புத்தரின் வார்த்தைகள் 60-90

புத்தரின் வார்த்தைகள்

புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை

ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய எஸ். தம்மிக்கா

தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.

THE WORDS OF THE BUDDHA

Daily Readings from the Buddhist Scriptures

By Bhante S. Dhammika

மார்ச் 60-90 March

60. எழு! உட்கார்!

உன் கனவுகளால் பயன் என்ன?

கவலை என்னும் அம்பால் துளைக்கப்பட்டு

நோயுற்றிருக்கும் உன்னால்

எப்படித் தொடர்ந்து தூங்க முடிகிறது?

எழு! உட்கார்!

அமைதியை வெற்றி கொள்ள உனக்குப்

பயிற்சியளித்துக்கொள்.

மரண அரசன் உன் சோம்பேறித்தனத்தையறிந்து

உன்னைத் தன் ஆட்சிக்குள்

தந்திரமாக இழுத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்.

கடவுளரையும் மனிதரையும் பிணைத்திருக்கும் அந்தப்

பற்றைத் துற!

இச்சந்தர்ப்பத்தை நழுவவிடாதே.

அப்படி நழுவ விட்டவர்களுக்கு

நரகமே மிஞ்சும்.

சோர்வு என்பது தூசியே,

சோம்பலின் போதே தூசிகள் சேரும்.

அம்புபோல் துளைத்திருக்கும் துன்பத்தை

அறிவாலும் விழிப்பாலும் விரட்டியடி!

Arise! Sit up!

Of what use are your dreams?

How can you who are sick

And pierced with the arrow of grief

Continue to sleep?

Arise! Sit up!

Train yourself to win peace.

Let not the king of death,

Knowing you to be lazy,

Trick you into his realm.

Cross over this attachment,

Tied to which both gods and men are trapped.

Do not let this chance slip by,

Because for those who do,

There is only hell.

Dusty is indolence.

Dust comes in its wake.

With knowledge and vigilance,

Draw out the arrow of suffering from yourself.

Sn.331-334

61. மேன்மையான அறத்தை விரும்புவோர், பேச்சிலும், எண்ணத்திலும், செய்கையிலும் தூய்மையாக இருப்பவர், எப்போதும் அமைதியோடும், நற்குணத்தோடும், கவனத்தோடும், ஒழுக்கத்தோடும் இருப்பவர், உலகில் நிறைவாக வாழ்கின்றனர்.

Those who love the noble Dhamma, who are pure in word, thought and deed, always peaceful, gentle, focused and composed, they proceed through the world properly.

Ja.III,442

62. அரசனின் தலைமையமைச்சர் உக்கா, அண்ணலை நோக்கி, 'அண்ணலே, மிகாரா ரோகனெய்யா இவ்வளவு அபரிமிதமான செல்வந்தனாகவும், பணக்காரனாகவும் வாழ்வது திகைக்கச் செய்வதாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது!' என்றார்.

'உக்கா, அவனிடம் எவ்வளவு செல்வமிருக்கும்?'

'அவனிடம் இலட்சக்கணக்கில் தங்கமும், யாராலும் மதிப்பிடமுடியாத அளவிற்கு வெள்ளிக் குவியலும் இருக்கிறது.'

'ஆனால், இவை உண்மையான செல்வமா? அல்ல. அவை உண்மையான செல்வமில்லை. அச்செல்வத்திற்கு, நெருப்பாலும், நீராலும், அரசர்களாலும், திருடர்களாலும், எதிரிகளாலும், வேண்டாத சந்ததியினராலும் ஆபத்துண்டு. ஆனால், இப்படிப்பட்டவர்களின் ஆபத்துக்குட்படாத ஏழு செல்வங்களுண்டு. அவை எவை? நம்பிக்கை என்னும் செல்வம். நல்லொழுக்கம் என்னும் செல்வம். சுய மரியாதை என்னும் செல்வம். பழிக்கு அஞ்சும் செல்வம், கல்வி, பெருந்தன்மை, மெய்யறிவு என்னும் செல்வம். இவை ஏழும் நெருப்பாலும், நீராலும் அரசர்களாலும், திருடர்களாலும், எதிரிகளாலும், வேண்டாத வாரிசுகளாலும் ஆபத்துண்டாக்க முடியாதவை.'

Ugga, the king's chief minister, said to the Lord: “Lord, it is amazing and astonishing how rich, wealthy and affluent Migara Rohaneyya is!”

“Well Ugga, how much does he have?”

“He has a million in gold and no one can estimate his store of silver?”

“But is that a real treasure? Not that I say it is not, but that is a treasure that is subject to fire and floods, kings and robbers, enemies and unwanted heirs. But there are seven treasures that are not subject to such dangers. What seven? The treasures of faith, virtue, self-respect, fear of blame, learning, generosity and wisdom. These seven are not subject to fire, water, kings, robbers, enemies and unwanted heirs.”

A.IV,6

63. பொய் சொல்வதை ஒருவன் விட்டுவிட்டால், அவன் வாய்மை பேசுபவனாகிறான்; நம்பகமானவனாகிறான்; பொறுப்பானவனாகிறான்; நம்பக் கூடியவனாகிறான். உலகை ஏமாற்றாதவனாகிறான்.

அவதூறாகப் பேசுவதை ஒருவன் விட்டுவிட்டால், மனிதரிடையே பிளவை ஏற்படுத்துவதான அங்கு கேட்டவற்றை இங்கும், இங்குக் கேட்டவற்றை அங்கும் கூறமாட்டான். அதனால், பிளவுபட்டவரிடையே சமாதானத்தையும் ஏற்கனவே ஒற்றுமையானவர்களிடையே ஆழ்ந்த பிணைப்பையும் உருவாக்குகிறான். இசைவால், உடன்படிக்கையால், ஒற்றுமையால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இசைவை, ஒற்றுமையை மேம்படுத்துகிறான். அவனுடைய சொற்களின் நோக்கமே இசைவும், உடன் படிக்கையும், ஒற்றுமையும் உண்டாக்குவதுதான்.

ஒருவன் கடின வார்த்தைகளை விட்டுவிட்டால், அவன் பழியற்ற, காதுக்கு இனிமை தரக்கூடிய, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, உள்ளத்தைத் தொடுகின்ற, நாகரிகமான, எல்லோரும் விரும்புகிற பேச்சைப் பேசுகிறான்.

பயனற்ற வீண்பேச்சை விட்டு விடுகிறவன், சரியாகப் பேச வேண்டிய நேரத்தில், நடந்த நிகழ்ச்சியைப் பற்றியும், அந்தப் பொருளைப் பற்றி மட்டும் பேசுவான் அறத்தைப்பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி, செல்வமாகப் பாதுகாக்க வேண்டிய சொற்களைக் காலத்திற் கேற்றவாறு, காரணத்தோடு, தெளிவாக விளக்கி, குறிக்கோளுடன் தொடர்புடை வார்த்தைகளை மட்டுமே பேசுவான்.

Giving up lying, one becomes a speaker of the truth, reliable, trustworthy, dependable, not a deceiver of the world. Giving up slander, one does not repeat there what is heard here, or repeat here what is heard there, for the purpose of causing divisions between people. Thus, one becomes a reconciler of those who are divided and a combiner of those already united. Rejoicing in peace, delighting in peace, promoting peace; peace becomes the motive of his speech. Giving up harsh speech, one speaks what is blameless, pleasant to the ear, agreeable, going to the heart, urbane, pleasing, and liked by all. Giving up useless chatter, one speaks at the right time, about the facts, to the point, about Dhamma and discipline, words worthy of being treasured up, seasonable, reasonable, clearly defined and connected to the goal.

