கருணைக் கடல்
ஆசிய ஜோதி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
7. கருணைக் கடல்
(அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் வெளிப்பட்டுச் சென்ற புத்தர், பிம்பிசார மன்னனுடைய யாகத்துக்காக கொண்டு செல்லப்பட்ட ஆட்டு மந்தையின் மத்தியில், துன்புற்றிருந்த ஒரு நொண்டி ஆட்டுக் குட்டியைத் தம் தோளில் சுமந்து கொண்டு சென்று, யாக சாலையை அடைந்து, மன்னனுக்கு அறவுரை போதித்து, நாடெங்கும் உயிர்க் கொலையை நிறுத்திய வரலாறு இதனுள் கூறப்படுகிறது.)
மந்தை பெரியமந்தை - உணவின்றி
வாடி மெலியும் மந்தை,
சிந்தை தளரும் மந்தை - நடக்கவும்
சீவ னிலாத மந்தை. 101
கண்ணிலே கண்டபுல்லை - நின்றொருவாய்
கௌவிட வொட்டாரையோ!
தண்ணீர் குடிப்பதற்கும் - விலகிடச்
சம்மதி யாரேஐயோ! 102
கௌவிட வொட்டார் - கௌவிட + ஒட்டார்
ஒட்டார் - சம்மதியார்
காடு மலைகளெல்லாம் - ஓடியோடிக்
கால்களும் ஓய்ந்தனவோ!
ஆடுக ளாயிடினும் - எவரிவ்
வநியாயம் செய்வரையோ! 103
தன்னந் தனியாகி - ஒருமறி
தாவிமுன் ஓடுதையோ!
பின்ஓர் இளமறியும் - கிந்தியிங்கு
பீடைப் படுதேஐயோ! 104
மறி – ஆட்டுக் குட்டி
கிந்தி - நொண்டி நடத்தல், To hobble, limp
பீடை – துன்பம், Affliction, distress
கல்நெறி கொண்டதுவோ? - விழுந்தொரு
கால்முட மானதுவோ?
செல்லும் வழிநீள - உதிரமும்
சிந்தப் பெருகுதையோ! 105
கல்நெறி – கல்லடி, நெறி - வலி, Stiffness
முடம் - நொண்டி, உறுப்புக் குறை, Crippled condition of leg or arm
ஓடும் மறி தேடித் - தாயுமுன்னில்
ஓரடி வைத்தவுடன்,
வாடும் மறியை எண்ணி - விரைந்துபின்
வந்து தயங்குதையோ! 106
வேறு
இத்தனையும் கண்டுமனம் இரங்கி, நொண்டும்
இளமறியை இருகரத்தின் எடுத்து, வையம்
அத்தனையும் தாங்குபுயம் அணிய ஏந்தி,
அருளுருவாம் அண்ணலும் அத்தாயை நோக்கி; 107
புயம் அணிய ஏந்தி – தோள்மீது சாய்த்து,
புயம் – தோள், Arm, shoulder
ஏந்தி - தாங்கி
வையத்தைத் தாங்கிடும் வலிமை கொண்ட தோளில், அந்த ஆட்டுக் குட்டியைத் தூக்கிக் கொண்டார் அண்ணல் புத்தர்.
வேறு
"அல்ல லுறவேண்டாம் - இனித்துயர்
ஆறி வருவாயம்மா!
செல்லு மிடத்தில் உன்தன் - மதலையைத்
சேர்த்து விடுவேனம்மா. 108
ஏழைப் பிராணிகளின் - இடர்களைந்து
இன்ப மளிப்பதுபோல்,
வாழும் உலகிதனில் - செயுமொரு
மாதவம் வேறுமுண்டோ? 109
மீளாத் துயர்க்கடலில் - உயிரெலாம்
வீழ்ந்து முழுகையிலே
பாழாங் குகைதேடிச் செயுந்தவம்
பாவமே ஆகுமம்மா!" 110
பாழாம் – பயன்படுத்தாத, Unused
விளக்கம்: மனிதகுலம் துயர்க் கடலில் மூழ்கித் தவிக்கும் போது, தன்னலம் கருதிப் பாழ்ங்குகை தேடித் தவம் செய்தல் பாவமாகும் என்று கூறுகிறார் புத்தர்.
வேறு
என்றுகனிந் துளமுருகி எழுந்த காலை,
எமன்விட்ட தூதுவர்போல் ஆட்டை யெல்லாம்
குன்றிருந்து துரத்திவரு மவரைக் கண்டு
குவலயத்தில் அருள்மாரி பொழியும் ஐயன்; 111
குவலயம் – பூமி, The earth, world
வேறு
"மாலைப் பொழுதின்னும் ஆகவில்லை - வெயில்
மண்டை பிளந்து வெடிக்குதையோ!
சாலை வழி இந்த ஆடுகளும் - எங்கு
சாய்ந்து செலுமையா கூறும்" என்றான். 112
எங்கு சாய்ந்து செலுமையா – எங்கு ஓய்வெடுத்துச் செல்லும், கூறுங்கள் என்று கேட்கிறார்.
