சார்பில் தோற்றம் - பன்னியவாரோ

சார்பில் தோற்றம் முகப்பு Dependent Origination Home

சார்பில் தோற்றம்

போற்றுதற்குரிய பன்னியவாரோ

Dependent Origination

Venerable Pannyavaro

English Source

சார்பு என்றால் துணை. ஒன்றைச் சார்ந்திருப்பது. அதாவது அதன் துணையோடு இருப்பது என்று பொருள்.

தோற்றம் என்றால் பிறப்பு, துவக்கம் என்று பொருள்.

சார்பில் தோற்றத்தின் செயற்பாட்டினை நாம் பகுத்தாய்ந்து பார்க்கும் போது, அது மிகவும் ஆழமான, முக்கியமான போதனை என்பது நமக்குப் புலப்படும். இதற்கான அடையாளத்தைப் புத்தரின் வார்த்தைகளிலிருந்தே அறியலாம். அடிக்கடி புத்தர் தமது ஞான நிலையை இரண்டு வழிகளில் தெரியப் படுத்துகிறார். பௌத்தத்தின் நான்கு மேன்மையான உண்மைகளை அறிந்ததாகக் கூறுவது ஒரு வழி. மற்றது சார்பில் தோற்றத்தின் தன்மையை அறிந்ததாகக் கூறுவது. புத்தர் மீண்டும் மீண்டும், நீங்கள் ஞானம் பெற வேண்டுமானால் நான்கு மேன்மையான உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அல்லது சார்பில் தோற்றக் கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

எனவே புத்தரின் வாக்குப்படி, நான்கு மேன்மையான உண்மைகளுக்கும், சார்பில் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது புலனாகிறது. இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? இரண்டுக்கும் பொதுவாக இருப்பது ஏதுத்தன்மை தான் - அதாவது காரண காரியத் தன்மை. வினையும் வினைக்குரிய பயனும். நான்கு மேன்மையான உண்மைகளை இரண்டு பகுப்புகளாகப் பிரிக்கலாம். முதல் இரண்டு உண்மைகளான துக்கம், துக்க உற்பத்தி ஒரு பகுப்பு. அடுத்த இரண்டு வாய்மைகளான துக்க முடிவும், அதற்கு எடுத்துச் செல்லும் மார்க்கமும் மறு பகுப்பு. இந்த இரண்டு பகுப்புகளிலும் காரண காரியக் கோட்பாடே அவற்றிடம் உள்ள உறவை நிர்வகிக்கிறது. அதாவது துக்கம் என்பது பயன். அதை உண்டாக்கிய வினைதான் துக்கக் காரணம். அதேபோல, துக்கமுடிவு தான் பயன். அதற்குக் காரணமாக இருப்பது அட்டாங்க மார்க்கம். சார்பில் தோற்றத்திலும் காரண காரியத் தொடர்பே முக்கிய இடம் வகிக்கிறது. சார்பில் தோற்றத்தில், இந்த காரண காரியத் தொடர்பு மிகத் தெளிவாக விளக்கப் படுகிறது.

சார்பில் தோற்றத்தை விளக்கச் சில உதாரணங்களைப் பார்ப்போம். புத்தர் கூறிய ஒரு உதாரணத்தை முதலில் விவரிப்போம். புத்தர், விளக்கில் நெருப்புச் சுடர் இருப்பது எண்ணையையும், திரியையும் பொருத்ததே என்றார். எண்ணையும் திரியும் இருக்கும்போது விளக்கு ஒளி விடும். இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும், நெருப்புச் சுடர் அடங்கி விடும். அடுத்து விதை - முளை (seed-sprout) பற்றிய உவமானம். விதை, நீரின், காற்றின், சூரிய வெளிச்சத்தின் துணையோடு முளை விடுகிறது. இது போலச் சார்பில் தோற்றத்தை விளக்கும் எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். ஏனென்றால் எல்லாச் செயல்களும் காரணங்களினாலேயே தோன்றுகின்றன. எளிமையாகச் சொல்வதெனில், இதுவே சார்பில் தோற்றம் என்ற கோட்பாடு.

