அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko
அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்

தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
தணிசாரோ பிக்கு
Compiled and Translated by
Thanissaro Bhikkhu

Living in the World 
உலக வாழ்க்கை


§ "Ajaan Mun once said, 'People are all alike, but not at all alike, but in the final analysis, all alike.' You have to think about this for a good while before you can understand what he was getting at."

    "அஜான் முன் (Ajahn Mun) ஒருமுறை சொன்னார், 'மக்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான், ஆனாலும் ஒருவருக்கொருவர் மாறுபட்டுள்ளனர். ஆனால் இறுதியில் நன்கு விசாரித்துப் பார்த்தால் எல்லோரும் ஒரே மாதிரிதான்.' இதனை நீண்ட காலம் பிரதிபலித்தால்தான் அவர் என்ன சொன்னார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்."

§ "If you want to judge other people, judge them by their intentions."

    "மற்றவரை மதிப்பிட வேண்டுமானால், அவர்களின் நோக்கங்களை வைத்து மதிப்பிடுங்கள்."

§ "When you want to teach other people to be good, you have to see how far their goodness can go. If you try to make them better than they can be, you're the one who's being stupid."

    "மற்றவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக் கொடுக்கும் போது, எவ்வளவு தூரம் அவர்களின் நற்செயல் நீளும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் எட்டக் கூடிய நன்மையைவிட அதிக நன்மையை அவர்கள் செயற்பட வைக்க முயற்சித்தால், இங்கு முட்டாளாகப் போவது நீங்கள் தான்."

§ "Nothing comes from focusing on the faults of others. You can get more done by looking at your own faults instead."

    "மற்றவர் செய்யும் தவறுகளில் கவனம் செலுத்துவதால் எந்தப் பயனும் ஏற்படாது. மாறாக உங்கள் தவறுகளைக் கூர்ந்து கவனித்தால் நீங்கள் அதிகம் பயன் பெறலாம்."

§ "How good or bad other people are is their own business. Focus on your own business instead."

    "மற்றவர்கள் எவ்வளவு நல்லவர்களாக அல்லது தீயவர்களாக இருக்கின்றனர் என்பது அவர்களது சொந்தப் பிரச்சனை. மாறாக நீங்கள் உங்கள் பிரச்சனைகளிலேயே கவனத்தைச் செலுத்துங்கள்."

§ One of Ajaan Fuang's students complained to him about all the problems she was facing at work. She wanted to quit and live quietly by herself, but circumstances wouldn't allow it, because she had to provide for her mother. Ajaan Fuang told her, "If you have to live with these things, then find out how to live in a way that rises above them. That's the only way you'll be able to survive."

    "அஜான் ஃபுவாங்கின் ஒரு மாணவி தான் வேலையில் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் பற்றி அவரிடம் முறையிட்டார். வேலையை விட்டு விட்டுத் தனியாக அமைதியாக வாழ விரும்புவதாகவும், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அதற்கு இடம் தரவில்லை யென்றும், தான் தன் தாயைக் கவனிக்க வேண்டி யிருக்கிறது என்றும் கூறினார். அஜான் ஃபுவாங் அவரிடம், "இப்பிரச்சனைகளோடு வாழ்ந்தே ஆக வேண்டும் என்றால் அவற்றையெல்லாம் கடந்து  வாழும் வழியில் வாழப் பாருங்கள். அவற்றைச் சமாளிக்க அது தான் ஒரே வழி."

§ Advice for a student who was letting the pressure at work get her down: "When you do a job, don't let the job do you."

    வேலையின் தாக்கத்தால் வேதனை அனுபவிக்கும் ஒரு மாணவிக்குத் தந்த அறிவுரை: "நீங்கள் ஒரு வேலையைச் செய்யும் போது,  அந்த வேலை உங்களைச் சீரழித்துவிட விடாதீர்கள்." (வேலையின் பிரச்சனைகள் உங்களை அலைக்கழிக்க விட வேண்டாம்.)

§ Another one of Ajaan Fuang's students was having serious problems, both at home and in her work, so he appealed to her fighting spirit: "Anyone who's a real, live person will have to meet up with real, live problems in life."

