நாம் உருவாக்கிய நமது தனிச் சிறை

· நாம் உருவாக்கிய நமது தனிச் சிறை

பேராசிரியர் லிலி த சில்வா

The Self-made Private Prison

Prof. Lily de Silva

மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு:

கந்தங்கள் - சுறுக்க அறிமுகம்

உருவம், வேதனை, குறிப்பு, சங்காரங்கள், விஞ்ஞானம் என்ற ஐவகைக் கந்தங்களுக்கு ஒரு அறிமுகம். இவ்வைந்தும் நமது அனுபவங்களின் ஐந்து அம்சங்கள். இவற்றோடு பற்றுக்கொள்வது நம்மை நாமே சிறையில் அடைத்துக்கொள்வது போல.

கந்தம் (kantam, skandha, khandha ) என்றால் தொகுதி, குவியல் (Aggregate, collection, heap)

பஞ்சகந்தம் pañca-kantam The five constituent elements of Being, viz., uruvam, vētaṉai, kuṟip- pu, pāvaṉai, viññāṉam;

உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்ற ஐவகைக் கந்தங்கள். (மணிமேகலை. 30, 33.)

Source: Univ. of Madras, Tamil Lexicon

உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை

உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன

மணிமேகலை 30-189,190

உதாரணம்: கட்டட வேலை நடைபெறும் இடத்தில் மணற் குவியல், செங்கற் குவியல், ஜல்லிக் குவியல், சிமென்ட் குவியல் போன்ற பொருட்களின் குவியல்களைக் காணலாம். இவற்றைக் கொண்டு கட்டடம் எழுப்பப் படுகிறது.

கந்தங்கள் ஐந்து குவியல்களால் ஆனது. எந்த ஐந்து? உருவம், நுகர்ச்சி (வேதனை), குறிப்பு, பாவனை (சங்காரம்), உணர்வு (விஞ்ஞானம்) ஆகிய ஐந்து. கந்தங்களை அனுபவிக்கும் போது அதனோடு நிற்பதில்லை. அழகிய உருவங்கள், நல்ல நுகர்ச்ச்சிகள் (வேதனா) போன்றவற்றை நமது, என்னுடையது என்று நினைத்து, இந்த ஐந்து கந்தங்களை வைத்து "நான்" என்ற கற்பனைக் கட்டடம் கட்டி விடுகிறோம். ஆனால் கந்தங்களோ நிலையற்றவை, நம்பத்தகாதவை, சாரமற்றவை, மழை பெய்யும் போது நீரில் உண்டாகும் நுரையைப் போன்றவை என்று வர்ணிக்கபடுகின்றது. ஆனால் அவற்றோடுள்ள நமது இரும்புப் பிடியின் காரணமாக அவை மிகவும் பாரமாகத் தோன்றுகின்றன. இந்த இரும்புப்பிடியின் காரணமாக நாம் துக்கம் அனுபவிக்கின்றோம். அந்த அழகிய உருவமும், இன்ப நுகர்ச்சியும் என்னுடையது, அவைதான் நான் என்று நினைக்கும் போது, மாறும் தன்மை கொண்ட அவை மாறும் போது துக்கம் அனுபவிக்கின்றோம். கந்தங்களை அனுபவிப்பதில் நோக்கம் அத்தியாவசியமானது. ஆகவே நோக்கத்தை மாற்றிவிட்டாலோ, விட்டுவிட்டாலோ துக்கத்தையும் முடித்து விடலாம். இதுவே புத்தரின் போதனைகளின் சாரம்.

- மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு முடிந்தது -

English Version

புத்தரின் போதனைப்படி மனிதத் தனித்தன்மை (பர்ஸனாலிடி) ஐந்து கந்தங்கள் மீதான பற்றினை அடிப்படையாகக் கொண்டது. இதனைப் பாலி மொழியில் பஞ்ச உபதாணக் கந்தா என்பர். அவையாவன:

உருவம் என்ற கந்தம்

வேதனா என்ற கந்தம்

குறிப்பு என்ற கந்தம்

சங்காரங்கள் (பாவனை, அறிந்து நோக்கத்துடன் செய்யும் செயல்கள், மனச் செயற்பாடுகள்) என்ற கந்தம்

விஞ்ஞானம் என்ற கந்தம்

புத்தர் ஏன் சரியாக ஐந்து கந்தங்களை மட்டும் குறிப்பிடுகிறார் என்ற கேள்வி நமக்குள் எழலாம். இந்தக் கேள்விக்கான பதிலை நமது அன்றாட வாழ்க்கையின் ஏதேனும் ஓர் அனுபவத்தை ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள முற்படுவோம். எடுத்துக்காட்டாகச் சாலையில் ஏதோ பெரும் சப்தம் கேட்கிறது. அவ்விடத்திற்கு நாம் விரைந்து செல்கிறோம். அங்கு ஒரு மோட்டார் சைக்கில் விபத்து நிகழ்ந்துள்ளதை அறிகிறோம்; அல்லலுற்றவர் மீது அனுதாபம் கொண்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம். இந்த அனுபவத்தைப் பார்த்து அதில் நடைபெறும் உடல் மற்றும் மனத்தின் நடவடிக்கைகளை ஆராயும் போது அவை அனைத்தும் மேற்கூறிய ஐந்து கந்தங்களுள் அடங்கும் என்பதை உணரலாம்.

நமது தனித்தன்மையில் உடல் சம்பந்தப்படிருப்பதை நாம் அறிவோம். இவ்வுடலே அந்த விபத்து நேர்ந்த இடத்திற்குச் சென்றது. சத்தத்தைக் கேட்டு விபத்து நடந்த இடத்தையும் பார்க்கிறோம். அப்படியென்றால் நமக்குக் காது மற்றும் கண் சம்பந்தமான விஞ்ஞானம் உண்டாயிற்று. நடைபெற்றது மோட்டார் சைக்கில் விபத்து என்பதை அறிவது மனக்குறிப்பிலிருந்து வந்தது. இன்னல் பட்டவரின் மீது உண்டாகும் அனுதாபம் நமது வேதனா (உணர்ச்சி ) சம்பந்தப்பட்டது. மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல விரும்பியது சங்காரம் சம்பந்தபட்டது. ஆக ஐந்து கந்தங்களையும் இந்த அனுபவத்தில் கண்டோம். இது போலவே எல்லா உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் இவ்வைந்து கந்தங்களுள் அடங்கி விடும் என்பதைக் காணலாம். புத்தரும் உள்ளவற்றை உள்ளபடி கவனித்து நுண்ணறிவோடு இவ்வைந்து கந்தங்களையும் கண்டு பிடித்திருப்பார்.

