பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு
வண. நாரத தேரர் அவர்கள்.
தமிழில்
செல்வி யசோதரா நடராசா
அத்தியாயம் 6: கன்மம் அல்லது காரண காரிய ஞானம்
Kamma or the Law of Moral Causation
நாம் ஒரு சமநிலையற்ற உலகை நம் எதிரில் காண்கின்றோம். உலகில் வாழும் உயிர்களின் பலதரப்பட்ட தன்மை, மனிதரின் சமத்துவமின்மை, அவனது பலவிதமான இலக்குகள் முதலியவற்றை நாம் உணர்ந்தறிகிறோம். ஒருவன் சிறந்த மனப்பண்பு, உடற்பண்பு கொண்டு செல்வச் சூழ்நிலையில் பிறப்பதையும், இன்னொருவன் வறுமை நிறைந்த துயரமான சூழ்நிலையில் பிறப்பதையும் நாம் கண்ணாரக் காண்கிறோம். நற்குணங்களையும் தூய்மையையும் உடைய ஒருவனுக்கு அவன் எதிர்பாரா வகையில் துரதிர்ஷ்டம் எந்நேரமும் காத்திருக்கின்றது. அவனுடைய இலட்சியங்களுக்கும் ஆசைகளுக்கும் இந்த நயவஞ்சக உலகம் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. அவனுடைய செய்கைகளில் நேர்மையும் பக்தியும் இருந்தாலும், அவன் வறுமையிலும் துயரத்திலும் வாடுகிறான். கெட்டவனும் முட்டாளுமான இன்னொருவன் நற்பேறுகளின் அணைப்பிலிருக்கிறான். அவன் குறைபாடுகளையும் கெட்டவழக்கங்களையும்
உடையவனாயிருந்தாலும் எல்லாவிதமான அனுகூலங்களும் அவனுக்குக் கிடைக்கின்றன.
ஏன் ஒருவன் உயர்ந்த நிலையிலும் இன்னொருவன் தாழ்ந்த நிலையிலும் இருக்க வேண்டும் எனக் கேட்கப்படலாம். ஒருவன் குழந்தைப் பருவத்திலும், இன்னொருவன் நிறை வாலிபத்திலும், மற்றொருவன் முதிர்ந்த வயதிலும் ஏன் சாக வேண்டும்? ஏன் ஒருவன் நோயுற்றும், பலவீனமாகவும், இன்னொருவன் உடல்நலத்தோடும், பல சாலியாகவும் இருக்கவேண்டும்? ஏன் ஒருவன் அழகாகவும், இன்னொருவன் அருவருக்கத்தக்க கோரரூபங்கொண்டவனாகவும் இருக்க வேண்டும்? ஏன் ஒருவன் செல்வத்தின் மடியிலும் இன்னொருவன் துயர் மிகுந்த வறுமையிலும் வளர வேண்டும்? ஏன் ஒருவன் கோடீஸ்வரனாகவும், இன்னொருவன் ஆண்டியாகவும் இருத்தல் வேண்டும்? ஏன் ஒருவன் மேதாவியாகவும், இன்னொருவன் அறிவிலியாகவும் இருக்க வேண்டும்? ஏன் ஒருவன் ஞானிக்குரிய பண்புகளோடும், இன்னொருவன் குற்றமான மனப்போக்கோடும் பிறக்க வேண்டும்? ஏன் சிலர் மட்டும் தொட்டிலிலிருந்தே பன்மொழிப் புலவராகவும், ஓவியராகவும், கணக்கறிஞராகவும், இசைக்கலைஞராகவும் திகழ வேண்டும்? ஏன் சிலர் மட்டும் பிறப்பிலேயே குருடாகவும், செவிடாகவும், அங்கவீனராகவும் இருக்க வேண்டும்? ஏன் சிலர் மட்டும் பிறப்பிலிருந்து வாழ்த்தப்பட்டும், மற்றவர் சபிக்கப்பட்டும் இருக்கிறார்கள்?
