மிருகங்கள்

மிருகங்கள்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Animals

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

கேள்வி (பெண்): எனக்கு எல்லா மிருகங்களையும் பிடிக்கும். அவற்றைக் கவனிக்கும் போது சில மிருகங்கள் மனிதர்களைவிட “மேம்பட்டவை”களாகத் தோன்றுகின்றனவே? அது எப்படிச் சாத்தியமாகும்? மனிதப் பிறவி மிருகப் பிறவியைவிட மேம்பட்ட தென்றல்லவா கற்பிக்கப் படுகிறது?

சொல்லப்போனால் சில மனிதர்கள் மிருக வர்க்கத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றனர். மிருகவர்க்கத்தின் முக்கிய இயல்பு – அவை தங்கள் உள்ளார்ந்த உணர்ச்சியின்படி நடந்து கொள்வதுதான். அவற்றுக்குப் பிரதிபலிக்கும் தன்மை இல்லை. ஒரு பொறியில் தங்கள் கை சிக்கிக் கொண்டால் அவை, “அமைதியாய் இரு. அமைதியாய் இருந்து சிந்திப்போம்.” என்று நினைப்பதில்லை. உடனே சிக்கிக் கொண்ட கையைக் கடிக்கத் துவங்கி விடுகின்றன.

தங்கள் உணர்ச்சிகளைச் சற்று ஒதுங்கியிருந்து பார்த்தபடி பிரதிபலிப்பதில்லை. அவற்றுக்குக் குறிப்பாக எதன் மீதும் வெறுப்பு இல்லை. அவற்றின் நோக்கமே உணவும் இனப்பெருக்கமுமே.

இந்தக் குணாதிசயங்களைச் சில சமயங்களில் மனிதர்களிடத்தேயும் காண்கிறோம். தங்களுக்கு வேண்டுவதெல்லாம் உணவும் இனப் பெருக்கமும் மட்டுமே என்று வாழும் மனிதர்களை இன்றும் காண்கிறோம். அவர்களுக்கு அதுவே வாழ்வு. மிருகங்களை விடக் கீழான நிலை கொண்ட உலகங்களும் உள்ளன. நரக லோகம் அதில் ஒன்று. அங்கு வாழ்வோரின் முக்கிய இயல்பு கோபமும், வெறுப்புமே. இவற்றை மட்டும் வெளிப்படுத்துவோர் நரக வேதனை அனுபவிப்பவர்கள். மிருக வாழ்க்கையைவிட மோசமான நிலை இது.

மனிதர்கள் இதுபோன்ற எல்லாவிதமான இயல்புகளையும் வெளிப்படுத்துகின்றனர். அவ்வப்போது குழந்தைகள் உட்படப் பலரைக் கொலை செய்தோரைப் பற்றியெல்லாம் கேள்விப் படுகிறோம். சிலருக்கு மனசாட்சியே இருப்பதில்லை. பிரதிபலிக்கும் தன்மையே இல்லை. அந்தச் சமயம் ஏற்படும் உணர்ச்சிக்கு இடம் கொடுத்து அதன்படி நடந்து கொள்கின்றனர். அதே சமயம் சிறந்த மனிதத் தன்மை கொண்டவர்களையும் பார்க்க முடிகிறது. பின் தேவ தேவதையரின் தன்மையைக் கொண்டோரைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். சாதாரண மனிதப் பண்புகளான தயாள குணம், நல்லொழுக்கம் போன்றவற்றால் இவர்கள் உற்சாகப் படுவதில்லை. உலக வாழ்வில் மிகவும் ஈடுபாடு கொள்வதில்லை. ஆனால் மிகவும் அன்பான குணமுடையவர்கள் அவர்கள்.