இவற்றைக் கந்தங்கள் என்று ஏன் கூறுகிறோம்? கந்தம் என்றால் "குவியல்", "கூறு" அல்லது "சேர்க்கை". உடல் பல மூலப் பொருட்களின் குவியல் என்பதைச் சுலபமாக அறியலாம். குவிந்திருக்கும் உணவை உட்கொண்டு உடலைப் பராமரிக்கின்றோம். மனத்தைப் பொருத்தவரையிலும் நமது அனுபவங்களின் காரணமாக நாம் வேதனாக்களை (உணர்ச்சிகளை), குறிப்புகளை, கருத்துக்களை, விருப்பங்களை, அறிநிலைகளை (விஞ்ஞானம்) சேகரிக்கின்றோம். எனவே நமது தனித்தன்மையின் ஐந்து அம்சங்களும் குவியல்கள், சேர்க்கைகள் அல்லது கூறுகள் என்கிறோம். இவை ஐந்தும் ஒன்றுக்கொன்று உடன்பட்டவை. அவற்றின் செயற்பாடுகள் மிகவும் சிக்கலானவை. ஒரு விளக்கவுரையில் ஐந்து ஆறுகள் கலக்கும் சங்கமத்தைப் போன்றதென்ற உவமானத்தோடு விவரிக்கப் படுகிறது. அந்தச் சங்கமத்தில் ஒரு கையளவு நீரை எடுத்து அந்த நீர் எந்தக் குறிப்பிட்ட ஆற்றிலிருந்து வந்ததெனக் கூறமுடியாது. கந்தங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் தொடர்ந்து மாறுதலடைகிற தன்மையாலும் செயலூக்கமுள்ள தன்மையாலும் "நான்" "எனது" என்ற உணர்வுக்கு இடம் கொடுக்கின்றது. ஒரு கம்பி மத்தாப்பைச் சிறுவன் ஒருவன் வேகமாகச் சுழற்றும் போது அதன் ஒளி இடைவிடாத வட்ட வடிவில் உள்ளதாகத் தோன்றுகிறது. உண்மையில் அது வட்ட வடிவில் இல்லை. வேகமாகச் சுழற்றுவதனால் ஏற்பட்ட மாயத் தோற்றமே அது. அது போலவே இந்தச் செயலூக்கம் கொண்ட உடல் மற்றும் மனத்தின் செயற்தொடர்கள் நான், தான், ஆணவம், ஆத்துமா என்ற மாயக் கருத்துக்களுக்கு இடம் தருகின்றன.

இவற்றைப் பற்றுக் கந்தங்கள் எனச் சொல்வதற்குக் காரணம் அவற்றோடு "நான்", "எனது" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பற்றுக் கொள்வதால் தான். உறுதியாக மண்ணில் பதிக்கப்பட்ட கட்டையில் கட்டப்பட்ட மிருகம் எப்படி அந்தக் கட்டையையே சுற்றிச் சுற்றி வருகிறதோ, அதன் அருகிலேயே நின்று, உட்கார்ந்து, படுத்துப் புரள்கிறதோ, அது போலவே இவ்வைந்து கந்தங்களைத் ‘தான்’ என்று நினைப்பவன் அவற்றிடமிருந்து தப்பிக்கவே முடியாது. எனவே இக்கந்தங்களோடு உடன்பட்டிருக்கும் துன்பத்திடமும், ஏமாற்றத்திடமும், கவலைகளிடத்திலுமிருந்தும் தப்பிக்கவே முடியாது.

இந்த ஐந்து கந்தங்களும் நமக்கு ஒரு நிஜமான தனிச் சிறை போன்றதாகும். இந்தச் சிறையோடு பற்றுக் கொள்வதாலும் அது எப்படி இருக்கவேன்டும் என்ற நமது எதிர்பார்ப்பினாலும் நாம் மிகவும் துன்புறுகிறோம். உலகினைப் பற்றிய நமது குறிப்பும் மற்ற மனிதருடன் உள்ள நமது உறவுகளும் இந்தச் சிறையின் இயல்பினால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், உறவுகளும் மற்றவரிடத்தே கருத்துப் பறிமாற்றங்களும் மிகவும் சிக்கலாகி, துன்புறுத்தும், பிரச்சனைகளாகி விடுகின்றன. நாம் எந்த அளவு இந்தத் தனிச்சிறையோடு பற்றுக் கொள்கிறோமோ அந்த அளவு பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.

இனி நாம் இந்தக் கந்தங்களின் மீது "நாம்", "எனது" என்று பற்றுக் கொண்டு நாமே உண்டாக்கிய இந்தச் சிறையினால் எப்படித் தொடர்ந்து துன்புறுகிறோம் என்பதைப் பார்ப்போம்.

உடல் என்ற கந்தம்

ஒருவர் நம்மை அணுகி, "நீங்கள் யார்?" என்று கேட்டால், நாம் உடனே: "நான் விமல்ராஜ்," என்று நமது பெயரைக் கூறுவோம். ஆனால் நமது பெயரோ ஒரு லேபிள் மட்டுமே. அது எதுவாகவும் இருக்கலாம். "நான் ஒரு மனிதன்" என்றும் பதிலளிக்கலாம். அப்படிச் சொல்வது நமது இனத்தை மட்டுமே குறிக்கும். "நான் ஓர் ஆண் அல்லது பெண்" என்றாலோ இது நமது பாலினை மட்டுமே வலியுறுத்துகிறது. "நான் இவரது மகள், அக்கா, மனைவி, தாய்," என்றெல்லாம் கூறலாம். இவை உறவுகளை மட்டுமே விவரிக்கின்றன. ஆனால் இன்னமும் "நான் யார்?" என்ற கேள்விக்கு நாம் விடை கூறவில்லை. கடைசியாக நம்மிடம் உள்ள அடையாள அட்டையைக் காட்டி ஒரு வழியாகக் கேள்விக்குப் பதில் அளித்து விட்டதாக நினைக்கின்றோம். அந்த அட்டையில் இருப்பது நமது உடலின் படமும் நமது பெயரும் தான். இருந்தாலும், "நீ யார்?" என்ற கேள்விக்குத் திருப்திகரமான பதில் அளித்து விட்டதாக நினைக்கின்றோம். ஆக நம் உடலை நாம் என்று நினைக்கின்றோம். நாம், "நான் உயரம், பருமன், சிவப்பு," என்றெல்லாம் கூறுவது, உண்மையில் நமது உடல் உயரம், பருமன், சிவப்பு என்பதையே குறிக்கும். ஆக உடலைத்தான் நான் என்று அடையாளம் காட்டுகிறோம். அது மட்டுமல்ல. உடலைப் பல வகையில் அலங்கரித்து நாம் அழகாக இருப்பதாக நினைக்கின்றோம். "இந்தப் புடவையில் நான் அழகாக இருக்கிறேனல்லவா?" என்று இந்த உடலை நமது பெருமதிப்புள்ள சொத்தாகக் கருதுகிறோம் - "எனது முகம், எனது முடி, எனது பல்....". ஆக இந்த உடல் மீதான பற்றினால் அது தான் நாம் என்று நினைப்பது தெளிவாகிறது.

