பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு
வண. நாரத தேரர் அவர்கள்.
தமிழில்
செல்வி யசோதரா நடராசா
அத்தியாயம் 5: பௌத்தத்தின் சில முக்கிய அம்சங்கள்
Some Salient Features of Buddhism
பௌத்த மதத்தின் அடிக்கல்லாக அமைந்தவை புனிதமான நால்வகை
வாய்மைகளாம் - அவையாவன, துக்கம், துக்க உற்பத்தி (அஃதாவது அவா அல்லது வேட்கை), துக்க நிவாரணம் (அஃதாவது நிர்வாணம்), துக்க நிவாரண மார்க்கம் (மஜ்ஜிம மார்க்கம்) ஆகிய இவை.
துக்கம் என்ற புனித வாய்மை யாது?
பிறத்தல் துன்பம், முதுமை துன்பம், பிணிநோக்காடு, மரணம் துன்பம், இன்னாதவற்றோடு இணைந்திருப்பது துன்பம், இனியவற்றினின்றும் பிரிந்திருப்பது துன்பம், விரும்பியதை அடையாமை துன்பம் - சுருங்கக் கூறின் பஞ்சஸ்கந்தங்களும் துன்பமேயாம்.
துக்க உற்பத்தி என்ற புனித வாய்மை யாது?
இப்போது இங்கும் பின்பு அங்குமாக அற்ப இன்பத்தைத் தருகின்ற
காமலோகங்களோடு சேர்ந்து, ஒரு பிறவியிலிருந்து இன்னுமொரு பிறவிக்கு இட்டுச் செல்லுகின்ற அவா அல்லது வேட்கை என்னும் திருஷ்ணை ஆகும். இது புலனுகர்ச்சியை விரும்பும் காமத்தன்கா, வையத்தில் உயிருடன் வாழ்வதை விரும்பும் பவத்தன்கா, அழிவுத் தன்மையை விரும்பும் விபவத்தன்கா என மூவகையினதாம்.
துக்க நிவாரணம் என்ற புனித வாய்மை யாது?
இந்த வேட்கையை அல்லது ஆசையை முற்றாக ஒழித்து, அது தன்னை மேலும்
பற்றிக் கொள்ளாமல் அதனை வலிந்து நீக்கி, தன்னை அதனின்றும் விடுவித்துக்
கொண்டு, அதனை முற்றும் அழித்தலினால் உண்டாகும் வேட்கை அழிவேயாம்.
துக்க நிவார மார்க்கமாகிய புனித வாய்மை யாது?
இது தூய்மையான அட்டாங்க மார்க்கமாகும். அஃதாவது: நற்காட்சி, நல்லூற்றம்,
நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு என்னும் இவ்வெட்டுமாம்.
புத்தர்கள் தோன்றினாலென்ன, அல்லாவிட்டலென்ன இந் நால்வகை வாய்மையும் இப்பூமண்டலங்களில் நிலைபேறுடையன. காலம் என்னும் காரிருளிற் கரந்து கிடக்கும் இவ்வாய்மைகளை வெளிப்படுத்தவே புத்தர்கள் தோன்றுகிறார்கள்.
இதனை விஞ்ஞானரீதியாக விளக்கினால், தர்மம் ஒரு காரண காரியத் தொடர்பு
விதி எனப் பெயர்பெறலாம். இவையிரண்டும் புத்ததேவரின் போதனை முழுவதையும் அணைத்து வியாபித்திருப்பதைக் காணலாம்.
முதன் மூன்று வாய்மைகளும் பௌத்த தத்துவத்தைக் குறிக்கின்றன. நான்காவது வாய்மை, அப்பௌத்த தத்துவத்தின் மேல் எழுப்பப்பட்ட அறநெறியைக் குறிக்கின்றது. "இந் நான்கு வாய்மைகளும் இவ்வுடலையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. புலனுணர் அறிவையும் சேர்ந்த இந்த எண்சாண் உடம்பிலேயே உலகமும் உலக உற்பத்தியும், உலக அழிவும், உலக அழிவுக்கு வழிகாட்டும் மார்க்கமும் ஆகிய இவை உள்ளன என்று பிரகடனப்படுத்துகின்றேன்," என்று பகவான் புத்தர் கூறினார். இங்கு அவர் உலகம் என்றது துக்கத்தை.
அது ஒவ்வொன்றிலும் துன்பத்தை மட்டுமே பார்க்கும் வழக்கமோ அல்லது ஒவ்வொன்றிலும் பிரகாசத்தை மட்டுமே பார்க்கும் வழக்கமோ அன்று.
