உன்னத மனோநிலைகள்

நான்கு உன்னத மனோநிலைகள்

தணிசாரோ பிக்கு

The Sublime Attitudes

Thanissaro Bhikkhu

In English

நல்லெண்ணம்/அன்பு (பாலியில்: மெத்தா) Loving Kindness

கருணை (கருணா) Compassion

மற்றவர் வெற்றியைப் பாராட்டல் (முதிதா) Sympathetic Joy or Appreciation

மன நிதானம்/அமைதி (உபேக்கா) Equanimity

திறமையான மனத்தின் இயல்புகளைப் பற்றிப் பேசும் போது புத்தரின் போதனைகள் கொத்துக் கொத்தாக வருகின்றன: இந்த ஐந்து, அந்த ஏழு என்று. எச்சமயத்திற்கும் பொருத்தமான ஓர் இயல்பான நிலை - மனத்தின் அறிந்த நிலை - கூட மற்றவற்றோடு சேர்த்தே கற்பிக்கப் படுகிறது. உதாரணமாக இந்த அறிந்த நிலை மனத்தின் கவனத்தோடு இணைக்கப் படுகிறது. அறிந்த நிலை என்றால் ஒன்றை மனத்தில் நினைத்திருப்பது. உதாரணமாக, தியானம் செய்யும் போது மூச்சோடு ஒன்றியிருந்து அதைத் தொடர்ந்து நினைவில் வைத்திருப்பது. கவனம் என்றால் நிகழ்வதைக் கவனிப்பது. என்ன செய்கிறோம் என்பதையும், அதன் விளைவுகளையும் கவனிப்பது. (உதாரணம்: தியானம் செய்யும் போது உள்மூச்சு எடுத்துக் கொண்டிருக்கிறோமா அல்லது வெளிமூச்சு எடுத்துக் கொண்டிருக்கிறோமா என்பதைக் கவனிப்பது; நீண்டமூச்சா, குறுகிய மூச்சா என்பதைக் கவனிப்பது போன்றவை.) அறிந்த நிலை மனத்துக்குப் பயிற்சி அளிக்க வேண்டுமென்றால் அது கவனத்தோடு சேர்ந்தே இருக்க வேண்டும். மேலும் இவை இரண்டும் மேலும் பெரிய குழுக்களாக விளக்கப்படும் போதனைகளோடு சேர்த்துக் கற்பிக்கப் படுகின்றன. ஐந்து சக்திகள், ஞானம் பெறத் தேவையான ஏழு காரணிகள், அஷ்டாங்க (எட்டு) மார்க்கம் என்பனவற்றிலும் அறிந்த நிலை /கவனம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.

திறமையான பண்புகளைப் புத்தர் ஏன் குழுக்களாக ஒன்று சேர்த்தே கற்பித்தார் என்றால் திறனற்ற பண்புகளும் குழுக்களாகவே வருவதால் தான். திறனற்ற பண்புகளின் மூன்று வேர்களாவன - பேராசை, வெறுப்பு மற்றும் மாயை அல்லது அறியாமை. இவை மேலும் ஐந்து தடங்கல்கள், ஏழு பீடிகைகள், பத்துத் தடைகள் அல்லது விலங்குகள், நூற்றெட்டு விதமான அவா என்று விரிவடைந்து கொண்டே செல்கின்றன. ஒரே ஒரு திறமையான பண்பு மட்டுமே இவற்றை எதிர் கொள்ள முடியாது. ஒவ்வொரு திறமையான பண்பும் மற்ற பண்புகளின் ஆதரவோடு வலுவடைந்து முழு மனத்தையும் பயில்விப்பதில் ஈடுபடுகின்றது. அதே சமயத்தில் ஒரு பண்பு மட்டும் அளவு மீறிச் சென்றுவிடாமல் மற்ற பண்புகளால் சம நிலைப் படுத்தப்பட்டும், எல்லை கடந்து எதிர்ச் சக்திகளின் கருவியாகி விடாமல் தடுக்கப் பட்டும் விடுகின்றன. இதனாலேயே புத்தர் வெற்றிக்கான நான்கு அடித்தளங்கள், ஞானம் பெறத் தேவையான ஏழு குணங்கள், நான்கு உன்னத மனநிலைகள் என்ற போதனைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். இவை மாறனின் படைகளை (அதாவது மேற்கூறிய திறனற்ற பண்புகளை) எதிர்த்துச் சவால் விடும் திறமையான பண்புகளைக் கொண்ட படைகள்.

