walpola_satipatthana

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

சதிபட்டானம்

விழிப்பு நிலையில் (கடைப்பிடி) இருத்தல்

(சதிபட்டான சுத்த)

(சுருக்கம்)

Satipatthana Sutta (Abridged)

இவ்வாறு கேள்வியுற்றேன். குரு மக்களின் சந்தைப்பட்டினமான கம்மாஸ்ஸதம்ம என்ற இடத்தில் பகவான் ஒருமுறை குரு மக்களிடையே வாழ்ந்தார். அங்கே பகவான் பிக்குகளை விளித்துப் பின்வருமாறு கூறினார். 'பிக்குகளே, மக்கள் தூய்மை பெறவும், அவலக்கவலைகளை ஒழிப்பதற்கும், துக்கத்தையும், துன்பத்தையும் அழிப்பதற்கும், சரியான வழியை அடைவதற்கும், நிர்வாண சுகத்தை அடைவதற்கும் இதுவே ஒரே வழி. அதாவது சதிபட்டானம் நான்கு. இந்த நான்கு எவை? இங்கே பிக்கு ஒருவர், ஆர்வத்துடன் பொருள்களைத் தெளிவாக அறிந்து, கடைப்பிடியோடு, உடலின் சேட்டைகளை, உடல்மீது விருப்போ வெறுப்போ இன்றி அவதானித்துக் கொண்டிருக்க வேண்டும்.

வேதனை (உணர்ச்சி) உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிருத்தல்.

மன உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி, சித்தவிருத்திகளை அவதானித்துக் கொண்டிருத்தல்,

மானசிகப் பொருள்கள் மீது விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிருத்தல். இருந்து கொண்டு (அட்டணைக்கால் இட்டு) உடலை நேராகவும் மனத்தை அலையவிடாமலும் வைத்திருக்கிறான்.

எப்போழுதும் விழிப்பாயிருந்துகொண்டு அவன் மூச்சை உள்ளே வாங்கி (பூரகம்) அவ்வாறே விழிப்பாயிருந்து கொண்டு (அதாவது அந்த மூச்சையே அவதானித்துக் கொண்டு) மூச்சை வெளியே விட வேண்டும் (ரேசகம்). நீண்ட மூச்சு எடுக்கும் போது அவன் 'நான் நீண்ட மூச்சு எடுக்கிறேன்' என்று அறிந்துகொள்கிறான். நீண்ட மூச்சை வெளியே விடும்போது 'நான் நீண்ட மூச்சை வெளியேவிடுகிறேன்' என்று உணர்ந்து கொள்கிறான். குறுகிய மூச்சை உள்ளே எடுக்கும்போது 'நான் குறுகிய மூச்சை உள்ளே இழுக்கிறேன்' என்று அறிந்து கொள்கிறான். குறுகிய மூச்சை வெளியே விடும்போது, 'நான் குறுகிய மூச்சை வெளியே விடுகிறேன்' என்று உணர்ந்து கொள்கிறான்.

'சுவாச காயம் முழுவதையும் உணர்ந்து கொண்டு நான் உள்மூச்சு வாங்குகிறேன்' என்று ஒருவன் தன்னைப் பழக்கிக் கொள்ளுகிறான். 'சுவாச காயம் முழுவதையும் உணர்ந்து கொண்டு நான் வெளிமூச்சு விடுவேன்' எனப் பழக்கிக் கொள்வான். 'சுவாசகாயம் முழுவதன் சேட்டிதங்களையும் அமைதிப்படுத்திக் கொண்டு நான் உள்மூச்சு வாங்குகிறேன்' என அவன் பழக்கிக் கொள்ளுகிறான். 'சுவாச காயம் முழுவதன் சேட்டிதங்களையும் அமைதிப்படுத்திக் கொண்டு நான் வெளிமூச்சு விடுகிறேன்' என்று அவன் பழக்கிக் கொள்வான்.

இவ்வாறு காயத்தின் அகச் சேட்டிதங்களையும், புறச்சேட்டிதங்களையும், இரண்டையும் இவ்வாறு அவதானித்துக் கொண்டு வாழ்கிறான். காயத்திலுள்ள சிருட்டிக் காரணங்களையும் அழிவுக் காரணங்களையும் இரண்டையும் அவதானித்துக்கொண்டு வாழ்கிறான். அல்லது இந்த உடல் இருக்கிறது. நான் அதில் தொடர்பற்று இருக்கிறேன், உலகில் எதிலும் எனக்குப் பற்றில்லை என்பதை அறியவும், உணர்ந்து கொள்ளவும், போதிய அளவு அவனுடைய விழிப்பு ஸ்தாபிக்கபடுகிறது. இவ்வாறு பிக்குகளே பிக்கு ஒருவர் உடலின் சேட்டிதங்களை அவதானித்து கொண்டு வாழ்கிறான்.