    அஜான் ஃபுவாங்கின் மற்றொரு மாணவி வேலையிலும் வீட்டிலும் கடுமையான பிரச்சனைகளை எதிர் கொண்டார். அவரின் போராடக்கூடிய சக்திக்கு இவ்வாறு ஊக்கமளித்தார்: "உண்மையான, உயிருடன் உள்ள எவரும், உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டும்."

§ "When you meet with obstacles, you have to put up a fight. If you give up easily, you'll end up giving up all your life long."

    "இடையூறுகளை எதிர் கொள்ளும் போது, அவற்றோடு போராட வேண்டும். இடையூறுகளுக்கு எளிதாக விட்டுக் கொடுத்து விட்டால் வாழ்நாள் முழுவதும் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்."

§ "Tell yourself you're made out of heartwood, and not out of sapwood."

    "நீஙகள் சேகத்தால் ஆனவரென்றும் சோற்றுமரத்தால் ஆனவரில்லையென்றும் உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள்."

சேகம் - மரவைரம் Hard core of a tree, central part of plant hardened by age, heart-wood;
சோற்றுமரம் -  வைரமில்லாத மரம்.  உதாரணம்: வாழை  Tree which is all sap-wood;

§ One of Ajaan Fuang's students — a young nurse — had to put up with being the brunt of a lot of gossip at work. At first she tried to ignore it, but as it happened more and more often, her patience began to wear thin.

One day, when the gossip was really getting to her, she went to meditate with Ajaan Fuang at Wat Makut. While meditating, she saw a vision of herself repeating back, back, back to infinity, as if she were caught between two parallel mirrors. The thought occurred to her that in her many previous lives she had probably had to endure an untold amount of the same sort of gossip, and this made her even more fed up with her situation. So when she left meditation she told Ajaan Fuang of how tired she was of being gossiped about. He tried to console her, saying, "This sort of thing is part and parcel of the world, you know. Where there's praise, there also has to be criticism and gossip. When you know this, why let yourself get involved?"

Her mood was so strong, though, that she argued with him, "I'm not getting involved with them, Than Phaw. They come and get involved with me!"

So he turned the tables on her: "Then why don't you ask yourself — who asked you to butt in and be born here in the first place?"

    அஜான் ஃபுவாங்கின் மாணவி ஒருவர் - அவர் ஒரு இளம் தாதி (நர்ஸ் nurse) - வேலையில் தன்னைப் பற்றிய மற்றவர்களின் அவதூறுகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. முதலில் அவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடப் பார்த்தார், ஆனால் அடிக்கடி அத்தகைய வம்புப் பேச்சுகள் எழவே அது அவரைப் பொறுமை இழக்கச் செய்தது.

    ஒரு நாள், அவரைப் பற்றிய வம்புப் பேச்சைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வாட் மாகுட் (Wat Makut) விகாரைக்கு அஜான் ஃபுவாங்குடன் தியானம் செய்யச் சென்றார். தியானம் செய்யும் போது, இரண்டு முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு நடுவில் இருந்து, தனது பிம்பம் எண்ணிலடங்காது பிரதிபலிப்பது போன்ற ஒரு காட்சி அவர் மனத்தில் தோன்றியது. இந்தக் காட்சியின் காரணமாக அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது அவரது பல முற்பிறப்புகளிலும் அளவற்ற வம்புப் பேச்சுகளைத் தான் சமாளிக்க வேண்டி  இருந்திருக்கலாம் என்று நினைத்தார். அதனால் அவரது சூழ்நிலையைக் கண்டு மேலும் சஞ்சலம்  அடைந்தார். தியானம் முடிந்த பின் அஜான் ஃபுவாங்கிடம் வம்புப் பேச்சினால் தான் மிகவும் சலிப்படைந்து விட்டதாகத் தெரிவித்தார். அவர் மாணவியைத் தேற்றும் வகையில், "இது போன்ற சூழ்நிலைகள் வாழ்க்கையில் சாதாரணமாக நடைபெறுவது இயல்புதான். புகழ் உள்ள இடத்தில், இகழ்ச்சியும் வம்புப் பேச்சும் இருக்கத்தான் செய்யும். இதை உணர்ந்தபின் ஏன் இதற்காகக் கவலைப்பட வேண்டும்?" என்று கேட்டார்.