அம்மொழி கேட்டவ் விடையருமே - "எம்மை
ஆளும் இறைவன தாணையினால்,
செம்மறி நூறு, வெள் ளாடும் ஒருநூறு
சேர்த்து வருகிறோம்" என்றுரைத்தார். 113
இறைவன் - அரசன்
இறைவன தாணையினால் - அரசனது கட்டளையினால்
செம்மறி - ஆட்டு வகை, sheep, Lamb
வெள்ளாடு – ஆட்டுவகை, Goat
இன்றிரா யாகம் முடியுதென்றார் - அதில்
இத்தனை யுங்கொலை யாகுமென்றார்;
நின்றுசொல நேரம் இல்லை என்றார் - இன்னும்
நீண்ட வழிபோக வேண்டும் என்றார். 114
வள்ளலும் உள்ளம் வருந்தி,யானும் - அந்த
மாமகம் காண வருவேனென்று,
துள்ளும் மறியுஞ் சுமந்துகொண்டு - தாயும்
சேர்ந்து தொடர வழிநடந்தார். 115
மாமகம் - பெரிய யாகம்
வேறு
மானேந்தும் ஈசனுளம் நாண, ஆட்டின்
மறியேந்து பெருங்கருணைப் புனித வள்ளல்,
வானேந்து மதில்மீது கொடிகள் ஆடும்
மாநகரின் திருவாயில் வந்தபோது; 116
மானேந்தும் ஈசனுளம் நாண - இறைவனே வேட்கப்படக்கூடிய வகையில்.
மானேந்தும் ஈசன் – சிவபெருமான்.
வேறு
செங்கதிர் வெம்மை தணிந்ததடி! - வாசத்
தென்றல் உலாவி எழுந்ததடி!
பொங்கி வருஞ்சோணை மாநதியும் - ஒரு
பொன்னிறம் பெற்றுப் பொலிந்ததடி! 117
சோணை மாநதி – கங்கையின் ஒரு உபநதி River Son or Sone is a tributary of River Ganga.
முல்லை மலர்ந்து மகிழ்ந்ததடி! - ஆம்பல்
மூடிய வாயும் திறந்ததடி!
எல்லை யிலாமலர்ச் சோலையிலே - வண்டும்
இன்னிசை பாடித் திரிந்ததடி! 118
ஆம்பல் – அல்லி, Water-lily
தாயும் இரங்கி வருகுதடி- கன்றும்
தாவிக் குதித்தோடிச் செல்லுதடி!
ஆயும் பொழிலில் பறவையெலாம் - அந்தி
அங்காடி போல ஒலிக்குதடி! 119
ஆயும், ஆய் – அழகு, Beauty.
பொழில் – சோலை, Park, grove; forest
அந்தி – மாலை, evening
அங்காடி – கடைவீதி, Bazaar, bazaar street
வையகந் தன்னில் உயிர்களின் மீதருள்
மாரி பொழியும் பெரியவனாம்
ஐயனைக் கண்டவர் கொண்ட அதிசயம்
ஆராலே கூற இயலுமடி! 120
அருள் மாரி பொழியும் - அருள் மழை பொழியும்
வாயிலைக் காத்திடும் சேவகரும் - வழி
மாறி விலகி ஒதுங்கிநின்றார்;
தாயினும் மிக்க தயாளன் இவன் - போல்இத்
தாரணி கண்டதும் உண்டோஎன்றார். 121
பாதையிற் சென்றவர் பார்த்துநின்றார் - ஒரு
பக்கமாய் வண்டிகள் ஓட்டிநின்றார்;
மாதவம் ஈதலால் வேறுளதோ! - என
வாயார வாழ்த்திப் புகழ்ந்துநின்றார். 122
மாதவம் ஈதலால் வேறுளதோ - இதைவிடப் பெரிய தவம் வேறு ஏதும் இருக்கிறதா? இல்லை.
ஈதலால் -ஈது + அல்லால் – இதைத் தவிர
சந்தை இரைச்சல் அடங்கியது! - கடைச்
சண்டையும் இல்லா தொடுங்கியது!
வந்தவர் போனவர் கண்களுக்கும் - அந்த
வள்ளல் முகம் விருந் தானதம்மா! 123
கடைச் சண்டையும் - வியாபரம் நடக்கும் போது நடக்கும் பேரமும், வாக்குவாதமும்
கூடம் எடுத்தகை தாழ்ந்திடாமல் - ஒரு
கொல்லனும் கண்டு திகைத்து நின்றான்;
ஊடுபா வோட்டிய சாலியனும் - நூலை
ஓட்டி முடியாது விட்டுவந்தான். 124
கூடம் – சம்மட்டி.
சம்மட்டியைத் தூக்கிய கை கீழிறங்காமல்,
கொல்லன் – கருமான், Blacksmith
ஊடுபா – நெசவுத் தறியின் தார் நூல்,
ஊடை நூல், குறுக்கே செல்லும் நூல்.