பௌத்த மதம் துன்பம் என்னும் அச்சாணியிலேயே நிற்கின்றது. ஆகவே பௌத்தம் கேட்டு மனப்பான்மையுடையது எனக் கூறமுடியாது. அது ஒவ்வொன்றிலும் துன்பத்தை மட்டுமே பார்க்கும் வழியும் இல்லை (கேட்டு மனப்பான்மை) ஒவ்வொன்றிலும் பிரகாசத்தை மட்டுமே பார்க்கும் வழக்கமும் இல்லை. மாறாக, அது இருவழிகட்கும் நடுவழியேயுள்ள ஓருண்மையைப் போதிக்கின்றது. புத்ததேவர் துக்கமாகிய வாய்மையை எடுத்துரைத்து அதனை ஒழித்துக் கட்டுவதற்குரிய வழியைப் பற்றிக் கூறாது விட்டால், அவர் ஒரு கேட்டு
மனப்பான்மையுடையவர் என்று கூறுவதில் பொருத்தம் உண்டு. துன்பம் உலகெங்கணும் வியாபித்திருக்கும் தன்மையை உணர்ந்த புத்த பகவான் மனித குலத்தையே பீடித்திருக்கும் இந்த வியாபகமான பிணியை மாற்றும் சஞ்சீவி மருந்தையும் விதித்தார். புத்த தேவரின் கருத்தின்படி, மனதினாற் கற்பனை செய்யக்கூடிய மிகவுயர்ந்த பேரின்பமானது துக்கத்தின் முழுப்பரிகாரமாகிய நிர்வாணமாகும்.
கேட்டு மனப்பான்மைக் கொள்கைபற்றி ஆங்கிலக் கலைக் களஞ்சியம் எழுதியவர் "கெடுதலை எதிர்பார்க்கும் கொள்கை, வாழ்வை நோக்கி ஒரு நம்பிக்கையில்லாத் தோரணையையும், மானிட விஷயங்களில், துன்பமும்கெடுதலுமே அதிக ஆட்சி
என்ற ஒரு தெளிவற்ற பொது அபிப்பிராயத்தைக் குறிக்கும். பௌத்தத்தின் ஆரம்ப
சித்தாந்தம் மேலைத்தேயத்தில் காணப்படும் எந்தவித நம்பிக்கையையும் ஒத்திருக்கிறது. அது கெடுதலை எதிர்பார்க்கும் தன்மையுடையது எனக்கூறுவது, மேலைத்தேயக் கொள்கையான, தனி மனிதப் பண்பில்லாவிடில் மகிழ்ச்சியில்லை, என்றதை ஒத்திருக்கின்றது. நிலையான பேரின்பத்தோடு ஒன்ற, உண்மையான பௌத்தன் ஊக்கத்தோடு எதிர்பார்க்கிறான்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாகப் பொது மனிதனின் ஒரேயொரு மேலான இன்பம் சிற்றன்ப
நுகர்ச்சியாகக் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட விரைவில் தோன்றி மறைந்திடும் உலக இன்பங்களை எதிர்பார்த்தலிலும், நுகர்தல் பின் நினைத்துப் பார்த்தல் ஆகியவற்றால் ஒருவகையான கணப்பொழுது மகிழ்ச்சி உண்டென்பதில் ஐயமில்லை. ஆனால் அவை மயக்கம் நிறைந்த தற்காலியமான இன்பங்களாகும். பற்றற்ற தன்மையே புத்த தேவரின் கொள்கைப்படி மேலான பேரின்பமாகும்.
புத்தர் தமது சீடர்களை எந்நேரமும் தன்பத்தையே எண்ணியெண்ணி சதா துயரமிகுந்த வாழ்வை மேற்கொள்ளவேண்டுமென எதிர்பார்ப்பதில்லை. புத்தர் அவர்களை எந்நேரமும் மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் இருக்கவே விரும்புகிறார். ஏனெனில் மகிழ்ச்சி (பிரிதி) ஞானத்தின் ஒரு காரணக் கூறாகும்.
உண்மையான இன்பம் அகத்திலேதான் காணப்படுகின்றது. ஒருவனுடைய செல்வம், மக்கள், மதிப்பு, புகழ் முதலியவற்றைக் கொண்டு அவனுடைய இன்பத்தை அளவிடமுடியாது. இம்மாதிரியான உடைமைகள் தவறான வழியிற் கொண்டு செல்லப்பட்டால், பலாத்காரமான அல்லது அநியாயமாகப் பெறப்பட்டால், மோசடி செய்யப்பட்டால் அல்லது பற்றோடு கருதப்பட்டால், அவை துன்பத்தையும்
துயரத்தையும் தருவதற்கு ஏதுவாவன.
