கர்மா

கர்மா (பாலி மொழியில் கம்மா)

Karma by Thanissaro Bhikkhu

English Version

மொ. ஆ. கு: இந்தக் கட்டுரை மேற்கத்தியர்களுக்கு மேற்கத்தியத் துறவி ஒருவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

கர்மா என்ற வார்த்தையை நாம் மொழி பெயர்ப்பதில்லை. அதன் அடிப்படைப் பொருள் - செயல் - சாதாரணமாகத் தோன்றினாலும் புத்தரின் போதனைகளில் செயல் முக்கிய இடம் வகிப்பதன் காரணமாகவும் சமஸ்கிருத வார்த்தையான கர்மாவுக்குப் பல உட்பொருட்கள் இருப்பதாலும் செயல் என்ற மொழிபெயர்ப்பு முழுமையற்றதாகத் தெரிகிறது. எனவே கர்மா என்ற வார்த்தையை மொழிப்பெயர்க்காமல் அப்படியே பயன்படுத்துகிறோம்.

கர்மா என்பது பொதுவாகப் பயன்படுத்தும் வார்த்தையாகிவிட்டாலும் கர்மா என்ற வார்த்தையின் உட்பொருளை விளக்க முயற்சிக்கும் போது அது நம் மொழிக்கு (ஆங்கிலத்திற்கு) வரும் வழியில் மாறுபட்டு விட்டதாகத் தோன்றுகிறது. அனேக மக்களுக்குக் கர்மா என்றால் ஊழ்வினை அல்லது விதி என்றுதான் புரிகிறது. அதுவும் தவறான சரிப்படாத விதி. மாற்ற முடியாத கடந்த காலத்திலிருந்து வரும் சக்தி. மேலும் அது உருவானதற்கு நாம் எப்படியோ காரணமாக இருப்பதாகவும் நாம் அதைத் தடுக்கச் சக்தியற்றவர்களாக இருப்பதாகவும் நமக்குத் தோன்றுகிறது, தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது ‘எல்லாம் என் விதி' என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். வேறு எதுவும் செய்ய முயற்சிப்பதே வீண் என்றும் நினைக்கிறோம். அப்படிச் சொல்பவர்கள் மனம் உடைந்து போனவர்களாக எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பவர்களாக எண்ணுகிறார்கள். இத்தகைய நோக்கத்தின் காரணத்தால்தான் பலரும் கர்மா என்ற கருத்தை நிராகரிக்கிறார்கள். ஏனென்றால் இந்தக் கருத்தினால் சமுகத்தில் நடக்கும் அநீதிகளையும் துன்பங்களையும் மாற்ற முயற்சிக்காமல் அவற்றை நியாயப் படுத்த நேரிடுகிறது. ‘அவன் ஏழையாயிருப்பதற்கு அவன் விதியே காரணம்.’ ‘அவள் கற்பழிக்கப்பட்டதற்கு அவள் விதியே காரணம்.’ என்று சொல்வதனால் அவனோ, அவளோ துக்கம் அனுபவிக்க வேண்டியவர்கள் என்றும், அவர்கள் நமது உதவிபெறத் தக்கவர்கள் அல்ல என்றும் சொல்வதற்கு வெகு தூரம் இல்லை.

பௌத்தமதக் கருத்தான கர்மாவும் மற்ற மதத்தவர்களின் கருத்தான கர்மாவும் ஒரே சமயத்தில் மேற்கத்திய நாடுகளுக்குள் நுழைந்த காரணத்தால் தான் இந்த வார்த்தையின் மேல் தவறான பல எண்ணங்கள் எழுந்தன. பழங்காலத்தில் கர்மா என்ற வார்த்தைக்கு இருண்ட சோர்வான மனப்பான்மை என்று பொருள் கொண்டிருந்தாலும் பௌத்த மதத் தொடக்க காலத்தில் கர்மாவுக்கு அப்படி ஒரு பொருள் இல்லை. பௌத்தக் கருத்தான கர்மாவை நுணுகி ஆராய்ந்தால் அவை கடந்த காலச் செயல்களுக்கு இன்றைய மக்கள் தரும் அளவுக்கு, அதிக முக்கியத்துவம் தர வில்லை என்பது தெளிவாகும்.

