பௌத்தக் கதைகள் - கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி
பௌத்தக் கதைகள்
மயிலை சீனி. வேங்கடசாமி
கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி
பகவன் புத்தருடைய முக்கிய சீடர்களில் மகா கச்சானரும் ஒருவர். மகா கச்சானர் அவந்தி நாட்டிலே கூரராக நகரத்திலே சென்று அந்நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையின்மேல் தம்முடைய சீடர்களுடன் தங்கியிருந்தார். அவர் நாள்தோறும் அறவுரை கூறி விரிவுரை ஆற்றுவது வழக்கம். இவர் கூறும் நல்லுரையைக் கேட்பதற்காக நகர மக்கள் இவரிடம் திரண்டு வந்தார்கள்.
மகா கச்சான மகாதேரர் அருளிச்செய்யும் அறவுரைகளை நாள்தோறும் விடாமல் கேட்டு வந்தவர்களில் ஒரு வாலிபனும் ஒருவன். இவன் பெயர் சோணன் குட்டிக் கண்ணன் என்பது. செல்வம் கொழித்த குடும்பத்திலே பிறந்தவன். காத்தியானி என்னும் அம்மையாரின் மகன். முனிவரின் அறவுரைகளைக் கேட்டு வந்த இவனுக்குத் துறவியாக வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, மகாகச்சான மகாதேரரிடம் சென்று தான் துறவியாக விரும்புவதாகவும் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படியும் அவரிடம் கூறினான். செல்வஞ் செழித்த குடும்பத்திலே பிறந்து சுகவாழ்க்கை வாழ்ந்து பழகிய இவனுடைய நிலையையும், இளமை வயதையும் அறிந்த மகாகச்சானர், இவன் வேண்டுகோளை மறுத்தார். உற்றார் உறவினரைவிட்டுத் தனியே இருப்பதும், தன்னந்தனியே இரந்துண்பதும், தனியே இருந்து மனத்தை அடக்கித் துறவு வாழ்க்கையைச் செலுத்துவதும் கடினமானது என்பதை அவனுக்கு விளக்கிக் கூறினார். சோணன் குட்டிக் கண்ணன் விடவில்லை. மீண்டும் சென்று தனக்குத் துறவு நிலையையளிக்க வேண்டும் என்று வேண்டினான். மீண்டும் அவர் மறுத்தார். மற்றும் ஒருமுறை வேண்டினான். அப்போதும் மறுத்துவிட்டார்.
குட்டிக் கண்ணன் இளைஞனான போதிலும் உறுதியான உள்ளம் உடையவன். ஆகவே எப்படியாவது பௌத்த பிக்கு ஆகவேண்டும் என்று உறுதி செய்து கொண்டான். அதனால், மறுபடியும் அவரிடம் சென்று கட்டாயம் தன்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி வேண்டினான். இவனுடைய மனவுறுயைக் கண்ட தேரர், ஒருவாறு இணங்கி, இவனைச் சீடனாக்கிக் கொள்ளுவதாகவும், சில ஆண்டு கழித்துத் துறவறத்தில் சேர்ப்பதாகவும் கூறி இவனைச் சீடனாக்கிக் கொண்டார். இவன் மூன்று ஆண்டு அவரிடம் சீடனாக இருந்தான். இந்த மூன்று ஆண்டுகள் புத்தருடைய உபதேசங்களில் முக்கியமானவைகளைப் பாராயணம் செய்து கொண்டதோடு அவற்றின் கருத்தையும் தெள்ளத்தெளிய ஓதி உணர்ந்தான். அன்றியும் அறவுரைகளை ஓதி விரிவுரை செய்யவும் கற்றுக் கொண்டான்.
இவ்வாறு பௌத்த மறைகளை ஓதியுணர்ந்த குட்டிக் கண்ணர், மூன்றாண்டுக்குப் பின்னர், ஆசிரியரிடம் விடைபெற்றுப் பகவன் புத்தரை வணங்கச் சென்றார். அவந்தி நாட்டைக் கடந்து வெகுதூரத்திற்கப்பாலுள்ள ஜேதவனத்தை அடைந்தார். அங்கு பகவன் புத்தர் எழுந்தருளியிருந்த கந்தகுடியில் சென்று புத்தர் பெருமானைக் கண்டு அடிவணங்கித் தொழுதார். பகவர் இவரை அன்புடன் வரவேற்றார். குட்டிக் கண்ணர் கந்தகுடியிலே தங்கினார். வைகறைப் பொழுதில் விழித்தெழுந்து, பகவர் உத்தரவு பெற்றுத் தான் ஓதியுணர்ந்த பௌத்த மறையை நன்கு ஓதினார். இவர் ஓதிய முறையையும் தெளிவையும் கருத்தூன்றிக் கேட்டருளிய பகவன் புத்தர், இவரைப் பெரிதும் புகழ்ந்து வியந்து மகிழ்ந்தார். அங்கிருந்த மற்றத் தேரர்களும் புகழ்ந்து மெச்சினார்கள். இதனால், இவருடைய புகழ் நாடெங்கும் பரவிற்று. அவந்தி நாட்டிலே கூரராக நகரத்திலே இருந்த இவருடைய அன்னையார் காத்தியானி அம்மையார் காதிலும் இவருடைய புகழ் எட்டிற்று. "என் மகன் இந்த ஊருக்கு வருவானானால், அவனிடம் அறவுரை கேட்கவேண்டும்," என்று அம்மையார் தமக்குள் கூறிக்கொண்டார்.
