பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - ஆனாபான சத்தி

பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில்

செல்வி யசோதரா நடராசா

அநுபந்தம் 1: சுவாசித்தலின்மேல் ஒருமுகப்படுத்தல்

ஆனாபான சத்தி

Concentration on Respiration Anapana Sati

ஆனாபான சத்தி சுவாசித்தலின்மேல் கவனம் செலுத்தல் என்று அர்த்தப்படும். ஆன என்பது மூச்சை உள்ளே எடுப்பது. அபான என்பது மூச்சை வெளியே விடுவதைக் குறிக்கும்.

மூச்சுவிடும் செய்முறையில், ஒருமுகப்படுத்தல், ஒரு மனநிலைப்படுத்தலுக்கும், இறுதியில் பரிசுத்தம் அல்லது அரகத்து நிலையைப் பெற உதவும் நுண்புலனுக்கும் இட்டுச் செல்கிறது. ஞானம் பெறுமுன் புத்தர் சுவாசித்தலின்மேல் ஒரு முகப்படுத்தலை மேற்கொண்டார். இத்தீங்கற்ற ஒரு முகப்படுத்தல் எச்சமயத்தோராலும் மேற்கொள்ளப் படலாம்.

ஒரு வசதியான நிலையில் அமர்ந்து, உடம்பை நிமிர்த்திக் கொள். வலது கையை இடது கையின்மேல் வை. கண்கள் முற்றாக அல்லது பாதி மூடிய நிலையில் இருக்கலாம்.

கிழக்கத்தியர் பொதுவாகக் கால்களை மடக்கி, உடம்பை நிமிர்த்தி வைத்து உட்காருவர். அவர்கள் வலது பாதத்தை இடது தொடையிலும், இடது பாதத்தை வலது தொடையிலும் வைத்து அமருவார்கள். இதுதான் முழுநிலை எனப்படும். சிலசமயம் அவர்கள் பாதிநிலையிலும் அதாவது வலது அல்லது இடது பாதத்தைமட்டும் மற்றத் தொடையில் வைத்தும் உட்காருவர்.

முக்கோண நிலையை மேற்கொள்ளும்போது உடம்பு சரியான சமநிலையிலிருக்கும். கால் மடக்கிய நிலையை மிகக் கஸ்டமெனக் காண்பவர் ஒரு நாற்காலியில் அல்லது வேறு ஒரு ஆசனத்தில் காலைத் தரையில் வைக்கக்கூடிய உயரத்தில் உட்காரலாம். இலேசாகவும், வசதியாகவுமுள்ள எந்நிலையையும் மேற்கொள்ளலாம். தலை குனிந்திருக்கக்கூடாது. கழுத்து, நாசி, நாபியிலிருந்து வரும் செங்கோட்டில் இருக்கத்தக்கதாக நிமிர்த்தப்பட வேண்டும்.

புத்தர்கள் பொதுவாகப் பத்மாசன நிலையையே மேற்கொள்கிறார்கள். அவர்கள் பாதி மூடிய விழிகளோடு மூன்றரை அடிக்கு மேற்படாத தூரத்தைமட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பர். இப்பயிற்சிக்குமுன் சுவாசப்பையிலிருக்கும் அசுத்தக் காற்றை வாயின்மூலம் மெல்ல வெளியேற்றியபின் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

இப்போது நாசித் துவாரங்களின் மூலம் சாதாரணமாக, வலு இன்றியும் அழுத்தம் இன்றியும் மூச்சை உட்கொள்ள வேண்டும். மனதில் ஒன்று என எண்ணுக. வெளிமூச்சு விட்டு இரண்டு என எண்ணுக. உள்மூச்சையெடுத்து மூன்று என எண்ணுக. இப்படியாக வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பத்துவரை எண்ணுக. இப்படிச் செ ய்யும்போது ஒருவனின் மனம் அலையக்கூடும். ஆனால் அதன் காரணமாக மனந் தளர வேண்டாம். படிப்படியாக ஒருவன் பத்து எண்களடங்கிய ஐந்து கோவைகளுக்கு அதிகரிக்கலாம்.

