்லாமல் கவனித்துக் கொள்ளும் வரை அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல." [10]

7. "வஜ்ஜியர்கள், அரஹந்தர்கள் அவர்கள் இராஜ்ஜியத்தில் இருக்கும் போது அவர்களுக்குச் சரியான பாதுகாப்பும், காவலும் தருவதாகவும் மேலும் அவர்கள் (நினைப்பது) 'இதுவரை நமது இராஜ்ஜியத்திற்கு வருகை தராத அரஹந்தர்கள் இங்கு வருவார்களாக! மேலும் இங்கு வந்துள்ள அரஹந்தர்கள் வசதியாக வாழ்வார்களாக!' என்று கருதுவதைப் பற்றிக் கேள்விப் பட்டிருகின்றாயா, ஆனந்தா?"

"நான் அவ்வாறே கேள்வியுற்றேன், அண்ணலே.

"வஜ்ஜியர்கள், அரஹந்தர்கள் அவர்கள் இராஜ்ஜியத்தில் இருக்கும் போது அவர்களுக்குச் சரியான பாதுகாப்பும், காவலும் தரும்வரை மேலும் அவர்கள் 'இதுவரை நமது இராஜ்ஜியத்திற்கு வருகை தராத அரஹந்தர்கள் இங்கு வருவார்களாக! மேலும் இங்கு வந்துள்ள அரஹந்தர்கள் வசதியாக வாழ்வார்களாக!' என்று கருதும்வரை அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல." [11]

1.5. பின் பகவர் மகத முதல் மந்திரியான வஸ்ஸகாரர் என்ற பிராமணரிடம், "பிராமணரே, ஒருமுறை நான் வைசாலி அருகில் சாரண்ததா ஆலயத்தில் (Sārandada shrine) தங்கியிருந்தேன். அப்போது வஜ்ஜியர்களை அழிவுக்கு இட்டுச் செல்லாத இந்த ஏழு காரணங்களைப் பற்றி உரைத்தேன். இந்த ஏழு தன்மைகள் வஜ்ஜியர் மத்தியில் இருக்கும் வரை, தடுமாற்றமில்லாமல் வஜ்ஜியர்கள் இந்த ஏழு தன்மைகளைப் பின்பற்றும்வரை, அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

இதைக் கேட்ட பிறகு, மகத முதல் மந்திரியான வஸ்ஸகாரர் என்ற பிராமணர் பகவரிடம், "அன்புக்குரிய கோதமரே, வஜ்ஜியர்கள் அழிவைத் தடுக்கும் தன்மைகளுள் ஒன்றைக் கடைப்பிடித்தாலே அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல. இவ்வாறு இருக்க, அவர்கள் ஏழு தன்மைகளையும் கடைப் பிடிப்பார்களேயானால் அதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரரால் வஜ்ஜியர்களைப் பலவந்தமாக, ஆயுதங்களைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது - அவர்களை அடக்க வேண்டுமானால், அவர்களோடு நட்புக் கொண்டதாகப் பாசாங்கு செய்து, (அவர்கள் மத்தியில்) பிளவு ஏற்படுத்தினால் தான் முடியும் " [12]

"சரி கோதமரே. நாங்கள் புறப்பட வேண்டும். பல கடமைகளும், பொறுப்புகளும் எங்களுக்குக் காத்திருக்கின்றன." என்றார் முதல் மந்திரியான வஸ்ஸகாரர்.

"அப்படியானால் பிராமணரே, நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தைக் கவனியுங்கள்."

பின் மகத முதல் மந்திரியான வஸ்ஸகாரர் என்ற பிராமணர் தன் இருக்கையிலிருந்து எழுந்து, பகவரின் வார்த்தைகளை அங்கீகரித்தவராக, பெரு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினார்.

சங்கம் வீழ்ச்சியுறாமல் இருக்கப் பின்பற்ற வேண்டிய ஏழு விதிகள்.

1.6. அவர் புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்தில், பகவர் ஆனந்தரிடம்: "ஆனந்தா, இராஜகிருகத்தை நம்பி வாழும் துறவிகளை அழைத்துச் சபையில் கூடச் சொல்." என்று கூறினார்

"ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்த ஆனந்தர் - இராஜகிருகத்தை நம்பி வாழும் துறவிகளை அழைத்துச் சபையில் கூடச் செய்த பின் பகவரிடம் சென்று, அவரை வணங்கி, ஒருபுறமாக நின்று, "பிக்கு சங்கம் கூடிவிட்டது அண்ணலே. பகவர் இப்போது செய்ய நினைத்ததைச் செய்யட்டும்."

பின் பகவர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து, சபைக்குச் சென்று அவருக்கு அமைக்கப் பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

பின், கூடியிருந்த துறவிகளிடம்: "துறவிகளே, வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்லாத ஏழு விதிகளைப் பற்றி விளக்கப் போகிறேன். கூர்ந்து கேளுங்கள். நான் பேசவிருக்கிறேன்."

"ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்தனர் துறவிகள்.

1. "துறவிகளே, துறவிகள் தொடர்ந்தும், அடிக்கடியும் சந்தித்துக் கொண்டால், அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

2. "துறவிகள் சந்திக்கும் போது இணக்கத்துடன் சந்திந்தால், அவர்கள் சந்திப்பு முடியும் போது அவர்கள் இணக்கத்துடன் விடைபெற்றால், அவர்கள் சந்தித்துப் பேசும் சங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இணக்கத்துடன் பேசப்பட்டால் அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

3. "துறவிகள் நிலைநாட்டப் படாதவற்றை உத்தரவிடாமலும், உத்தரவிட்டதை ரத்து செய்யாமலும், அதே சமயம் ஏற்றுக் கொண்டுள்ள பயிற்சி விதிகளின்படி அவர்கள் நடந்து கொண்டால், அவர்கள் வளர்ச்சியை எதிர் பார்க்கலாம், சிதைவை அல்ல."

4. "துறவிகள் மூத்த துறவிகளைக் கௌரவித்து, மதித்து, வணங்கி மரியாதை செலுத்தி - நீண்ட காலம் துறவறம் ஏற்றுள்ளவர்கள், சங்கத்தின் தந்தையர், சங்கத் தலைவர்கள் - அவர்களின் சொல் கேட்கத் தகுதியானவை - என்று நினைக்கும் வரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

5."துறவிகள் மறுபிறப்பிற்கு எடுத்துச் செல்லும் வேட்கைக்கு இடம் கொடுக்காதவரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல." [13]

6. "வனத்தில் வாழ்வதனால் தங்களுக்கு உள்ள அனுகூலத்தைத் துறவிகள் உணர்ந்துள்ள வரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

7. "மேலும் துறவிகள் இதை நினைவில் வைத்திருக்கும் வரை: 'ஆன்மீக வாழ்வில் நன்னடத்தை கொண்டுள்ள எவரேனும் இங்கு வரவில்லையென்றால், அவர்கள் இங்கு வரட்டும்; ஏற்கனவே வந்துள்ள ஆன்மீக வாழ்வில் நன்னடத்தை கொண்டுள்ளவர்கள் வசதியாக வாழட்டும்,' அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

இந்த ஏழு நிலைமைகள் துறவிகள் மத்தியில் இருக்கும் வரை, தடுமாற்றமில்லாமல் துறவிகள் இந்த ஏழு நிலைமைகளைப் பின் பற்றும்வரை, அவர்கள் வளர்ச்சியை எதிர் பார்க்கலாம் சிதைவை அல்ல."

சங்கம் வீழ்ச்சியுறாமல் இருக்க பின்பற்ற வேண்டிய மேலும் ஏழு விதிகள்.

1.7. "துறவிகளே, வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்லாத மேலும் ஏழு நிலைமைகளைப் பற்றி விளக்கப் போகிறேன். கூர்ந்து கேளுங்கள். நான் பேச விருக்கிறேன்."

"ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்தனர் துறவிகள்.

பகவர் கூறினார்:

1. "துறவிகளே, துறவிகள் (கட்டுமான) வேலையில் மதிமயங்காத வரை, கட்டிட வேலை செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளாத வரை, கட்டிட வேலை செய்வதில் பற்றுக் கொள்ளாதவரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் சிதைவை அல்ல."