    ஆனால் மாணவியின் மனம் மிகவும் சஞ்சலப்பட்டிருந்ததால் அவர் முறையிட்டார், "நான் அவர்கள் வழியில் தலையிடுவதில்லை, ஐயா. அவர்கள் தான் என் வழியில் குறுக்கிடுகின்றார்கள்!"

    அதற்கு அவர்: "பின் ஏன் இந்தக்கேள்வியை உன்னையே கேட்டுக் கொள்ளக் கூடாது - என்னை யார் தலையை நுழைத்து இங்கு வந்து பிறக்கச் சொன்னார்கள்?"

§ "If they say you're no good, remind yourself that their words go only as far as their lips. They've never reached out and touched you at all."

    "உங்களை ஒன்றுக்கும் உதவாதவர் என்று சொல்பவர்களின் வார்த்தைகள் அவர்கள் உதடுவரை மட்டுமே வருகின்றன என்பதை நீங்கள் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதை மீறி வெளிப்பட்டு உங்களை ஒருபோதும் அவை தீண்டுவதில்லை."

§ "Other people criticize us and then forget all about it, but we take it and keep thinking about it. It's as if they spit out some food and we pick it up and eat it. When that's the case, who's being stupid?"

    "மற்றவர்கள் நம்மைக் குறைகூறி விட்டுப் பின் சொன்னதை மறந்து விடுவார்கள். ஆனால் நாம் அதை உள்வாங்கி அதையே நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இது அவர்கள் உணவை வாயிலிருந்து துப்பிய பின், நாம் அதை எடுத்து உண்பதைப் போல உள்ளது. நிலைமை அப்படி இருக்கையில் இங்கு யார் முட்டாள்?"

§ "Pretend you have stones weighing down your ears, so that you don't get blown away by everything you hear said."

    "உங்கள் காதுகளில் பாரமான கற்கள் தொங்குவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் கேட்பதையெல்லாம் நினைத்து நினைத்து இப்படியும் அப்படியும் அடித்துச் செல்லப்பட மாட்டீர்கள்."

§ One day Ajaan Fuang asked, as if out of the blue, "If your clothing fell down into a cesspool, would you pick it back up again?"
The woman he asked had no idea what he was getting at, but knew that if she wasn't careful about answering his questions, she'd come out looking like a fool, so she hedged her answer: "It depends. If it was my only set of clothing, I'd have to pick it up. But if I had other sets, I'd probably let it go. What are you getting at, Than Phaw?"
"If you like to hear bad things about other people, then even though you have no part in the bad karma of their acts, you still pick up some of the stench."

    ஒரு நாள் அஜான் ஃபுவாங் திடீரென்று, "உன்னுடைய துணிகள் ஒரு சாக்கடையில் விழுந்துவிட்டால்  அதை மீண்டும் எடுப்பாயா?" என்று ஒரு பெண்ணிடம் கேட்டார்.

    அந்தப் பெண்ணுக்கு அவர் என்ன சொல்ல நினைக்கிறாரென்று புரியவில்லை. ஆனால்  அவருடைய கேள்விக்குக் கவனமாகப் பதில் கூறாவிட்டால், தான் முட்டாளாகத் தோன்றலாம் என்பதால் தப்பித்துக் கொள்ள தற்காப்பாகப் பதிலளித்தார்: அது சூழ்நிலையைப் பொருத்து இருக்கும். என்னிடம் இருக்கும் ஒரே துணியாக அது இருந்தால் அதை எடுத்தாக வேண்டும். வேறு துணிகள் என்னிடம் இருந்தால் அதைச் சாக்கடையிலேயே விட்டு விடுவேன். நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள், ஐயா?"

