அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko
அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்


தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
தணிசாரோ பிக்கு
Compiled and Translated by
Thanissaro Bhikkhu

Breathing 
மூச்செடுத்தல்


§ When my father came for a visit to Wat Dhammasathit, I got him to sit and meditate with Ajaan Fuang, while I acted as interpreter. Before starting, my father asked if his being a Christian would be an obstacle to the meditation. Ajaan Fuang assured him that it wouldn't: "We're going to focus on the breath. The breath doesn't belong to Buddhism or Christianity or anyone else. It's common property all over the world, and everyone has the right to look at it. So try looking at the breath until you can see your own mind and know your own mind. Then the question of what religion you belong to won't be an issue, because we can talk about the mind instead of discussing religions. This way we can understand each other."

    எனது தந்தை 'வாட் தம்மசாதிட்' (Wat Dhammasathit) விகாரைக்கு வந்த போது அவரை அஜான் ஃபுவாங்குடன் தியானம் செய்ய அமரச் செய்தேன். நானும் மொழிபெயர்ப்பாளனாக அவர்களுடன் இருந்தேன். தியானம் துவங்கு முன் எனது தந்தை தான் கிருஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவராதலால் அது தியானம் செய்யத் தடையாயிருக்குமா என்று கேட்டார். கண்டிப்பாக இருக்காது என்று கூறிய அஜான் ஃபுவாங் தொடர்ந்தார்: "நாம் மூச்சின் மீது கவனம் செலுத்தப் போகிறோம். மூச்சு பௌத்தத்துக்கோ கிருஸ்துவத்திற்கோ வேறு யாருக்கோ சொந்தமானது இல்லை. உலகின் எப்பகுதியில் வாழ்பவருக்கும் அது பொதுச் சொத்து. எல்லோருக்கும் மூச்சைக் கவனிக்க உரிமையுண்டு. ஆகவே நீங்கள் மூச்சைக் கவனிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மனத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வரை மூச்சைக் கவனித்துப் பிரதிபலியுங்கள். அப்போது நாம் எந்த மதத்தைச் சார்ந்துள்ளோம் என்ற கேள்விக்கே இடம் இருக்காது, ஏனென்றால் நாம் மதத்தைப் பற்றிப் பேசாமல் மனத்தைப் பற்றிப் பேசுகிறோம். இவ்வாறு நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம்."

§ "When you do anything in meditation, relate it to the breath, for that's the basis of the entire skill we're developing."

    "தியானத்தின்போது என்ன செய்தாலும் அதற்கு மூச்சோடு உள்ள உறவை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அதுவே நாம் பயிற்சி செய்வதற்கான அடித்தலம்."

§ "Catching the mind is like catching eels. If you simply jump down into the mud and try to grab hold of them, they'll slip off every which way. You have to find something they like — as when people take a dead dog, put it in a big clay jar and then bury it in the mud. In no time at all the eels come swimming into the jar of their own free will to feed off the dog, and then all you have to do it put your hand over the mouth of the jar and there you are: You've got your eels.
"It's the same with the mind. You have to find something it likes, so make the breath as comfortable as you can, to the point where it feels good throughout the whole body. The mind likes comfort, so it'll come of its own free will, and then it's easy to catch hold of it."

    "மனத்தைப் பிடிப்பது என்பது சேற்றிலுள்ள ஆராலைப் (ஒரு மீன்வகை - sand eel) பிடிப்பது போல. சேற்றில் குதித்து அவற்றைப் பிடிக்க முயன்றால் அவை எப்படியாவது நழுவித் தப்பித்து விடும். அவற்றுக்குப் பிடித்த எதையாவது ஒன்றை நாம் அவற்றுக்குக் கொடுக்க வேண்டும் - மக்கள் அவற்றுக்குப் பிடித்த உணவை ஒரு பெரிய களிமண் ஜாடியில் போட்டுச் சேற்றில் புதைத்து வைப்பார்கள். விரைவிலேயே அவை  தாமாக அந்த ஜாடிக்குள் நுழைந்து விடும். பின் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த ஜாடியின் வாயிலில் கையை வைத்து மூடிக் கொள்வது தான். வேலை முடிந்து விட்டது. ஆரால்களைப் பிடித்து விட்டோம். 