2. "துறவிகள் வீண் வம்பு பேசுவதில் ஆசை கொள்ளாத வரை வரை...

3. "துறவிகள் தூங்குவதில் ஆசை கொள்ளாத வரை...

4. "துறவிகள் தொல்லைகளில் சிக்கிக் கொள்ளாத வரை...

5. "துறவிகள் தீய ஆசைகளுக்கு மதிமயங்காத வரை, தீய ஆசைகளின் கட்டுக்குள் சிக்காத வரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

6. "துறவிகளுக்குத் தீய நண்பர்கள், தீய கூட்டாளிகள், தீய தோழர்கள் இல்லாதவரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

7. "துறவிகள் அரைகுறை நிலைகளையும், சாதனைகளையும் எட்டிய பிறகு அந்த அரைகுறை நிலையிலேயே திருப்தி அடைந்து விடாமல் இருக்கும் வரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல." [14]

இந்த ஏழு நிலைமைகள் துறவிகளிடம் இருக்கும் வரை, தடுமாற்றமில்லாமல் துறவிகள் இந்த ஏழு நிலைமைகளைப் பின்பற்றும்வரை, அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் சிதைவை அல்ல."

ஏழு நற்பண்புகள்

1.8. "துறவிகளே, வீழ்ச்சிக்கு எடுத்துச்செல்லாத மேலும் ஏழு நிலைமைகளைப் பற்றி விளக்கப் போகிறேன். கூர்ந்து கேளுங்கள். நான் பேசவிருக்கிறேன்."

"ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்தனர் துறவிகள்.

பகவர் கூறினார்: "துறவிகளே, துறவிகளிடம் திட நம்பிக்கை... மான உணர்ச்சி... தன் குற்றம்பற்றி மனத்தில் தோன்றும் கழிவிரக்கம்... கசடறக் கற்றல்... நிலையாகத் தொடர்ந்து பயில வேண்டும் என்ற உந்துதல்... நிலைநாட்டப் பட்ட கடைப்பிடி (கவனம்)... விவேகம் (ஊகித்துணர்தல்), இருக்கும் வரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

The Blessed One said: “Monks, as long as the monks have conviction… shame… compunction… learning… aroused persistence… established mindfulness… discernment, the monks’ growth can be expected, not their decline. (See MN 53 and AN 7:63.)

இந்த ஏழு பண்புகள் துறவிகள் மத்தியில் இருக்கும் வரை, தடுமாற்றமில்லாமல் துறவிகள் இந்த ஏழு பண்புகளைப் பின்பற்றும்வரை, அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

ஏழு போதி அங்கங்கள்

1.9. "துறவிகளே, வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்லாத மேலும் ஏழு நிலைமைகளைப் பற்றி விளக்கப் போகிறேன். கூர்ந்து கேளுங்கள். நான் பேசவிருக்கிறேன்."

"ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்தனர் துறவிகள்.

பகவர் கூறினார்:

"துறவிகளே, துறவிகள் நற்கடைப்பிடியை ஒரு போதி அங்கமாக வளர்க்கிறார்... மனவிஷயங்களை ஆராய்வதை ஒரு போதி அங்கமாக வளர்க்கிறார்கள்... வீரியம் என்ற போதி அங்கம்... பிரீதி என்ற போதி அங்கம்... மனத்துக்கும், காயத்துக்கும் ஓய்வு (பஸ்ஸத்தி) என்னும் போதி அங்கம்... சமாதி என்ற போதி அங்கம்... உபேக்கை (பற்றற்ற நடுநிலை) என்ற போதி அங்கம், ஆகியவற்றை வளர்க்கும் வரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

“Monks, as long as the monks develop mindfulness as a factor for awakening… analysis of qualities as a factor for awakening… persistence as a factor for awakening… rapture as a factor for awakening… calm as a factor for awakening… concentration as a factor for awakening… equanimity as a factor for awakening, the monks’ growth can be expected, not their decline. See SN 46:51 and SN 46:53.

இந்த ஏழு நிலைமைகள் துறவிகள் மத்தியில் இருக்கும் வரை, தடுமாற்றமில்லாமல் துறவிகள் இந்தஏழு நிலைமைகளைப் பின்பற்றும்வரை, அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் சிதைவை அல்ல."

ஏழு குறிப்புகள்

1.10. "துறவிகளே, வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்லாத மேலும் ஏழு நிலைமைகளைப் பற்றி விளக்கப் போகிறேன். கூர்ந்து கேளுங்கள். நான் பேசவிருக்கிறேன்."

"ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்தனர் துறவிகள்.

பகவர் கூறினார்:

"துறவிகளே, துறவிகள் நிலையாமையைப் பற்றிய அறிவு... சாரமின்மை பற்றிய அறிவு... அழகற்றது பற்றிய அறிவு... குறைபாடுகள் பற்றிய அறிவு... கைவிடுதல் பற்றிய அறிவு... அபிமானமற்று இருப்பது பற்றிய அறிவு... முடிவு பற்றிய அறிவு ஆகியவற்றை வளர்க்கும் வரை அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

The Blessed One said: “Monks, as long as the monks develop the perception of inconstancy… the perception of not-self… the perception of unattractiveness… the perception of drawbacks… the perception of abandoning… the perception of dispassion… the perception of cessation, the monks’ growth can be expected, not their decline. See AN 10:60.

இந்த ஏழு நிலைமைகள் துறவிகள் மத்தியில் இருக்கும் வரை, தடுமாற்றமில்லாமல் துறவிகள் இந்தஏழு நிலைமைகளைப் பின் பற்றும் வரை, அவர்கள் வளர்ச்சியை எதிர் பார்க்கலாம், சிதைவை அல்ல."

நினைவில் கொள்ள வேண்டிய ஆறு விஷயங்கள்

1.11. "துறவிகளே, வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்லாத மேலும் ஆறு நிலைமைகளைப் பற்றி விளக்கப் போகிறேன். கூர்ந்து கேளுங்கள். நான் பேசவிருக்கிறேன்."

"ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்தனர் துறவிகள்.

பகவர் கூறினார்:

"துறவிகள் தங்கள் ஆன்மீகத் தோழர்களிடம், செயலால் (மெய்யால்) நட்புணர்வோடு நடந்து கொள்ளும் வரை - அவர்கள் முன்பு ஒரு செயலும் அவர்கள் பின்பு (இல்லாதபோது) ஒரு செயலுமான நடத்தை இல்லாத வரை - அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

"துறவிகள் தங்கள் ஆன்மீகத் தோழர்களிடம் சொல்லால் நட்புணர்வோடு நடந்து கொள்ளும் வரை - அவர்கள் முன் ஒரு பேச்சும் அவர்கள் பின் (இல்லாதபோது) ஒரு பேச்சும் பேசாமலிருந்தால் - அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

"துறவிகள் தங்கள் ஆன்மீகத் தோழர்களிடம் மனத்தால் நட்புணர்வோடு நடந்து கொள்ளும் வரை - அவர்கள் முன்னாலும் அவர்கள் இல்லாதபோதும் அவர்களை மனத்தில் நட்புணர்வோடு நினைப்பது - அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

"துறவிகள் நேர்மையான வழியில், நேர்மையாகப் பெற்றதை - அது அவர்கள் பிச்சா பாத்திரத்தில் பெற்ற உணவாகவும் இருக்கலாம் - அவற்றைத் தாங்கள் மட்டுமே அருந்தாமல், தங்களுடன் தோழமையிலுள்ள ஆன்மீக நண்பர்களுடன் பகிர்ந்த பின்னர் அருந்தும்வரை அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

"துறவிகள் உடைபடாத, குறையற்ற, கறையற்ற, தெளிக்காத, விடுவிக்கும், காண்பவர் போற்றும், பற்றற்றதாக, மன ஒருமைப் பாட்டிற்கு இட்டுச்செல்லும் - ஒழுக்கத்தைத் தங்களுடன் தோழமையிலுள்ள ஆன்மீக நண்பர்களின் முன்னும், பின்னும் கடைப் பிடிப்பார்களேயானால் அவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

"துறவிகள் மேன்மையான, வெளிக்கொணரும், அதன்படி நடக்கையில் சரியான வழியில் துக்கத்திற்கும், அழுத்ததின் முடிவிற்கும் எடுத்துச் செல்லும் - நற்கருத்தைத் தங்களுடன் தோழமையிலுள்ள ஆன்மீக நண்பர்களின் கருத்துக்கு ஒப்ப அவர்கள் முன்னும், பின்னும் கொண்டிருப் பார்களேயானால் அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம் சிதைவை அல்ல."