    "மற்றவர்களைப் பற்றித் தீய சொற்களை ஒருவர் கேட்க விருப்பப் பட்டால், அவர்கள் செய்த தவரில் அவருக்குப் பங்கேதும் இல்லையென்றாலும், அந்த நாற்றம் சிறிதளவேனும் அவரிடமும் ஒட்டிக் கொள்ளும்."

§ If any of his students were bearing a grudge about something, he would tell them: "You can't even sacrifice something as minor as this? Think of it as making a gift. Remember how many valuable things the Buddha sacrificed during his life as Prince Vessantara, and then ask yourself, 'This anger of mine has no value at all. Why can't I sacrifice it, too?'"

    அவருடைய மாணவர்களில் யாருக்காவது  எதைப்பற்றியாவது யாரிடமாவது  துவேஷம் இருக்குமானால், அவர்களிடம் அஜான் ஃபூவங் கூறுவார்: "உங்களால் இந்தச் சிறிய தியாகத்தைக் கூடச் செய்ய முடியவில்லையா? இதை ஒரு அன்பளிப்பாக நினைத்துக் கொள்ளுங்கள். புத்தர், இளவரசர் வெஸந்தராவாக வாழ்ந்த போது எவ்வளவு  விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தியாகம் செய்தார் என்று நினைத்துப் பாருங்கள். பின் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள், 'எனது இந்தக் கோபத்துக்கு மதிப்பே இல்லை. என்னால் ஏன் இதைத் தியாகம் செய்ய முடியாது?"

§ "Think first before you act. Don't be the sort of person who acts first and then has to think about it afterwards."

    "யோசித்த பின் செயற்படுங்கள். செயற்பட்டபின்  செய்ததைப் பற்றி யோசிப்பவர்களாக இருக்காதீர்கள்."

        எண்ணித் துணிக கருமம். துணிந்தபின்
        எண்ணுவம் என்பது இழுக்கு. 
                -  திருக்குறள்.


§ "Beware of fall-in-the-well kindness: the cases where you want to help other people, but instead of your pulling them up, they pull you down."

    "கிணற்றில்-விழுந்துவிடுவது-போன்ற-கருணையோடு ஜாக்கிரதையாக இருங்கள்: இவை மற்றவருக்கு உதவ நினைத்துக் கைகொடுத்து, அவர்களை மேலே தூக்குவதற்குப் பதில், அவர்கள் உங்களைக் கீழே இழுத்துவிடும் சம்பவங்கள்."

§ "When people say something is good, it's their idea of good. But is it always what's really good for you?"

    "மக்கள் ஒன்றை நல்லது என்று சொல்லும் போது, அது நல்லது என்பது அவர்களுடைய கருத்துத்தான். ஆனால் அது எப்போதும் உங்களுக்கும் நலம் விளைப்பது தானா என்று எண்ணிப் பாருங்கள்."

§ "If people hate you, that's when you're let off the hook. You can come and go as you like without having to worry about whether or not they'll miss you or get upset at your going. And you don't have to bring any presents for them when you come back. You're free to do as you like."

    "மக்கள் உங்களை வெறுக்கும் போதுதான் அவர்கள் பிடியிலிருந்து நீங்கள் தப்பி விடுகின்றீர்கள். நீங்கள் நினைத்தபோது வரலாம் அல்லது போகலாம். அவர்களுக்கு உங்கள் மீது அக்கறையில்லாததால் நீங்கள் என்ன செய்தாலும் அவர்களை அது பாதிக்கப் போவதில்லை. எனவே நீங்களும் கவலைப்பட வேண்டியதில்லை. வருகின்றபோது அவர்களுக்கு அன்பளிப்பு எதுவும் வாங்க வேண்டியதுமில்லை. நீங்கள் விரும்பியவாறு எதையும் செய்யலாம்."

§ "Trying to win out over other people brings nothing but animosity and bad karma. It's better to win out over yourself."
    
    "மற்றவர் மீது வெற்றி பெற முயற்சிப்பது வெறுப்பையும் தீவினையையுந் தவிர வேறெதுவும் தருவதில்லை. உங்களை நீங்கள் வெற்றி பெறுவதே மேன்மையானது."

§ "Whatever you lose, let it be lost, but don't ever lose heart."