[2. உடலின் நிலைகோடல்கள்]

மேலும் பிக்குகளே, ஒரு பிக்கு போகும்போது 'நான் போகிறேன்' என்பதை அறிகிறான். அவன் நிற்கும் போது 'நான் நிற்கிறேன்' என அறிகிறான். அவன் இருக்கும் போது, 'நான் இருக்கிறேன்' என அறிகிறான். கிடக்கும் போது 'நான் கிடக்கிறேன்' என அறிகிறான். இவ்வாறு அவனுடைய உடலின் நிலையை அறிந்து கொள்கிறான்.

இவ்வாறு உள்ளும் புறமும் உடலின் நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டு வாழ்கிறான்.

[3. முழு அவதானம்]

மேலும் பிக்குகளே, பிக்குவானவன் முன்னே செல்லும்போதும், பின்னே செல்லும்போதும், நேராகப் பார்க்கும்போதும், பக்கத்துக்குப் பார்க்கும் போதும், குனியும்போதும், நிமிரும் போதும், சீவரம் அணியும்போதும், பாத்திரம் எடுத்துச் செல்லும்போதும், உண்ணும் போதும், குடிக்கும் போதும், சப்பும்போதும், சுவைக்கும்போதும், மலசலவிமோசனஞ் செய்யும்போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், நிற்கும் போதும், நித்திரை செய்யும் போதும், விழித்திருக்கும் போதும், பேசும்போதும், பேசாதிருக்கும்போதும், இவை எல்லா விஷயங்களிலும் அவன் முழு அவதானமுடையனாயிருக்கிறான். இவ்வாறு அவன் உடலின் நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டு வாழ்கிறான்.

[4. உடலின் இழிதகைமை]

மேலும் பிக்குகளே, தோலினால் போர்த்துப் பலவகையான அழுக்கை உள்ளடக்கிய இந்தக் காயத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். உள்ளங்காலிலிருந்து மேலே, மயிரிலிருந்து கீழே உள்ளவற்றை பின்வருமாறு எண்ணுகிறான். இந்த உடலிலே தலைமயிர் உண்டு, உரோமமுண்டு, நகம், பல், தோல், மாமிசம், நரம்பு, எலும்பு, எலும்புமச்சை, நீரீரல், இருதயம், ஈரல், உந்து, சவ்வு, மண்ணீரல், சுவாசப்பை, குடல், குடல்தாங்கி, வயிறு, மலம், பித்தம், சளி, சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர், நெய், எச்சில், மூக்குச்சளி, உயவுநீர்மம், மூத்திரம் என்பன உண்டு.

இரட்டைவாயுடைய சாக்கு நிறைய மலை நெல்லு, நெல்லு, பயறு, அவரை, எள்ளு, அரிசி இருக்கிறது. நல்ல கண்பார்வையுடைய ஒருவன் அந்தச் சாக்கைத் திறந்து பின்வருமாறு நினைக்கிறான். இது மலைநெல்லு, இது நெல்லு, இது பயறு, இது அவரை, இது எள்ளு, இது அரிசி என்று. அவ்வாறே பிக்கு ஒருவன் பலவகையான அழுக்குகள் நிறைந்த தோலினால் மூடிய இந்தக் காயத்தைப் பற்றி உள்ளங்காலிலிருந்து மேலேயும் தலை மயிரிலிருந்து கீழேயும், 'இந்த உடலில் தலைமயிரும் உடல் ரோமமும்... நகமும், மூத்திரமும் உண்டு என நினைக்கிறான்.

இவ்வாறு உடலை அவதானித்துக் கொண்டு வாழ்கிறான்.

[5. பூதங்கள்]

மேலும் பிக்குகளே, ஒரு பிக்குவானவர் இந்த உடல் பூதங்களினால் அமைந்த முறையை 'இந்தக் காயம் மண், நீர், அனல், காற்று என்ற பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது' என எண்ணுகிறான்.