    அது போலத்தான் மனமும். அதற்குப் பிடித்தது எது  என்று கண்டறிய வேண்டும். ஆகவே மூச்சை முடிந்த அளவு வசதியாக்கிக் கொள்ளுங்கள். உடல் முழுவதும் ஒரு நல்ல உணர்வை உணரும் வரை மூச்சை வசதிப் படுத்திக் கொள்ளுங்கள். மனத்திற்கு வசதியாக இருப்பது பிடிக்கும், எனவே அது தானாகவே நம் வழிக்கு வரும். பின் அதைப் பிடுத்துக் கொள்ளலாம் (கட்டுப்படுத்தலாம்).

§ "You have to know the breath at all times, and then happiness will be yours. The human state, the heavenly state, and nibbana are all here in the breath. If you get carried away with other things, happiness will slip through your fingers, so you have to learn how to observe the in-and-out breath at all times. Pay attention to how it's getting along — don't leave it to fend for itself. When you know its way of life — sitting, standing, walking, everything — then you can get what you want from it. The body will be light, the mind at ease, happy at all times."

    "நீங்கள் மூச்சை எந்த நேரமும் தெரிந்திருக்க வேண்டும். பின் மகிழ்ச்சி உங்கள் வசப்படும். மனித நிலை, மேல் உலக நிலை, நிப்பாணம் எல்லாமே மூச்சில் அடங்கி உள்ளன. பிற செயல்கள் உங்களை இழுத்துச் செல்ல விட்டு விட்டீர்களென்றால், மகிழ்ச்சி உங்கள் கைவிரல் சந்துக்களில் நழுவித் தப்பிச் சென்று விடும். ஆகவே உள்மூச்சையும் வெளிமூச்சையும் எப்போதும் கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் கவனியுங்கள் - மூச்சை அதன் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டாம். அதன் குணாதிசயத்தை - உட்காரும் போது, நிற்கும் போது, நடக்கும் போது என்ற எந்த உடல் நிலையிலும் – தெரிந்து கொண்டால், அதனிடமிருந்து உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். உடல் இலேசாக இருக்கும், மனம் அமைதியாகவும் எந்நேரமும் ஆனந்தத்தோடும் இருக்கும்."

§ "The breath can take you all the way to nibbana, you know."

    "மூச்சு உங்களை நிப்பாண நிலைக்கே இட்டுச் செல்லும் என்பது உங்களுக்குத் தெரியுமா?"

§ "The first step is simply to look at the breath as it is. You don't have to go fiddling around with it a lot. Just think bud- with the in-breath, and dho with the out. Bud- in, dho out. Don't force the breath, or force the mind into a trance. Simply hold the mind carefully right there with each breath."

    "முதலில் மூச்சை உள்ளது உள்ளபடி கவனியுங்கள். அதிக மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டிய தில்லை. இதை மட்டுமே செய்யவும்: உள்மூச்சின் போது 'புத்' என்றும், வெளிமூச்சின் போது 'தோ' என்று மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். புத்-உள், தோ-வெளி. மூச்சை அழுத்த வேண்டியதில்லை அல்லது மனத்தை ஒரு சமாதி நிலைக்குக் கொண்டு போக வேண்டியதுமில்லை. மனத்தை ஒவ்வொரு மூச்சுடனும் ஒத்திருக்க வையுங்கள்."

§ "How do you use your powers of observation to get acquainted with the breath? Ask yourself: Do you know the breath? Is the breath there? If you can't see whether the breath is for real, look further in until it's clearly there. There's no great mystery to it. It's always real, right there. The important thing is whether or not you're for real. If you are, then simply keep at it. That's all there is to it. Simply keep being real, being true in what you do, and your meditation will make progress. It'll gradually grow stronger, and the mind will grow calm. Just be clear about what you're doing. Don't have any doubts. If you can doubt even your own breath, then there are no two ways about it: You'll doubt everything. No matter what happens, you'll be uncertain about it. So be straightforward and true in whatever you do, for everything comes down to whether or not you're true."

