தயாள குணம்
தயாள குணம்
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
Generosity
Adapted from a Dhamma talk by Ajahn Sona
தயாள குணம் தலை சிறந்த பத்து குணங்களில் ஒன்று.
Generosity is one of ten perfections - character development ideas, character traits one should develop
(இந்தக் கட்டுரை பிக்கு அஜான் சோனா ஒட்டாவா நகரத்தில் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
This essay was composed from a speech given by Bhikku Ajahn Sona in Ottawa, Canada)
திரிபிடகத்தில் பத்து நற்குணங்கள் வெவ்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளன. உரைநூட்களிலும் இவை தொகுக்கப் பட்டுள்ளன. இந்தப் பத்து நற்குணங்களிலும் சிறப்புற்றால் தான் ஞானம் பெற முடியும் என்பது பௌத்தக் கொள்கை. அதாவது பட்டம் பெறப் பத்துத் தேர்வுகள் எழுதியாக வேண்டும். மேலும் ஒவ்வொரு தேர்விலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெரும் வரை திரும்பத் திரும்ப எழுதியாக வேண்டும். பிறருக்கு வழங்குவதில் தாராளமனப்பாங்கு இருக்கும் குணம் இந்தப் பத்து நற்குணங்களுள் ஒன்று.
இல்லறத்தாருக்குத் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வாய்ப்புக் கிடைப்பதில் பிரச்சனை இருக்கக் கூடாது. தினசரி ஆயிரம் ருபாய்க்குக் காசோலை எழுதி அநாதை இல்லங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. எனினும் இக்காலத்தில் வசதிமிக்கவர்கள் கூடச் சற்றுக் கருமிகளாகவே உள்ளனர். வசதியற்றவர்களில் சிலரோ தங்கள் வாழ்க்கைக்கே இடையூறு வரும் அளவிற்குத் தானம் செய்கிறார்கள்.
தயாள குணத்திற்குப் புத்தர் காட்டும் ஒரு உவமானமானது தண்ணீருள்ள பாத்திரத்தைக் கவிழ்த்து வைப்பது போன்றது தான். அதாவது கடைசிச் சொட்டு உள்ளவரை கொடுக்க வேண்டும் என்பதை அது குறிக்கும். அதுவே முழுமையான தாராளமனப்பாங்கின் அறிகுறி. எல்லாம் கொடுத்தாகிவிட்டது. மீதி ஒன்றும் கொடுப்பதற்கு இல்லை. இது எப்படி சாத்தியம் என்று நாம் யோசிக்கக் கூடும். ஆனால் பிறப்பு இறப்பு என்று மாறி மாறி நிகழும் சம்சார வாழ்விலிருந்து (அதாவது துக்கத்திலிருந்து) விடுபட இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் பலருக்கு இப்படிப்பட்ட தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள நீண்ட நாட்கள் ஆகலாம். ஒருபுறத்தில் இருப்பவன் கஞ்சன். அதாவது மிக வசதியாக இருந்தும் எதையும் கொடுக்கத் தயங்குபவன். இது ஒரு நோய், மன வியாதி. மற்றவர்கள் தயாள குணத்தில் வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள். முழு மன நிம்மதி அடைய எதையும் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது, எதனுடனும் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது. பற்றேதுமின்றி அனத்தையும் கைவிட வேண்டும் என்று புத்தர் சொல்கிறார்.
கொடுத்த பிறகு எதாவது நல்ல விளைவு கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பதும் சரியல்ல. நாம் எந்த மனப்போக்கில் கொடுத்தோம் என்பது முக்கியம். அதாவது நாமே ஒரு காலியான பாத்திரம்தான் என்பதை உணர வேண்டும். முழுமையான சுதந்திரம் என்பது நம்மிடமே பசையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பற்றுக்களைக் கைவிட்டால் தான் நிகழும். இப்படிப் புரிந்து கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். பௌத்தம் படிப்படியாக முன்னேற வைக்கும் ஒரு செய்முறை. இச்செய்முறையில் பயிற்சிகள் உண்டு. அடிக்கடி பயிற்சி செய்ய வேண்டும்.