துன்பத்துக்குக் காரண விளக்கம் தர முயற்சிக்காமல் பௌத்தம் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு, அதை வேருடன் களைந்தெறியும் வழியைத்
தேடுகின்றது. ஆசையிருக்கும்வரை துன்பமிருக்கும். உயரிய அட்டாங்க மார்க்கத்தின் வழியே சென்று மேலான பேரின்பச் சுகவாரிதியான நிர்வாணத்தை அடைவதன் மூலம் மட்டுமே அத்துக்கத்தை அழிக்கமுடியும்.
இந்நான்கு உண்மைகளை அநுபவத்தினால் நிரூபிக்க முடியும். ஆகவே பௌத்த தம்மம், அறியாத பரம் பொருளைப் பற்றிய அச்சத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதன்று. அதற்கு மாறாக எம்மால் சோதிக்கப்பட்டு அநுபவத்தால் நிரூபிக்கப்படக்கூடிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே பௌத்தம், பகுத்தறிவுள்ளதும் அதிகம் சாதனைக்குரியதுமாகும்.
இப்படிப்பட்ட பகுத்தறிவான சாதனை செய்யக்கூடிய ஒழுங்கு, மர்மமாயும்
மறைபொருளாயும் உள்ள சித்தாந்தத்தைக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் குருட்டு நம்பிக்கை பௌத்தத்துக்கு அந்நியமானது. எங்கு குருட்டு நம்பிக்கை இல்லையோ அங்கு கட்டாயப் படுத்தல் அல்லது சமயத்தின் பேரில் துன்புறுத்தல், அல்லது விடாப்பிடிக் கொள்கை இருக்கமாட்டாது. பௌத்தத்தின் இணையற்ற நன்மதிப்புக்கு அதன் 2500 வருட அமைதியான முன்னேற்ற வளர்ச்சியில் புத்தரின் பேரில் ஒரு துளி இரத்தமும் சிந்தப்படவில்லை என்பதனையும் புத்த மதத்தைப் பரப்ப எந்தப் பராக்கிரமம் வாய்ந்த மன்னனும் தனது சக்தி மிக்க ஆயுதத்தை
உபயோகிக்கவில்லை என்பதையும், பலாத்காரமாக அல்லது வெறுக்கத்தக்க முறையில் ஒரு மதமாற்றமும் நடைபெறவில்லை என்பதனையும் கூறிவைக்க வேண்டும். எனினும் பூமியில் வாழ்ந்த மிகச் சிறந்தவரும் முதன்மையான வருமாகிய சமயதூதர் புத்தரேயாவர்.
"உலகப் பெரும் மதங்களில் பௌத்தம் மட்டுமே சமயத் துன்புறுத்தல்கள்
தொல்லைகள் தணிக்கைகள் தீவிர விசாரணைகள் முதலியன இல்லாமல் தான் தனக்கென வகுத்துக்கொண்ட பாதைவழியே முன்னேறிவந்துள்ளது," என்று ஆல்டஸ் ஹக்சிலி என்ற மேதை கூறுகின்றார்.
"வரலாற்றிலுள்ள பெருஞ் சமயங்களில் பௌத்தத்தைச் சிறப்பாக அதன் ஆதி
உருவத்தையே நான் ஏனைய மதங்களிலும் அதிகம் விரும்புகிறேன். ஏனெனில் பௌத்தமதத்தில்தான் சமயத் துன்புறுத்தல்கள் மிகக்குறைந்த அளவில் உள்ளன," என்று ரசல் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தத்தின் பேரில் ஒரு கைப்பேசியாவின் * இரத்தத்தால் பரிசுத்த பலிபீடமும்
சிவப்பேறவில்லை . புறுனோவைப்போல் ** யாரும் உயிரோடு எரிக்கப் படவுமில்லை.
* ஹைப்பேசியா - 415 ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்ட பெண்.
** புறுனோ - 1600 ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்டவர்.
பௌத்தம் உணர்ச்சியைவிட அறிவாற்றலுக்கே விருந்தாகும். அது புத்தர்களின்
எண்ணிக்கைப் பலத்தைவிட அவர்களின் குணவியல்பைப்பற்றியே மனங்கொள்கிறது.