சாதுரியமான இறைச்சிக் கடைக்காரனோ அவனுடைய உதவியாளோ பசுவை வெட்டி அதை வெவ்வேறு அங்கமாகப் பிரித்து, பெருந்தெருவின் சந்தியில் வைத்துக் கொண்டிருப்பது போல, பிக்குவானவர் இந்த உடலின் அங்கங்களைப் பிரித்துப் பிரித்துப் சிந்திக்கிறார். அது எவ்வாறு பூதங்களால் ஆக்கப்பட்ட தென்பதைச் சிந்திக்கிறார். 'இந்த உடலிலே மண், நீர், அனல், காற்று என்ற பூதங்களுண்டு'.

இவ்வாறு உடலை அவதானித்துக் கொண்டு அவர் வாழ்கிறார்.

[6. ஒன்பது சுடுகாட்டு விஷயங்கள்]

1. மேலும் பிக்குகளே, இடுகாட்டிலே இரண்டு மூன்று நாளுக்கு முன் இறந்த பிணம் பொருமி, நீலம் பாய்ந்து அழுகிக் கொண்டிருப்பதைக் காணும் பிக்கு, தன்னுடைய உடலோடு இதனை ஒப்பிட்டு, 'உண்மையிலேயே என்னுடைய உடலும் இத்தகையதே, அதுவும் இந்த நிலையை அடையும், இதிலிருந்து தப்ப மாட்டாது' என்று நினைக்கிறான்.

இவ்வாறு உடலை அவதானித்துக் கொண்டு வாழ்வான்.

2. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் எறியப்பட்ட பிணத்தை காகம், கழுகு, பருந்து, நாய், நரி என்பன தின்பதையும், புழுக்கள் தின்பதையும் கண்டு தன் உடலோடு ஒப்பிட்டு 'உண்மையில் என்னுடலும் இத்தன்மையதே, இந்த நிலையையே அடையும், இதிலிருந்து தப்ப முடியாது' என்று நினைப்பான்.

இவ்வாறு இந்த உடலை அவதானித்துக் கொண்டே இருப்பான்.

3. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் சிறிது மாமிசமும் இரத்தமும் சேர்ந்த எலும்புகூடாகத் தசை நாண் இணைந்து காணப்படுவதைப் பார்ப்பான் ....

4. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் எலும்புக்கூடாய், இரத்தம் சேர்ந்ததாய், மாமிசமின்றித், தசை நாண் இணைந்து கிடப்பதைக் காண்பான் ...

5. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் மாமிசமும் இரத்தமுமின்றி தசை நாண் இணைந்த எலும்புக் கூடாயிருப்பதைக் காண்பான் ...

6. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் பல திசையிலும் எலும்புகளாய் இங்கே கை எலும்பு, இங்கே கால் எலும்பு, இங்கே மோவாய் எலும்பு, இங்கே தொடை எலும்பு, இடுப்பு எலும்பு, முதுகெலும்பு, மண்டையோட்டெலும்பாகச் சிதறிக்கிடப்பதைக் காண்பான் ..

7. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் சங்கு போன்ற வெண்ணிறமுள்ள எலும்புகளாக மாறியிருப்பதைக் காண்பது போல ..

8. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் ஒருவருடத்தின் பின் எலும்புக்குவியலாகக் கிடப்பதைக் காண்பது போல ..

9. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் எலும்பாக மாறிப் பின்னர் தூசாகக் கிடப்பது போல... பிக்குவானவன் தன் உடலோடு அதை ஒப்பிட்டு 'உண்மையில் என் உடலும் அத்தகையதே, அவ்வாறே இதுவும் மாறும், இதிலிருந்து தப்ப முடியாது' என்று எண்ணுகிறான். இவ்வாறு உடலை அவதானித்துக் கொண்டு வாழ்வான்.

[II வேதனைகள்]

வேதனைகள் அவதானித்துக்கொண்டு ஒரு பிக்கு எவ்வாறு வாழ்கிறான்? இங்கே பிக்குகளே, ஒரு பிக்குவானவன் இன்ப உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது, 'நான் இன்ப உணர்ச்சியை அனுபவிக்கிறேன்' என அறிகிறான். துன்பமான உணர்ச்சியை அனுபவிக்கிற போது, 'நான் துன்ப வேதனை அனுபவிக்கிறேன்' என உணர்க்கிறான். இன்பமோ துன்பமோ அற்ற நொதுமலான உணர்ச்சியை அனுபவிக்கும் போது 'நான் இன்பமோ துன்பமோ அற்ற நொதுமலான உணர்ச்சியை அனுபவிக்கிறேன்' என அறிகிறான். இன்பமான லௌகீக உணர்ச்சியை 'நான் இஷ்டமான லௌகீக உணர்ச்சியை அனுபவிக்கிறேன்' என அறிகிறான். இன்பமான அத்யாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கும் போது 'நான் இன்பமான அத்யாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கிறேன்' என அவன் அறிகிறான். துன்பமான லௌகீக உணர்ச்சியை அனுபவிக்கும் போது "நான் துன்பமான லௌகீக உணர்ச்சியை அனுபவிக்கிறேன்' என அவன் அறிகிறான். துன்பமான அத்யாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கும் போது 'நான் துன்பமான அத்யாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கிறேன்' என அவன் அறிகிறான். இன்பமுமில்லாத துன்பமுமில்லாத லௌகீக உணர்ச்சியை அனுபவிக்கும் போது 'நான் இன்பமுமில்லாத துன்பமுமில்லாத லௌகீக உணர்ச்சியை அனுபவிக்கிறேன்' என அவன் அறிகிறான். இன்பமுமில்லாத துன்பமுமில்லாத அத்தியாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கும் போது, 'நான் இன்பமுமில்லாத துன்பமுமில்லாத அத்தியாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கிறேன்' என அவன் அறிகிறான்.

