கௌதம புத்தர்
மயிலை சீனி. வேங்கடசாமி
பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - இரண்டாம் பதிப்பு 1969
Lord Buddha's Life History - Mylai Seeni Vengatasamy 2nd Edition 1969
இணைப்பு 4
புத்தர் புகழ்ப் பாக்கள்
கீழ்க்கண்ட செய்யுள்கள் வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் பழைய உரையிலும் வேறு நூல்களின் உரையிலும் மேற்கொள் காட்டப்பட்டுள்ளவை.
1. போதி, ஆதி பாதம், ஓது!
2. போதி நீழல்
சோதி பாதம்
காத லால்நின்று
ஓதல் நன்றே!
3. உடைய தானவர்
உடைய வென்றவர்
உடைய தாள்நம
சரணம் ஆகுமே!
4. பொருந்து போதியில்
இருந்த மாதவர்
திருந்து சேவடி
மருந்து ஆகுமே!
5. அணிதங்கு போதி வாமன்
பணிதங்கு பாதம் அல்லால்,
துணிபொன் றிலாத தேவர்
மணிதங்கு பாதம் மேவார்!
6. விண்ணவர் நாயகன் வேண்டக்
கண்ணினி தளித்த காதற்
புண்ணியன் இருந்த போதி
நண்ணிட நோய்நலி யாவே!
7. மாதவா போதி வரதா வருளமலா
பாதமே யோது சுரரைநீ -- தீதகல
மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாய்ச்சீர்த்
தாயா யலகிலரு டான்!
8. மூன்றான் பெருமைக்கண் நின்றான் முடிவெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்
றென்றானும் உள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தான்
அன்றே இறைவன் அவன்தாள் சரணங்க ளன்றே.
9. தோடார் இலங்கு மலர்கோதி வண்டு
வரிபாட நீடு துணர்சேர்
வாடாத போதி நெறிநீழல் மேய
வரதன் பயந்த அறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை
குணனாக நாளும் முயல்வார்
வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப
வினைசேர்தல் நாளும் இலரே!
10. எண்டிசையும் ஆகி இருள் அகலநூறி
எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி
வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து
மழைமருவு போதி உழைநிழல்கொள் வாமன்
வெண்டிரையின் மீது விரிகதிர்கள் காண
வெறிதழல்கொள் மேனி அறிவனெழில் மேவு
புண்டரிக பாதம் நமசரணம் ஆகும்
எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார்!
11. மிக்கதனங் களைமாரி மூன்றும் செய்யும்
வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி
ஒக்கஅரிந் தொருகூற்றை இரண்டு கண்ணை
ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை
எக்கிவிழுங் குருதிதனை அரசு தன்னை
இன்னுயிர்போல் தேவியைஈன் றெடுத்த செல்வ
மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்
வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே!
12. வான் ஆடும் பரியாயும் அரிண மாயும்
வனக்கேழற் களிறாயும் எண்காற் புள்மான்
தானாயும் பணை எருமை ஒருத்த லாயும்
தடக்கை இளங் களிறாயும் சடங்க மாயும்
மீனாயும் முயலாயும் அன்ன மாயும்
மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க
மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்
வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே!
(சடங்கம் - ஊர்க்குருவி)
13. வண்டுளங்கொள் பூங்குழலாள் காதலனே உன்றன்
மக்களைத்தா சத்தொழிற்கு மற்றொருத்த ரில்லென்(று)
எண்டுளங்கச் சித்தையளோர் பார்ப்பனத்தி மூர்க்கன்
இரத்தலுமே நீர்கொடுத்தீர் கொடுத்தலுமத் தீயோன்
கண்டுளங்க நும்முகப்பே யாங்கவர்கள் தம்மைக்
கடக்கொடியாலே புடைத்துக் கானகலும் போது
மண்டுளங்கிற் றெங்ஙனே நீர்துளங்க விட்டீர்
மனந்துளங்கு மாலெங்கள் வானோர் பிரானே.