நிகந்தநாத புத்தரைப் பின்பற்றிய உபாலி என்பவர் ஒரு சமயம் புத்ததேவரிடஞ் சென்று அவர் வழங்கிய தம்ம விளக்கவுரையைக் கேட்டு அகமிக மகிழ்ந்து, அவரின் சீடனாக வரவிருந்த விருப்பத்தை வெளிபடுத்தினான். ஆனால் புத்ததேவர்,
"குடும்பஸ்தனே, உண்மையைப் பற்றி முழு விசாரணை செய். உன்போன்ற சிறந்த மனிதன் ஒருவன் முதலாக முழுவிசாரணை செய்வது நல்லது," என்று எச்சரித்தார்.
இந்த எதிர்பாராத குறிப்பைக் கேட்ட உபாலி மகிழ்ச்சி மிக்கு, "பிரபுவே நான்
இன்னொரு சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தால், அச்சமயத்தார் என்னை ஒரு ஊர்வலமாக அழைத்துச் சென்று, இப்படிப்பட்ட ஒரு கோடிஸ்வரன் தனது முந்திய சமயத்தை விட்டு எமது சமயத்தைத் தழுவியுள்ளார் என்று பறைசாற்றியிருப்பர். ஆனால் மேன்மை தங்கிய நீங்கள் என்னை மேலும் விசாரணை செய்ய அறிவுறுத்துகிறீர்கள். தங்களது இந்தப் பேச்சினால் நான் மேலும் மகிழ்ச்சியுறுகின்றேன். ஆகவே, பிரபு, நான் இரண்டாம் முறையாகப் புத்த, தம்மம்,
சங்கம் முதலியவற்றில் அடைக்கலம் புகுகின்றேன்," என்று கூறினான்.
பௌத்தம் இவ்விதமான சுதந்திர விசாரணையாலும் முழுச் சகிப்புத்தன்மையாலும் நிரம்பியிருக்கின்றது. விரிந்த மனப்பான்மையையும் பரிவுமிக்க இதயத்தையும் கொண்ட போதனையான இது விவேகம், கருணை என்ற இரு ஒளிக் கதிர்களால் சம்சாரசாகரத்தில் தத்தளிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது நல்லொளியைச் சொரிந்து அகில உலகையும் மகிழ்விக்கும்.
புத்ததேவர் தமது மனதைச் சார்ந்த உபாசகர்களுக்குக் கட்டளையிடக்கூடிய
அளவுக்குத் தமது உரிமையை உபயோகிக்காத சகிப்புத் தன்மையையுடையவர். அவர், ஆணையிடுவதற்குப் பதிலாக, "இதைச் செய்ய உனக்குத் தகுதியிருக்கிறது. இதைச் செய்ய உனக்குத் தகுதியில்லை," என்று தூண்டினார்.
இச்சகிப்புத்தன்மையைப் புத்தர், ஆண், பெண் எல்லா உயிரினங்களிலும் காட்டினார்.
அடிமைத்தளையை அறுத்தெறியப் புத்ததேவர்தாம் முதன் முதலில் முயற்சி
செய்தார். அவர் இந்திய மண்ணில் உறுதியான வேரூன்றியிருந்த இழிவான சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். புத்த தேவர் வாக்கின்படி ஒருவன் ஒதுக்கப்பட்டவனாகவோ அல்லது பெருமகனாகவோ ஆவது அவனுடைய செயல்களினாலேயல்லாமல் பிறப்பினாலன்று. ஒருவன் பௌத்தனாக விரும்பினால் அல்லது துறவிகளின் சங்கத்தில் சேர விரும்பினால், அவனுடைய சாதியோ, நிறமோ, தடையாகவிருக்கமாட்டாது. மீனவர், தோட்டிகள், தாசியர், முதலியவர்கள் போர் வீரர், பிராமணர் முதலியவர்களோடு, பௌத்த சந்நியாசிகள் சங்கத்தில் எவ்விதத் தங்குதடையுமின்றி அநுமதிக்கப்பட்டுச் சமமான உரிமைகளைப் பெற்று, உயர்பதவிகளில் நியமிக்கப் பட்டனர். உதாரணமாக மற்ற எல்லோரையும் தவிர்த்து நாவிதனான உபாலி என்பவன் விநயக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டான். பயந்த சுபாவமுடைய சுனித்தன் என்ற தோட்டி புத்ததேவராலேயே துறவுக் குழுவுக்கு
அநுமதிக்கப்பட்டபின் அரகத்து நிலையை அடைந்தான். திருடனும் கொலைகாரனுமான அங்குலிமாலா என்பவன் புத்ததேவரிடம் அடைக்கலம் புகுந்து ஒரு கருணைமிகுந்த புனிதனானான். மூர்க்கனான ஆலவக்கன் புத்ததேவரிடம் அடைக்கலம் புகுந்து ஒரு பரிசுத்தனானான். தாசியான அம்பபாலி என்பவள் சந்நியாசினி சங்கத்தைச் சேர்ந்து அரகத்துத் தன்மையை அடைந்தாள். சாதி, நிற, பதவி, பேதமின்றி எல்லோருக்கும் பௌத்தத்தின் திருக்கோயில் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன எனக் காட்டுவதற்கு இப்படிப்பட்ட சான்றுகள் பலவறைத் திரிபிடகத்தில் பரக்கக் காணலாம்.