இவ்வாறு அவன் அகத்தேயோ... புறத்தேயோ... அகத்திலும் புறத்திலுமோ உணர்ச்சிகளை அவதானித்துக் கொண்டு வாழ்கிறான். உணர்ச்சியில் உற்பத்தி அங்கங்களையும், அழிவின் அங்கங்களையும் அல்லது உணர்ச்சி உற்பத்தி அழிவு அங்கங்களையும் அவதானித்துக்கொண்டு வாழ்கிறான். உணர்ச்சிகள் உண்டாகின்றன என்பதை அறிவதற்கும் அவற்றைப் பற்றி விழிப்பாயிருப்பதற்கும் போதுமான அளவு அவனுடைய சதிபட்டானம் அமைந்திருக்கிறது எனலாம். அதனால் உலகில் பற்றின்றி, அதில் உள்ள எந்தப் பொருளிலும் தொடர்பின்றி இருக்கிறான். இவ்வாறு பிக்குகளே, ஒரு பிக்கு உணர்ச்சிகளை (வேதனை) அவதானித்துக்கொண்டு வாழ்கிறான்.

[III மனம்]

பிக்குகளே, எவ்வாறு மனத்தை அவதானித்தபடி பிக்குவானவன் வாழ்கிறான்? இங்கே பிக்குகளே, காமத்தோடு சேர்ந்துள்ள மனத்தை காமஞ் சேர்ந்த மனமாக அறிகிறான். காமத்தோடு சேராத மனத்தைக் காமஞ் சேராத மனமாக அறிகிறான்.

துவேஷத்தோடு (வெகுளி) சேர்ந்த மனத்தைத் துவேஷஞ் சேர்ந்த மனமாக அறிகிறான். துவேஷஞ் சேராத மனத்தைத் துவேஷஞ் சேராத மனமாக அறிகிறான்.

அவித்தையோடு சேர்ந்த மனத்தை அவித்தை சேர்ந்த மனமாக அறிகிறான். அவித்தை சேராத மனத்தைக் அவித்தை சேராத மனமாக அறிகிறான்.

ஒடுங்கிய மனத்தை ஒடுங்கிய மனமாக அறிகிறான். குழம்பிய மனத்தைக் குழம்பிய மனமாக அறிகிறான். அபிவிருத்தியடைந்த மனத்தை அபிவிருத்தியடைந்த மனமாக அறிகிறான். அபிவிருத்தியடையாத மனத்தை அபிவிருத்தியடையாத மனமாக அறிகிறான். உயர்நிலை அடைந்த மனத்தை உயர்நிலை யடைந்த மனமாக அறிகிறான். உயர்நிலை அடையாத மனத்தை உயர்நிலை அடையாத மனமாக அறிகிறான். சமாதி நிலையிலுள்ள மனத்தை சமாதி நிலையிலுள்ள மனமாக அறிகிறான். சமாதி நிலை அடையாத மனத்தை சமாதி நிலை அடையாத மனமாக அறிகிறான். விடுதலை பெற்ற மனத்தை விடுதலையடைந்த மனமாக அறிகிறான். விடுதலை அடையாத நிலையுள்ள மனத்தை விடுதலை அடையாத நிலையிலுள்ள மனமாக அறிகிறான்.

