பௌத்தக் கதைகள் - அஜாதசத்துருவின் அதிகார வேட்கை

பௌத்தக் கதைகள் முகப்பு

பௌத்தக் கதைகள்

மயிலை சீனி. வேங்கடசாமி

அஜாதசத்துருவின் அதிகார வேட்கை

பகவன் புத்தருக்கும் அவருடைய பௌத்த மதத்திற்கும் நாட்டிலே அதிக செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. மகதநாட்டு மன்னராகிய பிம்பிசார அரசர், புத்தருடைய தொண்டராக இருந்து பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காகப் பல பெருந்தொண்டுகள் செய்து வந்தார். ஆகவே, மற்ற மதங்களைவிடப் பௌத்த மதம் அதிகப் புகழும், பெருமையும், மதிப்பும் பெற்று இருந்தது.

புத்தருடைய மருகன் தேவதத்தன் என்பவன் பௌத்தமதத்தில் சேர்ந்து

பிக்ஷுவாக இருந்தான். பௌத்தமதத்திற்கிருந்த புகழையும் பெருமையையும் கண்டு இவனுக்கு ஓர் ஆசை-தகுதியற்ற ஒரு பேராசை உண்டாயிற்று. பிக்ஷு சங்கத்திற்கும் பௌத்த மதத்திற்கும் தானே தலைவனாக வேண்டும், பகவன் புத்தர் அடைந்துள்ள சிறப்பையும் புகழையும் தான் அடையவேண்டும் என்பதுதான் இவனுக்கு உண்டான பேரவா. இந்தப் பதவிக்குச் சிறிதும் தகுதியற்ற இவன் இந்தப் பதவியில் அமர உறுதி செய்து கொண்டான். ஆனால், பகவன் புத்தரும் பிம்பசார அரசரும் உயிரோடு உள்ளவரையில் தனக்கு இந்தத் தலைமைப் பதவி கிடைக்காது என்பதை நன்றாக அறிந்தான். ஆகவே, பகவன் புத்தரைக்

கொன்று விட்டு அவர் இடத்தைத் தான் கைப்பற்றவும், பிம்பசார அரசனைக் கொன்று விட்டு அவர் இடத்தில் அவருடைய மகனும் தன் சீடனுமாகிய அஜாதசத்துருவை அரசனாக்கவும் எண்ணங்கொண்டான். இந்த எண்ணத்தில் உறுதியும் ஊக்கமும் கொண்டு, தன்னுடைய கருத்து நிறைவேறும் வகையில் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கினான்.

அரசகுமாரனான அஜாதசத்துரு அரண்மனையிலே தனித்திருந்த சமயத்தில் தேவதத்தன் சென்று அவனைக் கண்டான். தேவதத்தனிடத்தில் அஜாதசத்துரு பயபக்தியுடையவன்; அவனிடத்தில் மதிப்புடையவன்; தேவதத்தனும் அரசகுமாரனைத் தன் சீடன் முறையில் வைத்துப் பழகிவந்தான். அஜாத சத்துரு, தேவதத்தனைப் போலவே இயற்கையில் தற்பெருமையும் அதிகார ஆசையும் உள்ளவன். தேவதத்தன், ஆசை வார்த்தைகளைப் பேசி அஜாதசத்துருவின் மனத்தில் அதிகார வேட்கையைத் தூண்டிவிட்டான். "நீ அரசகுமாரன், இளைஞன், ஊக்கமும் ஆற்றலும் உள்ள வீரன்! நீ அரசனாக இருந்தால் மற்ற அரசர்கள் எல்லோரையும் வென்று நீ சக்கரவர்த்தியாக விளங்குவாய். இந்தக் கிழ அரசர், பிம்பிசார அரசர், சிம்மாசனத்தில் அமர்ந்து வீணாகக் காலங்கழிக்கிறார். உன்னைப் போன்ற வாலிபன் அன்றோ அரசனாக அமரவேண்டும்? நீ ஏன் அரசனாகக் கூடாது? உன்னுடைய ஆற்றலையும், வீரத்தையும், திறமையையும் வீணாக்கி விடுகிறாய். நீ மகத தேசத்தின் அரசனாகவும் நான் பௌத்தமதத்தின் தலைவனாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கிழவர்களாகிய பிம்பசார அரசனும், பகவன் புத்தரும் ஏன் பதவிகளில் இருக்கவேண்டும்? இந்தப் பதவிகளில் நம்மைப் போன்ற இளைஞர்கள் அமர்ந்தால் எவ்வளவோ காரியங்களைச் செய்யலாமே," என்று பேசினான்.