இந்த ஆறு நிலைமைகள் துறவிகள் மத்தியில் இருக்கும் வரை, தடுமாற்றமில்லாமல் துறவிகள் இந்த ஆறு நிலைமைகளைப் பின்பற்றும்வரை, அவர்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம், சிதைவை அல்ல."

1.12. மேலும் இராஜகிருக நகருக்கு அருகில் இருந்த பிணந்தின்னிக் கழுகு மலையில் இருக்கும்போது பகவர் பிக்குகளுக்கு அடிக்கடி தந்த அறிவுரையானது: "ஒழுக்கம் (சீலம்) இப்படிப்பட்டது; மனஒருமைப்பாடு (சமாதி) இப்படிப்பட்டது; மெய்ஞ்ஞானம் (பஞ்ஞா) இப்படிப்பட்டது. நல்லொழுக்கம் படிந்த மனஒருமைப்பாட்டிற்கு பெரும் பேறும் நன்மையும் கிடைக்கும்; மனஒருமைப்பாடு படிந்த மெய்ஞ்ஞானத்திற்கு பெரும் பேறும் நன்மையும் கிடைக்கும்; மெய்ஞ்ஞானம் படிந்த கறையற்ற மனம், காமம், பவம், அறியாமையாகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடும்."

அம்பலதிக்கையில் பகவர்

1.13. பகவர் இராஜகிருக நகருக்கு அருகில் போதிய நாட்கள் இருந்த பிறகு அவர் போற்றுதற்குரிய ஆனந்தரிடம்: "வா, ஆனந்தா, நாம் அம்பலதிக்கைக்குச் (Ambalaṭṭhikā) செல்வோம்." என்று கூறினார்.

"அப்படியே ஆகட்டும், அண்ணலே." என்று ஆனந்தர் பகவருக்குப் பதிலளித்தார்.

பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் அம்பலதிக்கைக்குச் சென்று அருகிலிருந்த அரச பூங்காவில் தங்கலானார்.

1.14. மேலும் அம்பலதிக்கையில் இருக்கும்போது பகவர் பிக்குகளுக்கு அடிக்கடி தந்த அறிவுரையானது: "ஒழுக்கம் (சீலம்) இப்படிப்பட்டது; மனஒருமைப்பாடு (சமாதி) இப்படிப்பட்டது; மெய்ஞ்ஞானம் (பஞ்ஞா) இப்படிப்பட்டது. நல்லொழுக்கம் படிந்த மனஒருமைப்பாட்டிற்குப் பெரும் பேறும் நன்மையும் கிடைக்கும்; மனஒருமைப்பாடு படிந்த மெய்ஞ்ஞானத்திற்கு பெரும் பேறும் நன்மையும் கிடைக்கும்; மெய்ஞ்ஞானம் படிந்த கறையற்ற மனம், காமம், பவம், அறியாமை ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடும்."

சாரிபுத்திரரின் சிங்கத்தைப் போன்ற கர்ஜனை

1.15. பகவர் அம்பலதிக்கையில் விரும்பிய நாட்கள் தங்கியிருந்த பிறகு அவர் போற்றுதற்குரிய ஆனந்தரிடம்: "வா, ஆனந்தா, நாம் நாளந்தைக்குச் (Nāḷandā) [15] செல்வோம்." என்றார்.

"அப்படியே ஆகட்டும், அண்ணலே." என்று ஆனந்தர் பகவருக்குப் பதிலளித்தார்.

பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன், பகவர் நாலந்தைக்குச் சென்று நாலந்தைக்கு அருகில் இருந்த பாவாதிக மாந்தோப்பில் (Pāvādika mango grove) தங்கலானார்.

1.16. அப்போது போற்றுதற்குரிய சாரிபுத்திரர் பகவரிடம் சென்று, வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். அப்படி அமர்ந்திருக்கையில் போ. சாரிபுத்திரர் பகவரிடம், "எனக்கு அண்ணலின் மீது ஒரு நம்பிக்கை உள்ளது, அது என்னவென்றால் சுய முயற்சியால் விழிப்புக் கொள்வதற்கான நேரடியான அறிவைப் பொறுத்தவரை பகவரைவிட அதிகமான அறிவு வேறு ஒரு தியானிக்கோ பிராமணருக்கோ முற்காலத்திலும் இருந்ததில்லை, இன்றும் இல்லை, இனியும் இருக்கப் போவதில்லை!" என்று கூறினார்.

"காளையைப்போலப் பெரும் வார்த்தைகளைக் கூறியுள்ளீர் சாரிபுத்திரரே; ஆணித்தரமாகச் சிங்கத்தின் கர்ஜனையைப் போலக் கர்ஜித்துள்ளீர்: 'சுய முயற்சியால் விழிப்புக் கொள்வதற்கான நேரடியான அறிவைப் பொறுத்தவரை பகவரைவிட அதிகமான அறிவு வேறு ஒரு தியானிக்கோ, பிராமணருக்கோ முற்காலத்திலும் இருந்ததில்லை, இன்றும் இல்லை, இனியும் இருக்கப் போவதில்லை!' என்று.

“Grand is this bull-statement you have spoken, Sāriputta; categorical this lion’s roar you have roared: ‘Lord, I have confidence in the Blessed One that there neither has been nor will be nor is currently found a contemplative or Brahman whose direct knowledge of self-awakening is greater than that of the Blessed One!’

"ஆக சாரிபுத்திரரே , உங்களது அறிநிலை முன் வாழ்ந்த மற்ற எல்லா மேன்மையானவரின், சுயமாக விழிப்புற்றோரின் அறிநிலையும் அடங்கியுள்ளது என்று கூறுகின்றீரா? மேலும், 'அவர்கள் பண்பு அவ்வாறானது, அவர்கள் தம்மம் அவ்வாறானது, அவர்கள் விவேகம் அவ்வாறானது, அவர்கள் குடி (தியானத்தின் போது மனம் இருக்கும் இடம்) அவ்வாறானது, அவர்கள் வீடுபேறு அவ்வாறானது,' என்பதையும் அறிந்துள்ளீரா?"

So then, Sāriputta, have you encompassed with your awareness the awareness of all the worthy ones, the rightly self-awakened ones that have been in the past and known: ‘Such was their virtue, such their Dhamma, such their discernment, such their (meditative) dwelling, such their release’?”

"இல்லை, அண்ணலே."

"சரி, அப்போது சாரிபுத்திரரே, உங்களது அறிநிலையில் இனி வாழப்போகும் எல்லா மேன்மையானவரின், சுயமாக விழிப்புறபோகின்றவரின் அறிநிலையும் அடங்கியுள்ளது என்று கூறுகின்றீரா? மேலும், 'அவர்கள் பண்பு அவ்வாறாக இருக்கப்போகிறது, அவர்கள் தம்மம் அவ்வாறாக இருக்கப் போகிறது, அவர்கள் விவேகம் அவ்வாறாக இருக்கப் போகிறது, அவர்கள் குடி அவ்வாறாக இருக்கப் போகிறது, அவர்கள் வீடுபேறு அவ்வாறாக இருக்கப் போகிறது,' என்பதையும் அறிந்துள்ளீரா?"

“Then have you encompassed with your awareness the awareness of all the worthy ones, the rightly self-awakened ones that will be in the future and known: ‘Such will be their virtue, such their Dhamma, such their discernment, such their (meditative) dwelling, such their release’?”

"இல்லை, அண்ணலே."