D.I,64

64. சரியான காரியத்தைச் செய்வதற்காகத் தனக்கேற்படும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல், தன் தேவைகளை ஒதுக்கிக் கொள்பவன், நோயாளி மருந்தை அருந்துவதற்குச் சமமாவான். பிற் காலத்தில் அவன் மகிழ்வான்.

He who puts aside his wants in order to do the right thing, even though it be difficult, is like a patient drinking medicine. Later he will rejoice.

Ja.V,499.

65. ஒருமுறை கபிலவஸ்துவில் ஒரு ஆலமரத்தோப்பில் அண்ணல் சாக்கியர்களுடன் தங்கியிருந்தார். அப்பொழுது மகாநாமா என்ற ஒரு சாக்கியன் அண்ணலிடம் வந்து,

'அண்ணலே துறவறமேற்காமலேயே ஒருவன் சீடனாக எப்படி ஆக முடியும்?' என்று வினவினான்.

'ஒருவன் புத்த, தம்ம, சங்கமென்னும் மும்மணிகளிடம் சரணடைந்தால் அவன் துறவறமேற்காமலேயே சீடனாக முடியும்.'

'துறவறமேற்காத ஒரு சீடன் எப்படி நற்பண்புகளுடையவனாக மாற முடியும்?'

'ஒரு துறவறமேற்காத மாணவன் (சீடன்) கொலை, களவு, சோரம் போதல், பொய், போதை தரும் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்த்தால், அவன் நற்பண்புகளுடையவனாக மாற முடியும்.'

'ஒருவன் தனக்கு மட்டும் உதவிக்கொண்டு மற்றவர்க்கு உதவாமலிருப்பது எப்படி, அண்ணலே?'

'எவனொருவன் நம்பிக்கையடைந்து, ஒழுக்கமுள்ளவனாகி, பற்றைத் துறந்து, அறவண அடிகளைப் பார்க்கவும், அறிவுரைகளைக் கேட்கவும் ஏங்குகிறானோ, ஒருமுறை கேட்ட அறத்தால் மனத்தை நிரப்பி, அவ்வறத்தைப் பிரதிபலிக்கிறானோ, அதனை எழுத்து மூலமாகவும், உள்ளத்தோடும் ஒழுகி இணக்கத்தோடு அதன்வழி நடக்கிறானோ, ஆனால் அவற்றை மற்றவரிடம் போதிக்க முயற்சி எடுக்காமலிருக்கிறானோ அவனே தனக்கு மட்டும் உதவிக் கொண்டு மற்றவர்க்கு உதவாமலிருப்பவனாம்.'

'அண்ணலே, ஒருவன் தனக்கும் உதவிக்கொண்டு மற்றவர்க்கும் உதவுவது எப்படி?'

'எவனொருவன் நம்பிக்கையடைந்து, ஒழுக்கமுடையவனாகி, பற்றைத் துறந்து, இவற்றை மற்றவர்களிடையேயும் நிலைநிறுத்த முயன்று, அறவுரைகளைக் கேட்பதற்காக அறவண அடிகளுக்காக காத்திருக்கிறானோ, கேட்ட அறவுரைகளை மனத்தில் நிறுத்தி அதன் பொருள்களுக்கேற்பப் பிரதிபலிக்கிறானோ, அதனை எழுத்து மூலமாகவும், உள்ளத்தாலும் ஒழுகி இணக்கத்தோடு அதன் வழி நடந்து, அவ்வறத்தை மற்றவர்க்கும் போதிக்க, நிலை நிறுத்த முயற்சி எடுக்கிறானோ அவனே தனக்கும் உதவிக்கொண்டு மற்றவர்க்கும் உதவுபவனாவான்.'

Once, the Lord dwelt among the Sakyas in the Park of the Banyan Tree at Kapilavatthu, and while there, Mahanama the Sakyan came to him and asked: “How, Lord, does one become a lay disciple?”

“When one has taken refuge in the Buddha, the Dhamma and the Sangha, then one is a lay disciple.”

“How, Lord, is a disciple virtuous?”

“When a lay disciple abstains from killing, stealing, sexual misconduct, lying and drinking intoxicants, then he is virtuous.”

“How, Lord, does one help oneself but not others?”

“When one has achieved faith, virtue and renunciation, when one longs to see the monks, to hear the good Dhamma, to be mindful of the Dhamma once heard, when one reflects on it, knows it in both the letter and the spirit and walks in conformity with it, but one does not strive to establish such things in others, then one helps oneself but not others.”

“Then how, Lord, does one help oneself and others also?”

“When one has oneself achieved faith, virtue, and renunciation and strives to establish such things in others, when one longs to see the monks, to learn the good Dhamma, to be mindful of the Dhamma once heard, when one reflects upon its meaning, knows it in both the letter and spirit and walks in conformity with it and strives to establish such things in others, then one helps both oneself and others also.”

A.IV,220

66. சான்றாக , ஒரு பானையிலிருக்கும் தண்ணீரில் அரக்கு, புளி அல்லது நீல மஞ்சள் நிற வண்ணங்களைக் கலந்து அதில் தன் உருவத்தை ஒருவன் பார்க்க முயன்றால், உண்மையான உருவத்தைப் பார்க்கவும் முடியாது, அதில் உண்மையில் என்ன தெரிகிறதென்று அறிந்து கொள்ளவும் முடியாது. அதைப்போலவே ஒருவன் புலனுணர்வு இச்சைகளுக்கு ஆட்பட்டிருந்தால், மேலும் அதிலிருந்து விடுபெற வழியும் தெரியாதவனானால், அப்பொழுது அவனுக்குத் தன் நலமும் தெரியாது; பிறர் நலமும் தெரியாது. பல நாட்களுக்கு முன்பு மனப்பாடமாகக் கற்று வைத்திருந்த வழிபாட்டுப் பாடல்களையும் மறந்து விடுவான்; அண்மையில் படித்ததும் தெரியாது.

சான்றாக , ஒரு பானையிலிருக்கும் தண்ணீர், சுட வைக்கும் போது கொதித்துப் பொங்கி வழியும் நேரத்தில் ஒருவன் தன் உருவப் பிரதிபலிப்பை அவ்வெந்நீரில் பார்த்தால், உண்மையான உருவத்தைப் பார்க்கவும் முடியாது அல்லது அதில் உண்மையில் என்ன தெரிகிறதென்று அறிந்து கொள்ளவும் முடியாது. அதைப்போலவே ஒருவன் பகைமையால் (அன்பின்மையால்) தன்னுள்ளத்தை நிறைத்து வைத்திருந்து, மேலும் அதிலிருந்து விடுபெற வழியும் தெரியாதவனானால், அப்படிப்பட்ட நேரத்தில் அவன் தன் நலத்தையோ அல்லது பிறர் நலத்தையோ அறிய இயலாது. பல நாட்களுக்கு முன்பு மனப்பாடமாகக் கற்று வைத்திருந்த வழிபாட்டுப் பாடல்களையும் மறந்து விடுவான்; அண்மையில் படித்ததும் தெரியாது.