    "எதைத் தொலைத்தாலும், அது தொலைந்து போகட்டும். ஆனால் உள்ளத்தை மட்டும் தொலைத்து விடாதீர்கள்."

§ "If they take what's yours, tell yourself that you're making it a gift. Otherwise there will be no end to the animosity."

    "மற்றவர்கள் உங்களுக்குச் சொந்தமானதை எடுத்துக் கொண்டால், அதை ஒரு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விரோதத்திற்கு முடிவே இருக்காது."

§ "Their taking what's yours is better than your taking what's theirs."

    "உங்களுடையதை மற்றவர்கள் எடுத்துக் கொள்வது, மற்றவர்களுடையதை நீங்கள் எடுத்துக் கொள்வதை விட மேன்மையானது."

§ "If it's really yours, it'll have to stay with you, no matter what. If it's not really yours, why get all worked up about it?"

    "உண்மையிலேயே ஒரு பொருள் உங்களுடையதாயின், என்ன நேரிட்டாலும் அது உங்களிடமே இருக்கும். அது உண்மையில் உங்களுடையதில்லையென்றால், பின் ஏன் அதைப் பற்றிச் சஞ்சலம் கொள்ள வேண்டும்?"

§ "There's nothing wrong with being poor on the outside, but make sure you're not poor on the inside. Make yourself rich in generosity, virtue, and meditation — the treasures of the mind."

    புறத்தில் ஏழ்மையாக இருப்பதில் தவறேதும் இல்லை, ஆனால் அகத்தில் ஏழ்மையாக இருக்க வேண்டாம். தயாளகுணம், பண்பு மற்றும் தியானம் ஆகியவற்றில் மேன்மை அடைந்து கொள்ளுங்கள் - அவையே உள்ளத்தின் புதையல்."

§ One of Ajaan Fuang's students complained to him, "I look at other people, and they seem to have such an easy life. Why is life so hard on me?" His answer: "Your 'hard life' is ten, twenty times 'the good life' for a lot of people. Why don't you look at the people who have a harder time than you do?"

    "அஜான் ஃபுவாங்கின் மாணவர் ஒருவர் அவரிடம் முறையிட்டார், "நான் மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்கள் மிகவும் எளிதாக வாழ்வதாகத் தோன்றுகிறது. ஏன் எனக்கு மட்டும் வாழ்வு  இவ்வளவு கடினமாக உள்ளது?"

    அவர் பதில்: "நீ நினைக்கும் உனது கஷ்டமான வாழ்க்கையைப் பத்து, இருபது மடங்கு 'எளிய வாழ்க்கையாக' நினைக்கும் ஏராளமானோர் உலகில் வாழ்கிறார்கள். உன்னைவிடக் கஷ்டப்படுவோரை ஏன்  நீ எண்ணிப் பார்ப்பதில்லை?"

§ Sometimes when any of his students were facing hardships in life, Ajaan Fuang would teach them to remind themselves: "How can I blame anyone else? Nobody ever hired me to be born. I came of my own free will."

    சில சமயம் வாழ்க்கையில் துன்பங்களை எதிர் கொள்ளும் அவரது மாணவர்களுக்கு அஜான் ஃபுவாங் இவ்வாறு நினைவூட்டிக் கொள்ளச் சொல்வார்: "மற்றவரை நான் எப்படிக் குறைகூற முடியும்? நான் பிறக்க வேண்டும் என்று யாரும் என்னைக் கேட்டுக் கொள்ளவில்லை. நானே விருப்பப்பட்டுத்தான் வந்தேன்."

§ "Everything that happens has its lifespan. It won't last forever. When its lifespan is up, it'll go away on its own."

    "நடைபெறுவதற்கெல்லாம் காலக்கட்டம் இருக்கிறது. எதுவும் காலவரையற்றது இல்லை. அதன் வாழ்நாள் முடிந்தவுடன் தானாகவே சென்றுவிடும்."

§ "To have a partner in life is to suffer. To have a good partner is really to suffer, because of all the attachment."