சாலியன் - நெசவாளி
மண்ணைச் சுமந்து வருங்குயவன் - ஈதோர்
மாமுனி என்று வணங்கி நின்றான்;
எண்ணெய்க் குடமேந்து வாணியனும் - இவர்
யாரோ பெரியவர் எனப் பணிந்தான். 125
பள்ளிச் சிறுவரும் சாடிவந்தார் - அவர்
பக்கத் தண்ணாவியும் ஓடிவந்தார்;
கள்ளரும் உள்ளம் மறந்துநின்றார் - வட்டக்
காரரும் காசுப்பை விட்டுவந்தார். 126
சாடுதல் - ஒருவரை ஒருவர் மிதித்துக்கொண்டு வருதல், To trample.
பக்கத் தண்ணாவி - பக்கத்து அண்ணாவி
அண்ணாவி - ஆசிரியர், உபாத்தியாயர்
கள்ளர் – திருடர்
வட்டக்காரன் - வட்டம் + காரன் - வட்டத்துக்குப் பண மாற்றுவோன், தரகன், Money-changer
வட்டம் - நாணயமாற்றின் தரகு, Rate of exchange; money-changer's commission;
மாடும் அரிசியைத் தின்றதம்மா! - அதை
மாற்றி யடிப்பாரும் இல்லையம்மா!
வீடும் திறந்து கிடந்ததம்மா! - உலை
வெந்திடும் சோறும் குழைந்ததம்மா! 127
மாற்றி யடிப்பாரும் - துரத்தி அடிப்பாரும்.
மாற்றுதல் – ஓடச்செய்தல், To repel, expel
உலை – அரிசியிடுவதற்கு அடுப்பில் வைத்துள்ள நீர், cooking pot,
வெந்துக்கொண்டிருக்கும் அரிசி குழைந்து போகாமலிருக்க அடுப்புத் தீயைத் தணிக்கவும் மறந்துவிட்டனர் பெண்கள்
பெண்டுகள் வாசலில் கூடிநின்றார் - இந்தப்
பேரரு ளாளனும் யாரோஎன்றார்;
கண்டவர் உள்ளம் கனியுதென்றார் - இவன்
கண்ணின் அழகினைப் பாரும் என்றார். 128
பெண்டு – மனைவி, பெண்.
கன்னி ஒருமகள் மையெழுதி - இரு
கண்ணும் எழுதுமுன் ஓடிவந்தாள்;
பின்னும் ஒருமகள் கூந்தலிலே - சூடும்
பிச்சி மலர்கையில் சுற்றிவந்தாள். 129
பிச்சி மலர் - சாதிமல்லிகை, Large-flowered jasmine
பாலுக் கழுத மதலையுமே - ஐயன்
பக்கம் வரக்களிப் புற்றதென்றால்,
சேலொக்கும் மாதர் விழிகள் - அவன்முகச்
செவ்வியில் ஆழ்வது அதிசயமோ! 130
களிப்பு - மன மகிழ்ச்சி Joy, delight
சேல் - நன்னீரில் வாழும் கெண்டை மீன், A fresh-water fish
சேலொக்கும் - மீனைப்போன்ற
செவ்வி - அழகு Beauty, gracefulness, elegance
கண்ணிற் கருணை விளங்குதென்றார் - நடை
கம்பீர மாகவுங் காணுதென்றார்;
எண்ணில் இடையனும் ஆகான் என்றார் - இவன்
இராஜ குலத்தில் பிறந்தோன் என்றார்; 131
எண்ணில் இடையனும் ஆகான் - ஆலோசித்துப் பார்த்தால் இவன் இடையனைப் போன்றும் தோன்றவில்லை.
எண்ணில் – நினைத்துப் பார்த்தால்
யாகப் பசுவை எடுத்துவரும் - இவன்
எண்ணரும் பக்தி யுடையன் என்றார்;
மாகந் தொழுதேவ ராஜன்என்றார் உயர்
மாதவச் செல்வன் இவனே என்றார். 132
எண்ணரும் - ஆழ்ந்த
மாகந் தொழு – தேவர்கள் தொழும்
செம்பு நிறைந்துபால் சிந்திடவே - சிலர்
சிந்தை மறந்து கறந்துநின்றார்;
எம்பிரான் செல்லும் வழியின் சிறப்பெலாம்
எங்ஙனம் சொல்லி முடிப்பேன், அம்மா! 133
வேறு
வையமிசை உயிர்கள் படும் துயரை எண்ணி
மறுகும் உளத்து அயலொன்றும் அறியா னாகி,
ஐயனும் அவ் வீதிவழி நடந்து, மன்னன்
அரியமகம் செய்யுமிடம் அணுகி னானே. 134
வையமிசை – வையத்தில், வையம் - உலகம்
மறுகும் உளத்து அயலொன்றும் – கலங்கும் உள்ளத்தில் வேறெதையும்,
மகம் – யாகம்,
வேறு
தாரணி மன்னவன் பிம்பிசாரன் - யாக
சாலை நடுவினில் வந்து நின்றான்;
ஆரணம் ஓதிய அந்தணரும் - நிரந்து
அங்கிரு பக்கமாய்க் கூடிநின்றார்; 135
ஆரணம் – மறை, வேதம், Vēda
நிரந்து – நெருங்கி, To be thick, crowded
மந்திரம் ஓதி எரிவளர்த்தார் - புகை
வானை யளாவி எழுந்ததம்மா!