நமக்கு வேண்டியது சார்பில் தோற்றக் கோட்பாடு, துக்கம், மறுபிறப்பு என்ற பிரச்சனைகளோடு எப்படி ஈடுபடுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது தான். நமது உள்ள நிலையைச் சார்பில் தோற்றம் எவ்வாறு விளக்குகிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். ஆகவே சார்பில் தோற்றம் என்ற போதனை, துக்கம் என்ற பிரச்சனையைப் பற்றியும், அதிலிருந்து எவ்வாறு விடுவித்துக் கொள்வது என்பதைப் பற்றியதும் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதைப் பற்றி யெல்லாம் தெரிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் இல்லை. சார்பில் தோற்றம் என்ற கோட்பாட்டில், பன்னிரண்டு நிதானங்கள் (நிதானம் - First cause, origin; ஆதிகாரணம்) உள்ளன. அவை: 1. பேதமை, 2.செய்கை, 3. உணர்வு, 4. அருவுரு, 5. வாயில், 6.ஊறு, 7. நுகர்வு, 8. வேட்கை, 9. பற்று, 10.பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன் (மூப்பு, பிணி, சாக்காடு). (மணிமேகலை 30-45,46,47)

இரண்டு வழிகளில் இந்தப் பன்னிரண்டு நிதானங்களை நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு வழி ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பகுப்புகளாகஅவற்றைப் பிரித்து, புரிந்து கொள்வது: கடந்த கால வாழ்க்கை, நிகழ் கால வாழ்க்கை, வருங்கால வாழ்க்கை.

கடந்த வாழ்வில் நமக்குப் பேதமை (அறியாமை) இருந்தது. அதன் காரணமாக நாம் திறமையான, மற்றும் திறமையற்ற செய்கைகளை உடலாலும், பேச்சாலும், மனத்தாலும் செய்தோம். இந்த வாழ்க்கை உருவாக அவை காரணமாக இருந்தன. எனவே பேதமையும், செய்கையும் கடந்த காலத்தைச் சேரும்.

கடந்த காலக் கன்மப் பயன் காரணமாக நிகழ்கால வாழ்க்கையில் பிறப்பெடுத்தோம். எனவே கருவில் தோன்றியது முதல் மரணம் எய்தும்வரை உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம் ஆகிய அனைத்தும் நிகழ்கின்றன. எனவே இவை எல்லாம் நிகழ் காலம் சம்பந்தப் பட்டவை. சுருக்கமாக சொல்வதென்றால் இந்த எட்டு நிதானங்களும், நமது வாழ்க்கைப் பரிணாமத்தைக் (evolution) குறிக்கின்றன.

நிகழ் காலத்தில் நடைபெறும் பவம் (ஆகுதல் என்ற செயற்றொடர், process of becoming) எதிர்காலத்தில் மறுபிறப்பை உண்டாக்குகிறது. எனவே பிறப்பும், மரணமும் அடுத்த பிறவியில் நடைபெறுமாதலால் தோற்றமும், வினைப்பயனும் (மூப்பு, பிணி, சாக்காடு) எதிர்காலத்தைச் சேரும்.

இதிலிருந்து பன்னிரண்டு நிதானங்களும் எவ்வாறு மூன்று காலக் கட்டப்படி பிரித்து விளக்கப் படுகின்றன என்பதைப் பார்க்க முடிகிறது. மேலும் பேதமையும் செய்கையும் மனமும், உடலும் கொண்ட இந்த வாழ்வை உருவாக்கிப் பின், இந்த வாழ்க்கையில் நடக்கும் செய்கையினால் எதிர்காலத்தில் மறுபிறப்பு எடுப்பதையும் விளக்குகிறது. இது பன்னிரண்டு நிதானங்களைப் பற்றிய ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விளக்கமாகும்.