இப்பொழுது சான்றாக, ஒரு பானைத் தண்ணீரில், பாசியும் படர்ந்து, நீரில் முளைக்கும் பல செடிகளும் வளர்ந்திருந்தால் அத்தண்ணீரில் ஒருவன் தன் உருவத்தைப் பார்க்க விரும்பினால், உண்மையான உருவத்தைப் பார்க்கவும் முடியாது அல்லது அதில் உண்மையில் என்ன தெரிகிறதென்று அறிந்து கொள்ளவும் முடியாது. அதைப்போலவே ஒருவன் சோம்பலாலும் சோம்பேறித்தனத்தாலும் நிறைந்திருந்து, மேலும் அதிலிருந்து விடுபெற வழியும் தெரியாதவனானால், அப்படிப்பட்ட நேரத்தில் அவன் தன் நலத்தையோ அல்லது பிறர் நலத்தையோ அறிய இயலாது. பல நாட்களுக்கு முன்பு மனப்பாடமாகக் கற்று வைத்திருந்த வழிபாட்டுப் பாடல்களையும் மறந்து விடுவான்; அண்மையில் படித்ததும் தெரியாது.

அடுத்து ஒரு பானைத் தண்ணீர் காற்றால் சுழற்றப் பட்டுக் கலங்கி அலைகளால் சுழன்று கொண்டிருக்கும் போது ஒருவன் தன் உருவத்தை அத்தண்ணீரில் பார்க்க விரும்பினால், உண்மையான உருவத்தைப் பார்க்கவும் முடியாது அல்லது அதில் உண்மையில் என்ன தெரிகிறதென்று அறிந்து கொள்ளவும் முடியாது. அதைப்போலவே ஒருவனின் மனம் அமைதியின்மையாலும், கவலையாலும் சூழப்பட்டு அதிலிருந்து விடுதலை பெறத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும்போது, தன் நலத்தையோ அல்லது பிறர் நலத்தையோ அறிய இயலாது. பல நாட்களுக்கு முன்பு மனப்பாடமாகக் கற்று வைத்திருந்த வழிபாட்டுப் பாடல்களையும் மறந்து விடுவான்; அண்மையில் படித்ததும் தெரியாது.

மறுபடியும், ஒரு பானைத் தண்ணீர் கலக்கப்பட்டு, கலங்கி, மண் கலந்த நீராக இருட்டிலே வைக்கப் பட்டிருக்கும்போது ஒருவன் அதில் தன் உருவத்தைக் காண விரும்பினால், உண்மையான உருவத்தைப் பார்க்கவும் முடியாது அல்லது அதில் உண்மையில் என்ன தெரிகிறதென்று அறிந்து கொள்ளவும் முடியாது. அதைப்போலவே ஒருவனது உள்ளம் சந்தேகத்தால் சூழப்பட்டிருக்கும்போது, அதிலிருந்து விடுதலை பெற வழியுந் தெரியாத போது அவன் தன் நலத்தையோ அல்லது பிறர் நலத்தையோ அறிய இயலாது. பல நாட்களுக்கு முன்பு மனப்பாடமாகக் கற்று வைத்திருந்த வழிபாட்டுப் பாடல்களையும் மறந்து விடுவான்; அண்மையில் படித்ததும் தெரியாது.

Suppose a bowl of water was mixed with lac, turmeric or blue or yellow dye, and suppose a man were to look at his reflection in that water. He would neither know nor see his reflection as it really is. In the same way, when one lives with the mind obsessed with and overwhelmed by sensual desires and knows no refuge from it, at such times one neither knows nor sees his own welfare or the welfare of others. Chants learned by heart long ago are forgotten, to say nothing of those learned recently.

Suppose a bowl of water is heated on a fire, boiling and bubbling over, and suppose a man was to look at his reflection in that water. He would neither know nor see his reflection as it really is. In the same way, when one lives with the mind obsessed with and overwhelmed by ill-will and knows no refuge from it, at such times one neither knows nor sees his own welfare or the welfare of others. Chants learned by heart long ago are forgotten, to say nothing of those learned recently.

Now, suppose a bowl of water was overgrown with mossy water plants, and suppose a man were to look at his reflection in that water. He would neither know nor see his reflection as it really is. In the same way, when one lives with the mind possessed with and overwhelmed by sloth and laziness and knows no refuge from it, at such times one neither knows nor sees his own welfare or the welfare of others. Chants learned by heart long ago are forgotten, to say nothing of those learned recently.

Again, suppose a bowl of water was whipped up by the wind, stirred up, whirled around and rippling with waves, and suppose a man were to look at his reflection in that water. He would neither know nor see it as it really is. In the same way, when the mind is possessed with and overwhelmed by restlessness and worry and one knows no refuge from it, at such times one neither knows nor sees his own welfare or the welfare of others. Chants learned by heart long ago are forgotten, to say nothing of those learned recently.

Once again, suppose a bowl of water was stirred up, turbid, muddy and set in the dark, and suppose a man were to look at his reflection in that water. He would neither know nor see his reflection as it really is. In the same way, when the mind is possessed with and overwhelmed by doubt and one knows no refuge from it, at such times one neither knows nor sees his own welfare or the welfare of others. Chants learned by heart long ago are forgotten, to say nothing of those learned recently.

S.V,121

67. ஒருவன் ஒன்றை நினைத்து அதையே மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சார்ந்துவிடும்.

Whatever one thinks about and ponders over often, one’s mind gets a leaning in that way.

M.I,115

68. அரசனிடமோ அல்லது விவசாயியிடமோ, தளபதியிடமோ, கிராமத் தலைவனிடமோ, ஒரு குழுத் தலைவனிடமோ அல்லது ஓரினத் தலைவனிடமோ இந்த ஐந்து குணங்களிருந்தால் அவர்கள் வளர்ச்சி அடைவார்களே யொழிய வீழ்ச்சியடைய மாட்டார்கள்.

அந்த ஐந்து எவை?

இனத் தலைவனை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் உழைப்பாலும், முயற்சியாலும், கரத்தின் வலுவாலும், நெற்றி வியர்வையாலும், சட்டபூர்வமாகவும் நேர்மையாகவும் சாம்பாதித்த செல்வத்துடன் வாழுபவன், தன் பெற்றோரைக் கௌரவப்படுத்தி மதிப்பும் மரியாதையுமளித்துப் போற்றி வணங்குகிறான். பதிலுக்கு அவர்களும் மிகுந்த பாசத்துடனும், அன்பாகவும் 'உனக்கு நீண்ட வாழ்வு கிட்டட்டும், நீ பாதுக்காக்கப்படட்டும்' என்று வாழ்த்துவார்கள். அப்படித் தன் பெற்றோருக்கு எவனொருவன் அன்புடன், மதிப்பளிக்கிறானோ அவன் வளர்ச்சியையடைவானேயொழிய வீழ்ச்சியடைய மாட்டான். இவை தன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும், வேலைகாரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பொருந்தும். இவை அவன் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், அவன் நிலத்தில் உழைப்பவர்களுக்கும், சான்றோர்களுக்கும், துறவிகளுக்கும், அந்தணர்களுக்கும், கடவுளர்க்கும் பொருந்தும். அவர்களுக்கு அவன் அன்புடன் மதிப்பளித்தால், அவர்கள் அவனை, 'உனக்கு நீண்ட வாழ்வு கிட்டட்டும்! நீ பாதுகாக்கப்படட்டும்' என்று வாழ்த்துவார்கள்.

