முகவுரை

அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko

அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்

தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

தணிசாரோ பிக்கு

Compiled and Translated by

Thanissaro Bhikkhu

Introduction

முகவுரை (சுருக்கப்பட்டது)

எனது ஆசிரியரான அஜான் ஃபுவாங் ஜோதிகொ, தாய்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் சந்தபுரி மாநிலத்தில், கம்போடிய நாட்டின் எல்லைக்கருகில் உள்ள சிற்றூரில், 1915 ஆம் ஆண்டு ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். பதினொரு வயதில் அனாதையான அவர், பல பௌத்த விகாரைகளின் ஆதரவில் வளர்ந்து தனது இருபதாம் வயதில் துறவறம் பூண்டார். துறவிகளுக்கான ஒழுக்க விநயங்களைப் படிக்கத் துவங்கியபோது, அவர் தங்கியிருந்த விகாரையில் வாழும் துறவிகள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. எனவே பௌத்த மறை நூட்களுக்கு ஒத்துப் பயிற்சி யளிக்கக் கூடிய ஒரு ஆசிரியர் கிடைப்பாரா என்ற ஏக்கம் அவருள் ஏற்பட்டது. துறவறம் பூண்ட இரண்டாம் ஆண்டு அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அஜான் முன் புரிதத்தோ (Ajaan Mun Bhuridatto) துவங்கிய வனத் துறவற மரபைச் (forest ascetic tradition) சார்ந்த அஜான் லீ தம்மதாரோ (Ajaan Lee Dhammadharo) சந்தபுரிக்கு வெளியே ஒரு பழைய இடுகாட்டில் ஒரு தியான விகாரையைத் துவங்கி யிருந்தார். அவர் போதனைகளைக் கேட்டு உற்சாகம் அடைந்த அஜான் புவாங், அஜான் லீயின் மரபில், மீண்டும் புதிதாகத் துறவு பூண்டு புதிய விகாரையில் இணைந்து கொண்டார்.

அப்போதிருந்து, ஒரு சில வருடங்கள் தவிர, 1961 ஆம் ஆண்டு அஜான் லீ இறக்கும் வரை, அஜான் புவாங் ஒவ்வொரு மழைக்காலச் சங்கமத்திலும் அவருடன் தங்கிப் பயிற்சி பெற்று வந்தார். 1957 ஆம் ஆண்டு பாங்காக் அருகே அஜான் லீ, வாட் அசோகரம் (Wat Asokaram) என்ற புதிய விகாரையை நிறுவியபோது அஜான் புவாங் அங்கு சென்று அவருக்குத் துணையாகப் பணி புரிந்தார். அதுவே அஜான் லீயின் இறுதித் திட்டமாகும்.

அஜான் லீயின் மரணத்திற்குப் பிறகு வாட் அசோகரம் (Wat Asokaram) விகாரையின் தலைமைப் பிக்குவாக அஜான் ஃபூவாங் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அந்த விகாரை சமாளிக்க முடியாத அளவுக்கு விரிவாகி விட்ட படியால் அவருக்கு அந்தப் பதவியில் நாட்டம் ஏற்படவில்லை. 1965 ஆம் ஆண்டு தாய்லாந்தின் தலைமைத் துறவி (Supreme Patriarch) - இது ஒரு அரசுப் பதவி - அவரை மழைக்காலச் சங்கமத்தின் போது மன்னம் மணி மகுட கோவில் என்று அழைக்கப்படும் வாட் மாகுட் கசாதிரியாரம் (Wat Makut Kasatriyaram) விகாரைக்கு வந்து அவருக்கும் மற்ற துறவிகளுக்கும் தியானம் கற்பிக்குமாறு அழைத்த போது அந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன் படுத்திக் கொண்டார்.