சோணன் குட்டிக் கண்ணர், சில நாட்கள் பகவன் புத்தரிடம் தங்கியிருந்து, அவர் திருக்கைகளினாலே சீவரம் பெற்றுத் துறவியானார். பின்னர், மீண்டும் அவந்தி நாட்டிற்கு வந்து தமது ஆசிரியரான மகா கச்சானரிடம் தங்கியிருந்தார். இருவரும் வழக்கம் போல, நகரத்தில் சென்று இல்லங்களில் உணவுப் பிச்சை ஏற்று வந்தனர். ஒருநாள் காத்தியானி அம்மையார் இல்லத்திற் சென்று பிச்சை ஏற்றனர். இவர்களுக்கு அம்மையார் உணவளித்து பிறகு, தாம் நெடுநாளாகக் கருதியிருந்த எண்ணத்தைத் தமது மகனான சோணன் குட்டிக் கண்ணருக்குத் தெரிவித்தார். அதாவது, தனக்கு அறவுரை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவரும் அதற்கு உடன்பட்டார்.
அந்நகரத்தின் முக்கியமான ஒரு இடத்திலே பலரும் வந்து அறவுரை கேட்பதற்குக் காத்தியானி அம்மையார் ஏற்பாடு செய்தார். சோணன் குட்டிக் கண்ணர் அந்த இடத்தில் சென்று நாள்தோறும் அறவுரை கூறி விரிவுரை வழங்கினார். மக்கள் திரண்டு வந்து கேட்டு மகிழ்ந்தார்கள். காத்தியானி அம்மையாரும், தமது மாளிகையில் உள்ள ஏவலாளர், பணிவிடையாளர் எல்லோரும் அறவுரை கேட்பதற்காக விடுமுறையளித்துத் தாமும் சென்று அறவுரை கேட்டார். அவர் மாளிகையில் ஒரே ஒரு வேலைக்காரி மட்டும் தங்கியிருந்தாள்.
காத்தியானி அம்மையார் பெருஞ்செல்வம் உள்ள பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினோமல்லவா? அக்காலத்தில் அந்த நகரத்திலே கொள்ளையடிக்கும் கள்ளர் இருந்தனர். அவர்கள் காத்தியானி வீட்டுச் செல்வத்தின்மேல் நெடுங்காலமாகக் கண் வைத்திருந்தார்கள். எப்போது சமயம் வாய்க்கும் என்று அவர்கள் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அம்மையார் வேலைக்காரர்களுடன் அறவுரை கேட்கும் செய்தியை அறிந்து, இதுவே தகுந்த சமயம் என்று தெரிந்து அம்மையார் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றார்கள். கன்னம் வைத்து வீட்டிற்குள் புகுந்து பொருள்களையும், பணங்காசுகளையும் கொள்ளையிடத் தொடங்கினார்கள். கள்வர் தலைவன், அம்மையார் அறவுரை கேட்கும் கூட்டத்திற்கு வந்து ஒருபுறமாக இருந்து அம்மையாரைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். தன் வீட்டைக் கள்ளர் கொள்ளையிடுவதை அறிந்து, அம்மையார் கள்ளரைப் பிடிக்க முயற்சி செய்தால், அப்போது அவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவதற்காகத் தான் கள்ளர் தலைவன் அங்கு சென்றிருந்தான்.