    "உங்கள் கவனிக்கும் ஆற்றலைக் கொண்டு மூச்சை  எப்படித் தெரிந்து கொள்வது? உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்: நான் மூச்சைத் தெரிந்து கொண்டுள்ளேனா? எனக்கு மூச்சு இருக்கிறதா? மூச்சு உண்மையிலேயே இருக்கிறது என்பது தெளிவாகவில்லையென்றால் அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்வரை ஆழ்ந்து கவனியுங்கள்.  இதில் பெரிய மர்மம் ஒன்றும் இல்லை. மூச்சு எப்போதும் உள்ளதுதான். இங்கேயே உள்ளது.  முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் வாய்மையோடு செயல்படுகின்றீர்களா இல்லையா என்பதுதான். நீங்கள் வாய்மையோடு செயல்படு கின்றீர்கள் என்றால் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.  வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் செய்வதை நேர்மையோடு செய்யுங்கள். பின் உங்கள் தியானத்தில் முன்னேற்றம் காணலாம். மெதுவாக அது வலுப்பெறும், மனம் அமைதி அடையும். செயலில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். சந்தேகம் கொள்ள வேண்டாம். உங்கள் மூச்சையே சந்தேகப்பட்டீர்களென்றால், நீங்கள் எல்லாவற்றையும் சந்தேகிப்பீர்கள். இதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமே இல்லை. என்ன நடந்தாலும் அதைச் சந்தேகிப்பீர்கள். எனவே நேர்மையாக இருந்து எதைச் செய்தாலும் வாய்மையோடு செய்யுங்கள். ஏனென்றால் எல்லாமே நீங்கள் வாய்மையோடு செயல்படுகின்றீர்களா இல்லையா என்பதைப் பொருத்தே இருக்கிறது."

§ "Once the mind stays with the breath, you don't have to repeat buddho in the mind. It's like calling your water buffalo. Once it comes, why keep calling its name?"

    "மனம் மூச்சோடு தொடர்ந்து இருக்குமென்றால் நீங்கள் 'புத்-தோ' என்று மனத்தில் நினைக்கக்கூட வேண்டியதில்லை. இது உங்கள் எருமை மாட்டை அழைப்பது போல. அது உங்களிடம் வந்த விட்டபின், அதைத் தொடர்ந்து அழைக்க வேண்டியதில்லை யல்லவா?"

§ "Make the mind and the breath one and the same. Don't let them be two."

    "மனத்தையும் மூச்சையும் ஒருமைப் படுத்திக் கொள்ளுங்கள். அவை தனித்தனியாக இருக்க விட்டுவிட வேண்டாம்."

§ "Don't be a post planted in the mud. Have you ever seen a post planted in the mud? It sways back and forth and can never stand firm. Whatever you do, be firm and single-minded about it. Like when you focus on the breath: Make the mind one with it, like a post planted firmly in solid rock."

        "சேற்றில் நட்ட கம்பத்தைப்போல இருக்காதீர்கள்.  சேற்றில் நட்ட கம்பத்தைப் பார்த்திருக்கின்றீர்களா? அது முன்னும் பின்னும் அசைந்துகொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது. நீங்கள் எதைச் செய்தாலும் உறுதியுடனும் முழுமனத்துடனும் அதில் ஈடுபடுங்கள். மூச்சின் மீது கவனம் செலுத்தும் போது இப்படித்தான் இருக்க வேண்டும். மனத்தை மூச்சுடன் ஒன்று படுத்திக் கொள்ளுங்கள், பாறையில் நடப்பட்ட கம்பத்தைப்போல."

§ "Hold onto the breath the way a red ant bites: Even if you pull its body so that it separates from the head, the head will keep on biting and won't let go."

    "செவ்வெறும்பு கடிப்பது போல மூச்சுடன் ஒன்றி இருங்கள். கடிக்கின்ற செவ்வெறும்பின் உடலை  இழுத்தால் அதன் உடல் பிரிந்தாலும், அந்தத்தலை தொடர்ந்து விடாமல் கடித்துக் கொண்டே இருக்கும்."

§ When I first heard Ajaan Fuang talk about "catching hold" of the breath, I didn't understand him. I'd sit tensing up my body to catch hold of it, but this simply made me feel tired and ill at ease. Then one day, as I was riding the bus to Wat Makut, I sat in concentration and found that if I let the breath follow its natural course, it felt a lot more comfortable, and the mind wouldn't run away from it. When I reached Wat Makut, being a typical Westerner, I took him to task, "Why do you say to catch the breath? The more you catch it, the more uncomfortable it is. You have to let it go to flow naturally."

He laughed and said, "That isn't what I meant. To 'catch it' means to stick with it, to follow it and to make sure you don't wander away from it. You don't have to squeeze or force or control it. Whatever it's like, just keep on watching it."