தேவதத்தன் பேசிய வார்த்தைகள் அஜாதசத்துருவின் மனத்தில் அதிகார வேட்கையையும், அரச பதவி ஆசையையும் தூண்டி விட்டன. தன் தந்தையாகிய பிம்பசார அரசரைப் பதவியிலிருந்து நீக்கி மகத நாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாட்சியையும் அதிகாரத்தையும் தான் செலுத்த வேண்டும் என்னும் ஆசைத் தீ அவன் மனத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிற்று. உடனே அவன் செயல் ஆற்றத் தொடங்கினான்.

குற்றுவாள் ஏந்திய கையுடன் அரண்மனையிலேயே அஜாதசத்துரு இரவும் பகலும் சுற்றித் திரிந்தான். அவனுடைய கண்களும் நடவடிக்கையும் அவன் ஏதோ தகாத செயலைச் செய்யத் துணிந்தவன் போலக் காணப்பட்டன. பிம்பசார அரசர் தனித்திருக்கும் போது அந்த அறையிலே குற்றுவாளுடன் புகுவதற்குப் பல முறை முயன்றான். அவன் அவ்வாறு நுழைவதைக் காவல் சேவகர் தடுத்துவிட்டனர். அரச குமாரனுடைய நடவடிக்கைகள் காவல் சேவகர் மனத்தில் ஐயத்தை உண்டாக்கின. அவர்கள் அரசனிடம் சென்று இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். அரசர் இவர்கள் கூறியதை நம்பவில்லை. "அரசகுமாரன் இவ்வாறு செய்ய மாட்டான். நீங்கள் ஐயப்படுவது தவறு," என்று அவர் கூறினார்.

அஜாதசத்துரு தன் எண்ணத்தை முடிக்க ஊக்கமாக இருந்தான். கட்டாரியும் கையுமாக அரசர் இருக்கும் இடங்களில் நடமாடிக் கொண்டிருந்தான். சேவகர் அவனைக் காணும்போது, அவர்கள் முகத்தில் விழிக்காமல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான். காவல் சேவகருக்கு அரசகுமாரன் மீது மேன்மேலும் ஐயம் அதிகப்பட்டது. அவர்கள் மற்றும் ஒருமுறை அரசகுமாரன் நடவடிக்கையைப் பற்றி அரசரிடம் கூறினார்கள்.

அரசர் அஜாதசத்துருவை அழைத்து, "குமார! கட்டாரியும் கையுமாக அரண்மனையிலே இரவும் பகலும் நடமாடுவதாகக் காவல் சேவகர் கூறுகிறார்கள். நீ யாரையாவது கொலை செய்ய எண்ணங் கொண்டிருப்பதாக அவர்கள் ஐயப்படுகிறார்கள். அவகள் கூறுவது பொய் அல்லவா?" என்று கேட்டார்.

"அவர்கள் கூறுவது உண்மை," என்றான் அரசகுமாரன்.

இந்த விடை அரசருக்கு வியப்பையுண்டாக்கிற்று.

"நீ ஏன் அவ்வாறு செய்கிறாய்?"

"தங்களைக் கொல்வதற்காக!"

"எதற்காகக் கொல்லவேண்டும்?"

"அரச பதவிக்காக."

"பிள்ளையின் பகைமையோடு அரசாள்வது சிறந்ததன்று. நீ விரும்புவது போல் உனக்கு ஆட்சியைத் தருகிறேன். இன்று முதல் நீயே மகத தேசத்து மன்னன்!"

அரசர் அப்போழுதே அஜாதசத்துருவிடம் அரசாட்சியைக் கொடுத்து விட்டார். அன்று முதல் மகத தேசத்தின் மன்னன் அஜாதசத்துரு என்பதை நாட்டில் பறையறைந்து தெரிவிக்கச் செய்தார்.