மூன்று மழைக்காலச் சங்கமங்களின் போது அஜான் புவாங் வாட் மாகுட்டில் தங்கியிருந்தார். சங்கமம் தவிர்த்த பிற மாதங்களில் அவர் தனிமையை நாடி நாட்டுப் புறப் பகுதிகளில் அலைந்து திரிந்தார். அவருக்குத் தாய்லாந்தின் தலைமைப் பிக்குவின் மேல் தனிப்பட்டமுறையில் பெருமதிப்பு இருந்தும் அங்கு மேல் மட்டத்தில் நடைபெற்ற நடைமுறை விவகாரங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே அங்கிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 1968 ஆம் ஆண்டு ஒரு பெண், மலைப் பிரதேசத்தில் ஒரு விகாரையைத் துவங்குவதற்காகத் தலைமைப் பிக்குவிடம் தானமாகத் தந்த ஒரு சிறிய இடத்தில் அதை அமைப்பதற்கான பொறுப்பை அஜான் ஃபுவாங் - நிலையான தலைமைப் பிக்கு ஒருவர் கிடைக்கும் வரை - தற்காலிகமாக ஏற்றுக் கொண்டார். அதுவே சந்தபுரியின் அருகில் ரயாங் மாநிலத்தில் அமைந்த வாட் தம்மாசாகித் (Wat Dhammasathit) என்ற விகாரையானது. ஆனால் ஏழ்மை மிகுந்த அப்பகுதியில் வாழ்ந்த எளிய கிராம மக்கள் ஆழ்ந்த தியானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விகாரை அமைவதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே அங்கு தலைமைப் பிக்குவாகப் பொறுப்பேற்க யாரும் முன் வரவில்லை. அதனால் 1971 ஆம் ஆண்டு அவரே அந்த விகாரையின் தலைமைப் பிக்குவாகப் பொறுப் பேற்றுக் கொண்டார்.

அவர் தலைமைப் பிக்குவாகப் பொறுப்பேற்றுக் கொண்ட கொஞ்ச காலத்திற்குப் பின், 1974 ஆம் ஆண்டு நான் அவரை முதன் முதலில் அந்த விகாரையில் சந்தித்தேன். அப்போது வாட் தம்மசாகித் (Wat Dhammasathit ) விகாரை மிக வறுமையான தோற்றம் பூண்டிருந்தது. மூன்று துறவிகள் மூன்று சிறு குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். ஒரு சமயலறை, அதை ஒட்டியிருந்த ஓர் அறையில் இரண்டு பெண் துறவிகள் தங்கியிருந்தனர். மலையின் உச்சியில் மரத்தினால் அமைக்கப்பட்ட சிறு கட்டிடம் ஒன்றும் இருந்தது. அங்கு தான் நான் தங்கியிருந்தேன். அங்கிருந்து பார்த்தால், தென் பகுதியில் கடல் தெரிந்தது. அந்த இடம் தானம் செய்யப்படுவதற்கு முன் காட்டுத் தீ பரவியிருந்ததால் அங்கு மரங்கள் எதுவும் இல்லாமல் ஒரு வகைப் புற்கள் மட்டுமே வளர்ந்திருந்தன. ஆனால் அருகில் இருந்த மலைகள் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தன.

வசதியற்ற அந்தச் சூழ்நிலையிலும் அஜான் ஃபுவாங்கிடத்தில் தெளிவான உலகியல் ஞானம் தென்பட்டது. அவரிடம் இருந்த உள அமைதியையும், மகிழ்ச்சியையும், நிதானத்தையும் கண்டு எனக்குள் அப்படி ஒரு மன நிலை உண்டாகாதா என்ற ஏக்கமும், அவர் மீது மிகுந்த மரியாதையும் ஏற்பட்டது. அவருடன் தங்கிச் சில மாதங்கள் பயிற்சி பெற்ற பின் நான் அமெரிக்கா திரும்பினேன். பின்னர் 1976 ஆம் ஆண்டு மீண்டும் அங்கு திரும்பி வந்து அவரிடம் துறவறம் பெற்று ஆர்வத்துடன் பயிற்சியை மேற்கொண்டேன்.

1986 ஆம் ஆண்டு ஒரு மாணவரின் அழைப்பின் பேரில் ஹாங்காங் (Hong Kong ) சென்றிருந்த அஜான் ஃபுவாங்கிற்குத் தியானம் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மாணவர் உடனே ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே, தான் இறந்தபின் தன் உடலைத் தகனம் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தபடியால் அவருக்கு ஒரு கல்லறை மண்டபம் கட்டும் வேலை உடனே துவங்கியது. என்னிடம் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவரைப் பற்றிய தகவல்கள் மற்றவர்களிடம் இருந்ததை விட என்னிடத்தில் தான் அதிகம் இருந்தன. சிறு வயதில் அவருடன் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் காலமாகி விட்டனர் அல்லது அவர்களது முதிர்ந்த வயதில் ஞாபக மறதியின் காரணமாக அவர்களிடமிருந்து அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிய வில்லை. அவர் என்னிடம் சொன்ன உவமானங்களும், அஜான் லீயுடன் அவர் வாழ்ந்த போது நடந்த நிகழ்ச்சிகளையும் இணைத்து அவர் வாழ்க்கை வரலாறு உருவாக்கப் பட்டது. அவரை முதலில் சந்தித்த போது எனக்குத் தாய் மொழி சரியாகப் புரியாததனால் அவர் சொன்ன எத்தனையோ செய்திகளை நான் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம் என்பதை நினைக்கும் போது இன்னமும் எனக்குத் துயரம் உண்டாகிறது.