இது போன்ற வெவ்வேறு பட்டியல்களைப் பார்க்கும் போது - ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,ஆறு என்று எத்தனையானாலும் சரி, நாம் முதற் பண்பில் துவங்கி, பின் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக மற்ற பண்புகளையும் வளர்க்க வேண்டும் என நினைக்கலாம். ஆனால் செயல் தொடர் அப்படி இல்லை. ஒரு வரிசையில் உள்ள அனைத்துப் பண்புகளையும் ஒன்று கூட்டி மனதைச் சமநிலையில் சாந்தமாக வைத்திருக்க ஏதோ ஒன்றைச் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்றார்ப் போலச் சார்ந்திருக்க வேண்டும். இந்த கொள்கைதான் நான்கு உன்னதமான நிலைகளுக்கும் பொருந்தும். அளவிடமுடியா நல்லெண்ணம் (பாலி மொழியில் மெத்தா), அளவிடமுடியா கருணை (கருணா), அளவிடமுடியாப் பாராட்டல்/மற்றவர் வெற்றியில் மகிழ்தல் (முதிதா), அளவிடமுடியா மனத்தின் நிதானம் (உபேக்கா).

அளவிடமுடியா நல்லெண்ணம் (மெத்தா)

நாம் நல்லெண்ணத்தோடு துவங்குவதற்குக் காரணம் நான்கில் அதுவே குறைந்த முன்னேற்ற மடைந்த பண்பு என்பதால் அல்ல. அது மிகமிக அத்தியாவசியமென்பதாலும், அடிப்படையானது என்பதாலும் தான். அதைக் கொண்டு மற்ற பண்புகளை வளர்த்துக் கொள்கிறோம்: அதாவது கருணை, பாராட்டு அல்லது மற்றவர் வெற்றியில் மகிழ்தல் மற்றும் இறுதியாக மனத்தின் நிதானம் போன்றவற்றை வளர்த்துக் கொள்கின்றோம். சமநிலையில் உள்ள மனம் இந்த நான்கு பண்புகளில் எதனை வலியுறுத்த வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறது. முதல் பண்பை விட்டுவிட்டு இரண்டாம் பண்பிற்கோ நான்காவதற்கோ செல்வதென்பதில்லை; நான்கையும் கைவசம் வைத்துக் கொண்டு சமயத்துக்குத் தகுந்தார்ப்போல் ஏதாவது ஒன்றைப் பயன் படுத்துகிறது.

நல்லெண்ணமே அனைத்து விஷயங்களின் அத்திவாரமாக உள்ளது. நல்லெண்ணமே பௌத்தப் பயிற்சியின் அடித்தலமாக உள்ளது என்றும் கூறலாம். நமக்காகவும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடத்தும் நமக்கு நல்லெண்ணம் இல்லையென்றால், நான்கு மேன்மையான வாய்மைகள் முக்கியமான போதனையாகத் தெரியவராது. நாம் துக்கத்தின் முடிவைக் காணவிரும்புவதாலும், நம்மைச் சுற்றியுள்ளோரும் துக்கத்தின் முடிவைக் காண வேண்டும் என்று நாம் விரும்புவதாலும்தான் நாம் துக்கத்தின் முடிவிற்குக் கொண்டு செல்லும் மார்க்கத்தைக் கடைப்பிடிக்க விரும்புகிறோம். துக்கம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளவும், அதன் காரணிகளை விட்டு விலகவும், அதன் முடிவை அறியவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம்.

