காம போகி சுத்தம் (சுருக்கம்)
புலன் இன்பங்களை அனுபவிப்போர்
ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார். அப்போது அனந்தபிண்டிகர் புத்தரை அணுகி, அவருக்கு மரியாதை செலுத்தியபின் ஒருபுறமாக அமர்ந்தார். பகவர் இல்லறத்தாரான அனந்தபிண்டிகரிடம்:
"உபாசிகரே, இந்த உலகில் பத்துவகையான புலன் இன்பங்களை அனுபவிப்போர் உள்ளனர். எந்தப் பத்துவகையானவர்கள்? (இல்லறம் அனுபவிப்போர் அனைவரும் இந்தப் பத்து வகையில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவராவார்கள்.)
1. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையற்ற முறையிலும், பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்தும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்களும் அனுபவிக்காமல், மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளாததால் புண்ணியமும் சேர்க்காதவர்களாக உள்ளனர். இப்படிப்பட்டவரை மூன்று காரணங்களுக்காகக் குறை கூறலாம்:
1. தவறான முறையில் செல்வம் சேர்த்ததற்காக, 2. சேர்த்த செல்வத்தைத் தாங்கள் அனுபவிக்காமல் (தங்கள் குடும்பத்திற்கும் உதவாமல்) இருப்பதற்காக, 3. மற்றவர்களுக்கு உதவி செய்யாததால் புண்ணியமும் சேர்த்துக் கொள்ளாததற்காக. ஆக இந்த மூன்று வகையில் அவர்களைக் குறை கூறலாம்.
2. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையற்ற முறையிலும், பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்தும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்கள் மட்டும் அனுபவித்து, ஆனால் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாததால் புண்ணியம் சேர்க்காமலும் உள்ளனர். இப்படிப்பட்டவரை இரண்டு காரணங்களுக்காகக் குறை கூறலாம், ஒரு காரணத்துக்காகப் பாராட்டலாம். தவறான முறையில் செல்வம் சேர்த்ததற்காகக் குறைகூறலாம். மற்றவருக்கு உதவி செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்ளாததற்காகவும் அவரைக் குறை கூறலாம். சேர்த்த செல்வத்தைத் தாங்கள் அனுபவித்ததற்காக அவரைப் பாராட்டலாம்.
3. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையற்ற முறையிலும், பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்தும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்களும் அனுபவித்து மற்றவரிடமும் பகிர்ந்து கொண்டு புண்ணியம் சேர்க்கின்றனர். தவறான முறையில் செல்வம் சேர்த்ததற்காக அவரைக் குறைகூறலாம், சேர்த்த செல்வத்தைத் தாங்கள் அனுபவித்ததற்காக அவரைப் பாராட்டலாம், மற்றவருக்கு உதவி, புண்ணியம் சேர்த்துக் கொண்டதற்காகவும் அவரைப் பாராட்டலாம்.
4. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையற்ற முறையிலும், நேர்மையான முறையிலும் இரண்டு வகையிலும் சேர்க்கின்றனர்; மேலும் பிறரின் உணர்ச்சிகளைச் சில சமயம் அலட்சியம் செய்தும், சிலசமயம் புண்படுத்தாமலும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்களும் அனுபவிக்காமல், மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளாததால் புண்ணியமும் சேர்ப்பதில்லை. இப்படிப்பட்டவரை நேர்மையான முறையிலும் பிறரை வதைக்காது செல்வம் சேர்த்ததற்காகப் பாராட்டலாம். ஆனால் நேர்மையற்றும் பிறரை வதைத்தும் சம்பாதித்தற்காக அவரைக் குறை கூறலாம். மேலும் சேர்த்த செல்வத்தைத் தாங்கள் அனுபவிக்காமல் இருப்பதற்காகவும், மற்றவருக்கு உதவி செய்யாமல் புண்ணியம் சேர்த்துக் கொள்ளாததற்காகவும் அவரைக் குறை கூறலாம். ஆக ஒரு காரணத்திற்காக அவரைப் பாராட்டலாம், மூன்று காரணங்களுக்காக அவரைக் குறை கூறலாம்.
5. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையற்ற முறையிலும், நேர்மையான முறையிலும் இரண்டு வகையிலும் சேர்க்கின்றனர். மேலும் பிறரின் உணர்ச்சிகளை சில சமயம் அலட்சியம் செய்தும், சிலசமயம் பிறரைப் புண்படுத்தாமலும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாததால் புண்ணியமும் சேர்க்காமல் தாங்கள் மட்டும் அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்டவரை இரண்டு காரணங்களுக்காகப் பாராட்டலாம் இரண்டு காரணங்களுக்காகக் குறை கூறலாம். நேர்மையான முறையிலும், பிறரை வதைக்காமலும் செல்வம் சேர்த்ததற்காகப் பாராட்டலாம். ஆனால் நேர்மையற்றும், பிறரை வதைத்தும் சம்பாதித்ததற்காக அவரைக் குறை கூறலாம். மேலும் சேர்த்த செல்வத்தைத் தாங்கள் அனுபவித்ததற்காக அவரைப் பாராட்டலாம். மற்றவருக்கு உதவி செய்யாது புண்ணியம் சேர்த்துக் கொள்ளாததற்காக அவரைக் குறை கூறலாம்.
6. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையற்ற முறையிலும், நேர்மையான முறையிலும் இரண்டு வகையிலும் சேர்க்கின்றனர். மேலும் பிறரின் உணர்ச்சிகளைச் சில சமயம் அலட்சியம் செய்தும், சிலசமயம் பிறரைப் புண்படுத்தாமலும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்களும் அனுபவித்து மற்றவரிடமும் பகிர்ந்து கொண்டு புண்ணியம் சேர்க்கின்றனர். இப்படிப்பட்டவரை மூன்று காரணங்களுக்காகப் பாராட்டலாம், ஒரு காரணத்திற்காக அவரைக் குறை கூறலாம். நேர்மையான முறையிலும் பிறரை வதைக்காதும் சேர்த்த செல்வதிற்காகப் பாராட்டலாம். ஆனால் நேர்மையற்றும் பிறரை வதைத்தும் சம்பாதித்தற்காக அவரைக் குறை கூறலாம். மேலும் சேர்த்த செல்வத்தை தாங்கள் அனுபவித்தற்காக அவரைப் பாராட்டலாம். மற்றவருக்கு உதவி செய்து புண்ணியம் சேர்த்துக் கொண்டதற்காகவும் அவரைப் பாராட்டலாம்.
7. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையான முறையிலும், பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்யாமலும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்களும் அனுபவிக்காமல் மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளாது புண்ணியமும் சேர்த்துக் கொள்வதில்லை. இப்படிப்பட்டவரை ஒரு காரணத்துக்காகப் பாராட்டலாம், இரண்டு காரணங்களுக்காகக் குறை கூறலாம். நேர்மையான முறையில் செல்வம் சேர்த்ததற்காகப் பாராட்டலாம். சேர்த்த செல்வத்தைத் தாங்கள் அனுபவிக்காமல் இருப்பதற்காகவும், மற்றவருக்கு உதவி செய்யாததால் புண்ணியம் சேர்த்துக் கொள்ளாததற்காகவும் அவரைக் குறை கூறலாம்.
8. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையான முறையிலும், பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்யாமலும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்கள் மட்டும் அனுபவிக்கின்றனர். ஆனால் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாததால் புண்ணியம் சேர்ப்பதில்லை. இப்படிப்பட்டவரை இரண்டு காரணங்களுக்காகப் பாராட்டலாம், ஒரு காரணத்துக்காகக் குறை கூறலாம். நேர்மையான முறையில் செல்வம் சேர்த்ததற்காகவும், சேர்த்த செல்வத்தைத் தாங்கள் அனுபவித்ததற்காகவும் அவரைப் பாராட்டலாம். மற்றவருக்கு உதவி, புண்ணியம் சேர்த்துக் கொள்ளாததற்காக அவரைக் குறை கூறலாம்.
9. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையான முறையிலும், பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்யாமலும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்களும் அனுபவித்து மற்றவரிடமும் பகிர்ந்து கொண்டு புண்ணியம் சேர்க்கின்றனர். ஆனால் அதே சமயம் அந்தச் செல்வத்தோடு மிகவும் பற்றுக் கொண்டவராகவும், அதனால் மயக்கம் கொண்டவராகவும், அதில் உள்ள ஆபத்தை உணராமல் அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் நோக்கமும் இல்லாதவராக உள்ளவரை, மூன்று காரணங்களுக்காகப் பாராட்டலாம், ஒரு காரணத்திற்காகக் குறை கூறலாம். நேர்மையான முறையில் செல்வம் சேர்த்ததர்காகவும், சேர்த்த செல்வத்தை தாங்கள் அனுபவித்ததற்காகவும் , மற்றவருக்கு உதவி செய்து புண்ணியம் சேர்த்துக் கொண்டதற்காகவும் அவரைப் பாராட்டலாம். ஆனால் அந்தச் செல்வத்தோடு மிகவும் பற்றுக் கொண்டவராகவும், அதனால் மயக்கம் கொண்டவராகவும், அதில் உள்ள ஆபத்தை உணராமல் அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் நோக்கமும் இல்லாதவராக இருபதற்காக அவரைக் குறை கூறலாம்.