இவை சிந்தனை செய்யும் மனிதரின் மனத்தைக் குழப்பும் சில பிரச்சனைகளாகும். இந்த சமநிலையற்ற தன்மையை மனிதனின் சமத்துவமின்மையை எப்படி விளக்குவது?
இது ஒரு தற்செயல் நிகழ்ச்சியா அல்லது விபத்தா?
இவ்வுலகில் எதுவும் தற்செயலாகவோ அல்லது விபத்தாகவோ நடப்பதில்லை. தற்செயலாகக் காரியங்கள் நடைபெறும் எனக் கூறுவது, இந்தப் புத்தகம் இந்தக்கையில் தானாக வந்து சேர்ந்துள்ளது என்று கூறுவதற்கு ஒப்பாகும். தீர்க்கமாகச் சொன்னால், மனிதன், எக்காரணத்தினாலோ தனக்கு வரவேண்டியதையே அவன் பெறுகிறான்.
இது ஒரு பொறுப்பில்லாத கடவுளின் கட்டளையாகுமா?
"யாரோ இவ்வற்புதமான உலகைத் திட்டமிட்டுப் படைத்தார் என்று
எடுத்துக்கொண்டால், அவர் முழுதும் நன்மையான அல்லது முழுதும் தீமையான குணத்தையுடையவரல்லர் என்பது தெள்ளத் தெளிவாகிறது," என ஹக்ஸ்லி எழுதுகிறார்.
ஐன்ஸ்டைன், "இக் கடவுள் எல்லாம் வல்லவரானால் எல்லா மனித செயலும், எல்லா மனித எண்ணமும், எல்லா மனித உணர்வும் ஆர்வமும் அவருடைய வேலையேயாகும். இப்படிப்பட்ட சர்வ வல்லமை வாய்ந்த கடவுளின் முன் நான் எப்படி மனிதனை அவனுடைய செயல்களுக்குப்பொறுப்பாளியாக்கமுடியும்?
"தண்டனைகளையும் வரங்களையும் தருவதன் மூலம் அவர் ஓரளவுக்குத் தனக்கே தீர்ப்பளித்துக் கொள்ளுகிறார். இது எங்ஙனம் அவரைக் குறிக்கும் நற்குணத்தோடும் நேர்மையோடும் பொருந்தும்," எனக் கூறுகின்றார்.
"சமய சித்தாந்தக் கொள்கைகளின்படி மனிதன் ஒரு தலைப்பட்சமாக அவனது விருப்பமின்றிப் படைக்கப்படுகின்றான். படைப்பின்போது அவன் என்றும் ஆசீவதிக்கப்படுகிறான். அல்லது முற்றாகச் சபிக்கப்படுகிறான். ஆகவே மனிதன் அவனது தனிப்பட்ட விருப்பங்கள், நம்பிக்கைகள், இலட்சியங்கள், போராட்டங்கள், பக்தி நிறைந்த வழிபாடுகள் முதலியவற்றுக்கு மதிப்புத் தராமல் அவனது படைப்பின் முதலடியிலிருந்து கடைசி மூச்சுவரை நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ, நற்பேறு பெற்றவனாகவோ அல்லது அவப்பேறு பெற்றவனாகவோ, உயர்ந்தவனாகவோ அல்லது தாழ்ந்தவனாகவோ இருக்கவேண்டும். சமய சித்தாந்தத்தின்படி ஊழ்வினை இப்படிப்பட்டது," என்று
ஸ்பென்சர் லுயிஸ் கூறியுள்ளார்.
கடவுள் என்றும் நல்லவர், எல்லாம் அறிந்தவர், எல்லாம் வல்லவர் என்ற
கூற்றையும், கடவுள் நிலையான நன்மையைக் கொடுப்பவர் என்ற நம்பிக்கையையும், பிணி, துயரம், பாதகம், வறுமை என்பன பதிலளிக்க முடியாத பலத்தோடு சவால் விடுகிறன என்பதையும் சார்வஸ் பிராட்லோ கூறியுள்ளார்.