மேன்மையான உணர்ச்சிகளை நாய், ஓங்கில் (ஒரு கடல் வாழ் பிராணி) போன்ற மிருகங்களிடையே காணலாம். விசுவாசம், அன்பு, நாம் சொன்ன செயல்களைச் செய்வது, ஏன்? சில சமயம் நமக்காக உயிர்த் தியாகம் செய்வது போன்ற இயல்புகளையும் மிருகங்களிடையே காணலாம். இத்தகைய மிருகங்கள் மனித லோகத்தை நோக்கி முன்னேறுவதாகக் கூறலாம். அல்லது அந்த மிருகங்கள் மனிதப் பிறவி எடுக்கத் தேவையான குணாதிசியங்களைக் காட்டுவதாகக் கூறலாம். ஆனால் மிருகங்களாக இருக்கும் வரை அவற்றுக்குச் சில தடங்கல்கள் உள்ளன. தங்கள் உடல் வடிவத்தால், மூளை வளர்ச்சி போன்றவற்றுக்கான தடங்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்தப் பண்புகளில் மனிதருக்கும் சில மிருகங்களுக்கும் உள்ள ஒற்றுமையைக் கவனிக்கும் போது இது ஒரு சுவாரஸியமான செய்தி என்பது தெளிவாகிறது. கிழக்கத்திய நாடுகளில் மறுபிறப்பென்ற கருத்து இருப்பதால் மிருகங்களும் மறுபிறப்பெடுத்து மற்ற லோகங்களுக்குச் செல்ல முடியும் என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

கிருஸ்துவப் பண்பாட்டின் பாதிப்பினால் மேற்கத்திய நாடுகளில் கிருஸ்துவ மதத்தின் ஆரம்ப வளர்ச்சியின் போதே மிருகங்களை ஒரு கருவி என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அவற்றுக்கு ஆத்மா இல்லை என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. அதனால் பல காரியங்கள் மன்னிக்கக் கூடிய செயல்களாகி விட்டன – மிருகங்களின் சித்தரவதை போன்ற செயல்கள் உட்படத் தவறாகக் கருதப்படவில்லை. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தெளிவான பாகுபாடு இருந்தது. கிருஸ்துவ மரபின்படி மறுபிறப்பு இல்லை. இறந்த பின் சொர்க்கத்துக்கு அல்லது நரகத்து மனிதர்கள் செல்வார்கள். பின் மிருகங்களின் நிலை என்ன? மிருகங்களுக்கு ஆத்மா இல்லாதபடியால் அவை ஒரு இயந்திரத்தைப் போலத்தான். இறந்தபின் அவ்வளவு தான். அதனால் அவற்றுக்கு எதிரான பட்சபாதம் இருந்தது. விசித்திரமான வகையில் அறிவியல் தான் மீண்டும் மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் சில ஒற்றுமையான மன உணர்ச்சிகள் இருப்பதற்கான எண்ணங்களை மீண்டும் நுழைத்தது. நுழைத்தவர் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி. தனது பரிணாமம் பற்றிய கோட்பாட்டினை முன் கொண்டு வருவதற்காகவும், மனிதர்கள் மிருகங்களிடத்திலிருந்து உருவானவர்கள் என்பதை நிரூபிக்கவும் மிருகங்களிடையே உள்ள மனிதத் தன்மையான உணர்ச்சிகளை வலியுறுத்தினார். மிருக நடத்தையில் மனிதருக்குண்டான இயல்புகளைக் காணலாம் என்பதற்குத் தனது, 'இனங்களின் ஆரம்பம்' என்ற புத்தகத்தில் மிருகங்களிடையே அவர் கண்ட பல இயல்புகளை விவரித்துள்ளார். எறும்புகளையும் கூட உன்னிப்பாகக் கவனித்து அவற்றிடையே உள்ள சமுக இயல்புகளை விவரித்தார். மிருகங்களின் நடத்தையைக் கவனித்து அவற்றுக்கிடையே கண்ட விசுவாசம், பற்று போன்ற இயல்புகளை வர்ணித்தார். ஆங்கிலத்தில் மிருகங்களுக்கு மனிதத் தன்மைகளைக் கொடுப்பதற்கு ஒரு வார்த்தையும் உண்டு (anthropomorphizing). ஆனால் சார்லஸ் டார்வின் அறிவியல் ரீதியாக மிருகங்களுக்கு ஏற்கனவே மனிதருக்குரிய உணர்ச்சிகள் இருப்பதாகக் கூறினார். மேற்கத்திய நாடுகளில் இது ஒரு மாறுபட்ட மனப்போக்கைக் கொண்டு வந்தது.