    முதன்முதலில் அஜான் ஃபுவாங் மூச்சைப் 'பிடித்துக் கொள்ள' வேண்டும் என்று கூறிய போது எனக்கு அது விளங்கவில்லை. உடலை விறைத்து வைத்துக் கொண்டு மூச்சை அடைத்து அதைப் 'பிடிக்க'  முயன்றேன். ஆனால் அது என்னைக் களைப்படைய வைத்து அசௌகரியப் படுத்தியதே தவிர என் வசப்படவில்லை. ஒரு நாள் நான் 'வாட் மாகுட்' (Wat Makut) விகாரைக்குப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஒருமுகப் படுத்தப் பட்ட மனத்துடன் மூச்சை அதன் இயல்பான போக்கிற்கு விட்டுவிட்டால், மிகவும் சௌகரியமாகவும், மனமும் மூச்சைவிட்டு விலகாமலும் இருப்பதைக் கவனித்தேன். விகாரைக்குச் சென்றவுடன் நான் ஒரு அசல் மேற்கத்தியனாதலால் அஜான் புவாங்கிடம் முறையிட்டேன், "நீங்கள் மூச்சைப் பிடித்திருக்கச் சொல்கின்றீர்களே? அதைப் பிடிக்க முயற்சித்தால் எனக்குத் துன்பமே உண்டானது. அதை அதன் இயல்பான போக்குக்கு விட்டு விட்டால்தான் வசதியாக இருக்கிறது."

    அவர் சிரித்துக் கொண்டே இவ்வாறு விளக்கம் அளித்தார், "நான் சொன்னதை அப்படி எடுத்துக் கொள்ளக்கூடாது. 'பிடித்துக் கொள்வது' என்றால் அதனோடு ஒட்டி இருப்பது, அதைத் தொடர்வது, அதனிடமிருந்து விலகாமல் இருப்பது. மூச்சை இறுக்கவோ, அதற்கு அழுத்தம் கொடுக்கவோ, அதைக் கட்டுப்படுத்தவோ வேண்டாம். அது எப்படி இருந்தாலும் அதைக் கவனிக்க வேண்டும்."

§ "Get so that you really know the breath, not just that you're simply aware of it."

    "மூச்சை உண்மையிலேயே தெரிந்து கொள்ளுங்கள். அறிந்திருந்தால் மட்டும் போதாது, அதைத் தெரிந்திருக்கவும் வேண்டும்."

§ "Observing the breath is the cause, the pleasure that arises is the result. Focus as much as you can on the cause. If you ignore the cause and get carried away with the result, it'll run out and you'll end up with nothing at all."

    "மூச்சைக் கவனிப்பதுதான் ‘காரணம்’, அதனால் உண்டாகும் ஆனந்தமே அதற்கான ‘விளைவு’. முடிந்த  அளவு காரணத்தின் மீதே கவனம் செலுத்துங்கள். காரணத்தை ஒதுக்கிவிட்டு முடிவை நினைத்து அதில் மூழ்கிவிட்டால், அந்த ஆனந்தம் ஓடிவிடும். பின் உங்களிடம் எதுவுமே இருக்காது."

§ "When you focus on the breath, measure things by how much pleasure you feel. If both the breath and the mind feel pleasant, you're doing okay. If either the breath or the mind feels uncomfortable, that's when you have to make adjustments."

    "மூச்சின் மீது கவனம் செலுத்தும் போது எவ்வளவு ஆனந்தம் பெறுகின்றீர்கள் என்பதை வைத்து (உங்கள் முன்னேற்றத்தை) அளவு பார்க்கலாம். மூச்சும் மனமும் இன்பகரமாகத் தோன்றினால் நீங்கள் செய்யும் பயிற்சி சரியே. இரண்டில் ஒன்று, அதாவது மூச்சோ அல்லது மனமோ அசௌகரியப்பட்டிருந்தால் நீங்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்."

§ "The main thing when you meditate is to be observant. If you feel ill at ease, change the breath until you feel better. If the body feels heavy, think of spreading the breath so that it feels light. Tell yourself that the breath can come in and out every pore of your skin."

    "தியானம் செய்யும் போது முக்கியமானது, நீங்கள் கவனத்துடன் இருப்பது தான். அசௌகரியமாக இருந்தால், சௌகரியமாக இருக்கும் வரை மூச்சை மாற்றிப் பாருங்கள். உடல் கனமாகத் தோன்றினால் மூச்சைப் பரவ விட்டுப் பாருங்கள். அதனால் உடல் இலேசாகத் தோன்றும். மூச்சு தோலின் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் வந்து போகும் என்று உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கள்."

§ "When the book says to focus on the breath sensations in the different parts of the body, it means to focus on whatever feelings are already there in the body."
    
    "பௌத்த மறைகள், உடலின் வேவ்வேறு பகுதிகளில் மூச்சின் உணர்ச்சிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்வது, ஏற்கனவே உடலில் உள்ள உணர்ச்சிகளைக் கவனிக்க வேண்டும் என்பதே பொருள்."