மேலும் அவர் போதனைகளில் மிகச் சிலவே வருங்காலச் சந்ததியினருக்குக் கிடைத்திருக்கிறது என்பதை எண்ணும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. பொதுவாக அவரது போதனைகளை அவர் பதிவு செய்ய அனுமதித்ததில்லை. ஏனென்றால் அவற்றைக் கேட்பவர் உடனே அவற்றைப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதே அவர் விருப்பம். மேலும் ஒருவரது சூழ்நிலைக்கேற்பக் கூறப்படும் அறிவுரை வேறு சூழ்நிலையில் உள்ளவர்களுக்குப் பொருந்தாமல் போகலாம் என்றும் அவர் கருதினார். அதனால் அவர் என்னிடம் கூறியதை எல்லாம் நினைவில் கொண்டுவந்து எழுதி, பின் அவரது மற்ற மாணவர்களிடமும் கலந்து, பேட்டி கண்டு இரண்டு வருட முயற்சிக்குப் பின்னர் அவற்றை எல்லாம் மூன்று புத்தகங்களாக தொகுத்து வெளியிட்டோம். நீங்கள் வாசிக்கும் இந்தப் புத்தகம் அந்த மூன்று பகுதிகளிலிருந்தும் பொறுக்கியெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளால் தொகுக்கப்பட்டதேயாகும். அஜான் ஃபுவாங் வார்த்தைகளோடு விளையாடுவார். அவரின் நகைச்சுவைத் தன்மைதான் என்னை அவரிடம் முதலில் ஈர்த்தது. ஆனாலும் பெரும்பாலானவை தாய் மொழியும் தாய்லாந்து நாட்டுக் கலாச்சாரமும் தெரிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதால் ஒரு சிலவற்றைத் தவிர (உதாரணத்திற்காக 'குப்பை' பற்றிய கதையைச் சேர்த்துள்ளோம்) மற்ற கதைகளை விட்டு விட்டோம்.

ஒரு சமயம் சில தாய்லாந்து மக்கள் என்னிடம் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்று கேட்டார்கள். மற்றவர் மனத்தைப் படிக்கக் கூடிய அவரது ஆற்றலும், இயற்கை நியதிகளுக்கு அப்பால் அவரிடம் இருந்த சித்த சக்திகளைப் பற்றியும் கூறுவேன் என்று எதிர்பார்த்து அவர்கள் கேட்ட கேள்வி அது. அது போன்ற சக்திகளும் அவரிடம் இருந்தன - எனது மனத்தை அவர் எவ்வளவு அறிந்திருந்தார் என்பது வியக்கத்தக்கது - ஆனால் அவரிடம் நான் கண்ட மிகவும் சிறந்த இயல்பு அவரது அன்பும், மனிதாபிமானமும் தான் என்றேன். நான் அவருடன் சேர்ந்து இருந்த பல ஆண்டுகளில் தான் தாய்லாந்து நாட்டவர், நான் மேற்கத்தியன் என்ற பாகுபாட்டை ஒருபோதும் எனக்கு அவர் உணர்த்தியதில்லை. எங்களுள் இருந்த கருத்துப் பரிமாற்றம் காலாச்சார மாறுபாடுகளுக்கு அப்பாற் பட்ட நேரடியான தொடர்பாகவே இருந்தது. எனக்குத் தெரிந்த அவரது மற்ற மாணவர்களும் இதே வார்த்தைகளால் அவரைப் பற்றிச் சொல்லா விட்டாலும் இந்த இயல்பை அவர் கொண்டிருந்தார் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள்.

நான் அஜான் ஃபுவாங்கிடம் கற்றதை இந்தப் புத்தகம் மூலமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மிகுந்த மரியாதையுடன் அவர் நினைவுக்கு இதனை அர்ப்பணிக்கின்றேன். அவர் என்னிடம் ஒரு முறை அஜான் லீ இல்லாதிருந்திருந்தால் தனக்கு வாழ்க்கையின் பிரகாசமே தெரிந்திருக்காது என்று கூறினார். அதே காரணத்துக்காக நானும் அவருக்குக் கடன் பட்டிருகின்றேன்.

தணிசாரோ பிக்கு

Thanissaro Bhikkhu

(Geoffrey DeGraff)

Wat Metta

http://www.watmetta.org/

* * * * * * *