இவ்வாறு அவன் அகத்திலும் புறத்திலும் ஈரிடத்திலும் அவதானித்து வாழ்கிறான். இவ்வாறு தோற்றம் மறைவு என்ற நிலைகளை (சமுதயவய தம்மானுபஸ்ஸி) அல்லது தோற்றத்தையும் மறைவையும் பற்றிய நிலைகளை மனத்தில் சிந்தனை செய்து அல்லது மனம் இருக்கிறது, உலகில் பற்றின்றி தொடர்பின்றி இருக்கிறேன் என்பதை அறியவும், அதைப் பற்றி விழிப்பாயிருக்கவும் போதுமான அளவுக்கு சதி பட்டானம் தாபிக்கப்படுகிறது. இவ்வாறு பிக்குகளே, பிக்கு வானவன் மனத்தை அவதானித்து வாழ்கிறான்.

[IV சைதசிக (தம்மங்கள்) விஷயங்கள்]

பிக்குகளே, பிக்கு ஒருவன் சித்தத்தில் உண்டாகும் விஷயங்களை (தம்மம்) எவ்வாறு அவதானித்துக் கொண்டு வாழ்கிறான்?

[ஐந்து நீவரணங்கள்]

இங்கே பிக்குகளே, ஒரு பிக்குவானவன் ஐந்து நீவரணங்களை சித்த விஷயங்களாக அவதானித்து வாழ்கிறான்.

பிக்குகளே எவ்வாறு ஒரு பிக்கு சித்த விஷயங்களாக ஐந்து நீவரணங்களை அவதானித்து வாழ்கிறான்?

(1) இங்கே, பிக்குகளே, (காமச் சந்தம்) காமவிருப்பங்கள் இருக்கும் போது, 'என்னிடம் காம விருப்பங்கள் இருக்கின்றன' என்று அறிகிறான். காம விருப்பம் இல்லாத போது 'என்னிடம் காம விருப்பம் இல்லை' என அறிகிறான். மனத்தில் உண்டாகாத காம விருப்பம் எவ்வாறு எழுகிறதென்பதையும், எழுந்த காம விருப்பம் எவ்வாறு மறைகிறது என்பதையும், கைவிடப்பட்ட காமவிருப்பம் எவ்வாறு, வருங்காலத்தில் தோற்றாது விடுகிறதென்பதையும் அறிகிறான்.

(2) கோபம், (வியாபாத) இருக்கும் போது 'கோபம் என்னிடமிருக்கிறது' என்பதை அறிகிறான்.....

(3) கழிமடிமை, சோர்வு (தீன மித்த) இருக்கும் போது 'கழிமடிமையும், சோர்வும் என்னிடம் உண்டு' என்பதை அறிகிறான்......

(4) சஞ்சலமும் கவலையும் (உத்தச்ச குக்குச்ச) இருக்கும் போது 'சஞ்சலமும் கவலையும் என்னிடம் உண்டு' என்று அறிகிறான்.....

(5) சந்தேகம் (விசிகிச்சா) இருக்கும் போது 'சந்தேகம் என்னிடம் உண்டு' என்று அறிகிறான்.

சந்தேகம் இல்லாத போது 'என்னிடம் சந்தேகம் இல்லை' என்பதை அறிகிறான். மனத்திலே இதுவரை எழாத சந்தேகம் எப்படி எழுகிறதென்பதை அறிகிறான். உண்டான சந்தேகம் எவ்வாறு மறைகிறது என்பதை அறிகிறான். கைவிடப்பட்ட சந்தேகம் வருங்காலத்திலே எவ்வாறு எழாமலிருக்கும் என்பதை அறிவான்.

இவ்வாறு அகத்தும் புறத்தும், இரு பேரிடையிலும் சித்த நீவரணங்களை அவதானித்து வாழ்வான். நீவரணங்களில் சமுதயவயதம்மங்களை அதாவது உற்பத்தி அழிவு என்பவற்றின் நிலைகளை அவதானித்துக் கொண்டு வாழ்வான். சித்தப் பொருள்கள் (நீவரணங்கள்) உண்டு, உலகில் பற்றின்றி தொடர்பின்றி இருக்கிறேன் என்பதை அறியவும் அதைப்பற்றி விழிப்பாயிருக்கவும் போதுமான அளவுக்கு சதிபட்டானம் தாபிக்கப்படுகிறது.

இவ்வாறு பிக்குகளே ஒரு பிக்குவானவர் ஐந்து நிவரணங்களைச் சித்தப் பொருளாக அவதானித்து வாழ்கிறான்.

[பஞ்சக்கந்தங்கள்]

மேலும் பிக்குகளே, பிக்குவானவன் சித்தப் பொருள்களாகப் பஞ்ச உபாதானக் கந்தங்களை அவதானித்துக் கொண்டு வாழ்கிறான்.