§ "The breath can be a resting place for the mind, or it can be what the mind actively contemplates. When the mind isn't willing to settle down and be still, it's a sign that it wants exercise. So we give it work to do. We make it scan the body and contemplate the breath sensations in the different parts to see how they're related to the in-and-out breath, to see where the energy flows smoothly and where it's blocked. But make sure that your mind doesn't wander outside of the body. Keep it circling around inside and don't let it stop until it gets tired. Once it's tired you can find a place for it to rest, and it'll stay there without your having to force it."

    "மனம் ஓய்வெடுக்கும் இடமாக மூச்சு இருக்கலாம். அல்லது ஈடுபாட்டோடு பிரதிபலிப்பதற்காவும் மூச்சை மனம் பயன்படுத்தலாம். மனம் ஓர் இடத்தில் இருந்து ஓய்வெடுக்க விரும்பவில்லையென்றால் அதற்குப் பயிற்சி தேவைப்படுகிறது என்று பொருள். எனவே அதற்கு நாம் வேலை கொடுக்க வேண்டும்.   உடலை நோட்டமிடவும், மூச்சினால் உடலில் உண்டாகும் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கவும், அவை எப்படி உள்மூச்சோடும் வெளிமூச்சோடும் தொடர்புடையன என்பதையும், எங்கு சக்திகள் சுலபமாக ஓடுகின்றன, எங்கு தடைப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். அதேசமயம் உடலுக்கு வெளியே கவனம் போய்விடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். உடலைச் சுற்றிச் சுற்றிக் கவனத்தைக் களைப்படையும்வரை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அது களைப்படைந்தவுடன் அது ஒதுங்க ஓர் இடம் கொடுங்கள். அப்போது உங்களிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லாமல் அங்கேயே தங்கிவிடும்.

§ "Make the breath viscous and then think of it exploding to fill the whole body."

    "மூச்சை இளகும் தன்மையுடையதாக்கி, அது வெடித்துப் பரவி உடல் முழுவதும் நிரப்புவதாக நினைத்துக் கொள்ளுங்கள்."

§ Ajaan Fuang once told a student who liked to keep in shape with yoga and aerobic exercises every day: "Use the breath to keep in shape instead. Sit in meditation and spread the breath throughout the body, to every part. The mind will get trained and the body will be strong with no need to tie it into knots or make it jump around."

    தினந்தோறும், யோகாசனமும் மற்ற மூச்சிறைக்கக் கூடிய பயிற்சிகளையும் செய்து உடலைக் கட்டாக வைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டிருந்த ஒரு மாணவரிடம் அஜான் ஃபுவாங் கூறினார்: "மூச்சைப் பயன் படுத்துங்கள். தியானத்தில் உட்கார்ந்து மூச்சை உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள். ஒவ்வொரு பகுதிக்கும் பரவச் செய்யுங்கள். மனமும் பயிற்சி பெறும், உடலும் பலன் பெறும். அதனை முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கவும் (யோகாசன முறையில்) தேவையில்லை, அதை இப்படியும் அப்படியும் குதிக்க வைக்கவும் தேவையில்லை"

§ A nun who practiced meditation with Ajaan Fuang had had poor health since she was a child, and was always coming down with one disease or another. Ajaan Fuang told her: "Every morning when you wake up, sit and meditate to give yourself a physical examination, to see where the aches and pains are, and then use your breathing to treat them. The heavy pains will grow lighter; the light ones will disappear. But don't make a big deal out of whether or not they disappear. Keep on examining the body and dealing with the breath no matter what happens, because the important point is that you're training your mindfulness to stay with the body, to the point where it's strong enough to go above and beyond pain."

    அஜான் ஃபுவாங்குடன் பயிற்சி செய்த ஒரு பெண் துறவிக்குச் சிறு வயதிலிருந்தே உடல் நலம் குன்றி இருந்தது. அவர் அடிக்கடி ஏதாவது ஒரு நோயினால் பீடிக்கப் பட்டு வந்தார்.  அஜான் ஃபுவாங் அவரிடம்,  "ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்  தியானத்தில் அமருங்கள். உங்கள் உடலை நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள். எங்கெல்லாம் உடல்  வலி இருக்கிறதோ அவற்றைத் தெரிந்துகொண்டு மூச்சைப் பயன்படுத்தி அந்த வலிக்குச் சிகிச்சை  அளிக்கலாம். மிகுந்த வலி உள்ள இடங்களில் வலி குறைவதையும், இலேசான வலி உள்ள இடங்களில் வலி மறைவதையும் கவனிக்கலாம். ஆனால் வலி மறைந்தாலும் மறையாவிட்டாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். உடலைத் தொடர்ந்து விசாரனை செய்வதிலும் மூச்சைக் கவனிப்பதிலும் தொடர்ந்து உன்னிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் அறிநிலையை உடலோடு இருக்கப் பயிற்சி செய்து வருகின்றோம். பின் ஒரு காலக் கட்டத்தில் அந்த அறிநிலை மிகவும் வலிவுற்று உடல் வலியைக் கடந்து அப்பால் சென்று விடும்."