"தாம் ஒன்றுமில்லாததிலிருந்து (சூன்யத்திலிருந்து) வந்ததாக நினைப்பவர் தாம் மீண்டும் ஒன்றுமில்லாததாக (சூன்யமாக) ஆவார் என்பதை மறக்கக் கூடாது. ஏனெனில் அவன் தோன்றுமுன் ஒரு ஈரல் காலம் கழிந்துவிட்டது. அவன் தான் தோன்றியதன்பின் இரண்டாவது முடிவிலியில் அழியாமலிருப்பான் என்ற எண்ணம் ஒரு மிகக் கொடிய எண்ணமாகும்," என்று சோபன்கேவர் கூறியுள்ளார்.
"பிறப்புத்தான் முழுமுதல் ஆரம்பமானால் அப்போது இறப்புத்தான் முழுமுடிவாகவேண்டும். மனிதன் ஒன்று மில்லாததிலிருந்து உருவாக்கப்பட்டான் என்ற மேற்கோள் இறப்பு முழுமுடிவாக இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுகின்றது."
பேராசிரியர் ஜே.பி.எஸ் ஹல்தேன் கடவுளையும் மனித துன்பங்களையும் பற்றிக்
குறிப்பிடும்போது, "மனிதனின் குணவியல்பை முழுமையாக்கத் துன்பம் தேவைப்படுகின்றது. அப்படியில்லையாயின் கடவுள் எல்லாம் வல்லவரல்ல. அதிக துன்பத்தை அனுபவிக்காத, ஆனால் நல்ல மூதாதையரையுடைய, கல்வியறிவுடைய சிலர் மிகச் சிறப்பான குணவியல்புகளைக் கொண்டுள்ளனர் என்ற உண்மை முதற்கோட்பாட்டைத் தகர்க்கின்றது. இரண்டாவது கோட்பாட்டுக்குரிய மறுப்பு யாதெனில் அது அகில உலகைப் பொறுத்தமட்டில் அறிவினால் விளக்க முடியாத வெற்றிடங்களை நிரப்ப அவற்றைத் தெய்வத்தின் செயலென்ற கருத்தாகும். படைக்க வல்லவர் அல்லது படைக்க வல்லது விரும்பிய எதையும்தான் படைக்கக் கூடும் எனக் கூறினார்.
"நல்லவரும் எல்லாம் வல்லவருமான இறைவனால் இவ்வுலகம் படைக்கப்பட்டுள்ளது என்று எமக்குக் கூறப்பட்டுள்ளது. உலகைப் படைக்குமுன் அது உள்ளடக்கிய துன்பத்தையும் துயரத்தையும் அவர் முன்னறிந்தார். ஆகவே அவர் படைத்த எல்லாவற்றுக்கும் அவரே பொறுப்பாளி. உலகிலுள்ள துன்பத்துக்குக் காரணம் தீவினையாகும் என்று விவாதிப்பது பயனற்றது... மனிதனின் வருந்தக்கூடிய தீவினைகளைக் கடவுள் முன்னரே அறிந்திருந்தால், அவனைப் படைக்க நினைத்த தருணத்திலிருந்து அவரே (கடவுள்) அதன் விளைவுகளுக்குப் பொறுப்பாளியாவார்," என்கிறார் ரஸ்ஸல் பிரபு.
டெனிசன் பிரபு, தமது முதுமையில் இயற்றிய, "நம்பிக்கையிழத்தல்," என்னும்
கவிதையில் ஏசாயாத் தீர்க்கதரிசியின் புத்தகத்தில்: "நான் சமாதானத்தை உண்டுபண்ணித் தீவினையைப் படைக்கிறேன்," (ஏசாயா XIV: 7) என்று கூறிய கடவுளைப் பின்வருமாறு துணிவுடன் தாக்குகிறார்: "எம்மை இவ்வளவு நன்றாகச் சேவித்த அந்த எல்லையில்லா அன்பை நான் என்னவென்று அழைப்பது? என்றும் நீடிக்கும் நரகத்தையமைத்த எல்லையில்லாத கொடுமை என்றோ - எம்மைப் படைத்து, எம்மை முன்னறிந்து, முன் எமக்குத் தீர்ப்பளித்து தனக்கு உரிமையானவற்றைத் தன் இஷ்டப்படி செய்பவனைப் பார்க்கிலும், எம் புலம்பலைக் கேட்டறியா எம் இறந்த ஈவிரக்கமற்ற தாய் பெரியவளே."