பன்னிரண்டு நிதானங்கள் அடங்கிய சார்பில் தோற்றக் கோட்பாட்டினைப் பிறிதொரு வழியிலும் புரிந்து கொள்ளலாம். இதுவும் பௌத்தப் பெரியார்களின் ஆதரவு பெற்றது தான். இது ஒரு வட்ட வடிவ வியாக்கியானம். இதில் பன்னிரண்டு நிதானங்களும் மூன்று பிரிவுகளாகப் பகுக்கப் படுகின்றன. அவை

1. மாசுகள் (கிலேச), 2. கன்மச் செய்கைகள் (கன்ம), மற்றும் 3. வினைப்பயன் (துக்க). இந்த உபாயப்படி பேதமை, வேட்கை, பற்று ஆகியவை மாசுகள் வகுப்பையும், செய்கை கன்மச் செய்கை, பவம் ஆகியவை கன்ம வகுப்பையும், மீதமுள்ள ஏழு நிதானங்களான உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, மறுபிறப்புச் செயற்றொடர், தோற்றம், வினைப்பயன் (மூப்பு, பிணி, சாக்காடு) ஆகியவை துக்க வகுப்பையும் சேரும். இந்த விளக்கத்திலிருந்து நான்கு மேன்மையான உண்மைகள் பற்றிய போதனை, குறிப்பாகத் துக்க காரணம் பற்றிய போதனைக்கும், கன்ம, மறுபிறப்பு பற்றிய போதனைக்கும் உள்ள உடன்பாட்டினைக் காணலாம். இந்த இரண்டு போதனைகளும் மறுபிறப்புச் செயற்றொடரையும், துக்கக் காரணத்தையும் மேலும் முழுமையாக விளக்குகின்றன.

நான்கு மேன்மையான உண்மைகள் பற்றிய போதனையில், துக்க காரணத்துக்குப் பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமையே காரணம் என்பதை அறிந்தோம். சார்பில் தோற்றத்தில், மாசுகள் பகுப்பில் உள்ள நிதானங்களாவன: அறியாமை, வேட்கை மற்றும் பற்று. எனவே, இரண்டிலும் அறியாமை இடம் பெறுகிறது. அறியாமையின் காரணமாகவே நாம் புலன் இன்பங்கள் மீது வேட்கை கொள்ளவும் (thirst for sense-pleasures, kāma-taṇhā), தோன்றவும் (thirst for existence and becoming, bhava-taṇhā), மறையவும் (thirst for non-existence, self-annihilation, vibhava-taṇhā) விரும்புகிறோம். அறியாமையின் காரணமாகவே நாம் புலன் இன்பங்கள் மீதும், இன்பமான அனுபவங்கள் மீதும், கருத்துகள் மீதும், மேலும் முக்கியமாகச் சுதந்திரமான, நிலையான ஆத்மா என்ற ஒன்று இருப்பதாக உள்ள கருத்தின் மீதும் பற்றுக் கொள்கிறோம். வேட்கையும், பற்றும் ஆகிய இந்த அறியாமையே செய்கைக்குக் காரணமாகிறது.