§ "Adjust the breath until it's perfectly even. If you see a white light, bring it into the body and let it explode out to every pore. The mind will be still; the body weightless. You'll feel white and bright all over, and your heart will be at ease."

    "சரிசமமாகும் வரை மூச்சில் சிறு சிறு மாற்றங்களைச் செய்து கொண்டே இருங்கள். வெள்ளை வெளிச்சத்தைக் கண்டீர்களென்றால் (தியானம் செய்பவர்கள் சிலர்  இந்த அனுபவம் கொள்வார்கள்) அதனை உடலினுள் கொண்டு வந்து வெடிக்கச் செய்து உங்கள் தோலின் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் சிதறி வெளியேறச் செய்யுங்கள்.  அப்போது மனம் அமைதியடையும்; உடல் கனமில்லாமல் இருக்கும். நீங்கள் வெள்ளையாகவும், பிரகாசமாகவும் இருப்பதாகத் தோன்றும். உள்ளம் சாந்தமாக இருக்கும்."

§ "When the breath fills the body, it's like water filling a jar to the brim. Even though you may try to pour more into it, that's all it can take. It's just right, in and of itself."

    "மூச்சு உடல் முழுவதையும் நிரப்புவது என்பது, ஒரு குடத்தில் விளிம்புவரை நீரை நிரப்புவதற்குச் சமமாகும். மேலும் தண்ணீர் ஊற்ற முயற்சித்தாலும் குடம் அவ்வளவு தான் கொள்ளும். அது சரியான நிலையில் இருக்கிறது. வேறு எதுவும் தேவையில்லை."

§ "Meditation needs rapture — a feeling of fullness in body and mind — as its lubricant. Otherwise it gets too dry."

    "தியானத்திற்குப் பசையாய் இருக்கக் குதுகலிப்புத் தேவை - இது உடலிலும் மனத்திலும் நிறைந்திருக்கும் ஒரு முழுமையான உணர்ச்சி. இக்குதுகலிப்பு இல்லாவிட்டால் தியானம் மிகவும் வரட்சியாகத் தோன்றும்."

§ "When you meditate you have to let go in stages. Like when they go into outer space: The space capsule has to let go of the booster rockets before it can reach the moon."

    "தியானம் செய்யும் போது படிப்படியாக விட்டுவிட வேண்டும். விண்வெளிக்குச் செல்லும் விண்வெளிக் கலத்தைப்(space capsule) போல. அந்தக் கலம் நிலவுக்குப் போகுமுன் அதை பூமிக்கு வெளியே எடுத்துச் சென்ற ஆகாசவாணங்களைப் (booster rockets) படிபடியாகக் கழற்றி விடுவதைப்போல."

§ "When the mind is really in place you can let go of the breath, and it won't wander off anywhere. It's like pouring cement: If the cement hasn't set, you can't remove the plywood forms, but once it's set, it'll stay where it is without any need for the forms at all."

    "மனம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் மூச்சைப் பற்றிய கவனத்தை விட்டு விடலாம். மனம் எங்கேயும் செல்லாது. இது சிமெட்டிக் கலவையை (சிமென்ட்டும், சல்லியும், மணலும் கலந்த கான்கிரீட்) மேல் தலத்தில் ஊற்றுவதைப் போல. கலவை இறுகிக் கடினமாகும் வரை, ஊற்றவேண்டிய இடத்தைச் சுற்றிலும் அடிப்பகுதியிலும் இருக்கும் பலகைகளை எடுத்துவிட முடியாது. ஆனால் கலவை இறுகிக் கெட்டிப் பட்டபின் அந்தப் பலகைகளை எடுத்து விடலாம். அதன் பின்பு சிமெட்டிக் கலவை இருக்க வேண்டிய இடத்திலேயே உறுதியாக இருக்கும்."

§ "Spread the breath until the body and mind are so light that there's no sense of body at all — just awareness itself. The mind will be clear like crystal clean water. You can look down into the water and see your own face. You'll be able to see what's going on in your mind."