இந்தன மிட்டுப் பெருக்கிநின்றார் - தீயும்
ஏழுநா விட்டுச் சுழன்றதம்மா! 136
இந்தனம் – நறும்புகை தரும் விறகு, Fuel, firewood
ஏழுநா விட்டு – கொழுந்து விட்டு, Seven Tongues of flame
பண்டங்கள் வாரி இறைத்தாரம்மா! - சோம
பானங்கள் அள்ளிச் சொரிந்தாரம்மா!
குண்டம் நிறைய நெய் விட்டாரம்மா! - எரி
கோபுரம் போல உயர்ந்ததம்மா! 137
பண்டம் - எரியில் போடும் பொருட்கள் ( நவதாணியங்கள் முதலியன)
சோமபானம் - தேவர்கள் அருந்தும் மது
சொரிதல் - கொட்டுதல்
குண்டம் - ஓமகுண்டம்.
வேதம் விதித்த விதிமுறையில் - ஒரு
வெள்ளாடு கண்டு பிடித்துவந்து,
பாதக மான பலியிடவே - அங்கு
பாரில் கிடத்தி யிருந்தாரம்மா; 138
பாதகம் - பெரும்பாவம் Grievous sin, heinous crime
ஆடுகள் விட்ட உதிரமெல்லாம் - அங்கோர்
ஆறாக ஓடிப் பரந்ததம்மா!
நாடியவ் வேள்விக் களத்தை விரித்திட
நாவும் நடுங்கி ஒடுங்கு தம்மா! 139
நாடியவ் வேள்விக் களத்தை விரித்திட -
நாடி + அவ் + வேள்விக் களத்தை + விரித்திட
விரித்திட - விரிவாகச் சொல்ல
நாவும், நாவு - நாக்கு
நீட்டிக் கழுத்தை அறுப்பதற்கோ? - அதன்
நெஞ்சை வகிர்ந்து பிளப்பதற்கோ?
தீட்டிய கத்தியும், கையுமாக - ஒரு
தீக்ஷிதர் முன்வந்து நின்றாரம்மா! 140
வகிர்ந்து - வகிர்-தல் - துண்டாகப் பிளத்தல், To slice; to cut in slips
தீக்ஷிதர் - யாகம் செய்யும் புரோகிதர், Those who have performed Vēdic sacrifices.
வேறு
'யாகத் திறைவரே! எண்ணருந் தேவரே!
அம்புவி யாளும் அரசர் பெருமான்
பிம்பி சாரப் பெருந்தகை, இந்நாள்
மறைகளில் விதிக்கும் வழிவகை யறிந்து
முறையிற் செய்து முடிக்கும் இம் மகத்தில்
யாகத் திறைவரே - யாகத்து இறைவரே, தேவர்களே
மறை - வேதம் The Vēdas, as secret;
மகம் - யாகம்
பேணி உமக்கிடும் பெரும்பலி இதுவாம்;
உயிரொடு துள்ளி ஒழிகிடும் உதிரம்
கண்களிற் கண்டு களிப்பீ ராகுக!
சீரிய குணத்துஎம் செங்கோல் மன்னன்
பாரில் செய்த பழியும் பாவமும்
பேணுதல் – போற்றுதல், To attend carefully,
தாங்கி இவ்வாடு சாவக் கையினில்
வாங்கும்இவ் வாளால் வதைத்துஅவ் வூனையும்
எரிவாய் இடுவன், யாவும்
பொரியாய்ப் புகையாய்ப் போவது குறித்தே' 141
எரிவாய் இடுவன் - யாக குண்டத்தின்
நெருப்பில் போடுவேன்
பொரி - பொரியச் செய்தல், To fry
விளக்கம்: உயிர்க் கொலையிட்டு யாகம் செய்வதால் மன்னன் செய்த பாவம் எல்லாம் பொரியாய்ப் புகையாய் மறைந்து போகட்டும்.