"எல்லா மனிதரும் பாவிகள், ஆதாமின் தீவினையின்
முக்கியமானவற்றையுடையவர் என்ற சித்தாந்தம், நீதிக்கும், கருணைக்கும், அன்பிற்கும் ஒரு சவாலாகும்."
தன் சொந்த உருவிலேதான், கடவுள் மனிதனை உருவாக்கினார் என்று சில பழங்கால எழுத்தாளர்கள் அதிகார பூர்வமாகத் தெரிவித்தனர். அதற்கு மாறாக சில நவயுக சிந்தனையாளர், மனிதன் கடவுளைத் தன் சொந்த உருவிலே உருவாக்கினான் எனக் கூறுகின்றனர். நாகரீக வளர்ச்சியோடு மனிதனின் கடவுள் பற்றிய கருத்து மேலும் பண்பட்டுள்ளது.
ஆயினும் இப்படிபட்ட ஒரு உருவை (கடவுளை) உலகினுள்ளோ அல்லது உலகிற்கு வெளியிலோ இருப்பதாக எண்ணிப்பார்பது முடியாத காரியமாகும்.
மனிதருள் காணப்படும் இவ்வேறுபாட்டுக்கு வம்சாவழியும் சூழ்நிலையும் காரணமாகுமா? விஞ்ஞானிகளினால் காரணிகள் விளக்கப்படும். இரசாயன - பௌதீகத் தோற்றப்பாடுகள் மானிடவர்க்கத்தில் காணப்படும் நுண்ணிய வேறுபாடுகளை விளக்கப் போதுமானதன்று என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் ஒரே வம்சாவழி, ஒரே வளர்ப்புரிமை ஒரே மாதிரியான உடலமைப்பு இவற்றைப் பெற்ற இரட்டையர் பெரும்பாலும் முற்றிலும் வேறுபட்ட மனப்பாங்கையும், நடத்தையையும், அறிவாற்றலையும்
கொண்டவராயிருப்பதேன்?
இப்பெரிய வேறுபாடுகளை வம்சாவழியின் மூலம் மட்டும் விளக்கமுடியாது. திட்டமாகக் கூறினால், வம்சாவழி வேறுபாடுகளைவிட, ஒத்த பண்புகளையே நம்பக் கூடிய வகையில் விளக்குகிறது. பெற்றோரிடமிருந்து பெறப்படும், ஒரு அங்குலத்தின் 30 மில்லியனின் * ஒரு பகுதியளவு அகலமுள்ள, மிக நுண்ணிய இரசாயன - பௌதீகக் கரு, மனிதனின் ஒரு பகுதியான உடல் அமைப்பின் அடிப்படையை மாத்திரமே விளக்குகின்றது.