பிக்குகளே, பிக்கு ஒருவன் எவ்வாறு பஞ்ச உபாதானக் கந்தங்களைச் சித்தப் பொருளாக அவதானித்து வாழ்கிறான்?

இங்கே பிக்குகளே, ஒரு பிக்குவானவன் 'இது ரூபம், அது இவ்வாறு உண்டாகிறது. அது இவ்வாறு மறைகிறது. இது வேதனை. அது இவ்வாறு உண்டாகிறது. அது இவ்வாறு மறைகிறது. இது குறிப்பு. அது இவ்வாறு உண்டாகிறது. அது இவ்வாறு மறைகிறது. இவை சங்கற்பங்கள். அவை இவ்வாறு உண்டாகிறது. இவ்வாறு மறைகிறது. இவ்வாறு விஞ்ஞானம் இருக்கிறது. அது இவ்வாறு உண்டாகிறது. அது இவ்வாறு மறைகிறது.

இவ்வாறு மனவிஷயங்களை அகத்தும் புறத்தும்...

இவ்வாறு பிக்குகளே, பிக்குவானவன் பஞ்ச உபாதானங்களை மனவிஷயங்களாக அவதானித்துக்கொண்டு வாழ்கிறான்.

[ஆறு இந்திரியங்கள்] (ஷடாயதன)

மேலும், பிக்குகளே, ஒரு பிக்குவானவன் ஆறு இந்திரியங்களையும், அகத்தும் புறத்தும் மனவிஷயங்களாக அவதானித்து வாழ்கிறான்.

பிக்குகளே, ஆறு உள் இந்திரியங்களையும் (தன் மாத்திரை) ஆறு வெளியிந்திரியங்களையும் (புலன்கள்) மனவிஷயங்களாக எவ்வாறு அவதானித்து வாழ்கிறான்?

இங்கே, பிக்குகளே, ஒரு பிக்கு ஆனவன் கண்ணை அறிகிறான். கட்புலனாகும் உருவத்தை அறிகிறான். கண்ணினாலும் உருவினாலும் உண்டாகும் தளையை அறிகிறான். உதயமாகாத தளை எவ்வாறு உதயமாகிறது, உதயமான தளை எவ்வாறு மறைகிறது, கைவிடப்பட்டது, வருங்காலத்தில் எழாமல் போகிறதென்பதை அறிவான்.

அவன் காதையும், சப்தத்தையும்... மூக்கையும் கந்தத்தையும் ....நாக்கையும் சுவையையும் .....உடலையும் பரிசத்தையும்... மனத்தையும் மனவிஷயங்களையும் இவையிரண்டினாலும் உண்டாகும் தளையையும் அறிகிறான். உதய மாகாத தளை எவ்வாறு எழுகிறதென்று அறிவான். உதயமாகும் தளை எவ்வாறு மறைகிறதென்பதை அறிவான். கைவிடப்பட்ட தளை எவ்வாறு எழாது விடுகிறதென்பதையும் அறிவான்.

இவ்வாறு பிக்குகளே பிக்குவானவன் தன்னில் மனவிஷயங்களை அவதானித்துக் கொண்டு... வாழ்கிறான். இவ்வாறு பிக்குகளே, ஒரு பிக்குவானவன் உள்ளிந்திரியம் ஆறையும் வெளியிந்திரியம் ஆறையும் மனவிஷயங்களாக அவதானித்துக் கொண்டு வாழ்கிறான்.

[ஞான அங்கள்கள் ஏழு]

(போதி அங்கம் 7)

பிக்குகளே, ஞான அங்கம் ஏழையும் மனவிஷயங்களாக அவதானித்துக் கொண்டு பிக்குவானவன் வாழுகிறான்.

பிக்குகளே, எவ்வாறு பிக்குவானவன் போதி அங்கம் ஏழையும் மன விஷயங்களாக அவதானித்துக் கொண்டு வாழுகிறான்?

(1) இங்கே, பிக்குகளே,போதி அங்கமான சதி (கடைப்பிடி) இருக்கும் போது, 'சதி என்னும் போதி அங்கம் என்னில் உண்டு' என அறிகிறான். போதி அங்கமான சதி இல்லாதபோது, சதி என்னும் போதி அங்கம் என்னிடம் இல்லை' என அறிகிறான். அதுவரை உண்டாகாத சதி (போதி அங்கம்) எவ்வாறு உண்டாகிறது என்பதையும் அறிவான். உண்டான சதி போதி அங்கம் வளர்ந்து பூரணமடைவது எவ்வாறு என்பதையும் அறிவான்.