செய்கை என்ற பகுப்பில் சேர்க்கப் பட்டுள்ள இரண்டு நிதானங்கள் செய்கை மற்றும் கன்ம பவம் ஆகியவை. செய்கை அல்லது மனத்தின் கட்டுமானங்கள் நமது தொடர் உணர்வு ஓட்டங்களில் நாம் உண்டாக்கிய பதிவுகளையும், (impressions in our stream of concious moments) பழக்க வழக்கங்களையும் குறிக்கின்றது. இந்தப் பதிவுகள் அல்லது பழக்கங்கள் திரும்பத் திரும்பச் செய்வதனால் தோன்றுகின்றது. புவியியலிலிருந்து (geography) உதாரணம் ஒன்றை நாம் தரலாம். ஆறுகள் உருவாகப் படிப்படியான நீர் அரிப்புச் செயற்றொடரே காரணம். மலைப்பகுதிகளில் மழைபெய்யும் போது மழைநீர் ஒரு ஓடையாகிறது. அந்த ஓடை காலப் போக்கில் தனக்கென்று ஒரு கால்வாய் போன்ற ஒரு பாதையை உண்டாக்கிக் கொள்கிறது. பின் நீர் அரிப்பின் காரணமாக அது அகன்று, ஒரு சிற்றாறாக மாறுகிறது. அது பின்னர் மேலும் மேலும் பாயும் நீரின் காரணமாக ஆழமாகி விரிவடைந்து ஆறாக மாறுகிறது. அந்த ஆறு குறிபிட்ட பாதையையும், வகுக்கப்பட்ட கரையையும் கொண்டிருக்கும். அது போன்றதே நமது செய்கைகளும். அவற்றையே திரும்பத் திரும்பச் செய்யும் போது அவை ஒரு பழக்க வழக்கமாகின்றது. அந்த பழக்கங்கள் நமது தனித்தன்மையைக் குறிக்கின்றன (personality) . பின் இந்தப் பழக்கங்களையே நாம் ஒரு காலக் கட்டத்திலிருந்து அடுத்ததிற்கும், ஒரு பிறவியிலிருந்து அடுத்த பிறவிக்கும் மன ஆக்கமாகவும் (mental formation) அல்லது பழக்க வழக்கச் சக்தியாகவும் (habit energy) எடுத்துச் செல்கிறோம். நமது உதாரணத்தோடு ஒப்பிடும் பொது மன ஆக்கமாகவும், ஆறு ஓடும் கால்வையைப் போலவும், இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் செய்கைகளே முன்னர் செய்த செய்கைகளின் காரணமாக உண்டான கால்வாய் வழியே ஓடும் நீராகவும் ஒப்பிட்டுச் சொல்லலாம். இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் செய்கைகளே பவம் என்றும், ஆகுதல் என்றும் கூறுகிறோம். எனவே செய்கையும், பவமும் பல எண்ணற்ற பிறவிகளில் நாம் திரும்பத் திரும்பச் செய்து பழக்கப்பட்ட பழக்க வழக்கங்களும், இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் புதிய செய்கைகளையும் குறிக்கும். இவை இரண்டும் சேரும்போது அதன் விளைவாக மறுபிறப்பும், துக்கமும் உண்டாகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், கிலேசங்கள் உள்ளன. இவற்றை மனத்தின் மாசுகள் எனலாம். அவை பேதமை, வேட்கை மற்றும் பற்று. இந்த மன மாசுகளின் காரணமாகச் செய்கைகளில் ஈடுபடுகின்றோம். முற்பிறவியில் (அல்லது முன்காலத்தில்) செய்த இச்செய்கைகளின் காரணமாகப் பழக்க வழக்கச் சக்தி உண்டானது. மேலும் இப்பிறவியில் (அல்லது இக்காலத்தில்) செய்யும் செய்கைகளும் பெரும்பாலும் அதே பழக்க வழக்கத்திற்குக் கட்டுப்பட்டு செய்யப் படுகின்றன. இந்த மன மாசுகளும், செய்கைகளும் மறுபிறப்பை விளைவிக்கின்றன. அதாவது உணர்வு, அருவுரு, வாயில், ஊறு (ஆறு புலன்களுக்கும் அவற்றை சம்பந்தப்பட்ட புறப் பொருட்களுக்கும் உள்ள தொடர்பு), ஊற்றின் காரணமாகத் தோன்றும் நுகர்ச்சி, பிறப்பு, மூப்பு, மரணம் ஆகியவற்றை விளைவிக்கின்றன. இந்த விளக்கத்தில் கிலேசங்கள் மற்றும் செய்கை என்ற பகுப்புகளில் சேர்க்கப் பட்ட சார்பில் தோற்றத்தின் ஐந்து நிதானங்களூம் - பேதமை, வேட்கை, பற்று, கன்மச்செயல்கள் மற்றும் பவம் – மறுபிறப்புக்கும், துக்கத்திற்கும் காரணமாகின்றன. உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, பிறப்பு, மூப்பு மரணம் ஆகியவை அந்த மாசுகளுக்கும், செய்கைகளுக்குமான விளைவுகள். கிலேசங்களும், செய்கையும் துக்கக் காரணத்தையும் நாம் பிறந்த குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் விளக்குகின்றன.