"சரி, அப்போது சாரிபுத்திரரே, உங்களது அறிநிலையில் என் அறிநிலையும் - தகுதியானவரின், சரியாக சுயமாக விழிப்புற்றவரின் அறிநிலையும் அடங்கியுள்ளது என்றும், 'அவர் பண்பு இப்படிப்பட்டது, அவர் தம்மம் இப்படிப்பட்டது, அவர் விவேகம் இப்படிப்பட்டது, அவர் குடி இப்படிப்பட்டது, அவர் வீடுபேறு இப்படிப் பட்டது' என்பதை அறிந்துள்ளீரா?"

“Then have you encompassed with your awareness my awareness—the awareness of the worthy one, the rightly self-awakened one in the present—and known: ‘Such is his virtue, such is his Dhamma, such is his discernment, such is his (meditative) dwelling and such is his release’?”

"இல்லை, அண்ணலே."

"அப்படியானால் சாரிபுத்திரரே, முற்காலத்தில் வாழ்ந்த, நிகழ்காலத்தில் வாழ்கிற, வரும் காலத்தில் வாழப்போகிற தகுதியானவரின், சரியாகச் சுயமாக விழிப்புற்றவரின் அறிநிலை பற்றி உங்களுக்குத் தெரியாதபோது எப்படி காளையைப் போலப் பெரும் வார்த்தைகளை, ஆணித்தரமாக, சிங்கத்தின் கர்ஜனை போல இவ்வாறு: 'சுய முயற்சியால் விழிப்புக் கொள்வதற்கான நேரடியான அறிவைப் பொறுத்தவரை பகவரைவிட அதிக அறிவு வேறு ஒரு தியானிக்கோ, பிராமணருக்கோ முற்காலத்திலும் இருந்ததில்லை, இன்றும் இல்லை, இனியும் இருக்கப் போவதில்லை,' என்று கூற முடியும்?

“Then, Sāriputta, if you don’t have knowledge of the awareness of the worthy ones, the rightly self-awakened ones of the past, future, and present, how is it that just now you spoke this grand bull-statement and roared this categorical lion’s roar: ‘Lord, I have confidence in the Blessed One that there neither has been nor will be nor is currently found a contemplative or brahman whose direct knowledge of self-awakening is greater than that of the Blessed One’?”

1.17. "அண்ணலே, இறந்தகால, எதிர்கால, நிகழ்காலப் புத்தர்களின் மனதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தம்ம வழிகள் எனக்குத் தெரியும். சான்றாக, சுற்றிலும் சுவர் அமைக்கப்பட்ட ஒரு நகரம், அச்சுவர்களுக்கு உறுதியான அடித்தளம், கோபுரங்கள் பல. ஆனால் ஒரே வாயில். அவ்வாயிலில் ஒரு காவலன். அவன் துடிப்பும், விழிப்பும் உள்ளவன். தெரிந்தவர்களை மட்டும் உள்ளே அனுப்புவான். புதியவர்களை அனுமதிப்பதில்லை. அவன் அச்சுவர்களைக் காவல் காத்துக் கொண்டிருப்பதால் அச்சுவற்றில் பூனை நுழையக்கூடிய ஒரு சிறு துளையைக்கூட அவன் பார்த்ததில்லை. எந்தவிதமான உயிர்ப் பிராணிகளாயிருந்தாலும் அவை சிறியவையோ அல்லது பெரியவையோ அவனறியாமல் அந்நகருக்குள் நுழையவும் முடியாது. வெளியேறவும் முடியாது. ஏனென்றால் அவைகளனைத்தும் அந்த ஒரு வாயில் வழியாகத் தான் புக வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்.

“Lord, I don’t have knowledge of the awareness of the worthy ones, the rightly self-awakened ones of the past, future, & present, but I have known the consistency of the Dhamma. It’s as if there were a royal frontier city with strong ramparts, strong walls and arches, and a single gate. In it would be a wise, competent, and intelligent gatekeeper to keep out those he didn’t know and to let in those he did. Walking along the path encircling the city, he wouldn’t see a crack or an opening in the walls big enough for even a cat to slip through. The thought would occur to him: ‘Whatever large creatures enter or leave the city all enter or leave it through this gate.’

எனக்கு அறமும் அதைப் போலத்தான் தோன்றுகிறது. கடந்த காலப் புத்தர்கள் எப்படி முழுமையாகப் பேரறிவு பெற்றனர்? ஐந்து தடங்கல்களையும் தவிர்த்தனர் - அவை புரிந்து கொள்ளும் தன்மையைப் பலவீனப் படுத்தும் மாசுகள் - கவனத்தின் நான்கு அடித்தளத்தை உறுதியாக்கினர். அவர்கள் பேரறிவிற்கான ஏழு காரணிகளை - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படியே புரிந்து கொண்டனர்.

எல்லா எதிர்காலப் புத்தர்களும் அதையேதான் செய்வார்கள். ஐந்து தடங்கல்களையும் தவிர்ப்பார்கள் - அவை புரிந்து கொள்ளும் தன்மையைப் பலவீனப் படுத்தும் மாசுகள் - கவனத்தின் நான்கு அடித்தளத்தை உறுதியாக்குவார்கள். அவர்கள் பேரறிவிற்கான ஏழு காரணிகளை - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படியே புரிந்து கொள்வார்கள்.

அண்ணலே நீங்களும் - இன்று புனிதமானவராக முழுப் பேரறிவு பெற்றவராகத் திகழும் தாங்களும் - ஐந்து தடங்கல்களையும் தவிர்த்தீர்கள் - அவை புரிந்து கொள்ளும் தன்மையைப் பலவீனப் படுத்தும் மாசுகள் - கவனத்தின் நான்கு அடித்தளத்தை உறுதியாக்கினீர்கள். பேரறிவிற்கான ஏழு காரணிகளை - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படியே புரிந்து கொண்டீர்கள். "

“In the same way, I have known the consistency of the Dhamma: ‘All those who were worthy ones, the rightly self-awakened ones in the past awoke to the unexcelled right self-awakening after having abandoned the five hindrances - those defilements of awareness that weaken discernment - having well-established their minds in the four establishings of mindfulness and having developed, as they have come to be, the seven factors for awakening.

All those who will be worthy ones, the rightly self-awakened ones in the future will awaken to the unexcelled right self-awakening after having abandoned the five hindrances - those defilements of awareness that weaken discernment - having well-established their minds in the four establishings of mindfulness and having developed, as they have come to be, the seven factors for awakening. The Blessed One who is now the worthy one, the rightly self-awakened one has awakened to the unexcelled right self-awakening after having abandoned the five hindrances - those defilements of awareness that weaken discernment - having well-established his mind in the four establishings of mindfulness and having developed, as they have come to be, the seven factors for awakening.”

1.18. மேலும் நாலந்தை பாவாதிக மாந்தோப்பில் இருக்கும்போது பகவர் பிக்குகளுக்கு அடிக்கடி தந்த அறிவுரையானது: "ஒழுக்கம் (சீலம்) இப்படிப்பட்டது; மனஒருமைப்பாடு (சமாதி) இப்படிப்பட்டது; மெய்ஞ்ஞானம் (பஞ்ஞா) இப்படிப்பட்டது. நல்லொழுக்கம் படிந்த மனஒருமைப்பாட்டுடிற்கு பெரும் பேறும் நன்மையும் கிடைக்கும்; மனஒருமைப்பாடு படிந்த மெய்ஞ்ஞானத்திற்கு பெரும் பேறும் நன்மையும் கிடைக்கும்; மெய்ஞ்ஞானம் படிந்த கறையற்ற மனம், காமம், பவம், அறியாமை ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடும்."

ஒழுக்கமான வாழ்வின் அனுகூலங்கள்

1.19. பகவர் நாலந்தையில் விரும்பிய நாட்கள் இருந்த பிறகு அவர் போற்றுதற்குரிய ஆனந்தரிடம்: "வா, ஆனந்தா, நாம் பாதலி கிராமம் (Pāṭali Village) நோக்கிச் செல்வோம்." என்றார்

"அப்படியே ஆகட்டும், அண்ணலே." என்று ஆனந்தர் பகவருக்கு பதிலளித்தார்.

பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் பாதலி கிராமம் சென்றார்.