வேறு
என்று சொல்லியாக தீக்ஷிதரும் - வாளை
ஏந்திய கையினை ஓங்கையிலே,
பொன்றும் உயிரினைக் காக்கவரும் - அந்தப்
புண்ணிய மூர்த்தியும் ஓடிவந்து 142
பொன்றும், பொன்றுதல் – அழிதல், To perish, to be ruined
"அண்ணலே இக்கொடும் பாவிஇவ் வேளையில்
ஆட்டினைக் கொல்லா தருள்புரிவீர்
திண்ணிய ஞான முடையவரும் - இந்தத்
தீவினை செய்வரோ?" என்றுரைத்தான். 143
திண்ணிய - தெளிந்த, ஆழ்ந்த
காலிலே கட்டிய கட்டவிழ்த்தான் அதன்
கண்டம் இறுக்கிய கட்டவிழ்த்தான்;
வாலிலே கட்டிய கட்டவிழ்த்தான் -அதன்
வாயினிற் கட்டும் அவிழ்த்துவிட்டான்! 144
நின்றவர் கண்டு நடுங்கினரே - ஐயன்
நேரிலே நிற்கவும் அஞ்சினரே;
துன்று கருணை நிறைந்தவள்ளல் - அங்கு
சொன்ன மொழிகளைக் கேளும், ஐயா; 145
துன்று - பொருந்தும்
"வாழும் உயிரினை வாங்கிவிடல் - இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;
வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாதையா! 146
யாரும் விரும்புவ தின்னுயிராம் - அவர்
என்றுமே காப்பதும் அன்னதேயாம்;
பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும்;
பாடு முழுதும் அறிந்திலீரோ? 147
விரும்புவ தின்னுயிராம் - விரும்புவது இனிய உயிராம்
அன்னதேயாம் – அதுவே, (அந்த இனிய உயிரையே)
நேரிய உள்ளம் இரங்கிடுமேல் - இந்த
நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
பாரினில் மாரி பொழிந்திடவே - வயல்
பக்குவ மாவ தறிந்திலீரோ? 148
நேரிய, நேர் - நேர்மையான, நுண்ணறிவுள்ளவன் A man of subtle intellect
ஆண்டிடலாம் - ஆட்சி செய்யலாம்
மாரி - மழை
விளக்கம்: மழை பெய்வதால் நிலம் பக்குவமாவது போல அருள் பொழியும் நுண்ணறிவுள்ளவன் இருப்பதால் உலகமே மேன்மையுறுகிறது.
காட்டும் கருணை யுடையவரே - என்றும்
கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார் - இந்த
மர்மம் அறியாத மூடரையா! 149
விளக்கம்: கருணை உள்ளவனே தூய்மையானவன். இதை அறியாத முட்டாள் உலகில் துன்பம் கொள்வான்.
ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர்
ஆக்கிய யாகத்து அவியுணவை
ஈட்டும் கருணை இறைவர் கைகளில்
ஏந்திப் புசிப்பரோ? கூறுமையா! 150
பொசுக்குதல் - வெதுப்புதல், தீயில் வாட்டுதல் To singe, toast, bake slightly
அவியுணவு, அவி - வேள்வித்தீயின் வழியாகத் தேவர்க்கு அனுப்பும் உணவு. Offerings made to the gods in sacrificial fire
ஈட்டும், ஈட்டுதல் - கூட்டுதல், To collect, amass, hoard, accumulate
புசித்தல் - உட்கொள்ளுதல் To eat, feed on
விளக்கம்: யாகத்தில் போடுவதெல்லாம் தேவலோகத்துக்கு போகும் என்று கருதப்பட்டது. ஆட்டின் கழுத்தை அறுத்துத் தரும் யாகத்து உணவைக் கருணை உள்ள இறைவன் உண்பானா? மாட்டான்.
மைந்தருள் ஊமை மகனை ஒருமகன்
வாளால் அரிந்து கறிசமைத்தால்
தந்தையும் கண்டு களிப்பதுண்டோ? - இதைச்
சற்றுநீர் யோசித்துப் பாருமையா! 151
மைந்தர் – மக்கள், பிள்ளைகள்.
காடு மலையெலாம் மேய்ந்து வந்து - ஆடுதன்
கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதும் ஒரு
தீய செயலென எண்ணினீரோ? 152
கன்று வருந்திடப் - பசியில் வாடும் கன்றுக்குக்
கூடக் கொடுக்காமல் மக்களுக்குப் பால் தருவது தீய செயலென நினைத்தீரோ?
மேடையில் நீங்களும் மூடிப் படுத்திட
மெல்லிய கம்பளி தானளித்து
வாடையி லாடிக் கொடுகுவதும் - அதன்
வஞ்சகச் செய்கையோ, சொல்லும்ஐயா? 153
வாடையி லாடிக் கொடுகுவதும் :
வாடை - குளிர் காற்று Chill wind
கொடுகுதல் - குளிரால் ஒடுங்குதல், To shrink or shiver with cold
அம்புவி மீதில்இவ் வாடுகளும் - உம்மை
அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
நம்பி யிருப்பவர் கும்பி எரிந்திடில்
நன்மை உமக்கு வருமோ ஐயா? 154
கும்பி எரிந்திடல் - வயிறு எரியுமானால்
காட்டுப் புலியின் கொடுமையஞ்சி - உங்கள்
கால்நிழல் தங்கிய ஆடுகளை
நாட்டுப் புலியெனக் கொல்லுவதோ - அந்த
நான்மறை போற்றிய நீதிஐயா? 155
நான்மறை – நான்கு வேதம், சதுர்வேதம் The four Vēdas
வேதம் சொல்லும் நீதி இது தானோ?
மண்ணில் வளர்ந்திடும் புல்லையுண்ணும் - வான
மாரி பொழிந்திடும் நீரையுண்ணும்;
எண்ணிநீர் செய்யும் உதவியென்னாம் - இதை
ஏனோ உணர்ந்திலீர் மானிடரே! 156
எண்ணிநீர் செய்யும் உதவியென்னாம் - நீர் அதற்குச் செய்த கைம்மாறு என்ன?