அஜாதசத்துரு ஆரசாட்சியைப் பெற்றுக் கொண்டவுடன், தன் தந்தையாகிய பிம்பசார மன்னனுக்கு உயர்ந்த மரியாதைகளைச் செய்தான். ஆனால், தேவதத்தனுக்கு இது பிடிக்கவில்லை. பிம்பசார அரசன் உயிரோடு உள்ளவரையில் தன் எண்ணம் நிறைவேறாது என்று அவன் கருதினான். அவன், அரசபதவியில் இருக்கும் அஜாதசத்துருவிடம் வந்து தனது தீய எண்ணங்களை அவனுக்கு கூறி அவனை மேலும் குற்றச் செயல்களைச் செய்யத் தூண்டினான்.

"நீ அரசாட்சியைப் பெற்றுக் கொண்டதினாலே மட்டும் பயன் இல்லை. உன் தந்தை பிம்பசார அரசனிடம் இன்னும் அதிகாரம் இருக்கிறது. அவரைப் பின்பற்றி அவரை ஆதரிப்பவர் பலர் நாட்டில் இருக்கிறார்கள். உன் தந்தை உயிருடன் இருக்கிறவரையில் உனக்கு முழு அதிகாரமும் கிடைக்காது. அதுபோலவே, புத்தருடைய செல்வாக்கு நாட்டிலே பலமாக இருக்கிறது. அவரை ஒழிக்கும் வரையில் எனக்கும் பௌத்தமதத் தலைமைப் பதவி கிடைகாது.." என்று பற்பல கொடிய யோசனைகளைக் கூறினான்.

அதிகாரங்களைப் பெறுவதற்குப் பேரவாக் கொண்டிருந்த அரசகுமாரன், தேவதத்தனுடைய யோசனைகளைச் சிந்தித்துப் பார்க்கவில்லை. முழுவதும் ஏற்றுக்கொண்டான். தன் தந்தையைக் கொன்றுவிட மனம் துணிந்தான். பகவன் புத்தரைக் கொல்வதற்காகத் தேவதத்தனுக்கு உதவி செய்யவும் துணிந்தான்.

தன் தந்தையாகிய பிம்பசார அரசனைப் பட்டினி போட்டுக் கொல்ல முடிவு செய்தான். ஆகவே தன் தந்தையை சிறைச்சாலையில் அடைத்து அவருக்கு ஒருவரும் உணவு கொடுக்கக் கூடாதென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டான்.

அரண்மனையின் ஒருபுறத்திலே பிம்பசார அரசன் அமைத்திருந்த புத்த சேதியத்தை யாவரும் தொழக்கூடாதென்றும் அதற்குச் சிறப்புச் செய்யக் கூடாதென்றும் கண்டிப்புடன் கட்டளையிட்டான்.

இந்தப் புத்த சேதியத்திலே (சிறு கோயிலிலே) பிம்பசார அரசன், பகவன் புத்தருடைய, தலைமயிர் ஒன்றைப் பொற்பேழையில் வைத்து அதை நாள்தோறும் போற்றிச் சிறப்பு செய்துவந்தான். அரண்மனையில் இருந்தவர் எல்லோரும் இந்தச் சேதியத்தைத் தொழுது வந்தார்கள். புத்தருடைய செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு அஜாத சத்துரு இந்தச் சேதியத்தை ஒருவரும் தொழக்கூடாதென்று கட்டளையிட்டான்.

அரசனுடைய ஆணைப்படி ஒருவரும் சேதியத்திற்குச் செல்லவில்லை. சேதியம் பாழடைந்து காணப்பட்டது. திருவலகிட்டுத் தரையைத் தூய்மைப்படுத்தாதபடியினாலே புழுதி படிந்திருந்தது. திருவிளக்கு ஏற்றாதபடியினாலே இருளடைந்திருந்தது.

