வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
புத்த பகவான்
புத்தரின் இயற்பெயர் சித்தத்த. வடமொழியில் சித்தார்த்தர்: அவருடைய கோத்திரப் பெயர் கோதமர் (வடமொழி கௌதமர்). அவர் கி. மு. ஆறாம் நூற்றாண்டிலே வட இந்தியாவில் வாழ்ந்தார். அவருடைய தந்தை சுத்தோதனர் சாக்கியர் அரசை ஆண்டார். இஃது இன்று நேபாளராச்சியத்திலுள்ளது. அவருடைய தாயார் மாயா என்ற பேருடைய ராணி. அக்கால வழக்கப்படி சித்தார்த்தருக்குப் பதினாறு வயதானதும் யசோதரா என்ற அழகிய கற்புடைய அரசகுமாரியை மணம்புரிந்தனர். அரசிளங்குமாரனான சித்தார்த்தர் சகல சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்ந்து வந்தார். ஆனால் வாழ்வின் உண்மை நிலையையும் மனிதகுலம் அனுபவித்துவரும் துன்பங்களையும் அவர் திடீரென உணர்ந்து அதற்குத் தீர்வுகாண வேண்டுமென நிச்சயித்தார். மன்பதை படும் அல்லலைத் தீர்க்க வழிகாண வேண்டுமெனத் திட சங்கற்பங் கொண்டார். தமது 29 ஆவது வயதில் அவர் ராகுலர் என்ற ஒரு குழந்தைக்குத் தந்தையான போது, ராச்சியத்தைத் துறந்து, மன்பதையின் துன்பத்தை நீக்கும் மார்க்கத்தைக் காண்பதற்காகத் துறவியானார்.
இவ்வாறு கோதமர் பரிவிராஜகராக ஆறுவருடம் கங்கைப்பள்ளத்தாக்கில் அலைந்து திரிந்தார். பிரசித்தி பெற்ற பல சமய ஆசாரியர்களைச் சந்தித்தார். அவர்களுடைய சமயமுறைகளையும், பயிற்சிகளையும் பயின்று அவற்றைப் பின்பற்றினார். கொடிய தவங்களைச் செய்தார். ஆனால் அவருக்குத் திருப்தி கிடைக்கவில்லை. எனவே பரம்பரையான சமயங்களையும் வைதீக முறைகளையும், கைவிட்டுத் தன் மனதுக்கு ஏற்ற வழியில் சென்றார். இவ்வாறு ஒரு நாள் மாலை புத்தகயாவிலுள்ள (இந்நகர் இன்று பீகாரைச் சேர்ந்த கயா நகருக்குச் சமீபத்திலுள்ளது) நிரஞ்ஜரா நதிகரையில் ஒரு மரத்தினடியில் (இம்மரம் அந்நாளிலிருந்து, "போதி மரம்" அதாவது ஞான விருட்சம் என வழங்கப்படுகின்றது) இருந்து ஞான ஒளி பெற்றார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து. இந்த ஞானதரிசனம் பெற்றபின்னர் அவர் "புத்தர்" (ஞான ஒளி பெற்றவர்) என்ற பெயரைப் பெற்றார்.
இவ்வாறு ஞானம் பெற்ற கௌதமபுத்தர் தமது பழைய நண்பர்களான ஐந்து சந்நியாசிகளுக்குக் காசிக்குச் சமீபத்திலுள்ள இசிபதனா என்ற நகரில் உள்ள மாந்தோப்பில், முதலாவது தருமோபதேசத்தைச் செய்தார். இசிபதனா நகரம் இன்று, சாரநாத் என வழங்கப்படும். அன்று தொட்டு நாற்பத்தைந்து வருடமாக அவர் சகல வகுப்பையும் சேர்ந்த ஆண் பெண் இருபாலார்க்கும் புத்ததருமத்தைப் போதித்தார். அரசரும், பாமரரும், பிராமணரும், ஈனசாதியினரும், செல்வரும், பிச்சைக்காரரும், துறவிகளும், கொள்ளைக்காரரும் என்ற எத்திறத்தவர்க்கும் எவ்வித பேதமுமின்றிப் போதித்தார். அவர் சாதிபேதமோ, சமூக அந்தஸ்தோ பார்க்கவில்லை. எவர் தமது தர்மத்தைப் புரிந்து கொண்டு அதை அனுட்டிக்க விரும்பினரோ அவர்களுக்கெல்லாம் அவர் தருமத்தைப் போதித்தார். ஆண் பெண் வித்தியாசமின்றி எல்லார்க்கும் தருமத்தின் வழி திறக்கப்பட்டிருந்தது.
இன்று உத்திரப் பிரதேசம் என்று வழங்கப்படும் வட இந்தியாவிலுள்ள பகுதியில் அக்காலத்தில் குசிநாரா என்று பெயர் பெற்ற நகரிலே புத்தர் தமது எண்பதாவது வயதில் பரிநிர்வாணமடைந்தார்.
இன்று பௌத்தம் இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போஜியா, லாவோஸ், வியட்னாம், திபெத்து, சீனா, ஜப்பான், மொங்கோலியா, கோரியா, போர்மோசா ஆகிய தேசங்களிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும், சோவியத் ராச்சியத்திலும் காணப்படுகிறது. உலகில் இன்று 50 கோடிக்கு அதிகமானோர் பௌத்த சமயத்தை அனுட்டிக்கிறார்கள்.