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களின் அந்தஸ்தை உயர்த்தி சமுகத்துக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தியதோடமையாது முதன் முதலில் பெண்களுக்குகாக ஒரு பிரமச்சரிய
சமயசங்கத்தைச் சட்ட திட்டங்களுடன் உருவாக்கியவரும் பகவான் புத்தரேயாவர்.
பெண்களை இயற்கையில் மென்மையுடையவர்கள் என்று கருதினாரே தவிர அவர்களைத் தாழ்த்திப் பேசவில்லை. ஆண், பெண் என்ற இருபாலாரினதும் உடன் பிறந்த நற்குணத்தைக் கண்டு அவர் தமது போதனைகளில் இருவருக்கும் தகுந்த இடங்களையளித்தார். அரகத்து நிலையையடைவதற்குப் பாலினம் ஒரு தடையன்று.
மாதுகாம் என்ற பெண்ணைக் குறிக்கும் பாளிச்சொல், "தாய்க் குலம்," அல்லது
"தாய்ச் சமுகம்," என்று சிலவேளைகளில் பொருள்படும். பௌத்தத்தில் ஒரு பெண் தாய் என்ற மேம்பட்ட நிலையை வகிக்கின்றாள். பௌத்தத்தில் மனைவி கூட கணவனின், "உற்ற சிநேகிதி," (பரமசகா) எனக் கருதப்படுகின்றாள்.
பௌத்தம் பெண் சமுகத்தைப் பகையாகக் கருதுகிறது என்று குற்றங்
கூறுவோரின் வாக்குப் பாரபட்சமானதாகும். புத்தர் முதலில் பெண்களைச் சங்கத்தில் காரணத்தோடு அநுமதிக்க மறுத்தாலும், பின் தம்மை வளர்த்த சிற்றன்னை பிரஜாபதி கோதமித்தாயின் வேண்டுதலுக்கிணங்கிப் பிக்குணிச் சங்கத்தை ஏற்படுத்தினார். பிக்குச் சங்கத்துக்குத் தலைமைச் சீடர்களாக எப்படி அரகத்துக்களாகிய சாரிபுத்தரும், முகல்லானரும் நியமிக்கப்பட்டார்களோ அவ்வாறே அரகத்துக்களாகிய கேமாவும், உலவண்ணியும் இரு தலைமைப் பெண் சீடர்களாக்கப்பட்டனர். வேறு பெண் சீடர்கள் பலரையும் சிறந்தவர், பக்தி நிறைந்தவர்கள் எனப் புத்ததேவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முறை தனக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதைக் கேள்வியுற்று
விசனமடைந்த கோசல மன்னனைப் பார்த்து, பகவான் புத்தர், "வேந்தே! ஒரு ஆண்குழவியினும் பெண்குழவி சிறந்த குழந்தையாக வரலாமல்லவா?" என்று கூறினார்.
அநேக பெண்கள் தம்மத்தைப் பின்பற்றிப் பிக்குணிச் சங்கத்திற் சேராதிருந்தால்
உலகத்தில் மறைந்திருந்து மறக்கப்பட்டவராய்ப் போயிருப்பார். ஆனால் புத்த மதத்தைப் பின்பற்றியதினால் அவர்கள் விடுதலை பெற்றுப் பலதுறைகளில் புகழ்பெற்று விடுதலையடைந்தனர். இப்புதிய பிக்குணிச் சங்கம் பின்னர் மகாராணிகளுக்கும், இளவரசிகளுக்கும், பிரபுக்களின் புதல்விகளுக்கும்,
விதவைகளுக்கும், துயரமுற்ற தாய்மாருக்கும், அநாதைப் பெண்களுக்கும்,
பரிதாபமிக்க தாசிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து இவர்கள் தங்கள் சாதி, பதவி முதலிய வேறுபாடில்லாமல் ஒரு பொது மேடையிற் கூடி, கோட்டைகளிலும், குடிசைகளிலும் வாழ்வோருக்கும் கிட்டாத சுதந்திரச் சூழ்நிலையில் வாழ்ந்து பரிபூரண சாந்தியையும் மனம் நிறைந்த திருத்தியையும் அநுபவிக்க உதவி வருகிறது.