மாசுகள் அனைத்து ஜீவன்களுக்கும் பொதுவாக உள்ளவை என்றாலும் செய்கைகள் ஒவ்வொருவரிடத்திலும் மாறுபடுகிறது. மாசுகள், நாம் அனைவரும் சம்சார சூழலில் சிக்கி இருப்பதை விளக்குகின்றது. ஆனால் மாறுபட்ட செய்கையின் காரணமாகவே சிலர் மனிதராகவும், சிலர் தேவராகவும் சிலர் மிருகமாகவும் பிறக்கின்றனர். இவ்வாறு பன்னிரண்டு நிதானங்களும், சம்சார சூழலையும் அதன் காரண காரியங்களையும் விளக்குகின்றன.

இந்த சம்சார சூழலை விளக்கும் முயற்சி, நமது சூழ்நிலையை மாற்ற முற்படும் முயற்சிக்கு உந்துதலாக இல்லாவிட்டாலும், சம்சார சூழலிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஊக்கமளிக்காவிட்டாலும் இதனால் பயனேதும் இல்லாமல் போய்விடும். இவ்வாறு சம்சார சூழலை நோக்குவது தான் நமது வீடுபேற்றின் துவக்கமாகும். எப்படி? கிலேசங்களும், செய்கைகளும் இருக்கும் வரை மறுபிறப்பும் துக்கமும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. இதனைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் போது - அதாவது பேதமையும், வேட்கையும், பற்றும், செய்கையும் நம்மை மறுபிறப்பிற்கும், துக்கத்துக்கும் எடுத்துச் செல்வதைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் போது - நாம் இந்தக் கொடிய சூழலிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இதற்கு ஒரு உதாரணம் தரலாம். நீங்கள் ஒரு அறிமுகப் பட்ட நண்பரின் வீட்டைத் தேடுகின்றீர்கள். அந்த வீட்டுக்கு முன்பு சென்றதில்லை என்பதால் வீட்டைத் தேட வேண்டியிருக்கிறது. அரைமணி நேரமாக அலைந்து கொண்டிருந்தும் வீட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் திடீரென்று ஒரு கட்டிடத்தை அடையாளம் காண்கின்றீர்கள். அதைச் சற்றுமுன்பு தான் பார்த்ததாக நினைவு வருகிறது. அதே சமயத்தில் உங்களுக்கு, 'அட நாம் சுற்றிச் சுற்றி இதே இடத்திற்குத்தான் வருவதாகத் தெரிகிறது,' என்ற எண்ணம் தோன்றுகிறது. பின்பு தான் வண்டியை நிறுத்தி ஒரு வழிகாட்டி நூலைப் (road guide) பார்க்க அல்லது சாலை ஓரத்தில் நிற்கும் ஒருவரை வழி கேட்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் நாம் மீண்டும் மீண்டும் அதே இடங்களைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டு இருப்போம். சேர வேண்டிய இடதிற்குப் போய்ச் சேர மாட்டோம்.