    "மூச்சைப் பரப்ப வேண்டும். உடலும் மனமும் மிகவும் இலேசாகி உடல் இருப்பதே உணராமல் - அறி நிலை மட்டுமே இருக்கும் வரை மூச்சைப் பரப்புங்கள். மனம் தெள்ளத் தெளிந்த நீரைப்போல இருக்கும்.  நீரில் முகம் பார்த்தால் கண்ணாடி போல் முகத்தைப் பிரதிபலிக்கும். மனத்தில் நடப்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்."

§ "When the breath is full and still, you let go of it. Then you think of each of the other elements in the body — fire, water, and earth — one by one. When they're all clear you put them together, i.e., balance them so that the body isn't too hot, too cold, too heavy too light: just right in every way. Now you let go of that and stay with the space element — a feeling of emptiness. When you're skilled at staying with space, look at what's saying "space". This is where you turn to look at awareness itself, the element of consciousness. Once the mind has become one like this, you can then let go of the oneness, and see what's left.
"After you can do this, you practice going in and out of the various stages until you're skilled at it, and you can notice the various modes of the mind as you do it. That's where discernment will begin to appear."

    "மூச்சு முழுமையாகவும், அசைவற்றும் இருக்கும் போது அதை விட்டு விடலாம். பின் உடலின் பூதங்களை - நீர், நெருப்பு, மண் - ஒவ்வொன்றாக நினைத்துப் பாருங்கள். அவை தெளிவான பின் அவற்றை ஒன்று கூட்டுங்கள். அவற்றைச் சமநிலையில் வைத்திருங்கள். அதாவது உடல் மிகவும் சூடாகவும் இல்லாமல், குளிர்ச்சியாகவும் இல்லாமல், கனமாகவோ இலேசாகவோ இல்லாமல் சமஅளவாக, எல்லாவிதத்திலும் சமமாக இருக்கட்டும். பின் இந்த உணர்ச்சியையும் விட்டு விட்டு ஆகாச பூதத்தோடு இருக்க வேண்டும் - இது ஒரு வெறுமை உணர்ச்சியை உணர்தல். இந்த வெறுமையோடு இருக்கப் பழகிய பின் இந்த 'வெறுமை' என்று சொல்வது யார் என்று எண்ணிப் பாருங்கள். இப்போது தான் நீங்கள் அறிநிலையை நோக்கித் திரும்புகிறீர்கள். இது போல மனம் ஒன்றுபட்ட பின் இந்த ஒற்றுமையையும் விட்டு விட்டுப் பின் மீதி என்ன இருக்கின்றது என்று பாருங்கள்.

    இதை செய்யத் தெரிந்த பின் இதனைத் தொடர்ந்து திறமையாகச் செய்யப் பயிற்சி செய்ய வேண்டும். இதைச் செய்யும்போது மனத்தின் பல நிலைகளையும் கவனிக்கலாம். அப்போது தான் விவேகம் தோன்றுவதைப் பார்க்கலாம்."

பஞ்சபூதம்  The five elements, viz., pirutivi, appu, tēyu, vāyu, ākācam; பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐம்பூதங்கள்.
பிருதிவி pirutivi  - 1. Earth; பூமி. (பிங்.) 2. The element Earth, one of pañca-pūtam, q.v.; பஞ்சபூதங்களில் ஒன்று
அப்பு -  Water, as one of the five elements; நீர்
தேயு -  Fire; நெருப்பு, அக்கினி.
வாயு vāyu  1. Wind, air; காற்று. (பிங்.) 2. An element, one of pañca- pūtam, q.v.; பஞ்சபூதத்துளொன்று
ஆகாசம் ākācam  1. Ether pervading all space, one of five elements; ஐம் பூதங்களில் ஒன்று. 2. Open space; வெளி
dhātu:     Element; property, impersonal condition. The four physical elements or properties are earth (solidity), water (liquidity), wind (motion), and fire (heat). The six elements include the above four plus space and consciousness.

§ "In contemplating yourself, the six elements have to come first. You take them apart and put them back together again, as when you learn your ABC's and how to make them into words. After a while you can make any word you want."

    "உங்களைப் பிரதிபலிக்கும் போது மேற்கூறிய ஆறு பூதங்கள் முதலில் வர வேண்டும். அவற்றைப் பிரித்தெடுத்துப் பின் சேர்த்துப் பார்க்க வேண்டும். இது எழுத்துக்களை முதலில் கற்றபின் வார்த்தைகளை உருவாக்கக் கற்பதைப் போன்றது. எழுத்துக்களைக் கற்றபின் நாம் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உருவாக்கலாம்."