* 1 கோடி = 10 மில்லியன்
மிகச் சிக்கலானதும் நுட்பமானதுமான மன அறிவாற்றல், ஒழுக்கவேறுபாடுகள்
என்பனவற்றைப் பொறுத்தவரையில் நம் அறிவு மேலும் விருத்தியடைய வேண்டும். மதிப்புமிகுந்த மூதாதையரை நெடுங்காலமாகக் கொண்ட ஒரு மரபில் ஒரு குற்றவாளி பிறப்பதையும், ஒரு இழிவான குடும்பத்தில் ஒரு ஞானி பிறப்பதையும் குழந்தைப் பருவத்தில் அருந்திறன் பெற்றவர், சிறப்புத்திறன் வாய்ந்தவர், மாபெரும் சமயத் தலைவர் முதலியோரின் தோன்றலையும் பற்றி மரபுரிமைத் தத்துவம் ஒரு திருப்திகரமான விளக்கத்தைத் தரமுடியவில்லை. பௌத்தத்தின்படி இம்மாறுபாட்டுக்கு மரபுரிமை, சூழ்நிலை, இயற்கை வளர்ப்பு முதலியவை மட்டுமல்லாமல் எமது சொந்த கன்மமும் காரணமாகும். அதாவது எம்முடைய சொந்த இறந்தகால, நிகழ்கால வினைகளின் விளைவாகும் - எமது செய்கைகளுக்கும் சந்தோஷத்திற்கும் துயரத்திற்கும் நாமே பொறுப்புடையவர். எம்முடைய நரகத்தை நாமே அமைக்கிறோம். எமது மோட்சங்களை நாமே உருவாக்கிறோம். நாமே எமது விதியின் சிற்பிகள். சுருக்கமாகச் சொன்னால், நாமே நமது கன்மம்.
ஒரு சமயம் சுபன் என்ற ஒரு இளைஞன் புத்தரை அணுகி, "ஏன் எதற்காக
மனிதரிடையே உயர்வு, தாழ்வு என்ற பேதமிருக்கின்றன? மனிதகுலத்திடையே குறுகிய வாழ்வுடையவரையும், நீண்ட வாழ்வுடையவரையும், நோயாளிகளையும், பலசாலிகளையும், அழகானவர்களையும், அழகற்றவர்களையும், சக்தி வாய்ந்தவர்களையும், சக்தி இல்லாதவரையும், ஏழையையும், செல்வந்தரையும், உயர்ந்த பிறப்புடையோரையும், தாழ்ந்த பிறப்புடையோரையும், அறிவாளிகளையும் முட்டாள்களையும் நாம் காண்கிறோம்?" எனக் கூறினான். இதைச் செவிமடுத்த புத்தர் ஒவ்வொரு உயிருக்கும் அதனதன் கன்மம் பிறப்புரிமையாகவும், காரணமாகவும், உறவாகவும், அடைக்கலமாகவும் உள்ளது. உயர்ந்தது, தாழ்ந்தது என்று உயிரினங்களை வேறுபடுத்துவதும் கன்மமே," என்று சுருக்கமாக விடையளித்தார்.
அதன்பின் வினைப்பயன் விதிப்படி அவ்வேறுபாடுகளின் காரணத்தை விளக்கினார்.
ஆகவே பௌத்த நிலையிலிருந்து பார்த்தால், எமது மனம், அறிவாற்றல், ஒழுக்கம், உணர்வின் வேறுபாடு முதலியவை எல்லாம் எம்முடைய இறந்த கால, நிகழ் காலச்செய்கைகளினதும் மனப்போக்கினதும் விளைவுகளாகும்.
கன்மம், செயல் என்று பொதுவாக அர்த்தப்படும். ஆனால் அதன் ஆழ்ந்த கருத்தில்
தகுதியானதும் தகுதியற்றதுமான விருப்பச் செயலைக் (குசல-அகுசல சேதனா) குறிக்கும். கன்மம் நல்லதையும் கெட்டதையும் உள்ளடக்கியது. நல்லது நல்லதை தோற்றுவிக்கும், கெட்டது கெட்டதைக் தோற்றுவிக்கும். இனம் இனத்தை விரும்பும் (உற்சாகமானவர் மற்றவரையும் உற்சாகப் படுத்துவார்). இதுவே கன்மத்தின் விதியாகும்.
சில மேலைநாட்டவர் கன்மாவைச் 'செயல்-அதன் செல்வாக்கு,' எனப் பெயரிட விரும்புகின்றனர்.
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். நாம் விதைத்ததை எங்காவது, எப்படியாவது அறுப்போம். ஒரு வகையில் நாம் முன்னிருந்த நிலையின் விளைவாகிறோம். சில வேளையில் இப்போதிருக்கும் நிலையின் விளைவாக இனிமேல் இருப்போம். இன்னொருவகையில் இன்று தீயவனாக இருப்பவன் நாளை ஞானியாக மாறலாம்.
