கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு - முகவுரை

கௌதம புத்தர்

மயிலை சீனி. வேங்கடசாமி

பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - இரண்டாம் பதிப்பு 1969

Preface 1st and 2nd Editions

முதற் பதிப்பின் ஆசிரியர் முகவுரை

உலகத்திலே அதிகமாகப் பரவிச் சிறப்புற்றிருக்கிற பெரிய மதங்களிலே பௌத்த மதமும் ஒன்று. புகழ் பெற்ற பௌத்த மதத்தை உண்டாக்கிய பெரியார் பகவன் கௌதம புத்தர் ஆவர். கௌதம புத்தர், நமது பாரத நாட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்தபடியினாலே பாரத நாடு பௌத்தர்களின் புண்ணிய பூமியாகும். பகவன் புத்தர் பிறந்து இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. இந்த விழாவைப் பௌத்த உலகம் கொண்டாடுகிறது.

உலகப் பெரியாரான கௌதம புத்தர் நமது நாட்டில் பிறந்த சிறந்த பெரியார் என்கிற காரணத்தினாலேயும், பௌத்த சமயப் புண்ணியத் தலங்கள் இங்கு உள்ளன என்னும் காரணத்தினாலேயும், பாரத நாட்டினராகிய நாம் பெருமிதம் கொள்கிறோம், பெருமையடைகிறோம். இக்காரணங்கள் பற்றியே, பகவன் புத்தர் பிறந்த 2500-ஆவது ஆண்டுவிழாவை, 1956-ஆம் ஆண்டு மே மாதம் 24-ந்தேதி வைசாகப் பௌர்ணமியாகிய புண்ணிய நாளிலே அரசாங்கத்தாரும் பொதுமக்களும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

இந்தப் புண்ணிய நாளிலே பகவன் புத்தருடைய சரித்திர வரலாற்றை எழுதி வெளிப்படுத்துவது மிகவும் பொருத்தமானதே. இப்போது நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் கதையாக எழுதப் பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு.

நமது நாட்டிலே இராமாயணம், பாரதம், புராணங்கள் முதலிய சமய சம்பந்தமான கதைகள், மத சம்பிரதாய முறையில் எழுதப்பட்டு அநேக அற்புதங்களும் புதுமைகளும் தெய்வீகச் செயல்களும் நிரம்பியவையாகவுள்ளன. இவைகளைப் பக்தியோடு மக்கள் படித்து வருகிறார்கள். உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் (நபி நாயகம், ஏசு கிறுஸ்து முதலிய சமயத் தலைவர்கள் உட்பட) தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவன் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும்போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அந்த அற்புத செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பௌத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை.

இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது. ஆயினும் இது விரிவான நூல் என்று கூறுவதற்கில்லை. சில செய்திகள் விரிவஞ்சி விடப்பட்டன. ஆயினும் முக்கியமான வரலாறுகள் விடாமல் கூறப்பட்டுள்ளன.

பௌத்த சமயத்தின் தத்துவமாகிய நான்கு வாய்மைகளும் அஷ்டாங்க மார்க்கங்களும் பன்னிரு நிதானங்களும் இந்நூலுள் காட்டப்பட்டுள்ளன. பௌத்த மதத் தத்துவத்தை ஆழ்ந்து கற்பவருக்கு இவை சிறிதளவு பயன்படக்கூடும். இந்நூலின் இறுதியில் பின்னிணைப்பாகத் திரிசரணம், தசசீலம், திரிபிடக அமைப்பு ஆகிய இவைகள் விளக்கப்படுகின்றன. பழந்தமிழ் நூல்களிலே சிதறிக்கிடக்கிற புத்தர் புகழ்ப்பாக்கள், தொகுக்கப்பட்டு இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய இனிய இப்புகழ்ப்பாக்கள் வாசகர்களுக்கு இன்பம் பயக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்நூலில் காணப்படும் குற்றங்களை நீக்கிக் குணத்தைக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். இதனை விரைவாகவும் அழகாகவும் அச்சிட்டு வெளியிட்ட ஸ்டார் பிரசுரக்காரர்களுக்கு எனது அன்பும், நன்றியும் உரியனவாகும்.