ஆனால் புத்தர் மிருகப் பிறவி எடுத்து விட்டால் அதிலிருந்து வெளியேறி மனிதப் பிறவி எடுப்பது மிகவும் கடினம் என்பதைச் சுட்டிக் காட்டினார். இதற்கு ஒரு உவமானம் தந்தார். மிருக லோகத்துக்குச் சென்றுவிட்டால் மீண்டும் மனிதராய்ப் பிறப் பெடுப்பதற்கான சாத்தியக்கூறு என்ன என்று அவரிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர் இந்த உவமானத்தைத் தந்தார்.

'வட்டவடிவில் உள்ள ஒரு மரக்கட்டை சமுத்திரத்தில், மிகப் பெரும் சமுத்திரத்தில் மிதந்து கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அது காற்றினாலும், அலைகளாலும், நீரலைக்கழைப்பினாலும் ஓர் இடத்தில் இருப்பதில்லை. அந்த ஆழ் கடலில் ஒரு குருட்டு ஆமை வாழ்கிறது. அது நூறாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மேலே வருகிறது. வந்து ஒரு நீண்ட மூச்செடுக்கிறது. அப்படியானால் அந்த ஆமை அந்தக் கட்டையின் மையத்தில் உள்ள துவாரத்தின் வழியாகத் தனது தலையை நுழைக்கும் சாத்தியக் கூறு என்ன? தன் தலையை அந்தக் கட்டையின் மையத்தில் நுழைக்க எத்தனை காலம் ஆகும்? இது நடைபெறக் கூடியதற்கான சாத்தியக்கூறே, மிருக லோகத்தில் வாழும் உயிரினங்கள் மீண்டும் பூலோகத்தில் மனிதராகப் பிறப்பெடுப்பதற்கான வாய்ப்பு,' என்றார் புத்தர்.

அந்த மர வளையம் கருவைக் குறிக்கும். பிறப்பைக் குறிக்கும். பிறக்கும் குழந்தையின் தலைகூட குருட்டு ஆமையைப் போலத்தானே இருக்கிறது? தலையில் முடியில்லை, கண்கள் மூடியிருக்கின்றன. வலையத்தின் வழியே தலையை விட்டு ஒரு பெரும் மூச்செடுக்கிறது. அதுவே அதன் முதல் மூச்சு. அதற்கு முன் குழந்தையும் நீரில் தானே மிதந்து கொண்டிருந்தது. கண்கள் முடியிருந்தபடியால் அது குருடாகவும் இருந்தது. இது தான் மிருக லோகத்திலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியக் கூறு. மிருகமாய் இருக்கும் போது பிரதிபலிக்க வாய்ப்பில்லை. ஆனாலும் மிகவும் அரிய செயல் என்றாலும் மீண்டும் மனிதனாகப் பிறப்பெடுக்க முடியும். அதே சமயம் இது நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும் உள்ளது. மிருகமாகப் பிறப் பெடுத்து விடாதீர்கள். அங்கு சென்று விட்டால் மீண்டும் வெளியேறுவது கடினம்.