    "வாழ்க்கையில் துணை இருப்பது துன்புறுவதாகும்.  நல்ல துணை இருப்பது மேலும் துன்புறுவதாகும், பற்றுகள் அதிகம் இருப்பதால்."

§ "Sensual pleasure is like a drug: One taste and you get addicted. They say that with heroin it's hard to break the habit, but this is even worse. It goes deep, right into the bone. It's what made us get born in the first place, and has kept us circling through birth and death for aeons and aeons. There's no medicine you can take to break the habit, to wash it out of your system, aside from the medicine of the Buddha's teachings."

    "புலன் ஆசை ஒரு போதைப் பொருளைப்போல: ஒருமுறை சுவைத்தபின் அதற்கு அடிமையாகி விடுகிறோம். கஞ்சாவைவிட அபாயகரமான ஹெரோயின் (heroin) என்ற போதைப் பொருளுக்குப் பழகி விட்டால் அந்தப் பழக்கத்தை முறித்துக் கொள்வது மிகவும் கடினம் என்பார்கள். ஆனால் புலன் ஆசை அதைவிட மோசமானது. மிகவும் ஆழமாக அது எலும்பின் ஊனுக்கே சென்றடைகிறது. இதனால் தான் பிறப்பே எடுத்தோம், நாம் கோடிக்கணக்கான ஆண்டுகள் சம்ஸார சக்கரத்தில் பிறந்து இறந்து சுழன்று கொண்டு இருப்பதற்கான காரணமும் இதுவே. இந்தப் பழக்கத்தை முறியடிக்க, நம்மைத் தூய்மையாக்க, புத்தரின் போதனைகள் என்ற மருந்தைத்தவிர வேறு எந்த மருந்தும் இல்லை."

§ Once, when one of Ajaan Fuang's students was being pressured by her parents to look for a husband so that she could settle down and have children, she asked him, "Is it true what they say, that a woman gains a lot of merit in having a child, in that she gives someone else the chance to be born?"
"If that were true," he answered her, "then dogs would get gobs of merit, because they give birth to whole litters at a time."

    ஒரு முறை அஜான் ஃபுவாங்கின் மாணவி ஒருவர் தனது பெற்றோர்களால் ஒரு கணவரைத் தேடிக் கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டார். இதனால் ஓர் இடத்தில் நிலைகொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அஜான் ஃபுவாங்கிடம் மாணவி, "ஒரு பெண் குழந்தையைப் பெற்று அதனால் வேறொருவருக்கு உயிர் கொடுப்பதனால் அவளுக்குப் பெருமளவு புண்ணியம் கிடைக்கும் என்று அவர்கள் சொல்வது உண்மையா?" என்று கேட்டார்.

    அவர் மாணவிக்குத் தந்த பதில்: "அது உண்மையாக இருந்தால் நாய்களுக்கு ஏகப்பட்ட புண்ணியம் கிடைக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும்  நாய் குட்டி போடும் போது பல குட்டிகள் பிறக்கின்றன."

§ He also told her, "Getting married is no way to escape suffering. Actually, all you do is pile more suffering on yourself. The Buddha taught that the five khandhas are a heavy burden, but if you get married, all of a sudden you have ten to worry about, and then fifteen, and then twenty..."

    அவர் மேலும் அம்மாணவிக்குச் சொன்னது: "திருமணம் செய்து கொள்வதனால் துக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது. சொல்லப் போனால் மேலும் மேலும் துக்கத்தை உங்கள் மீதே அடுக்கிக் கொள்கின்றீர்கள். புத்தர் ஐந்து கந்தங்களைப் பெரும் பாரமெனக் கற்பித்தார். திருமணமாகிவிட்டால் திடீரென்று பத்துக் கந்தங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். பின் பதினைந்து, இருபது என்று கூடிக் கொண்டே போகும்...

    உருவம் (form), வேதனை (feelings), குறிப்பு (perception), பாவனை (நினைப்பு/சங்காரங்கள்/volition), விஞ்ஞானம் (consciousness) என்ற ஐவகைக் கந்தங்கள். (மணிமேகலை. 30, 33.) இவ்வைந்தும் நமது அனுபவங்களின் ஐந்து அம்சங்கள். இவற்றோடு பற்றுக் கொள்வதால் நமக்குத் துக்கமே உண்டாகும். 