அதனாலேயே புத்தர் சார்பில் தோற்றத்தைக் கண்டவர் தன்மத்தைக் காண்பார் என்றும், தன்மத்தை கண்டவர், புத்தரைக் காண்பார் என்றும் கூறினார். அதனால் தான் சார்பில் தோற்றத்தைப் புரிந்து கொள்வது விடுதலைக்கு அவசியமாகிறது என்றார். சார்பில் தோற்றத்தின் வழிமுறையை நாம் பார்த்தபின் அந்தக் கொடிய சம்சாரச் சூழலிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியேற நாம் முற்படுவோம். இதனை எப்படிச் செய்வது? மனத்தின் மாசுகளை - பேதமை, வேட்கை மற்றும் பற்றை – நீக்க வேண்டும். இந்த மாசுகளை ஒழித்தபின் தவறான செய்கையைப் புரிய மாட்டோம். அதனால் பழக்க வழக்கங்கள் உண்டாகாது. இந்தச் செய்கைகள் நின்றபின் மறுபிறப்பும் துக்கமும் இல்லாமல் போய்விடும்.

சார்பில் தோற்றதிற்கு, மற்றொரு முக்கியமான பொருளும் உள்ளது. அது மத்திய வழியை வெளியாக்கும் ஒரு கோட்பாடும் கூட. முன்பு ஒரு முறை மத்தியவழி என்பது புலன் இன்பங்களில் மூழ்கி இருக்கவும் கூடாது, அதே சமயம் உடலைக் கடுமையாக வருத்தவும் கூடாது என்பது தான் என்று கூறினோம். இவை இரண்டும் மத்தியத்திலிருந்து தூரத்தில் உள்ள இரு எல்லைகள். இந்த விளக்கப்படி மத்திய வழி என்பது நடுத்தர நடத்தை என்ற பொருள் கொண்டுள்ளது. ஆனால் சார்பில் தோற்றத்தைப் பொருத்த வரையில் மத்திய வழி என்பதற்கு மற்றொரு ஆழமான பொருளும் உள்ளது. அதன்படி மத்திய வழி என்பது இரண்டு கடும் எல்லைகளான நித்திய வாதம் (eternalism) மற்றும் பின்னின்மை வாதம் (பின் + இன்மை, மரணத்தின் பின் ஒழிவு என்ற வாதம் nihilism) ஆகியவற்றைத் தவிர்ப்பதாகும். எப்படி? விளக்கில் உள்ள சுடர், எண்ணையும் திரியும் இருப்பதை நம்பியே இருக்கிறது. இவை இரண்டில் ஒன்று இல்லையென்றாலும், தீச்சுடர் அணைந்து விடும். ஆகவே தீச்சுடர் நிலையானதும் இல்லை, தனித்து (எதையும் சார்ந்திராமல்) இருப்பதும் இல்லை. அதுபோல நமது தனித் தன்மையும் (personality) பல காரணங்களை - கிலேசங்களையும், செய்கைகளையும் - நம்பி உள்ளது. அதுவும் நிலையானதும் இல்லை, தனித்து இருப்பதும் இல்லை. காரணங்களால் தோன்றியது நமது தனித்தன்மை என்பதை ஏற்றுக் கொள்வதால் நாம் நித்திய வாதத்தைத் - அதாவது நம்மிடம் எதையும் சார்ந்து இல்லாத ஒரு ஆத்துமா இருப்பதாக நினைப்பதை - தவிர்க்கிறோம். அதே போல், இந்தத் தனித்தன்மை தற்செயலாகவோ அல்லது எதேச்சையாகவோ உருவாகவில்லை என்பதையும், அது காரணங்களால் உருவாக்கப் பட்டது என்பதையும் அறியும் போது நாம் பின்னின்மை வாதத்தை நிராகரிக்கின்றோம் - அதாவது வினைக்குப் பயன் இல்லை என்ற கருத்தை நிராகரிக்கின்றோம். பின்னின்மை வாதமே நம்மைக் கொடும் கதிகளில் (நரக, பூத, மிருக) மறுபிறப்பெடுக்க வைக்கிறது. எனவே அதை நிராகரிக்க வேண்டும். அதேசமயம் நித்திய வாதமும் நம்மை வீடு பேற்றிற்கு எடுத்துச் செல்லாது. நித்திய வாதம் என்ற கடும் எல்லையோடு பற்றுக் கொள்பவர் நல்வினையில் ஈடுபடுவதால் நல்ல மறுபிறப்புக்கு அவர்களை எடுத்துச் சென்றாலும் - அதாவது மனித, தேவ லோக மறுபிறப்புகள் - அவர்கள் விடுதலை பெறுவதே இல்லை. (நரகத்தில் பிறக்காவிட்டாலும் மனித தேவ பிறப்புகளிலும் மூப்பு, பிணி சாக்காட்டிலிருந்து - அதாவது துக்கத்திலிருந்து- தப்பிக்க முடியாது). ஆக இந்த இரண்டு எல்லைகளையும் தவிர்த்து மத்திய வழியைப் புரிந்து கொள்வதால் நாம் இந்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அடையலாம், மறுமையிலும் மகிழ்ச்சி அடையலாம். ஏனென்றல் நாம் நல்வினை செய்வதாலும், தீவினையைத் தவிர்ப்பதாலும் இறுதியில் வீடுபேற்றை அடைவோம்.