மிருகங்கள், குறிப்பாக நாய்களும், பூனைகளும் எல்லையற்ற அன்புப் பயிற்சி செய்வதற்கு மிகவும் ஏற்றவை. ஏனென்றால் அவை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடன் பழகுகின்றன. ஒவ்வொரு நாளும் நம்மைக் கண்டு மகிழ்கின்றன. உங்களை அளவு பார்ப்பதில்லை. நீங்கள் அறிவாளியா இல்லையா என்று கணக்குப் போடுவதில்லை. வயதானவராக, அழகற்ற தோற்றமுடையவரானாலும் அவை உங்களிடம் அன்பு காட்டுகின்றன. உங்கள் முகத்தைப் பாசத்தோடு நாவால் தடவுகின்றன. ஆழமான உறவு அது. இது போன்று தன்னலமில்லா மகிழ்ச்சியைப் பார்க்கும் போது நம்முள் உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவை நமது மனநிலையை மாற்றி விடுகின்றன. அந்த நாயிடம் நமது பிரச்சனைகளைப் பற்றிக் கூறலாம். அதைக் கேட்க அதற்கு எப்போதும் ஆவல். சில சமயம் சற்றுத் தூங்கி விடும். ஆனாலும் எப்போதும் மகிழ்ச்சியாகவே கேட்கும்.

கேள்வி (சரியாகப் பதிவாகவில்லை)

புத்தரின் போதனைகளில் மிருகங்களின் நலன் சம்பந்தமாக மிகவும் அக்கறை காட்டப் படுகிறது. அவரது ஜாதகக் கதைகளில் அதாவது முற்பிறவிகளில் புத்தரின் வாழ்க்கை பற்றிய கதைகளில், புத்தர் சில சமயம் ஒரு விலங்காகத் தோன்றுவார். சில சமயம் யானையாகவோ அல்லது மானாகவோ தோன்றுவார். அப்படித் தோன்றி சில மேன்மையான இயல்புகளை வெளிக்காட்டுவார். அவர் எதோ ஒரு சூழ்நிலையில் தன்னை மேம்படுத்திக் கொள்வதாகக் காட்டப்படும். ஆக இந்த மிருகங்களின் மீதான கருணை பௌத்த மனத்தில் ஊடுருவியுள்ளது. திபெத் நாட்டிலும் சில மஹாயான மரபுகளிலும் எங்கு பார்த்தாலும் தங்கள் தாயைக் காண்பார்கள். அதோ அங்குள்ள முயல் முற்பிறவியில் நமது தாயாக இருந்திருக்கலாம். ஆதலால் இப்போது அதற்கு நாம் தீங்கு செய்யத் தயங்குகிறோம். பொதுவாகப் பௌத்த மக்களிடையே ஒரு வேடிக்கைக்காக மிருகங்களை வதைப்படுத்துவது அல்லது கொல்வது போன்றவற்றில் தெளிவான அக்கறை இருக்கும். ஆனால் பொதுவாக ஆசிய நாடுகளில் மிருகங்களிடம் பாசம் பொழியும் வகையில் மக்கள் நடந்து கொள்வதில்லை. அப்படி நடந்து கொள்வதில் இங்கிலாந்து மக்கள் தலைசிறந்தவர்கள் என்று நினைக்கின்றேன். மடி நாய் என்ற ஒரு கருத்து உள்ளது. நாயை மடியில் உட்காரவைப்பது, முகத்தை நாவால் தடவ விடுவது போன்ற நமது பழக்கங்கள் ஆசிய மக்களுக்கு விசித்திரமாகத் தோன்றும். ஆசிய நாட்டு வீதிகளில் நாய்களின் வாழ்க்கை எளிதானதல்ல. அவை மடியில் வாழும் நாய்கள் இல்லை. மிகவும் கரடு முரடாக வாழும் தெரு நாய்கள் அவை. பல நாய்களுக்குச் சொறிப் பிடித்திருக்கும். அவற்றைத் தொட நமக்கு விருப்பம் இருக்காது. அவற்றுக்கும் அது பழக்கமான செயல் இல்லை. நமது (மேற்கத்திய நாட்டு) மிருகங்கள் மீதான போக்கு ஆசிய மக்களுக்குச் சற்று விசித்திரமாகவே தோன்றும். நாம் ஒரு சில மிருகங்களைக் கொன்று சாப்பிடத் தயங்குவதில்லை. அதே சமயம் மற்ற மிருகங்களை நமது படுக்கைகளிலும் நம்மோடு தூங்க விடுகிறோம். விசித்திரம்... அன்போடு கட்டித் தழுவி முத்தமும் தருகிறோம் அதே சமயம் மற்ற மிருகங்கள் சிலவற்றின் வாழ்க்கைக்கு மதிப்பே தருவதில்லை. ஆசிய மக்கள் இவ்விரண்டு போக்குகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