ஆனால் புத்தர் நல்அறிநிலை என்ற கருவியோடு நுணுக்கமாக உடலை ஆராய்ந்து பார்த்து உடலின் உண்மையான குணத்தை அறிந்தார். அதில் அழகென்று சொல்வதற்கு ஏதும் இல்லை என்பதை அறிந்தார். அது மாமிசம், குடல், மலம், சளி, சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, எச்சில், மூக்குச்சளி, மூத்திரம் என்பனவற்றைக் கொண்டது. இவை எல்லாம் அருவருக்கத் தக்கவை. அழகெனக் கருதப்படும் ரோமம், பல், நகங்களும் கூட இருக்கக்கூடாத இடத்தில் தோன்றினால், உதாரணமாக உணவில் முடி இருப்பதைக் கவனித்தால், அவையும் வெறுக்கத் தக்கவையாகின்றன. அழகிப் போட்டியில் வென்றவளின் முகத்தை அவள் காலை எழுந்து முகம் கழுவுமுன்னே அருகில் சென்று பார்த்தால் அருவருக்கத் தக்கதாகத் தோன்றும். இப்படி இருக்க மூப்பினால் உண்டாகும் உடல் மாற்றங்களையும் மரணத்தின் பின் உடல் அழுகிப்போவதைப் பற்றியெல்லாம் நினைக்கக் கூடத் தேவையில்லை. ஆகவே புத்தர் இந்த உடலை ஓர் அழுக்கு மூட்டை என்று வர்ணித்தார். இது இறக்கி வைக்க வேண்டிய சுமையே தவிர "நான்", "எனது" என்று தூக்கிக் கொண்டிருக்க வேண்டியதல்ல என்றார்.

இந்த உடல் கெட்டித்தன்மை (மண்), திரவத்தன்மை (நீர்), வெப்பத்தன்மை (அனல்) மற்றும் அசைவுத்தன்மை ( காற்று) என்ற பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பூதங்களில் பற்றுக் கொள்ளும் அளவு மதிப்பு வாய்ந்ததொன்றும் இல்லை. இந்தப் பூதங்கள் உலகில் ஏராளமாக உள்ளன. ஆனாலும் நாம் இந்த ஆறு அடி நீளமுள்ள அழுக்கு மூட்டையுடன் "நான்", "எனது" என்று மிகவும் பற்றுக் கொள்கிறோம்.

புத்தர் இந்த உடலை அல்லது "உருவத்தை" சீர்ப்படுத்தத் தக்கதென்றும், உருக்குலையக் கூடியதென்றும் வர்ணித்தார்; அது சூட்டினால், குளிரினால், பூச்சிகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறது. உடல் என்பது உடல் கட்டுமான நடவடிக்கையே. நவீன அறிவியல், உடல் பல கோடிக்கனக்கான செல்களாலானது என்றும் இந்தச் செல்கள் தொடர்ந்து உருவாகிச் சிதைகின்றன என்பதையும் விளக்குகிறது. இதனை ஒரு உவமானத்தோடு விளக்கலாம். நாம் மழை பெய்கிறது என்று கூறுகிறோம். ஆனால் உண்மையில் மழை என்றொன்றும் இல்லை. மழை பெய்யும் நடவடிக்கையே உள்ளது. வானத்திலிருந்து துளிகளாக விழும் நீர் - அதனை நாம் மழை என்கிறோம். "மழை" என்று அதை ஒரு பொருளாகக் கூறினாலும் உண்மையில் மழை பெய்யும் செயல் தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனை ஒரு வினைச் சொல்லாக விவரிப்பதே சரி. அதே போல உடல் என்பதும் ஒரு நிலையான பொருள் அல்ல. அங்கு உடல் கட்டுமானத் தொடர் பணி மட்டுமே உள்ளது; எனவே "ரூபம்" அல்லது "உருவத்தை" புத்தர் உருவாகுதல் என்ற வினைச்சொல்லோடு இணைத்து விவரிக்கிறார். இந்த உடற் கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெறுவதால் அது ஓய்வில்லா நிலையில் உள்ளது. எனவே உருவத்தை நிலையற்ற (அநிச்சா) தன்மை உடையதெனப் பார்க்கிறோம். எனவே இந்த மாற்றமுள்ள உடல் கட்டுமான நடவடிக்கையில் நிலையான "தான்" என்றோ, மாற்றமில்லா ஆத்துமா என்றோ ஒன்றுமே இல்லை. எனவே இந்த உடலை 'நான்' என்று நினைப்பது மாயை, தவறான கருத்து.

உடல் அதன் வாழ்நாளில் மழலைப் பருவம், குழந்தைப் பருவம், வளரும் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயது, முதுமை என்று பல பருவங்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வோர் நிலையிலும் அந்த வயதுக்கான துன்பத்தை அனுபவிக்கிறது. மழலைப் பருவத்தில் பால்பற்கள் தோன்றும் போதும், நகர (தவழ, நிற்க, நடக்க) கற்கும் போதும், பேசக் கற்கும் போதும் ஏற்படும் துன்பங்கள் பல. குழந்தைப் பருவத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிர்ஷ்டம் இருக்குமானால் அதிக துன்பங்கள் ஏற்படாது. ஆனால் வளரும் உடலைச் சமாளிக்கத் தெரிய வேண்டும். உடலின் சக்திகளை ஆரோக்கியமான விளையாட்டிலும் அறிவுள்ள வேலையிலும் செலுத்த வேண்டும். யௌவனப் பருவத்தில் நுழைபவர்களைச் சிறுவர் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது, அதே சமயம் வயதுக்கு வந்தவரின் முதிர்ச்சியும் இருக்காது. இந்தப் பருவம் குறிப்பாகப் பிரச்சனைக்குரியது. பருவக் கோளாறு அதன் உச்சக் கட்டத்தை அடைவதன் காரணமாக உடல் பல பிரச்சனைகளைத் தரக்கூடும். அந்த வயதில் உடலில் எழும் அபரிமிதமான சக்திகளைச் சரியான பாதையில் செலுத்தப்படாவிட்டால், ஏற்கப்பட்ட சட்டத்துக்குட்பட்ட வழிகளில் ஈடுபடுத்தப் படாவிட்டால், அறிவோடு அடக்கப் படாவிட்டால், இளமைப் பருவம் மிகவும் துக்கம் தருவதாகிவிடும். நடுத்தர வயதில் உடல் பல நோய்களுக்கு ஆளாகிறது; இக்காலம் பலருக்கும் கவலையை உண்டாக்கும் காலமாகும். முதிய வயதில் பல துன்பங்கள் நிகழ்கின்றன. உடல் பெரும் பாரமாகிவிடுகிறது. ஆகவே வாழ்க்கையில் எந்தப் பருவத்திலும் உடல் பிரச்சனை இல்லாமல் இல்லை; அது வாழ்நாள் முழுவதுமே துக்கத்தை கொடுக்கக்கூடிய ஒன்று.

எவ்வளவுதான் ஐந்து புலன்களுக்கும் இஷ்டப்படி இடம் கொடுத்து உடலையும் இன்பத்தில் மூழ்கடித்தாலும் உடல் திருப்திஅடைவதில்லை. நாம் விரும்பும் வகையில் அது நடந்து கொள்வதில்லை. எத்தனை முறை அதைக் குளிப்பாட்டினாலும் அது அழுக்கடைந்து விடுகிறது. எவ்வளவு உணவளித்தாலும் மீண்டும் பசி எடுத்துச் சோர்வடைந்துவிடுகிறது. நோய்வாய்ப் படுகிறது. வயதாகிவிடுகிறது. அது அழகற்றும் பொலிவற்றும் போய்விடுகிறது. நமது கட்டுப்பாட்டில் ஒருபோதும் இருப்பதில்லை. எனவே அதனை "நான்", "எனது" என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் பயன் ஏதும் இல்லை.

