நற்கடைப்பிடி
நற்கடைப்பிடி (சம்மா சதி) - மித்திரா வெட்டிமுணி
Right Mindfulness (Samma Sati) - by Mithra Wettimuny
நற்கடைப்பிடியுடன் வாழ்வது நமது நன்மைக்கும், நமது மனத்தின் வளர்ச்சிக்குமான அடித்தலம். இது நமக்கு ஒரு பெரும் ஆசீர்வாதம். இது ஒரு பெரும் பாதுகாப்பு. மாந்தருக்கு ஓர் அளவு கடைப்பிடி உள்ளது. ஆனால் அது சற்றுச் சிதறிக் கிடக்கிறது. ஆகவே அதனை நற்கடைப்பிடி என்று கூற முடியாது. நற்கடைப்பிடி எளிதாகப் பெறக் கூடியதில்லை. நற்செயல்கள் எதுவும் எளிதாகப் பெறக் கூடியவை இல்லை, அல்லவா? நற்கடைப்பிடியை வளர்க்கவும், பெறவும், பெரும் ஊக்கமும், உறுதியும் தேவை. தியாகம் செய்யவும் வேண்டியிருக்கும்.
நற்கடைப்பிடி என்றால் மனத்தை நிகழ்காலத்தில் நிலை நிறுத்துவது. அதாவது, ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும் போது மனம் அந்தக் காரியத்தின் மேலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியிருப்பது. உதாரணமாகப் பற்களைத் துலக்கும் போது வேறு எந்த நினைவும் குறுக்கிட விடாமல், பற்களைத் துலக்குவதிலேயே கவனம் இருக்க வேண்டும். உண்ணும் போதும் அமைதியாக உணவருந்த வேண்டும். கவனத்துடன் உண்ண வேண்டும். பேசிக் கொண்டோ அல்லது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ உணவருந்தினால், அது நற்கடைப்பிடி ஆகாது. இந்த இரண்டு உதாரணங்களிலிருந்தும் நற்கடைப்பிடி எளிமையான காரியம் இல்லை என்பதை உணர்கிறோம். இரண்டு, மூன்று காரியங்களை ஒரே சமயத்தில் செய்வது ஒரு திறமை மிக்க செயல் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அது ஒரு பலவீனம் என்று குறிப்பிடுவதே சரி. ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை மட்டும் செய்வதுதான் உண்மையான ஒரு திறமை. உண்மையான சாதனை.
நற்கடைப்பிடி மேற்கொள்ள நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். விடாமுயற்சியோடு எளிய பயிற்சிகள் செய்து படிப்படியாக நற்கடைப்பிடியை வளர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, கடைப்பிடியை அகம் நோக்கித் திசை திருப்ப வேண்டும். பெரும்பாலானோர் புறத்தில் கவனம் செலுத்துகின்றனர் ஆனால் உங்கள் நலனுக்காக அகத்தில் கவனம் செலுத்துவதே நல்லது. அதாவது:
1. உடல் மீது கவனம் இருப்பது.
2. உணர்ச்சிகள் மீது கவனம் இருப்பது.
3. மனத்தின் நிலைகள் மீது கவனம் இருப்பது.
4. மனத்தின் இயல்புகள் மீது கவனம் இருப்பது.
இவையே நற்கடைப்பிடியின் நன்கு அடித்தலங்கள். நற்கடைப்பிடியோடு வாழ்பவர், இந்த நான்கின் மீதும் கவனம் செலுத்தி வாழ்கின்றார்.
இந்தத் திறமையை விடாமுயற்சியோடு கடைப்பிடித்து வளர்த்துக் கொள்பவருக்கு, இது பெரும் பாதுகாப்பளிக்கும். எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நற்கடைபிடியைப் பயில்வோர் நன்கு அறிவார்கள். எப்போது பேச வேண்டும் அல்லது பேசக் கூடாது, பேசும் போது எதைப் பேச வேண்டும், எதைப் பேசாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் வழிகாட்டிச் சரியான பாதையில் செலுத்தி வளர்ச்சி பெற வைப்பது நற்கடைப்பிடியே. இறுதியில் நற்கடைப்பிடியே நம்மை நுண்ணறிவுக்கும், மெய்ஞ்ஞானத்துக்கும், திருப்திக்கும், பேரானந்தத்திற்கும் எடுத்துச் செல்கிறது.