§ "Take your time to make sure that this foundation is solid. Once it's solid, then no matter how many storeys you want to build on top of it, they'll go up quickly and stay in place."

    "அடித்தலம் உறுதியாக அமைக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அது உறுதியான பின் அதன் மீது எத்தனை மாடிகள் கட்ட வேண்டும் என்றாலும், மள மளவென்று அவற்றைக் கட்டிவிடலாம். அவை உறுதியாகவும், நிலையாகவும் இருக்கும்."

§ "If you were to say it's easy, well yes, it's easy. If you were to say it's hard, it's hard. It all depends on you."

    "இவையெல்லாம் எளிதான பயிற்சிகள் என்று நீங்கள் சொன்னால், ஆம் இவை எளிதானது தான்.   கடினமானது என்று சொன்னாலும் அவை கடினமானவையே. எல்லாம் உங்கள் எண்ணங்களைப் பொருத்தே அமைகிறது."

§ "The basic steps of breath meditation that Ajaan Lee describes in his Method 2 are just the main outline of the practice. As for the details, you have to use your own ingenuity to work variations on his outline so that it fits your experiences. That's when you'll get results."

    "அஜான் லீ கற்பித்த இரண்டாம் வழி தியான முறையின் அடிப்படைப் படிகள் (பின்னிணைப்பைப்  பார்க்கவும்) ஒரு மேலோட்டமான பயிற்சி முறைதான். அதற்கான விரிவுரை உங்கள் கையில் தான் உள்ளது. திறமையான முறையில் உங்கள் அனுபவத்திற்கு ஏற்ப அதில் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதன் நல்ல விளைவுகள் உங்களுக்குக் கிடைக்கும்."

§ "If you're having any problems in your concentration, check what you're doing against the seven steps in Method 2. I've found that if anyone comes to me with problems in their concentration, all I have to do is apply one of the seven steps. They're basic to all meditation."

    "சமாதி நிலையில் உங்களுக்குப் பிரச்சனை  இருக்குமானால் அஜான் லீ தந்த இரண்டாம் வழியின் ஏழு படிகளில் எதோ தவறு செய்கின்றீர்கள் என்று அர்த்தம். என்னிடம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில் பிரச்சனையோடு வருபவர்கள் அனைவருக்கும் அந்த ஏழு படிகளில் ஒன்றைச் சரி பார்ப்பேன். அவை எல்லாத் தியானத்திற்கும் அடித்தலமானவை."

§ "The texts say that breath meditation is right for everyone, but that's not really the case. Only if you're meticulous can you get results from focusing on the breath."

    "பௌத்த மறை நூல்கள் மூச்சுத் தியானம் எல்லோருக்கும் உகந்தது என்று கூறுகின்றன. ஆனால் அது உண்மையல்ல. தொடர்ந்து விடாமுயற்சியோடு மூச்சின் மீது கவனம் செலுத்துவோருக்கு மட்டுமே அது உகந்தது."

§ "A famous meditation teacher once criticized Ajaan Lee: 'Why do you teach people to look at the breath? What is there to look at? There's just in and out. How are they going to gain discernment from looking at just that?' He answered, 'If that's all they see, that's all they'll get.' This is a question that comes from not knowing how to look."

    "புகழ் பெற்ற தியான ஆசிரியர் ஒருவர் அஜான் லீ யைக் (அஜான் ஃபுவாங்கின் ஆசிரியர்) குறைகூறினார்: 'நீங்கள் ஏன் மூச்சைக் கவனிக்க வேண்டும் என்று மக்களிடம் கூறுகின்றீர்கள்? அதில் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? உள்ளே, வெளியே அவ்வளவு தானே? அதை மட்டும் தெரிந்து கொண்டு விட்டால் எப்படி விவேகம் உண்டாகும்?

அவர் பதில், "அதை மட்டுமே கவனித்தீர்கள் என்றால் வேறு எதையும் நீங்கள் தெரிந்து கொள்ள மாட்டீர்கள். இந்தக் கேள்வி எப்படிக் கவனிப்பது என்பதைத் தெரிந்து கொள்ளாததால்தான் எழுகிறது."

§ "People of discernment can take anything at all and put it to good use."
    "விவேகம் உள்ளவர்கள் எதை எடுத்தாலும் அதைப் பயனுள்ள வகையில் உபயோகப் படுத்துவார்கள்."

*    *    *    *    *    *