Peace
மனஅமைதி

99

Q: What’s peacefulness like?
A: What’s confusion? Well, peacefulness is the end of confusion.

கேள்வி: மன அமைதி எப்படி இருக்கும்?
பதில்: மனக் குழப்பமென்றால் என்ன? மன அமைதி என்பது மனக் குழப்பம் முடிந்தபின் ஏற்படுவது தான்.

100

Peace is within oneself to be found in the same place as agitation and suffering. It is not found in a forest or on a hilltop, nor is it given by a teacher. Where you experience suffering, you can also find freedom from suffering. Trying to run away from suffering is actually to run toward it.

மன அமைதி என்பது கிளர்ச்சியும், துயரமும் நமக்குள்ளே காணக்கூடிய அதே இடத்தில் காணக்கூடியதே. அதைக் காட்டிலோ, மலை உச்சியிலோ காண முடியாது. ஆசிரியர் கொடுக்கக் கூடியதும் அல்ல. நீங்கள் எங்கே துக்கம் அனுபவிக்கிறீர்களோ அங்கே தான் துக்கத்திலிருந்து விடுதலையும் பெற முடியும். துக்கத்திடமிருந்து விலகி ஓட முயற்சிப்பது துக்கத்தை நோக்கியே ஓடுவதற்குச் சமம்.

101

If you let go a little, you will have a little peace. If you let go a lot, you will have a lot of peace. If you let go completely, you will have complete peace.

கொஞ்சம் கைவிட்டால் கொஞ்சம் மன அமைதி கிடைக்கும். நிறையக் கைவிட்டால் நிறைய மன அமைதி கிடைக்கும். எல்லாவற்றையும் கைவிட்டால் முழு மன அமைதி கிடைக்கும்.

102

Actually, in truth, there isn’t anything to human beings. Whatever we may be, it’s only in the realm of appearances. However, if we go beyond appearances and see the truth, we will see that there isn’t anything there but the universal characteristics - birth in the beginning, change in the middle, and cessation in the end. This is all there is. If we see that all things are like this, then no problems arise. If we understand this, we will have contentment and peace.

உண்மையில் மனிதனிடத்தில் ஒன்றுமே இல்லை. நாம் எப்படி இருந்தாலும், தோற்றத்திற்குத்தான் அப்படிக் காண்கிறோம். தோற்றத்தைத் தாண்டி உண்மையைப் பார்ப்போமேயானால் உலகளாவிய இயல்புகளைத்தான் காணமுடியும் - அதாவது ஆரம்பத்தில் பிறப்பு, மத்தியில் மாற்றம், இறுதியில் முடிவு. அவ்வளவு தான். பார்ப்பதெல்லாம் அப்படித் தோன்றுமேயானால் பிரச்சனைகளே எழாது. இது புரிந்தால் மன அமைதியுடன் திருப்தி அடைவோம்.

103

Know what is good and bad, whether traveling or living in one place. You can’t find peace on a mountain or in a cave. You can even go to where the Buddha attained enlightenment without getting closer to the truth.

ஓர் இடத்தில் இருந்தாலும் சரி பயணம் மேற்கொண்டாலும் சரி எது நல்லது எது கெட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள். மன அமைதியை மலையிலோ குகையிலோ காண முடியாது. புத்தர் ஞானம் பெற்ற இடத்திற்கே சென்றாலும் உண்மை விளங்கும் என்று சொல்ல முடியாது.

104

Looking outside the self is to compare and to discriminate. You will not find happiness that way. Nor will you find peace, if you spend more time looking for a perfect person or the perfect teacher. The Buddha taught us to look at the Dhamma, the truth, and not to look at other people.

நமது உள்ளத்திற்கு வெளியே பார்ப்பதென்பது ஒப்பிட்டுப் பார்த்துப் பாகுபாடு செய்வதாகும். மகிழ்ச்சியை அவ்வாறு காண முடியாது. பிழையே இல்லாத மனிதனை அல்லது ஆசிரியரைத் தேடிக் காலம் கழித்தால் மன அமைதியைக் காண முடியாது. புத்தர் தருமத்தை, உண்மையைப் பார்க்கச் சொன்னார். பிற மனிதர்களை அல்ல.