புத்தர் அவரது போதனைகளை மிகவும் அக்கறையோடு நிர்மாணித்தார். புத்தரின் போதனைகள் சில சமயம் ‘தாய்ப் புலி தனது குட்டிகளிடம் காட்டும் நடத்தையைப் போல இருக்கும்’ எனச் சொல்லப்படுவதுண்டு. புலி தனது வாயால் குட்டிகளைக் கௌவித் தூக்கிச் செல்லும்போது அதன் பிடி மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமலும் இருக்கும். குட்டியைக் கழுத்தில் கவ்விக் கொண்டு செல்வதால் பிடி மிகவும் இறுக்கமாக இருந்தால், குட்டி கடி பட்டு அல்லது செத்தும் விடலாம். பிடி தளர்ந்து இருந்தாலும் குட்டி நழுவி விழுந்து அடி பட்டு விடலாம். அதே போலப் புத்தரும் தமது போதனைகளின் இரண்டு எல்லைகளான நித்தியவாதம் (Eternalism) மற்றும் பின்னின்மை வாதம் (Nihilism) இரண்டையுமே தவிர்க்குமாறு கூறினார். நித்தியவாதத்துடன் இருக்கும் பற்று நம்மை சம்சார சூழலிலேயே தொடர்ந்து வைத்திருக்கும் என்பதால், புத்தர் தனிப்பட்ட நித்திய ஆத்துமா மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர்க்குமாறு போதித்தார். வீடு பேறு என்ற விடுதலை நித்திய ஆத்துமா என்ற கூர்மையான பற்களினால் கடி பட்டுவிடும் என்பதால் நம்மை நித்திய வாதத்தைத் தவிர்க்கச் சொன்னார். அதே சமயம் பின்னின்மை வாதத்தில் உள்ள நம்பிக்கை ஒரு பயங்கர எல்லை என்பதாலும், பயங்கரமான வினைப்பயன் விளைவிக்கும் என்பதாலும், காரண காரியச் சார்பு பற்றிய கோட்பாட்டினை வலியுறுத்தினார். இந்தக் கோட்பாடு தான் அறத்தின் (நல்வினையின், morality) முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நல்வினையை மறுப்போர் கீழ் உலகங்களில் மறுபிறப்பெடுப்பார்கள் என்பதை அவர் உணர்ந்ததால் அவர் பின்னின்மை வாதத்தையும் தவிர்க்கச் சொன்னார். இந்த இரண்டு எல்லைகளையும் தவிர்க்க வேண்டும் என்ற அவரது குறிக்கோலைச் சார்பில் தோற்றம் என்ற கோட்பாடு நிறைவேற்றுகிறது. தனித்தன்மை என்பது சார்பில் தோன்றியது என்றும், நித்தியமற்றது என்றும், காரண காரிய இயற்கைச் சட்டத்தினையும், சார்பில் தோற்றம் விளக்குகிறது.

* * * * *