இம்மாறுபாட்டுக்குக் கன்மமே காரணம் என்று பௌத்தம் கொள்கிறது. எல்லாம்
கன்மத்தினால் விளைபவை என வலியுறுத்தவில்லை.
எல்லாம் கன்மத்தின் காரணமாக நடைபெற்றால், ஒருவனது கன்மம் கெட்டதாக இருந்தால் அவன் என்றும் கெட்டவனாகவே இருக்கவேண்டும். ஒருவனின் வியாதியை கன்மம் குணப்படுத்த முடியுமானால் அவன் வைத்தியனை நாடவேண்டிய அவசியமில்லை. பௌத்தத்தின்படி உடலுக்குரிய ஆட்சியிலும் மனதுக்குரிய ஆட்சியிலும் 5 செய்முறைகள் (நியாமங்கள்) இருக்கிண்றன.
1. கன்ம நியாம - செயலும் விளைவும் என்ற நிரனிறை. நல்ல செயல்கள் நன்மையை விளைவிக்கும். தீச்செயல்கள் தீமையை விளைவிக்கும்.
2. உத்து நியாம - பௌதீக (அசேதன) செய்முறை. உ-ம்: காற்று, மழை முதலிய பருவகாலத் தோற்றப்பாடுகள்.
3. பீஜ நியாம - முளை அல்லது விதைகள் (பௌதீக சேதன தொடர்) உ-ம்: அரிசி விதையிலிருந்து அரிசியின் உற்பத்தி, கரும்பிலிருந்து அல்லது தேனிலிருந்து வரும் இனிப்புத் தன்மை முதலியன. கலங்கள் பிறப்புரிமை அலகு என்பனவற்றின் விஞ்ஞானக்கொள்கையையும், இரட்டைக் குழந்தைகளின் ஒத்த உடற்பண்பையும் இச்செயல் முறையின் கீழ் சேர்க்கலாம்.
4. சித்த நியாம: மனம் அல்லது உளவியல் பற்றிய செய்முறை. உ-ம்: விழிப்புணர்ச்சியின் செய்முறை (சித்த வித்தி), மனவலிமை முதலியன.
5. தம்ம நியாயம்: மாதிரிச் சட்டச் செய்முறைகள். உ-ம்: போதிசத்துவரின் வருகை குறித்து அவரது இறுதிப் பிறப்பில் நிகழும் தோற்றப்பாடுகள். புவியீர்ப்பு முதலியன.
தம் முன்னேயே விதிகளான, எல்லாம் தழுவும் இவ்வைந்து செய்முறைகளினால்
மனம், உடல்பற்றிய எல்லாத் தோற்றப்பாடுகளையும் விளக்கமுடியும்.
ஆகவே, கன்மம், இவ்வுலகில் நிலவும் ஐந்து செய்முறைகளில் ஒன்று மட்டுமே. தானே ஒரு விதியாயமைந்த கன்மம், விதிகளை உருவாக்கும் ஒருவரைக் கொள்ளத் தேவையில்லை. சாதாரண இயற்கை விதிகளான புவியீர்ப்பு முதலியவற்றுக்கு, ஒரு விதியமைப்பாளன் தேவையில்லை. இவற்றிற்குப் புறம்பான ஆட்சி செலுத்தும் தனிப்பட்ட ஏதுக்களின் குறுக்கீடின்றித் தமது
சுயமண்டலத்திலேயே செயற்படமுடியும்.