105

Anyone can build a house of wood and bricks, but the Buddha taught us that sort of home is not our real home. It’s a home in the world and it follows the ways of the world. Our real home is inner peace.

யார் வேண்டுமானாலும் மரத்தாலும் செங்கல்லாலும் வீட்டைக் கட்டி விடலாம். ஆனால் புத்தர் அப்படிப்பட்ட வீடு நமது உண்மையான வீடாகாது என்று போதித்தார். உலகத்தில் அதுவும் ஒரு வீடு. உலகியலின்படி நடக்கும் ஒரு வீடு. மன அமைதியே நமது உண்மையான வீடு.

106

The forest is peaceful, why aren’t you? You hold on to things causing your confusion. Let nature teach you. Hear the bird’s song then let go. If you know nature, you’ll know Dhamma. If you know Dhamma, you’ll know nature.

காடுகள் அமைதியாக இருக்கின்றன, உங்களால் ஏன் முடியவில்லை? பொருட்களுடன் பிணைத்துக் கொள்வதால் மனதில் குழப்பம் ஏற்படுகிறது. இயற்கை உங்களுக்குக் கற்பிக்கட்டும். பறவையின் பாடலைக் கேளுங்கள், பிறகு (குழப்பம் உண்டாக்குபவையை)  கை விடுங்கள். இயற்கையை அறிந்தால் தருமம் தெரியும். தருமம் தெரிந்தால் இயற்கை தெரியும்.

107

Looking for peace is like looking for a turtle with a mustache. You won’t be able to find it. But when your heart is ready, peace will come looking for you.

மன அமைதியைத் தேடுவது மீசையுள்ள ஆமையைத் தேடுவது போலத்தான். அப்படி ஒரு ஆமையைக் காண முடியாது. ஆனால் உங்கள் உள்ளம் ஆயத்தமாக இருந்தால் மன அமைதி உங்களைத் தேடி வரும்.

108

Virtue, concentration, and wisdom together make up the Path. But this Path is not yet the true teaching, not what the teacher actually wanted, but merely the Path that will take you there. For example, say you traveled the road from Bangkok to Wat Pah Pong; the road was necessary for your journey, but you were seeking Wat Pah Pong, the monastery, not the road. In the same way, we can say that virtue, concentration, and wisdom are outside the truth of the Buddha but are the road that leads to truth. When you have developed these three factors, the result is the most wonderful peace.

ஒழுக்கம்,  ஒருமுகச் சிந்தனை மற்றும் நுண்ணறிவு - இவை மூன்றும் சேர்ந்ததுதான் புத்தரின் பாதை. ஆனால் இந்தப் பாதை ஆசிரியர் விரும்பிய உண்மையான போதனை இல்லை. அவர் விரும்பும் இடத்திற்கு கொண்டுச் செல்லும் வழி தான். உதாரணத்திற்கு பாங்காக்கிலிருந்து வாட் பா போங் (என்ற விகாரைஆசிரமம்/கோவில்) நோக்கிப் போகும் சாலையில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; சாலை உங்கள் பயணத்திற்கு அவசியமானது, ஆனால் நீங்கள் போக வேண்டிய இடம் அந்தச் சாலை இல்லை; வாட் பா போங் விகாரை. அதே போலத்தான் ஒழுக்கம், ஒருமுகப்படுத்துதல், நுண்ணறிவு ஆகிய மூன்றும் புத்தரின் உண்மைக்கு வெளியே உள்ளவை. ஆனால் அவை உண்மைக்கு உங்களை அழைத்துப் போகும் வழி. இந்த மூன்றையும் நன்கு வளர்த்துக் கொண்டால் இறுதியில் கிடைப்பது மிக அற்புதமான மன அமைதி.