பிள்ளையைக் கொன்று கறி சமைத்தீர் - அதன்
பெற்றோரை உண்ண அழைத்துநின்றீர்;
வள்ளலே உள்ளந் தெளிந்தவரே - இது
வாழ்வை யளிக்கும் செயலாமோ? 157
ஆடு மாடெல்லாம் இறைவனின் பிள்ளைகளே. அதை வெட்டி உணவாக்கி அவரையே உண்ண அழைக்கின்றீர்களே இது முறையான செய்கையாகுமா?
மன்னுயி ரெல்லாம் உலகில் - ஒருதாயின்
மக்களென் றுண்மை அறிந்திலீரோ?
தன்னுயிர் போற்றிப் பெரும்பழி செய்வது
சண்டாளர் கண்ட நெறியலவோ? 158
ஒருதாயின் மக்களென்று - இறைவனின் மக்களென்று
சண்டாளர் - துரோகிகள்
மாண்ட மனிதனோர் ஆடுமாவான் - உடல்
மாறியோர் ஆடும் மனிதனாகும்;
நீண்ட உலகின் இயற்கைஐயா! - இது
நீதி நூல் கண்டிடும் உண்மைஐயா! 159
பாரில் உதிரம் குளிப்பதனால் - ஒரு
பாவமும் நீங்குவ தில்லைஐயா!
சீரியதேவரும் இச்செயல் - கண்டுதம்
சிந்தை களித்திட மாட்டாரையா! 160
சீரிய - சிறந்த
தாயென நம்பி வரும்உயிரை - யாக
சாலை நடுவில் கிடத்திஒரு
பேயெனக் கீறிப் பிளப்பதனால் - என்ன
பேறும் பெயரையும் பெற்றீரையா? 161
துட்டப் பிசாசைக் குறித்திடனும் - இந்தத்
தூண்டினில் வந்த தகப்படுமோ?
வெட்டிக் கொலைசெய்ய வேண்டாமையா! - இதை
விட்டொழிதல் மிக்க மேன்மைஐயா! 162
துட்டப் பிசாசை - கெட்ட பிசாசை அழிக்க முயற்சி செய்கின்றீர்கள். அரசன் செய்த பாவம் ஒரு கெட்ட பிசாசு போல் என்றால், இந்தப் பலி செய்யும் யாகம் என்ற தூண்டிலில் அந்தப் பிசாசு சிக்குமா? மாட்டாது.
வந்த தகப்படுமோ? - வந்து அது அகப்படுமோ?
ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் - ஏழை
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச்
செல்வ தொருநாளு மில்லைஐயா! 163
முன்னைப் பிறப்பினில் செய்தவினை - யாவும்
முற்றி முதிர்ந்து முளைத்தெழுந்து
பின்னைப் பிறப்பில் வளர்ந்திடும் என்பது
பித்தர் உரையென எண்ணினீரோ? 164
பித்தர் – பைத்தியகாரர், Persons of deranged minds
நெஞ்சினில் வாயினில் கையினில் - செய்திடும்
நீதி அநீதிகள் யாவையுமே
வஞ்சமி லாது மறுப்பிறப்பில் - உம்மை
வந்து பொருந்தாமற் போயிடுமோ? 165
வஞ்சம் – வஞ்சகம், கொடுமை, Cruelty, violence
கன்று பசுவை மறந்திடினும் - செய்த
கருமங்கள் உம்மை விடுமோ ஐயா!
கொன்று பழிதேட வேண்டாம்ஐயா! - இனிக்
கொல்லா விரதம்மேற் கொள்ளும் ஐயா! 166
தானியம் பற்பல தாமிலையோ? - சுவை
தாங்கிய காய்கனி தாமிலையோ?
வான மழைதரு நீரிலையோ? -இவை
வாழ்ந்திடப் போதும் உணவல்லவோ? 167
பற்பல தாமிலையோ - பற்பல வகைகள் இலையோ?
ஊனுண வின்றி உறவு கொண்டு - நிலத்து
உள்ளதை யாவரும் உண்டிருந்தால்
மானும் புலியும் ஒருதுறையில் - நீரை
வந்து குடிப்பதும் காணலாமே; 168
ஊனுண வின்றி உறவு கொண்டு -
ஊனுண வின்றி - ஊன் (மாமிசம்) + உணவு + இன்றி (இல்லாமல்)அன்போடு இருந்து
ஒருதுறையில், துறை - இடம் Place, location
ஆதலால், தீவினை செய்யவேண்டாம் - ஏழை
ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டாம்,
பூதலந் தன்னை நரகம தாக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும், ஐயா!" 169
பூதலம் – பூமி, The earth
வேறு
வாய்பேசா உயிரெலாம் வாய்பெற்று அங்கு
வாதாடி வழக்கிட்ட வாறீ தென்னத்
தாய்போலுந் தயவுடைய தரும மூர்த்தி
சாற்றியநல் லறவுரைகள் யாவுங் கேட்டு 170
வாய்பேசா உயிரெலாம் வாய்பெற்று - புத்தர் பேசுவது, வாய் பேசா உயிர்களெல்லாம் வாய் திறந்து பேசுவது போன்றுள்ளது.