1.20. பாதலி கிராம இல்லற மக்கள் இவ்வாறு கேள்விப்பட்டனர், "பகவர் பாதலி கிராமம் வந்திருப்பதாகச் சொல்கின்றனர்." எனவே அவர்கள் பகவரிடம் சென்று, அவரை வணங்கி, ஒரு புறமாக அமர்ந்தனர். அமர்ந்திருக்கையில் அவரிடம், "அண்ணலே, பகவர் எங்கள் விருப்பத்திற்கு இணங்கிச் சத்திரச் சபைக் கூடத்தில் (rest-house hall) தங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்."

1.21. பகவர் மௌனமாக இருந்து அவரது சம்மதத்தைத் தெரிவித்தார். அவர் சம்மதத்தை அறிந்தவுடன், பாதாலி கிராம இல்லற மக்கள் அவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து அவரை வணங்கி, அவரைச் சுற்றி வலம் வந்து, சத்திர சபைக்கூடத்திற்குச் சென்றனர். பின், சபைக்கூடத்தின் தரையில் மென்மையான சமக்காளங்களை விரித்து, ஆசனங்கள் அமைத்து, நீர்க் குடம் கொண்டு வந்து, ஒரு எண்ணெய் விளக்கையும் ஏற்றி வைத்தனர். பின் பகவரிடம் சென்று, அவரை வணங்கி, ஒரு புறமாக நின்றனர். பின்னர் அவரிடம், "பகவரே, சத்திரச் சபைக்கூடத்தின் தரையில் மென்மையான சமக்காளங்களை விரித்து, ஆசனங்கள் அமைத்து, நீர் குடம் கொண்டு வந்து வைத்து, ஒரு எண்ணெய் விளக்கையும் ஏற்றியுள்ளோம். பகவர் இப்போது செய்ய வேண்டியதைச் செய்யட்டும்."

1.22. பின் பகவர், மாலை நேரத்தில், தனது கீழ் ஆடையைச் சரிசெய்து, பிச்சா பாத்திரத்தையும் மேலாடையையும் எடுத்துக் கொண்டு, சங்கத் துறவிகளுடன் சத்திரச் சபைக் கூடத்திற்குச் சென்றார். சென்றபின் அவர் கால்களைக் கழுவி, சபைக் கூடத்தினுள் நுழைந்து, மத்தியில் இருந்த தூண் தனது பின்புறமாக இருக்க கிழக்கு நோக்கி அமர்ந்தார். சங்கத் துறவிகளும் தங்கள் கால்களைக் கழுவி, சபைக் கூடத்தில் நுழைந்து, மேற்குச் சுவர் தங்கள் பின் பக்கமாக இருக்குமாறு, கிழக்கு நோக்கிப் பகவர் அவர்கள் முன்னால் இருக்க அமர்ந்தனர்.

பாதாலி கிராம இல்லற மக்களும் தங்கள் கால்களைக்கழுவி, சபைக்கூடத்தில் நுழைந்து, கிழக்கு சுவர் தங்கள் பின் பக்கமாக இருக்க, மேற்கு நோக்கி பகவரின் அருகில் அமர்ந்தனர்.

1.23. பின் பகவர் பதாலி கிராம இல்லற மக்களுக்குப் போதித்தார், "இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமற்ற மனிதரின் ஒழுக்கக் கேட்டின் காரணமாக ஐந்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. எந்த ஐந்து?

Then the Blessed One addressed the lay followers of Pāṭali Village, “Householders, there are these five drawbacks coming from an unvirtuous person’s defect in virtue. Which five?

"ஒரு ஒழுக்கமற்ற மனிதர், அறைகுறையான ஒழுக்கமுடையவர், விவேகமற்று இருப்பதால் அவர் தன் பெருஞ்செல்வத்தை இழப்பார் அல்லது பறி கொடுப்பார். ஒரு ஒழுக்கமற்ற மனிதரின் அறைகுறையான ஒழுக்கத்தின் முதல் குறைபாடு இது.

“There is the case where an unvirtuous person, defective in virtue, by reason of heedlessness undergoes the loss/confiscation of great wealth. This is the first drawback coming from an unvirtuous person’s defect in virtue.

"மேலும் அறைகுறையான ஒழுக்கமுடைய அதாவது ஒழுக்கமற்றவர் பற்றிக் கெட்ட பெயர் பரவும். ஒரு ஒழுக்கமற்ற மனிதரின் அறைகுறையான ஒழுக்கத்தின் இரண்டாம் குறைபாடு இது.

“And further, the bad reputation of the unvirtuous person, defective in virtue, gets spread about. This is the second drawback coming from an unvirtuous person’s defect in virtue.

"மேலும் ஒரு ஒழுக்கமற்ற மனிதர், அறைகுறையான ஒழுக்கமுடையவர், ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டால் அது க்ஷத்திரியர்கள் கூட்டமாக இருந்தாலும் சரி, பிராமணர்கள், இல்லறத்தார் அல்லது தியானிகளின் கூட்டமாக இருந்தாலும் சரி - அப்படிப்பட்ட ஆணோ, பெண்ணோ தன்னம்பிக்கை இல்லாமல் தலை குனிந்து தான் செல்வார்கள். ஒரு ஒழுக்கமற்ற மனிதரின் அறைகுறையான ஒழுக்கத்தின் மூன்றாம் குறைபாடு இது.

“And further, whatever assembly the unvirtuous person, defective in virtue, approaches—whether of noble warriors, brahmans, householders, or contemplatives—he/she does so without confidence & abashed. This is the third drawback coming from an unvirtuous person’s defect in virtue.

"மேலும் ஒரு ஒழுக்கமற்ற மனிதர், அறைகுறையான ஒழுக்கமுடையவர் இறக்கும் போது குழப்பத்தில் இறப்பார். ஒரு ஒழுக்கமற்ற மனிதரின் அறைகுறையான ஒழுக்கத்தின் நான்காம் குறைபாடு இது.

“And further, the unvirtuous person, defective in virtue, dies confused. This is the fourth drawback coming from an unvirtuous person’s defect in virtue.

"மேலும் ஒரு ஒழுக்கமற்ற மனிதர், அறைகுறையான ஒழுக்கமுடையவர் - அவர் உடல் சிதைந்த பின், மரணத்தின் பின் - குறைபாடுகள் உள்ள உலகில், கீழான உலகத்தில், நரகத்தில் மறுபிறப்பெடுப்பார். ஒரு ஒழுக்கமற்ற மனிதரின் அறைகுறையான ஒழுக்கத்தின் ஐந்தாம் குறைபாடு இது.

“And further, the unvirtuous person, defective in virtue—on the break-up of the body, after death—reappears in a plane of deprivation, a bad destination, a lower realm, hell. This is the fifth drawback coming from an unvirtuous person’s defect in virtue.

"இல்லறத்தார்களே, இவையே ஒரு ஒழுக்கமற்ற மனிதரின் ஒழுக்கக் கேட்டில் உள்ள ஐந்து குறைபாடுகள் ஆகும்."

1.24. "இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் நல்லொழுக்கத்தின் காரணமாக அவருக்கு ஐந்து அனுகூலங்கள் ஏற்படுகின்றன. எந்த ஐந்து?

"ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தின் காரணமாக, அவர் விவேகத்துடன் வாழ்வதால் பெரும் செல்வத்தைச் சேர்க்கிறார். ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தில் உள்ள முதல் அனுகூலம் இது.

"மேலும் ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தின் காரணமாக, அவர் புகழ் பரவுகிறது. ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தினால் உள்ள இரண்டாம் அனுகூலம் இது.

"மேலும் ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தின் காரணமாக அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டால், அது க்ஷத்திரியர்கள் கூட்டமாக இருந்தாலும் சரி, பிராமணர்கள், இல்லறத்தார் அல்லது தியானிகளின் கூட்டமாக இருந்தாலும் சரி, அந்த ஆண் அல்லது பெண் தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து கலந்து கொள்வார்கள். ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தினால் உள்ள மூன்றாம் அனுகூலம் இது.

"மேலும் ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தின் காரணமாக, அவர் இறக்கும் போது தெளிந்த மனத்தோடு இறப்பார். ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தினால் உள்ள நான்காம் அனுகூலம் இது.

"மேலும் ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தின் காரணமாக, அவர் உடல் சிதைந்த பின், மரணத்தின் பின் நல்ல மறுபிறப்பெடுப்பார். சொர்க்கத்தில் பிறப்பார். ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தினால் விளைந்த ஐந்தாம் அனுகூலம் இது.

"இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தின் காரணமாக உள்ள ஐந்து அனுகூலங்கள் இவைகளே.

1.25. பின் பகவர் பாதலி கிராம இல்லற மக்களுக்கு இரவின் பெரும்பகுதி நேரம் கழியும் வரை போதித்து, ஊக்குவித்து, எழுச்சியுண்டாக்கி, துணிச்ச லூட்டிய பின்னர் அவர்களிடம், "இரவு வெகு நேரம் ஆகிவிட்டது, இல்லறத்தாரே. இனி நீங்கள் செய்ய வேண்டிய உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்," என்று அவர்களிடம் கூறினார்.

"அப்படியே ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்தனர் பாதலி கிராம இல்லற மக்கள். பின் அவர்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து, பகவரை வணங்கி அவரை வலம் சுற்றி வந்து விடை பெற்றனர். அவர்கள் சென்ற பின் பகவர் வெறுமையான அந்த சத்திரச் சபைக் கூடத்தில் இரவைக் கழித்தார்.

பாதலி கிராமத்தில் ஊர் எழுப்பப்படுவது

1.26. அச்சமயத்தில் மகத நாட்டின் முதல் அமைச்சர்களான சுனித்தரும், வஸ்ஸகாரரும் வஜ்ஜியர்களைத் தடுக்க பாதலி கிராமத்தில் ஒரு மதில் சுவர்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு நகரை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் ஆயிரக்கணக்கான தேவர்கள் பாதலி கிராமப் பகுதிகளில் குடியிருக்க வந்தனர். பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த தேவர்கள் குடியிருந்த இடங்களில் அத்தேவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்த அமைச்சர்களை அவ்விடத்தில் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ள ஆசையூட்டினர். நடுத்தரச் செல்வாக்குப் பெற்றிருந்த தேவர்கள் குடியிருந்த இடங்களில், நடுத்தரச் செல்வாக்குப் பெற்றிருந்த மன்னரின் அமைச்சர்களைத் தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்ள ஆசையூட்டினர். குறைந்த செல்வாக்குப் பெற்றிருந்த தேவர்கள் குடியிருந்த இடங்களில் குறைந்த செல்வாக்குப் பெற்றிருந்த அமைச்சர்களைத் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ள ஆசையூட்டினர்.

1.27. பகவர் தன் ஞானக் கண்ணால் – தூய்மையானது, சாதாரண மனிதரின் கண்களைவிட மேன்மையானது – ஆயிரக் கணக்கில் அந்தத் தேவர்கள் பாதலி கிராமத்தில் குடியிருந்ததைக் கண்டார்.

பின் இரவின் கடை ஜாமத்தில் பகவர் போ. ஆனந்தரிடம், "ஆனந்தா, பாதலி கிராமத்தில் நகரைக் கட்டுவது யார்?" என்று கேட்டார்.

"மகத நாட்டின் முதல் அமைச்சர்களான சுனித்தரும், வஸ்ஸகாரரும் வஜ்ஜியர்களைத் தடுக்கப் பாதலி கிராமத்தில் ஒரு நகரை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர், அண்ணலே."

1.28. "ஆனந்தா, அவர்கள் முப்பத்து மூன்று தேவர்களைக் கேட்டு விட்டு நகரைக் கட்டுவார்கள் போலத் தெரிகிறது: அப்படித்தான் மகத நாட்டின் முதல் அமைச்சர்களான சுனித்தரும், வஸ்ஸகாரரும் வஜ்ஜியர்களைத் தடுக்கப் பாதலி கிராமத்தில் ஒரு நகரை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்."

"இப்போது தான் - எனது ஞானக் கண்ணால் – தூய்மையானது, சாதாரண மனிதரின் கண்களைவிட மேன்மையானது - நான் ஆயிரக்கணக்கில் தேவர்கள் பாதலி கிராமத்தில் குடியிருப்பதைக் கண்டேன். பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த தேவர்கள் குடியிருந்த இடங்களில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த மன்னரின் முதல் அமைச்சர்கள் தங்கள் வீடுகளைக் கட்ட நினைத்துக் கொண்டிருந்தார்கள். நடுத்தரச் செல்வாக்குப் பெற்றிருந்த தேவர்கள் குடியிருந்த இடங்களில் நடுத்தரச் செல்வாக்குப் பெற்றிருந்த அமைச்சர்கள் தங்கள் வீடுகளைக் கட்ட நினைத்துக் கொண்டிருந்தார்கள். குறைவான செல்வாக்குப் பெற்றிருந்த தேவர்கள் குடியிருந்த இடங்களில் குறைவான செல்வாக்குப் பெற்றிருந்த அமைச்சர்கள் தங்கள் வீடுகளைக் கட்ட நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

"ஆனந்தா, ஆரியர்களின் செல்வாக்கு இருக்கும் இடங்களில், அவர்கள் வாணிகம் எட்டும் தூரங்களில் இதுவே ஒப்புயர்வில்லா ஊராக இருக்கும்: பாதலிபுத்திரம் [16] பாதலி செடியின் விதைகள் வெடித்துச் சிதறும் இடம். பாதலிபுத்திரத்திற்கு நெருப்பினாலும், வெள்ளத்தினாலும், அல்லது ஒப்பந்தங்கள் முறிவுறுவதாலும் - இந்த மூன்று காரணங்களால் மட்டுமே ஆபத்துகள் இருக்கும்."

1.29. பின் மகத நாட்டின் முதல் அமைச்சர்களான சுனித்தரும், வஸ்ஸகாரரும் பகவரிடம் சென்று, அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துப் பரிமாற்றம் செய்து கொண்டு ஒரு புறமாக நின்று, “பண்புடைய கோதமர், சங்கத் துறவிகளுடன் நாளைய உணவு தானத்தை எங்களிடம் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறோம்." என்று வேண்டினர். பகவர் மௌனம் சாதித்து தன் இணக்கத்தைத் தெரிவித்தார்.

1.30. பின் மகத நாட்டின் முதல் அமைச்சர்களான சுனித்தரும், வஸ்ஸகாரரும் பகவரின் சம்மதம் அறிந்த பின் அவர்கள் தங்கள் ஓய்விடத்திற்குச் சென்றனர். பின் பல அருமையான பொதுவாக உண்ணப்படும் உணவு வகைகளையும், எப்போதாவது உண்ணும் சிறப்பான உணவு வகைகளையும் தயார் செய்த பின் பகவரிடம் சென்று: "அன்புடைய கோதமரே, உணவு தயாராகிவிட்டது", என்று கூறினார்கள்..

பின் பகவர் முற்பகல் நேரத்தில் எழுந்து, தனது கீழாடையைச் சரிசெய்து, பிச்சா பாத்திரத் தையும் மேலுடையையும் எடுத்துக்கொண்டு சங்கத்தினருடன் மகத நாட்டின் முதல் அமைச்சர்களான சுனித்தரும், வஸ்ஸகாரரும் இருக்குமிடத்திற்குச் சென்று அவருக்கென்று அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். சுனித்தரும், வஸ்ஸகாரரும் தங்கள் கைகளாலேயே புத்தர் தலைமையிலிருந்த சங்கதாரைக் கவனித்து, விரும்பத்தக்க உணவுகளை, அடிக்கடி உண்ணப்படும் மற்றும் எப்போதாவது உண்ணப்படும் உணவுகளைப் பரிமாறினார்கள். பகவர் உண்டு முடித்துப் பாத்திரத்திலிருந்து கையை எடுத்த பிறகு, சுனித்தரும், வஸ்ஸகாரரும் தாழ்வான இருக்கையில் ஒரு புறமாக அமர்ந்தனர்.

1.31. அப்போது பகவர் தனது திருப்தியைப் பாவடிவில் இவ்வாறு கூறினார்:

எந்த இடத்தில் ஒரு

அறிவுள்ளவர் குடியேறினாலும்,

ஒழுக்கமுடையவருக்கு,

அடக்கமானவர்களுக்கு,

ஆன்மீகப் பாதையில் செல்வோருக்கு

உணவு அளிப்போர் -

அந்தத் தானத்தால் உண்டாகும் புண்ணியத்தை

அங்குள்ள தேவர்களுக்கு அளிக்க வேண்டும்.