ஆகவே நல்லெண்ணத்துடன் தான் அனைத்தும் துவங்குகிறது. எண்ணிப் பாருங்கள்: மற்றவர் துன்பப்படவேண்டும் என்று நாம் ஏன் விரும்பவேண்டும்? அவர்கள் கடந்த காலத்தில் செய்த பாவங்களையும், கொடிய செயல்களையும் நாம் உணர்ந்திருந்தாலும் கூட அவர்கள் இப்போது துன்பப்பட வேண்டும் என்று நாம் ஏன் விரும்பவேண்டும்? பாடம் கற்றுக் கொள்வார்கள் என்பதாலா? கம்மக் கொள்கையினால் வினைப்பயனை அனுபவித்து எப்படியும் அவர்கள் பாடம் கற்கத்தான் போகிறார்கள் - அதனாலேயே மனத்தின் சம நிலைபற்றிய போதனை உள்ளது - ஆகையால் கடவுளின் பழிவாங்கும் வாளாக இருந்து அனைவருக்கும் அவர்களுக்கு உகந்த தண்டனையை நீங்கள் தர வேண்டியதில்லை .

நல்லெண்ணத்தை அளவற்றும், தடையின்றியும் சேர்த்திருப்பதுதான் உங்கள் ஒரே கடமை. மக்கள் கொடுமைகளைச் செய்திருந்தால், அவர்களை உங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் செய்த செயல்களைப் பொறுத்துக்கொள்ளவோ, மறந்துவிடவோ வேண்டியதுமில்லை. நல்லெண்ணம் என்பது இது போன்றது அல்ல. நல்லெண்ணம் என்பது யாருக்கும் தீங்கு ஏற்படவேண்டும் என்று நினைக்காமலிருப்பதே. அவர்கள் கொடுமைகள் செய்தால் அவர்களைத் தடுப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது - அவர்கள் கொடுமைகள் செய்வதால் கெட்ட கம்மம் செய்கின்றனர். அத்தீவினைப்பயன் காரணமாகத் தங்களுக்கே துன்பம் விளைவித்துக் கொள்கின்றனர். அவர்களைத் தடுக்கும் முயற்சியில் அவர்களுக்கு நீங்கள் தீங்கு செய்யாமலிருந்தால் சரி.

எனவே உங்கள் நல்லெண்ணத்தை அளவற்றதாக ஆக்க முயலுங்கள் அல்லது (பௌத்த) புத்தகங்கள் கூறுவது போலக் கணக்கிலடங்காதவண்ணம் செய்து விடுங்கள். இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள். நல்லெண்ணத்தைப் பரப்பும் போது அதன் எல்லை எங்குள்ளது என்பதைச் சோதித்துப் பாருங்கள். உங்கள் நல்லெண்ணத்துக்கு அளவே இல்லை என்று பாசாங்கு செய்ய வேண்டாம். எல்லோரின் நல்லெண்ணத்திற்கும் ஆரம்பத்தில் ஒரு எல்லை உண்டு. உங்கள் எல்லை எங்குள்ளது? முதலில் நல்லெண்ணத்தை ஏற்கனவே தோன்றுபவர்கள் மீது செலுத்தியபின் - உங்கள் நண்பர்கள், உங்கள் குடும்பத்தினர் - தானாகவே நல்லெண்ணம் தோன்றாதவர்கள் மீது செலுத்துங்கள். உங்களுக்குப் பிடிக்காதவர் மீது நல்லெண்ணத்தைச் செலுத்தும்போது உங்கள் உள்ளம் ஆட்சேபிக்கிறதா? நிறுத்தி அதைக் கேளுங்கள்: ஏன்? அவர்கள் துன்புறுவதைபக் காண்பதில் உங்களுக்கு என்ன பலன்? உங்கள் உள்ளத்தில் உள்ள ஒரு சிறு குரல் அவர்கள் மகிழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாததைக் கவனியுங்கள். இப்படிப்பட்ட குரலோடு நீங்கள் சம்பந்தப்பட விரும்புகின்றீர்களா? இந்த மனப்போக்கை விட்டுவிட முடியாதா?