நாய்களுக்கு ஏன் மனிதர்களைப் பிடிக்கிறது என்பதற்கு அதனால் உண்டாகும் சமூக அனுகூலங்களைக் சுட்டிக் காட்டுகிறார் டார்வின். அதாவது மக்களின் மத்தியில் நாய்கள் சுற்றி வருவதற்குக் காரணம் அவைகளுக்குத் தேவையான உணவு போன்றவை கிடைப்பதால் தான் என்கிறார். பாசம், விசுவாசம் போன்ற இயல்புகளெல்லாம் தங்களுக்கு அனுகூலங்கள் கிடைப்பதால் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் என்கிறார். பரிணாமம் சம்பந்தமாக நோக்கும் போது இப்படி விளக்கம் கூறப் படுகிறது. பௌத்தப் பார்வையில் சில மிருகங்களுக்கு இந்த இயல்புகள் இருப்பதுமட்டுமின்றி அவை நல்ல உணர்ச்சிகளை அனுபவிகின்றன என்று கூறப் படுகிறது. நாய்கள் நம்மைப் பார்க்கும் போது மகிழ்ச்சியடைவதால் தான் வாலை ஆட்டுகிறது. நம்மைப் பார்ப்பதால் உண்மையிலேயே அது மகிழ்கின்றது. நமக்கும் அதன் செயல்கள் ஒரு மகிழ்ச்சிக்கான ஆதாரம்.

ஜாதகக் கதைகளில் புத்தர் யானையாகவும் மானாகவும் பிறப்பெடுக்கிறார். இந்தக் கதைகள் சில கற்பனைக்கதைகள் மட்டுமே. சில நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சில ஜாதகக் கதைகள் அற நெறிகளைக் கற்பிப்பதற்காகக் கூறபட்டவை என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்த சுவாரஸ்யமான கதையில் போதிசத்துவர் ஒரு பன்றியாகப் பிறப்பெடுக்கிறார். ஒரு கண் பார்வையற்ற கிழவிக்கு இரண்டு பன்றிகள் இருக்கின்றன. மிகவும் புத்திசாலியான பன்றிகள் அவை. கிழவி அவ்விரண்டு பன்றிகளையும் தன் மக்களாகவே கருதுகிறாள். அந்தப் பன்றிகளும் அந்தக் கிழவியை நன்கு கவனித்துக் கொள்கின்றன. ஒரு நாள் கிராம மக்கள் ஒரு விருந்து நடத்தும் போது உணவு தீர்ந்து விடுகிறது. கிழவியின் இரண்டு பன்றிகளில் ஒன்றைக் கொன்று தீயில் வாட்டிச் சாப்பிட நினைக்கின்றனர். அந்தக் கிழவியிடம் பேரம் பேசி ஒரு முடிவு செய்ய விரும்புகின்றனர். கதை இவ்வாறு போக அந்தப் பன்றிகளும் அப்போது பல வீரதீரச் சேட்டைகளைச் செய்கின்றன. எப்படியோ இறுதியில் ஒரு பன்றி அந்த ஊரின் தலைமை நீதிபதி ஆகிவிடுகிறது.