Wherever these five are found, in either a king or a farmer, a general or village headman, a guild master or leaders of the clan, progress may be expected and not decline. What five? Take the case of a clansman who with wealth acquired by work and effort, gathered by strength of arm and sweat of brow, lawful and justly, honours, reveres, venerates and respects his parents. They in turn regard him fondly with thoughts of love and say to him: ‘Long life to you and may you be protected.’ Thus for one who regards his parents fondly, progress may be expected and not decline. And again when he does the same to his wife and children, his servants and workfolk, his tenants and those who work his fields, to monks, brahmins and the gods, they likewise will regard him fondly with thoughts of love and say to him: ‘Long life to you and may you be protected.’

A.III,76

69. உடலை மும்மடங்காகச் சுத்திகரிப்பது எப்படி?

இதன் தொடர்பாக ஒருவன் கொலையைத் தவிர்க்கிறான். தடியையும், கத்தியையும் புறந்தள்ளி விடுகிறான். பொறுப்புடனும்,சீரிய பண்புகளுடனும் வாழ்கிறான். எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பும் கருணையும் காட்டுகிறான்.

காட்டிலாகட்டும், நாட்டிலாகட்டும் மற்றவர் பொருளைக் களவாடுவதைத் தவிர்க்கிறான். அவனுக்குக் கொடுக்காத மற்றவர் பொருளை அவன் களவாடுவதில்லை.

முறை தவறிய உடலுறவைத் தவிர்க்கிறான். தாய், தந்தையர், சகோதர சகோதரிகள் உறவினர்களின் பாதுகாப்பில் வாழும் பெண்களிடமும், சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட பெண்களிடமும், திருமணமான பெண்களிடமும், தண்டனை அனுபவிக்கும் பெண்களிடமும் அல்லது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒருவனுக்குத் திருமணத்திற்கு உறுதியாக்கப்பட்ட (நிச்சயிக்கப்பட்ட) பெண்களிடமும் உடலுறவு கொள்ள மாட்டான்.

How is there a threefold cleaning of the body? Concerning this, one abandons killing, lays aside the stick and the sword and lives with care, kindness and compassion towards all living beings. One abandons stealing the property of anyone, whether in the jungle or the village; things not given, one does not steal. One abandons sexual misconduct. One has no intercourse with girls under the guardianship of their mother or father, their brother, sister or relatives, with girls lawfully protected, those already pledged to a husband, those undergoing punishment or those dressed with garlands and promised in marriage.

A.V,266

70. காலையிலும், நண்பகலிலும், இரவிலும் எவனொருவன் மெய், வாய், மனத்தால் (உடலால், சொல்லால், உள்ளத்தால்) நேர்மையைக் கடைப்பிடிக்கிறானோ அவன் காலையிலும், நண்பகலிலும், இரவிலும் மகிழ்ச்சியுடனேயே இருப்பான்.

Whoever, whether at morning, noon or night, practices righteousness of body, speech and mind - they have a happy morning, a happy noon and a happy night.

A.I,294

71. அண்ணல் கேட்டார், 'எது பெரியது? என் கைவிரல் நகத்தினுள்ளிருக்கும் சிறு மணலா அல்லது இம்மாபெரும் உலகமா?'

'அண்ணலே, நிலவுலகம் அளவால் மிகப்பெரியது. உங்கள் விரல் நகத்திலிருக்கும் மணலோ மிகச்சிறியது. இவ்விரண்டையும் ஒப்பிடமுடியாது!'

'அதைப்போலவே மனிதர்களாக மறு பிறப்பெடுப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. ஆனால், மனிதப்பிறவியற்ற, ஆட்சி மண்டலத்திலுள்ள பிற உயிரினங்களாக மறுபிறப்பெடுப்பவர்களே அதிகம். அதனால் நீங்கள்: 'நாம் நேர்மையுடன் வாழ்வோமென' உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

The lord asked: “Which is greater? The little sand on my fingernail, or the great Earth?”

“Lord, greater by far is the great Earth. Tiny is the sand on your fingernail. The two cannot be compared.”

“So too, beings who are reborn as humans are few in number. Far greater are those who are reborn in non-human realms. Therefore, you should train yourself, thinking: ‘We will live earnestly.’”

S.II,263

72. வில்லைப் போல வளைந்தும், மூங்கிலைப் போல வளையும் தன்மையும் இருந்தால் எவருடனும் வேற்றுமை உருவாகாது.

Bend like a bow and be as pliant as bamboo, and you will not be at odds with anyone.

Ja.VI,295

73. இந்த மூன்று வகை எண்ணங்கள் பார்வையை இழக்கச் செய்து, அறியாமையைக் கொடுத்து, அறிவுக்கு ஒரு முடிவுகட்டி, துன்பத்தோடு தொடர்புகொண்டு, நிர்வாண நிலையையடைய உதவாது. எந்த மூன்று? பேராசை கொண்ட எண்ணம், வெறுக்கும் குணம், துன்பம் விளைவிக்கும் குணம்.

இந்த மூன்று வகை எண்ணங்களும் பார்க்கும் சக்தியைக் கொடுக்கும், பரந்த நோக்கத்தையும் புரிதலையும் கொடுக்கும், தெளிந்த அறிவை வளர்க்கும், ஒற்றுமையுடன் தொடர்புகொண்டிருக்கும், நிர்வாண நிலை அடைய ஏதுவாக இருக்கும். எந்த மூன்று? தியாகம் செய்யும் எண்ணம். அன்பு தழுவிய எண்ணம் மற்றும் உதவி செய்யும் எண்ணம்.

These three types of thought cause blindness, loss of vision and ignorance, they put an end to wisdom, they are associated with trouble and do not conduce to Nirvana. What three? Thoughts of greed, of hatred and of harming. These three types of thought impart seeing, vision and understanding, they increase wisdom, are associated with harmony and conduce to Nirvana. What three? Thoughts of giving up, of love and of helping.

It.82

74. மகா மொகல்லன்னாவைப் பார்த்து அண்ணல் கேட்டார், 'என்ன மொகல்லன்னா, நீ அரைத் தூக்கத்திலிருக்கிறாயா?' என்றார்.

'ஆம், அண்ணலே.'

'அப்படியென்றால், எப்பொழுதெல்லாம் உனக்குச் சோம்பேறித்தனம் பற்றிய எண்ணம் வருகிறதோ அப்போது நீ அதைச் சட்டை செய்யாதே; அதைப்பற்றியே (சோம்பலைப்பற்றி) எண்ணிக் கொண்டிருக்காதே. அப்படிச் செய்தால் அது மறைந்து விடுவது சாத்தியமாகும்.'

அப்படிச் செய்தும் சோம்பல் மறையவில்லையென்றால் நீ உன் உள்ளத்தில் அறத்தைப் பற்றியே நினைத்து, அதையே பிரதிபலிக்க வேண்டும். அதைக் கேட்டவாறே, படித்தவாறே மீண்டும் அதை நினைவு கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் சோம்பல் மறையச் சாத்தியமிருக்கிறது.

அப்படிச் செய்தும் சோம்பல் மறையவில்லை யென்றால், நீ கற்றறிந்த கேட்டறிந்த அறத்தை முழுமையாக ஒப்புவித்தால், சோம்பல் மறையச் சாத்தியமிருக்கிறது.

அப்படிச் செய்தும் சோம்பல் மறையவில்லை யென்றால், உன் காதுமடல்களை இழுத்துக் கால்களை உள்ளங்கைகளால் தேய்த்து விடு. அப்படிச் செய்தால் சோம்பல் மறைய வாய்ப்பிருக்கிறது.