பல முறை, தானம் செய்வதில் நாம் சோர்வடைந்து விடுகிறோம். தொலைகாட்சிப் பெட்டியில் அடிக்கடி பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கிறோம். உடையின்றி மெலிந்து பசியால் வயிறு ஒட்டிய குழந்தைகளைப் பார்க்கிறோம். இதைப் பார்த்து நாம் பாதிக்கப் படுகிறோம். இந்த அவலக் காட்சியைப் பார்க்க முடியாமல் தொலைகாட்சியை அணைத்து 'கடவுளே நான் ஒருவன் என்ன செய்ய முடியும்? அப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணம் அனுப்பினாலும் அரசியல் வாதிகள் அதை அபகரித்துக் கொள்வார்களோ?' என்று எண்ணுகிறோம். அனைவரையும் சந்தேகிப்பதால் நாம் ஒன்றுமே செய்ய முடியாமல் பாதிப்படைகிறோம். இப்படிப் பாதிக்கப்படாமல் தயாள குணத்தை வளர்த்துக்கொள்ள அதை அடிக்கடி செய்ய வேண்டும் - அவ்வப்போது மட்டும் அல்ல. வருடம் ஒருமுறை என்றில்லாமல் தினமும் ஒரு முறை செய்தால் மிகவும் நல்லது. இதற்கு ஓர் உதாரணம் தரலாம். சில பௌத்த நாடுகளில் துறவிகள் தினமும் உணவு பெற அதிகாலையில் கிராமத்துத் தெருக்களில் நடந்து செல்வார்கள். எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும் மக்களும் அன்றைய உணவுக்காக இருக்கும் அரிசியில் ஒரு பிடியை, அவர்களிடம் இருக்கும் உணவில் சிறு பகுதியைக் கொடுத்துத் தானம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். துறவிகள் பிச்சை கேட்காமல் அமைதியாக அவர்கள் வீட்டருகே செல்லும் போது அவர்களோடு தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். துறவிகள் இல்லறமக்களைச் சார்ந்து இருக்க வைத்த ஒரு காரணம் இப்படி இல்லறமக்களுக்கும் தானம் செய்யும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பது தான். ஒவ்வொரு நாளும் தானம் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைகிறதல்லவா?.
நான் தாய்லாந்தில் இருந்தபோது தங்கியிருந்த விகாரை மிக ஏழ்மையான பகுதியில் தான் அமைந்திருந்தது. எங்களுக்கு உணவாகக் கிடைப்பதெல்லாம் பசை போன்ற அரிசிச் சாதம் (sticky rice) தான். மக்கள் தங்கள் வீட்டருகே பயிர் செய்யும் நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசி அது. இருந்தும் அதைத் தானமாகத் தருவதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. துறவிகள் வர வில்லையென்றால் அவர்களுக்கு ஏமாற்றம் தான். தங்கள் கிராமங்களுக்குத் துறவிகளை வரவழைப்பதற்கு முயற்சி செய்வார்கள். இதுவே அடிக்கடி கொடுப்பதற்கும், உரிய முறையில் கொடுப்பதற்கும், பயனுள்ளதாகக் கொடுப்பதற்கும், சுத்தமாகக் கொடுப்பதற்கும், கொடுப்பதற்கு முன் மகிழ்வுடனும், கொடுக்கும் போது மகிழ்வுடனும், கொடுத்த பிறகு மகிழ்வுடனும் இருப்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். கொடுப்பது மட்டும் அல்ல; கொடுக்கும் போது உள்ள மனநிலையே மிக முக்கியம். கரும விளைவைப் பார்க்கும் போது வினைப்பயன் நமக்குத் திரும்ப வரும்போது பன்மடங்கு பெரிதாக வரும். ஆனால் வரும் பயன் கொடுக்கும் போது இருந்த அதே மன உணர்ச்சியுடன் வரும் என்பது புத்தரின் வாக்கு. உங்கள் வாழ்வையே திரும்ப எண்ணிப் பாருங்கள். நீங்கள் கொடுத்ததனால் வந்த பயன் ஒன்றை எண்ணிப்பாருங்கள். ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். திரும்ப வரும் பயனின் போது உள்ள உங்கள் மனநிலை கொடுக்கும் போது உங்களுக்கு இருந்த மனநிலையைப் போலவே இருக்கக்கூடும்! எனவேதான் புத்தர் கொடுக்கும் போது நல்ல மனநிலையில் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். கொடுப்பதற்கு முன்னால் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். கொடுக்கும் போது சந்தோஷமாகக் கொடுக்க வேண்டும். கொடுத்த பிறகு என்றைக்கும் அதற்காக வருத்தப்படக் கூடாது. கொடுத்த தானம் தவறாகப் பயன் படுத்தப் பட்டாலும் சரி, தொலைக்கப் பட்டாலும் சரி, கொடுத்ததற்கு நன்றி உணர்வு தெரிவிக்கப்படாமல் இருந்தாலும் சரி - கொடுத்ததைப் பற்றி வருந்தாதீர்கள். எந்த மனநிலையில் நீங்கள் பொருளை முந்தைய வாழ்விலோ இந்த வாழ்விலோ கொடுத்திருந்தாலும் அது பன்மடங்காகி கொடுத்த அதே மனநிலையில் உங்களிடமே திரும்ப வரும் என்று புத்தர் சொல்கிறார். பலர் கொடுப்பதற்கு காரணம் மற்றவர்கள் கொடுப்பதனால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாகவோ, நமது பெயர் எங்காவது வந்து நாம் புகழ் அடையலாம் என்றோ, மற்றவர் நம்மை பற்றி மதிப்புடன் கூற வேண்டும் என்றோ, அல்லது நமக்குள்ளே இருக்கும் குற்ற உணர்வின் காரணமாகவோகூட இருக்கலாம். ஆனால் இத்தகைய காரணங்களால் கொடுக்கும் போது வினைப்பயனின் காரணமாகத் திரும்ப வரும் போது அதே மகிழ்ச்சியற்ற மனநிலையில் தான் வரும். வரும் பயனை நம்மால் மகிழ்வோடு அனுபவிக்க முடியாது. ஒரு சிலர் கிடைப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறார்கள். கொடுப்பதென்பது பொருள் மட்டுமில்லாமல் நேரத்தையோ உழைப்பையோகூடக் கொடுக்கலாம், அன்பைக்கூடக் கொடுக்கலாம். பேசும் போது கூட அன்போடு பேசும்போது நமக்கு வரும் வினைப்பயனும் அதே அன்போடு தான் வரும்.