ஆரம்பகாலப் பௌத்தர்களுக்குக் கர்மா என்பது ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் விளைவாகத் தென்பட வில்லை. மற்ற இந்திய சமயப் பிரிவுகளில் கர்மா ஒனறன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வருவதாகத் கூறப்படுகிறது. அதாவது, கடந்த காலச் செயல் இன்றைய செயல்களைப் பாதிப்பதாகவும் இன்றைய செயல் வருங்காலச் செயல்களைப் பாதிக்கும் என்றும் கருதினார்கள். இந்த நோக்கத்தில் சுதந்திரமாக உரிமையுடன் தெரிவு செய்யும் செயல்களுக்கு (free will) இடமே இல்லை. பௌத்தர்கள் அப்படிக் கருதவில்லை. நிகழ்காலத்தை, கடந்த காலச் செயல்களும் நிகழ்காலச் செயல்களும் பாதிப்பதாகவும், நிகழ்காலச்செயல்கள் வருங்காலத்தையும் நிகழ்காலத்தையும் பாதிப்பதாகவும் கருதினார்கள். ஆகவே நிகழ்காலச் செயல்கள் செய்ய, சுதந்திரமாகத் தெரிவு செய்ய உரிமை இருக்கிறது. இதையே பௌத்த மதத்தில் அடையாளச் சின்னமாக ஓடும் நீராகக் காண்பிப்பார்கள். சில சமயம் வெள்ளத்தின் (நமது பழங்கால செயல்களினால் ஏற்பட்ட) வேகம் அதிகமாக இருந்தால் ஓர் இடத்தில் இறுக்கிப் பிடித்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. பிற சமயங்களில் வேகம் அதிகமாக இல்லாத போது நீர் ஓட்டத்தைத் தடுத்து எந்த திசையிலும் திருப்பி விடலாம்.

ஆகவே இருண்ட சோர்வான மனப்பான்மையை வளர்க்காமல் பௌத்த கர்மா என்ற கருத்து நிகழ்காலச் செயலில் ஈடுபட்டிருக்கும் மனதை உற்சாகமூட்டி விடுவிக்கும் தன்மையை வளர்க்கிறது, நீங்கள் யார் - எதிலிருந்து வந்தீர்கள் - என்பதை விட உங்கள் நிகழ்கால மனப்போக்கே முக்கியம். நிகழ்காலத்தில் சமநிலையற்று நம் வாழ்க்கை இருந்தால், அதற்குக் காரணம் கடந்த காலச் செயல்களாக இருக்கலாம். ஆனால், நமது (மனித சுபாவத்தின்) அளவு நமது பழைய செயல்கள் நமக்கு ஏற்படுத்திய இன்றைய நிலவரம் அல்ல. ஏனென்றால் அந்த நிலவரம் எந்த நேரத்திலும் மாறக்கூடும். நமது அளவு இன்றைய சூழ்நிலையில் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப் படுகிறது. நீங்கள் துன்பம் அனுபவிக்கும் போது உங்கள் சாமர்த்தியமற்ற மனப் பழக்கங்களைத் தொடராமல் இருந்தால், கர்மாவின் விளைவுகளைக் குறைக்கலாம். மற்றவர்கள் துக்கம் அனுபவிப்பதைப் பார்க்கும் போது, உங்களால் உதவ முடியும் என்றால், அவர்களுடைய கடந்த கால கர்மச்செயல்களைப் பார்க்காமல் உங்களுடைய நிகழ் காலக் கர்மா உருவாக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவுங்கள். ஒரு நாள் நீங்களும் அவர்களுடைய துன்ப நிலையில் இருக்கக் கூடும். ஆகவே உங்களுக்கு இப்போது இருக்கும் நற்செயல் செய்யும் வாய்ப்பினைப் பயன் படுத்துங்கள். உங்களுக்குத் துன்பம் வரும் போது அவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள விரும்புகிறீர்களோ அப்படியே நீங்கள் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

ஒருவரின் மதிப்பு கடந்தகாலச் செயல்களால் இல்லாமல் நிகழ்காலச் செயல்களினால் தான் அளவிடப்படும் என்ற கருத்து சாதி அடிப்படையில் இருந்த இந்திய வழக்கங் களுக்கு மாறுபட்டதாக இருந்ததால் ஆரம்பகாலப் பௌத்தர்கள் பிராமணர்களின் கட்டுக்கதை களையும் பாசாங்குகளையும் வேடிக்கை செய்தார்கள். புத்தர் சொன்னது போலப் பிராமணர் அறிஞராக இருந்தால் அதற்கு அவர் பிராமணர் வயிற்றி லிருந்து பிறந்தது காரணம் அல்ல, அவர் உண்மையான சாமர்த்தியமான நோக்கத்துடன் செயல் புரிவது தான் காரணம்.