(2) தம்மவிஷயம் (மனவிஷயங்களை விஷயம்-தம்மம்) ஆராய்ச்சி செய்தல் என்ற போதி அங்கம் இருக்கும்போது 'தம்மவிசயம் என்னிடம் உண்டு' என்பதை பிக்கு அறிவான். தம்மவிசயம் என்ற போதி அங்கம் இல்லாதபோது, 'தம்மவிசயம் என்ற போதி அங்கம் என்னிடம் இல்லை' என்பதை அறிகிறான். உதய மாகாத போதி அங்கமான தம்மவிசயம் எவ்வாறு எழுகிறது, அது எவ்வாறு வளர்ந்து பூரணமடைகிறது என்பதை அறிவான்.

(3) வீரியம் என்ற போதி அங்கம் இருக்கும்போது 'வீரியம் என்ற போதி அங்கம் என்னிடம் உண்டு' என்பதை அறிகிறான். வீரியம் என்ற போதி அங்கம் இல்லாதபோது 'வீரியம் என்ற போதி அங்கம் என்னிடம் இல்லை' என்பதை அறிகிறான். அதுவரை எழாத வீரிய போதி அங்கம் எவ்வாறு எழுகிறது, அந்தப் போதி அங்கம் எழுந்து விருத்தியடைந்து எவ்வாறு நிறைவடைகிறது என்பதை அறிகிறான்.

(4) பிரீதி என்ற போதி அங்கம் இருக்கும்போது 'பிரீதி என்ற போதி அங்கம் என்னிடம் உண்டு' என்பதை அறிகிறான். பிரீதி என்ற போதி அங்கம் இல்லாத போது 'பிரீதி என்ற போதி அங்கம் இல்லை' என அறிகிறான். அதுவரை தன்னிடம் உண்டாகாத பிரீதி என்ற போதி அங்கம் எவ்வாறு உண்டாகி அபிவிருத்தியடைந்து பூரணமடைகிறது என்பதை அறிகிறான்.

(5) மனத்துக்கும் காயத்துக்கும் ஓய்வு (பஸ்ஸத்தி) என்னும் போதி அங்கம் இருக்கும்போது 'பஸ்ஸத்தி என்ற போதி அங்கம் என்னிடம் உண்டு' என்பதை அறிகிறான். பஸ்ஸத்தி போதி அங்கம் இல்லாதபோது 'பஸ்ஸத்தி போதி அங்கம் இல்லை' என்பதை அறிகிறான். அதுவரை உண்டாகாத பஸ்ஸத்தி போதி அங்கம் எவ்வாறு உண்டாகிறது, அவ்வாறு உண்டான பஸ்ஸதி போதி அங்கம் எவ்வாறு வளர்ந்து பூரணமடைகிறது என்பதை அறிவான்.

(6) சமாதி என்ற போதி அங்கம் உண்டாயிருக்கும் போது 'சமாதி என்ற போதி அங்கம் என்னிடம் உண்டு' என்பதை அறிகிறான். சமாதி என்ற போதி அங்கம் இல்லாதபோது 'சமாதி போதி அங்கம் என்னிடம் இல்லை' என்பதை அறிகிறான். அதுவரை தன்னிடம் உண்டாகாத சமாதி போதி அங்கம் எவ்வாறு எழுகிறது, அது எவ்வாறு விருத்தியடைந்து பூரணமடைகிறது என்பதை அறிகிறான்.

(7) உபேக்கா (பற்றற்ற நடுநிலை) என்ற போதி அங்கம் தன்னிடம் உண்டாயிருக்கும் போது 'உபேக்கா போதியங்கம் என்னிடம் உண்டு' என்பதை அறிகிறான். உபேக்கா என்ற போதி அங்கம் இல்லாதபோது 'உபேக்கா என்ற போதி அங்கம் என்னிடம் இல்லை' என்பதை அறிகிறான். அதுவரை தன்னிடம் உண்டாகாத உபேக்கா போதியங்கம் எவ்வாறு உண்டாகிறது, அது எவ்வாறு அபிவிருத்தியடைந்து பூரணமடைகிறது என்பதை அறிகிறான்.

இவ்வாறு அவன் தன்னிலும்... மன விஷயங்களை அவதானித்து வாழ்கிறான். இவ்வாறு பிக்குகளே, ஒரு பிக்குவானவன் ஏழு போதி அங்கங்களையும் (ஞான அங்கம்) மனவிஷயங்களாக (சித்ததம்ம) அவதானித்து வாழ்கிறான்.

