புத்த பகவானின் முதல் உபதேசம்

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

புத்த பகவானின் முதல் உபதேசம்

Buddha's First Discourse

தம்ம சக்கப் பவத்தன சுத்தம்

Dhammacakkappavattana Sutta

அறிவாழி ஓச்சுதல் [1]

இவ்வாறு நான் கேள்விப்பட்டேன். பகவான் ஒருமுறை வாரணாசிக்குச் (காசி) சமீபத்திலுள்ள இசிபத்தானத்திலுள்ள (ரிஷிகள் வசிப்பிடம்) மான் தோப்பில் வசித்தருளிய காலத்தில் ஐந்து பிக்குக் கூட்டத்தவர்க்கு உபதேசம் செய்தார்: 'பிக்குகளே, இல்லறத்தைத் துறந்து பரிவிராஜகனாகச் சென்ற துறவி, இந்த இரு தீவிர மார்க்கங்களையும் பின்பற்றக்கூடாது. இவ்விருமார்க்கங்கள் எவை? புலன்வருமின்பங்களில் ஈடுபட்டு அதில் மூழ்கி இருக்கிறார்கள். இது கீழானது, சாதாரணமானது, பொதுமக்கள் அனுசரிப்பது, தகுதியற்றது, பயனற்றது. மற்றது தன்னை ஒறுத்து கொடுந்தவஞ் செய்வது. இது துன்பந் தருவது, தகுதியற்றது, பயனில்லாதது.

இந்த இரு தீவிர மார்க்கங்களையும் கைவிட்டுத் ததாகதர் மத்தியவழியை உணர்ந்து கொண்டார். இது காட்சி தருவது. அறிவைக் கொடுப்பது, சாந்தியும் அகக்காட்சியும் உதவி, ஞானஒளி தந்து நிர்வாணத்துக்கு இட்டுச் செல்வது. இந்த நடுவழி என்ன? இதுவே ஆரிய அட்டாங்க மார்க்கம். அதாவது நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செயல், நல்ல ஜீவனோபாயம், நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி. ததாகதர் கண்ட மத்திய வழி இதுவே. இது காட்சிதருவது, அறிவைக் கொடுப்பது. சாந்தியும் அகக் காட்சியும் உதவி ஞானஒளி தந்து நிர்வாணத்துக்கு இட்டுச்செல்வது.

துக்கம் என்ற உயர் வாய்மை இதுவே. பிறப்பு துக்கம், மூப்பு துக்கம், பிணி துக்கம், சாக்காடு துக்கம், அவலக்கவலைக் கையாறு எல்லாம் துக்கமே. வேண்டாதாரோடு சேர்வது துக்கம், வேண்டியவரை விட்டுப் பிரிதல் துக்கம். விரும்பியதைப் பெறாவிட்டால் துக்கம். சுருக்கமாகக் கூறுவதானால் உபாதானப் பஞ்சக்கந்தமும் துக்கமே.

துக்க உற்பத்தி (துக்க சமுதய) என்ற உயர் வாய்மை இதுவே. இந்த வேட்கையே (திருஷ்ணா) புனர் சென்மத்தையும், புனர்பவத்தையும் உண்டுபண்ணுவது. அது காம ஆசைகளோடு பிணைந்திருக்கிறது. இங்கேயும் அங்கேயுமாகப் புதுப்புது இன்பங்களைக் காணுகிறது. இவை புலன் இன்பங்களில் வேட்கை, பவத்திலும் உயிர்வாழ வேண்டுமென்பதிலும் வேட்கை, தான் அழிந்துவிடவேண்டு மென்ற வேட்கை.

துக்க நிரோதம் (துக்கத்தை ஒழித்தல்) என்ற உயர் வாய்மை இதுவே. அந்த வேட்கையை முற்றாக ஒழித்தல். அதைக் கைவிடுதல், துறத்தல், அதிலிருந்து விடுதலை பெறுதல், அதனுடைய தொடர்பை விடுதல்.

துக்க நிரோத மார்க்கம் (துக்கத்தை ஒழிக்கும் மார்க்கம் ) என்ற உயர் வாய்மை இதுவே. அதாவது ஆரிய அட்டாங்க மார்க்கமே. அது நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செயல், நல்ல சீவனோபாயம், நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என எட்டு.

(1) 'இது தான் துன்பமென்னும் உயர்வாய்மை' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதயமானது, ஞானம் (அறிவு) உதயமானது, பஞ்ஞா (விசேட அறிவு) உதயமானது, வித்தியா (பகுத்தறிவு) உதயமானது, ஆலோகம் (ஒளி) உதயமானது.

(2) 'இந்த துக்கமென்னும் உயர்வாய்மை முற்ற முழுதாக அறியப்படல் வேண்டும்' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதயமானது, ஞானம் (அறிவு) உதயமானது, பஞ்ஞா (விசேட அறிவு) உதயமானது, வித்தியா (பகுத்தறிவு) உதயமானது, ஆலோகம் (ஒளி) உதயமானது.