ஐந்து கந்தங்களாலான நமக்கென்ற தனிச்சிறையில் உடல் ஒரு முக்கியச் சுவர். ஒவ்வொருவரின் உடலும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொரு உடலுக்கும் வெவ்வேறு சக்திகளும் பலவீனங்களும் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வழிகளில் நோய்வாய்ப் படுகின்றது. எந்த மனிதனும் வாழ்க்கை முழுவதும் உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வதில்லை. ஒருவருக்கு ஆஸ்துமா நோய் இருக்கலாம், மற்றவருக்கு நீரிழிவு நோய் (டயாபிடீஸ்) இருக்கலாம். ஒருவருக்கு பலவீனமான நுரையீரல் இருக்கலாம் (மூச்செடுக்கவே கஷ்டப் படலாம்), இன்னொருவருக்குச் ஜீரண சக்தி குறைவாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த உடலின் தன்மைக் கேற்பத் தனிப்பட்ட விதத்தில் துன்புறுகின்றனர். ஒருவருக்கு உடலினால் உண்டாகும் கஷ்டத்தைப் பற்றி மற்றவர் அறிய முடியாது. ஏனென்றால் அவர்கள் உடலின் தன்மை வேறு வேறு.

ஒவ்வொருவரின் உடலும் அளவில், வடிவத்தில், நிறத்தில், தோற்றத்தில் மாறுபடுகிறது. இதனால் நாம் பல சிக்கலுக்கு ஆட்படுகிறோம். நாம் விரும்புமாறு உடல் இருப்பதில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்து ஊக்கமற்றுப் போய் விடுகிறோம். சிறு வயதில் கண்பார்வை இழந்த ஒருபெண் முப்பது வருடங்களுக்கு பின் மீண்டும் கண்பார்வை பெறுகிறாள். கண் பார்வை கிடைத்துவிட்டது குறித்து மிகவும் மகிழ்ந்த அவளுக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏனெனில் கண்ணாடியில் பார்த்த உருவம் தான் அழகற்ற குரூபி என்பதை அவளுக்குக் காட்டுகிறது. நமது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாவிட்டால் நமது உடல் இப்படிப்பட்ட ஏமாற்றத்தைத் தருகிறது.

உடல் ஒவ்வொரு பருவத்திலும் மாற்றம் அடைகிறது: ஒரு சமயம் அழகும், சக்தியும் பெற்றிருந்த உடல் காலப்போக்கில் விகாரமாகவும் வலிமை இழந்தும் விடுகிறது. இதனால் நாம் துன்புறுகிறோம். பல வழிகளில் அதற்குச் சக்தியூட்டப் பார்க்கிறோம். அதனை அழகு படுத்தப் பார்க்கிறோம் - முகத்துக்கு வண்ணம் பூசுகிறோம், ரோமத்திற்குச் சாயம் தோய்க்கிறோம், வாய்க்குப் பொய்ப் பற்களும், முடிக்குச் சவுரியும், தலைக்குப் பொய்முடியும் அணிவிக்கிறோம்; சத்து (வைடமின்) மாத்திரைகளும், டானிக்குகளையும், காயகல்ப மாத்திரைகளையும் சாப்பிடுகிறோம். இத்தனை செய்தும் உடல் நாம் எதிர்பார்த்த நிலைக்கு வருவதில்லை. நம் உடல் என்ற அந்தரங்கச் சிறையின் எல்லைக்குள் நாம் ஒவ்வொருவரும் துக்கத்தையே அனுபவிக்கிறோம்.

ஒரு முறை என் நண்பர் ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறினார். நிறுத்தியிருந்த கார் ஒன்றின் பின் பம்பரைப் பிடித்தவாறு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். வாகன சாரதி (ஓட்டுனர்) வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். சிறுவன் பின் பம்பரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிந்தபடியால் வண்டி அவனை இழுத்துச் சென்றது. அவன் கத்திக் கதறுகிறான். சிறுவன் பம்பரை விட்டிருந்தால் அவன் பிரச்சனை அப்போதே முடிந்திருக்கும். நாமும் அந்தச் சிறுவனைப் போலவே செயற் படுகிறோம். நமது உடலோடு பற்றுக் கொள்கிறோம். அதன் இயற்கைக் குணத்துக்குத் தகுந்தார்ப்போல் அது மாறும் போது நாம் அழுது புலம்புகிறோம். அந்தப் பற்றினை விட்டுவிட்டால் நமது துன்பமும் அகன்று விடும். எனவே புத்தர் கூறினார்: "உங்களுக்குச் சொந்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள். நாம் பற்று வைத்திருக்கும் ஐந்து கந்தங்களும் நமக்குச் சொந்தமில்லை."

வேதனா என்ற கந்தம்

உடலுக்கும் அதன் சுற்றுச் சூழலுக்கும் இடையே ஒரு எல்லையை நிர்ணயித்து உடல் தான் 'நான்' என்ற எண்ணம் தோன்ற வைப்பது வேதனா (உணர்ச்சிகள்). கந்தசம்யுத்தையில் (என்ற போதனையில்) போதனைகளை அறியா மனிதன் அறியாமையின் தொடர்பினால் உண்டான உணர்ச்சிகளால் உந்தப்பட்டு இவ்வாறு எண்ணுகிறான்: "நான் தான் இது (உடல்)." உடலின் எல்லாப் பகுதிகளிலும் நரம்புகள் இருப்பதால் உடலின் எந்தப் பகுதியைத் தொட்டாலும் அங்கு உணர்ச்சி இருக்கும். இந்த நுண்ணிய உணர்வுள்ள முழுவதுமே நான் என்றும், ஆன்மா என்றும் கருதப்படுகிறது.

நாம், "நான் வசதியாக அல்லது மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கிறேன்," என்று கூறும்போது நாம் உணர்ச்சிகளோடு இணைந்து விடுகின்றோம். "என் மகிழ்ச்சியைப் பற்றி அவன் அக்கறை காட்ட வில்லை, அவன் என் மனதைப் புண்படுத்தினான்," என்று கூறுவதிலிருந்து நாம் உணர்ச்சிகள் நமக்குச் சொந்தமானவை என்று நினைப்பது தெரிகிறது. மூன்று வகையான உணர்ச்சிகள் உள்ளன. அவை இன்பமான உணர்ச்சிகள், கசப்பான உணர்ச்சிகள், நொதுமலான (நடுநிலையான) உணர்ச்சிகள். இவற்றில் எச்சமயத்திலும் இரண்டு வகையான உணர்ச்சிகள் ஒரே சமயத்தில் எழாது. இன்பமான உணர்ச்சி இருக்கும் போது மற்ற இரண்டும் இருக்காது; பிடிக்காத உணர்ச்சிகள் இருக்கும் போது இன்பமான மற்றும் நொதுமலான உணர்ச்சிகள் இருக்காது; அது போலவே நொதுமலான உணர்ச்சியிருக்கும் போது மற்ற இரண்டு உணர்ச்சிகளும் எழாது. மஹாநிதான சூத்திரத்தில் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது: உணர்ச்சிகள் இவ்வாறு சிக்கலானவையாக இருக்கும் போது எந்த உணர்ச்சியை ‘நான்’ என்று ஏற்பது?