அப்படிச் செய்தும் சோம்பல் மறையவில்லை யென்றால், உன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று முகத்தில் நீரை வாரி அடித்துக் கொள். எல்லாத் திசைகளிலும் பார்வையைச் செலுத்தி விட்டு, விண்மீன்கள் நிறைந்த வானத்தை உற்று நோக்கு. இப்படிச் செய்தால் சோம்பல் மறைய வாய்ப்பிருக்கிறது.

அப்படிச் செய்தும் சோம்பல் மறையவில்லை யென்றால், உனது உள்ளொளியை உறுதியாக நிலை நிறுத்தி மனதில் நினைத்துப்பார். பகலிலும் இரவிலும் உள்ளொளியை நினைத்துப்பார். அப்படித் தடங்கலற்ற தெளிவான மனத்துடன் பிரகாசமான உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும். இப்படிச் செய்தால் சோம்பல் மறைய வாய்ப்பிருக்கிறது.

அப்படிச் செய்தும் சோம்பல் மறையவில்லை யென்றால், உனக்கு முன்னாலிருக்கும் பொருள்கள் எவையெவையென்று அறிந்து கொள். உனக்குப் பின்னாலிருக்கும் பொருள்களையுமறிந்து கொள். உணர்வுகள் உள்நோக்குமாறும், மனம் வெளியுலகில் சஞ்சரிக்காதவாறும் கட்டுப்படுத்தி மேலும் கீழுமாக நடந்து பார். இப்படிச் செய்தால் சோம்பல் மறைய வாய்ப்பிருக்கிறது.

அப்படிச் செய்தும் சோம்பல் மறையவில்லை யென்றால், வலது பக்கமாகச் சிங்கத்தைப் போலச் சாய்ந்து படுத்து, ஒருகாலின் மீது மறுகாலைப் போட்டுக் கொண்டு, தெளிவான மனத்துடனும் பிறகு எழுந்திருக்கலாம் என்று படுத்துக் கொள். விழித்த பிறகு எழுந்து நடக்கும் போது, 'நான் படுத்துக் கிடந்து, சோம்பலாக இருப்பதை அனுபவிக்கமாட்டேன்; விரும்பமாட்டேன்.' என்று உறுதி எடுத்துக் கொண்டு உனக்கு நீயே பயிற்சியளித்துக்கொள்.

Then the Lord said to Maha Moggallana: “Are you drowsy, Moggallana? Are you drowsy?”

“Yes, Lord.”

“Well, then, whenever the thought of laziness besets you, pay no attention to that thought, do not dwell on it. Doing this, it is possible that it will pass. But if, by so doing, that laziness does not pass, then you should think and reflect in your mind about the Dhamma - review it in your mind as you have heard it and learned it. Doing this, it is possible that the laziness will pass. But if it does not pass, then you should recite the Dhamma in detail as you have heard it and learned it. Doing this, it is possible that the laziness will pass. But if it does not pass, then you should pull your ear lobes and rub your limbs with the palms of your hands. Doing this, it is possible that the laziness will pass. But if the laziness does not pass, then get up from your seat, and having splashed water on your face, look in all directions and gaze upward into the starry sky. Doing this, it is possible that the laziness will pass. But if it does not pass, then you should firmly establish the inner perception of light - as by day, so by night, as by night, so by day. Thus with a mind that is clear and unobstructed, you should develop a radiant consciousness. Doing this, it is possible that the laziness will pass. But if it still does not pass, then aware of what is in front of you and behind you, walk up and down with your senses turned inwardly and your mind not straying outwardly. Doing this, it is possible that the laziness will pass. But if it still does not pass, then lie down on your right side in the lion posture, with one foot on the other, mindful and clearly conscious, with the thought of rising later. Then, after waking, you should get straight up, thinking: ‘I will not indulge in the enjoyment of lying down, reclining and sleeping.’ Train yourself like this.”

A.IV,85

75. புத்த தம்ம சங்கத்தில் நீ சரணடைந்தால் உன்னிடம் அச்சமோ நடுக்கமோ என்றுமே எழாது.

If you take refuge in the Buddha, the Dhamma and the Sangha, no fear or trembling will ever arise.

S.I,220

76. அறிவு வளரவும் ஒருவன் நல்ல மனிதனாக மாறவும் இந்த நான்குசெயல்களும் மிகச்சிறந்த உதவியாக இருக்கும். எந்த நான்கு செயல்கள்? நல்லோரிடம் சேர்வது, நல்லறத்தைக் கேட்பது, அறிவுடன் கவனிப்பது, அறவழியில் நடப்பது ஆகியவையேயாம்.

These four states conduce to the growth of wisdom, they are of great help to one who has become human. What four? Association with a good person, hearing the good Dhamma, wise attention, and behaving in accordance with the Dhamma.

A.II 245

77. நாடோடி நந்தியா, அண்ணலிடம் கேட்டார். 'எந்த நிபந்தனைகளை வளர்த்துக் கடைப்பிடித்தால், அது நிர்வாண நிலைக்கு இட்டுச் செல்லும்? நிர்வாண நிலையைக் குறிக்கோளாகக் கொண்டு அதன் உச்ச நிலையை அடைய முடியும்?'

'எட்டு வழிகளிருக்கின்றன நந்தியா. அவற்றை வளர்த்துப் பயிற்சி செய்தால் அவை நிர்வாண நிலைக்கு இட்டுச் செல்லும். நிர்வாண நிலையைக் குறிக்கோளாகக் கொண்டு அதன் உச்ச நிலையை அடைய முடியும். அந்த எட்டும் எவை? அவையாவன நற்காட்சி, நல்எண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன் முயற்சி, நற்கவனம் மற்றும் நல் தியானமாகும்.'

The wanderer Nandiya asked the Lord: “What conditions when developed and practiced, lead to Nirvana, have Nirvana as their goal, culminate in Nirvana?”

“There are, Nandiya, eight things which, when developed and practiced, lead to Nirvana, have Nirvana as their goal, culminate in Nirvana. What eight? Perfect View, Perfect Thought, Perfect Speech, Perfect Action, Perfect Livelihood, Perfect Effort, Perfect Mindfulness and Perfect Concentration.”

S.V,11

78. நோக்கத்தை அடைய கடினமாக உழைப்பதற்கு

ஐந்து நல்ல காலங்களிருக்கின்றன. அவை எவை?

இதன் தொடர்பாக, ஒருவன் இளைஞன், இளவயது, கருத்தமுடி, இளமைக்கே உரிய அழகு. வாழ்க்கையின் சிறந்த காலக்கட்டம். இது அவன் கடினமாக உழைத்து நோக்கத்தை அடைய முதலாவது சரியான நேரம்.

அடுத்து ஒருவன் உடல் நலமுள்ளவன், எதையும் சீரணிக்கும் சக்தி கொண்டவன், உடற்சூடு சம நிலையிலுள்ளவன். இது இரண்டாவது சரியான நேரம்.

பஞ்சமில்லாது, தானியங்களெல்லாம் நன்றாக விளைந்து உணவு எளிதாகக் கிடைத்து, பொருட்களைச் சேகரித்து மற்றவர்க்கும் வழங்கிக் கடினமின்றி வாழ முடிந்தால், அது மூன்றாவது சரியான நேரம்.