அரண்மனையிலே ஊழியம் செய்யும் சிறீமதி என்பவள் பகவன் புத்தரிடம் பற்றுடையவள்; மிகுந்த பக்தியுடையவள்; சமயம் கிடைக்கும்போதெல்லாம் புத்தருடைய உபதேசங்களைக் கேட்டு இன்புறுகிறவள். சிறீமதி, சேதியம் பாழடைந்து கிடப்பதைக் கண்டாள். அதன் காரணத்தையும் அறிந்தாள். மனம் வருந்தினாள். அரசன் ஆணையை மீறிச் சேதியத்தைச் சிறப்புச் செய்யத் துணிந்தாள். இப்படிச் செய்வதனாலே தன் உயிரைக் கொடுக்க வேண்டும் என்பதை இவள் நன்கறிவாள். உயிரைக் கொடுக்கவும் முடிவு செய்து கொண்டாள்.

சிறீமதி சேதியத்துக்குச் சென்றாள். சென்று, திருவலகிட்டுத் தூய்மைப் படுத்தினாள். விளக்கு ஏற்றி வைத்தாள். மலர்களை மாலையாகக் கட்டி அதனைச் சூட்டி அழகு படுத்தினாள். சேதியம் பொலிவு பெற்றிருப்பதைக் கண்டு மனம் பூரித்தாள். தலை வணங்கிப் பணிந்து தொழுதாள். அப்போது அவளுடைய மனத்திலே அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கிற்று.

சிறீமதி சேதியத்திற்குச் சிறப்புச் செய்து வணங்கிய செய்தி அஜாதசத்துருவின் காதுக்கு எட்டிற்று. அரண்மனை ஊழியக்காரி ஒருத்தி தன் ஆணையை மீறி நடந்ததற்காக அவன் அடங்காச் சினங்கொண்டான். அவளை அழைத்துவரும்படி ஆணையிட்டான். சிறீமதி தனக்குக் கிடைக்கப் போகிற தண்டனை இன்னதென்பதை நன்றாக அறிவாள். ஆனாலும் அவள் சிறிதும் கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு அரசன் முன் சென்று வணங்கி நின்றாள்.

அஜாதசத்துருவின் கண்களில் தீப்பொறி பறந்தன. "நமது கட்டளையை மீறி நீ சேதியத்திற்குச் சிறப்புச் செய்தாயா?" என்று கேட்டான்.

"ஆம், அரசே! அரசருடைய கட்டளையை மீறி நடந்தேன். ஆனால், பழைய அரசரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன்."

இறுமாப்புள்ள அஜாதசத்துருவுக்கு, இவள் கூறிய விடை பெருஞ்சினத்தையுண்டாக்கிற்று. அவன் கோபத்தினால் ஆவேசங் கொண்டான்.

"ஆ...என்று எழுந்தான். அதே சமயத்தில் அவனுடைய இடதுபுறத்து அரையில் உறையிலே கிடந்த குற்றுவாள் அவனுடைய வலக்கையில் காணப்பட்டது. அடுத்த வினாடியில், கட்டாரி அவள் மார்பிலே பாய்ந்தது.

இந்த முடிவைச் சிறீமதி முன்னமே அறிந்து எதிர் பார்த்திருந்தவள் ஆகையால், அவள் வியப்படைய வில்லை. வருத்தம் அடையவும் இல்லை. வேரற்ற மரம் போல் கீழே விழுந்தாள். குத்துண்ட மார்பிலிருந்து குபுகுபுவென்று சூடான சிவந்த இரத்தம் வெளிப்பாய்ந்தோடியது. உடலை விட்டுப் பிரியும் உயிர் சிறிது நேரம் துடிதுடித்தது. ஆனால், என்ன வியப்பு! அவள் முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் காணப்பட்டன. தான் சாகிறதற்காக அவள் வருத்தம் அடையவில்லை. "பகவன் புத்தருடைய சேதியத்தைச் சிறப்பு செய்தேன். விளக்கேற்றி வணங்கினேன்," என்னும் எண்ணம் அவளுக்கு மன அமைதியைத் தந்தது.

பிறகு, சில நிமிடங்களில் அவள் உயிர் உடலை விட்டு நீங்கியது. அவள் பிணமானாள். ஆனால்....! அந்தச் சிரிப்பும் மகிழ்வும் அமைதியும் அவள் முகத்தை விட்டு நீங்கவில்லை.