இதுதான் எனது எல்லை (சிரிப்பு). இந்தக் கதை அப்படியே நடந்ததாக ஏற்றுக்கொள்ள எனக்குள்ள திறமை இத்தோடு நிறைவு பெறுகிறது! இந்தக் கதையைக் கேட்பவர்கள் இதற்குப் பல பொருள் கொள்ளலாம். இதில் நகைச்சுவையும் நிறைந்திருக்கிறது. மேலும் இக்கதைகளைத் துறவிகள் மக்களுக்குக் கூறும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். கேட்பவரும் இப்படி நினைத்திருக்கலாம், 'ஆகா அந்தக் காலம் மிகவும் மாறுபட்ட காலம். உலகம் வேறுபட்டதாக இருந்திருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கின்றது.' (பன்றியும் ஒரு ஊருக்குத் தலைமை நீதிபதி ஆகக் கூடும்) (சிரிப்பு). ஆனால் இது ஒரு கட்டுக் கதைதான். அப்படியே நடந்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எனினும் இது சுவாரஸ்யமான கதை என்பதில் ஐயமேதும் இல்லை.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Q (Woman): I love all animals. Sometimes it seems obvious that some animals are more "evolved" than some humans. How can that be if they are from a lower realm than the human realm?

Well, some humans are headed towards the animal realm. Maybe even worse. The primary characteristics of the animal realm is that they are very instinctive. Not very reflective. Caught in a trap they don't think, "Just calm down here. Calm down." They don't think that way. They just start chewing on their arm (which is caught in the trap).

No capacity to stand outside themselves and reflect on their emotions and so forth. They are not particularly hateful or anything. Their drives are primarily food and procreation.

This manifests sometimes in humans as well. Just nothing but food and procreation. That's all. That's everything.

Of course there are realms lower than the animals. What we call hell realms, where the fundamental quality there is anger or hatred. That's what makes you a hell being. Worse than the animals.

Humans seem to be able to begin to manifest all of these characteristics. So you get your mass child murderer and so forth. And there are people who have no reflection or consciousness. They are strictly on instinct. And you get your very humane people. And you get your angelic types. They don't seem to be motivated by ordinary human values characterized by generosity and virtue. No so involved in the world. But very kindly and so forth.

And you do see in the dogs and dolphins, higher emotions are starting to appear. Loyalty, affection, high levels of responsiveness and even sometimes occassionaly self sacrifice. And that animal would be headed for the human realm or starting to manifest the characteristics that might head it for the human realms. But of course while they are in the animal realm even the most evolved animal still has restrictions, just from the form of the animals body and the limits of its brain and so forth. But this overlap, the observations of the emotions that humans and animals share is an interesting matter. In the east because of the notion of reincarnation and so forth the awareness of the range of possibilities in animals has been always there. In the west because of the Christian roots. it was decided early on in the Christian development that the animal was a machine. It did not have a soul. And so a lot of things were excused - cruelty to animals and so forth. A very clear division (between humans and animals). In the Christian tradition there is no rebirth. You die and you go to heaven or hell. What about animals? Well, they don't have a soul. They are kind of machines. They die and that's it. There is a prejudice in how they see animals and strangely enough it is science that reintroduced the idea that animals share exactly some of the emotions of humans. And that is Charles Darwin. In order to advance his theory of evolution that we are somehow evolved out of animals, that we can see these emotions already in the animals and how they evolve. In his, 'Origin of Species,' he has case after case where he is almost an animal sentimentalist. He shows how even ants have these social instincts. He is watching very carefully the behaviour of the animals and their loyalty and affection and all kinds of stuff. You know the term anthropomorphizing (to attribute human form or personality to things not human). You give attributes of humans to a stump or a star attributing to it human characteristics. Prior to that they would say somebody who saw these humans things in animals would be anthropomorphizing . But Darwin from a scientific point of view is saying, 'I am not projecting anything. This is what's there.' A very different attitude.