(3) 'இந்த துக்கமென்னும் உயர்வாய்மை முற்ற முழுதாக அறிந்து கொள்ளப்பட்டது' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதயமானது, ஞானம் (அறிவு) உதயமானது, பஞ்ஞா (விசேட அறிவு) உதயமானது, வித்தியா (பகுத்தறிவு) உதயமானது, ஆலோகம் (ஒளி) உதயமானது.

(4) 'இது தான் துக்க சமுதயம் என்னும் உயர்வாய்மை' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.

(5) 'இந்த துக்க சமுதயமென்னும் உயர்வாய்மை முற்றாக நீக்கப் படல் வேண்டும்' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.

(6) 'இந்த துக்க சமுதயமென்னும் உயர்வாய்மை முற்றாக நீக்கப்பட்டது' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.

(7) 'இது தான் துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.

(8) 'இந்த துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை முற்றாக அனுபூதியாக்கப்பட வேண்டும்' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.

(9) 'இந்த துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை முற்றாக அனுபூதியாக்கப்பெற்றது' என்பது பற்றிய .... உதயமானது.

(10) 'இது தான் துக்க நிரோத மார்க்கம் என்னும் உயர் வாய்மை' என்பது பற்றிய .... உதயமானது.

(11) 'இந்த துக்க நிரோத மார்க்கமென்னும் உயர்வாய்மை முற்றாக பின்பற்றப்படல் வேண்டும்' என்பது பற்றிய .... உதயமானது.

(12) 'இந்த துக்க நிரோத மார்க்கம் என்னும் உயர்வாய்மை முற்றாக பின்பற்றப்பட்டது' என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி ... உதயமானது, ஞானம் ... பஞ்ஞா ... வித்தியா .... ஆலோகம் உதயமானது.

இந்த மூன்று பண்புகள் பற்றியும் இந்தப் பன்னிரண்டு வழியிலும் நான்கு உயர் வாய்மைகள் பற்றி உண்மையான அறிவு தெளிவாயில்லாத வரை, பல தெய்வங்களையும் மாரர்களையும், பிரம்மாக்களையும், துறவிகளையும், அந்தணர்களையும், அரச குமாரர்களையும், மனிதரையும் கொண்டுள்ள உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் பூரண ஞான ஒளியை நான் பெற்றுவிட்டதாக உரிமை பாராட்டவில்லை [2].

நான்கு வாய்மைகள் சம்பந்தமான இந்த மூன்று பண்புகள் பற்றியும் 12 வழிகள் பற்றியும் உள்ள உண்மை அறிவின் காட்சி முற்றாகத் தெளிவானதும், பல தெய்வங்களையும் மாரர்களையும், பிரம்மாக்களையும், துறவிகளையும், அந்தணர்களையும், அரச குமாரர்களையும், மனிதரையும் கொண்டுள்ள உலகில் மிக உயர்ந்ததுமாகக் கருதப்படும் பூரண ஞான ஒளியை நான் பெற்றுவிட்டதாக உரிமை பாராட்டினேன். அப்போது உண்மையான அறிவின் காட்சி இவ்வாறு என்னகத்து எழுந்தது. என் உள்ளத்தில் உண்டான விடுதலை அசைக்கமுடியாதது. இதுவே கடைசிப் பிறப்பு. எனக்கு இனி புனர்ப்பவம் இல்லை.

இதை பகவான் கூறினார். ஐந்து பிக்குக் கூட்டத்தவரும் மகிழ்ந்து அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தமடைந்தனர்.

(சம்யுக்த நிகாய VI, II)

* * *

[1] மொ. ஆ. கு.

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது (திருக்குறள்)

அறவாழி அந்தணன் - புத்த பகவான் என்று கொள்வது ஆராயத்தக்கது

[2] நான்கு உயர்வாய்மைகள் ஒவ்வொன்றும் சம்பந்தமான அறிவு பற்றி மூன்று பண்புகள் உண்டென்பதை மேலேயுள்ள நான்கு பந்திகளிலிருந்து அறியலாம். முதலாவது இதுவே உண்மை என்ற அறிவு. இது சத்யஞானம்(சச்ச ஞான). இரண்டாவது இந்த சத்தியம் பற்றி ஒழுகவேண்டிய அறிவு. இது கிருத்திய ஞானம் (கிச்சஞானம்) எனப்படும். மூன்றாவது அந்த ஒழுக்கம் மேற்கொள்ளப்பட்டது. கிருத ஞானம் (கதஞானா) என்று அறிக. இந்த மூவகைப் பண்புகளும் நால்வகை வாய்மைகளுக்கும் பொருத்தப்பட்டால் பன்னிரண்டு வழிகள் உண்டாகின்றன.