இங்ஙனம்,

மயிலை சீனி. வேங்கடசாமி

சென்னை-4

15.5.1956

இரண்டாம் பதிப்பின் ஆசிரியர் முகவுரை

கௌதம புத்தர் என்னும் இந்நூல் வெளிவந்து இப்போது பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன. இப்போது இது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.

பௌத்த மதத்தை உண்டாக்கிய பகவன் கௌதம புத்தர் நம்முடைய பாரத தேசத்தில் பிறந்தவர். கௌதம புத்தர் போதிஞானம் பெற்ற புத்தகயா நகரம் இன்றும் புண்ணியத் தலமாகப் போற்றப் படுகிறது. இலங்கை, பர்மா, திபெத்து முதலிய பௌத்த நடுகளிலுள்ள பௌத்தர்கள் ஆண்டுதோறும் புத்த கயைக்குத் தலயாத்திரையாக வந்து அவ்விடத்தைக் கண்டு வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் பாரத தேசத்தை, பகவன் புத்தர் பிறந்தருளிய காரணத்தினாலே, தங்கள் புண்ணிய பூமியாகக் கருதிப் போற்றுகிறார்கள். இந்தப் பெரிய உலகத்திலே, மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகையினர் பௌத்த மதத்தினராக இருக்கிறார்கள். பௌத்தக் கொள்கைகளைப் பின்பற்றிப் பகவன் புத்தரைப் போற்றுகிற அவர்கள் புத்தர் பிறந்த பாரத தேசத்தைப் புண்ணிய பூமியாகக் கருதுவதில் வியப்பில்லை.

உலகப் பெரியார்களில் ஒருவராக விளங்கும் கௌதம புத்தர் பாரத தேசத்தில் தோன்றியது பாரத மக்கள் அனைவரும் பெருமைப்படத் தக்கதொன்றாகும். பெருமைப் படுவது மட்டு மல்லாமல் அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய போதனைகளையும் அறிய வேண்டியதும் நமது தேசத்து மக்கள் அனைவருடைய கடமையுமாகும். இதற்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. முதற்பதிப்பில் இல்லாத சில புது விஷங்கள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு மொழி வளர்ச்சியடைய வேண்டுமானால் அந்த மொழியில் பல துறைகளிலும் நூல்கள் தோன்ற வேண்டும். எவ்வளவு நல்ல நூல்கள் தோன்றுகின்றனவோ அவ்வளவும் மொழி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இந்த முறையில் தமிழ்மொழியின் மேன்மைக்கு இந்நூல் ஒரு சிறு தொண்டாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தங்களுடைய சொந்த மத நூல்களைத்தான் கற்க வேண்டும், ஏனைய மத நூல்களைப் படிக்கக்கூடாது என்பது குறுகிய நோக்கமாகும். தங்களுடைய சொந்த மத நூல்களைக் கற்பதோடு மட்டும் அமையாமல் நமது நாட்டிலுள்ள ஏனைய மதநூல்களையும் கற்பது சிறந்ததாகும். நம்முடைய தேசத்திலே தோன்றி, உலகப்புகழ்படைத்த ஒரு பெரிய மதத்தை அமைத்து, இறவாப் புகழ்பெற்ற பகவன் கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டியது எல்லோருடைய கடமையும், அவசியமும் ஆகும். புத்தரின் வாழ்க்கையையும் அவருடைய போதனைகளையும் அறிவதற்கு இந்நூல் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

இந்த நூல் இரண்டாம் பதிப்பாக அச்சிட்டு வெளியிட்ட சென்னை சாந்தி நூலகத்தாருக்கு என்னுடைய நன்றியுரியது.

இங்ஙனம்,

மயிலை சீனி. வேங்கடசாமி

சென்னை-4

10.3.1969