பிறகு ஒருவன் உள்மூச்சையெடுத்துச் சிறிது தாமதித்து, எண்ணாமல் உள்மூச்சில் மட்டும் கவனம் செலுத்தலாம். வெளிமூச்சை விட்டு ஒரு கணம் தாமதிக்கவும். இப்படியாகச் சுவாசித்தலில் ஒருமுகப்பட்டு உள்மூச்சையும் வெளிமூச்சையும் மேற்கொள்க. சிலர் எண்ணுவதை விரும்புகின்றனர். சிலர் விரும்புவதில்லை. ஒருமுகப்படுத்தல்தான் முக்கியமே தவிர எண்ணிக்கை அல்ல. அது துணையானது.

இவ்வொருமுகப்படுத்தலைக் செய்யும்போது ஒருவன் மிகுந்த அமைதியையும் மன-உடல் பாரமின்மையையும் உணர்கின்றான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இதை மேற்கொண்டபின், அவன் இவ்வுடல் வெறும் மூச்சில் மட்டும்தங்கியிருப்பதையும், மூச்சு நிற்கும்போது உடல் மடிந்து போகும் என்பதையும் உணருவான். அவன் நிலையற்ற தன்மையை முற்றாக உணர்கிறான். எங்கு மாற்றமிருக்கிறதோ அங்கு ஒரு நிலையான பொருளோ அல்லது ஒரு இறவாத ஆன்மாவோ இருக்க முடியாது. பின்னர் நுண்புலன், அரகத்து நிலைக்கு வளர்க்கப்படலாம்.

இச் சுவாசித்தலின் மேல் ஒருமுகப்படுத்துவது ஒரு மனநிலையைப் பெறுவதற்காக மட்டும்மன்றித் துன்பத்திலிருந்து விடுதலையளிக்க உதவும் நுண்புலனைப் பெறுவதற்குமாகும். சில உரையாடல்களில் இந்த எளிய தீங்கற்ற சுவாசச் செய்முறை பின்வருமாறு விவரிக்கப் பட்டுள்ளது:

"கவனத்தோடு அவன் உள்மூச்சு எடுக்கிறான், கவனத்தோடு அவன் வெளிமூச்சு விடுகிறான்.

1. 'நான் நீண்ட உள்மூச்சையெடுக்கிறேன்,' என்பதை நீண்ட உள்மூச்சு எடுக்கும்போது அறிகிறான். நீண்ட வெளிமூச்சை விடும்போது அவன், 'நான் நீண்ட வெளிமூச்சை விடுகிறேன்,' என்பதை அறிகிறான்.

2. 'நான் குறுகிய உள்மூச்சையெடுக்கிறேன்,' என்பதைக் குறுகிய உள்மூச்சு எடுக்கும்போது அறிகிறான். குறுகிய வெளிமூச்சு விடும்போது அவன், 'நான் குறுகிய வெளிமூச்சை விடுகிறேன்,' என்பதை அறிகிறான்.

3. முழுச் சுவாசச் செய்முறையைத் (ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு) தெளிவாக உணர்ந்தறிந்து, 'நான் உள்மூச்சு எடுக்கிறேன்'; இப்படியாக அவன் தன்னைத்தானே பயிற்றுவிக்கிறான். தெளிவாக முழுமூச்சுச் செய்முறையை உணர்ந்தறிந்து, 'நான் வெளிமூச்சு விடுகிறேன்'; இப்படியாக அவன் தன்னைத்தானே பயிற்றுவிக்கிறான்.

4. சுவாசத்தை மட்டுப்படுத்தி, 'நான் உள்மூச்சு எடுக்கிறேன்'; இப்படியாக அவன் தன்னைத்தானே பயிற்றுவிக்கிறான். சுவாசத்தை மட்டுப்படுத்தி, 'நான் வெளிமூச்சு விடுகிறேன்'; இப்படியாக அவன் தன்னைத்தானே பயிற்றுவிக்கிறான்."

* * * * *