[நான்கு உயர் வாய்மைகள்]

மேலும் பிக்குகளே, ஒரு பிக்குவானவன் நான்கு உயர் வாய்மைகளை சித்த தம்மங்களாக அவதானித்து வாழ்கிறான்.

பிக்குகளே எவ்வாறு ஒரு பிக்கு நான்கு உயர்வாய்மைகளை சித்த தம்மங்களாக அவதானித்து வாழ்கிறான்?

இங்கே பிக்குகளே, பிக்குவானவன், யதார்த்தப்படி இது துக்கம் என அறிகிறான்.

யதார்த்தப்படி இது துக்க சமுதயம் என அறிகிறான். யதார்த்தப்படி இது துக்க நிரோதம் என அறிகிறான். யதார்த்தப்படி இது துக்க நிரோத மார்க்கம் என்பதை அறிகிறான்.

இவ்வாறு அவன் சித்த தம்மங்களைத்தன்னிலும்... அவதானித்து வாழ்கிறான்.

பிக்குகளே, இவ்வாறு பிக்குவானவன் நான்கு உயர் வாய்மைகளை சித்த தம்மங்களாக அவதானித்து வாழ்கிறான்.

பிக்குகளே, இந்த நான்கு சதிபட்டானங்களை இங்கு கூறியவாறு ஏழு வருடம் பயிற்சிசெய்து வருவானானால், பின்வரும் இரண்டில் ஒரு பலனை அவன், இங்கேயே இப்பொழுதே பெறுவான். ஒன்று அருகத நிலை. அல்லது மேலும் பற்று அற்ப சொற்பம் அவனிடமிருக்குமானால் 'அனாகாமி' நிலையை அடைவான்.

பிக்குகளே, ஏழு வருடம் வேண்டாம், இந்த நான்கு சதிபட்டானங்களையும் இவ்வாறு ஆறு வருடமோ.... ஐந்து வருடமோ... லு வருடமோ.. மூன்று வருடமோ.. இரண்டு வருடமோ... ஒரு வருடமோ... பயிற்சி செய்வானானால் பின்வரும் இரண்டில் ஒரு பலனை அவன் எதிர்பார்க்கலாம். ஒன்று உயர்ஞானம் (அருகத நிலை). அல்லது மேலும் அவனிடம் அற்ப சொற்ப பற்றுக்கள் இருக்குமானால் அனாகாமி நிலையை அடைவான் (அனாகாமி இவ்வுலகில் மேலும் பிறவி எடுக்காத நிலை).

பிக்குகளே, ஒரு வருடம் வேண்டாம், இந்த நான்கு சதிபட்டானத்தை அங்கு கூறியவாறு எவராவது ஏழு மாதத்துக்கு... ஆறு மாதத்துக்கு... ஐந்து மாதத்துக்கு... நாலு மாதத்துக்கு... மூன்று மாதத்துக்கு... இரண்டு மாதத்துக்கு... ஒரு மாதத்துக்கு, அரை மாதத்துக்கு... பயிற்சி செய்தால் பின்வரும் பலன்களில் ஒன்றை அவர் எதிர்பார்க்கலாம். இப்பொழுதே இங்கேயே உயர்ஞானம். அற்ப சொற்பம் மேலும் பற்றுக்கள் மிஞ்சியிருக்குமானால் அனாகாமி நிலை அடைவான்.

பிக்குகளே, அரை மாதத்தை விட்டுத் தள்ளுங்கள். இந்த நான்கு சதிபட்டானத்தை இவ்வாறு ஒரு வாரத்துக்குப் பயிற்சி செய்தால், இங்கேயே, இப்பொழுதே உயர் ஞானம் (அருகத நிலை) கிடைக்கும். அல்லது அற்ப சொற்பப் பற்றுக்கள் மேலும் இருக்குமானால் அனாகாமி நிலை உண்டாகும்.

இதனால்தான் இவ்வாறு கூறப்பட்டது. பிக்குகளே, உயிர்கள் தூய்மை யடைவதற்கும், சோகம், பரிதவிப்பு என்பவற்றைக் கடப்பதற்கும், துக்கம், கவலை என்பவற்றிலிருந்து நீங்குவதற்கும் நல்வழியை அடைவதற்கும், நிர்வாண அனுபூதியைப் பெறுவதற்கும் இதுவே ஒரேயொரு வழி. அதாவது நாலு சதிபட்டானம்.

இவ்வாறு பகவான் கூறினார். திருப்தியடைந்த பிக்குகள் அவர் வார்த்தைகளைக் கேட்டு பிரீதியடைந்தனர்.

(மஜ்ஜிம நிகாயம் சுத்த இல. 10)