பொருள் தானமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உள்ளம் சார்ந்த தானமாகவும் இருக்கலாம் - அதாவது ஒருவரிடம் அன்பாக பேசுவதே ஒரு வகைத் தானம் தான். பொருத்தமாகவும், சிந்தித்துப் பார்த்தும், சரியான நேரத்திலும் அவசரப்படாமலும் தானம் செய்ய வேண்டும்.
நான் மற்றவருக்குச் சொல்லுவேன்: உங்கள் அறையில் ஒரு ஜாடியை வைத்து அதில் ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாயையோ, ஐந்து ரூபாயையோ போட்டு வாருங்கள். அப்படி ஒரு மாதம் சேமியுங்கள். ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் இந்தத் தயாளச் செயலைச் செய்யுங்கள். இந்நாட்டில் நமக்குத் துறவிகளுக்கு தினசரி உணவு கொடுக்கும் வாய்ப்பில்லை. அதனால் தினசரி காலைக் கடன்களை முடித்துக் குளித்த பின்பு உங்கள் ஜாடியில் சற்று மகழ்ச்சியான மன நிலையில் 'இந்தப் பணம் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படட்டும்' என்று எண்ணிப் பணம் போடுங்கள். யாருக்கு அதை அளிக்கப் போகிறோம் என்றெல்லாம் அப்போதைக்கு நினைக்க வேண்டியதில்லை. மாதக் கடைசியிலோ வருடக் கடைசியிலோ உங்கள் விருப்பமுள்ள கருணை நிறுவனத்திற்குச் சேர்ந்த தொகையைக் காசோலையாகவோ பணமாகவோ அணுப்பிவிடுங்கள். இப்படிக் கொடுப்பதில் ஏற்படும் மகிழ்வு நீடித்து நிலைத்திருக்கும்.
மேலும் ஒன்றை மட்டுமே தானமாகத் தருவதும் சரியல்ல. தயாள குணத்தின் ஒர் இயல்பு உரிய தேவையைத் தெரிந்துகொள்வதே யாகும். இது ஒரு நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய பயிற்சி. தயாள குணம் என்ற நற்பண்பைப் பொறுப்புடன் பேணி வளர்க்க வேண்டும். இதற்காக அடிக்கடியும், விழித்திருக்கும் எந்நேரமும் இந்தக் குணத்தை வளர்க்கத் தகுந்த சந்தர்ப்பங்களைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். பணம் கொடுப்பது மட்டுமே தயாள குணம் என்பதில்லை. மற்றவர் சொல்லுவதைப் பொறுமையாகக் கேட்பதும் ஒரு வகைத் தயாள குணம் தான். பல பொருட்களைப் பிறருக்குக் கொடுக்கத் தயக்கம் இருக்கும். அந்த தயக்கமும் பற்றும் எங்கிருந்து வருகிறதென்று சிந்திக்க வேண்டும். அந்த கருமித்தனம் எங்கிருந்து வந்தது என அறிய மனப் பயிற்சி செய்ய வேண்டும். எதையும் நிர்ப்பந்தத்தினால் கொடுக்கக் கூடாது. ஏன் எனில் அது திரும்ப வரும் போது அதே ஒரு நிர்பந்தத்தினால் வருவதாகவே தோன்றும். கொடுக்கும் போது மகிழ்ச்சி இல்லையென்றால் ஏன் மகிழ்ச்சி இல்லை என்பதை நுண்ணறிவோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். எங்களைப் போன்ற துறவிகளுக்கு அந்த அளவிற்கு வாய்ப்பு இல்லை. எங்களிடம் பிறருக்குக் கொடுக்கக் காசோ பொருளோ இல்லை. எங்களால் கொடுக்க முடிவதெல்லாம் தரும தானம் மட்டுமே. இந்த பேச்சைப் போல, வாய்மையான வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்த்து உங்களோடு பகிர்ந்துக்கொள்வதே எங்களுக்கு இருக்கும் வாய்ப்பு.
தயாள குணம் இல்லாமல் இருக்கக் காரணமே இல்லை. தினசரி ஆயிரம் வாய்ப்புகள் வருகின்றன. அந்த வாய்ப்புகளைத் தவர விடாமல் தயாள குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
* * * * * *