ஆரம்பகாலப் பௌத்தர்கள் ஜாதி அமைப்பு முறைகளைத் தாக்கியது இனவெறியை எதிர்ப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டாலும், இன்றைய உலகுக்கு அது விசித்தரமாகத் (மேற்கத்திய நாடுகளில் சாதிப் பிரச்சனை இல்லை என்பதால்) தெரியலாம். நாம் எதை உணரத் தவறுகிறோம் என்றால் நம் நெஞ்சில் போற்றிப் பாதுகாத்துவரும் பழங்காலம் பற்றிய கட்டுக்கதைகளை (myths) இந்த கருத்துக்கள் சாடித் துளைக்கின்றன என்ற உண்மையைத்தான். நாம் யார் என்பதை, நாம் எங்கிருந்து வந்தோம் - நம் இனம், பாரம்பரிய இன உரிமை, பால், சமுதாய அந்தஸ்து, பொருளாதார வசதி, பால் சார்ந்த விருப்பங்கள் - என்பதை வைத்து உருவாக்கும் நவீன இனத்தினை இந்தக் கருத்துக்கள் உடைத்தெரிகின்றன. அளவுக்கு மீறிய சக்தியை நாம் நவீன இனத்தின் புதிய கட்டுக்கதைகளை உருவாக்கவும் பராமரிக்கவும் செலவு செய்கிறோம். எதற்காக? நம் இனத்தின் நல்ல பெயரில் நாம் மறைமுகமாகப் பெருமையடையத்தான். நாம் பௌத்தர்கள் ஆனாலும் இனம் தான் முதலில் வருகிறது. பௌத்தமதமும் நம் இன சம்பந்தமான கட்டுக்கதைகளை கௌரவிக்கவேண்டும் என விரும்புகிறோம்.

கர்மாவின்நோக்கத்திலிருந்து பார்க்கும் போது, நாம் எங்கிருந்து வந்தோம் என்பது பழைய கர்மா, அதைக் கட்டுப்படுத்த நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. 'நாம் யார்' என்பது ஒரு தெளிவில்லாத கருத்து. நாம் யார் என்பதைப் பயன்படுத்தித் தவறான உள் நோக்கத்துடன் ஒரு காரியத்தில் ஈடுபடுவது அழிவை ஏற்படுத்தக்கூடும். ஒரு இனத்தின் மதிப்பு தனி நபரின் சாமர்த்தியமான செயல்களில் மட்டுமே உள்ளது. அப்படிப் பட்டவர்கள் நம் இனத்தில் இருந்தாலும் அந்த நற்செயல்களால் வரும் நல்ல கர்மா அவர்களுக்கு மட்டுமே சொந்தம். மற்றவர்கள் செய்யும் நற்செயல்கள் நமக்கு நல்ல கர்மாவை உண்டாக்காது. மேலும் எல்லா இனங்களிலும் மோசமானவர்களும் இருக்கிறார்கள். எனவே இனம் பற்றிய நமது கட்டுக்கதைகள் மிகவும் நிலையற்றவை. இப்படியாக நிலையற்ற எதன் மேலும் நம்பிக்கை வைத்தால் பெரிய அளவில் மன எழுச்சியிலும், வெறுப்புக்கொள்வதிலும், தவராகப் புரிந்து கொள்வதிலும் முதலீடு செய்ய வேண்டியதாகிவிடுகிறது. இதனால் எதிர் காலத்தில் தவிர்க்க முடியாமல் மேலும் திறமையற்ற செயல்களைச் செய்ய நேரிடுகிறது.

எனவே பௌத்தக் கருத்தான கர்மா, பழங்காலத்திலிருந்து தொடர்ந்து வந்த எஞ்சியுள்ள பொருள் (relic) அல்ல. அது நவீன கலாச்சாரத்தின் அடிப்படைச் சக்திக்கும், அடிப்படைக் குறை பாட்டிற்கும் சவால் விடுகிறது. நம் இனத்தின் கடந்தகாலச் செயல்களில் மறை முகமாகப் பெருமை அடையும் எண்ணங்கள் மனத்தை ஆட்டி படைக்கின்றன. நாம் எப்போது இந்த எண்ணங்களை கைவிடுகிறோமோ, அப்போது தான் நமது இன்றைய செயல்களின் நல்ல நோக்கங்களில் பெருமை அடைந்து, பௌத்தக் கருத்தான கர்மாவை நன்கு புரிந்து கொண்டுள்ளோம் என்று சொல்லிக்கொள்ளத் தக்கவர் களாவோம். இதை நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு ஒரு வெகுமதி கிடைக்கிறது. நமக்கும் மற்றவர்களுக்கும் கிடைக்கும் அந்த வெகுமதி என்ன? நாம் யார் என்பது போன்ற கட்டுக்கதைகளை மறந்து, தற்போது நாம் ஈடுபட்டிருக்கும் செயல்களில் முழுக் கவனம் செலுத்தி, அதைச் சரியாக செய்ய முயற்சிப்பது தான் அந்த வெகுமதியாகும்.

* * * * * *

©2000 Thanissaro Bhikkhu. "Karma", by Thanissaro Bhikkhu. Access to Insight, June 7, 2009, http://www.accesstoinsight.org/lib/authors/thanissaro/karma.html.