கௌரவிக்கப் பட்ட அவர்கள்,

அவரைக் கௌரவிப்பார்கள்;

மதிப்பளிக்கப்பட்ட அவர்கள்,

அவரை மதிப்பார்கள்.

அதன் காரணமாக அவர்கள்

அவரிடம் இரக்கம் கொள்வார்கள் -

தாய் தன் குழந்தைக்கு,

தன் மகனுக்குக் காட்டுவது போல.

தேவர்களின் கருணையைக்

கொண்டுள்ள ஒருவர்

எப்போதும் புனித விஷயங்களையே சந்திக்கிறார்.

பின் பகவர், சுனித்தருக்கும், வஸ்ஸகாரருக்கும் அந்த வரிகள் மூலம் தன் திருப்தியைத் தெரிவித்த பின்னர், தன் இருக்கையிலிருந்து எழுந்து அங்கிருந்து விடைபெற்றார்.

1.32. அச்சமயம் சுனித்தரும், வஸ்ஸகாரரும் பகவரைப் பின் தொடர்ந்து (இவ்வாறு எண்ணியவாறு) "எந்தக் (நகர) கதவு வழியாகத் தியானி கோதமர் இன்று வெளிச் செல்கிறாரோ, அதனைக் கோதமர் கதவு என்றே இனி அழைப்போம். எந்தத் துறை வழியாகக் கங்கை ஆற்றைக் கடக்கின்றாரோ அதனைக் கோதமர் துறை என்றே அழைப்போம்."

எனவே பகவர் விடைபெற்ற கதவிற்குக் கோதமர் கதவு என்று பெயரிட்டு அழைத்தனர்.

1.33. பின் அவர் கங்கை ஆற்றை அடைந்தார். அச்சமயம் கங்கையாறு நிறையாறாக இரு கரைகளையும் தொட்ட வண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு காகமும் கரையிலிருந்தே நீர் அருந்த முடிந்தது. சிலர் தோணிகளைத் தேடிக் கொண்டிருந்தனர்; சிலர் தெப்பங்களைத் தேடிக் கொண்டிருந்தனர்; சிலர் இதையும் அதையும் கட்டி ஒரு மிதவையைச் செய்து இக்கரையிலிருந்து அக்கரை சேர முயன்று கொண்டிருந்தனர். பகவரோ - ஒரு வலிமையான மனிதன் தன் மடித்த கையை நீட்டுவது போலவும் அல்லது நீட்டிய கையை மடக்குவது போலவும் - தம் சித்தி சத்திகளால் இக்கரையிலிருந்து மறைந்து தன் சங்கத் துறவிகளுடன் அக்கரையில் தோன்றினார்.

1.34. அவர் சிலர் தோணிகளைத் தேடிக் கொண்டிருப்பதையும், சிலர் தெப்பங்களைத் தேடிக் கொண்டிருப்பதையும், சிலர் இதையும் அதையும் கட்டி ஒரு மிதவையைச் செய்து இக்கரையிலிருந்து அக்கரை சேர முயன்று கொண்டிருப்பதையும் கண்டார்.

இதன் முக்கியத்துவத்தை அறிந்து, அச்சமயம் பகவர் கூறியது:

கடலையோ, ஆற்றையோ தாண்டியவர்கள்,

சதுப்பு நிலத்தை விலக்கி, ஒரு பாலத்தைக் கட்டிய பின்னரே தாண்டுகின்றனர்.

மக்கள் தெப்பத்தைக் கட்டிக் கொண்டிருக்கையில் -

அறிவுள்ளவர்கள் ஏற்கனவே தாண்டி விட்டார்கள். [17]

Then, on realizing the significance of that, the Blessed One on that occasion exclaimed:

Those

Who cross the foaming flood,

Having made a bridge, avoiding the swamps

While people are binding rafts -

Intelligent people

Have already crossed.

* * *

விளக்கம் ஆதாரங்கள் (Source for the Notes):

(BA) Bhante Anandajoti அனந்தஜோதி பிக்கு காணொளி

(MW) The long Discourses of the Buddha - A translaton of the Dhigha Nikaya by Maurice Walshe

(TB) Thanisarro Bhikku

(மொ. ஆ. கு) மேல் குறிப்பிட்டுள்ள தலைப்புகள் மூலத்தில் இல்லை.

[1] இந்த சூத்திரம் ஒரு தொகுப்பு. இதன் பல பகுதிகளும் திரிபிடகத்தின் மற்ற சூத்திரங்களிலும் காணலாம். புத்தரின் கடைசி நாட்களிள் நடந்த பல உண்மைச் சம்பவங்களை விவரிக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதென சந்தேகத்துக்கு இடம்தரும் பகுதிகளையும் கொண்டுள்ளது. (MW)

[2] இது ஒரு பட்டப்பெயர். அஜாதசத்துரு - என்றால் "எதிரி பிறக்கவில்லை" - அதாவது இவனை தோற்கடிக்கக்கூடிய எதிரி இதுவரை பிறக்கவில்லை என்பது பொருள். வேதஹிபுத்திரன் - என்றால் "வேதஹிப் பெண்ணின் மகன்". இவன் தாய் வேதஹியர்களைச் சேர்ந்தவள். (MW)

[3] வஜ்ஜியம் - மகதத்தின் அருகில் கங்கை நதியின் அக்கறையில் இருந்தது. லிச்சாவியர்கள் மற்றும் வேதஹியர்களின் ( அஜாதசத்துருவின் தாயாரின் கூட்டம்) கூட்டச் சேர்க்கை நாடு. (MW)

[4] அரசன் அஜாதசத்துரு புத்தரை அண்ணல் என்று அழைத்திடச் சொல்லியும் வஸ்ஸகாரர் 'அன்புக்குரிய கோதமர்' என்று ஒரு படி மரியாதைக் குறைவாகவே அழைக்கிறார். வஸ்ஸகாரர் MN 108, AN 4:35, மற்றும் AN 4:183 ஆகிய சூத்திரங்களிலும் வருவதைக் காணலாம். அவர் தம்மத்தை ஒரு அளவாக மட்டுமே புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது.

Notice that Vassakāra, by addressing the Buddha as “Master Gotama,” shows a lesser degree of respect to the Buddha than King Ajātasattu had told him to. Vassakāra also appears in MN 108, AN 4:35, and AN 4:183, and in each instance displays a limited understanding of the Dhamma. (TB)

[5] தொடர்ந்தும் அடிக்கடியும் நாட்டின் பெரியோர் சந்தித்துக்கொள்ளும் போது நாட்டு விவகாரங்களெல்லாம் கலந்தாலோசிக்கப்படுவதற்கும் சிறு விஷயங்கள் பெரிதாவதற்குள் அவை பேசித் தீர்க்கப்படுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. (BA)

[6] இக்காலத்தில் சட்டசபைகளில் கட்சி வாரியாக, சுயநலத்தைப் பாதுகாக்கப் பெரும்பாலான முடிவுகள் எடுக்கப்படுவதாகவே தெரிகிறது. ஆனால பொது நலம் கருதி, நாட்டு நலம் கருதி எல்லோரும் இணக்கத்துடன் முடிவெடுப்பதற்குச் சற்று முதிர்ச்சி (maturity) தேவை. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு தேவை. (BA)

[7] இது சற்று வித்தியாசமாகவும், புத்தரின் பொதுவான கருத்துக்களுக்கு மாறுபட்டதாகவும் தெரிகிறது. விநயத்தில் புதிதாகப் புத்தர் முன்னர் இல்லாத பல விதிமுறைகளை உருவாக்கினார். சிலசமயம் அவரிடம் வந்து மக்கள்/துறவிகள் முறையிடுவார்கள். அவர்கள் வாதம் சரியெனப்பட்டால் புத்தர் சில விதிகளை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றவும் செய்தார். அடிப்படை கோட்பாடுகளில் (principles) அவர் மாற்றம் செய்யவில்லை. அவற்றை செயற்படுத்தும் முறைகளில் (applications) அவ்வப்போது மாற்றம் செய்தார். (BA)