மனிதர்கள், ஒற்றுமையுடன், பாலும் நீரும் கலந்தது போல இணக்கத்துடன் கூடி, சண்டை சச்சரவின்றி ஒருவரையொருவர் பாசக்கண்களோடு பார்த்து வாழ்ந்தால், அதுவே நான்காவது சரியான நேரம்.

ஒருவருக்கொருவர், வேறுபாடின்றி, ஒருவருடன் மற்றவர் கடுஞ்சொல்கூறாமல், சண்டையிடாமல், வாதஞ்செய்யாமல், ஒரு போதனையென்றாலும் அதனோடு திருப்தியடைந்து, , நம்பிக்கையற்றோர் நம்பிக்கையுடையோராகி, ஏற்கனவே நம்பிக்கைக் கொண்டவர்களிடம் நம்பிக்கை மேலும் வளர்ந்தால், கடினமாக உழைத்து நோக்கத்தை அடைய அதுவே சரியான ஐந்தாவது நேரமாகும், வாய்ப்பாகும்.

There are these five right times for striving. What five? Concerning this, one is young, youthful, black-haired, blessed with the beauty of youth and in the prime of life. This is the first right time for striving. Then, one has health, well-being and a digestion that is not over-hot or over-cool. This is the second right time. If there is no famine and the crops are good, with food easy to get and one can easily live on gleanings and favours, this is the third good time. When people live in friendly fellowship, harmonious as milk and water mixed, without quarrels and looking upon each other with the eyes of love, this is the fourth good time. Again, when the Sangha dwells in friendly fellowship, content with one teaching, then there is no reviling one another, no accusation, quarrelling or contention, so that those with little faith find faith, and the faith of those already faithful grows, this is the fifth right time for striving.

A.III,66

79. மற்றவர் குறையைக் காணாதே,

அவர் விட்டதை தொட்டதைப் பார்க்காதே

உன் செயலையே நீ பார்,

நீ முடித்ததையும் முடிக்க வேண்டியதையும் பார்.

மற்றவர் குற்றத்தைத் தாழ்வாக மதிப்பவன்,

எப்போதுமே பொறாமையாய் இருப்பவன்,

அவன் மாசு தொடர்ந்து வளரும்;

அவைகளின் அழிவு தொலைவில் இருக்கும்.

மற்றவர்களுக்கு போதிப்பதையே நீ கடைப்பிடித்தால்

உன்னையே நீ அடக்கி ஆள்வதால்

பிறரையும் நீ கட்டுப்படுத்தலாம்.

உண்மையிலேயே சுயக்கட்டுப்பாடு கடினமானது.

உன்னையே நீ கண்காணித்துக்கொள்.

உன்னையே நீ சோதித்துக்கொள்,

ஆக, தன்னைக் காத்து, மனக் கவனத்துடன் இருக்கும்

ஓ அறவண அடிகளே! நீங்கள் மகிழ்ச்சியில் வாழ்வீர்!

Look not to faults of others,

To their omissions and commissions.

But rather look to your own acts,

To what you have done or left undone.

When one looks at another's faults,

And is always full of envy,

One's defilements continually grow;

Far are they from their destruction.

If only you would do what you teach others,

Then, being yourself controlled,

You could control others well.

Truly, self-control is difficult.

You yourself must watch yourself.

You yourself must examine yourself,

And so, self-guarded and mindful,

O monk, you will live in happiness.

Dhp.50, 253, 159, 379

80. மனம், மனப்பான்மை, மனத்தின் விழிப்பு நிலை என்றழைக்கப்படும் இந்நிலைகள் இரவு பகலாகத் தொடர்ந்து எழும், மறையும். குரங்கு மரத்திற்கு மரம் தாவும் பொழுது ஒரு கிளையை விடுவது மற்றொரு கிளையைப் பிடிப்பதற்கே! அதைப்போலவே, எண்ணம் என்று அழைத்தாலும், மனம் என்று அழைத்தாலும் அல்லது மனத்தின் விழிப்பு நிலை என்றழைத்தாலும் இந்நிலைகள் இரவு பகலாகத் தொடர்ந்து எழவும் செய்யும்; மறையவும் செய்யும்.

That which is called mind, mentality or consciousness arises and disappears continuously both day and night. Just as a monkey swinging through the trees grabs one branch, letting it go only to grab another, so too that which is called thought, mind or consciousness arises and disappears continuously both day and night.

S.II,94

81. நாடோடி ஜம்புகாடகன் வணக்கத்திற்குரிய அறவண அடிகள் சாரிபுத்திரரிடம், 'அவர்கள் நிர்வாணம், நிர்வாணம் என்று பேசுகிறார்களே, நிர்வாணம் என்றால் என்ன சாரிபுத்திரரே?' என்று கேட்டான்.

'பேராசை, பகைமை, மாயை என்னும் ஏமாற்றம் ஆகியவற்றை ஒழிப்பதே நிர்வாணமாம்.'

'நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்லும் வழி, அதை அணுகும் வழி ஏதேனும் இருக்கிறதா?'

'அப்படி ஒரு வழி இருக்கிறது, ஓர் அணுகுமுறை இருக்கிறது.'

'அது எது?'

'அதுதான் அட்டாங்க மார்க்கமென்னும் புனிதமான எட்டு வழிகளாம். அவையாவன: நற்காட்சி, நல்எண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன் முயற்சி, நற்கவனம், நல் தியானம் ஆகியவையாம்.'

'மங்களகரமான வழி, மங்களகரமான அணுகுமுறை நிர்வாண நிலையையடைவதற்குச் சரியான, நேர்மையான வாய்ப்பாகும். உன்னை ஊக்கப்படுத்த அதுவே போதும்.’

Jambukhadaka the wanderer came to Venerable Sariputta and asked: “They talk about Nirvana all the time. But what exactly is Nirvana?”

“The destruction of greed, hatred and delusion is Nirvana.”

“Is there any path, any way that leads to Nirvana?”

“There is such a path, such an way.”

“And what is it?”

“It is the Noble Eightfold Path - Perfect View, Perfect Thought, Perfect Speech, Perfect Action, Perfect Livelihood, Perfect Effort, Perfect Mindfulness and Perfect Concentration.”

“And an auspicious path it is, and an auspicious way to the realization of Nirvana it is too. It is enough to make you energetic.”

S.IV,251

82. நரிகள் ஊளையிடுவதையும் பறவைகள் பாடுவதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மனிதன் சொல்வதைச் சரியாகக் கணிப்பது மிகக் கடினமான செயலாக உள்ளது. 'அவன் என் உறவினன், என் நண்பன், என் கூட்டாளி' என்று முன்னர் ஒருவர் உங்களை மகிழ்வித்திருந்ததால் அவரைப் பற்றி நீங்கள் பெருமையாக நினைக்கலாம். ஆனால் இப்போது அவர் உங்கள் எதிரியாகக் கூட இருக்கலாம். நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தினால் அவர்கள் எப்போதும் நம்மை நெருங்கியிருக்கின்றனர். நம்மைப் பிடிக்காதவர்கள் எப்போதும் தொலைவிலேயே உள்ளனர். கடல் கடந்து இருந்தாலும் உண்மையான நண்பன் உண்மையான நண்பனாகவே இருக்கின்றான். கடல் கடந்து இருந்தாலும் நேர்மையற்றவன் நேர்மையற்ற வனாகவே இருக்கின்றான்.