வாறீ தென்ன - வாறு + இது + என்ன
வேறு
திக்ஷிதரும் வாளை விட்டெறிந்தார் - ஓமத்
தீயெரி குண்டம் அழித்துவிட்டார்;
மோக்ஷம் இவையுந் தருமோ என்றார் - ஞான
மூர்த்தியின் பாதம் பணிந்து நின்றார். 171
"செய்பிழை யாவும் பொறுத்தருள்வீர்" - எனச்
சேவித்து மன்னனும் தாழ்ந்து நின்றான்;
"ஐயனே நாட்டில் கொலைதவிர்த்து - நாளை
ஆணையும் கட்டுவேன்" என்றுரைத்தான். 172
சேவித்தல் – தரிசித்தல், To obtain sight, as of a great person
வேறு
"மன்னுயி ரெல்லாம் தன்னுயிர் போல
நிலமுழு தாளும் நெடுமுடி யண்ணல்
பிம்பி சாரப் பெரும்பெயர் வேந்தன்,
மெய்யகங் கண்டுஇவ் வையகம் உய்ந்திடத்
திருவருள் புரிந்த செய்தி இதுவாம்;
மெய்யகம் = மெய் (உண்மை, Truth) + அகம் (உள்ளம் Inside)
பாக சாலையில் பக்குவம் செய்தும்
யாக சாலையில் எரிவாய் ஊட்டியும்
பலவா முயிரின் குலம்வே ரறுத்தல்
பழியும் பாவமும் பயக்கும் செயலாம்.
ஆதலின்,
பாக சாலை: சமையற்கூடம், Kitchen, cook-house
பக்குவம் – பக்குவப் படுத்தியும்,
பலவா முயிரின் குலம்வே ரறுத்தல் -
பலவாம் + உயிரின் குலம் வேர் அறுத்தல்
பல உயிர்களின் குலங்களையே வேரோடு அழித்து விடுதல்.
ஊனை உண்பதும் உயிர்க்கொலை புரிவதும்
இந்நாள் முதல்இந் நன்னாட் டெல்லையில்
இல்லா தொழிக; ஈதுஎம் ஆணை!
அருளுடை யோர்க்கே அருளும்
உறுதுணை யாமென்று உளங்கொள் வீரே." 173
உறுதுணை யாமென்று உளங்கொள்வீரே -
பக்கத்துணையாக நிற்பேன் என்று உள்ளத்தில் கொள்வீர்களாக!
வேறு
மந்திர வோலை எழுதுபவர் - அந்த
மன்னவன் ஆணைஇம் மாநிலத்தில்
சந்திர சூரியர் உள்ளளவும் நிலை
தந்திடச் சாசனம் கண்டாரம்ம! 174
மந்திர வோலை – அரச கட்டளை.
மந்திர வோலை எழுதுபவர் – மன்னன் உரைக்கும் கட்டளையை எழுதுபவர்
சாசனம் – அரச கட்டளை, Order, edict, command
பாறைகள்மீது வரைந்துவைத்தார் - வழிப்
பக்கமும் தூணில் பொறித்துவைத்தார்,
ஆறு குளங்கள் துறைகளிலும் - கல்லில்
ஆணை அழியாது எழுதிவைத்தார். 175
அங்காடி வீதியில் கண்டிடலாம் - சந்தி
அம்பலந் தோறுமே கண்டிடலாம்;
கங்கா நதிக்கரை எங்கும்இவ் வாணையைக்
காணா இடமேதும் இல்லைஐயா. 176
அம்பலம் - பலர்கூடும் வெளியிடம், Open space for the use of the public
வேறு
அந்நாள் முதலாம் பின்னா ளெல்லாம்
மாதமும் மாரி வானம் பொழிந்தது;
நாடு செழித்தது; நகரம் சிறந்தது;
உண்மை யறிவும் உதய மாயது;
செம்மை வளர்ந்தது; தீமை தேய்ந்தது;
புத்தன் உரையைப் பொன்னுரையாக
நித்தம் நித்தம் நினைத்த பயனாய்க்
கொல்லா விரதம் குவலயத்து
எல்லா உயிர்க்கும் இன்பளித் ததுவே! 177
* * * * * *
While the Master spake
Blew down the mount the dust of pattering feet,
White goats and black sheep winding slow their way,
With many a lingering nibble at the tufts,
And wanderings from the path, where water gleamed
Or wild figs hung. But always as they strayed
The herdsman cried, or slung his sling, and kept
The silly crowd still moving to the plain.
A ewe with couplets in the flock there was.
Some hurt had lamed one lamb, which toiled behind
Bleeding, while in the front its fellow skipped,
And the vexed dam hither and thither ran,
Fearful to lose this little one or that;
Which when our Lord did mark, full tenderly
He took the limping lamb upon his neck,
Saying: “Poor woolly mother, be at peace!
Whither thou goest I will bear thy care;
’Twere all as good to ease one beast of grief
As sit and watch the sorrows of the world
In yonder caverns with the priests who pray.”
“But,” spake he to the herdsmen, “wherefore, friends,
Drive ye the flocks adown under high noon,
Since ’tis at evening that men fold their sheep?”