வேதனாசம்யுத்தை காற்று மண்டலத்தில் பல விதமான காற்று வேவ்வேறு திசைகளில் அடிப்பது போல இந்த உடலில் எண்ணமுடியா உணர்ச்சிகள் எழுகின்றன என்று கூறுகிறது. நாம் பெரும்பாலும் இவ்வுணர்ச்சிகளை அறிவதில்லை, ஏனென்றால் அவற்றின் மேல் போதுமான கவனம் செலுத்துவதில்லை. நாம் இரண்டு நிமிடத்திற்கு மட்டுமே எவ்வளவு முறை நமது உடலை அசைக்கிறோம் என்பதையும் கால்களை இடம் மாற்றுகிறோம் என்பதையும் கவனித்தால் போதும், நாம் சில வினாடிகள் கூட நிலையாக இருப்பதில்லை என்பதை அறிந்து ஆச்சரியப்படுவோம். ஏன் இப்படித் தொடர்ந்து உடல் நிலையை மாற்றுகிறோம்? ஒரே இடத்தில் அசையாமல் இருப்பது அசௌகரியமாக இருப்பதால் வசதியைத் தேடி உடல் நிலையை மாற்றுகிறோம். உணர்ச்சிகளுக்குத் தகுந்தார்ப்போல் செயல்படுகிறோம். மேலும் மேலும் இன்பமான உணர்ச்சிகளைத் தேடுகிறோம். பிடிக்காத உணர்ச்சிகளை வெறுக்கிறோம். பொதுவாக நொதுமலான உணர்ச்சிகளைக் கவனிப்பதில்லை. எனவே இன்பமான உணர்ச்சிகளுக்கு ஆசை பின்னனியில் உள்ள மனப்போக்காகவும், துன்பமான உணர்ச்சிகளுக்கு வெறுப்பும், நொதுமலான உணர்ச்சிகளுக்கு அறியாமையும் பின்னனியில் உள்ள மனப்போக்காகவும் இருக்கின்றன. ஆகவே எல்லா உணர்ச்சிகளும் திறமையற்ற உள் நோக்கம் கொண்டுள்ளன. எனவே துக்கத்தைச் சார்ந்திருக்கின்றன. வசதியையும் இன்பத்தையும் வாழ்நாள் முழுவதும் தேடினாலும், நிரந்தரமான இன்பம் பாலைவனத்தில் உள்ள கானல் நீரைப் போல நமக்குக் கிடைப்பதில்லை.

நமது உணர்ச்சிகள் மிகவும் தனிப்பட்டவை. நமக்குத் தலைவெடிக்கிற அளவு தலைவலி இருக்கலாம். ஆனால் நமக்கு அருகில் இருப்பவருக்கு நமது துன்பமான உணர்ச்சிகளைப் பற்றித் துளியும் தெரிவதில்லை. மற்றவரின் முக பாவனையினாலும், நடத்தையாலும் வார்த்தைகளாலும் அவரின் துன்பத்தை நாம் அனுமானிக்கலாமே ஒழிய அவரின் உணர்சிகளை நாம் தெரிந்து கொள்ள முடியாது. மேலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்ச்சி சம்பந்தமான அனுபவங்கள் இருக்கும்: ஒருவருக்குச் சூடு கொஞ்சமும் ஒத்துக் கொள்வதில்லை; மற்றவருக்குக் குளிர் பிடிக்காது, கொசுக்கள், உண்ணிகள் பிடிக்காது; சிலருக்கு மலர்களின் மகரந்தம் ஒத்துவராது. ஒருவருக்குக் கொஞ்சமும் வலி தாங்க முடியாது, மற்றவர் மிகுந்த வலியையும் தாங்கிக் கொள்வார். ஆகவே ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிகள் என்ற தனிப்பட்ட சிறை உண்டு. ஒவ்வொருவரின் சிறையும் வேறுபட்டது.

புத்தர் உணர்ச்சியை ‘உணர்தல்’ என்ற நடவடிக்கை என்றார். உணர்ச்சி என்ற பொருள் ஒன்றும் இல்லை, உணர்ச்சி என்றால் உணர்தல். எனவே உணர்ச்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். அவை நிலையற்றவை. நமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையும் இல்லை. ஏனென்றால் நாம், "எனக்கு இந்த உணர்ச்சி வேண்டும் அல்லது அந்த உணர்ச்சி வேண்டாம்," என்று சொல்லமுடியாது. உணர்ச்சிகள் தானாக வந்து போகும். அவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது. அவை நமக்குச் சொந்தமும் அல்ல. எனவே புத்தர் இவ்வாறு வலியுறுத்துகிறார்: "உங்களுக்குச் சொந்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்." மாற்றத்துக்குட்பட்டதையும், விரைவில் மாறுவதையும் ‘நமது, எனது’ என்று நினைப்பது துயரத்தை உண்டு செய்யும். அப்படி உணர்ச்சிகள் மீது சொந்தம் கொண்டாடுவதை விட்டு விட்டால் துக்கத்தின் முடிவைக் காணலாம்.

மனக்குறிப்பு என்ற கந்தம்

சஞ்ஞா என்ற பாலி வார்த்தை மனக்குறிப்பு என்றும் கருத்துக்கள் என்றும் மொழிபெயர்க்கப் படுகிறது. மனக்குறிப்பு என்பது மனத்தில் குறிப்பெடுக்கும் நடத்தையே. இது ஒரு செயலூக்கம் கொண்ட நடவடிக்கை. எதனைக் குறிப்பெடுக்கிறது? நிறங்களை நீலம், மஞ்சல், சிவப்பு, வெள்ளை .. என்று குறித்துக் கொள்கிறது. இந்த விளக்கம் மனிதனின் மொழி ஆற்றல் சஞ்ஞாவோடு தொடர்புகொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது. சஞ்ஞா என்றால் சின்னம் என்றும் பொருள் படும். அதுவும் மொழியோடு நெருங்கிய தொடர்புடையது. மொழி தான் கருத்துகள் உண்டாக்க உதவி புரிகிறது. எனவே தான் சில சமயம் சஞ்ஞா கருத்துக்கள் என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது. நமது மனக்குறிப்புக் கேற்றார்ப்போல நாம் ஒரு நோக்கத்தைக் கையாள்கிறோம், ஒரு யோசனை தோன்றுகிறது.