வீட்டிற்குள் புகுந்த கள்ளர்கள் செம்பு நாணயங்கள் வைத்திருந்த அறைக்குள் புகுந்து அதை வாரி மூட்டை கட்டினார்கள். கள்ளர் புகுந்து கொள்ளையிடுவதைக் கண்ட ஊழியப் பெண், அம்மையாரிடம் விரைந்து வந்து செய்தியைச் சொன்னாள். இதனைக் கேட்ட அம்மையார், "நல்லது, அதைப்பற்றிக் கவலையில்லை," என்று கூறிச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார். வீட்டிற்குத் திரும்பிச்சென்ற ஊழியப்பெண், இப்போது கள்ளர் வெள்ளி நாணயங்கள் வைத்துள்ள அறையில் புகுந்து வெள்ளிக் காசுகளை மூட்டை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஆத்திரங் கொண்டாள். ஆகவே, அவள் மறுபடியும் ஓடோடிச் சென்று அம்மையாரிடத்தில் வெள்ளிக் காசுகள் பறிபோவதைக் கூறினாள். அம்மையார், "சரி போகட்டும். அதைப் பற்றிக்கவலைவேண்டாம் நீ போ," என்று கூறி மீண்டும் சொற்பொழிவைக் கருத்தூன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். மிக வருத்தத்தோடு வீடு திரும்பிய வேலைக்காரி, கள்ளர்கள் வெள்ளிக்காசுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, இப்போது பொற்காசு உள்ள அறைக்குள் புகுந்து தங்க நாணயங்களை மூட்டை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டாள். கண்டு மனம் பதறி, மறுபடியும் ஓடோடி வந்து அம்மையாரிடம் பொற்குவியல் கொள்ளை போவதைக் கூறினாள். அப்போதும் அம்மையார் அறவுரையிலே கருத்தூன்றியிருந்தார். அவர் அவளைப் பார்த்து, "போனால் போகட்டும். இப்போது தொந்தரவு செய்யாதே," என்று கூறி முன்போலவே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஊழியப் பெண் அடிக்கடி ஓடிவந்து அம்மையாரிடம் கூறியதையும், அம்மையார் அவளிடம் கூறியதையும் கள்ளர் தலைவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். மூன்று தடவை வேலைக்காரிவந்து செம்பு, வெள்ளி, பொன் நாணயக் குவியல்கள் கொள்ளை போவதைக் கூறியபோதும், அம்மையார் அதனைப் பொருட்படுத்தாமல், அறவுரையில் கருத்தூன்றியிருப்பதைக் கண்டு அவனுக்கு பெருமதிப்பு உண்டாயிற்று. அவன் உள்ளத்திலே நல்லறிவு தோன்றியது. "இவ்வளவு நல்லவருடைய பொருளைக் கொள்ளையடித்தால் என் தலைமேலே இடி விழும்! இவர் பொருளைத் தொடுவது பெரும்பாவம்!" என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான். உடனே, அவன் அவ்விடத்தைவிட்டு விரைந்து நடந்தான். அம்மையார் வீட்டையடைந்தான். கள்ளர்கள் அப்போது கொள்ளையடித்த பொருட்களை மூட்டை கட்டி, அவற்றை வண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மூட்டைகளை இறக்கி வீட்டிற்குள்ளேயே வைத்துவிடும்படி அவன் அவர்களுக்குச் சொன்னான். அதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். ஆனால், ஒன்றும் பேசாமல் தம் தலைவன் கட்டளைப்படியே மூட்டைகளை வீட்டிற்குள் கொண்டுபோய் வைத்தார்கள். மூட்டைகளை இறக்கியானவுடன் அவர்களை அழைத்துக் கொண்டு அம்மையார் இருந்த கூட்டத்திற்கு வந்தான். வந்து ஒருபுறமாக அமர்ந்து அறவுரைகளைக் கேட்டான்.
சொற்பொழிவு முடிந்தது. எல்லோரும் எழுந்து சென்றனர். காத்தியானி அம்மையாரும் இல்லத்திற்குப் புறப்பட்டார். கள்ளர் தலைவன் அம்மையார் எதிரில் சென்று அவரை வணங்கிக் கும்பிட்டான். தான் அம்மையார் வீட்டில் கொள்ளையடித்ததையும் அதை அறிந்தும் அம்மையார் அதைப் பொருட்படுத்தாமல் அறவுரையிலேயே மனம் செலுத்தியிருந்ததையும் சொல்லி, இவ்வளவு நல்லவருடைய செல்வத்தைக் கொள்ளையிடத் துணிந்ததற்காகத் தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டான். அம்மையார் மன்னித்தார்.
கள்ளர் தலைவன் அம்மையாரை விடவில்லை. "நான் பிக்குச் சங்கத்தில் சேரப் போகிறேன். இன்றோடு என் கொள்ளைத் தொழிலை விட்டு விட்டேன். இவ்வாழ்க்கையில் இனி எனக்கு ஆசையில்லை. துறவு பூண்டு, மிகுந்திருக்கும் வாழ்நாளை நல்வழியில் செலுத்த எண்ணங்கொண்டேன். தங்கள் குமாரரான குட்டிக் கண்ணரிடம் எனக்காகப் பரிந்து பேசி என்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி சொல்லவேண்டும்," என்று வேண்டினான். இதைக் கேட்ட அம்மையார் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அம்மையார், குட்டிக் கண்ணரிடம் இச்செய்திகளை யெல்லாம் கூறிக் கள்ளனைச் சீடனாக்கிக் கொள்ளும்படி பரிந்து பேசினார்.
கள்ளனுடைய மனம் உண்மையிலேயே தூய்மையடைந்து செம்மையாக இருப்பதை அறிந்து குட்டிக் கண்ணர் அவனைத் தன் சீடனாக்கிக் கொண்டார். அவனைச் சேர்ந்த மற்றக் கள்ளர்களும் துறவு பூண்டனர்.
*********