And answer gave the peasants: “We are sent
To fetch a sacrifice of goats five-score,
And five-score sheep, the which our Lord the King
Slayeth this night in worship of his gods.”
Then said the Master, “I will also go.”
So paced he patiently, bearing the lamb
Beside the herdsmen in the dust and sun,
The wistful ewe low-bleating at his feet.
So entered they the city side by side,
The herdsmen and the Prince, what time the sun
Gilded slow Sona’s distant stream, and threw
Long shadows down the street and through the gate
Where the King’s men kept watch. But when they saw
Our Lord bearing the lamp, the guards stood back,
The market-people drew their wains aside,
In the bazaar buyers and sellers stayed
The war of tongues to gaze on that mild face;
The smith, with lifted hammer in his hand,
Forgot to strike; the weaver left his web,
The scribe his scroll, the money-changer lost
His count of cowries; from the unwatched rice
Shiva’s white bull fed free; the wasted milk
Ran o’er the lota
while the milkers watched
The passage of our Lord moving so meek,
With yet so beautiful a majesty.
But most the women gathering in the doors
Asked: “Who is this that brings the sacrifice,
So graceful and peace-giving as he goes?
What is his caste? whence hath he eyes so sweet?
Can he be Sàkra or the Devaraj?”
And others said, “It is the holy man
Who dwelleth with the Rishis on the hill.”
But the Lord paced, in meditation lost,
Thinking, “Alas! for all my sheep which have
No shepherd; wandering in the night with none
To guide them; bleating blindly towards the knife
Of Death, as these dumb beasts which are their kin.”
Then some one told the King, “There cometh here
A holy hermit, bringing down the flock
Which thou didst bid to crown the sacrifice.”
The King stood in his hall of offering.
On either hand the white-robed Brahmans ranged
Muttered their mantras, feeding still the fire
Which roared upon the midmost altar. There
From scented woods flickered bright tongues of flame,
Hissing and curling as they licked the gifts
Of ghee and spices and the soma juice,
The joy of Indra. Round about the pile
A slow, thick, scarlet streamlet smoked and ran,
Sucked by the sand, but ever rolling down,
The blood of bleating victims. One such lay,
A spotted goat, long-horned, its head bound back
With munja grass; at its stretched throat the knife
Pressed by a priest, who murmured: “This, dread gods,
Of many yajnas cometh as the crown
From Bimbisara: take ye joy to see
The spurted blood, and pleasure in the scent
Of rich flesh roasting ’mid the fragrant flames;
Let the King’s sins be laid upon this goat,
And let the fire consume them burning it,
For now I strike.”
But Buddha softly said,
“Let him not strike, great King! and therewith loosed
The victim’s bonds, none staying him, so great
His presence was. Then, craving leave, he spake
Of life, which all can take but none can give,
Life, which all creatures love and strive to keep,
Wonderful, dear, and pleasant unto each,
Even to the meanest; yea, a boon to all
Where pity is, for pity makes the world
Soft to the weak and noble for the strong.
Unto the dumb lips of his flock he lent
Sad pleading words, showing how man, who prays
For mercy to the gods, is merciless,
Being as god to these; albeit all life
Is linked and kin, and what we slay have given
Meek tribute of the milk and wool, and set
Fast trust upon the hands which murder them.
Also he spake of what the holy books
Do surely teach, how that at death some sink
To bird and beast, and these rise up to man
In wandering of the spark which grows purged flame.
So were the sacrifice new sin, if so
The fated passage of a soul be stayed.
Nor, spake he, shall one wash his spirit clean
By blood; nor gladden gods, being good, with blood;
Nor bribe them, being evil; nay, nor lay
Upon the brow of innocent bound beasts
One hair’s weight of that answer all must give
For all things done amiss or wrongfully,
Alone, each for himself, reckoning with that
The fixed arithmic of the universe,
Which meteth good for good and ill for ill,
Measure for measure, unto deeds, words, thoughts;
Watchful, aware, implacable, unmoved;
Making all futures fruits of all the pasts.
Thus spake he, breathing words so piteous,
With such high lordliness of ruth and right,
The priests drew down their garments o’er the hands
Crimsoned with slaughter, and the King came near,
Standing with clasped palms reverencing Buddha;
While still our Lord went on, teaching how fair
This earth were if all living things be linked
In friendliness, and common use of foods
Bloodless and pure; the golden grain, bright fruits,
Sweet herbs which grow for all, the waters wan,
Sufficient drinks and meats. Which when these heard,
The might of gentleness so conquered them,
The priests themselves scattered their altar-flames
And flung away the steel of sacrifice;
And through the land next day passed a decree
Proclaimed by criers, and in this wise graved
On rock and column: “Thus the king’s will is:
There hath been slauhter for the sacrifice,
And slaying for the meat, but henceforth none
Shall spill the blood of life nor taste of flesh,
Seeing that knowledge grows, and life is one,
And mercy cometh to the merciful.”
So ran the edict, and from those days forth
Sweet peace hath spread between all living kind,
Man and the beasts which serve him, and the birds,
On all those banks of Gunga where our Lord
Taught with his saintly pity and soft speech.
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the Fifth