நமது கருத்துக்களோடு நாம் பற்றுக் கொண்டு அவை தான் நாம் என்று நினைக்கின்றோம்: "இது என் கருத்து, இது என் அபிப்பிராயம், இதைத்தான் நான் சொல்லவந்தேன்" - இது போன்ற சொற்களெல்லாம் நாம் கருத்துகளோடு ஒன்றி விட்டு அவற்றை நாம், நமது என்று நினைப்பதைக் குறிக்கிறது. சில சமயம் அதிகப் பற்றின் காரணமாக ஒரு கருத்துக்காக உயிரையும் விடத் தயாராகி விடுகிறோம். உலகில் கருத்துக்களைப் பரப்பவோ, பாதுகாக்கவோ போர்கள் நடத்தப் படுகின்றன. இது ஒரு குறிப்பிடத் தக்க பற்றென்பதால் புத்தர் இதனை "தித்'உபாதானா" என்றார் - நாம் நம்பும் ஒரு குறிப்பிட்ட கருத்தோடு பற்றுக் கொள்வது. பல தரபட்ட கருத்துக்களோடு பற்றின் காரணமாக நாம் இடது சாரிகள், இந்துத்துவர், சோசியலிஸ்ட் என்று நம்மை நாமே குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

மன உத்வேக மாற்றத்தினாலும் சூழ்நிலைகளின் மாற்றத்தினாலும் நமது கருத்துக்களும் மாறுகின்றன. நண்பன் பகைவனாகிறான், பகைவன் நேசனாகிறான்; அறிமுகமில்லாதவர் கணவனாகிறார். ஆகவே கருத்துக்களும் மாற்றமில்லாமல் நிலையாக இருப்பதில்லை. அவற்றோடு "நான்", "எனது" என்று பற்றுக் கொண்டு விட்டால் பின் துயரம் அணுபவிக்காமல் இருக்கமுடியாது.

நினைவு சஞ்ஞாவோடு இணைக்கப் படுகிறது. இதனாலேயே முன் சந்தித்த ஒருவரை அடையாளம் தெரிந்து கொள்ள முடிகிறது. நினைவின் காரணமாக முன் நடந்த நிகழ்ச்சிகளின் அனுபவத்தை நினைவுக்குக் கொண்டுவரமுடிகிறது. அதே அனுபவம் எதிர் காலத்திலும் இருக்கும் என்று நினைப்பதால் எதிர் காலத்திலும் நாம் இருப்போம் என்று நினைக்கிறோம். ஆகவே நினைவின் காரணமாக நான் என்ற மாயக் கருத்து முக்காலத்திலும் - இறந்த, நிகழ் வருங்காலம் மூன்றிலும் தொடர்வதாக நினைக்கின்றோம். ஆனால் அந்த இறந்த காலத்தை நினைப்பது, எதிர்காலத்தை எதிர்பார்த்து நினைப்பது இரண்டையும் நிகழ்காலத்தில் தான் செய்கிறோம் என்பதை உணர்வதில்லை.

சஞ்ஞா எப்படி நமது தனிச் சிறையின் ஒரு சுவராகிறது? ஒவ்வொருவரும் நமது கருத்துகளையொட்டி உலகைக் காண்கிறோம். ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு மருத்துவரின் உலக நோக்கோடு ஒரு அரசியல் வாதியின் அல்லது ஒரு வணிகரின் உலக நோக்கை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாறுபட்டிருக்கும். ஒரு பழத்தைப் பார்க்கும் மருத்துவருக்கு அதன் ஊட்டச் சத்தியைப் பற்றி நினைக்கத் தோன்றும். ஒரு அரசியல் வாதியோ அந்தப் பழத்தை இறக்குமதி/ஏற்றுமதி செய்வதன் அனுகூலங்களைப் பற்றி நினைப்பார், வணிகரோ அதை வியாபரம் செய்வதில் வரும் இலாபத்தைப் பற்றி நினைப்பார். ஆகவே நமது விருப்பங்களினாலும், கருத்துக்களினாலும் நாம் பாதிக்கப் படுகிறோம், கட்டுப்படுத்தப் படுகிறோம் - சில கருத்துக்கள் நாம் வளரும் போது சீரனிக்கப்பட்டவை. சில நம்மைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தின் தாக்குதலால் உண்டானவை. சில நம் படிப்பு மற்றும் தொழிலிலிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டவை. ஆகவே யார் இருவரும் ஒரே மனக்கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். பொதுவாகச் சில விஷயங்களில் இருவர் மேலோட்டமாக ஒரே கருத்துக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது மனக் குறிப்புகளைப் பொருத்தவரையும் நாம் ஒவ்வொருவரும் தனிச் சிறையில் இருப்பதை ஏற்றுக் கொள்வோம். நுண்ணறிவையும் மகிழ்ச்சியையும் உணர வேண்டுமானால் நாம் கருத்துக்களோடு உள்ள பற்றினையும் விட்டு விட வேண்டும். நீண்ட வருடங்களாகக் கற்றதை மறக்க வேண்டியிருக்கும். மனத்தை வெறுமையாக்க வேண்டியிருக்கும்.

சங்காரங்கள் என்ற கந்தம்

மூவகையான அறிந்து செய்யும் செய்கைகள் உள்ளன: உடலால், பேச்சால், மனத்தால். இவற்றொடு நமக்கு உள்ள பற்றின் காரணமாகச் செய்பவர், பேசுபவர், நினைப்பவர் என்று இச்செய்கைகளுக்குப் பின்னனியில் முகவர்கள் இருப்பதாக நினைக்கின்றோம். எனவே: "நான் செய்தேன் (நடந்தேன், நின்றேன், உட்கார்ந்தேன், வேலையில் ஈடுபட்டேன், ஓய்வெடுத்தேன்..), நான் பேசினேன், நான் யோசித்தேன்." என்று கூறுகிறோம். இவ்வாறு செய்கைகளைச் செய்த ஒருவரை வலியுறுத்துவதால் நாம் மிக ஈடுபாட்டோடு வேலை செய்வதுமன்றி மற்றவரை மிஞ்சவும் பார்க்கிறோம். சாதனைகளை முறியடிக்கப் பலருக்கும் பெரும் துடிப்பிருப்பதை இன்று காணலாம். பலவிதமான போட்டியாளர்கள் தங்கள் பெயர்களை கின்னஸ் புத்தகத்தில் பதிவிட முனைகிறார்கள்.

இந்த அறிந்து செய்யும் செய்கைகளினால் நாம் பிறந்திதிலிருந்து இறக்கும் வரை தொடர்ந்து எதற்கேனும் தயார் படுத்திக் கொண்டே இருக்கின்றோம். மழலைப் பருவத்தில் குழந்தைப் பருவத்திற்காகத் தயாராகிறோம். தவழ, நடக்க, பேசத் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். குழந்தைப் பருவத்தில் இளமைப் பருவத்திற்காகவும், இளமைப் பருவத்தில் தொழில், வேலை செய்வதற்கான திறன்களை வளர்த்துக் கொண்டும் இருக்கின்றோம். இளமைப் பருவத்தைத் தாண்டியவர்கள் பெற்றோராகப் பொறுப்பேற்கத் தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர். முதுமையிலும் தயார் செய்வதை விடுவதில்லை. சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமென்று சமயங்களின் பக்கம் திரும்புகிறோம். இதனை ‘சேதனா, நோக்கம்’ என்றும் சொல்லலாம். இந்த நோக்கம் தான் கன்ம சக்திகளுக்கு இடம் கொடுத்து ஒரு பிறப்பிலிருந்து அடுத்த பிறப்பிற்குச் செலுத்துகிறது.

ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதின் விளைவு என்னவென்றால் அது செய்பவரின் குணத்தையே மாற்றிவிடுகிறது. ஆக திரும்பத் திரும்ப உணர்ந்து செய்யும் செய்கையினால் நமது விதியை உருவாக்கி விடலாம். பழைய இந்திய மரபிலிருந்து ஒரு கதை நமது நடத்தையினால் எப்படி விதி பாதிக்கப்படுகிறது என்பதைத் தெளிவாக்கும். ஒரு முறை காட்டில் வழி தவறி விட்ட இரு நண்பர்கள் அங்கு எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய துறவி ஒருவரைச் சந்தித்தனர். அவரிடம் விடைபெறும் முன் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறும்படி அவரை வேண்டிக் கொண்டனர். அவர் தயங்கினார். ஆனால் இருவரும் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டபின் அவர் இருவரையும் உற்றுப் பார்த்து விபுல் ஒரு வருடத்துக்குள் மன்னன் ஆவான் என்றும் விஜன் ஒரு வஞ்சகன் கையால் கொலையுண்டு மடிவான் என்றும் கூறினார். விபுல் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். விஜன் அந்தச் செய்தியால் வருத்தப் பட்டான். இருவரும் தங்கள் வீட்டுக்குத் திரும்பியபின் விபுல் மிகவும் அராஜகமாக நடந்து கொண்டான். விரைவில் தான் மன்னன் ஆகப்போவதை எண்ணி அவ்வாறு நடந்து கொண்டான். விஜன் ஒரு ஆசிரியன். தனது கடமைகளை விவேகத்துடன் செய்தான்; மிகவும் பண்புள்ளவனாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தான்.

ஆறு மாதங்கள் சென்றபின் விபுல் தன் நண்பன் விஜனை அழைத்துக் கொண்டு அரண்மனை கட்டுவதற்காக ஒரு இடம் தேடிச் சென்றான். மக்கள் சந்தடியற்ற ஒரு இடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அவ்விடத்தை ஆராய்ந்த போது விபுல் தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பானையைக் கண்டெடுத்தான். அவன் தன் அதிர்ஷ்டம் படிப்படியாக வெளிவருவதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான். அவர்கள் இருவரும் தங்கத்தை உற்சாகத்தோடு பரிசோதித்துக் கொண்டிருந்தபோது ஒரு கொள்ளைக்காரன் திடீரென்று வந்து அந்தப் பானையைப் பிடுங்கிக் கொண்டான். விஜன் அந்தக் கொள்ளைக்காரனோடு சண்டையிட்டுத் தங்கத்தை மீட்டான். ஆனால் கொள்ளைகாரனின் ஆயுதத்தால் அவன் தோளில் வெட்டுப் பட்டு விட்டது. விபுல் விஜனிடம் தங்கத்தை இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாமென்று கூறினான். ஆனால் விஜன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் எப்படியும் அவன் சில மாதங்களில் இறக்கப்போகிறவன் தானே. விபுல் அந்தத் தங்கத்தைக் கொண்டு விருந்து சாப்பிட்டும், குடித்துக் கும்மாளமிட்டும், தான் மன்னன் ஆகப் போவதை நினைத்துக் கொண்டு இன்பகரமாகச் செலவு செய்தும் அதைத் தீர்த்து விட்டான். விஜன் எளிமையாக வாழ்ந்து தியானம் செய்தவாறு தன் காலத்தைக் கழித்து வந்தான். ஒரு வருடம் சென்றது. துறவி சொன்ன படி நடக்கவில்லை. அவரிடம் சென்று ஏன் அவர் சொன்னபடி நடக்கவில்லை என்று இருவரும் கேட்டனர். துறவி விபுலின் அராஜகமான நடத்தையின் காரணமாக அவன் ஊழ்வினை வெறும் ஒரு பானைத் தங்கத்தளவுக்குக் குறைந்து விட்டதாகவும், விஜனின் பண்புள்ள நடத்தையின் காரணமாக அவனுக்கு ஏற்படவிருந்த மரணம் வெறும் தோளில் ஏற்பட்ட காயமாகக் குறைந்து விட்டதாகவும் கூறினார்.

சங்காரா என்ற பெயர்ச் சொல் அதன் வினைச்சொல்லால் இவ்வாறு விளக்கப் படுகிறது: "அறிந்து செய்யும் செய்கைகள் உடலை அதன் இருக்கும் நிலைக்கு தயார் செய்து உருவாக்குகின்றன. அதே போல உணர்ச்சிகள், மனக்குறிப்புகள், அறிந்து செய்யும் செய்கைகள் விஞ்ஞானத்தை இருக்கும் நிலைக்குத் தயார் செய்து உருவாக்குகின்றன." இந்த செய்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை இவ்வாறு விளக்கலாம்: ஒருவரின் தனித்தன்மையைக் காட்டும் உடலின், மனத்தின் அம்சங்கள் அறிந்து செய்யும் செயல்களினால் உருவாகின்றன. நமது எதிர்பார்ப்புகள், ஆர்வத்துடன் நாம் விரும்புவது, உயரிய நோக்கங்கள், உறுதிப்பாடுகள் ஆகியவை எல்லாம் சங்காரத்தைச் சேர்ந்தவை. இவற்றோடும் நாம் எனது ஆசைகள், எனது எதிர்பார்ப்புகள் என்று பற்றுக் கொள்கிறோம். எந்த இருவரும் இந்த விதத்தில் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒருவருக்குச் செல்வமாகத் தெரிவது இன்னொருவருக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஒருவர் உள்ள பணத்தைச் சேர்த்து வைக்க முனைவார். மற்றவர் அதைக் கல்விக்குச் செலவு செய்வார். மூன்றாமவர் இவை இரண்டும் முக்கியமில்லை என்று பதவி , புகழ் தேடிப் பணத்தைச் செலவு செய்வார். நமது விதியினை விரும்பிச் செய்யும் செய்கைகள் என்ற சிறையிலிருந்தபடி நாம் தனியாக உருவாக்குகிறோம். நாம் சுதந்தரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் இந்தச் சிறை மதிலோடும்கூடப் பற்றுக் கோள்ளாமல் விட்டுவிட வேண்டும்.