10. புலன் இன்பங்களில் ஈடுபடுவோரில் ஒருவகையினர் தங்கள் செல்வத்தை நேர்மையான முறையிலும் பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்யாமலும் சேர்க்கின்றனர். பின் அந்தச் செல்வத்தைத் தாங்களும் அனுபவித்து மற்றவரிடமும் பகிர்ந்து கொண்டு புண்ணியம் சேர்க்கின்றனர். ஆனால் அதே சமயம் அந்தச் செல்வத்தோடு பற்றுக் கொள்ளாமலும், அதனோடு மயக்கம் கொள்ளாமலும், அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் நோக்கம் கொண்டவராக இருக்கின்றனர். இவரை நான்கு காரணங்களுக்காகப் பாராட்டலாம். நேர்மையான முறையில் செல்வம் சேர்த்ததற்காகவும், சேர்த்த செல்வத்தைத் தாங்கள் அனுபவித்தற்காகவும் , மற்றவருக்கு உதவி செய்து புண்ணியம் சேர்த்துக் கொண்டதற்காகவும் மேலும் அந்தச் செல்வத்தோடு பற்றுக் கொள்ளாமலும் அதனோடு மயக்கம் கொள்ளாமலும், அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் நோக்கமும் கொண்டவராக இருப்பதற்காகவும் என இந்த நான்கு காரணங்களுக்காகவும் அவரைப் பாராட்டலாம்.
உபாசிகரே, இந்தப் பத்து வகையானவரில் தங்கள் செல்வத்தை நேர்மையான முறையிலும், பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்யாமலும் சேர்த்தவரை, பின் அந்த செல்வத்தை தாங்களும் அனுபவித்து மற்றவரிடமும் பகிர்ந்துகொண்டு புண்ணியம் சேர்த்தவரை, அதே சமயம் அந்தச் செல்வத்தோடு பற்றுக் கொள்ளாமலும் அதனோடு மயக்கம் கொள்ளாமலும், அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் நோக்கம் கொண்டவராக இருப்பவரையே நான் முதன்மையானவர், மேன்மையானவர் என்பேன்.
பசுவிலிருந்து பாலும், பாலிலிருந்து பாலேடும், பாலேட்டிலிருந்து வெண்ணெய்யும், வெண்ணெய்யிலிருந்து நெய்யும், நெய்யிலிருந்து ஆடை முதலியனவும் கிடைத்தாலும் நெய்யின் ஆடையே சிறந்ததெனக் கூறுவது போல, புலன் இன்பங்களை அனுபவிக்கும் பத்து வகையினரில் - இந்தப் பத்துவகையினரையும் நாம் இந்த உலகில் காண்கிறோம் - தங்கள் செல்வத்தை நேர்மையான முறையிலும் பிறரின் உணர்ச்சிகளை அலட்சியம் செய்யாமலும் சேர்த்தவரை, பின் அந்தச் செல்வத்தை தாங்களும் அனுபவித்து மற்றவரிடமும் பகிர்ந்து கொண்டு புண்ணியம் சேர்த்தவரை, அதே சமயம் அந்த செல்வத்தோடு பற்றுக் கொள்ளாமலும், அதனோடு மயக்கம் கொள்ளாமலும், அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் நோக்கம் கொண்டவராக இருப்பவரையே தலைவன்; சிறந்தவன்; உயர்ந்தவன்; மிக உயர்ந்தவன்; உச்ச நிலையிலிருப்பவன் என்கிறேன்.
* * *
விளக்கம்:
செல்வம் எப்போது வேண்டுமானாலும் அழிந்து விடலாம். எனவே தம்ம வழியில் அட்டாங்க மார்க்கத்தைக் கடைப்பிடித்து சம்சார சக்கரத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.