[8] பெரியோர்களுக்குப் பரந்த அறிவு இருக்கின்றது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலப்போக்கில் நடக்கும் சமூக மாற்றங்களை அவர்களது அனுபவம் காரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. (BA)

[9] பெண்களுக்கும் சிறுமிகளுக்கு அடிப்படை மனித உரிமைகள் உண்டு என்பதைத் தெளிவாக்குகிறார் புத்தர். சில சமூகங்களில் சிறுமிகளை வயதுக்கு வருவதற்கு முன்பே மணம் முடிப்பது, அல்லது பெண்களை அவர்கள் விருப்பத்தைக் கேட்காமலேயே மணம் முடிப்பது, அல்லது அவர்களை வீட்டு, ஆடு, மாடுகளைப்போல ஒரு சொத்தாகப் பார்ப்பது - இவை இன்றைக்கும் சில இடங்களில் நிலவும் பழக்கமாகும். (BA)

[10] யாகங்களைப் (sacrifices) புத்தர் அறவே தவிர்க்கச் சொன்னார் என்பது தவறான கருத்து. யாகங்களில் செய்த அநியாயமான தானங்களையே (unrighteous sacrtifices) புத்தர் தவிர்க்கச் சொன்னார். மிருகங்களைக் கொன்று, அவற்றைத் தானம் செய்வது, சில சமயம் வசதிமிக்கவர்கள் பெரிய மிருகங்களையும் - குதிரை, மாடுகள் போன்ற மிருகங்கள் - கொன்று யாகங்களைச் செய்தனர். ஏன் சில சமயம் மனிதர்களையும் பலியிட்டும் யாகம் செய்தனர். இதுபோன்ற யாகங்களை அவர் போற்றவில்லை. ஆனால் நியாயமான யாகாகங்களில் மக்கள் யாகம் செய்த பின்னர் மற்ற மக்களை ஒரு விருந்துக்கு அழைப்பார்கள். இது ஒரு தானம் போல. தானம் என்பது ஒருவரிடம் உள்ளதை அவர் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுதல். இது நியாயமான யாகம் என்பதால் புத்தர் இதனைத் தடுக்கவில்லை. (BA)

[11] அரஹந்தர் மட்டுமல்லாமல் சான்றோர் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அசோகச் சக்கரவர்த்தியை எடுத்துக்கொண்டால் அவர் பௌத்தர்களுக்கு மட்டும் உதவி புரியவில்லை. சைனர்கள், நியாயமாக நடந்து கொண்ட பிராமணர்கள், பரிவாஜகர்கள் (நாடோடிகள்) அனைவரையும் ஆதரித்தார். பண்பை வளர்க்கும் ஆசிரியர்கள் எவரானாலும் அவர்கள் அனைவரையும் ஆதரித்தார். குறிப்பாக இக்காலத்தில் பல நாடுகளிலும், பல மதங்களும் பரவியுள்ளதால் எந்த மதத்தவரானாலும் அவர் பண்புள்ளவரானால் அவரைப் போற்றுவது நற்செயலே. அவர்களைப் பாதுகாக்கவும் வேண்டும். அப்படிப்பட்ட சமூகம் தான் இணக்கத்துடன் வாழும் சமூகம் எனலாம். (BA)

[12] உரைகளின் படி இதையே வஸ்ஸகாரர் (பின்னர்) செய்கிறார். இதனால் அரசன் அஜாதசத்துரு வஜ்ஜியர்களைப் போர் செய்யாமலேயே வென்று விடுகிறான். புத்தரிடம் போரைப் பற்றி அறிவுரை கேட்பது அரசன் அஜாதசத்துருவின் அறியாமையைச் சுட்டிக் காட்டுகிறது என்றாலும் - இந்தப் பகுதியில் சங்கத்திற்கும் ஒரு முக்கிய கருத்து தெரிவிக்கப்படுகிறது. கீழ்வரும் பகுதிகளிலிருந்து தெரிவது போல வஜ்ஜியர்களின் வீழ்ச்சியைத் தடுக்க, கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களும், சங்கம் விழ்ச்சியுறாமல் இருக்கக் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. தற்போது சங்கத்தில் அக்கருத்துக்கள் ஊன்றியிருந்தாலும் வஜ்ஜியர்கள் பிற்காலத்தில் அவற்றைக் கைவிட்டதனால், தோற்கடிக்கப்பட்டது போல இக்கருத்துக்கள் எளிதாகக் கைவிடப்பட்டு விடலாம். எனவே விவேகத்துடன் இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் இங்கு முன் வைக்கப்படிருக்கிறது. AN 5:77–80 காணவும். (TB)

According to the Commentary, that is precisely what Vassakāra did, thus enabling King Ajātasattu to defeat the Vajjians without bloodshed. In addition to being ironic - showing how benighted Ajātasattu was, trying to get military advice from the Buddha - this passage has a poignant meaning for the Saṅgha. As the following passage shows, the conditions of no decline in the Saṅgha are not that different from those for no decline in the Vajjians. And although those conditions may prevail in the Saṅgha, the example of the Vajjians shows that they can be easily be abandoned. This passage thus serves as a warning not to be heedless. See also AN 5:77–80.

[13] மூன்று விதமான வேட்கைகள் உண்டு: புலன் இன்பங்களுக்கான விருப்பம், தொடர்ந்து இருக்க அல்லது மறுபிறப்பெடுக்க வேண்டும் என்ற விருப்பம், அழிவுற விருப்பம்.

துறவிகளைப்பொருத்தவரை அவர்களது ஒரே குறிக்கோள் நிப்பாணம் அடைவதுதான். மீண்டும் மறுபிறப்பெடுத்து மனிதராகப் பிறக்க வேண்டும் அல்லது சொர்க்கத்தில் பிறக்க வேண்டும் என்பது துறவிகளுக்குத் தவறான குறிக்கோளாகும். (BA)

[14] வீடு பேறு அடையாதவரை பயிற்சியை நிறுத்தாமல் தொடர வேண்டும். Stopping short of the goal of enlightenment, 'resting on their laurels'. (BA)

[15] சாரிபுத்திரர் பிறந்த ஊர். இந்தச் சம்பவம் நடந்த சில காலத்திலேயே சாரிபுத்திரர் அவர் பிறந்த ஊரில், பிறந்த அறையில் பகவரின் பரிநிப்பாணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் காலாமானார். பிற்காலத்தில் நாலந்தையில் பிரபலமான பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. (BA)

[16] பிற்காலத்தில் பாதலிபுத்திரம் (இன்றைய பாட்னா) அசோக சக்ரவர்த்தியின் தலைநகரமானது. அசோக சக்ரவர்த்தியின் அரண்மனை இருந்த இடமென்று கருதப்பட்ட இடத்தில் தொல் பொருள் ஆய்வாளர்கள் கருகிய தூண்கள் மண் வெள்ளங்களால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர். அரண்மனை நெருப்பினால் எரிந்து பின்னர் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதை இது குறிக்கக் கூடும். (TB)

Pāṭaliputta later became the capital of King Asoka’s empire. The “breaking open of the seed-pods (pūṭa-bhedana)” is a wordplay on the last part of the city’s name.

Archaeological evidence from what may have been part of Asoka’s palace in Pāṭaliputta shows burnt wooden posts buried in mud—perhaps a sign that the palace burned and then was buried in a flood.

[17] மற்றவர் பாலத்தையும் மிதவைகளையும் செய்து பின்னர் அக்கரை சேர முயற்சி செய்துகொண்டிருக்கையில்

பகவரும் அவர் சீடர்களும் எளிதாகச் சித்தி சக்திகளைக்கொண்டு ஆற்றைத் தாண்டியது போல

சம்ஸார வெள்ளத்தை மற்றவர் தாண்டுவதற்குத் தடுமாறிக்கொண்டிருக்கையில்

அறிவுடையோர் புத்தரின் போதனைகளைப் பின்பற்றி எளிதாகாத் தாண்டிவிடுகின்றனர்

என்பதே இதன் பொருள். (MW)

'When they want to cross the sea, the lake or pond,

People make a bridge or raft - the wise have crossed already.'

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு

Mr. P. K. Ilango M. A., Erode