விஞ்ஞானம் என்ற கந்தம்

விஞ்ஞானமென்பது ஒரு பொருளைப் புலன்களைக் கொண்டு தெரிந்திருப்பது என்பதுதான். ஆகவே கண்-விஞ்ஞானம், காது-விஞ்ஞானம், மூக்கு-விஞ்ஞானம், நாக்கு-விஞ்ஞானம், உடல்-விஞ்ஞானம் மற்றும் மன-விஞ்ஞானம் ஆகியவைகள் உள்ளன. புலன் களால் அறியும் அறிவு மிக வேகமாகவும், தொடர்ந்தும் நடைபெறுவதால் நாம் புலன்களின் நடவடிக்கைகளோடு இவ்வாறு பற்றுக் கொள்கிறோம்: "நான் கண்டேன். நான் கேட்டேன். நான் முகர்ந்தேன். நான் சுவைத்தேன். நான் எண்ணினேன்." புத்தரின் போதனைப் படி நான் என்றும், ஆத்துமா என்றும் புலன் பொருட்களை அறிந்து அனுபவிக்கும் ஒன்றும் இல்லை. புலன்களால் அறியும் அறிவு காரண காரியத் தொடர்பினால் உண்டானது. புலன் உறுப்புகளும், பொருட்களும் இருப்பதால் தான் விஞ்ஞானம் உண்டாகிறது. ஒவ்வொருவரின் புலன் உறுப்புகளும் வேவ்வேறு மாதிரி இருக்கின்றன. சிலர் குருடனாகப் பிறக்கின்றனர். சிலருக்குக் கண் பார்வை மங்களாகவே தெரியும், சிலருக்குக் கூர்மையான கண் பார்வை உண்டு. சிலர் செவிடு, சிலருக்குக் காது சரியாகக் கேட்காது, சிலருக்கு மிக நன்றாகக் கேட்கும். இதன் காரணமாக அறியும் திறனும் சற்றே மாறுபட்டிருந்தாலும் மாறுபட்டிருக்கும் என்பது நிச்சயம். மேலும் நமது புலன் அறிவு அனுபவங்கள் நமக்குப் பிடித்தவைகளினாலும், பிடிக்காதவைகளாலும், நமது முன் அனுபவங்களாலும், நினைவினாலும், ஆசைகளாலும் பாதிக்கப் படுகின்றன.. எனவே புலன்களால் அறியும் அறிவு போலியற்றது என்று நினைத்தாலும் இருவர் ஒரே மாதிரி அறிவதில்லை. உதாரணமாக மூவர் இரு சிறுவர்கள் சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மூவரும் சண்டையிடும் ஒருவனின் நண்பன், விரோதி மற்றும் பெற்றோர் என்றால் அவர்கள் மூவரும் வெவ்வேறு விதமாகத்தான் அச்சண்டையை உணர்வார்கள்.

நமது புலன்கள் நாம் பார்க்க விரும்புவதை நமக்குத் தெரியப் படுத்துகின்றன. நாள்தோறும் நடைபெறும் அனுபவங்கள் அனைத்திலும் நமது விருப்பம் விஞ்ஞானத்தை நிர்ணயிக்கிறது. உதாரணமாக நாம் பல பொருட்களைக் கொண்ட ஒரு மேஜை மீது ஒரு பேனாவைத் தேடும் போது, அதைப் பார்த்து எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அதன் அருகில் இருந்த கண்ணாடியைக் கவனிக்காமல் விட்டு விடுவோம். பின் கண்ணாடி தேவைப்படும் போது மீண்டும் தேட வேண்டியிருக்கும். முதலில் பேனாவை எடுத்த இடத்தில் நேரடியாகக் கண்கள் போவதில்லை. ஏனென்றால் நாம் எதைத் தேடுகிறோம் என்பது நமது விருப்பத்தினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அது ஒரு விதத்தில் நமக்கு உடனடியாகத் தேவைப் படாததைக் கவனத்திலிருந்து ஒதுக்கிவிடுகிறது.

ஓர் இடத்தைச் சற்று உற்றுப் பார்க்கும் போது நமக்கு விருப்பம் உள்ள சில பொருட்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருப்பதால் ஒரே சூழலில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பொருட்களைக் கவனிப்போம். ஆகவே புலன் பொருட்களை உண்டாக்கும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருக்கும். எனவே புலன் சம்பந்தப்பட்ட அனுபவங்களிலும் நாம் தனிப்பட்ட சிறையிலேயே அடங்கியிருக்கின்றோம்.

நமது தனித் தன்மையின் (பர்ஸனாலிடி) வட்டத்தினுள் நாம் ஒவ்வொருவரும் தனியான வாழ்க்கை நடத்துவதால், மனிதரிடையேயான உறவுகளும் மிகவும் சிக்கலானவையாகின்றன. இந்தச் சிறையிலிருந்து விடுபட வேண்டுமானால் இந்த ஐந்து கந்தங்களை 'நான்' அல்லது 'எனது' என்று நினைப்பதை நிறுத்தவேண்டும்.

* * *

கந்தசம்யுத்தையின் படி ஆற்றின் வேகத்தினால் அடித்துச் செல்லப்படுபவன் ஆற்றின் மேல் தொங்கும் மரத்தின் இலைகளையும், ஆற்றோரம் உள்ள புல்லையும் பிடிக்கப் பார்க்கிறான். ஆனால் அவை அவனுக்கு உதவப் போவதில்லை. ஏனென்றால் அவை வேறோடு சுலபமாக பிடுங்கப் படுகின்றன அல்லது கையோடு வந்து விடுகின்றன. அதேபோல அறியாத ஒருவன் இந்த ஐந்து கந்தங்களை ‘ தான்’ என்று நினைத்துப் பற்றுக் கொள்கிறான். ஆனால் அவை அவனைத் தாங்கி நிற்காது. ஏனென்றால் அவை நிலையற்றவை என்பதால் அவனுக்கு உதவ முடியாது. அவற்றை நம்பியிருப்பவன் அறியாமையில் மூழ்கித் துயரத்தையே அனுபவிப்பான். இந்த ஐந்து கந்தங்களின் நிலையற்ற, எந்நேரமும் மாறும் தன்மையையும், அவை காரண காரியத் தொடர்பினால் உண்டானவை என்பதை அறிந்து அவற்றிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும். இப்படி ஒதுங்கினால் தான் தனித்தன்மை என்ற நாமாகச் செய்த சிறையிலிருந்து விடுபட முடியும்.

* * * * * *

ஆசிரியரைப் பற்றி

இலங்கையின் பேரதினியா பல்கலைக் கழகத்தின் பாலி மற்றும் பௌத்த படிப்புகளின் பேராசியராக இருந்தவர் லிலி த சில்வா. அறிஞர்களுக்கான மற்றும் பொதுமக்களுக்கான பத்திரிக்கைகளில் அடிக்கடி எழுதுபவர். அவர் எழுதிய பல கட்டுரைகள், "இந்த உலகில் ஒரு கால்" என்ற தலைப்பில் BPS நிறுவனத்தினரால் வெளியிடப்படுள்ளது.

©1990 Lily de Silva.

You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge and, in the case of reprinting, only in quantities of no more than 50 copies; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. Documents linked from this page may be subject to other restrictions. Bodhi Leaves No. 120 (Kandy: Buddhist Publication Society, 1990). Transcribed from the print edition in 2005 by a volunteer, under the auspices of the Access to Insight Dhamma Transcription Project and by arrangement with the Buddhist Publication Society. Minor revisions were made in accordance with the ATI style sheet. Last revised for Access to Insight on 2 November 2013.

"The Self-made Private Prison", by Lily de Silva. Access to Insight (Legacy Edition), 2 November 2013, http://www.accesstoinsight.org/lib/authors/desilva/bl120.html .