வாயில்லாப் பிராணிகளைப் பலியிடுவதைத் தடைசெய்து தம் காலடியில் ஊர்ந்து செல்லும் மிகச் சிறிய பிராணி உட்பட எல்லா உயிரினங்களுக்கும் தமது அன்பான கருணையை (மெத்தா) காட்டும்படி புத்தர் தமது சீடர்களுக்கு அறிவுறுத்தினார். வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு விலை மதிப்பற்ற பொருளாதலின் இன்னோர் உயிரின் வாழ்க்கையை அழிக்கும் சத்தியோ, உரிமையோ எந்தவொரு மனிதனுக்கும் இல்லை.
சாதி, நிற, பாலின் பேதமின்றி எல்லாவற்றோடும் தன்னையும் ஈடுபடுத்தி எல்லா உயிரினங்கள் மீதிலும் இவ்வன்புக் கருணையைச் செலுத்துபவனே ஒரு உண்மையான பௌத்தனாவன்.
ஒன்றை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்தும் தடைகளை உடைத்தெறிய இந்தப்
பௌத்த மெத்தா பாவனை முயற்சிக்கின்றது. மற்றவர்கள் இன்னொரு சமயத்தை அல்லது இன்னொரு தேசத்தைச் சேந்தவர்கள் என்று நினைத்து அவர்களிடமிருந்து பிரிந்து நிற்கக் காரணம் எதுவுமில்லை. சுள-வியூக, மகா-வியூக சுத்தங்களை ஆதாரமாகக் கொண்ட உயரிய சகிப்புப் பிரமாணத்தில் அசோகன் பின்வருமாறு சொல்லுகின்றார்: "மக்கள் ஒருமை மட்டுமே சிறந்தது. அதாவது எல்லோரும் மற்றவர் போதிக்கும் சித்தாந்தங்களை மனமுவந்து கவனமாக உற்றுக் கேட்க வேண்டும்."
பௌத்தம் ஒரு தேசத்துக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ சொந்தமான தன்று. அது அனைத்துலகுக்கும் உரியது. தேசியம் வேறுவிதமாகக்கூறின் ஒரு பரந்த அடிப்படையிலமைந்த சாதிமுறையாதலின் அது தேசியமன்று. பௌத்தம் ஒரு உத்தம தேசியமாகும்.
அகிலம் வியாபித்த அன்பு ஒவ்வொன்றையும் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலமாக நிறுவியபடியினால், ஒரு பௌத்தனுக்குச் சேய்மையோ, அண்மையோ, பகைவனோ, அந்நியனோ, துரோகியோ, தீண்டத்தகாதவனோ என்ற வேறுபாடு இல்லை.
ஒரு உண்மையான பௌத்தன் உலகப்பிரஜையானவன். அவன் முழு உலகையும் தனது தாய் நாடாகவும் எல்லோரையும் தனது சகோதரர்களாகவும் கருதுகிறான்.
ஆகவே சகிப்புத்தன்மை, பலாத்காரமின்மை, பகுத்தறிவு, சாதனைத்தன்மை,
பயனிறைவு, உலக வியாபகத்தன்மை, முதலியவற்றால் பௌத்தம் இணையற்ற ஒரு மதமாகத் திகழ்கின்றது. எல்லாவற்றையும் இணைந்து ஒன்றுபடுத்தும் செல்வாக்கு நிறைந்த சாதனங்களில் உயர்ந்தது பௌத்தமேயாகும். அது உலகை உயர்த்தக்கூடிய ஒரு நெம்புகோலுமாகும்.
இவை பௌத்தத்தின் சில முக்கிய அம்சங்களாகும். கன்மம் அல்லது காரண காரிய விதி மறுபிறப்புச் சித்தாந்தம், அநாத்மா, நிபாணம், முதலியவற்றைப் பௌத்தத்தின் அடிப்படைச் சித்தாந்தங்களுடள் சில எனக் கூறலாம்.
* * * * *