14. கூரார் வளைவுகிர் வாளெயிற்றுச் செங்கண்
கொலையுழுவை காய்பசியால் கூர்ந்தவெந்நோய் நீங்க
ஓரா யிரங்கதிர்போல் வாள்விரிந்த மேனி
உளம்விரும்பிச் சென்றாங்கியைந்தனைநீயென்றால்
காரார் திரைமுளைத்த செம்பவளம் மேவுங்
கடிமுகிழ்ந்த தண்சினைய காமருபூம் போதி
ஏரார் முனிவர்கள் வானவர்தங் கோவே!
எந்தாய்! அகோ! நின்னை ஏத்தாதார் யாரே!
15. வீடுகொண்ட நல்அறம் பகர்ந்துமன் பதைக்கெலாம்
விளங்குதிங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன்
மோடுகொண்ட வெண்நுரைக் கருங்கடற் செழுஞ்சுடர்
முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின்
ஆடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான
ஐந்தொடங்கோர் மூன்றறுத்த நாதனாள் மலர்த்துணர்ப்
பீடுகொண்ட வார்தளிப் பிறங்கு போதி யானைஎம்
பிரானை நாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே!
16. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
(தரவு)
திருமேம பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக
உருமேவி அவதரித்த உயிர் அனைத்தும் உயக்கொள்வான்
இவ்வுலகும் கீழுலகும் மிசையுலகும் இருள்நீங்க
எவ்வுலகும் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடர்என்ன
விலங்குகதிர் ஓர் இரண்டு விளங்கிவலங் கொண்டுலவ
அலங்குசினைப் போதிநிழல் அறம்அமர்ந்த பெரியோய் நீ!
(தாழிசை)
மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இருபுயங்கள்
மாரவனி தையர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே!
'வேண்டினர்க்கு வேண்டினவே அளிப்பனெ'ன மேலைநாள்
பூண்டஅரு ளாள! நின் புகழ்புதிதாய்க் காட்டாதோ!
உலகமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறி அழுங்கப்
புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே!
பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய் திருமேனி
மாதவன் நீ என்பதற்கோர் மறுதலையாய்க் காட்டாதோ
கழல் அடைந்த உலகனைத்தும் ஆயிரம்வாய்க் கடும்பாந்தள்
அழல் அடைந்த பணத்திடை இட்டன்றுதலை ஏறினையே!
மருள் பாரா வதம் ஒன்றே வாழ்விக்கக் கருதியநின்
அருள்பாரா வதஉயிர்கள் அனைத்திற்கும் ஒன்றாமோ!
(அராகம்)
அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை
எரிசுடர் மறைமலர் எனவிடும் அடியினை!
அகலிடம் முழுவதும் அழல்கெட அமிழ் துமிழ்
முகில்புரி இமிழ்இசை நிகர் தரும் மொழியினை!
(ஈரடி அம்போதரங்கம்)
அன்பென்கோ! ஒப்புரவென்கோ! ஒருவன் அயில்கொண்டு
முந்திவிழித் தெரியப்பால் பொழிந்தமுழுக் கருணையை!
நாணென்கோ! நாகமென்கோ! நன்றில்லான் பூணுந்
தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை!
(ஓரடி அம்போதரங்கம்)
கைந்நாகத் தார்க்காழி கைக்கொண் டளித்தனையே!
பைந்நாகர் குலம் உய்ய வாய்அமிழ்தம் பகர்ந்தனையே!
இரந்தேற்ற படைஅரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே!
பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே!
(தணிச்சொல்)
எனவாங்கு.
(சுரிதகம்)
அருள்வீற் றிருந்த திருநிழற் போதி
முழுதுணர் முனிவ! நிற் பரவுதும் தொழுதக
ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு
முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்
தோங்குநீர் உலகிடை யாவரும்
நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே!
* * * * *