§ "You have to be your own refuge. If you're the sort that has to take refuge in other people, then you'll have to see things the same way they do, which means you have to be stupid the same way they are. So pull yourself out of all that, and take a good look at yourself until things are clear within you."

    "உங்களுக்கு நீங்களே புகலிடமாக இருக்க வேண்டும். மற்றவரோடு புகலிடம் கொள்பவராக இருந்தால், அவர்களின் உலகப் பார்வையே நீங்களும் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் முட்டாள் தனமாகச் செய்வதை நீங்களும் செய்ய வேண்டியிருக்கும். எனவே இவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டு, உங்களை நீங்களே - தெளிவுபெறும் வரை - பார்த்துக் கொள்ளுங்கள்."

§ "You may think, 'my child, my child,' but is it really yours? Even your own body isn't really yours."

    "நீங்கள், 'என் குழந்தை, என் குழந்தை,'  என்று நினைக்கலாம், ஆனால் உண்மையில் அது உங்கள் குழந்தையா? ஏன்? உங்கள் உடல் கூட உண்மையில் உங்களுடையது இல்லை."

§ One of Ajaan Fuang's students, when she was suffering a serious liver disease, dreamed that she had died and gone to heaven. She took this as a bad omen and so went to Wat Makut to tell her dream to Ajaan Fuang. He tried to console her, saying that it was really a good omen in disguise. If she survived the disease, she'd probably get a promotion at work. If she didn't, she'd be reborn in good circumstances. As soon as he said this, though, she got very upset: "But I'm not ready to die!"
"Look," he told her, "when the time comes to go, you have to be willing to go. Life isn't a rubber band you can stretch out or shrink as you like."

    அஜான் ஃபுவாங்கின் மாணவி ஒருவர் சிக்கலான கல்லீரல் நோயினால் பாதிக்கப் பட்டிருந்தபோது தான் இறந்து சொர்க்கத்தை அடைந்ததாகக் கனவு கண்டார். இது ஒரு கெட்ட சகுனமாக நினைத்து அஜான் ஃபுவாங்கிடம் அதைப் பற்றிச் சொல்வதற்கு வாட் மாகுட் (Wat Makut) விகாரைக்குச் சென்றார். அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் அஜான் ஃபுவாங் அது மாறுவேடம் பூண்ட நல்ல சகுனம் என்று கூறினார். நோயிடமிருந்து தப்பினால் அவருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். இல்லாவிட்டால் நல்ல சூழ்நிலையில் மறுபிறப் பெடுப்பார் என்று கூறினார்.
    
    அதைக் கேட்ட அப்பெண் மிகவும் மனச்சஞ்சலம் கொண்டு கூறினார்: "ஆனால் நான் இறக்கத் தயாராக இல்லை!"

    அஜான் ஃபுவாங் அவரிடம் கூறினார், "இதோ பார்! போக வேண்டிய நேரம் வரும் போது, விருப்பப் பட்டுப் போகவேண்டும். நாம் நினைத்தபடி வாழ்க்கையை இழுத்துச் சுருக்க அது ஒரு இரப்பர் பான்ட் (rubber band) இல்லை."

§ "If there are any sensual pleasures you really hunger for, it's a sign you enjoyed them before in a previous life. That's why you miss them so much this time around. If you think about this long enough, it should be enough to make you dispassionate and dismayed."

    "புலன் இன்பங்கள் ஏதாவது ஒன்றுக்கு மிகவும் ஆசைப்பட்டால் முன் ஜன்மத்தில் அதை அனுபவித்தீர்கள் என்பதற்கு அது ஒரு அறிகுறி. அதனால் தான் இப்போது நீங்கள் அதை மிகவும் நேசிக்கின்றீர்கள். இதைப் பற்றி யோசித்துப் பார்த்தீர்களென்றால் அச்சம் கொள்வதுடன் அந்த பேராசையும் ஒழியும்."

*    *    *    *    *    *