The Buddha did point out that it is very difficult to get out of the animal realm. This great simili. If you fall into the animal realm what are the chances of getting out? Somebody asked him what are the chances of taking rebirth in the human dimension from the animal dimension. He said, 'Well imagine there is a little circle of wood, floats on the ocean on the great oceans and is blown by wind and currents and moves around. Moved by currents and tides, randomly and there is a blind sea tortoise. This sea tortoise only surfaces once every hundred years. Puts its head up takes a good deep breath every 100 years. What are the chances that when that tortoise puts it head up that he will put it right through the middle of that wood. How long will it take? That is the chance of taking rebirth in the human realm from the animal realm. Ring of wood symbolizes the womb. symbolizes birth. You know the head of a baby looks like a blind sea tortoise. He has no hair and he has his eyes closed and he put his head out of this ring through this ring and he takes a breath of air. His first breath. He is in the water element before that. He is floating around water. underneath the water blind.

That is the chance of getting out of the animal realm. The lack of possibility for reflection. But obviously it does happen even though it is extraordinarily rare. Part of it is a warning. Don't fall into the animal realm to begin with. It is not easy to get out.

But animals specially dogs and cats are very good to practice metta with because they are so unconditional in their response. They are happy to see you everyday. They don't judge you. They don't care how smart you are. If you are an old ugly man and not very smart they still love you. They lick your face. That's good quality. When the dog is manifesting these unconditional happiness to see you he moves these emotions in you. They can change your mood. You can tell him your troubles and so forth. He is always happy to listen there. Sometimes he dozes off a little but is always happy to listen.

In the Buddhist teachings there is quite a bit of concern for the value of animals lives. The Buddha appears in the jataka stories, the previous birth stories, the Buddha appears sometimes, manifests himself as an animal. Sometimes an elephant sometimes a deer. When he does that he manifests some noble qualities. He is working on some situation. So that permeates the Buddhist mind. In Tibet and in some Mahayana traditions they are seeing their mother everywhere. That rabbit over there could have been your mother in your previous life so you hesitate to do anything bad you know. Less so in the Theravada traditions but generally speaking there is very clear concern for not killing animals, casually killing animals. Although there is not a lot of sentimentality in Asian countries. England must be capital of dog sentimentality. The lap dog. The idea of little puppy kissing us out of your face and always on your lap this kind of thing this is very kind of strange to Asia. If you go through villages in Asia the dogs are just live a pretty rough life. They are not lap dogs. They are a rough little street curse. Half of them are mangy and you don't' want to pet one. They are not used to that. So there is a lack of.. Asians find us peculiar in our attitude. One we seem to be not hesitate to kill them but then we don't hesitate to have them sleep with us either. Strange ..cuddling and kissing them at the same time there is a disregard to the value of their lives. Probably they (Asians) are somewhere in between.

Q (Not clear)

Darwin when he was explaining the motives of, why do dogs like people, why do they hang around people, he says because there is a social advantage to it - food and things like that. This behavior of affection and loyalty and all this is an evolutionary behavior that makes you guarantee to get food. That is the evolutionary approach to it. The Buddhist approach will be more that the animal not only have these emotions but also they enjoy these emotions. You can see the dog whenever they are experiencing emotion they wagging their tail. They are really joyful really happy, source of joyfulness as well.

So you get these jataka tales where the Buddha appears as an elephant or deer. Some of them are seem to be fables. Some of them are perhaps more realistic. Some of them are obviously teaching stories like Aesop fables. There is a cute story where the Bodhisatva is born as a pig. There is an old lady who is blind and she has these two pigs. One is a little guy and the other a big guy. They are very clever. She regards them as their sons. She taps around with a cane and these pigs are really very smart. They take care of her and everything. One day the villagers are having a feast or something and are running out of food. They want to get one of these pigs and barbeque it. They eventually try to strike a deal with the old lady and the story goes on. At the end of the story there is various heroism on the part of the pigs and one of the pigs ends up the magistrate of the town. That's where I draw the line. (laughter) My capacity to take the story literally stops at that point. I can see all kinds of meaning and humour in the whole thing and I am sure it was hilarious for the monks to be telling this story. I think a lot of lay people thought 'Times were different then. It was just a different world. Anything was possible.' (laughter) But I don't think so. It is a great story though.

* * * * * *