உதாரணமாக, நெருப்பு எரியவேண்டும் என்று யாரும் ஆணையிடவில்லை. நீர்
அதனுடைய நீர்மட்ட அளவை அடைய வேண்டுமென யாரும் கட்டளையிடவில்லை. நீரின் அமைப்பு H2O ஆகவும், அதன் தன்மை குளிர்மையாகவும் இருக்கவேண்டுமென ஒரு விஞ்ஞானியும் உத்தரவிடவில்லை. இவையெல்லாம் அவற்றின் இயற்கைத் தன்மைகளாகும். கன்மம் நாம் கதியற்று அடங்க வேண்டிய ஒரு மர்மமான, புலப்படாத சத்தியினால் எம்மேற் சமத்தப்பட்ட விதியல்ல. ஒருவனது சொந்தச்செயலே அவன் மீது தாக்கமுறும். எனவே ஒருவன் தன் கன்மாவின் போக்கை ஓரளவுக்கு மாற்றக் கூடியதாயுள்ளது. அதை எவ்வளவுக்கு மாற்றலாம் என்பது அவரவரிலேயே தங்கியுள்ளது.
கன்மம் என்ற பிரச்சினையைப் பற்றிய உரையாடலின் போது தண்டனை, வெகுமதி போன்ற சொற்றொடர்களை உபயோகிக்கக் கூடாது. ஏனெனில், தண்டனைகளையும், வெகுமதிகளையும் அளிக்கும் ஒரு எல்லாம் வல்ல இறைவனைப் பௌத்தமதம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே ஒருவனின் நல்ல, தீய செயல்களின் இயற்கை விளைவே அவன் அநுபவிக்கும் மகிழ்ச்சியும் துயரமும் என்று பௌத்தர் நம்புகின்றனர். கன்மம் தொடரத்தக்கதும் (முன்னேறத்தக்கதும்) தண்டனைக்குத் தக்கதுமான தன்மைகள் இரண்டையும் உடையது என்பது
குறிப்பிடப்பட வேண்டும்.
கன்மத்தோடு ஒன்றியிருக்கும் உள்ளாற்றல், தகுந்த விளைவை உண்டாக்குவதேயாகும். காரணம் காரியத்தை ஏற்படுத்தும். காரியம் காரணத்தை விளக்கும். விதை பழத்தைக் கொடுக்கும். பழம் விதையை விளக்குகிறது. ஏனெனில், பழமும் விதையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதுபோலவே கன்மமும் அதன் விளைவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. "காரியம் ஏற்கனவே காரணத்தில் மலர்கிறது."
கன்ம சித்தாந்தத்தைத் தீர்க்கமாக நம்பும் ஒரு பௌத்தன், தன்னை மீட்டுக்கொள்ள இன்னொன்றை வழி படுவதில்லை. மாறாக, அது தனிப்பட்ட பொறுப்பைப் போதிப்பதால், தனது சுத்திக்குத் தன்னையே முழுக்க முழுக்க நம்புகின்றான்.
அவனுக்கு ஆறுதல், ஆர்வம், தன்னம்பிக்கை, நீதியான துணிவு முதலியவற்றைத் தருவது இந்தக் 'கன்ம சித்தாந்தமே'. 'எது அவனுடைய முயற்சியை
உறுதிப்படுத்துகின்றதோ, அதுவே அவனது உற்சாகத்தையும் தூண்டுகிறது,' என்ற கன்ம நம்பிக்கையே ஒரு பௌத்தனைக் கனிவான, சகிப்புத்தன்மை மிகுந்த, தன்னலமற்ற மனிதனாக்குகிறது. இவ்வலுவான நம்பிக்கையே அவனைத் தீமையானவற்றிலிருந்து விலகவும், நன்மையைச் செய்யவும் தூண்டுகிறது. மேலும் தண்டனை பற்றிய பயமும், வெகுமதி கிடைக்கும் என்ற சபலமும் இல்லாமல் நல்லவனாக இருக்கவும், நல்லதைச் செய்யவும் ஆர்வமளிக்கின்றது.
இக்கன்மச் சித்தாந்தமே, துன்பம் பற்றிய பிரச்சினையையும், மற்றச் சமயங்களில் கூறப்படும் விதி பற்றிய மர்மத்தையும், அதற்கும் மேலாக மனித குலத்தின் சமத்துவமின்மையையும் விளக்கக் கூடியதாக உள்ளது.
கன்மமும் மறுபிறப்பும் தாமே விளக்கும் தன்மையுடையவை, என
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
* * * * *