Easy to understand is the yelp of jackals and the song of birds. But to interpret what humans say is difficult indeed. You may think, ‘He is my kin, my friend, my comrade true’ because before he made you happy, but now he may be an enemy. When we love someone they are always near, while those who like us not are always distance. The faithful friend is faithful still though you be oceans apart. He of corrupt mind is still corrupt though he be across the sea. Ja.IV,217

83. இந்த மூவரும் மக்களுக்கு மிகவும் உதவி செய்பவர்களாம். எந்த மூவர்?

எந்த ஒருவர் மூலமாகப் புத்த தம்ம சங்கமெனும் மும்மணிகளைச் சரணமடைகிறோமோ அவர்,

எந்த ஒருவர் மூலமாக நான்கு பேருண்மைகளை அறிந்து கொள்கிறோமோ அவர்,

எந்த ஒருவர் மூலமாக மாசுகளை ஒழித்து, வாழ்க்கையில் முழுமையான மனச்சுதந்திரத்தை அனுபவிக்கிறோமோ அவர், ஆகிய இவர்கள் மூவருந்தான். இம்மூவரைவிட உதவி செய்கிறவர்கள் வேறெவருமிலர்.

These three people are very helpful to others. What three? One through whom one goes for refuge to the Buddha, the Dhamma and the Sangha; one through whom one understands the Four Noble Truths, and one through whom one comes to destroy the defilements and comes to know in this very life the mind’s complete freedom. These are the three persons. There are none more helpful than these three.

A.I,123*

84. குயவரின் கூடாரத்தில் நோய்வாய்ப்பட்டு நொந்து போய்த் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போற்றுதற்குரிய அறவண அடிகள் வக்காலி, அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தவரை அழைத்து, 'நண்பரே, அண்ணலிடம் சென்று அவர் பாதம் வணங்கி, நான் நோய்வாய்ப்பட்டிருப்பதைக் கூறிக் கருணைகூர்ந்து அடிப்படையில் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்.' என்றார்.

பணிவிடை செய்துகொண்டிருந்தவரும் அவர் சொன்னதை அண்ணலிடம் கூறினார். அண்ணலும் அவர் கூறியதை மௌனமாக ஏற்றுக்கொண்டார். உடைஉடுத்துத் துவராடையையும், இரந்துண்ணும் பாத்திரத்தையும் கையிலெடுத்துக் கொண்டு கிளம்பினார்.

இப்பொழுது அண்ணல் தூரத்தில் வருவதைக் கண்ட வக்காலி, சிரமப்பட்டு எழுந்து நிற்க முயன்றார். அதைக்கண்ட அண்ணல் கூறினார்: 'போதும் வக்காலி, படுக்கையிலேயே இரு. இருக்கைகள் தான் தயாராக இருக்கின்றனவே. நான் அதில் அமர்கிறேன்.' என்று கூறிக்கொண்டே ஓர் இருக்கையில் அமர்ந்தார். அமர்ந்தபடியே வக்காலியைப் பார்த்துக் கூறினார். 'நீ தாங்கிக்கொள்கிறாய் என்று நினைக்கிறேன், நீ பொறுத்துக் கொள்கிறாய் என்று நினைக்கிறேன், வலி குறைகிறதா, தணிகிறதா, அவை குறைவதுபோல் தோன்றுகிறதா? தணிவதுபோல் தோன்றுகிறதா?' என்று கேட்டார்.

'இல்லை அண்ணலே. என்னால் பொறுத்துக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியவில்லை, வலி குறையவுமில்லை, கூடவுமில்லை.'

'அப்படியானால் உனக்கு ஏதாவது துக்கமோ கவலையோ இருக்கிறதா?'

'ஆம் அண்ணலே, எனக்குச் சற்று வருத்தம் இருக்கிறது.'

'நல்லொழுக்கம் தவறி வசையாக மாறிவிட்டதென உனக்குள் ஏதாவது கவலையாக இருக்கிறதா?'

'இல்லை அண்ணலே, நான் வசைக்குரியவனாகவில்லை.'

'அப்படியென்றால் உனக்கு என்ன கவலை, என்ன வருத்தம்?'

'அதன் தொடர்பாக நீண்ட காலமாக அண்ணலைக் காண்பதற்காகக் காத்திருந்தேன். ஆனால், அப்படிச் செய்வதற்கு என் உடலில் வலுவில்லை.'

'போதும், வக்காலி! இந்த அழுக்குடைய என் உடலை ஏன் காண விரும்புகிறாய்? எவனொருவன் அறத்தைக் காண்கிறானோ, அவன் என்னைக் காண்கிறான். மேலும் எவனொருவன் என்னைக் காண்கிறானோ, அவன் நல்லறத்தைக் காண்கிறான். உண்மையில் அறத்தைக் காண்பவன் என்னைக் காண்கிறான். என்னைக் காண்பவன் அறத்தைக் காண்கிறான்.'

Venerable Vakkali was staying at the Potter’s Shed and was suffering from a disease, sick and afflicted. Then he called his attendant and said: “Friend, go to the Lord and in my name worship his feet, tell him I am suffering from a disease and suggest that it would be good if he were to come and visit me out of compassion for me.” So the attendant did as he was asked. In silence the Lord consented and dressing himself and taking his robe and bowl, set out. Now Vakkali saw the Lord coming in the distance and struggled to rise from his bed. But the Lord saw him and said: “Enough, Vakkali. Remain in your bed. There are seats made ready. I will sit there.” Having seated himself, the Lord addressed Vakkali saying: “I hope you are bearing up. I hope you are enduring. Are the pains decreasing or abating? Do they seem to be decreasing or abating?”

“No, Lord. I am not bearing up or enduring, the pains do not decrease, neither do they grow.”

“Then have you any regret or sorrow?”

“Lord, I do have some regret and sorrow.”

“Have you anything concerning virtue to reproach yourself about?”

“No, Lord, I have nothing to reproach myself about.”

“Then why are you troubled by regret and sorrow?”

“Because Lord, for a long time I have been wanting to see you but I have not had the strength to do so.”

“Enough, Vakkali. Why do you want to see this dirty body of mine? One who sees the Dhamma sees me and one who sees me sees the Dhamma. Truly, seeing the Dhamma, one sees me and seeing me, one sees the Dhamma.”

S.III,119

85. வளர்ச்சியடையாத மனத்தைவிட, வேலை செய்யாத ஒரு தனிப்பொருளை நான் கண்டதில்லை. உண்மைதான். வளர்ச்சியடையாத மனம் வேலை செய்யத் தகுதியற்ற பொருளாகும்.

வளர்ச்சியடைந்த மனத்தைப் போலச் சிறப்பாக வேலை செய்யும் வேறெந்தத் தனிப் பொருளையும் நான் அறியவில்லை. உண்மைதான். வளர்ச்சியடைந்த மனமே செயல்பாட்டிற்கு உகந்த ஒன்றாகும்.

I know of no single thing so unworkable as the undeveloped mind. Indeed, the undeveloped mind is an unworkable thing. I know of no other single thing so workable as the developed mind. Indeed, the developed mind is a workable thing.

A.I,5

86. ஓர் ஆசிரியர் கருணையோடு தன் மாணவர்களின் நலனுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் செய்துவிட்டேன். இதோ மரங்களின் வேர்களிருக்கின்றன. இதோ வெறுமையான இடமுமிருக்கிறது. தியானம் செய்யுங்கள்! சோம்பல் நிறைந்தவர்களாக வாழாதீர்கள். பின்பு மனச்சான்றின் உறுத்தலுக்கு உள்ளாவீர்கள். இவை நான் உங்களுக் களித்த போதனைகளாகும்.