இங்கு தான் நல்லெண்ணத்தை வளர்க்கும் பயிற்சி மனத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது. உங்கள் உள்ளத்தில் உள்ள சிறுமைக்கு அல்லது குறுகிய மனப்பான்மைக்குச் சவால் விடுகிறது. நல்லெண்ணம் என்பது உலகத்தைப் பஞ்சு மிட்டாய் போட்டு மூடி மறைப்பது இல்லை. அப்படிச் செய்வது உங்கள் உண்மையான மனப்போக்கை மூடி மறைப்பது போன்றதாகும். மனதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள அது பயன்படாது. நல்லெண்ணம் ஒரு சவாலை ஏற்பது போல. உள்ளத்தில் உள்ள சிறுமைப் பண்புகளை ஒவ்வொன்றாகத் தேடி அவற்றை ஆராய்ந்து வேரோடு பிடுங்கிப் பின் உண்மையிலேயே அவற்றைக் கைவிட்டு விடவேண்டும். இவ்வாறு தெளிவாக அறிந்து செயற்படுவதினாலேயே நல்லெண்ணம் படிப்படியாக அளவு கடந்து வளர்கிறது.

அளவிடமுடியா கருணை (கருணா)

அப்போது தான் உங்கள் கருணையும் அளவற்றதாகப் பெருக முடியும். மக்களின் மீது நல்லெண்ணம் தோன்றினால், அவர்கள் தீவினை காரணமாகத் துன்பமுற்றால் அவர்கள் மீது இயல்பாகவே அனுதாபம் உண்டாகும். அவர்கள் அனுபவிக்கும் வலியோ, துயரமோ நீங்கவேண்டும் என்று விரும்புவது மட்டுமின்றி அவர்கள் துன்பத்தைத் தோற்றுவிக்கும் செயல்களையும் செய்யாதிருக்க வேண்டுமென விரும்புவோம். இது கருணையின் ஒரு முக்கியப் பகுதி. உங்கள் உள்ளத்தில், துன்பம் அனுபவிக்கும் மக்களுக்காக ஒரு மென்மையான இடம் இருப்பது மட்டுமல்லாமல் எப்படியாவது அவர்கள் செய்யும் தீவினையையும் செய்யாது தவிர்க்க முற்படவேண்டும். ஏனென்றால் அதன் காரணமாகத்தானே அவர்கள் துன்புறுகின்றனர்?

அளவிடமுடியாப் பாராட்டல்/மற்றவர் வெற்றியில் மகிழ்தல் (முதிதா)

அவர்களுக்கு உதவி புரிய முடிந்தால் அவர்கள் மகிழ்ச்சியுறும் போது அவர்களைப் பாரட்டவும் முடியும். அவர்கள் மகிழும் போது நாமும் மகிழ்வோம். அவர்களின் மகிழ்ச்சிக்கு நீங்கள் காரணமாக இல்லையானாலும், அவர்கள் செய்த நல்வினையினாலும், செய்து கொண்டிருக்கும் நல்வினையின் காரணமாகவும் அவர்கள் தற்போது சந்தோஷப்படுவதைக் கண்டு நாமும் அவர்களைப் பாராட்டுவோம். அவர்கள் மகிழ்வதால் நாம் மனக்கசப்புக் கொள்ளக் கூடாது. நீங்கள் ஒரு பந்தயத்தில் கலந்து கொள்ளும் போது மற்றவர் உங்களை முந்திக் கொண்டு முதல் இடம் பிடித்து, நீங்கள் இரண்டாவதாக வந்தாலும், நீங்கள் தான் வெற்றி பெறுவதற்கு அதிகத் தகுதியானவர் என்று நினைக்கும்போது கூட இந்த அனுதாப மகிழ்ச்சியைப் பயிற்சி செய்வது அவசியம். இவை எல்லாம் நாம் அறிந்துள்ளதைவிடச் சிறந்த சட்ட திட்டங்களோடு செயற்படுகின்றன.