Whatever has had to be done by a teacher out of compassion for his disciples and for their welfare, I have done for you. Here are the roots of the trees, here are the empty places. Meditate! Do not be slothful, do not be remorseful later. These are my instructions to you.

M.I,46

87. ஏழு வழிகளைத் தன் குணமாகக் கொண்ட ஒருவனை உங்கள் நண்பனாக்கிக் கொள்ளுங்கள்! எந்த ஏழு?

கொடுப்பதற்கு எவை கடினமானவையோ அவற்றைக் கொடுப்பவன்,

செய்வதற்கு எவை கடினமானவையோ அவற்றைச் செய்பவன்,

எவையெவை தாங்கிக் கொள்ள முடியாதவையோ அவற்றைத் தாங்கிக் கொள்பவன்,

தன் இரகசியங்களை உங்களிடம் கூறி உங்கள் இரகசியங்களைப் பாதுகாப்பவன்,

சிரமமான நேரங்களில் உங்களைப் புறக்கணிக்காதவன்,

மேலும் நீங்கள் தாழ்வுற்றிருக்கும் போது உங்களை இழிவு படுத்தாதவன்.

Cultivate a friend whose ways are seven. What seven? He gives what is hard to give, does what is hard to do, bear what is hard to bear, he confesses his secrets and keeps your secrets, in times of trouble he does not abandon you, and he does not despise you when you are down.

A.IV,31

88. மாணவர்கள் ஆசிரியரிடம் அன்புடனும், பகைமை இல்லாமலும் எப்படி நடந்துக்கொள்வது? இதன் தொடர்பாகக் கருணை மிக்க ஆசிரியர் அறத்தைத் தன் மாணவர்களுக்கு அவர்கள் நலங் கருதி இரக்கத்துடன், 'இவை உங்கள் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவுமே' எனப்போதிக்கிறார். அவருடைய மாணவர்கள் உற்றுக் கவனிக்கிறார்கள். காது கொடுத்துக் கேட்கிறார்கள். அவர்கள் மனத்தை ஆழ்ந்த அறிவுக்குத் தயாராக்கிக் கொள்கின்றனர். ஆசிரியர் போதிக்கும் போது அவர்கள் அங்கும் இங்கும் திரும்புவதும் இல்லை, ஆசிரியரின் போதனையைத் தவிர வேறெதிலும் கவனத்தைச் செலுத்துவதுமில்லை. இப்படி ஆசிரியரிடம் மாணவர்கள் வெறுப்பின்றி அன்புடன் நடந்து கொள்கின்றனர். அதனால், நீங்களும் என்னிடம் வெறுப்பின்றி அன்புடன் நடந்துகொள்ளுங்கள். இவை உங்களுடைய, நீண்ட நாளைய நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவுமே. குயவன் மண்ணைப் பிசைவது போல நான் உங்களை நடத்த மாட்டேன். மறுபடியும் மறுபடியும் எச்சரித்துப் பேசுவேன். அடிக்கடி சோதிப்பேன். என் போதனைகளில் தெளிவானவர்களே சோதனையைச் சந்திக்க இயலும்.

How do disciples conduct themselves towards a teacher with love, not hostility? Concerning this, the compassionate teacher instructs his disciples in the Dhamma, seeking their welfare and out of compassion, saying: ‘This is for your welfare and happiness.’ His disciples listen to him, lend an ear, prepare their minds for profound knowledge, they do not turn aside or move away from the teacher’s instructions. In this way do disciples conduct themselves towards a teacher with love, not hostility. Therefore, conduct yourselves towards me with love, not hostility, and it will be for your welfare and happiness for a long time. I shall not treat you the way the potter treats damp clay. Repeatedly admonishing I shall speak, repeatedly testing. One who is sound will stand the test.

M.III,117-18

89. உலகில் மூன்று விதமான மனிதர்களிருக்கின்றனர். எப்படிப்பட்ட மூன்று வித மக்கள்?

ஒருவித மக்கள் பாறையிலே செதுக்கப்பட்ட எழுத்தைப் போன்றவர்கள். ஒரு சிலர் தரையிலே கிறுக்கிய எழுத்தைப் போன்றவர்கள். ஒரு சிலர் நீரில் எழுதிய எழுத்தைப் போன்றவர்கள்.

பாறையிலே செதுக்கப்பட்ட எழுத்தைப் போன்ற மனிதர் எப்படிப்பட்டவர்? எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருக்கும் குறிப்பிட்ட ஒருவரைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவரது கோபம் பாறையிலே செதுக்கப்பட்டஎழுத்தைப் போலக் காற்றாலோ, நீராலோ, காலத்தாலோ அழியாது.

தரையில் கிறுக்கப்பட்ட எழுத்தைப் போன்ற மனிதர் எப்படிப்பட்டவர்? எப்போதும் கோபம் கொள்ளும் குறிப்பிட்ட ஒருவரைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், அவரது கோபம் நீண்ட நேரம் நீடிக்காது. தரையில் கிறுக்கிய எழுத்து காற்றாலும், நீராலும், காலத்தாலும் மறைவதைப் போல அவர் கோபமும் மறைந்து விடும்.

நீரில் எழுதிய எழுத்தைப் போன்ற மனிதர் எப்படிப்பட்டவர்? ஒரு மனிதரைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவரிடம் கடுமையாகப் பேசினாலும், மரியாதையற்ற முறையில் பேசினாலும், புண்படுத்தும்படி பேசினாலும் அவரை மிகச் சுலபமாகச் சமரசப்படுத்தி இணங்கவைத்துவிடலாம். அவர் நீரில் எழுதிய எழுத்தைப் போல உடனே கோபத்தை மறந்துவிடுவார், நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார், நட்பாகிவிடுவார்.

There are three types of people in the world. What three? One who is like carving on a rock, one who is like scratching on the ground, and one who is like writing on the water. What sort of person is like carving on a rock? Imagine a certain person who is always getting angry and his anger lasts long, just as carving on a rock is not soon worn off by wind, water or the passing of time. What sort of person is like scratching on the ground? Imagine a certain person who is always getting angry but his anger does not last long, just as scratching on the ground is soon worn off by the wind, water and the passing of time. And what sort of person is like writing on the water? Imagine a certain person who, even though spoken to harshly, sharply and roughly, is easily reconciled and becomes agreeable and friendly, just as writing on the water soon disappears.

A.I,283

90. எப்படிப்பட்ட குடும்பங்களாக இருந்தாலும் நீண்ட நாள் நீடிப்பதற்கு நான்கு காரணங்கள் அல்லது இந்த நான்கில் எதேனும் ஒன்றிரண்டு காரணங்களே பொறுப்பாகும். எந்த நான்கு? அவர்கள் தொலைந்ததை மீட்டுக் கொள்கின்றனர், சிதைந்தவற்றைப் பழுது பார்த்து விடுகின்றனர். மிதமாக உண்கின்றனர். மிதமாக அருந்துகின்றனர். மேலும் நிர்வாகப் பொறுப்பை நல்லொழுக்கம் நிறைந்த ஓர் ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ ஒப்படைத்து விடுகின்றனர்.

Whatever families endure long, all of them do so because of four reasons, or because of several of them. What four? They recover what is lost, repair what is decayed, eat and drink in moderation, and they put a virtuous man or woman in a position of authority.

A.II,249