அளவிடமுடியா மனத்தின் நிதானம் (உபேக்கா)

ஒன்றைக் கவனிக்க வேண்டும். சில சமயம் நடப்பதை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டிய நேரம் வரும். ஒருவருக்கு உதவலாம் என்று நினைத்தாலும் உங்களால் அது இயலாமல் போகலாம். இது போன்ற சமயங்களில் மன நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மன அமைதியைப் பற்றிய போதனை கம்மக் (கர்ம, வினை, செய்கை) கோட்பாட்டைப் பிரதிபலிப்பதை அறிந்து கொள்ள வேண்டும். உன்னத மனநிலைகளைப் பற்றிய திருப்பாவினை ஓதும் போது அமைதியைப் பற்றிய வரிகளே உள்ளதை உள்ளவாறு கூறுகின்றன. மற்றவை:

"எல்லா உயிர்களும் மகிழ்ச்சியோடு இருப்பார்களாக.

அவை யாவும் துன்பமும் துயரமும் இல்லாமல் இருப்பார்களாக.

அவை யாவும் அனுபவிக்கும் நல்லதிர்ஷ்டத்தை இழக்காமல் இருப்பார்களாக."

முதல் மூன்று வரிகளும் இவ்வாறு நடைபெறவேண்டும் என்ற நமது விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றன. நான்காவதோ உள்ளதை உள்ளபடியே பிரதிபலிகின்றது.

"எல்லா உயிர்களும் தங்கள் செய்கையின் சொந்தக்காரர்கள். தங்கள் செய்கையின் வாரிசுகள்....அவர்கள் என்ன செய்தாலும் அது நல்லதோ, தீயதோ அதன் விளைவுக்கு வாரிசாகின்றனர்."

கம்மக் கோட்பாடு நமது செய்கைக்கு நாமே பொறுப்பு என்கிறது. நாம் விதிக்கோ, நட்சத்திரங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ பலியானவர்கள் இல்லை. தெரிவுகள் செய்வது நாம் தான். இது ஒரு நம்பிக்கை தரும் கோட்பாடு.

ஆனால் இது விவேகம் கலந்த நம்பிக்கை. நமது செய்கையினால் நல்லது செய்யும் சக்தியும் நமக்கு உள்ளது, அதே சமயம் தீயது செய்யவும் சக்தியுள்ளது. கம்மக் கோட்பாடு இரு முனை உள்ள கத்தியைப் போல. விழிப்போடு இல்லாவிட்டால் நமது கழுத்தையே அது அறுத்துவிடும். கம்மக் கோட்பாட்டினைப் பிரதிபலிக்கும் போது விவேகம் உண்டாகும் வகையில் பிரதிபலிக்க வேண்டுமெனப் புத்தர் அறிவுறுத்துகிறார்.

கம்மக் கோட்பாட்டினைப் பிரதிபலிக்கும் போது நாம் நம்மிடமும் மற்றவரிடத்தேயும் மன நிதானத்தை வளர்த்துக் கொள்கிறோம். நமது வாழ்க்கையில் சில சமயம் சந்திக்கும் சம்பவங்கள் நமக்குத் தேவைப்படும் மகிழ்ச்சியைத் தராமல் இருக்கலாம். அங்கு ஒரு கம்மத் தடை உள்ளது. அப்போது அந்தச் சூழ்நிலையை மன நிதானத்தோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்படியென்றால் முழுமையாகச் செயற்படாமலும் அக்கறையற்றும் இருப்பதென்று பொருள் அல்ல. மாற்றம் செய்ய முடியாத இடங்களில் சுவற்றில் தலையை மோதிக் கொண்டு நேரத்தையும் சக்தியையும் வீணாக்கவேண்டாம். மாற்றம் செய்யக் கூடிய இடத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

எனவே மன நிதானம் என்பது நம்பிக்கையற்று இருப்பதல்ல; செயற்படாத, அக்கறையற்ற நிலையும் அல்ல. அது உங்கள் கவனத்தையும் சக்தியையும் சரியான திசையில் திருப்பு வதற்கும், உங்கள் நலத்திற்காகவும் மற்றவர் நலத்திற்காகவும் நடவடிக்கை எடுக்க வைப்பதற் காகவுமே உள்ளது.

* * * * * *

©2006 Thanissaro Bhikkhu. "Meditations 2: Dhamma Talks", by Thanissaro Bhikkhu. Access to Insight (Legacy Edition), 30 November 2013, http://www.accesstoinsight.org/lib/authors/thanissaro/meditations2.html .